2010

2010

சரத் பொன்சேகாவை விடுவிக்க பெளத்த பீடாதிபதிகள் கோரிக்கை

sarath.jpgஇலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 18 ஆம் திகதி கண்டியில் மாநாடு ஒன்றிற்கு நான்கு பௌத்த பீடாதிபதிகளும் அழைப்பு விடுத்திருக்கும் நிலையிலேயே சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவுக்கும்,  ஜனாதிபதிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடானது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்றது என்பதையும் பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசம்: விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் புலிகளால் முன்னர் புதைத்து வைக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப் பட்டுள்ளன.

புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் நடவடிக்கையின் போது புலிகளின் பிராந்திய தளபதியாக இருந்த 34 வயதுடைய மோகன் என்றழைக்கப்படும் மகேந்திரராஜா வழங்கிய தகவலுக்கிணங்க விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள், கைக்குண்டுகள், ஸ்னைப்பர் ரக ஆயுதங்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட புலி முக்கியஸ்தர் கொழும்பில் புலனாய்வு பொலிஸாரின் விசாரணையில் தொடர்ந்தும் இருக்கிறார். நாவற்காடு வைத்தியசாலையில் கடமையாற்றிய சிங்கள வைத்தியரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத் துள்ளது.

மாத்தளை: சத்துணவு நஞ்சாகிய விவகாரம்: பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது

சத்துணவு நஞ்சாகி 10 வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடைந்தது தொடர்பாக பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை, பலாபக்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் சத்துணவு உட்கொண்ட மாணவர்களில் தனஞ்சனி கமகே என்ற 10 வயது மாணவி மரணமடைந்தார். மேலும், 129 மாணவர்கள் சுகவீனமடைந்து மாத்தளை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர்.

கொந்தராத்துக்காரரால் பாடசாலை மாணவர்களுக்கென வழங்கப்பட்ட சத்துணவு நஞ்சாகியதாலேயே இந்த சம்பவம் நடத்திருக்கிறதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஏனையவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர்களையும் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென மாத்தளை ஆஸ்பத்திரி அத்தியட்சகர் டாக்டர் கே. டபிள்யூ. எஸ். குமாரவன்ச தெரிவித்தார். எவருக்கும் உயிராபத்தில்லை யெனவும் அவர் கூறினார்.

மேற்படி பாடசாலை உட்பட தொம்பவெல மற்றும் கவட்டயாமுன பாடசாலைகளில் கல்வி கற்கும் கீழ் பிரிவு மாணவர்களே மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

போஷாக்கு உணவாக வழங்கப்பட்ட நூடில்ஸ் முட்டை, சொதி என்பனவுடன் மாணவர்களின் வாந்தி மற்றும் மலம் என்பன மேலதிக ஆய்வுகளுக்காக உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி கே. டப். எஸ். குமாரவன்ஸ மேலும் தெரிவிக்கின்றார். இது சம்பந்தமான பொலிஸ் விசாரணை மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக் அபேசிரிவர்தனவின் பணிப்புரையின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜயம்பதா பண்டார மேற்கொண்டுள்ளார்.

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு: கண்டி மேயர் அலுவிகார பதவியிலிருந்து நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள கண்டி மாநகர சபையின் மேயர் எல். பி. அலுவிகாரவை பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக அப்பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

மேயர் எல். பி. அலுவிகார தொடர்பாகக் கிடைத்த பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னரே அவரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கத் தீர்மானித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்தும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, இதற்கு முன்னர் உடபலாத்த பிரதேச சபைத் தலைவர் – பாத்ததும்பர நகர சபைத் தலைவர், கங்க வட்ட கோறளை பிரதேச சபைத் தலைவர்களும் இவ்வாறான மோசடிக் குற்றச் சாட்டுக்களின் பேரில் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. என்றும் முதமலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தார்.

இந்திய திஹிணி வலையமைப்பில் இணைய இலங்கை வங்கி திட்டம் – ‘டாடா’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

இந்தியாவில் உள்ள சகல வங்கிகளினதும் ஏ.ரி.எம். (திஹிணி) வலையமைப்புடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக ‘டாடா’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வங்கியின் தலைவர் கூறினார். இந்தியாவில் உள்ள பத் தாயிரத்திற்கும் அதிகமான ஏ.ரி.எம். வலையமைப்புகளுடன் இலங்கை வங்கி இணைந்துகொள்வதன் மூலம், இலங்கையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எந்தவொரு வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்திலும் பணத்தை மீளப்பெற முடியும் என கலாநிதி காமினி விக்கிரமசிங்க கூறினார்.

