2010

2010

தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல் – பல புதுமுகங்கள் களத்தில்

Sambanthan_R_TNAவடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று (24) தாக்கல் செய்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

இந்தத் தேர்தலில் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்பது பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். போட்டியிட்டுத் தெரிவான பதினொரு பேருக்குப் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வன்னி மாவட்டத்தில் முன்னாள் உறுப்பினரான செல்வம் அடைக்கல நாதன் முதன்மை வேட்பாளராகவும் மற்றும் நடேசு சிவசக்தி(ஆனந்தன்), சு. வினோ நோகராலிங்கம் ஆகியோரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக மாவை சேனாதிராசாவும் மற்றும் சுரேஷ் பிரேமச் சந்திரனும் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக தோமஸ் விலியம் போட்டியிட சந்திரநேரு சந்திரகாந்தனும் இடம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டியலில் பா. அரியனேத்திரன் இடம் பெற்றுள்ளார்.

திருகோணமலையில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவளித்த என். ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட 11 பேருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை வழங்கியதாகக் கூறப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர் துரைரெட்ணசிங்கத்தின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை.

அதேபோன்று சிவநாதன் கிஷோர், க. தங்கேஸ்வரி, ச. கனகரட்னம் ஆகியோருக்குக் கூட்டமைப்பு சந்தர்ப்பம் வழங்காததால் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியில் இணைந்து போட்டி யிடுகின்றனர்.

சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வருவதுடன் இம்முறை புதிய இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

பத்மினி சிதம்பரநாதன், கஜன் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சொலமன் சிறில், இமாம், எஸ். ஜெயானந்தமூர்த்தி, உள்ளிட்ட 11 பேர் நிரா கரிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் உறுப்பினர் ரி. கனகசபை அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே இடம்பெற்றுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, சிறில், கஜேந்திரன் ஆகியோர் போட்டியிட விண்ணப்பித்திருந்தும் அவர்கள் போட்டியிட அனுமதிக் கப்படவில்லை.

புதிய முகங்களாக உதயன், சுடரொளி பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் ஈ. சரவணபவன், பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், சட்டத்தரணி ரெமீடியஸ், முன்னாள் டிறிபேர்க் கல்லூரி அதிபர் அருந்தவச்செல்வம், மாவை சேனாதி ராஜாவின் செயலாளர் குலநாயகம், ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய போதும் அதன் தலைவர் அ. விநாயகமூர்த்தியும் முன்னாள் யாழ். மாநகர சபை ஆணையாளர் சி. வி. கே. சிவஞானமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மட்டு. மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியும் மேலும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் நேற்று காலை நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகத் திடம் இந்த நியமனப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார் பில் பொ. செல்வராசா, பா. அரியநேத் திரன், இ. நித்தியானந்தம், கு. செளந்தர ராசா, க. ஆறுமுகன், சீ. யோகேஸ்வரன், த. சிவநாதன், சு. சத்தியநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  இவர்களில் பொ. செல்வராசா, பா. அரியநேத்திரன், கு. செளந்தரராசா ஆகிய மூவரும் முன்னாள் எம்.பிக்களாவர்.

வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பட்டியலில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராகவும் ஏனைய வேட்பாளர்களாக நடேசு சிவசக்தி, சு. நோகராதலிங்கம், எஸ். சூசைதாசன், பெ. பழனியாண்டி, து. ஜெயகுலராசா, சி. செல்வராசா, எஸ். பீ. எஸ். பீ. சிராய்வா, கு. லோக செளந்தரலிங்கம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

அம்பாறை மாவட்டம்

தோமஸ் விலியம் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட கே. மனோகரன், சந்திரநேரு சந்திரகாந்தன், செ. இராசையா, எச். வி. விஜேசேன, ரோமியோ குமாரி சிவலிங்கம், வே. தங்கதுரை, எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. வடிவேல், எஸ். பகீரதன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

