‘நகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தை 5 வார காலத்தில் அபிவிருத்தி செய்து முடிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். ‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம் நேற்று (21) கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகியது. இங்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
கொழும்பில் ஆரம்பமாகும் இத்திட்டம் படிப்படியாக நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஆசியாவின் பெருமைக்குரிய நாடாக இலங்கையை மாற்றியமைக்கவேண்டுமானால் அனைத்து நகரங்களும் பெருமளவு அபிவிருத்தி செய்யப்பட்டு அலங்காரம் மிக்க நகரங்களாக மாற்றப்படவேண்டும் என்று கூறினார்.
‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் முதல்கட்டமாக கொழும்பு நகரை அண்டியுள்ள குடிசை மற்றும் குறைந்த வசதிகளுடன் கூடிய வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும்.
நகரத்தை கட்டியெழுப்புவோம். துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு நகரை அடுத்துள்ள தோட்ட மற்றும் குறைந்த வசதி கொண்ட 354 வீட்டுத் தொகுதியின் பொது வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.
ஆரோக்கிய வசதி மற்றும் பொது குளிக்கும் இட வசதி, உள்ளே செல்லும் வழிகள் மற்றும் கழிவு கால்வாய்த் திருத்துதல், மின்சார மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தல் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளன.