2010

2010

மீள்குடியேற்றப்பட்ட பகுதி பாடசாலைகளுக்கென தளபாடங்கள் சீருடைகள் அனுப்பி வைப்பு

வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கென 34 லட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 50,000 மாணவர்களுக்குத் தேவையான 14 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடைத் துணிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1000 வாங்குகளும் 1000 கதிரைகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 1000 வாங்குகளும் 1000 கதிரைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி அனுப்பி வைக் கப்படவுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீளக்குடியமர்த் தப்பட்டுவரும் இவ்வேளையில் பாடசாலைகளும் உடனடியாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது.

பாடசாலை உடனடியாக இயங்க வைக்க தளபாடப் பற்றாக்குறை பெரும் குறையாக இருப்பதை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி கல்வி அமைச்சிடம் சுட்டிக்காட்டியிருந்தார். மேற்படி பாடசாலைகளுக்குரிய தளபாடங்களை உடனடியாக அனு ப்பி வைக்க நடவடிக்கை எடுக்கு மாறும் அவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவை கேட்டிருந் தார். இதற்கமைய தளபாடங்கள் சீருடைத் துணிகள் போன்றவற்றை கல்வி அமைச்சு அனுப்பிவைத் துள்ளது.

“ஆய்போவாங்…… யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது” : ரி கொன்ஸ்ரன்ரைன்

யாழ்கோட்டைக்கு அருகாமையில் ஆழ்ந்த உறக்கத்திலுள்ள இராணுவம்30 வருட ஆயுதப் போராட்டமும் அதனுடன்கூடிய விடுதலைப் புலிகளின் ‘DisneyLand’ கனவும் ஒட்டுமொத்தமாக மண்கௌவிய நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஏதோ எஞ்சி இருந்தவற்றை சுதாகரித்துக்கொண்டு முன்னேறத் துடிக்கின்றது.

வடக்கு மாகாணத்துக்கு சிங்கள மக்கள் பஸ்வாரியாக படையெடுக்கின்றனர். பண்ணைப் பாலம் முழுவதும் சிங்களப் பகுதிகளில் இருந்துவரும் உல்லாசப் பயணிகளின் பஸ் வண்டிகள் ஆக்கிரமித்து நிக்கின்றன. மக்கள் வெட்டவெளிகளில் தாம் கொண்டுவந்த உணவை நிலத்தில் இருந்து புசிக்கின்றனர். இராணுவ காப்பரண்களில் துப்பாக்கிகளை வைத்துவிட்டு இராணுவத்தினர் நித்திரை கொள்கின்றனர். பாண் பேக்கரி வைத்திருக்கும் சிங்களக் குடும்பத்தைத் தவிர எதுவித சிங்கள குடிசன வாடையே இல்லாத பண்டத்தரிப்பு, சில்லாலை, சண்டிலிப்பாய்ப் பகுதிகளில் இரவில் பலர் சிங்களத்தில் கதைத்துக் கொண்டு திரிகின்றனர்.

ஊர்காவற்துறை, பண்டத்தரிப்பு மதுபானக் கடைகள் சிங்களவர்களால் நடாத்தப்படுகின்றது. வீதி வீதியாக சிங்கள வியாபாரிகள் பிளாஸ்ரிக் கதிரைகளையும் ஏனைய சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். வீதிகளில் நிற்கும் இராணுவமும் பொலிசாரும் தங்களின்பாடு. ஏறக்குறைய நூற்றுக்கு நூறுவீதமான காவற்படையினர் சிங்கள அல்லது முஸ்லிம் இனத்தவர்.

Advertising_in_Jaffnaமுழத்திற்கு முழம் காவற்படையினரை வைத்துக்கொண்டு நாடு எப்படி முன்னேறப் போகின்றது என்பது ஒருபுறம் இருக்க இந்த “சிங்கள ஆக்கிரமிப்பை” யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. 1980களில் நான் கண்ட யாழ்ப்பாணத்தை இன்று துளிகூட காணமுடியவில்லை. ஆயுதப் போராட்டம் என்பது ஒட்டுமொத்தமாக ஒரு தூஷண வார்த்தைபோல் உணரப்படுகின்றது. 1980ம் ஆண்டுகளில் நாங்கள் தொடங்கியதுபோல், மடியில் கைக்குண்டுடன் திரிந்து கிராமங்களில் அரசியல் வகுப்புக்கள் நடாத்தினால் மக்களே எம்மைக் கௌவிப் பிடித்து அடியும் போட்டு இராணுவத்திடம் கையளிப்பார்கள் என்பதில் எனக்கு எதுவித சந்தேகமும் இல்லை. இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் உண்மை நிலைமை. சுருக்கமாகக் கூறின் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” நிலைமை.