இந்தியாவின் சென்னை மாநகரத்தில் மட்டுமே தற்போது இலங்கை வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அதனால் இலங்கை வங்கியின் ஏ.ரி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி சென்னையில் மட்டுமே பணத்தை மீளப்பெற முடிகிறது.

வட்டுக்கோட்டை தீர்மான மீள்ளுறுதி (re-validation) வாக்கெடுப்பும், நாடு கடந்த அரசும் : எஸ் ஆர் எம் நிஸ்தார்

vaddukoddai_referendumவட்டுக்கோட்டை தீர்மானம் என்பது இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் இணைத்து அதில் வாழும் தமிழர்களுக்கு இறைமை கொண்ட ஒரு தனி ஆட்சி பிரதேசத்தை தமிழீழமாக உருவாக்குவதாகும். அதேபோல் புலிகளின் தமிழ் ஈழத்திற்கான கடைசி ஆயுத போராட்ட பரிசோதனை 18 மே இல் தோல்வியில் முடிய ஆரம்பிக்கப்பட்டதே நாடு கடந்த தமிழ்ஈழ அரசு எனும் அஹிம்சை போராட்ட பரிசோதனையாகும்.

நாடுகடந்த அரசு/தஞ்ச அரசு/புகலிட அரசு என்பதை Government in Exile என்று ஆங்கிலத்தில் கூறுவர். ஆனால் அத்தகைய அரசுக்கான வியாக்கியானம் புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற(?) தேர்தல் மூலம் ஏற்படுத்தப்போகும் நாடு கடந்த அரசுக்கு (Transnational Government) கொடுக்கும் வியாக்கியானத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதும், பின்னய அரசு இதுவரை எங்கும் இல்லாத ஒரு பரிசோதனை என்பதும் நோக்கப்பட வேண்டியவை.

இதைவிடவும் புலன் பெயர் நாடுகளில் பேசப்படும் நாடு கடந்த அரசு தொடர்பாக ஏற்பட்டுள்ள தெளிவின்மையை ஒரு பக்கம் வைத்து விட்டு அத்தகைய அரசு ஒன்றிற்கு அடித்தளமாக அமைந்துள்ள வட்டுக்கோட்டை தீர்மானம் பக்கம் நம் பார்வையை முதலில் செலுத்துவோமானால் அதிலும் பல தெளிவின்மை காணப்படுவதை காணலாம்.

இந்த வகையில் வட்டுக்கோட்டை தீர்மான மீளுறுதி வாக்கெடுப்பின் அடுத்தகட்ட நடவடிகை என்ன என்பது அதன் ஏற்பாட்டாளர்களுக்கே தெரியாமல் இருக்கும்போது அல்லது இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும்போது, இது நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான முன்முயற்சி என்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது. எனவே இவை இரண்டையும் ஒப்பிட்டு அவற்றின் தெளிவின்மைகளையும் கூடவே அதனோடு பிணைந்துள்ள ஏனைய விடயங்களையும் பார்க்க வேண்டியது இங்கு அவசியமாகின்றது.

இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது பிரிந்து செல்லும் விருப்பத்தை வெளியிடுவதும், இந்த நாடுகடந்த அரசு அந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையை கொண்டதும் முதல் விடயம். வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தெளிவின்மை இரண்டாம் விடயம். நாடு கடந்த அரசை அமைப்பதற்கான செயற்குழு வெளியிட்டுள்ள விளக்கக்கோவை மூன்றாம் விடயம். வடக்கும், கிழக்கும் இணைந்த பிரதேசமாக இருக்க வடக்கு, கிழக்கு மக்களின் விருப்பு என்ன என்பதை உறுதிபடுத்த எந்தவித முனைப்புகளும் இதுவரை எடுக்கப்படவில்லை, இது நான்காம் விடயம். அப்படி இணைய விரும்பினும் அந்த பிரதேசம் இலங்கையில் இருந்து பிரிந்து செல்லும் தனி நாடாக கொள்வதா இல்லையா என்பது ஐந்தாவது விடயம். நாட்டில் உள்ள தமிழ் அரசியல் (மொத்த வியாபாரிகள்) வாதிகளுக்கும், புலம் பெயர் நாடுகளில் அரசியல் (பெட்டிக்கடை) நடத்துபவர்களுக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் ஆறாவது விடயம். இலங்கை இறையாண்மையை ஏற்று 26ந் திகதி ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், அதே நேரம் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னும் பின்னும் இலங்கை இறையாண்மையை ஏற்காமல் பிரிந்து செல்ல வெளிநாட்டில் வாழும் தமிழரிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்புகள் ஏழாவது விடயம், இப்படி முற்றுபெறாத பட்டியல் ஒன்று உள்ள நிலையில், மேற்சொன்ன விடயங்கள் வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு ஏற்பாட்டுக் குழுவினருக்கும், நாடு கடந்த தமிழீழ அரசின் அமைப்பாளர்களுக்கும் முன்னுள்ள விடைதெரியாத கேள்விகளும் கூட.

முதலில் வட்டுக்கோட்டை தீர்மானதை எடுத்துக்கொண்டால் அதில் “தமிழர்” என்ற பதம் “தமிழ் பேசுவோர்”, அதாவது தமிழ் பேசும் “தமிழர்”ரும், தமிழ் பேசும் “சோனகர்”( சமய ரிதியில் 99% முஸ்லீம்கள்)களும் என்று பொருள் கொடுப்பதாக கொள்ள முடியாதுள்ளது. காரணம் 1977 பொது தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி (T.U.L.F) 19 தொகுதிகளில் வெற்றி பெற தமிழர் விடுதலை கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்ட முஸ்லிம் ஐக்கிய முன்னணி 4 தொகுதிகளில் தோல்வி கண்டது. இந்த 4 தொகுதிகளிலும் முஸ்லிம் வாக்காளர்களே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தும் முஸ்லிம் ஐக்கிய முன்னணியை தோற்கடித்தனர். ஆதாவது தமிழீழ கோரிக்கையை நிராகரித்தனர். காரணம் இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் அவர்களை பற்றி பேசவில்லை என்பதனாலேயே. அத்துடன் இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் பேசுவோருக்கே என்றால் நான்கு தொகுதிகளில் முஸ்லீம் ஐக்கிய முன்னணி தனியாக போட்டியிட்டிருக்கத் தேவையுமில்லை என்பதையும் அவதானிக்க வேண்டும்.

மேலும் மேலே சொன்னது போன்று “தமிழ் ஈழம்” என்ற (கற்பனை) பிரதேசத்துக்குள் வாழும் சோனகர் இனம், தமிழரின் பிரிந்து செல்லும் கருத்தை நிராகரிக்க தமிழருக்கும், சோனகர்களுக்கும் இடையே அரசியல் ரீதியான விரிசல் மெல்ல ஏற்பட தொடங்கியது. பிற்பட்ட காலத்தில் சோனகர் மீதான தமிழ் புலிகளின் தொடர்ச்சியான அடாவடித்தனம், உதாரணமாக 1990 காத்தாங்குடி பள்ளிவாசல் படுகொலை, அதே ஆண்டின் சோனகருக்கெதிரான இன சுத்திகரிப்பு, அதன் பின்னான நில ஆக்கிரமிப்பு அதன் அடிப்படையில் கிழக்கில் உருவான முஸ்லிம் ஆயுதகுழு போன்ற நிலமைகள் தமிழ், சோனகர் இடையிலான அரசியலில் விரிசலை மேலும் கூர்மைப்படுத்தி 2003ம் ஆண்டில் தென் கிழக்கு பல்கலைகழகத்தில் செய்யப்பட்ட “ஒலுவில் தீர்மானம்” (இது ஏட்டிக்குப்போட்டி என்பது வேறு விடயம்) வரை சென்றது.

போதாக்குறையாக, புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ( ISGA ) பிரேரணையில் சோனகர் முற்றாக நிராகரிக்கப்பட்டமை, சுனாமிக்குப் பின்னான மீள்கட்டுமான ஒப்பந்தத்தில் ( P-TOM ) புலிகளினால் சோனகர் ஓரங்கட்டப்பட்டமை என்ற புலிகளின் திட்டமிட்ட செயற்பாடுகள் சோனகர்களை தமிழ் அரசியலில் இருந்து மேலும் தூரப்படுத்தியது.

