24

24

தமிழ்க் கூட்டமைப்பு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் – ஹக்கீம் நம்பிக்கை

slmc.jpgசர்வாதி காரமாக செயற்படக்கூடிய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்தியுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் 50 கடைப்பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

அரசாங்கம் சொல்லுகின்றது நாம் பல வருடங்களாக திட்டமிட்டே ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் செய்தோம். எனினும் அதில் எந்த ஒரு உண்மையுமில்லை. நாம் பல்வேறு கொள்கையுடைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.பொது நோக்கம் ஒன்றுக்காக இன்று எவருமே எதிர்பாராத வகையில் ஒன்று சேர்ந்துள்ளோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க நாம் இன்று ஒன்று சேர்ந்துள்ளோம். முப்பது வருடங்களாக எமது நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று சர்வாதிகாரமாகச் செயற்படக்கூடிய அதீத அதிகாரமுடைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கவே ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தியுள்ளோம். இவரை நாம் அனைவரும் ஒன்றுபடுவதனூடாக வெற்றிபெறச் செய்வோம்.

அன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது நான் ஏழை விவசாயிகளின் அன்பளிப்புகளை பெற்றாலும் பிரபாகரனது தாய் தந்தையரது பணத்தைப் பெறப்போவதில்லை என்றார். அன்று எமது ஜனாதிபதி வேட்பாளர் உரையாற்றும்போது எனது கொள்கைகளை பிரபாகரனின் தாய் தந்தையர் ஏற்றுக்கொண்டு வந்தாலும் அவர்களையும் ஏற்றுக்கொள்வேன் என்றே கூறினார். இதனை விளங்கிக் கொள்ளாமலே பணம் பெறுவதுபற்றி ஜனாதிபதி கருத்துத்தெரிவித்துள்ளார். எமது நாட்டில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மகிந்தவைப் பற்றி நன்கு தெரியும்.எனவே இம்முறை சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கவே முடிவுசெய்துள்ளனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் என்னை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர். அவர்களும் சிறந்த முடிவொன்றை வெளிப்படுத்துவர். கல்முனை, மட்டக்களப்பு பிரதேசங்களில் தமிழ்,முஸ்லிம் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் சரத் பொன்சேகாவை ஆதரித்து வெற்றி பெறச்செய்ய முன்வந்துள்ளனர்.

யாழ் உதயன், சுடரொளி பத்திரிகைகள் யுஎன்பி நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றன ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு – தொகுப்பு : ரி சோதிலிங்கம்

Sivajilingam_M_Kயாழ் உதயன் சுடரொளிப் பத்திரிகைகள் யுஎன்பி நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டி உள்ளார். லண்டன் மற்றும் தமிழகத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் ஏற்பாடு செய்த கேள்விநேரம் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். டிசம்பர் 21ல் கிழக்கு லண்டன் குவேக்கர்ஸ் ஹவுஸில் இக்கேள்விநேரம் இடம்பெற்றது. நிகழ்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன் இடம்பெற்ற கடுமையான பனி மழையினால் லண்டன் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்த நிலையில் மூன்று மணிநேரம் தாமதமாக நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் இறுதியில் கருத்து வெளியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கோ அல்லது சரத் பொன்சேகாவுக்கொ வாக்களிப்பார்களானால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்புகளிற்கு எவ்வித அர்த்தமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழனும் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கத்தின் பக்கம் தள்ளிவிடாமல் அவர்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

லண்டன் விஜயத்தின் போது பிரிஎப் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியதாகவும் அவர்களின் ஆதரவு கோரப்பட்டு உள்ளதாகவும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். பிரிஎப் இதுவரை உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் பிரிஎப் இல் உள்ள சிலர் தனிப்பட்ட முறையில் சிவாஜிலிங்கத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கி உள்ளதுடன் பிரிஎப் சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். மகேந்திரன், குகன், ராசா ஆகியோர் தனிப்பட்ட முறையில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதை வரவேற்றுள்ளனர். சிவாஜிலிங்கம் சுயேட்சையாக நிற்பது என்று எடுத்த முடிவை ஒரு பேப்பர் பத்திரிகையின் பாலா வரவேற்றுக் கருத்து வெளியிட்டார்.

ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற கேள்விநேரத்தின் தொகுப்பு கீழே:

ரி சோதிலிங்கம்: நீங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போராட்ட காலங்களில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை ஆதரித்து பல போராட்ட வடிவங்களில் புலிகளின் ஆதரவு அமைப்புக்களுடன் இணைந்து செயற்ப்பட்டவர். இன்று நீங்கள் தமிழ் தேசியத்தின் சமஸ்டிக்காகான குரலாக இந்த தேர்தலில் நிற்கிறீர்கள். புலிகளின் இவ் ஆதரவு அமைப்புக்கள் இன்று உங்களை ஆதரித்து உங்களுடன் நிற்கிறார்களா? அல்லது ஆதரவு தருவார்களா? அவர்களது நிலைப்பாடுகள் என்ன?

புலிகளின் ஆதரவாளர்களும், முன்னாள் புலிகளின் தலைவர்களும் இங்கே இருந்து கொண்டு மேற்குலகின் ஆதரவுடன் சரத்தை அதரிக்கிறார்கள் மகிந்தாவை வீழ்த்தலாம் என்று செயற்படுவதாகவும் கருத்துள்ளதுஇ மேலும் யாழ்ப்பாணத்தில் உதயன் கொழும்பில் சுடரொளி யுஎன்பியை அதரிப்பதாக அறியப்படுகிறதே. இது பற்றியும் உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: புலிகளின் ஆதரவாளர்கள் என்ற ரீதியில் அவர்களிடம் நான் ஆதரவு கேட்கவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும்இ நாட்டில் யாருடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதுவும் பின்பு உலகுக்கு தெரியவரும். நான் இந்த மூன்று நாளும் என்னால் முடிந்த அளவு புலம்பெயர் நாட்டில் பேட்டிகள்இ பேச்சுக்கள் செய்கிறேன். பின்பும் இலங்கை போன பின்பும் தொலைபேசியூடாக செய்வேன்.

உதயன் சுடரொளி பத்திரிகைகள் கட்சிப் பத்திரிகைகளை மீறிய அளவில் கடுமையாக விமர்சனங்களையம் வார்த்தைப் பிரயோகங்களையும் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். யுஎன்பியின் நிகழ்ச்சி நிரலில் இருப்பவர்கள் என்று. ஒருவேளை அடுத்தமுறை வித்தியானந்தனின் மைத்துணர் சரவணபவன் கொழும்பு மாவட்ட யுஎன்பி யில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அமைச்சராக வர ஆசை. அதில் தவறு இல்லை. ஆனால் நாம் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கு இடைஞ்சலாக இருப்போம் என்பதை இவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். யுஎன்பியுடன் சேர்ந்து விட்டால் சரி என்று நினைக்கிறார்கள். ரனில் அடுத்த Eexecutive President தான் என்ற கனவில் மிதக்கிறார்.

நாங்கள் அரச தரப்பில் இருக்க முடியாது, எதிர்த்தரப்பில்தான் இருக்க முடியும். எதாவது ஒரு அரசியல் தீர்வு எழும்பும் என்றால் தமிழ் மக்களுக்கு நன்மையான விடயம் என்றால் அது பற்றி பரிசீலிக்க நாம் தயார். வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரவில் இருப்பவர்கள் இலங்கையில் உள்ள விடயங்களில் பல தாழ்ந்துபோன விடயங்களில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக நாம் தமிழ் மக்களுக்கான உதவிகளை பெறுவதில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

பாண்டியன்: எமது மக்களை அழித்த யுத்த குற்றவாளிகளுக்கு வாக்களித்தால் செய்த குற்றத்தை ஆதரித்தாகிவிடும் என்று சொல்லுகிறீர்கள். சரி மக்கள் வாக்களித்துவிட்டால் அது யுத்த குற்றவாளிகளை எமது தலைவர்களாக ஏற்றுக்கொண்டதாகி விடுமா?

