2010

2010

வடக்கு, கிழக்கில் தொ. நு. கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் – கொரிய வங்கி 9 கோடி டொலர் கடனுதவி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் அமைப்பதற்காக கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கி 9 கோடி அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியுள் ளதாக தொழில் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு தெரிவித்தது.

இந்தத் கடனுதவியினூடாக கல்குடா, மன்னார் ஆகிய இடங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதோடு திருகோணமலை, வவுனியா, சேருநுவர ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

மேற்படி கடனுதவியை பெறுவது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி, வடக்கு கிழக்கில் புதிதாக பல தொழில் நுட்பக் கல்லூரிகள், தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான இடங்களை அடையாளங்கண்டு சாத்தியக் கூற்று அறிக்கை தயாரிப்பதற்காக கொரியாவில் இருந்து குழுவொன்று விரைவில் இலங்கை வர உள்ளதாகவும் அமைச்சு கூறியது. மோதல் காரணமாக வடக்கு, கிழக்கில் இருந்த தொழில் பயிற்சி நிலையங்கள் சேதமாகின.

தேர்தல், சம்பளம் பற்றி சிந்திக்காது நாட்டு நலனை கருத்தில் கொள்ள வேண்டும் – ஜனாதிபதி

mahindaதேர்தல் மற்றும் சம்பளம் பற்றிச் சிந்திக்காது நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலனைக் கருத்திற் கொண்டு சிறந்த சேவையாற்றுவதற்கு அரசியல் தலைவர்களும் அரச அதிகாரிகளும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகள் என்ற வகையில் தமக்கு படைக்கப்பட்ட பொறுப்புக்களை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

குறைந்த வசதியுடைய வீட்டுத் தொகுதிகள், சேரிப்புற வீடுகள் மற்றும் தோட்டப்புற வீடுகளை அபிவிருத்தி செய்யும் ‘நகரைக் கட்டியெழுப்புவோம்’ கருத்திட்டத்தின் முதற் கட்டக் கலந்துரையாடல் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நகரை அண்டிய சேரிப்புற வீடுகள், குறைந்த வசதிகளைக் கொண்ட வீட்டுத் தொகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அபிவிருத்தித் திட்டமொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப் படவுள்ளது.

நகரைக் கட்டியெழுப்புவோம் எனும் இத்துரித அபிவிருத்தி செயற்றிட்டம் எதிர்வரும் 21ம் திகதி சுபவேளையில் கொழும்பு நகரைக் கேந்திரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன் முதற் கட்ட நடவடிக்கையாக கொழும்பு நகரை அண்டிய தோட்டங்கள் மற்றும் குறைந்த வசதிகளையுடைய வீட்டு தொகுதிகளுக்கான புனரமைப்பு இடம்பெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 354 வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

குடிநீர், குளியல் வசதிகள், கழிவுப் பொருட்கள் அகற்றல், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் இதனூடாகப் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. அத்துடன் இத்திட்டத்துக்குச் சமகாலத்தில் கொழும்பு நகரை அண்டிய பிரதேசங்களின் பாதைகளைத் திருத்தி பராமரித்தல், மாடி வீடுகளின் பராமரிப்பு, நகரின் அடிப்படை வசதிகளை யும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன.

கொழும்பு நகரைக் கேந்திரமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தும் இச் செயற்திட்டத்தை 5 வார காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார். நேற்றைய இந்நிகழ்வில் தேசநிர்மாண அமைச்சின் செயலாளர், மின்வலு எரி சக்தி அமைச்சின் செயலாளர் உட்பட நகர அபிவிருத்தி-நீர்வழங்கல் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மாத்தளையில் சத்துணவு நஞ்சாகிய விவகாரம்: ஒப்பந்தக்காரரும் மனைவியும் தலா ரூ. 2 இலட்சம் பிணையில் விடுதலை

மாத்தளையில் பாடசாலை மாணவர்களுக்கு வங்கிய சத்துணவு நஞ்சாகி பத்து வயது பாடசாலை மாணவி ஒருவர் மரணமடைந்தமை 129 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக சத்துணவு வழங்கிய ஒப்பந்தக்காரரையும், உதவியாளரான அவரது மனைவியையும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல மாத்தளை மாவட்ட மேலதிக நீதவான் சாலிய பெரேரா உத்தரவிட்டார்.

இதேவேளை மரணமான பாடசாலை மாணவி கல்வி கற்ற மாத்தளை புத்தகோஸ சிங்கள வித்தியாலய அதிபர் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர், உணவு ஒப்பந்தத்துக்கு சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் எதிர்வரும் மார்ச் 02 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யும் படியும் நீதவான் உத்தர விட்டார்.