A9 பாதையூடாக யாழ் செல்லும் பஸ் வண்டிகள் பல இடங்களில் இருந்து புறப்படுகின்றன. ஒருவழிக் கட்டணமாக 1000 ரூபாய்கள் தொடக்கம் 2150 ரூபாய்வரை அறவிடப் படுகின்றது. ‘வடக்கின் நாதம்’ என பெயரிடப்பட்ட பஸ் வண்டிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காரியாலயத்திற்கு முன்பாக புறப்படுகின்றது. ’வடக்கின் நாதம்’ பஸ்சேவை அமைச்சர் டக்ளஸ்சின் சகோதரனிற்கு உரித்தானது என பலராலும் பேசப் படுகின்றது. இவ் பஸ்சேவை ‘வடக்கின் நாதம்’ என்பதைத் தவிர்த்து ‘டக்ளஸ்சின் பஸ்’ என மக்களால் பெயர் சூட்டப் பட்டுள்ளது. ‘டக்ளஸ்சின் பஸ்’ஸில் போனால் ”செக்கிங்” குறைவு என்று பரவலான நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் நிலைமை அப்படியில்லை. நான் 2150 ரூபாய் கட்டி டக்ளஸ்சின் பஸ்சிலும் சென்றேன். மறுதடவை 800 ரூபாயோடு ஒரு சிறிய ‘தட்டி வான்’ ஒன்றிலும் சென்றேன். இராணுவத்தின் கெடுபிடி ஒன்றிலும் இருக்கவில்லை.

விளம்பரங்கள் தெரிவிப்பது போல் இந்த பஸ் வண்டிகள் சொகுசு வாகனங்கள் அல்ல. 30 வருடங்களுக்கு முன் யாழ்-கொழும்பு சேவையில் ஈடுபட்ட K G குணரத்தினத்தின் வாகனங்கள் நூறு மடங்கு உயர்த்தியானது. பஸ் உள்ளே A/C யும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. வெளிச்சமும் இல்லை. 2000 ரூபாய்க்கு யாழ்ப்பாணம் போகவும் வேண்டும் அதேநேரம் பஸ்சில் குமாரி பத்மினியின் ஆட்டமும் வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அதை விடுவோம்.

குறிப்பிட்டபடி இரவு 11 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் அதிகாலை 1.30 மணியளவில் புத்தளம் வந்தடைகிறது. ஓமந்தையில் சகலரும் பஸ்சிலிருந்து இறக்கப்பட்டு உடல்கள் முழுமையாக சோதிக்கப்படுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனியான அறைகளில் ஒவ்வொருவராக தனித்தனியாக உடற் பரிசோதனை செய்யப்படுகிறது. அவயவங்கள்கூட கைகளால் அமத்திப் பார்க்கப் படுகின்றது. இந்த சோதிப்பு எனக்கு மாத்திரம் விஷேடமாக தரப்பட்டது என்றுதான் முதலில் எண்ணி பெருமை கொண்டேன். பஸ்ஸில் ஏறிய போதுதான் அனைவருக்கும் அந்த அனுபவம் கிடைத்ததாக அறிந்தேன். கையில் கொண்டு சென்ற பைகள் மட்டும் சாதாரணமாக சோதனை செய்யப்பட்டது. ஒருவரினதும் உடமைகள் கொட்டியோ கிளறியோ சோதனை செய்யப் படவில்லை. கடமையில் இருந்த இராணுவத்தினர் மிகவும் பொறுப்புடனும் மரியாதையுடனும் தமது கடமையைப் புரிந்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி (MOD) இல்லாமல் பிறப்பிடம் இலங்கையாக இல்லாதவர் எவரும் வடமாகாணத்திற்குள் அனுமதிக்கப் படுவதில்லை. எனக்குத் தெரிந்த டென்மார்க்கைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்பெண் ஓமந்தையில் வைத்து (25.01.10) அவரை திருப்பி கொழும்பிற்கு அனுப்பி விட்டார்கள்.

Jaffna_RoadA9 பாதை கடும் பள்ளம் திட்டியான ஒற்றைப் பாதையாக இருந்தது. பெருவாரியான மதகுகள் பாலங்கள் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சில இடங்களில் இராணுவத்தினர் சுத்திகரிப்பு வேலைகள் செய்து கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பெருமளவில் இராணுவமும் பொலிசும் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஏ9 பாதையில் புத்தர் அனாதரவாக தனிமையில் குந்திக் கொண்டிருந்தார்.

