27

27

பிரான்ஸில் வியூகம் வெளியிடப்பட்டது!

Viyoogam_Launch_Parisரொறன்ரோ லண்டன் வியூகம் வெளியீடுகளைத் தொடர்ந்து வீயூகம் வெளியீடு டிசம்பர் 27 அன்று பிரான்ஸில் நடைபெற்றது. அரசியல் ஆர்வலரும் செயற்பாட்டாளருமான அசோக் யோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வியூகம் ஆசிரியர் குழுவின் சார்பில் ரகுமான் ஜான் கலந்துகொண்டார். சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வி.ரி இளங்கோவும், லியோதர் பெர்ணான்டோவும் முன் வைத்து உரையாற்றினார்கள்.

Viyoogam_Launch_Parisஇவ் விமர்சன உரையாடல் நிகழ்வில் “ஓசை” மனோ, உதயகுமார், நேசன் சுதாகரன், மகேஸ் உட்பட பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். சஞ்சிகை ஒன்றின் வெளியீடு வெவ்வேறு நாடுகளில் குறித்த காலத்தில் வெளியிடப்படுவது இதுவே முதற்தடவையாகும். மே 18 இயக்கத்தின் இதழாக வெளிவரும் வியூகம் இதழுடன் நூல் வெளியீடுகளையும் அவ்வமைப்பினர் மேற்கொள்ள உள்ளனர்.

வியூகம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

பரந்தனில் 300 குடும்பங்கள் இன்று மீள் குடியேற்றம்

lankaidsleavingcamp.jpgவவுனியா வடக்கு நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம சேவகர் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 300 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப் படவுள்ளனர். பரந்தன் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் மற்றும் மதியாமடு கிராமங்களிலேயே இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

கதிர்காமர் நிவாரணக் கிராமம் உட்பட ஏனைய நிவாரணக் கிராமங்களிலிருந்து 300 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 300 குடும்பங்களுக்குரிய நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவித் தொகை அனைத்தும் வழங்கப்பட்டு பஸ் வண்டிகள் மூலம் இவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.வவுனியா வடக்கு நெடுங்கேணி உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள 20 கிராம சேவகர் பிரிவில் 08 கிராம சேவகர் பிரிவுகளில் ஏற்கனவே மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். வவுனியாவில் தற்போது எட்டு நிவாரணக் கிராமங்களே இயங்குகின்றன. இவற்றில் தற்போது 84,000 பேர் வரையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமர், ஆனந்த குமாரசுவாமி (வலயம் 1), இராமநாதன் (வலயம் 2), அருணாசலம் (வலயம் 3), வலயம் 4, வலயம் 5,வலயம் 6, தர்மபுரம் ஆகிய நிவாரணக் கிராமங்களிலேயே தற்போது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். 180 நாட்களுக்குள் நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரும் மீளக்குடியமர்த்தும் அரசின் திட்டத்திற்கமைய மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் நடைபெறுவதாலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஐயாயிரம் பேர் அடுத்த வாரம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். பரந்தன்,  உமையாள்புரம் குமரபுரம் பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.

ஈராக்கின் கர்பலா நகரில் பலத்த பாதுகாப்பு!

iran_mosq.jpgஈராக்கின் தலைநகர் கர்பலாவில் ஆஷ{ரா தினத்தைக் கொண்டாடுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் குவிந்து வருகின்றனர். இங்கு ஆயுத்தாரிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்காக சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெண் தற்கொலைத்தாரிகளை தடுத்து நிறுத்துவதற்காக நூற்றுக்கணக்கான பெண் பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சோதனை சாவடிகளில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. சமீப நாட்களில் ஈராக்கில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன

5வது ஒரு நாள் போட்டி: ஆட்டம் நிறுத்தம்?

இந்தியா இலங்கை அணிகள் இடையிலான 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

delhi.bmpஇந்நிலையில் ஆடுகளம் மோசமாக இருப்பதால் இலங்ணை அணியினர் ஆட்டத்தை நிறுத்தினர். ஆடுகளம் பற்றி போட்டி நடுவர்களிடம் இலங்கை அணி கேப்டன் சங்கக்கரா புகார் கொடுத்துள்ளார். சங்கக்கரா புகார் செய்ததையடுத்து, போட்டி நடுவர்களும் ஆடுகளத்தை பார்வையிட்டு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணி 23.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.

