தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்புமனுப் பத்திரத்திலும் இவர் கையொப்பமிட்டுள்ளார். தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடவே இறுதி நேரம் வரை காத்திருந்த போதிலும் கூட இறுதி நேரத்தில் அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் வழங்கப்படவில்லை. இது விடயமாக தேசம்நெற் இணையத்தளத்திற்கு தங்கேஸ்வரி பிரத்தியேகமாக அளித்த பேட்டி கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
கேள்வி: ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் நீங்கள் போட்டியிட முன்வந்தமைக்கான காரணம் என்ன?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழேயே போட்டியிட வேண்டும் என்று இறுதிநேரம் வரை நான் காத்திருந்தேன். ஆனால், இறுதி நேரத்தில் எனது பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கிவிட்டதாக உறுதிப்படுத்திக் கொண்டதையடுத்து ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட முடிவெடுத்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிநேரத்தில் இம்முடிவினை அறிவித்திருந்தால் எனக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது போயிருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதற்காகவே அபேட்சகர் பெயர் பட்டியலை தயாரிப்பதில் தாமதத்தைக் காட்டி வந்தது என்று நான் நினைக்கின்றேன்.
கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தங்கள் பெயர் ஏன் நீக்கப்பட்டது?
பதில்: இது பற்றி எனக்கு எந்தவிதமான உத்தியோகபூர்வமான பதில்களும் தரப்படவில்லை. ஆரம்பத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கூட்டமைப்பு பட்டியலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனுவில் என்னை இணைத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். அவரால் தரப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுமென்றே நான் இறுதிநேரம் வரை எதிர்பார்த்திருந்தேன். எனக்கு கிடைக்கும் நம்பகமான தகவல்களின்படி ஏற்கெனவே நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துவிட்டதாக கூட்டமைப்பில் எனது சகோதர பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவர் இரா. சம்பந்தன் ஐயாவிடம் பொய்யாகக் கூறியதாகவும் இதனை வைத்துக் கொண்டே சம்பந்தன் ஐயா இந்தமுடிவை எடுத்ததாக அறியமுடிகின்றது. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெறும் முடிவினை நேற்றிரவே (20.02.2010) எடுத்தேன். அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எனக்கு இடம் ஒதுக்கப்படாது என்று தெரிந்த பின்பே.
கேள்வி: இது பற்றி தலைவர் சம்பந்தன் அவர்கள் தங்களிடம் விசாரித்தாரா?
பதில்: இல்லை. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டதாக அவர் என்னிடம் எந்தவிதமான கேள்விகளையும் கேட்கவில்லை. ஓர் அனுபவமிக்க சிரேஸ்ட தலைவர் என்ற வகையிலும், ஒரு கௌரவமிக்க தலைவர் என்ற வகையிலும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் என்னிடம் விசாரித்த பின்பே முடிவினை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்காமை வேதனைக்குரிய விடயம். சம்பந்தன் ஐயாவை ஒரு தலைவர் என்ற வகையில் நான் மலைப்போல் நம்பியிருந்தேன். ஆனால், அவர் இவ்வாறு நடந்து கொண்டது என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற கூட்டமைப்பு ஆசனங்கள் வழங்கப்போவதில்லை என தலைவர் ஆர். சம்பந்தன் லண்டனில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சில புலம்பெயர்ந்த ஊடகங்கள் செய்திகளையும், கட்டுரைகளையும் கூட வெளியிட்டிருந்தன. இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்.?
பதில்: இது பற்றி நான் இணையத்தளங்கள் வாயிலாக செய்தி அறிந்தேன். லண்டணிலிருந்து சிலர் என்னிடம் நேரடியாக தொடர்புகொண்டும் கதைத்தனர்.
இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் கேட்க விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்களை வழங்குவதில்லையென தலைவர் தெரிவித்திருந்தால்
விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தான் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா?
புலிகளால் நியமிக்கப்படாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் புலிகளுக்கெதிராகவா செயற்பட்டனர்.?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் . கடந்த காலத்தில் புலிகளின் ஆணைப்படியே செயல்பட்டதை இவர்கள் மறந்துவிட்டார்களா?
சம்பந்தன் ஐயா கூறியபடி இருப்பின் தற்போதுள்ள 22 அங்கத்தவர்களில் யாருக்குத் தகுதியுள்ளது?
கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் முடிவினை நீங்கள் குறிப்பிடுவதைப் போல இவ்வளவு கெதியாக எவ்வாறு எடுத்தீர்கள்.?
பதில்: இந்நேரம் வரை (இப்பேட்டி வழங்கப்பட்டது 21ம் திகதி இரவிலாகும்) நான் சுதந்திரக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெறவில்லை. நேற்று முன்தினம் ஜனாதிபதி அவர்கள் என்னிடம் தொடர்புகொண்டார். நேற்று பசில் ராஜபக்ஸ அவர்கள் என்னிடம் கதைத்தார். அச்சந்தர்ப்பத்தில் இன்று ஜனாதிபதி அவர்களை நேரடியாகச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று சந்திக்கவில்லை. இருப்பினும், சுதந்திரக் கட்சியில் இணைவதை நான் முடிவாக எடுத்துவிட்டேன். (22ம் திகதி ஜனாதிபதி அவர்களை தங்கேஸ்வரி நேரடியாக சந்தித்துள்ளார்.)
கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பொதுவேட்பாளர் சரத்பொன்சேக்காவை நீங்கள் ஆதரித்தீர்கள். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவெடுத்துள்ளீர்கள். இதனை சந்தர்ப்பவாத அரசியலாக தங்கள் வாக்காளர்கள் கருதமாட்டார்களா?
பதில்: கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சரத்பொன்சேக்காவை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேக்காவை ஆதரிக்க வேண்டுமென்று முடிவெடுத்த பின்பு கட்சியின் முடிவினையேற்று நடக்க வேண்டிய கடமை எமக்குள்ளது. இவ்வடிப்படையிலேயே கட்சியின் முடிவுக்கமையவே சரத்பொன்சேக்காவை நான் ஆதரித்தேன்.
கேள்வி: அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் முடிவினை எடுக்கும்போது தாங்களும் அதனை ஆதரித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தனவே.
பதில்: இதில் உண்மையில்லை. ஜனாதிபதித் தேர்தலின்போது சரத்பொன்சேக்காவை ஆதரிக்க வேண்டுமென கட்சியின் தலைமை உட்பட சிலரின் முடிவே அங்கு எடுபட்டது. முடிவெடுக்கப்பட்ட பின்பு கட்சியின் போக்குக்கு இணங்க வேண்டியது. அதன் அங்கத்தவர்கள் என்ற வகையில் எமது கடமை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
கேள்வி: தங்கள் தற்போதைய முடிவினை தங்கள் தொகுதி வாக்காளர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
பதில்: நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயல்பட்டு வருகின்றேன். எமது பிரதேச மக்களுக்கு இன்று பிரதானமாக தேவைப்படுவது அபிவிருத்தியே. இந்த மக்களிடையே அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது இப்பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானதாகும். கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழ் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள விடயத்தை எமது பிரதேச தலைவர்களிடம் கதைத்தபோது அவர்களில் 90வீதமானோர் தமது ஆதரவினை வழங்கினர். ஜனாதிபதியின் தலைமையின் கீழ் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குண்டு.
கேள்வி: இத்தேர்தலில் உங்கள் தொகுதி மக்களிடம் எந்த அடிப்படையில் வாக்குகளைக் கேட்கவுள்ளீர்கள்.?
பதில்: பிரதேச அபிவிருத்தியை முதன்மைப்படுத்தியே மக்களிடம் வாக்குகளைக் கேட்கவுள்ளேன்.
கேள்வி: தங்கள் பிரதேச அபிவிருத்தியினை தற்போதைய ஜனாதிபதியின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குள்ளதா?