20 வருசத்திற்கு முதல் குடிபெயர்ந்த நாங்களே ஈஸ்ற்ஹாமிலும் ரூற்றிங்கிலும் அரை அம்மணத்துடன் நின்று தேங்காயும் உடைக்கலாம் நடுரோட்டில் நின்று கூத்தும் ஆடலாம் ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு வந்த சிங்களவர்கள் ஒரு கல்லை வைத்து அதை புத்தர் என்றால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையோ?

முன்னர்போல் முறிகண்டி கோவிலடியில் பலர் தரிசித்துக் கொண்டிருந்தார்கள்.

காலை 7.15 மணிக்கு பஸ் கிளிநொச்சியை அடைகிறது. சந்தி பொந்தெல்லாம் ராஜபக்ச சிரித்த முகத்துடன் வரவேற்றார். ஜெனரல் பொன்சேகாவின் போஸ்டர் ஒன்றுகூட எனக்குத் தென்படவில்லை. கிளிநொச்சிச் சந்தியில் பெரிய புத்த விகாரை ஒன்றிருந்தது. அருகே பல கோயில்களும் இருந்தது. ஆனையிறவு வாசலில் ‘ஆய்போவாங் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது’ என்ற பெரிய வாசகம் வரவேற்றது. முகமாலை பளை பகுதிகளில் மக்களைவிட இராணுவமே அதிகமாக வீதிகளில் நடமாடினர். சாவகச்சேரிப் பகுதியை அண்மித்ததும் மகிந்த ராஜபச்சேயின் போஸ்டர்களுடன் டக்ளஸ் தேவானந்தாவின் போஸ்டர்களும் தென்பட்டன. பொன்சேகாவின் போஸ்டர்கள் ஒன்றுகூட இருக்கவில்லை.

Jaffna_Clock_Towerஇரவு 11மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் வண்டிகள் காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர வீதியை சென்றடைந்தது. வீதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்கள் 20-30- MPH வேகத்திலேயே பிரயாணம் செய்கின்றது. பல இடங்களில் வீதிகள் திருத்தப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணம் ஒரே பாழடைந்த கட்டிடங்களுடன் காணப்படுகின்றது. 1980களுடன் ஒப்பிடும்போது சன நெருக்கடி கால்வாசிக்குக் குறைவாகவே உள்ளது.

யாழ் மாவட்டத்தில் கள்வரின் நடவடிக்கை அறவே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னைய காலங்களில் குறிப்பாக விடுதலைப் புலிகளின் உதவியாளர்களே பெருமளவில் களவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டிற்கு முன்னால் வைக்கப்படும் பூச்சாடிகள் உட்பட அனைத்தும் களவாடப்படுவது வழமையாக இருந்தது. ஆயுதக் குழுக்கள் அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகளின் வெளியேற்றத்தின் பின் யாழ் மாவட்டத்தில் களவுகள் இல்லாமல் போய்விட்டதாக பலராலும் தெரிவிக்கப்பட்டது. – களவு, கப்பம், வரி – புலிகளின் இந்த சமூகவிரோத செயல்களினால் மக்கள் விடுதலைப் போராட்டத்தை அறவே வெறுத்து நிற்கின்றனர். முச்சக்கர வண்டி ஓட்டுனர் தொடக்கம் விவசாயி, வியாபாரி உட்பட சகலரினதும் பொதுவான அபிப்பிராயம் இதுவாகத்தான் இருந்தது.

குடாநாட்டில் விடுதலைப் புலிகளும் சக ஆயுத குழுக்களும் காலத்திற்குக் காலம் செய்த அடாவடித்தனங்களால் பெருவாரியான மக்கள் தமிழ் ஆயுதக் குழுக்களையும் அதனையே அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட அரசியற் கட்சிகளையும் வெறுத்தே நிற்கின்றனர். 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இருந்ததைப் போல் “ஆகா..ஓகோ..” என்ற வரவேற்பு எந்த தமிழ் கட்சிகளுக்கும் இல்லை

