‘நடைபெற இருக்கும் சிறிலங்காவின் ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது’ என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் நாட்டின் பொறுப்பாளராக அறியப்பட்ட நடராஜா முரளீதரன் நீண்டகாலமாக கனடாவில் வாழந்து வருகின்றார். கலை இலக்கியச் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வரும் இவர் தற்போது வெளிப்படையான அரசியல் நடவடிக்கையிலும் தன்னை வெளிப்படுத்தி வருகின்றார்.மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் மறைமுகமாக எதிர்க் கட்சி கூட்டின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்தா நடராஜா முரளீதரன் இதுவொரு தந்திரோபாய அரசியல் நகர்வே அல்லாமல் சரத்பொன்சோகாவின் கொள்கைகளுடன் உடன்படுவதல்ல எனத் தெரிவித்தார்.
ஜனவரி மூன்றில் இப்பொதுக்கூட்டம் ரொறன்ரோவில் நடாத்த ஏற்பாடாகி உள்ளது.
பின்வரும் நான்கு காரணங்களுக்காக மகிந்த ராஜபக்சவை நிராகரிக்கின்ற முடிவைத் தாங்கள் எடுத்துள்ளதாக நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
1. மகிந்த ராஜபக்சவின் இனவாதத் தலைமையைப் பலவீனப்படுத்துவது. பொன் சேகாவிற்று வாக்களிப்பதன் மூலம் சிங்கள இனவாதத் தலைமைகளைப் பிரித்தாள முடியும்.
2. சர்வதேச அமைப்புகளால் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பது அக்குற்றச்சாட்டுக்களை பலவீனப்படுத்தும்.
3. நடந்து முடிந்த யுத்தத்தை நடாத்தியது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் தலைமையே. இராணுவம் ஒரு கருவி மட்டுமே. அதனால் சரத் பொன்சேகா முதல் குற்றவாளியல்ல.
4. தமிழ் பிழைப்புவாதக் குழுக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் போது அதே அரசியல் தலைமையை ஆதரிக்க முடியாது.
போன்ற காரணங்களுக்காக இந்த அரசியல் சதுரங்கத்தில் தந்திரோபாய அடிப்படையில் தாங்கள் சரத் பொன்சேகாவுக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவதாக நடராஜா முரளீதரன் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட நான்கு காரணங்களுடன் கடந்த காலத்தில் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலோடு இணங்கிச் செயற்பட்ட, அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட, தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையைக் கோரிநிற்கின்ற வேட்பாளர்கள் எம் கெ சிவாஜிலிங்கம், விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்களை ஏன் ஆதரிக்கவில்லை எனக் கேட்ட போது, அவர்களைத் தங்களது ‘நட்பு சக்திகள்’ எனக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அல்லது சரத்பொன்சேகாவே ஜனதிபதியாக வரப் போகின்றார் என்றும் இதில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக வந்துவிட அனுமதிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.
2005 தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த முடிவை தான் அப்போதே விமர்சித்து எழுதியதாகக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் அந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.
நடராஜா முரளீதரன் இக்கருத்தை வெளியிடுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் ‘இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும் இன்றைய அழிவுகளுக்கும் காரணம்” எனக் குற்றம்சாட்டி இருந்தார்.
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைகளை வழங்கியவர்கள் அரசியல் ராஜதந்திரம் தந்திரோபாயம் என்ற பதங்களுக்குள் ஒழிந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின் அணிவகுத்து நின்றதே வரலாறு. தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பியவர்களைப் பலப்படுத்தவோ அணிசேரவோ தமிழ் அரசியல் தலைமைகள் அன்றும் முன்வரவில்லை. இன்றும் முன்வரவில்லை. எறிந்தவரை நோக்கியே திரும்பி வருகின்ற பூமராங் போலவே தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகள் கடந்த 60 வருடங்களாக உள்ளது. இப்பொழுது இந்த பூமராங் விளையாட்டில் இரா சம்பந்தனும் நடராஜா முரளீதரனும் களம் இறங்கி உள்ளனர்.