இருப்பினும் கடைசி கட்ட போரட்ட காலத்தில் சண்டையிட்ட இரு தரப்பினராலும் பலியிடப்பட்ட தமிழர் தொடர்பாக சோனகர் மட்டில்லா கவலையும், மீதமிருந்த தமிழர் தொடர்பாக கருணையுடன் கூடிய பொறுப்புணர்வுடன் நடந்தமை, தம் மீதான புலிகளின் கடந்த கால மிலேச்சத்தனதை தற்காலிகமாக மறந்தமையையும், தாம் தழிழருக்கு எதிர்ப்பானவர் அல்லர் என்பதையும் காட்டுகின்றது. ஆனாலும் தமது அரசியல் உரிமை, இருப்புரிமை என்ற கேள்விகள் எழும்போது மறந்த விடயங்களை மீட்டிப்பார்ப்பதும், அதை நிகழ்கால, எதிர்கால அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் அந்த அடிப்படையில் தமது அரசியல் போக்கை தீர்மானிப்பதும் அவர்களுக்குள்ள ஜனநாயக உரிமை. அதை அவர்கள் கைவிடவேண்டும் என எதிர்பார்ப்பது அவர்கள் உரிமையில் தலையிடுவதான முயற்சி.

எனவே, வடக்கும், கிழக்கும் இணைந்த நிலப்பரப்பு சம்பந்தமாக பேசப்படும்போது அல்லது ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது அந்நிலத்தில் வாழும் சோனகர்களை கவனத்தில் எடுக்காது விடுவதென்பது, சிங்கள அரசு தமிழரை இரண்டாந்தர பிரஜைகளாக அல்லது அவர்கள் இலங்கையரே இல்லை என்ற ரீதியில் அரசியல் நடத்தியதை ஒத்த செயலாகும். உரிமை மறுப்பாகும்.

ஆகவே உத்தேச தமிழீழ பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மக்களிடம், சுமார் 35 வருடங்களின் பின், அதாவது ஒரு தலை முறை இடைவெளிக்குப்பின், வாக்கெடுப்பு நடத்தாமல் வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசும் வெளி நாட்டாரிடமும், இனி வெளிநாட்டாராகப் போகும் தமிழரிடையேயும் நடத்ப்படும் வாக்கெடுப்பு அங்கு வாழும் மக்களின் அரசியல் அபிலாசையை பிரதிபலிக்காது. அந்த மக்கள் இன்னும் பிரிவினையை வரவேற்கிறார்களா என்பது பற்றி சிறிதும் அக்கறைப்படாமல் அவசர அவசரமாக வெளிநாடுகளில் தேர்தல் வைப்பதென்பது விழைவுகளை பற்றி அக்கறைப்படாத விடயமாகவே படுகின்றது.

அடுத்து இந்த நாடு கடந்த தமிழீழ அரசிற்கான விளக்கக் கோவை. இந்த விளக்கக்கோவையில் சுமார் 60 முறைகள் தமிழர், தமிழ் மக்கள், ஈழத்தமிழர் என்ற பதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதைவிட அதிலுள்ள பின்வரும் கூற்றும் சற்று கவனிக்கத்தக்கது. அதாவது, ” தமிழரிடையே மட்டுமன்றி தமது நாடுகளில் உள்ள பொதுச் சமூகத்தின் ( Civil Society) ஆதரவையும் இவ்வரசை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். மேலும் தத்தமது நாடுகளின் அரசியல் தலைவர்களதும் அரசுகளதும் ஆதரவை இந் நாடுகடந்த அரசு அமைக்கும் முயற்சிக்கும் திரட்டும் செயற்பாடுகளிலும் இச் செயற்குழு ஈடுபடும். இஸ்லாமியர்கள், இந்திய அறிவாளிகள் ஆகியோரை உள்வாங்கி மதியுரை குழு விரிவுபடுத்தப்படும். முழு விளக்க கோவையிலும் ஒரே ஒரு தடவையே “இஸ்லாமியர்” என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. அதுவும் வெளிநாட்டில் உள்ள இஸ்லாமியரையே இது சுட்டுகின்றது என்பதில் எந்த குழப்பமும் இல்லை. ஆகவே உத்தேச தமிழீழத்தில் அந்த பிரதேசத்தின் உரித்தாளர்களில் ஒரு பகுதியினர் முற்றாக புறக்கணிக்கப் பட்டுள்ளனர். மேலும் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் சேர்க்கப்பட்டு, பின் நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இந்த பிரதேசம் இனி சட்டத்துக்கு புறம்பான முறையில் இணைக்க அதன் ஒரு பகுதி மக்களை புறந்தள்ளியும், மற்றைய பகுதிக்கு அவர்களின் அனுமதி இல்லாமலே பினாமி(proxy) வாக்கு போட்டும் நடத்தப்படும் மீள்ளுறுதி வாக்கெடுப்பு எந்த நாட்டு சட்டத்துக்குட்பட்டது என்பதை அறிய முடியாதுள்ளது.