மாத்தளை பலாபத்வெல புத்தகோஸ வித்தியாலம் தொம்பவெல மற்றும் கவட்டயாமுன கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு, வழங்கிய பகல் சத்து ணவு நஞ்சாகி புத்தகோஸ மாணவியின் மரணம், 129 மாணவர்கள் நோய்வாய்ப் பட்டமை சம்பந்தமான வழக்கு விசாரணை க்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாத்தளை மேலதிக நீதவான் சாலிய பெரேரா மேற்படி உத்தரவை விதித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு விடயத்தில் பாடசாலை நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறிய மேலதிக நீதவான் சாலிய பெரேரா பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மாணவர்களுக்கு வழங்குவதற்கு உகந்ததா என்பதை பரீட்சித்து உறுதிப்படுத்தியதன் பின் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நீதவான் கூறினார்.

கவனயீனமாக உணவு தயாரித்தமை, பரிமாற்றம் செய்தமை போன்ற குற்றச் சாட்டின் பேரில் குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் 298 ஆம் பிரிவின்படி மஹவெல பொலிஸாரினால் சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் பீ. அறிக்கை சமர்பிக் கப்பட்டது. தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக் கப்பட்டோர் மாத்தளை தொம்பவயைச் சேர்ந்த ஜி.பீ.எம். சமர கோன் பண்டா, இந்திரலதா சமன் தி விஜேரத்ன ஆகிய கணவன்-மனைவி இருவருமாவர்.

மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக் அபேசிறிவர்தனாவின் பணிப்பின் பேரில் மாத்தளை மஹவெல பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் அதிரடிக்கு சனத் ஜயசூரிய ஆயத்தம்!

sanath-jayasuriya.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மாத்தறையில் பிரசித்தி பெற்ற மகாபோதி விகாரையில் இன்று முற்பகல் மதவழிபாடுகளில் ஈடுபட்டார்.

அங்கு பெருந்திரளான மக்கள் அணிதிரண்டு அவருக்கு பெரு வரவேற்பளித்தனர். அதன் பின்னர் அங்கு கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய,  மாத்தறை மக்களுக்கு சேவையாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  வேண்டுகோளின் பேரில்  அரசியலில் காலடி எடுத்து வைக்கிறேன். அரசியலில் பிரவேசித்தலும் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தமாட்டேன். மாத்தறை மக்களின் நன்மைக்காக பாடுபடுவேன். நாட்டுக்காக விளையாடுவதிலும் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதிலும் மகிழ்வடைகிறேன் என்று கூறினார்.

அவுஸ்திரேலியா நிலக்கண்ணிகளை அகற்ற தன்னியக்க இயந்திரங்கள் அன்பளிப்பு!

aus.jpgஅவுஸ் திரேலிய அரசாங்கம் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள  சுமார் 250 மில்லியன் ரூபா பெறுமதியான் ஐந்து தன்னியக்க இயந்திரங்களை அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகள்ää மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்லோவேக்கியா நாட்டுத் தயாரிப்பான பொஸேனா 4ரக ஐந்து இயந்திரங்களும் நேற்று தேச நிர்மாண அமைச்சின் செயலாளரிடம் இலங்கைக்கான அவுஸ்திரேலியா தூதுவர் கையளித்தார்.

கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்துள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கருகே கையளிப்பு வைபவம் நடைபெற்றது.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கää ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே உட்பட. ஐ.நா.வின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகள் உட்படää அவுஸ்திரேலிய தூதரகத்தின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர். 
 

தனுன திலகரட்னவின் தாயார் பிணையில் விடுவிப்பு

danuna_mother.jpgபல்வேறு வங்கிகளில்  75 மில்லியன் ரூபா பணம் வைப்பில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கல்கிசை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்செய்யப்படட் பின்னரே பிணையில் செல்ல  அனுமதிக்கப்பட்டார். அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாதெனவும் நீதி மன்றம் உத்தரவு பிறப்பி;த்துள்ளது.

பெருந்தொகையான வெளிநாட்டுப் பணத்தை  வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை செய்யும் முகமாக,  தனுன திலகரட்னவின் தாயார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரிடமிருந்து நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

2000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதிகொண்ட வெளிநாட்டுப் பணத்தை ஒருவர் வைத்திருப்பது இலங்கை நிதிச் சட்டப்படி பெருங்குற்றமாகும். அதற்கு அவர் மத்திய வங்கியிடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும் என மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்ன தலைமறைவு; தாயார் பொலிஸில் வாக்குமூலம்

danuna-son-in-law-sarath.jpgஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்ன தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தனுனவின் தாயாரான திருமதி அசோக திலகரட்ன 16 பெப்ரவரி 2010 குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
 
ஹய் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு விவகாரங்களில் இவருக்கு தொடர்புள்ளதையடுத்து, அவரை கைது செய்து விசாரிப்பதற்கான நீதிமன்ற உத்தரவை புலனாய்வு பிரிவினர் பெற்றிருந்தனர்.

ஆயுத ஊழல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ன கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் தனுன திலகரட்னவின் தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்

“பிரிட்டிஷ் பிரஜையாவதற்கு வரிசையில் நிற்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்”

london-01.jpgகுடியேற்ற வாசிகளுக்கு பிரஜாவுரிமை வழங்கும் பரீட்சையின் ஒரு பகுதியாக வரிசையில் நிற்பது எப்படி என்பதைக் கற்பிப்பதற்குப் பிரிட்டன் திட்டமிடுகிறது.இ த்திட்டத்தை அந்நாட்டின் சிரேஷ்ட அமைச்சரே வெளியிட்டிருக்கிறார்.

