ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதால் தம்மால் உடனடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாதுள்ளதால் விசாரணைகள் முடிவுற்றதும் இராணுவத்தளபதி அவரை விடுதலை செய்வது குறித்து தீர்மானிப்பார் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜெனரல் சரத்பொன்சேகா கைது தொடர்பில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்ததும் அதன் பிரகாரம் செயற்பட முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தற்போது ஜெனரல் பொன்சேகா தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை இராணுவம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த விசாரணைகள் முடிவுற்றதும் இராணுவத் தளபதியால் சரத்பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தார்.
அத்துடன் இந்தக் கைது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அது குறித்த தீர்ப்பு வெளியானதும் அதனடிப்படையில் செயற்பட முடியுமெனவும் ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதேவேளை, சரத்பொன்சேகாவை சந்தித்து பேசுவதற்கு விசேட அனுமதியைப் பெற்றுத்தருமாறு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.இக்கோரிக்கை தொடர்பில் தாம் கூடிய கவனமெடுத்து பரிசீலித்து பதிலளிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.