வன்னியில் புளொட், இரு சுயேச்சைகள் நேற்று வேட்பு மனுதாக்கல்

வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புளொட் நேற்று (24) வேட்பு மனுத் தாக்கல் செய்தது. புளொட் முதன்மை வேட்பாளராக கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் போட்டியிடுகிறார். புளொட் பட்டியலில் க. சிவனேசன், ரஞ்சித் ருஸ் வேல்ட், ஈ. பரஞ்சோதிலிங்கம், க. ஞானதாஸ், பு. பாலச்சந்திரன், சு. வரோனிகா, பு. திருச் செல்வன், து. சுந்தரராஜ் ஆகியோரும் அட ங்குவர். இது தவிரவும், இரண்டு சுயேச்சைக் குழுக்களும் நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கு. கனேஸ்வரன் தலைமையிலான சுயேச் சைக் குழுவில் சி. உதயராசா, வி. கலைச் செல்வன், த. நவநீதன், இ. சுப்பிரமணியம், க. பெரியண்ணன், க. சகுந்தலாதேவி, ஐ. ஏநோக், கு. அந்தோனி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மு. சகாப்தீன் தலைமையிலான குழுவில் இ. முத்து முகமது, மீ. அமீன், ர. ரவுசான், மு. அன்வர், மு. பiர், பிரதிவிராஜ் வாசன், எம். ஜவாத்கான், ஆர். ஆர். பெதிகே விஜித ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சரத் பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்கவும் வெவ்வேறு கட்சிகளில் ஒரே மாவட்டத்தில்..

sarath.jpgஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிட வருமாறு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

நேற்று முன்தினம் (23) திருமதி அனோமா பொன்சேகாவைச் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடுமாறு முன்னாள் ஜெனரல் பொன்சேகாவுக்குக் கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஜே. வி. பி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே ரணில் விக்கிரமசிங்க அவசர அவசரமாக திருமதி பொன்சேகாவைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை சரத் பொன்சேகா நேற்று நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக மேடையேறிய சரத் பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்கவும் வெவ்வேறு கட்சிகளில் ஒரே மாவட்டத்தில் களமிறங்குவதால் ஐ. தே. க. வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பதென்று தீர்மானிப்பதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளார்கள்.

17 கட்சிகள், 28 சுயேச்சைக் குழுக்கள் நேற்று வேட்புமனுத் தாக்கல்

srilanka_parliament_02.jpgபாராளு மன்றத் தேர்தல்களுக்காக நேற்று 17 கட்சிகளும் 28 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அதேநேரம், 56 சுயேச்சைகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று அறிவித்தது.

இதன்படி, இலங்கைத் தமிழ் அரசு கட்சி யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, திகாமடுல்ல மாவட்டங்களில் நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது.

சமூகத்துவ சமத்துவ கட்சி காலி, கொழும்பு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், ஒக்கம வெசியோ ஒக்கம ரஜயோ கட்சி காலி, குருணாகல் மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் இலங்கை தேசிய முன்னணி பொலன்னறுவை, புத்தளம், கேகாலை, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் ஜாதிக்க ஜனசத்த கட்சி பொலன்னறுவையிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி குருணாகலையிலும் தேசப் பிரேமி தேசிய முன்னணி புத்தளம், இரத்தினபுரி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் சிங்களயி மஹா சம்மத பூமி புத்ர கட்சி புத்தளம் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய தேசிய மாற்று முன்னணி இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் இலங்கை தொழிலாளர் கட்சி இரத்தினபுரி, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும் ஜனசத்த முன்னணி கண்டியிலும் ஐக்கிய இலங்கை மகா சபை மாத்தளை, களுத்துறை மாவட்டங்களிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி களுத்துறையிலும் ஐக்கிய சமத்துவ கட்சி களுத்துறையிலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னியிலும் மலையக மக்கள் முன்னணி பதுளையிலும் நேற்று தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

