2010

2010

சீகிரிய செல்வோர் பாதுகாப்பு கவசங்களை அணிவது கட்டாயம்!

பிரபல சுற்றுதாத் தலமான சீகிரிய குன்றுகளை பார்வையிடச் செல்லும் சகல சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டும் என கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுää வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் குளவி தாக்குலுக்கு இலக்கான சம்பவத்தை அடுத்து நேற்று முதல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிங்கப்பாதப் பகுதியிலிருந்து மாளிகை பிரதேசம் வரையிலான பகுதியில் சுற்றுப் பயணிகள் கட்டாயமாக பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டுமென சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை அனைவரும் பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்ததுடன் பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தேர்தல் அசம்பாவிதங்களை தடுக்க பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு

police_logo.jpgபொதுத் தேர்தல் காலத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு ஒன்று இம்முறை முதற்தடவையாக ஆரம்பித்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமுள்ள 413 பொலிஸ் நிலையங்களிலும் 40 பொலிஸ் பிரிவுகளிலும் தேர்தல்கள் தொடர்பான தனியான கண்காணிப்பு பிரிவுகள் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். நாடு முழுவதிலும் பொலிஸார் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவின் மூலம் கண்காணிக்க ப்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க இப்பிரிவு இலகுவாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சத்துணவு நஞ்சாகிய விவகாரம்; ஒப்பந்தக்காரருக்கு விளக்கமறியல்; உதவியாளருக்கு சரீரப்பிணை

சத்துணவு நஞ்சாகி பத்து வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடையக் காரணமாகவிருந்த, நேற்று கைதான ஒப்பந்தக்காரரையும் உதவியாளராக செயல்பட்ட பெண்மணியையும் மாத்தளை மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது ஒப்பந்தக்காரருக்கு இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் உதவியாளரான பெண்மணியை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அத்துடன், இறந்து பத்து வயது பாடசாலை மாணவியின் மரண சடங்குகளின் செலவீனங்களுக்கென ரூபா 50,000 வழங்கும்படியும் சந்தேக நபர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார். மேற்படி இருவரும் இன்று மாத்தளை நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, சத்துணவு நஞ்சாகியமை தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சாந்தி சமரசிங்க தலைமையில் இன்று ஆரம்பமாகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் நேற்று பகல் வேளை வரையும் 30 மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க விண்ணப்பிக்கும் காலம் புதன் முடிவு

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி இருப்பவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்ளிப்பதற்கு விண்ணப்பிப் பதற்கான காலம் நாளை மறுதினம் 17ம் திகதியுடன் முடிவடையவிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் தாம் தங்கியுள்ள கிராமசேவைகர் ஊடாக தங்களது விண்ணப்பப் படிவங்களைத் தேர்தல் செயலகத்திற்கு 17ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் :- இடம்பெயர்ந்திருப்பவர்கள் பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக பொதுத் தேர்தல் சட்டப்படி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆகவே பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் நாளை மறுதினம் 17ம் திகதிக்கு முன்னர் தாங்கள் தங்கி இருக்கும் பிரதேச கிராம சேவகர் ஊடாக விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

பொலிஸ் மா அதிபர் – பொதுமக்கள் சந்திப்பு தற்காலிகமாக நிறுத்தம்

police_logo.jpgபொது மக்கள் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பொலிஸ் மா அதிபரை சந்திக் கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேலைப்பளு காரணமாகவே பொது மக்கள் சந்திப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரியஷாந்த் ஜயகொடி தெரிவித்தார்.

பொது மக்கள் பொலிஸ் மா அதிபரை நேரடியாக சந்திக்கும் நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரை பொது மக்கள் நேரடியாக சந்திக்கு நடைமுறை நிறுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு மாதகாலத்திற்குள் அவசர தேவைக்கான உதவி பெற விரும்புபவர்கள் 0112-472592 என்ற பெக்ஸ் இலக்கத்தின் மூலம் தெளிவுபடுத்த முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கனகசபை அரசியலிலிருந்து ஓய்வு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெறவுள்ளதாகவும், தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வாக்களித்த  மக்களுக்கும், தனது பதவிக் காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கும்,  ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

தான் அரசியலில் இருந்து முற்றாக ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை மேலும் தெரிவிக்கையில்:- தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடி மேற்கொண்ட முடிவின் பிரகாரம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனது கணவருக்கு செய்த பாவத்தின் பழியை பொன்சேகா அனுபவிக்கிறார் – மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி

mrs-pannipitiya.jpgசரத் பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ்வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே முறையிட்டேன்.

ஆனால், எனது கணவருக்கும் ஏனையோருக்கும் செய்த பாவத்தையும் பழியையும் இன்று சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமாவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி அச்சினி இரோமா தெரிவித்துள்ளார்.

எனது கணவரும் சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர்தான். அநாமதேய அவதூறு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு எனது கணவரை இராணுவத்திலிருந்து விலக்கினார். சரத் பொன்சேகாவின் மனைவியுடன் மிகவும் நெருங்கிய உறவுகளை நான் வைத்திருந்த போதும் எனது கணவருக்கு இவ்வாறு நடந்தது.

ஆனால் இன்று சரத் பொன்சேகாவுக்கு இப்படி நடந்தவுடன் அவரது மனைவி ஒவ்வொருவரிடமும் முறையிடுவதும் பெண்கள் அமைப்புக்களை ஆதரவு வழங்கக்கோரி அழைப்பு விடுப்பதுமாக இருக்கிறார். முன்செய்த பாவங்கள் பலித்துக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இன்று தண்டனை பெறும் போது அவரது பிள்ளைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனது கணவர் விலக்கப்படும் போது எனது மூத்த பிள்ளைக்கு 12 வயது. ஏனைய இரண்டு பிள்ளைகளும் 4 வயதையும், 5 வயதையும் உடையவர்களாக இருந்தனர். கணவர் கைது செய்யப்பட்ட போது இந்தக் குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப் பட்டேன்.

குழந்தைகளுடன் வீதியிலிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு உதவியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரது மனிதாபிமானம், காருண்யம் என்பவற்றால்தான் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வென்று மீண்டும் ஜனாதிபதியாகி இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தைப் பற்றி பிழையான தகவலை பரப்பி வருகிறார் கோர்டன் வைஸ் – அரசாங்கம் கூறுகிறது

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தைப்பற்றி கொழும்பிலுள்ள ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் பிழையான தகவலைப் பரப்புவதாக அரசாங்கம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.”அது முற்றுமுழுதாக பிழையான தகவல்” என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல டெய்லிமிரலுக்கு கூறியுள்ளார்.

கடந்த வருடம் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள்கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்று ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்ததன் மூலம் சர்ச்சையை கோர்டன் வைஸ் கிளறிவிட்டிருக்கிறார்.

இந்த மாதிரியாக அதிக தொகையில் பொது மக்களின் மரணங்கள் சம்பவித்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் போதிய விபரங்கள் அந்தத் தருணத்திலும் அதற்கு பின்னரான மாதங்களிலும் வழங்கப்பட்டிருந்ததாக ஹுலுகல்ல கூறியுள்ளார்.பொதுமக்களை புலிகள் எவ்வாறு இம்சித்தனர் என்பது பற்றி ஒளிநாடா மூலம் பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கக்கூடியதாக இருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்தினோம் என்பதையும் ஒளிநாடா மூலம் காண்பிக்கக் கூடியதாக இருந்தது எனவும் ஹுலுகல்ல கூறியுள்ளார்.

நம்பகமான வட்டாரங்களிலிருந்து தான் தகவலைப் பெற்றிருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் மோதல் வலயத்திற்குள் பிரசன்னமாகி இருந்தது என்றும் கோர்டன் வைஸ் கூறியிருந்தார். அத்துடன் அந்த வட்டாரங்கள் தமிழ் பொதுமக்களோ அல்லது மோதலில் ஈடுபட்டவர்களோ அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த 8 மாதங்களில் எந்தவொரு அமைப்புகளும் இவ்விதம் தெரிவித்திருக்கவில்லை என்று ஹுலுகல்ல தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பகுதிகளுக்கு பல வெளிநாட்டு, உள்ளூர் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆதலால் இதில் ஏதாவது உண்மை இருந்தால் எவரும் இதனைப் பற்றி கதைப்பதற்கு 8 மாதங்கள் வரை காத்திருக்க முடியாது. எந்தவொரு அமைப்பிடமிருந்தும் எனக்கு இந்த மாதிரியான எந்தவொரு முறைப்பாடும் கிடைத்திருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் வைஸ் தெரிவித்த சகலவற்றையும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் நிராகரித்துள்ளார். கோர்டன் வைஸ் முன்னரும் இந்த மாதிரியான தவறான அறிக்கைகளை விடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதிரியான தவறான அறிக்கைகளை விடுத்த சிலரில் அவரும் ஒருவர். இவற்றை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். நாட்டிற்கு வெளியே அனுப்பப்பட்ட சிலரில் அவரும் ஒருவர் என்று ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