எம் கெ சிவாஜிலிங்கம்: நான் சொல்வது இந்த இரண்டு வேட்பாளர்களும் இலங்கையில் எல்லா மாகாணங்களிலும் வாக்குகள் பெறுவார்கள். கிழக்கில் சிங்கள முஸ்லீம் மக்கள் ஆதரிப்பார்கள். ஆனால் வட மாகாணத்தில் மிகப்பெரும்பான்மை தமிழர்கள். இங்கே அவர்கள் வாக்களித்தால் அவர்கள் இந்த குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகவே கருதப்படும். அடுத்தநாள் பத்திரிகைகளில் இப்படித்தான் எழுதப்படும்.

ஆனால் நான் போட்டியிடுவதால் வடமாகாணத்தில் இவர்களில் ஒருவர் பெரும்பான்மை வாக்குகளை பெறுவது தவிர்க்கப்படும். இதற்கு நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். நான் ஜனாதிபதியாக வர இந்த தேர்தலில் நிற்கவில்லையே! இந்த யுத்த குற்றவாளிகளின் மத்தியில் எமது தமிழர்களின் நிலைப்பாடு என்ன? யாரை ஆதரிப்பது என்பது தான் இங்கே உள்ள நிலைமை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரங்களை செய்திருந்தால் நிலைமைகள் வித்தியாசமாக இருந்திருக்கும். எனக்கு முழு ஆதரவு உண்டு என்று நான் சொல்லவில்லை. தனித்த ஆதரவும் அந்த தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்ற எண்ணத்தை கொண்டவர்களின் ஆதரவும் உண்டு. இரண்டு பேருக்கும் கிடைக்கும் வாக்குகளினை குறைப்பதே நோக்கம்.

நான் இதை விக்கிரமபாகு கருனாரத்னாவின் தேர்தல் மேடையில் பேசியுள்ளேன். வடக்கு -கிழக்கிலும் மலையகத்திலும் மேலும் பேச உள்ளேன். இலங்கை வரலாற்றிலேயே இரண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் ஒன்று சேர்ந்து மேடைகளில் பிரச்சாரம் செய்வது இதுதான் முதல் தடவையாக நடைபெறுகிறது. இரண்டு பேரும் ஒரே கருத்து கொண்டவர்கள். இந்த இரண்டு வேட்பாளருக்கும் வாக்களிக்காதீர்கள் வேறு யாருக்கும் வாக்களியுங்கள் என்பதே எமது செய்தி. நான் சொன்னேன் உங்களுக்கு விருப்பம் என்றால் அந்த புத்தபிக்கு வேட்பாளர்க்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். இந்த இரண்டு பேருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று கேட்டேன்.

தயா: ஏன் நீங்கள் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடக்கூடாது? கடந்த தேர்தலில் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடவில்லை. திரும்பவும் மக்களை சுதந்திரமாக வாக்களிக்கவிடாமல் வாக்குகளை திசை திருப்பவே இப்படி நடக்கிறதாக எதிர்பாக்கப்படுகிறதே?

எம் கெ சிவாஜிலிங்கம்: எங்களுடைய பேச்சை மிககுறைந்த சதவிகிதத்தினரே கேட்பார்கள். பெரும்பான்மையானோர் தங்கள் இஸ்டப்படியேதான் வாக்களிப்பர். இடம்பெயர்ந்த மக்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். மக்கள் மனம் நொந்து போயுள்ளனர். அவர்கள் சுதந்திரமாகவே முடிவு எடுப்பவர்கள். அவர்கள் அங்கே போய் என்ன எழுதுவார்கள் என நாங்கள் போய் பார்த்தா சொல்வது. எப்பவும் போலவே அவர்கள் சுதந்திரமாகத்தான் வாக்களிப்பார்கள்.

இந்த தேர்தல் இம் முறையும் ஒரு சிக்கலை உருவாக்குகிறது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவரின் வாக்காளர் பட்டியலை தேடவே 15 நிமிடம் எடுக்கிறது என்றால் சாதாரணமானவர்களை அதுவும் கிராமசேவகர் பிரிவுகளை பலவாறு பிரித்தும் இணைத்தும் உள்ள நிலைமையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. அந்த மக்கள் தமது பெயரைத் தேடிப்பிடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும்.