ஊர்காவற்துறையில் ஒரு மீனவக் குடும்பத்துடன் 2 மணித்தியாலங்கள் உணர்ந்த அரசியலை பேப்பர் மற்றும் கீபோட் மார்க்ஸிஸ்ட்டுக்கள் மற்றும் TIC லண்டனில் 10 வருடங்களாக நடாத்தும் அரசியற் கூட்டங்களில் அறிந்ததைவிட செழுமையாக இருந்தது. யதார்த்தமாக இருந்தது. ஊர்காவற்துறை ஏன் டக்ளஸின் EPDP மையப்படுத்தியது. தாங்கள் என்ன காரணத்திற்காக ஈபிடிபியிற்கு வாக்களித்தோம் என்பதை மிகவும் யதார்த்தமாக மீனவ குடும்பத்தினர் விளக்கினர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஈபிடிபி யை ஆதரித்தால் தாங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கலாம், றோட்டு போடுவார்கள் என்ற கருத்தே கேட்கக் கூடியதாக இருந்ததே தவிர ஈபிடிபிதான் மக்களின் சுபீட்சம் டக்ளஸ்தான் எமது தலைவர் என யாரும் தமது நெஞ்சை அடித்துச் சொல்லவில்லை.

Kayts_Boysமக்கள் மிகவும் நொந்துபோய் அடியுண்டு இருக்கிறார்கள். தமிழ் குழுக்களை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்றால் சிங்கள இராணுவத்தின் பிரசன்னம் அவசியம் என்ற கருத்துத் தொனிக்கப் பெரும்பான்மையானவர்கள் பேசுகிறார்கள். “சிங்கள இராணுவம் இல்லாட்டி புலி வந்திடும், பிறகு ஈபிடிபியுடன் அடிபடும். அப்ப ஈபிடிபியுடன் ஆமிக்காரன் இருந்தால்த் தான் எமக்கு பாதுகாப்பு” என்ற கருத்து மேலோங்கி இருக்கின்றதே தவிர ஈபிடிபி கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஒருவர்கூட அடித்துச் சொல்லவில்லை.

வட மாகாணத்தில் அடிமட்டத்திலிருந்து சமூகரீதியாக வளர்ந்த அரசியல் தலைமை இல்லாத காரணத்தினாலும் மற்றும் சகல அரசியற் கட்சிகளும் முன்னைநாள் ஆயுதக் குழுக்களாக இருந்த காரணத்தினாலும் மக்கள் TNA பக்கம் சார்பதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. TNA கட்சியை பிரேமச்சந்திரன் போன்ற முன்னைநாள் ஆயுதக் குழுக்களின் முக்கிய புள்ளிகள் தலைமை வகித்திருந்தால் அதுவும் அடிபட்டுப் போயிருக்கும்.

மீண்டும் இடித்துக்கட்டப்படும் மானிப்பாய் மருதடிப் பிள்ளையார்புலம்பெயர் பக்தர்களின் “நன்கொடையால்” வீதிக்கு வந்துள்ள மருதடிப் பிள்ளையார்.பல கிராமங்களில் ஆலயங்கள் மீள மீள புணரமைக்கப்பட்டு பெருப்பிக்கப படுகிறது. உதாரணமாக மருதடிப் பிள்ளையார் கோவில் அல்லப்பிட்டி முருகன் ஆலயம் இதுகள் ஏன்?? ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என எமது மூதாதையோர் கூறினார்களே தவிர ஆளில்லா ஊரில் ஆலயம் கட்டுங்கள் என்று கூறவில்லையே!!

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி1980 ஆண்டுடன் ஒப்பிடும்போது வடமாகாண மற்றும் தீவுப்பகுதிப் பாடசாலைகள் மிகவும் தரமாக இயங்குகின்றன. கணிசமான நேரத்தை மாதகல் புனித ஜோசப் மகாவித்தியாலயம் மானிப்பாய் இந்துக் கல்லூரி சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரிகளில் செலவிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அனைத்துப் பாடசாலைகளிலும் வன்னியில் இருந்து புலம்பெயர்ந்த குடும்பங்களின் பாதிப்பு பெருமளவில் தாக்கி இருக்கின்றது.

மாதகல் புனித ஜோசப் மகாவித்தியாலயத்தில் 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் 397 ஆக இருந்த மாணாக்கரின் எண்ணிக்கை இவ்வருட தொடக்கத்தில் 500ஜ எட்டியுள்ளது. 25வீதம் அதிகரிப்பு. இதனால் பாடசாலைக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் வன்னியில் இருந்து புலம் பெயர்ந்த பிள்ளைகள் 38. இவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஒன்றும் இல்லை.