ரூ. 285 மில். பெறுமதியான இயந்திர உபகரணங்கள் சீனாவினால் கையளிப்பு

china.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா பகுதிகளில் வீதி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவென சீன அரசு 285 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திர உபகரணங்களை நேற்று வழங்கியது. இலங்கையிலுள்ள சீனத் தூதுவர், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்காவிடம் இவற்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பெக்கோ இயந்திரங்கள், மோட்டார் கிறேடர்கள், புல்டோசர்கள் என்பன இவற்றில் அடங்குகின்றன. கொழும்பு காலிமுகத் திடலில் கையளிப்பு வைபவம் நடைபெற்றது. சீன நாணயப்படி 17 மில்லியன் யுவான்கள் என கணக்கிடப்பட்டுள்ளதுடன் இவை சீன அரசு அன்பளிப்பாகவே வழங்குகிறது என தேச நிர்மாண அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி தெரிவித்தார்.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மேலும் 5 மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் இயந்திரங்களும் கொண்டு வரப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மேலும் 5 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்குகிறது என்றும் செயலர் குமாரசிறி தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல் தேசியமட்ட விசாரணையில் நம்பிக்கை இல்லை; நவநீதம்பிள்ளை

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேசமட்ட விசாரணைக்கு ஐ.நா. மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறது.அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த தேசியமட்ட விசாரணைகள் இதுவரை உரிய இலக்குகளை எட்டவில்லை என்பதில் தனது அலுவலகம் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அளித்த உறுதிமொழிக்கு அமைவாக விடயங்கள் இடம்பெறுவது குறித்து பான் கீ மூன் தீவிர உறுதிப்பாட்டுடன் இருப்பதாகவும் நவநீதம்பிள்ளை கூறியதாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்தது.ஜெனீவாவில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை அண்மையில் தான் சந்தித்ததையும் நவநீதம்பிள்ளை உறுதிப்படுத்தியுள்ளார்.

“தேர்தல் முடிவுறும் வரை ஒவ்வொருவரும் காத்திருந்ததாகத் தென்படுகிறது. ஆதலால் அதனை நான் அவருக்கு ஞாபகப்படுத்தியிருந்தேன் என்றும் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கிறார்.”மனித உரிமைகளுக்கான தனித்துவமான அமைச்சு அலுவலகத்தை இலங்கை கொண்டுள்ளது. மனித உரிமைகள் விவகார அமைச்சர் தனது அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்ற பொறுப்பு இருப்பதாகத் தான் நினைத்தேன். மோதலுக்குப் பின்னரான உரிமைகள்,வன்முறைகள் பற்றி மட்டுமல்லாமல் தேர்தலுக்குப் பின்னரான உரிமைகளுடன் தொடர்புடைய வன்முறைகள் பற்றிப் பேசவேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் கருதினேன்” என்றும் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்ற விவகாரத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரிய முறையில் தீர்வு காணப்படவில்லை என்பது தொடர்பாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும் நவநீதம்பிள்ளை மற்றொரு நாட்டின் உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கங்கள் நடவடிக்கையெடுப்பதற்கு இதுவொரு முக்கியமானதொன்று என்று கூறியுள்ளார்.

போர்க்குற்றங்களை நிராகரித்திருக்கும் அரசாங்கம் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இடமளிக்கப் போவதில்லையெனக் கூறியுள்ளது.

அந்த மாதிரியான விசாரணைக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விசாரணைக்கான காரணம் எதுவும் இல்லை எனவும் கூறியிருந்தார். அதேவேளை, சர்வதேச விசாரணையில்தான் சாட்சியமளிப்பார் என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.