முகாம்களில் உள்ள மக்களின் தேர்தல் இடாப்பு கச்சேரியில் உள்ளது. ஏன் இந்த நிர்வாகத்தை முகாமுக்கு கொண்டுவர முடியாது?. முகாமில் உள்ள மக்கள் நல்ல உடுப்புக்கள் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த ஊத்தை உடுப்புடன் எப்படி கச்சேரிக்கு போவதென எனக்கு நேரடியாகவே சொல்லியும் உள்ளனர். இப்படியானவர்கள் எது எப்படியும் நடந்து விட்டுப் போகட்டும் என்றே இருந்து விடுவர். இவர்களில் பலர் தமக்கு ஏன் பதிவு என்றாகிவிடும் நிலையில் உள்ளனர்.

தயா: மக்களை கட்டாயப்படுத்தாமல் சுயமாக வாக்களிக்கவிட வேண்டும் என்றே கருதுகிறோம். மக்களை வாக்குபோடு என்று கூட சொல்லாமல் மக்களை சுதந்திரமாக விட வேண்டும் அதாவது மக்களை தமிழ் தேசியம் என்ற சிக்கலுக்குள் கொண்டுவராமல் விரும்பியபடி வாக்களிக்க விடவேண்டும். அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: யார் மக்களை கட்டாயப்படுத்தியது. நாங்கள் முதலாம் இடம் மகிந்தா அல்லது சரத்தான் வரப்போகிறார்கள் என்று சொல்லுகிறோமே வேறென்ன வேணும். நாங்கள் யாரைக் கட்டாயப்படுத்தினோம். கட்டாயப்படுத்துதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் தாங்களாகவே வாக்களிக்காது விட்டாலேயொழிய வேறு எதுவும் நடக்காது. கடந்த சில நாட்களாக புதிய ஜனநாயக கட்சி வாக்குகளை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்று கோருகிறது. சிலர் இதை செய்யக் கூடும். ஆனால் பெரும்பான்மை மக்கள் வாக்களிப்பார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள் என்று தான் நாங்கள் கூறுகின்றோம்.

தயா: உங்கள் கூட்டமைப்பில் உள்ள ஒருவர் நீங்கள் மகிந்தாவிடம் காசை வேண்டிக்கொண்டே இந்த தேர்தலில் நிற்பதாக கூறியுள்ளார் அது பற்றி உங்கள் கருத்து என்ன?

Sivajilingam_M_Kஎம் கெ சிவாஜிலிங்கம்: இந்த செய்தி வீரகேசரி ‘e’ பேப்பரில் வந்திருந்தது. பின்னர் இச் செய்தி எடுக்கப்பட்டு விட்டது. செய்தியை வீரகேசரி பத்திரிகையில் வெளியிடவில்லை. ஆனால் தமிழ்வின் இதை பிரசுரித்திருந்தது. அதேபோல 12ம் திகதி வலம்புரியிலும் முன்பக்கத்தில் தலைப்பு செய்தியாக பிரசுரிக்கப்பட்டடிருந்தது. தலையங்கம் “அரசாங்கத்திற்கு எதிராக விழும் வாக்குகளை தடுப்பதற்காக சிவாஜிலிங்கம் தேர்தலில் நிற்கிறார் சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு.”
யாழ்ப்பாணத்திலிருந்து அன்று இரவே நான் இந்த குற்றச்சாட்டிற்கான பதிலை கூறிவிட்டேன்.

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியாதே. யார் உனக்குப் பின்னால் இருப்பவர்கள் என்று எனக்கு தெரியும். துணிவிருந்தால் அவர் முன்னால் வந்து என்மீது இந்த குற்றச்சாட்டை முன்வைக்கட்டும். நான் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக வழக்கு போட உள்ளதையும் குறிப்பிட்டிருந்தேன். இதைவிட 50 ஆயிரம் தமிழர்களை கொன்ற அரசாங்கத்திடம் காசுவாங்கிக் கொண்டு அரசுக்கு வாக்களி என்று நான் கேட்க முடியமா? என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

நான் எனது அறிக்கைகளை எப்பவும் துணிந்து விட்டுள்ளேன் மாசி மாதம் 10ம்திகதி தேசம் இணையத்தளத்திற்கு பேட்டி கொடுத்திருந்தேன் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக புலிகள் மூன்றாம் தரப்பிடம் ஆயுதங்களை கையளிக்க வேண்டும் என்ற கோரியவன் நான். அதற்காக புலிகள் வன்னியிலிருந்து ஒன்றரை மணித்தியாலங்கள் என்னிடம் பேசினார்கள். அன்றும் நான் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் நின்றேன். நான் கைது செய்ப்பட்டடேன். அன்று புலிகள் அப்படி ஆயுதங்களை கையளித்திருந்தால் இன்று நிலைமைகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் அல்லவா.