வடக்கு முஸ்லிம்கள் மே மாதம் முழுமையாக மீள்குடியேற்றம்

presi_election.jpgவடக்கி லிருந்து வெளியேற்றப்பட்ட சகல முஸ்லிம்களும் மே மாதமளவில் சொந்த இடங்களில் முற்றாக மீள்குடியேற்றப்படுவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கு வசதியாக புத்தளத்திலிருந்து மன்னார் செல்லும் பாதை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடமாகாண மாநாடு நேற்று புத்தளம் ஆலங்குடாவில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் ஐம்பதினாயிரம் பேர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி:- முஸ்லிம் மக்களை பணயக் கைதிகளாக வைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கிறோம்.

முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். என்னை முழுமையாக நம்புங்கள். முஸ்லிம்கள் தொடர்பாக என்மீது பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிகளால் சுமத்தப்பட்டன. ஐந்து வேளைத் தொழுகையை நான் நிறுத்தி விடுவேனெனக் கூறினார்கள். இப்போது உண்மை நிலையை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அவ்வாறான பொய்களெல்லாம் எதிர்க் கட்சிகளினாலும் அதன் தலைவர்களினாலும் பரப்பப்பட்டவை. அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள்.

நான் கடந்த தேர்தலில் கூறியவைகளை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறேன். நீங்கள் கடந்த 19 வருடங்களாக இந்தப் பகுதிகளில் அகதிகளாக வாழ்கின்aர்கள். நீங்கள் பட்ட கஷ்டங்களை நான் நன்கறி வேன். அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிகளோடு ஒப்ப ந்தம் செய்தார். அதன் பின்பு, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விருப்பத்துடன் தான் வெளி யேறினரென்று ஹக்கீமும் அவரது சகபாடி களும் கூறினர். அதன்பின்பு உங்களைப் பற்றி அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இப்படிப்பட்டவர்கள்தான் இப்போது உங்கள் மத்தியில் பேச வருகிறார்கள். இ வர்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

இப்படியானவர்கள்தான் இரு இனங்களையும் பிளவுபடுத்த முயன்றனர். அது பலிக்கவில்லை. முஸ்லிம்களின் நிம்மதியைக் கெடுத்து அகதிகளாக்கியவர்களை நீங்கள் ஒருபோதும் நம்பவேண்டாம்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட உங்களது கஷ்டங்களை நான் நன்கறிவேன். அதனால்தான் ஐக்கிய நாடுகள் வரை சென்று பேசினேன். அதேநேரம், மஹிந்த சிந்தனையிலும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருக்கிறோம்.

ஆகவே, தேர்தல் காலங்களில் வந்து பொய் கூறுபவர்களை நம்பாதீர்கள். பொய்களுக்கு என்றுமே அடிபணிந்து விடாதீர்கள். என்றுமே நான் உங்கள் நண்பன். இந்த நட்பு என்றும் தொடரும். என்னை முழுமையாக நம்புங்கள் என்றார் ஜனாதிபதி.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கு முஸ்லிம் மக்களுக்காக அயராது பாடுபடும் ஒரு செயல்வீரன் ரிஷாட். அவரது பணிக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன். எனது ஆலோசனையின் பேரில் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களிலிருந்த சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை மிக கண்ணியமாக நடாத்தி அம்மக்களின் தேவைகள் அனைத்தையும் பூரணமாக நிறைவேற்றிக் கொடுத்தவர் அமைச்சர் ரிஷாட்.  இதனால் எனக்கும் எனது அரசுக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லபிப்பிராயம் ஏற்படுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்.

அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் அவரது மக்களின் முன்னிலையிலேயே நன்றி தெரிவிக்கிறேன். மிக இளவயதில் அமைச்சராக உயர்ந்து இன்று வடமாகாண முஸ்லிம்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். எனது அரசாங்கத்தில் இவர் அமைச்சராக இருப்பது ஒரு சிறப்பான விடயமாகும் என்றும் கூறினார்.

குவைத்திலுள்ள இலங்கையர்களுக்கு தூதரகத்தின் வேண்டுகோள்

employing.jpgகுவைத்தில் பணியாற்றும் இலங்கையர்கள் ஏதாவது பிரச்சினையின் காரணமாகத் தொழில் செய்யும் இடத்திலிருந்து வெளியேற நேரிட்டால், நேரடியாகக் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வருமாறு தூதுவர் கே. எஸ். சீ. திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

அவ்வாறில்லாமல் நண்பர்கள், தெரிந்தவர்கள் இடத்தில் தங்கியிருப்பதன் மூலம் பொலிஸ் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குவதாகத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

நேரடியாகத் தூதரகத்திற்கு வருவார்களாயின், அவர்களின் பிரச்சினைகளைத் தொழில் வழங்குநர்களுடன் கலந்துரையாடித் தீர்த்து வைப்பதுடன் விரும்பும் பட்சத்தில் அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தூதுவர் குறிப்பிட்டார்.

பணிபுரியும் வீடுகளிலிருந்து தப்பிவந்த 210 பேர் இன்னமும் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள தாகக் கூறிய தூதுவர், அவர்களையும் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களையும் நாட்டுக்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தூதுவர் கூறினார்.

குவைத்தில் பணியாற்றுவதற்காக வரும் இலங்கையர்கள் வந்த ஓரிரு வாரங்களிலேயே தொழில் செய்ய முடியாமல், வீடுகளிலிருந்து தப்பியோடுகின்றனர். அவ்வாறு தப்பியோடு வோருக்கு எதிராக வீட்டுரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். இதன் விளைவாக அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி இறுதியில் நாடு கடத்தப்படுகின்றனர்.

மலையகப் பெருந்தோட்டங்களில் முகவர் தபால் நிலையங்கள் உப தபாலகங்களாக மாற்றம்

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் முகவர் தபால் நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களை அர சாங்கத்தின் உப தபாலகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, இது தொடர்பில் விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகத் தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி தெரிவித்தார். மலையகத் தோட்டங்களில் முகவர் தபால் நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 126 கட்டடங்கள் பல வருடங்களாகத் திறக்கப்படாமல் உள்ளன. எனவே, இவற்றை உப தபாலகங்களாக மாற்றியமைத்துத் திறந்து வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 150 வருடகாலத்திற்குப் பின்னர் நேரடித் தபால் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதி அமைச்சர் செல்லச்சாமி, தபால் துறையில் புதிய பரிமாணம் தோற்றுவிக் கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் மேலும் 100 தபால் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

தபால் ஊழியர்களாக 500 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்தபோது 400 பேர் மாத்திரமே கடமைகளைப் பொறுப்பேற்றனர். சில தோட்டங்கள் விடுபட்டதால், 100 பேருக்கு நியமனம் கிடைக்கப்பெறவில்லை. இவர்களுக்குத் தேர்தலுக்குப் பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், மலையகத்திலுள்ள அனைத்துத் தபாலகங்களையும் சகல வளங்களையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடு க்கப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

சங்ககராவின் முடிவு தவறானது : ஷேவாக்

catak.jpgஇலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  316 இலக்கை இந்திய அணி 11 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்த வெற்றிக்கு காம்பீர் (137 பந்தில் 150 ரன். 14 பவுண்டரி), வீரட் கோக்லி (114 பந்தில் 107 ரன். 11 பவுண்டரி, 1 சிக்சர்) ஆகியோரின் அதிரடி ஆட்டமே காரணம். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 214 பந்தில் 224 ரன் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 5-வது முறையாக இலங்கைக்கு எதிராக தொடரை வென்றது.

