வடக்கு கிழக்கு இராணுவ மயமாக்கல் நீக்கப்பட வேண்டும். உயர் பாதுகாப்பு வலயம் என தடை செய்யப்பட்டு மக்கள் குடியேற்றத்திற்குத் தடையாக இருப்பதை நீக்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் என தடுப்பு முகாம்களில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இதற்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதம வேட்பாளர்கள் இருவரும் பகிரங்கமாக வாக்குறுதி தந்தால் நான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடுவதில் இருந்து விலகிக் கொள்கின்றேன்” என ஜனாதிபதி வேட்பாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம், தாம் போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கும் பொருட்டு, ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை யாழ்ப்பாணம் பஸ்தியான் விடுதியில் இன்று காலை 9.45 மணியளவில் நடத்தினார்.
மாநாட்டில் அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர் அங்கு கூறியதாவது :
“தமிழ் மக்களின் வரலாற்றில் மிகவும் மோசமான பின்னடைவுகள், பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள முக்கியமான காலகட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் எம் முன் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
விக்கிரம்பாகுவுடன்….
இதனையிட்டு பெரும் கருத்துக் கணிப்புகள் வெளிநாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவுடன் கலந்துரையாடிய போது, அவர் என்னிடம் தனக்கு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தர வேண்டுமென என்னிடம் கேட்டிருந்தார். நான் ஏனையோருடனும் இது குறித்துக் கலந்துரையாட ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்திருந்தேன்.
இச்சமயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும் அதற்கு சம்பந்தரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதெனவும் ஓர் அபிப்பராயம் காணப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் கூடி கலந்துரையாடிய போது, தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தோம்.
இந்தியாவில் ஊடகவியலாளர் மாநாடு
இந்நிலையில் நான் இந்தியா சென்ற வேளையில் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் எவரையும் நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது. இவ்வேளை நான் இந்தியாவில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தேன்.
ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடியபோது சம்பந்தர், சரத் பொன்சேகாவுடனோ மகிந்தவுடனோ கதைப்பதில் பயன் இல்லையெனக் குறிப்பிட்டார். நெதர்லாந்து எமக்கும் அரசுக்கும் இடையில் தூதுவராக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நான் இதனை அந்தக் கூட்டத்தில் எதிர்த்தேன்.
கடந்த அறுபது வருடங்களாக நாம் பலராலும் ஏமாற்றப்பட்டுள்ளோம் இந்நிலைமை இனிமேலும் தொடரக் கூடாது எனவும் வலியுறுத்தினேன. எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதியுடன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் மழுங்கடிக்கப்படும் எனவும் தெரிவித்தேன்.
தமிழ்க் கூட்டமைப்பை உடைக்க முயன்று வருகின்றோம் என யாராவது கருதினால் அது பிழையான கருத்தாகும்.” இவ்வாறு அவர் கூறினார்.
வீரகேசரி இணையம் 12/19/2009