அந்தக் காலத்தில் வாய் மூடிக்கொண்டு எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமலே இருந்த பல தமிழர்கள்; இன்று எனக்கு எதிராக பேசுகிறார்கள். சிவாஜிலிங்கம் என்ன செய்தார் என்று இந்த உலகுக்குத் தெரியும். சரியோ பிழையோ எனது மனச்சாட்ச்சிக்கு தெரிந்தபடி தமிழ்நாடோ டெல்லியோ போய் பின்னர் பிரித்தானியாவுக்குத் துரத்தியடிக்கப்பட்டு இப்படி நாடுநாடாய் ஓடித்திரிந்தவன் நான். இதற்கு பிறகும் என்னை மகிந்தாவிடம் காசு வாங்கியுள்ளேன் என்றால் என்ன சொல்வது.

போல் சத்தியநேசன்: 22பேர் தேர்தலில் நிற்கவுள்ளனர் இதில் எல்லோருக்கும் பத்து இருபது வாக்குகள் என்றாலும் கிடைக்கும் நீங்கள் நிற்பதால் என்ன வித்தியாசத்தை கொண்டுவர முடியும்?

எம் கெ சிவாஜிலிங்கம்: நான் தேர்தல் மனு தாக்கல்செய்த பின்பு எதிர்க்கட்சி தரப்பில் பெரிய கலக்கம் ஏற்ப்பட்டுள்ளது இது வெற்றியே.

அதைவிட டக்ளஸ் தேவானந்தா சொல்லியுள்ளார் ‘சிறீகாந்தாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்தான் இந்த சிவாஜிலிங்கத்தின் தேர்தல் சந்திப்பு’ என்று. இதில் சிரிப்பு என்ன என்றால் நான் மகிந்தாவுக்காக நிற்கிறேன் என்றால் மகிந்தா வெற்றி பெற்றால் நன்மை அடையப்போவது டக்ளஸ்ம் ஈபிடிபியும் தான். நான் தேர்தலில் நிற்பதை டக்ளஸாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் இறங்கி வேலை செய்யப் போகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன சொல்வது.

இதைவிட வல்வெட்டித்துறையில் 10 வருடமாக இருந்த எனது அலுவலகத்தை அமைச்சர் டக்ளஸ் பலவந்தமாக கைப்பற்றியுள்ளார். நான் அங்கு போக முடியாதுள்ளது. யாழ்ப்பாணத்திலேயே இருந்து எனது வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி நிலைமைகள் இருக்க நான் இந்த உடுப்புடன் திரிவதில் அர்த்தமில்லை என்ற நிலைமையில் நான் போய் அரசாங்கத்திடம் காசு வாங்கித்தான் தேர்தலில் நிற்கிறேன் என்றால் என்ன சொல்வது இதை.

நான் என்ன அழுத்தத்தை கொடுக்க முடியும் என்று கேட்கிறீர்களே? நான் ஒரு லட்சம் வாக்குகளை என்றாலும் பெற்றேன் என்றால் இது அந்த இரண்டுபேருக்கும் ஒரு பயத்தை உருவாக்குமல்லவா. இது பேரம் பேசும் நிலைமையை உருவாக்கியுள்ளது. சரி சம்பந்தர் ஜயா பேரம் பேசுகிறார் என்றால் சிவாஜிலிங்கம் நின்றிருந்தால் எப்படி பேரம் பேசலாம். நிற்காமல் இருந்தால் எப்படி பேரம் பேசலாம். இது பேரம் பேசும் சக்தியை கூட்டும்.