வெற்றி குறித்து இந்திய அணியின் பதில் கேப்டன் வீரேந்தர் ஷேவாக் கூறியதாவது, இலங்கை கேப்டன் “டாஸ்” வென்று முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவு தவறானது. ஏனென்றால் பனி பொழிவில் பந்து வீச்சாளர்கள் சரியாக வீச இயலாது. பந்தை “கிரீப்” செய்வது கடினம். 2-வது பவுலிங் செய்தால் இந்த நிலைமை இருக்கும் என்று ஏற்கனவே அறிந்து இருந்தோம். நான் “டாஸ்” ஜெயித்து இருந்தாலும் முதலில் பீல்டிங்கைதான் தேர்வு செய்து இருப்பேன். தொடக்கத்தில் எந்தவித ஈரப்பதமும் இல்லாததால் எங்களது சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக வீசினார்கள்.

315 ரன்னை மிகப்பெரிய ஸ்கோராக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் எங்களது பேட்டிங் வரிசை பலமாக இருந்தது. ஆனால் எங்களது தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. நானும், தெண்டுல்கரும் எளிதில் ஆட்டம் இழந்துவிட்டோம். காம்பீரும், கோக்லியும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரது ஆட்டம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை கோக்லி சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஏற்கனவே அவர் இந்த தொடரில் அரைசதம் அடித்து இருந்தார். சாம்பியன் டிராபி போட்டியில் இலங்கைக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தார்.

இளம் வீரர்களான கோக்லி, ரெய்னா, ஜடேஜா தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை நம்மால் வெல்ல முடியும். கோக்லி திறமையானவர். அவருக்கு காம்பீர் ஆலோசனை வழங்கினார். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன். தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதை காம்பீர் கோக்லிக்கு வழங்கியதை பாராட்டுகிறேன். தெண்டுல்கரின் ஆலோசனைப்படி தில்சானை தொடக்கத்திலேயே “அவுட்” செய்தோம். அவர் பந்தை இடது கால் பகுதியில் போடுமாறு கூறினார்.

இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த போட்டிக்காக காத்திராமல் கொல்கத்தாவிலேயே வென்று தொடரை வெல்ல விரும்பினேன். நான் விரும்பியபடி நடந்தது. ஏனென்றால் டெல்லி ஆடுகளம் குறித்து உறுதியாக எதுவும் சொல்ல இயலாது. கடைசி போட்டியில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இலங்கைக்குதான் நெருக்கடி என்றார்.

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறும்போது, எங்களது பந்து வீச்சு சரியில்லை. நேர்த்தியாக வீசவில்லை என்றார்.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று டெல்லி பெரோசா கோடலா மைதானத்தில் நடக்கிறது.

அமெரிக்க விமானத்தை தகர்க்க முயற்சித்ததாக நபர் கைது

flight-02.jpgஐரோப்பா விலிருந்து அமெரிக்கா சென்ற ஒரு விமானத்தை வெடிவைத்து தகர்க்க முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்படும் நைஜீரிய பயணி ஒருவர் அமெரிக்காவில் விசாரிக்கப்பட்டுவருகிறார்.  நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமானம் வெள்ளியன்று ஆம்ஸ்டெர்டாம் நகரிலிருந்து கிளம்பி டெட்ராய்ட் நகரில் தரையிறங்கும் நேரத்தில் இந்த நபர் ஏதோ ஒன்றை வெடிக்க முயற்சி செய்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நபர் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் இலண்டனில் தங்கியிருந்தவர் என்று தகவல்கள் வெளியானதை அடுத்து புலன் விசாரணைகளில் பிரிட்டிஷ் பொலிசார் உதவிவருகின்றனர். நைஜீரியர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்படுவது தங்களது அரசாங்கத்தை சங்கடப்படுத்தியுள்ளது என நைஜீரிய தகவல்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஆசிரிய நியமனத்தில் முறைகேடு: 4 கல்விப் பணிப்பாளர்கள் சப்ரகமுவயில் பணி நீக்கம்

மலையக ஆசிரிய நியமனத்தின் போது சப்ரகமுவ மாகாணத்தில் முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு கல்விப் பணிப்பாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தின் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஒரு மாதத்திற்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் ஒரு பிரதிப் பணிப்பாளரும், இரண்டு வலய உதவிப் பணிப்பாளர்களும் சில தினங்களுக்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.