இந்த நாடுகடந்த அரசு சர்வதேச சட்டத்துக்கு (International Law) தெரியாத விடயம். சர்வதேச சட்ட பரபிற்குள் இந்த அரசு வரவில்லை என்பதற்காக நடைமுறையில் இருக்கும் சட்ட ஏற்பாடுகளை, உள்ளூர், சர்வதேச சட்டவிதி முறைகளை மீறமுடியும் என்ற பொருளுமில்லை. எனவே அரசியல் அறிவு சற்று குறைந்தவர்களுக்கும், சட்டத் துறையில் அனுபவம் இல்லாதோருக்கும் இதுபற்றி விளக்க வேண்டியது இந்த அமைப்பாளர்களின் தலையாய கடமை. ஏனெனில் இதுவரை காலமும் வெளிப்படைத் தன்மையில்லாத அரசியலில் அடைந்தது ஏமாற்றமும், தோல்வியுமே. இனியும் இருட்டறை அரசியல் நடத்த யாரும் அனுமதிக்கப்படலாகாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் பகிஸ்கரித்திருந்தால் அதை பிரிந்து போவதற்கான ஒரு சமிக்ஞையாக கொண்டிருக்க இடமிருந்திருக்கும். இந்த வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு பரப்புரை ஊடகங்கள் ஜனாதிபதி தேர்தலில் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதிலாக (சொல்லி இருந்தாலும் மக்கள் கேட்டிருப்பார்கள் என்பது சந்தேகமே), சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிக்கத் தூண்டிய அதே நேரத்தில் வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடாத்தியது ஒன்றுடன் ஒன்று ஒட்டிச் செல்லாத இரண்டு விடயங்கள். எனவே இந்த வட்டுக்கோட்டை தீர்மான மீள்வாக்கெடுப்பு ஏற்பாட்டுக் குழு இதற்கு விளக்கமளிக்க வேண்டும்.

மே 18 க்கு பின் TNA இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேற்பாளரை ஆதரித்தது. மறு புறத்தில் TNAயில் இருந்து பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டார் ஒருவர். இந்த இரு பிரிவினரும் அடுத்த பொதுத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டனர். இனியும் அப்படித்தான் செயல்படப் போகிறார்கள். அவர்களின் அரசியல் வியாபாரத்துக்கு அதுதான் ஒத்துப்போகும் வழி. இதைவிடவும் கிழக்கில் கருணா, பிள்ளையான் என்ற இரண்டு சக்திகள் மீதமுள்ள தமிழருடன் ஒன்றிணைவர் என்பதும் பகற்கனவு. எதிர்வரும் பொதுத் தேர்தலில் TNAயும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செயல்படப் போவதாக சொல்லப்படுகின்றது. என்ன அடிப்படையில் இந்த இணைவு என்பது இதுவரை சொல்லப்படவில்லை. இதை விடவும் டக்ளஸ் தேவானந்தா, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாக்கும் அரசியலில் அனுபவம் இல்லாத புது முகங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்க இருக்கின்றனர். இந்த நிலைமைகள் எல்லாம் எப்படி வட்டுக்கோட்டை தீர்மானத்துடன் அல்லது நாடுகடந்த அரசுடன் ஒத்துப்போகும் என்பது புரியாத புதிர்.