நாங்கள் எங்கள் பிரச்சிகைகளை சொல்கிறோம். எமக்கு பிரதேச சுயாட்சி மாநிலங்கள் எமது அரசியல் தீர்வு இது பற்றி எமது கருத்துக்களை சொல்லுகிறோம். இவை எல்லாம் விவாதங்களுக்குள் எடுபடும். சும்மா 13வது திருத்தம் என்று நில்லாமல் நாம் இவ்வளவு காலமும் 1.5 லட்சம் மக்களை பலி கொடுத்துள்ளோம், 40 ஆயிரம் போராளிகள், 23 ஆயிரம் படை வீரர்கள் இவ்வளவும் இழந்தபிறகும் 13வது திருத்தம் என்றால் ஏன் நாங்கள் இந்தளவு சண்டைகள் நடந்து 2009 வரை வந்திருக்க வேண்டும். இதை 1980லேயே முடித்திருக்கலாம்தானே.

பேசாமல் இருப்பது அழுத்தம் அல்ல. பேசுவது தான் அழுத்தம். இதை நீங்கள் புரிந்து கொள்வில்லை என்றால் நான் என்ன சொல்வது.

எஸ் தவராஜா: இன்றுள்ள எமது பிரச்சினைகளுக்குள்ளே பதிலை தேடுகிறோம். எமக்கென்று 3 வழிகள் உண்டு. ஒன்று மகிந்தா மற்றது சரத் மூன்றாவது உலகநாடுகளை பாவித்து அழுத்தம் கொடுத்து அரசியல் தீர்வுகளை கொண்டு வருவது. வெளிநாடுகளில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி போராட்டங்களை செய்து எந்தப் பலனும் கிடைக்கவில்லை, இந்த உலகத்தை திருப்ப முடியவில்லை.

இப்போதுள்ள வழி அரசுடன் சேர்ந்து எமது உரிமைகளை பெறுவது தான். மற்ற உண்மை என்ன என்றால் இந்த அரசு தமிழர்க்கு ஒன்றையும் செய்யாது என்பது. இவை யாவற்றையும் பார்க்கும்போது இலங்கை அரசுடன் ஒரு உடன்பாட்டை ஏற்ப்படுத்தும் தேவை உள்ளது. எனது கேள்வி என்னவென்றால் ஏன் ரிஎன்ஏ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசுடன் ஒரு உடன்பாட்டை உருவாக்கவில்லை?

எம் கெ சிவாஜிலிங்கம்: இந்த உடன்பாட்டுக்கு வருதல் முயற்சி பண்ணுகிறோம். செய்கிறோம் எண்டு சம்பந்தர் ஜயா சொல்கிறார். இவர்களுடன் கனவான் ஒப்பந்தம் என்று சொல்லுகிறார்கள். எனது அபிப்பிராயம் என்னவென்றால் இந்த அரசுடன் இந்த அரசியல்வாதிகளுடன் கனவான் ஒப்பந்தம் செய்ய முடியாது. யாராவது ஒரு வெளிநாட்டின் உயர் ஸ்தானிகர் அலவலகத்தில் நான்கு சுவருக்குள் செய்யும் ஒப்பந்தங்களால் எந்த பிரயோசனமும் வராது. காரணம் சர்வதேச ஒப்பந்தம் இந்திய – இலங்கை ஒப்பந்தம் இதையே நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. வட-கிழக்கு இணைவை ஒரு உயர்நீதிமன்ற தீர்ப்பினால் உடைத்துவிட்ட இந்த அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள். இந்த வட – கிழக்கு துண்டிப்பும் இந்தியாவும் சேர்ந்து தான் செய்துள்ளது எனது கருத்து. இரு மாகாணங்களும் இணைந்தால் இவர்கள் தனிநாடு என்கிறார்கள். உடைத்து விட்டுப் பார்ப்போம் என்பது தான் இந்தியாவின் பரிசோதனை. சிலவேளை தேவை ஏற்பட்டால் திரும்பவும் இணைப்பார்கள்.