இதேவேளை நேற்று யாழ்ப்பாணம், கம்பஹா, காலி, அநுராதபுரம், கேகாலை, கண்டி, கொழும்பு, மட்டக்களப்பு, நுவரெலியா ஆகிய ஒன்பது மாவட்டங்களிலிருந்தும் ஒவ்வொரு சுயேச்சைக் குழு வீதம் ஒன்பது சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின. திருகோணமலை, புத்தளம், மாத்தளை, வன்னி ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா இரண்டு சுயேச்சைக் குழுக்கள் வீதம் 08 சுயேச்சைக் குழுக்களும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 03 சுயேச்சைக் குழுக்களும் பொலன்னறுவையிலிருந்து 04 சுயேச்சைகளும், இரத்தினபுரியிலிருந்து 04 சுயேச்சைக்களுமாக மொத்தம் 28 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இதுவரை 226 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்று மாத்திரம் 56 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் நாளை (26) நண்பகல் 12.00 மணிக்கு பூர்த்தியடைய உள்ளன. இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று (25) பல மாவட்டங்களுக்கு சுப நேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதோடு ஐ. தே. க.வும் ஜனநாயக தேசியமுன்னணி (ஜே.வி .பி. தலைமையிலான) ஆகிய கட்சிகள் இன்றும் நாளையும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளன.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானது. ஐ.ம.சு. முன்னணி ஏற்கனவே கம்பஹா, ஹம்பாந்தோ ட்டை காலி ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதோடு நேற்று மாத்தளை மாவட்ட ஐ.ம.சு.மு. வேட்பாளர் பட் டியல் முதன்மை வேட்பாளர் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தலைமையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்டியலில் மாத்தளை மாநகர மேயர் ஹில்மி கரீம், செந்தில் சிவஞானம் (இ.தொ.கா.), முன்னாள் அமைச்சர்களான ரோஹன திஸாநாயக்க, நந்தி மித்ர ஏக்கநாயக்க ஆகியோரும் அடங் குவர். சுயேச்சைக் குழுவொன்றும் நேற்று (24) மாத்தளை மாவட்டத்துக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தது.

இதேவேளை ஐ.ம.சு. முன்னணி இன்று மட்டக்களப்பு, வன்னி, அம்பாறை, மாத்தறை உட்பட பல மாவட்டங்களுக்கு வேட்பு மனுக்களை கையளிக்க உள்ளதோடு நாளை (26) பதுளை, கொழும்பு உட்பட எஞ்சிய மாவட்டங்களுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ஐ.ம.சு. முன்னணி தெரிவித்தது.

இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நேற்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்தது. திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட புளொட் கட்சியும் நேற்று வேட்பு மனுக்களை கையளித்தன. வன்னியில் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அந்தக் கட்சியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

சத்தியசீலனை முதன்மை வேட்பாளராகக் கொண்ட த.ம.வி. புலிகள் கட்சியின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் ஆசாத் மெளலானா கூறினார். தமது கட்சி ஏற்கனவே வன்னி, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு த.ம.வி. புலிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் மட்டு மாவட்டத்துக்கு நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். இதே வேளை முன்னாள் எம்.பி. இராஜகுகனேஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக்குழு நேற்று (24) வன்னி மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது.

இதே வேளை, புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நேற்று (24) ஜனசெத்த முன்னணியும் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தன.

சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை

batsman-sachin.jpgகுவாலி யரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார்.  200 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

முதலில், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோர் இதுவரை வைத்திருந்த ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்களான 194 என்ற இலக்கைத் தாண்டி புதிய சாதனை படைத்தார் சச்சின். அதைத் தொடர்ந்து அடுத்த சில பந்துகளில் இரட்டை சதத்தையும் தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார் சச்சின்.

147 பந்துகளில் 200 ஓட்டங்களைப் பெற்ற சச்சின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்தார்.  இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார். இந்த சாதனையைத்தான் இன்று சச்சின் உடைத்தார். அத்தோடு நில்லாமல் புதிய உலக சாதனையையும் படைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 401 ஓட்டங்களைப் பெற்றது. இந்தியா ஒரு நாள் போட்டி ஒன்றில் 400 ஓட்டங்களைக் கடப்பது இது நான்காவது முறையாகும்.

