‘மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்து கொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ என பிரித்தானியாவில் நடைபெற்ற மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழான வியூகம் வெளியிட்டு நிகழ்வில் அச்சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரகுமான் ஜான் தெரிவித்தார். டிசம்பர் 21ல் லண்டனுக்கு வெளியே நோர்பிற்றன் என்ற இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாறுபட்ட அரசியல் கருத்துக்களை உடையவர்களின் சந்திப்பாக இது அமைந்தது. கௌரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யமுனா ராஜேந்திரன், என் சபேசன் ஆகியோர் சஞ்சிகையின் மதிப்பீட்டை மேற்கொண்டனர். சஞ்சிகை மதிப்பீடு அதன் ஏற்புரை ஆகியவற்றைத் தொடர்ந்து கலந்தரையாடல் இடம்பெற்றது. வழமை போன்ற நூலாசிரியரை நோக்கிய கேள்விகளாக அல்லாமல் கலந்துகொண்டவர்களிடையே கருத்துப் பரிமாற்றங்களும் விவாதங்களும் இடம்பெற்றது.
டிசம்பர் 13ல் இச்சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோவில் இடம்பெற்றது. இவ்வார நடுப்பகுதியில் இதன் வெளியீடு பாரிஸில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வியூகம் விரிவான ஆழமான விடயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் அவற்றை இத்தளத்தில் விரிவாக ஆய்வு செய்ய முடியாது எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் பொதுவான தனது மதிப்பீட்டை அங்கு வைத்தார். மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழாக வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இச்சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரைகள் அவ்வாறு அமையவில்லை என்றும் இச்சஞ்சிகை கோட்பாடு மற்றும் நடைமுறைசார்ந்த விடயங்களின் கலப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். சஞ்சிகையின் வடிவமைப்பு மற்றும் தோற்றம் அதனை ஒரு சஞ்சிகை என்பதிலும் பார்க்க நூலின் தோற்றத்தினையே வழங்குவதாகவும் யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டார். வியூகத்தின் ஆசிரியர் தலையங்கம் அதன் கடந்த காலம் பற்றியும் தீப்பொறி மற்றும் உயிர்ப்பு சஞ்சிகை பற்றியும் பேசுவதைச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் சுயவிமர்சனம் செய்வதற்கான தளம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு வகைகளில் கடந்த காலப் போராட்டங்களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் அவர்கள் இழப்புகளையும் துயரங்களையும் நேரடியாக அனுபவித்தவர்கள் அவர்கள் உணர்ச்சிபூர்வமாகவே அரசியலைப் பார்க்கின்றனர் எனத் தெரிவித்தார். ஆனால் அரசியல் என்பது உணர்ச்சிபூர்வமானது அல்ல என்றும் அது அறிவுபூர்வமாக கையாளப்பட வேண்டும் என்பதையும் அவர் தனது மதிப்பீட்டில் சுட்டிக்காட்டினார்.
ஒரு கோட்பாட்டு இதழானது அவ்வியக்கத்தின் கோட்பாட்டு அரசியலை வெளிப்படையாக வைக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் வியூகத்தில் வெளிவந்துள்ள அத்தனை கட்டுரைகளுமே புனைப்பெயர்களில் வெளிவந்துள்ளதாகவும் வியூகம் சஞ்சிகையிலும் தொடர்புகளுக்கான எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை எனவும் யமுனா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.