இன்றுள்ள சர்வதேச அரசியல் நிலைமைகளில் வெளிநாட்டு தூதுவர்கள் நித்திரையில்லாமல் இருக்கிறார்கள். இதுதான் எமக்கும் சந்தர்ப்பம். எங்கே எந்த தலைவர் சரி சொல்லட்டும் தமிழ் மக்களுக்கு சமஸ்டி ஆட்சி என்று வட – கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ளட்டும். இதை சிங்கள மக்கள் மத்தியில் சொல்ல பயப்பிடுகிறார்கள். முன்பு சொன்னார்கள் நாட்டை துண்ணடாட பார்க்கிறார்கள் என்று. இப்ப அது எல்லாமே முடிந்து விட்டதே? ஏன் சமஸ்டி பற்றிபேசக் கூடாது? இப்ப ஒரு நாடுதானே இருக்கிறது ஏன் பிரச்சினைகளை தீர்க்கக் கூடாது?

இவர்கள் எங்களின் வாக்குகளால் வெல்ல மட்டும் வராமல் நீங்களே உங்களின் war heroகள் யார் என்று தீர்மானியுங்கள். நாங்கள் விலத்தி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உங்களால் அடிபட்டு உதைபட்டு நொந்து இருக்கிறோம். நாங்கள் உங்களைப் பார்த்து நீதான் நீதிபதி, நீதான் குற்றவாளி என்று சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்த வரையில் நீங்கள் இரண்டு பேரும் சண்டியர்கள். நீங்களே அடிபட்டு முடியுங்கள். சிங்கள மக்கள் தீர்மானிக்கட்டும் யார் champion என்று நாங்கள் அல்ல. இதுதான் எங்களின் நிலைப்பாடு.

பாரி: மகிந்தாவை ஆட்சி மாற்றம் செய்யவே உலக நாடுகள் சரத்தை இங்கே களம் இறக்கியுள்ளனர். மகிந்தாவை போர்க்குற்றவாளியாக்க வல்லரசுகள் முயற்ச்சிக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: இது சர்வதேசங்களின் விளையாட்டுக்கள் தான். அதில் நாங்களும் இழுபடுகிறோம். 50 ஆயிரம் மக்கள் சாகும்போது வராத இந்த சர்வதேசம் இன்று வருவது எண்டால் நாங்கள் ஏன் பின்னால போக வேணும் என்பதுதான் எனது கேள்வி.

புலிகளை விடுவோம் சண்டைபிடித்து சாவதே என்றவர்கள். ஆனால் மக்கள் சாகும் போது எந்த உதவிக்கும் வராத சர்வதேசம். எங்கே சர்வதேச மனிதாபிமானம். நாங்களே எங்கள் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும். இன்று அமெரிக்கா சொல்லும்இ இந்தியா சொல்லும்இ பிறகு புதிய ஜனாதிபதி வந்ததும் புதிய தலைவர்இ புதிய தொடர்பு என்று போய்விடுவார்கள். அடுத்த பிரச்சினை வரும்வரைக்கும் நாங்கள் இப்டியே இருக்க வேண்டியதுதானா?

ஒருவர் தோற்கடிக்க மற்றவர் எங்களை மீண்டும் பழிவாங்க விடமுடியுமா? நாம் நொந்துபோயுள்ளவர்கள் எம்மை ஒருபக்கத்தில் விடுங்க.

ரி சோதிலிங்கம்: தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்வைக்கும்படி மகிந்தா ராஜபக்சவையும் சரத் பொன்சேகாவையும் நீங்கள் நேரடியாக கேட்டுள்ளீர்களா?

எம் கெ சிவாஜிலிங்கம்: பல தடவைகள் நாட்டில் கேட்டுள்ளேன். சர்வகட்சி மாநாடு என்று 126 தடவைகள் கூட்டங்கள் நடாத்திவிட்டு எதுவுமே இல்லாமல் போனது. தேர்தலின் பின்பு பார்ப்போம் என்று சொல்வதை நம்பமுடியாது. ஜனவரி 26ம் திகதி மாலையின் பின்னர் இந்த அரசியல்தீர்வு என்ற கதை முடிந்துவிடும். முன்பு சொன்னார்கள் புலி அழிப்பில் அரசியல்தீர்வு என்று. புலி முடிந்தது எங்கே அரசியல்த்தீர்வு? அதேபோல் 26ம் திகதிக்கு பின்பும் இதே கதைதான் இருந்து பாருங்கள்.