கல்முனை – யாழ் பஸ்சேவை மார்ச் 1இல் ஆரம்பம்

jaffna.jpgகல்முனையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான இரவு நேர பஸ்சேவை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்க ப்படவுள்ளது.

கல்முனை இ.போ. சபை மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 6.00 மணிக்கு புறப்படும் பஸ் காத்தான்குடி, மட்டக்களப்பு, பொலன்னறுவையூடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து மீண்டும் மறுநாள் மாலை 6.00 மணிக்கு யாழ்ப்பா ணத்திலிருந்து கல்முனை நோக்கி புறப்படவுள்ளது.

இப்பஸ்சேவை கல்முனை, அக்கரைப்பற்று சாலையால் நடத்தப்படவுள்ளது.

‘தமிழ் மக்களுக்கான போதிய சுயாட்சியே த.தே.கூவின் கொள்கை’

Sambandan R TNA MPஇலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  ததேகூ தனது கொள்கைகளை கைவிட்டு விட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் தாம் இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியாக செயற்பட விரும்புகின்ற போதிலும், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.

துறைமுகங்கள், மின்நிலையங்கள், நீர்ப்பாசன திட்டங்கள்; அபிவிருத்தி யுகம் ஆரம்பம் – மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்ட அங்குரார்ப்பண விழாவில் ஜனாதிபதி

he_the_president.jpgநாட்டுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தத் தவறியதால் நாடு 40 வருட கால பலனை இழந்து நிற்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அபிவிருத்தியாகட்டும், யுத்தமாகட்டும் நாம் போதிய நிதியைக் கையில் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கவில்லை. உள்ளதை வைத்தே தொடங்கினோம். மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தை 500 மில்லியன் ரூபாவை வைத்தே ஆரம்பித்தோம். எனினும் இதுவரை 6000 மில்லியன் ரூபா நிதியைச் செலவு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி நேற்று அங்கு விஜயம் செய்ததுடன் மொரகஹகந்த பாலம் உட்பட பல மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதற்கான விசேட நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, எஸ். எம். சந்திரசேன, ரோஹண திசாநாயக்க உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

1990ம் ஆண்டிலிருந்து நீர்ப்பாசனத் துறைக்கென முன்னிருந்த அரசு உரிய திட்டங்களை மேற்கொள்ள வில்லை. அதனால் விவசாயிகள் நம்பிக்கையிழந்து அத்துறையைவிட்டு விலகிச் சென்ற யுகமே தொடர்ந்தது. எம்மால் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க நேர்ந்தது. ‘உம ஓய’ திட்டம் இருபது வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்க வேண்டியது. அதேபோன்று மகா வலித் திட்டம் கூட டட்லி சேன நாயக்கவின் காலத்தில் அவர் ஆரம் பித்தது என்பதை மறக்கக்கூடாது.

500 மில்லியன் ரூபாவை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கி ஆரம் பித்த மொரகஹகந்த திட்டம் தற் போது 6000 கோடி ரூபா செலவில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கிய நிதியில் தேசிய வரு மானத்தைக் கொண்டே நாம் இதன் முதற்கட்டப் பணிகளைப் பூர்த்தி செய்துள்ளோம்.

இன்று புதிதாக ஆரம்பித்து வைக் கப்பட்ட மொரகஹகந்த பாலம் 308 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை எமது நாட்டு பொறியியலாளர்களே நிர்மாணித்துள்ளனர்.  இந்த கங்கையிலிருந்து 726 மில்லியன் லீற்றர் தண்ணீர் தினமும் கட லில் சேர்வதை நாம் தடுத்துள்ளோம். பராக்கிரமபாகு மன்னனின் கூற்றுப்படி ஒரு துளி நீரையும் கடலில் சேர நாம் இடமளிக்கக் கூடாது.