மேலுள்ள விடயங்களை நோக்கும் போது இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான மீள் உறுதி வாக்கெடுப்பானது எமக்கு “இசையணி தேர்வு” ஒன்றையே ஞாபமூட்டுகிறது. இதற்கும் அப்பால் சென்றால், இது தமிழ் பாடசாலை நிர்வாக குழு தேர்தல் போன்றது. அதையும் தாண்டிச் சென்றால் ஒரு கோயில் நிர்வாக குழு தேர்தலுக்கு ஒப்பானது. அதையும் தாண்டினால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றுக்கு ஒப்பானது. இப்படி தமது ஜனநாயக உரிமையை கட்டுப்படுத்தாமல், தமது வாக்களிக்கும் (அடங்கா ஆசையை) உரிமையை ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் காட்ட வெளிக்கிட்டு மூக்குடைந்த நம்மவர் மீண்டும் ஒருமுறை இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்ளிக்க சென்றதை பார்க்கும் போது, அல்லது இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பை பார்த்த வெளிநாட்டு அரசியல்வாதிகளும், ராஜதந்திரிகளும், இலங்கை அரசாங்கம் இந்த வட்டுக்கோட்டை தீர்மான வாக்கெடுப்பு குழுவினரிடம் தான் தேர்தல் ஒன்றை எவ்வாறு நடத்துவதென்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற I.B.C வானொலியின் பிரச்சாரம் மிகவும் ரசிக்கக் கூடிய நகைச் சுவையாகவே எமக்குப்படுகின்றது.

ஆக வடக்கையும், கிழக்கையும் ஒரு இணைந்த பிரதேசமாக கொள்ள அப்பகுதி மக்கள் முதலில் இணைய வேண்டும். அப்படி இணைய வேண்டுமாயின் முதலில் ஒரு தனித்துவமான இனம் அதன் “சோனகர்” என்ற இனப்பெயரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அந்த இனத்துக்கு “தமிழ் பேசும் இஸ்லாமியர்” அல்லது “தமிழ் பேசும் முஸ்லீம்” அல்லது கலாச்சார குழு என்றெல்லாம் பெயர் சூட்டி அல்லது அவர்களும் “தமிழர்” என்ற வசதி கருதிய அரசியல் கழுத்தறுப்புக்கு இடமளிக்கக் கூடாது. இது தமிழ் தரப்பால் தனியே செய்யப்பட்டாலும் சரி முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உடன்பாட்டால் செய்யப்பட்டாலும் சரி இது மொத்த தமிழ் பேசுவோராலும் நிராகரிக்க வேண்டும். இந்த இரண்டு இனங்களுக்கும் இடையே அரசியல் ரீதியான ஒருமைப்பாடு ஏற்பட வேண்டுமாயின் அது முதலில் ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான வேலைதிட்டம் ஒன்றினால்தான் முடியும் என்பது எனது நிலைப்பாடு. அதுவரையும் இந்த வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு, நாடு கடந்த அரசு என்ற (விளையாட்டு)விடயங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை.

இலங்கை மாணவருக்கான பிரிட்டன் விசா புதிய நடைமுறை – மார்ச் முதல் அமுல்

london.jpgஇலங்கை மாணவர்கள் பிரிட்டன் விசாவுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அவை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வருமெனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் நதீசா எபசிங்க தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இப்புதிய நடைமுறைகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வருகின்ற போதிலும் ஏற்கனவே விசாவைப் பெற்றுள்ள இலங்கை மாணவர்களைப் பாதிக்காது. மாணவர்களின் கல்வித் திட்டங்களின் அளவே அவர்கள் வேலை செய்யும் நேரத்தைக் கட்டுப்படுத்தவுள்ளது. இதன்படி 6 மாதங்களுக்கு குறைந்த கால கல்வியை கற்கும் மாணவர்களுக்குத் தொழில்புரியும் அனுமதி மறுக்கப்படும். அத்துடன்,பட்டப்படிப்பு அல்லது அடிப்படை மட்டக்கல்வியை பயிலாதவர்களுக்கும் அவர்களுக்குரிய தகுதியை அடையாதவரை பிரிட்டனில் வேலை செய்வதற்கான அனுமதி மறுக்கப்படும்.