புலிகளை அழிக்க அரசியல்தீர்வே வழி என்று பல தடவைகள் நாம் கேட்டுள்ளோம். அரசியல்தீர்வு என்பது இவர்கள் சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் விடும் ரீல் தான்இ வேறு எதுவுமல்ல.

அண்மையில் டில்லி போய் இதைத்தான் இவர்கள் இந்தியாவிற்கு சொல்லி விட்டு வந்துள்ளனர். இந்த விடயங்களில் இரண்டு பேருமே இதைதான் செய்கிறார்கள் சரத் டில்லி போய் ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்கிறார், 13வது திருத்தச்சட்ட மூலம் என்கிறார்இ இவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை எங்கே கிடைக்கப்போகிறது? இன்றுள்ள சூழ்நிலையில் என்ன கிடைக்கும் இந்த ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க இவை யாவும் பேய்க்காட்டல்களே.

அப்படி இல்லை என்றால் 1970களில் சிறிமாவோ செய்தது போன்று புதிய அரசியலமைப்பை கொண்டுவரத் தயாரா? இதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லிவிட்டு செய்யுங்கோ நாங்களும் ஆதரவு தருகிறோம். ஒரு கொன்ஸ்ரிற் ரியூசன் அசம்பிளியை உருவாக்கி சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றி விட்டு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள். பழைய குப்பைகளை கீழே போடுங்கள். புதிய யாப்பை கொண்டு வருவோம். இதை விட்டுவிட்டு பௌத்தர்களின் நாடு, அவர்களுக்கு முதலிடம் இப்படியான சேட்டைகள். இலங்கையை ஒரு செக்குலர் நாடாக்குவதே சிறந்தது. இதை நாங்கள் சிங்கள மக்களுக்கு சொல்லியுள்ளோம்.

இனப்பிரச்சனையின் நேரடி வெளிப்பாடுதான் புலி. அது இன்று இல்லாமல் போய்விட்டது. ஆனால் அதற்கான கிருமி உள்ளே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது மீண்டும் எழுலாம். இதே போலத்தான் ஜேவிபி யினரை அழித்தார்கள். ஆனால் மீண்டும் ஜேவிபி எழுந்து நிற்கிறது. இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு வைக்கப்படாவிட்டால் மீண்டும் பிரச்சினைகள் எழும். இப்ப உள்ளது ஒரு இடைவேளையே தான்.

வடக்கு வசந்தம் திட்டத்திற்கு சீனா உபகரணங்கள் கையளிப்பு

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடபகுதியின் உட்கட்டமைப்பு வசதிகள், மீள்குடியேற்றம், போக்குவரத்து, விவசாயம் போன்றவற்றை துரிதப்படுத்தும் நோக்கில் தேச நிர்மாண அமைச்சின் ஊடாக மூன்றாவது தடவையாகவும் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் நேற்று சீன தூதுவரினால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது.

வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம் சீன தூதுவர் யங் ஷியூபிங் கையளித்தார்.

2352 மில்லியன் ரூபா செலவில் தரு விக்கப்பட்டுள்ள மேற்படி இயந்திராதிகள் பெருந்தெருக்கள் அமைச்சின் செலாளர் அட்மிரல் கரண்ணகொடவிடம் கைய ளிக்கப்பட்டன. 46 பெக்கோ லோடர்கள், 04 கார்கோ டிரக்குடன் கூடிய லோடிங் கிரேன்கள், 12 பாம் டிராக்டர்கள், 09 பிடு மென்ட் ஸ்பிரேய்ர்ஸ், 01 டெகாடிங் பிளா ண்ட், 02 சிப் சீலர், 09 பிடுமின் பெளசர் கள் (சூடாக்கும் வசதியுடன்) என்பன சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு காலி முகத்திடலுக்கு முன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை கையளிக்கும் வைபவத்தில் பசில் ராஜபக்ஷ எம்.பி. இராணுவத் தளபதி, சீன தூதுவர், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலர், தேச நிர்மாண அமைச்சின் செயலர், மீள்குடியேற்ற அமைச்சி செயலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்