பஸ்களில் ஏறுவது முதல் பாண்துண்டுகளைப் பெற்றுக் கொள்வது வரை ஒவ்வொன்றுக்குமே வரிசையாக நிற்பது எவ்வாறு என்பதைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.”இந்தத் திட்டம் பகிடியான விடயமாக தோன்றினாலும் இதில் தாங்கள் தீவிரமாக இருப்பதாக அமைச்சர்கள் வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். பிரிட்டிஷ் வாழ்க்கை முறையை அதிகளவுக்குக் குடியேற்றவாசிகள் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர் என்று ரெலிகிராப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வரிசையில் காத்து நிற்க வேண்டும் என்பது தொடர்பாக குடியேற்றவாசிகள் மத்தியில் புரிந்துணர்வுத் தன்மை இல்லாததால் அதிகளவு பதற்ற நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் முன்னுக்கு செல்வதற்கு முண்டியடிப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் சமூகத்திடம் குடியேற்றவாசிகள் உரிய முறையில் ஒருங்கிணைந்து கொள்வதனை உறுதிப்படுத்துவதற்கான நகர்வுகளின் ஓரங்கமாக இந்தத் திட்டத்தை முன்வைப்பதாக குடிவரவுத்துறை அமைச்சர் போல் வூலாஸ் கூறியுள்ளார்.வரிசையில் தன்னுடைய இடத்தின் பிரகாரம் ஒருவர் செயற்படுதல் மிகவும் சாதாரணமான செயற்பாடாகும். அது எமது நாட்டை ஒன்று சேர்க்கும் விடயங்களில் ஒன்றாக உள்ளது.

புதிதாக வருபவர்கள் வரிசையில் தமது இடத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். பஸ் என்றால் என்ன, தேநீர் என்றால் என்ன தத்தமது வரிசைக்குரிய இடத்தின் பிரகாரமே சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வூலாஸ் கூறியுள்ளார்.

“நேர்மையாகச் செயற்படுவதென்ற பிரிட்டனின் உணர்வுக்கு இது மத்திய ஸ்தானத்தை வகிப்பதுடன் சகலருக்கும் இது சிறப்பான விடயமாகும். ஆட்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டவாறு முன்னுக்கு செல்வதால் அதிகாலையில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. நியாயமாகச் செயற்படுவதையே அநேகமான குடியேற்றவாசிகள் விரும்புகின்றனர் என்பது எனது அனுபவமாகும்” என்று அவர் தெரிவித்தார்.பிரிட்டஷ் கடவுச்சீட்டை வைத்திருக்கும் உரிமையைப் பெற வெளிநாட்டவர்கள் பிரிட்டிஷ் பிரஜாவுரிமையைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு முன் எழுத்து மூலப்பரீட்சைக்கு அவர்கள் தோற்றவேண்டும்.

நைட் விஷன், ரவைகள் அக்கராயன்குளத்திலிருந்து மீட்பு

prasard.jpgவட பகுதியிலிருந்து இரவு பார்வை தொலைநோக்கி (நைட் விஷன் பைனாகுலர்) மற்றும் 1500 துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ள தாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

அக்கராயன்குளம், ஆந்தன்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட பாரிய தேடுதலின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ. கே. – 47 ரக மெகஸின், ரி-56 ரக மெகஸின், 3 மிதிவெடிகள், பல்வேறு வகையான பெருந்தொகை துப்பாக்கி ரவைகளையும் கண்டெடுத்துள்ளனர். இதேவேளை, கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலிருந்து கைக்குண்டுகளையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

காலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு, ஊவாவில் கனத்த மழை மட்டக்களப்பில் 70.3 மி.மீ. மழை

rain.jpgகால நிலையில் திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாகவே தற்போது மழை பெய்வதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் ஆனந்த பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.

இம் மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் நீங்கிவிடும் எனவும் அவர் கூறினார். இம்மழைக் காலநிலை காரணமாக கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதிக மழை பெய்யும். வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் மழை பெய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று பிற்பகல் வரையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 70.3 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதுவே நேற்று பெய்த அதிக மழை வீழ்ச்சி எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன் அறுவடை செய்யப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான ஏக்கர் நெல் கற்றைகள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முற்பகல் வேளை ஆரம்பமான மழை இடைவிடாது பிற்பகல் நேரம் வரை பெய்தது. இதனால் ஏறாவூர், மட்டக்களப்பு, காத்தான்குடி போன்ற நகர பிரதேச வீதிகள் நீரில் மூழ்கின. இதையடுத்து போக்குவரத்து ஸ்தம்பித நிலை காணப்பட்டது.

செங்கலடி – பதுளை வீதியை அண் மித்துள்ள பிரதேசங்களில் இம்முறை பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் நெல் வயல்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில் அடை மழை பெய்ததனால் எதிர்பார்க்கும் அறுவடை கிடைக்காது விடலாமென விவசாயிகள் அஞ்சுகின்றனர்.