மாணவர்கள் பொறுப்பேற்றல் மற்றும் பல்கலைக்கழக அனுமதியூடாக சர்வதேச மாணவர்களை அழைக்கும்போது புதிய நடைமுறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. உயர் நம்பிக்கை அனுசரணை (ஸ்பொன்சர்) திட்டமொன்றை பிரிட்டன் அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதுடன், அத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த உயர் நம்பிக்கை அனுசரணை(ஸ்பொன்சர்) மூலம் தேசிய தரம் வாய்ந்த கற்கை நெறி வழங்கப்படுவதுடன், பட்டப்படிப்பிற்கு குறைந்த தரத்திற்கு வேலையிடங்களும் வழங்கப்படும்.

புதிய நடைமுறையின்படி ஆங்கில மொழி தரத்தை உயர்த்தவும் ஆங்கில மொழி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுசரணை (ஸ்பொன்சர்) வழங்கவும் பட்டப்படிப்பை முழுநேரம் மேற்கொள்பவர்களின் தொகையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இவற்றுக்கான தற்போதைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாணவர்களை ஊக்குவிக்கவும் பொருளாதார குடிவரவினைத் துரிதப்படுத்தவும் திட்டங்கள் பிரிட்டன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த மாற்றங்கள் விசா வழங்க முன்னர் மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக கல்லூரிகள் அனுமதி வழங்குதல் குறித்து கடந்த மார்ச்சில் ஆரம்பித்த மாணவர் முறைமையினைப் பரிசோதிக்கும் அடிப்படையிலானவை.

குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை – மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் மார்க்

சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றவர்கள் மீது பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்திலுள்ள ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க்; இக்கிராமத்தின் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டப்பட்டு காணாமற்போயுள்ளது.

இதையடுத்து இக்கிராமத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பொறுமை கார்த்தது போன்று பொதுமக்கள் தொடர்ந்து பொறுமை காக்க வேண்டும். இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார் தம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்றார்.

இதேவேளை, ஆரையம்பதி சிகரம் கிராமத்திலுள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு காணாமற்போன விடயம் தொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேர்திவத்த தெரிவித்தார்.

கடந்த 10.02.2010 புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது விடயத்தில் இன்னும் சில சந்தேகநபர்களை கைது செய்யவேண்டியுள்ளதாகவும் அச்சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னியிலுள்ள அரச வங்கி ஆவணங்களை இழந்தோருக்கு நிவாரணம் – மத்திய வங்கி ஆளுநர் நடவடிக்கை.

ajith-sri_lanka.jpgவன்னி யிலுள்ள அரச வங்கிகளில் பணமாகவும் நகையாகவும் சொத்துக்களை வைப்புச் செய்து அதுதொடர்பான ஆவணங்களை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

வன்னியில் இயங்கிய இலங்கை வங்கி மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் கிளைகளில் வன்னிமக்கள் தமது பணத்தினை வைப்புச் செய்திருந்ததுடன் தமது நகைகளை அடைவுவைத்து கடனும் பெற்றிருந்தனர்.

ஆயினும் வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக வங்கிகள் சேதமடைந்ததுடன் பெருமளவு ஆவணங்களும் அழிவடைந்துள்ளன. தமது வைப்பு தொடர்பான ஆவணங்களை கைவசம் வைத்திருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாகவே அவர்களது வைப்புக்களை அல்லது அதன் பெறுமதியை மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் தமது ஆவணங்களை தொலைத்தவர்கள் தொடர்பாக மத்திய வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் விரைவில் ஓர் சாதகமான அறிவிப்பினை விடுக்கும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார

அத். பொருட்களின் விலைக் கட்டுப்பாடு; தேவைகள்;

மாவட்டங்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு மற்றும் உணவுத் தேவைகள், உணவுப் பாதுகாப்பு குறித்து விசேட கூட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ங்களிலுமுள்ள மாவட்ட செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிதி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங் களினதும் உணவுத் தேவை மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட் களின் தொகை அத்துடன் உணவுப் பாதுகாப்பு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான இக்கூட்டம் நேற்றும் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சனத் தொகைக்கு ஏற்றவாறு உண வைக் கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பாகவும், மேலதிக உணவை பற்றாக்குறை நிலவும் மாவட்ட த்திற்கு பகிர்ந்தளிப்பது குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.