இத்திட்டத்திற்கான பாதைகளை நிர்மாணிக்கும் போது இயற்கை வனாந்தரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நான் வலியுறுத்தியிருக்கின்றேன்.

நாம் யுத்தத்தையும் அபிவிருத்தியையும் சம காலத்தில் முன்னெடுத்தோம். நாடு எங்கிலும் அபிவிருத்தி, துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் என தொடர்கிறது.

பல வருடங்களாக அடிக்கல் மட்டுமே மீதமாகவுள்ள அபிவிரு த்தித் திட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம். நாம் அடிக்கல் அல்ல அபிவிருத்தியையே ஆரம்பிக்கி றோம். அரசாங்கத்துக்கு நல்லாட்சி சம்பந்தமான பயிற்சிகளை வழங்கு வதற்காக 69 மில்லியனை அரச சார்பற்ற நிறுவனத்துக்கு மாதாந்தம் வழங்கிய அரசாங்கத்தைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். இந்த நிதியில் வீதிகளை, பாலங்களை நிர்மாணித்திருக்க முடியும்.

நாடு, நாட்டு மக்கள் எனப் பார்த்தே அனைத்தையும் நாம் மேற் கொள்கிறோம். எதிர்வரும் தேர்தலின் பின்னர் அதிவேக அபிவிருத்திப் பணிகள் தொடரும். தற்போது யுத்தம் இல்லை நாம் எவ்வித தடை யுமின்றி வேகமாக அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.

அதேபோன்று சட்டத்தை நடை முறைப்படுத்தும் போது தராதரம், வகுப்பு வாதம் என பார்க்காது ஜனநாய கத்தைப் பாதுகாக்கும் முடிவுகளையே மேற்கொள்வோம். மக்கள் எம் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா – 2347 பேருக்கு பட்டங்கள்

university.jpgஇவ் வருடத்துக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 2,347 பேருக்கு இம்முறை பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி பிரேமதாச உடகம தலைமையில் ஜிம்னாசியம் மண்டபத்தில் காலை 8.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது

தனியார் பஸ் வண்டிகளில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டத் தடை

தனியார் பஸ் வண்டிகளில் தேர்தல் சுவரொட்டிகளை ஓட்டுவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

எந்தவொரு பஸ்ஸிலாவது சுவரொட்டி காணப்பட்டால், உடனடியாக அந்த பஸ் வண்டியின் இலக்கத்தைப் பொலிஸ் மா அதிபருக்குப் பெற்றுக் கொடுக்கப் போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார். பஸ்ஸின் சாரதியும், நடத்துநரும் தவறிழைத்தால் அவர்களும் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படுமென்று கூறிய கெமுனு விஜேரத்ன, இது தொடர்பில் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், நடந்துநர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விஜேரட்ன கூறினார்.

அரசியல்வாதிகள் பஸ்களில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்குத் தடைவிதிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுக் கொண்டுள்ள தாகக் கூறிய கெமுனு விஜேரட்ன, பெப்ரவரி 26ம் திகதிக்குப் பின்னர் எந்த வொரு பஸ்ஸிலாவது சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தால், குறித்த பஸ் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணையாளர் உறுதியளித்ததாகவும் கூறினார்.

திங்கட்கிழமை ஆணையாளரைச் சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். தனியார் பஸ்களில் தேர்தல் சுவரொட்டிகளைக் காட்சிப்படு த்துவது தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும்.  எமது தொழில் மக்களுக்கு சேவை யாற்றுவதே அன்றித் தனியொருவருக்கோ கட்சிக்கோ பிரசாரம் செய்வது அல்ல.

ஆனால், சில அரசியல்வாதிகள் தனியார் பஸ்களில் பலவந்தமாக சுவரொட்டிகளை ஒட்டுவதாகவும், இதனால் கடந்த தேர்தலில் 10 பஸ் வண்டிகள் சேதமடைந்தாகவும் கெமுனு விஜேரட்ன மேலும் தெரி வித்தார்.