பதில்: நிச்சயமாகவுள்ளது. ஜனாதிபதி அவர்கள் தேசத்தின் அபிவிருத்தியை முதன்மைப்படுத்தியே மஹிந்த சிந்தனை இரண்டினை முன்வைத்துள்ளார். எனவே, நான் வெற்றி பெறுமிடத்து எனது பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும், பிரதேச அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
கேள்வி: கடந்த பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் ஒதுக்கீட்டுப் பணத்தினை மக்களுக்காக செலவிடாமல் திரைச்சேரிக்கே திரும்பியதாக சில கருத்துக்கள் நிலவுகின்றன. இது பற்றி தங்களது கருத்து என்ன? தங்களது ஒதுக்கீட்டுப் பணத்தினை மக்களுக்காக முறையாகப் பயன்படுத்தினீர்களா?
பதில்: இது பற்றி எனக்கு முழுமையாகப் பதிலளிக்க முடியாது. ஆனால், எனக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டுப் பணத்தினை நான் முறையாக ஆண்டுதோறும் என் தொகுதி அபிவிருத்திக்காக வழங்கியுள்ளேன். எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தப் பணமும் திரைச்சேரிக்கு திரும்பிச் சென்றதில்லை.
கேள்வி: வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த பல வருடங்களாக தமது தொகுதி பக்கமே தலைகாட்டியதில்லை எனவும் தற்போது சில மாதங்களாகத் தான் அவர்களது முகங்களை தொகுதி மக்களால் காணமுடிகின்றது என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றனவே. இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: இக்கருத்துக்களில் உண்மையுண்டு. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தன்னால் சில ஆயுதகுழுக்களின் பயமுறுத்தலினாலும் கொலை அச்சுறுத்தல் காரணமாகவும் தொகுதிக்குச் செல்லவில்லை என்பது உண்மை. தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாயின் எனது சொந்த வீடு கூட தாக்குதலுக்குட்பட்டது. நான் பல வருடங்களாக சேகரித்து வைத்திருந்த பல தொல்பொருட்கள் கூட அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது எனக்கென என் தொகுதியில் சொந்த வீடில்லை. வாடகை வீடொன்றையே நான் பெறவுள்ளேன். உயிரச்சம் காரணமாக எமது கட்சியின் ஆலோசனைப்படி நான் கொழும்பிலேயே தங்கியிருந்தமையால் எனது தொகுதிக்கு செல்ல முடியவில்லை. தற்போது இத்தகைய அச்சுறுத்தல்கள் இன்மை காரணமாக எமக்கு எமது தொகுதிகளுக்குச் சென்றுவர முடிகின்றது. நான் கொழும்பில் இருந்தாலும் எனது தொகுதி மக்களுக்காக வேண்டி ஆற்ற வேண்டிய சேவைகளை ஆற்றியுள்ளேன். அம்மக்களின் பிரச்சினைகளை இயலுமான வரை தீர்த்துள்ளேன். எனக்கு ஒத்துழைப்பாக எனது செயலாளர் என் தொகுதியிலே இருந்தார். இதனால் தொகுதி மக்களுக்கும் எனக்குமிடையிலான தொடர்பில் இடைவெளி ஏற்படவில்லை என்றே எண்ணுகின்றேன்.
கேள்வி: வடக்கு கிழக்கில் கடந்த கால யுத்த அனர்த்தங்களின்போது பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாகவும்ää பாதிக்கப்பட்ட நிலையிலும் இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கு பகுதிகளில் போட்டியிடக் கூடிய அரசியல் கட்சிகள் பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென்று பெண்ணுரிமை அமைப்புக்கள் கோரிக்கைவிட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா?
பதில்: நிச்சயமாக இல்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் கடந்த தேர்தலில் இரண்டு பெண் பிரதிநிதிகள் தெரிவாகினர். ஒன்று நான். மற்றயவர் யாழ் மாவட்டத்தில் பத்மினி. இந்த இருவருக்குமே இம்முறை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் மறுக்கப்பட்டுள்ளது. பெண்கள் உரிமை சம்பந்தமாக எவ்வளவு கோசங்கள் எழுப்பியபோதிலும்கூட அவற்றின் முக்கியத்துவம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு விளங்கமாட்டாது. விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையுமில்லை.
கேள்வி: அவ்வாறாயின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் எந்தவொரு பெண் வேட்பாளரும் இல்லை என்று குறிப்பிடுகின்றீர்களா?
பதில்: அவ்வாறுதான் தோன்றுகின்றது.