2010

2010

ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை மார்ச் 2ஆம்

rauff-hakeem.jpgதமக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் படி உத்தரவிடக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை மார்ச்   2ஆம் திகதி நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பதில்  பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, நீதியரசர்கள் ஜகத் பாலபட்டபெந்தி, கே.ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்தத் திகதியை நீதிமன்றம் விசாரணைக்குத் தீர்மானித்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை அடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்தே ரவூப் ஹக்கீம் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல்  செய்துள்ளார்.

கண்டி மாநகரசபை மேயர் நீக்கப்பட்டதை ஆட்சேபித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

கண்டி மாநகர சபை மேயர் எல்.பி.அலுவிகாரவை திடீரென பதவி நீக்கம் செய்தமை மத்திய மாகாண முதலமைச்சரின் நியாயமற்ற செயல் என்பதனை சுட்டிக்காட்டி ஐ.தே.க.உறுப்பினர்களும் ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபையை விட்டு வெளி நடப்பு செய்ததால் கூட்டம் 15 நிமிடங்களுடன் முடிவடைந்தது.

கண்டி மாநகரசபையின் மாதாந்தக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை பதில் மேயர் தலைமையில் கூடியது. இதன்போது ஐ.தே.க.உறுப்பினர்களும் ஜே.வி.பி.உறுப்பினர்கள் சிலருமாக கண்டி மாநகர சபையின் மேயர் எல்.பி.அலுவிகார பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கைகளில் கறுப்புப்பட்டிகளை அணிந்து வந்திருந்தனர்.

கூட்டம் ஆரம்பமானதும் ஜே.வி.பி.உறுப்பினர் ஆனந்த கோணவல, மேயர் பதவி நீக்கப் பட்டமையானது முதலமைச்சரின் நீதி நியாயமற்ற செயலெனச் சுட்டிக்காட்டினார். ஏனைய சில உறுப்பினர்களும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்து சபையிலிருந்து வெளியேறினர். இதனையடுத்து கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு 18 நிமிடங்களுடன் சபை கலைந்து சென்றுள்ளது.

விடுதலைப்புலிகளும் புலம்பெயர் தமிழர்களும்

itb.bmpஇலங் கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் கவலையளிப்பதாகவும், எந்தக் கட்சியினர் தமது குறிக்கோளில் உறுதிப்பாட்டுடன் உள்ளார்களோ அவர்களை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக் கப்பட்ட பின்னரான காலகட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து, ஐ சி ஜி எனப்படும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அறிக்கையில் சில யோசனைகளை பரிந்துரை செய்திருந்தது.

அதில் முக்கியமாக, வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்கள் இனிமேலாவது விடுதலைப்புலிகளின் வழிமுறைகளை நிராகரிக்க வேண்டும் என்று ஐ சி ஜி அமைப்பு கூறியிருக்கிறது.

BBC தமிழோசை

மட்டு. மாணவிமீது பாலியல் வல்லுறவு : ஒரு சந்தேக நபர் அடையாளம்

மட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பிரதேசத்தில் 8 வயது பாடசாலை மாணவி ஒருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.  இதன்போது சந்தேக நபர்களில் ஒருவரைப் பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார்.

கடந்த 12ஆ ம் திகதி குறிப்பிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது, வழியில் நீராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டார். பின்னர் இவர் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக திகிலிவெட்டை இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய்கள் 6 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதாகி நீதிமன்ற உத்தரவையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.  இது தொடர்பான அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது, அன்றைய தினம் குறித்த முகாமில் கடமையிலிருந்த 49 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் தெரிவித்தார்.

4 சுற்றுக்களில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் இறுதிச் சுற்றிலேயே சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறும் அவர், குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் தொடர்ந்தும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்

ஸ்ரீரங்கா நுவரெலியா மாவட்டத்தில்…

unp-logo.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் முன்னணி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

கே.கே.பியதாசவை முதன்மை வேட்பாளராகக் கொண்டு, ஸ்ரீரங்கா, திகாம்பரம், உதயகுமார், சதாசிவம், எல்.பாரதிதாஸன் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளனர்.

அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன! முன்னாள் எம்.பி. தங்கேஸ்வரி

thangeswari.jpgஅரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன என்றும் நொந்துபோயுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவூம் அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான க. தங்கேஸ்வரி தெரிவித்தார். தேசியம், அரசியல் என்று கூறிக்கொண்டு இனியும் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் மக்களுக்கு இப்போது உடனடித் தேவையாக இருக்கும் விடயங்களை நிறைவேற்றுக்கொடுக்க வேண்டியதே அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் அந்தத் தவறையே மேற்கொள்கிறது. அவர்களின் செயற்பாட்டை தேர்தல் மேடைகளில் அம்பலப்படுத்துவேன். 30 வருட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ள படுவான்கரை உள்ளிட்ட பிரதேசங்களின் மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தங்கேஸ்வரி மேலும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்

 sandanaya.pngஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம்பெறுகின்றவ்களின் பெயர்ப் பட்டியலை கூட்டமைப்பின் செயலாளர்  நாயகம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தோதல்கள் ஆணையாளர் நாயகத்திடம் இன்று (26) கையளித்தார்.
பட்டியலில் இடம்பெறுகின்றவர்கள்.

ரத்னசிறி விக்கிரமநாயக்க
டி. எம். ஜயரட்ன
டலஸ் அழகப்பெரும
பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்
டியூ குணசேகர
பேராசிரியர் விஸ்வா வர்ணபால
பேராசிரியர் திஸ்ஸ விதாரன
அச்சல ஜாகொட
எம். எச். முஹம்மட்
கீதாஞ்சன குணவர்தன
விநாயகமூர்த்தி முரளிதரன்
வி. ஜே. மு. லொக்கு பண்டார
சங்கைக்குரிய எல்லாவள மேதானந்த தேரர் சங்கைக்குரிய ஒமல்பே சோபித தேரர்
முத்துசிவலிங்கம்
சண்முகம் ஜெகதீஸ்வரன்
மொகமட் முசம்மில்
அனுருத்த ரத்வத்த
ஏ. ஆர். பீ. சூரியபெரும
ஜானக பிரியந்த பண்டார
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க
லெஸ்லி தேவேந்திர
சந்திரசேகரன் சண்முகநாதன்
ஏ.எச். எம். அஸ்வர்
டொக்டர் ஹரிச்சந்திர விஜேதுங்க
யூ. எல். சாஹுல் ஹமீத்
கமலா ரணதுங்க
சரத் கோங்காகே
மாலினி பொன்சேகா

”புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது!” : INTERNATIONAL CRISIS GROUP – ICG

international_crisis_group‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது’ என இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் பெப்ரவரி 23ல் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ‘THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ள 25 பக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE – EXECUTIVE SUMMARY : INTERNATIONAL CRISIS GROUPஇன்ரநசனல் கிறைசிஸ் குறூப் முரண்பாடுகளைத் தடுப்பதற்கும் தீர்ப்பதற்குமான ஒரு சுயாதீன அமைப்பு. ஐந்து கண்டங்களிலும் நேரடியாக களநிலைமைகளை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு ஆலோசனைகளையும் இவ்வமைப்பு வழங்கி வருகின்றது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பெரும்பாலும் பிரிவினையை விரும்புவதாகவும் இதுவே அவர்களுக்கும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான போராட்டத்தில் ஆர்வம்கட்டுவதிலும் பார்க்க தங்கள் வாழ்வை மீளக்கட்டமைப்பதிலேயே கூடுதலாகக் கவனம் செலுத்துவதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

வெளிநாடுகளில் வாழ்கின்ற ஒரு மில்லியன் வரையான தமிழர்களால் தாங்கள் தனித்து ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அறிக்கை  புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியும் அமைப்புகளும் இலங்கையில் மீள் எழக்கூடிய வன்முறையின் அளவினை அதிகரிக்கச் செய்யும் என எச்சரித்து உள்ளது.

உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தமிழ் ஈழத்திற்கான ஆதரவு இல்லையென்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இவ்வறிக்கை புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழீழ பிரிவினைக் கோரிக்கை மகிந்த ராஜபக்ச அரசினை அச்சமடையச் செய்வதன் மூலம் அரசு கடுமையான பயங்கரவாதத் தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு உதவுவதாக தெரிவித்து உள்ளது.

இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்களின் நிதி இலங்கையின் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள இவ்வறிக்கை இத்தாக்கம் எவ்வாறானததாக அமையும் என்பது வரும் மாதங்களில் தமிழ் மக்களை கொழும்பு அரசு எவ்வாறு அணுகப் போகின்றது என்பதிலேயே தங்கி உள்ளதாகத் தெரிவித்து உள்ளது. மேலும் சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் தமிழர்களுடையதும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுடையதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வைப்பதிலும் தங்கி உள்ளது என அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் இலங்கை அரசு முரண்பாட்டின் காரணத்தை இனம்கண்டு நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் வலியுறுத்தி உள்ளது. தமிழர்கள் அரசியல் ரீதியாக ஓரம்கட்டப்படுவதையும் அவர்கள் பாதுகாப்பின்மையாக உணர்வதும் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை வலியுறுத்தி உள்ளது.

இதற்கு இந்தியா, ஜப்பான், மேற்கு நாடுகள் மற்றும் பல்கலாச்சார அமைப்புகள் தமிழ் மக்களைப் பலப்படுத்த வேண்டும் எனவும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் ஐநா விசாரணைகளை மேற்கொள்ளக் கோர வேண்டும் என்றும் அவ்வறிக்கை ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் உதவிகள் உரிமை மீறல்களுடன் பிணைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இராணுவ பதவிகளின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதாலேயே பொன்சேகா கைது – பாதுகாப்பு செயலர்

gr.jpgஅரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகார பூர்வ பதவிகளின் அந்தஸ்தை பயன்படுத்தியமை காரணமாகவே ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஐ.ரீ.என். தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசியலில் தலையிடாமை மற்றும் பங்கேற்காமை காரணமாக இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு ஆசியாவில் பொறுப்புள்ள படையினர் என்ற நல்ல மதிப்பு உள்ளது.

எனினும் பொன்சேகா அவரது சேவைக்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் பிரதானி ஆகிய பதவி அந்தஸ்தை சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளிடம் செல்வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளதுடன் ஒரு சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இராணுவ தளபதியின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தையும் பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறான அவரது தவறான நடத்தை மற்றும் இராணுவ ஒழுங்கினை மீறியமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் சேவையில் இருக்கும் போது எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற கருத்தை இளம் இராணுவ வீரர்களிடமும் ஏனைய நிலைகளில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடக்கூடும் இதனால் தான் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.

சரத் பொன்சேகா அவரது அதிகார பூர்வ இராணுவ பதவிகளின் அந்தஸ்தையும் இராணுவ வளங்களையும் அவரது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியமைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அடுத்த இரு வாரத்தில் பொன்சேகாவுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு அரசாங்கம் அறிவிப்பு

sarath_fonseka.jpgஇராணு வத்தினால் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருப்பதாக அறிவித்திருக்கும் அரசாங்கம், குற்றவியல் கோவை நாணயப் பரிமாற்றச் சட்டம் என்பவற்றின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தொடரவிருப்பதாகவும் தெரிவித்தது.

சுமார் 40 வருடங்கள் இராணுவச் சேவையிலிருந்து இராணுவத்தளபதியாக பதவி வகித்து பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று அரசியலில் பிரவேசித்த ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு வந்தது. இதனடிப்படையில் ஜெனரல் பொன்சேகா இராணுவத்தினரால் இம்மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.அவர் மீதான விசாரணைகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வரும் நிலையில் சட்டமா அதிபர் சிவில் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்தார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது; ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இராணுவம் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அது முடிவுற்றதன் பின்னர் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தல் போதுமான சாட்சியங்கள் இருக்குமிடத்து அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.

அது அவ்விதமிருக்க அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கமைய அவர்மீது சிவில் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரம் அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்படவிருக்கும் குற்றப்பத்திரத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்படவிருக்கின்றன.இராணுவத்துக்கு ஆயுதங்கள் உபகரணங்களை கொள்வனவு செய்த போது இடம்பெற்ற ஊழல் தொடர்பானது இது றைகோப் நிறுவன ஊழல் மோசடியாகும்.அடுத்தது இராணுவத்தை பிளவுபடுத்தி அரசுக்கு எதிராகச் செயற்படத்தூண்டியமை, மூன்றாவது தப்பியோடிய இராணுவத்தினரை அணிதிரட்டி தனது தேர்தல் பிரசாரப்பணிகளுக்குப் பயன்படுத்தியமை. இவற்றுக்கு மேலதிகமாக நாணயப் பரிமாற்றச்சட்ட விதிகளுககு முரணாக பெருந்தொகையான அமெரிக்க டொலர்களை வங்கிப்பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தமையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றைச் சுட்டிக்காட்டியே சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை தயார்படுத்தி வருகின்றார்.இந்த சிவில் வழக்குக்குப் புறம்பாக ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை தொடர்ந்து இடம்பெறும்.அத்துடன், ஒரு உயர் இராணுவ அதிகாரிக்கு வழங்கப்படும் சகல வசதிகளும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, ஜெனரல் சரத்பொன்சேகா கைது விவகாரத்தை உள்ளூர் அரசியல் சக்திகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பெரிதுபடுத்திக் காட்டி அரசுக்கு எதிரான விதத்தில் சர்வதேச மயப்படுத்தி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முனைந்து வருகின்றன. இவ்வாறான நிலையில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து போதுமான பதிலாக அமைந்துள்ளது.அவரது கைது நியாயமானது என்பதை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது எனவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.