20 வருடங்களுக்குப் பின்னர் தோழர் என்றழைக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறி தன் மதிப்பீட்டை ஆரம்பித்த என் சபேசன் இதனை ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகி உள்ளதாகக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் என்பது தேசிய அரசியல் என்பதைக் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த என் சபேசன் தமிழ் தேசியம் அக முரண்பாடுகள் பலவற்றைக் கொண்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார். ஆனால் அவற்றுக்காக தமிழ் தேசியத்தை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இனசமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூகத்தில் உள்ள காழ்ப்புகள் முன்னோக்கி நகரவிடாமல் தடுப்பதாகக் கூறிய என் சபேசன் யமுனா ராஜேந்திரனின் மதிப்பீட்டில் பெரும்பாலும் உடன்படுவதாகத் தெரிவித்தார். குறிப்பாக கட்டுரைகளில் ஊகங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். புனைபெயர்களில் எழுதுவதில் யமுனா ராஜேந்திரனுடன் முரண்பட்ட என் சபேசன் புனைபெயரில் எழுதுவதற்கான பாதுகாப்பு போன்ற காரணங்களும் தேவையும் இன்னமும் இருப்பதாகத் தெரிவித்தார். வியூகம் அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்தும் என்ற நம்பிக்கையை வெளியிட்டு தனது மதிப்பீட்டை முடித்துக் கொண்டார்.
மே 18 இயக்கம் சார்பாகவும் வியூகம் ஆசிரியர் குழு சார்பாகவும் கருத்து வெளியிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது எதிர்பார்க்கப்பட்டாலும் அது நடந்து முடிந்த விதமும் முற்றாக அழிக்கப்பட்டதும் எதிர்பார்க்காத ஒன்று எனத் தனது கருத்துரையை ஆரம்பித்தார். இந்தப் புள்ளியில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் எழுவதைச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்றில்லை என்றால் அதனை வலிந்து போராட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆனால் அவ்வாறான ஒரு பிரச்சினை இருக்கும் போது ஒடுக்குகின்ற தேசம் வெற்றி கொண்ட படையாகக் கொக்கரிக்கின்ற போது அதற்க எதிராகப் பேசுவது ஒவ்வொரு அரசியல் உணர்வுள்ளவரினதும் தார்மீகக் கடமையென்றே தான் நினைப்பதாகத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் இவ்வாறான விவாதங்கள் பல்வேறு தளங்களிலும் இடம்பெறுவதாகக் கூறிய அவர் அவ்வாறான விவாதங்களிற்கான தொடக்கப் புள்ளியாகவும் அவ்வாறான விவாதங்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலுமே மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இது ‘முடிவல்ல புதிய தொடகம்’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தமிழ் மக்களின் போராட்டத்தின் தோல்வியாக தற்காலிகமாக அமைந்தாலும் அவர்களைக் காப்பாற்றி இருக்க முடியாது எனக் குறிப்பிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகள் பிழையான தலைமையைக் கொண்டிருந்தது மட்டுமல்ல சரியான தலைமைகள் உருவாக முடியாமல் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்தனர் எனவும் குற்றம்சாட்டினார். போலியான ஒரு தலைமையைக் காப்பாற்றி இருக்க முடியாது எனத் தெரிவித்த ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுவிக்கபட்டிருந்த பிரதேசங்களில் மக்கள் எவ்வளவு சுதந்திரமாக இருந்தார்கள் என்பதும் அவர்கள் தாங்கள் விடுதலை அடைந்ததாக உணர்ந்தார்களா என்பதுமே முக்கியமான கேள்வி என்றும் சுட்டிக்காட்டினார்.
சரி பிழையென்பது இருவழிகள் இவற்றில் எது சரி என்பதை வரலாறே தீர்மானிக்கும் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் இதில் நான் சரியாக இருக்கலாம் சிலவேளை நீங்கள் சரியாக இருக்கலாம் அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது எனத் தெரிவித்தார். மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும் என்பதையும் அவர் விளக்கினார். ஆனால் அப்படியல்லாமல் வெறும் காழ்ப்புணர்வுடன் வெறிகொண்ட மிருகங்கள் போல் குத்திக் குதறுகின்றோம் என்றும் கொம்பியூட்டர்களில் இருந்து இரத்த ஆறு ஓடாதது தான் ஒரு குறையாக இருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். எல்லாவற்றையும் அரசியல் என்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் மார்க்சியம் புரட்சி ஏகாதிபத்தியம் திரிபுவாதம் இவற்றை நீக்கிப் போட்டப் பார்த்தால் வெறும் சேறும் சகதியுமே எஞ்சியிருக்கும் எனத் தெரிவித்தார். நபர்கள் சம்பவங்கள் என்பதைத் தாண்டி சமூக உறவுகளாக அரசியல் போக்குகளாகப் புரிந்தகொள்ள முடியவில்லை என்றால் இது என்ன அரசியல் என்றும் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து சஞ்சிகையின் மதிப்பீடு தொடர்பான தனது கருத்துக்களை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றுது. இதில் பெரும்பாலும் தேசியவாதம் தொடர்பான விவாதமே கூடுதலாக நடைபெற்றது.
தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் தேசிய விடுதலையூடாகவே அமையும் என்று மார்க்சிய அடிப்படையில் கூறிக்கொண்டாலும் அது இனரீதியான தோற்றப்பாட்டையே காட்டுவதாக ராகவன் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாண்டியன் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மார்க்சிய ரீதியில் அணுகுவதாகக் கூறிக்கொள்பவர்கள் வர்க்கப் போராட்டத்தின் மூலம் தீர்வுகாணலாம் என்று தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையை மறைக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.
கலந்தரையாடலில் கருத்து வெளியிட்ட என் சபேசன் முஸ்லிம்கள் தனியான தேசம் என்பதைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இலங்கையில் சிங்களம் தமிழ் என்ற இருதேசங்களே உள்ளதாகவும் கருத்து வெளியிட்டார். அப்போது குறுக்கிட்ட ராகவன் அவ்வாறே சிங்களத் தலைமைகள் தமிழர்கள் ஒரு தனியான இனம் இல்லை எனக் கருதுவதாகத் தெரிவித்தார். என் சபேசனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மாசில் பாலன் தேசிய இனங்களை வரையறுப்பது என்பது ஸ்ராலினின் வரையறைகளைக் கடந்து வரவேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தன்னைத் தனித்துவமான இனமாக உணருமானல் அவர்கள் தனித்துவமான இனமாகக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பழங்குடிகள் இன்று அவ்வாறே உணருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சபா நாவலனும் இதே கருத்தை வெளிப்படுத்தினார்.
தமிழ் தேசியம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளமாக இருந்துள்ளது எனத் தெரிவித்த த ஜெயபாலன் அது புலித் தேசியமாக ஆக்கப்பட்டு அதிலேயே புலிகள் ஊன்றி நின்றனர் என்றும் புலிகளின் தோல்வி என்பது அவர்களுடைய தோல்வி மட்டுமல்ல அவர்கள் ஊன்றி நின்ற தமிழ் தேசியத்தினதும் தோல்வியாகவே அமையும் என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் அதன் அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் தேசியம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.
காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியவர்கள் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயற்பட்டதை உதாரணங்களுடன் காட்டிய என் கெங்காதரன் மே 18 இயக்கமும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவுகளை எடுக்குமோ என்ற ஐயத்தை வெளிப்படுத்தினார்.
மாற்றுக் கருத்தக்கான விவாதத்திற்கான களத்தை உருவாக்குவதே தமது நோக்கு என்றும் இவ்வாறான நிகழ்வுகள் அதற்கு உதவும் என்றும் தெரிவித்த ரகுமான் ஜான் நடைமுறையில் உள்ள சாதனங்களின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி கேள்வி எழுப்பியதுடன் உண்மைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அதனை ஆராய்வதற்கான புதிய கோட்பாட்டு சாதனங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி அதனை விவாதிப்போம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்! என்றும் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
(குறிப்பு: இது கூட்டத்தில் இடம்பெற்ற உரைகளின் விவாதங்களின் தொகுப்பு. பெரும்பாலும் கருத்து வெளிப்படுத்தியவர்களது கருத்து மாற்றம் இல்லாமல் பதிவு செய்துள்ளேன். தவறுதலாக கருத்துக்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால் சுட்டிக்காட்டவும்.)
Related Articles:
‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்
மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்
தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்
இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்