IDP நிலையங்களில் உள்ளவர்களைவிட IDP நிலையங்களில் இருந்து வெளியேறி யாழ் மற்றும் வவுனியாப் பகுதிகளில் இருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவதைப் போலுள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் பலர் மாதகல் தோமையர் வீதி -மாதகலில் சிறு குடிசை போட்டு வாழ்கிறார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.

தாய் தந்தை சகோதரங்களை இழந்து தவிக்கும் மதுசாஇங்கு மதுசா சிவராசா என்ற 9 வயதுச் சிறுமி இருக்கிறாள். தகப்பன் இருக்குமிடம் தெரியாது. சகோதரர்களை காணவில்லை. 25.09.2009 அன்று புதுமாத்தளன் பகுதியிலிருந்து கடலினூடாகப் புறப்பட்டு சாலைப் பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்டு கைதடி அகதிமுகாமில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளாள். மதுசா தற்போது தன்னுடைய தகப்பனின் தகப்பனோடு ஒரு குடிசையில் வாழ்கிறாள். மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் 5ம் வகுப்புப் படிக்கிறாள். அதேபோல 8 வயதுடைய இன்னொரு சிறுமி இருக்கிறாள். குடும்பத்தில் இவளைத் தவிர அனைவரும் இறந்துவிட்டனர். தற்போது இதே கல்லூரிக்குச் சொந்தமான மடத்தில் வைத்து பராமரிக்கப் படுகிறாள். வன்னியில் நடந்த மனித அவலம் நூறுக்கு அதிகமான மைல்களுக்கு அபபபாலுள்ள மாதகல் கிராமத்தை இவ்வளவு தூரம் தாக்கியுள்ளது.

12 பிள்ளைகளுக்கு உடனடியாக சைக்கிள் உதவி தேவைப்படுகிறது. ஒரு சைக்கிளின் விலை 11 000 ரூபாய் (60 பவுண்கள்). சைக்கிள் இருந்தால் பிள்ளைகளுக்கு மிகவும் உதவியாக இருப்பதுடன் பெற்றோர் வெளிக் கிராமத்திற்குச் சென்று வேலை வாய்ப்பு பெற உதவியாக இருக்கும்.

இவ்வாறு தேவைப்படும் உதவிகளோ எண்ணற்றது. இந்த மக்களை இன்று கைவிட்டுவிட்டு மக்கள் பற்றி காகித அரசியல் பேசுவது யதார்த்தமாகாது. புரட்சிகரக் கனவுகள் மட்டும் மக்களுக்கு சோறுபோடாது.

சீருடையுடன் மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்கள்.Computer_Room_MHCமானிப்பாய் இந்துக் கல்லூரி, ஊர்காவற்துறை புனித அந்தோனியார் போன்ற கல்லூரிகளை எடுத்துக்கொண்டால் அவர்களின் நிலை வேறு கட்டத்தில் இருக்கின்றது. வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவ சங்கங்களின் உதவிகளினால் இக்கல்லூரிகள் தாக்குப் பிடித்துள்ளன. இங்குள்ள பழைய மாணவ சங்கங்கள் கணணி பயிற்சி /ITயில் உதவிகள் செய்ய வேண்டும்.

உதாரணமாக 1015 மாணவர்கள் படிக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஒரு ஆசிரியர் பயிற்றுகிறார். இவர் IT மட்டுமல்ல கல்லூரியின் நூலகத்திற்கும் பொறுப்பாக இருக்கிறார். ஆக மொத்தத்தில் இவர் ITயும் படிப்பித்த பாடில்லை நூலகமும் ஒழுங்காக நடத்தவில்லை.

மானிப்பாய் இந்துக் கல்லூரி2005ம் ஆண்டு 430 ஆக இருந்த மானிப்பாய் இந்துக்கல்லூரியின் மாணவர்களின் தொகை இவ்வருடம் 1015ஜ எட்டியுள்ளது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 82 மாணவர்களுக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2004 சமாதானக் காலங்களில் வெளிநாடுகளில் தடல்புடலாக இயங்கிய பழைய மாணவர் சங்கங்கள் தற்போது படுத்து விட்டன. உதவிகள் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை உதவிகள் தொடர்ச்சியாக கிடைக்காத காரணத்தினால் இந்த பழைய மாணவ சங்கங்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மந்தகதியில் இயங்குகின்றன.

இனி தமிழர்கள் ஏதாவது ஒரு அழுத்தத்தை பெரும்பான்மை இனத்திற்கு கொண்டுவர வேண்டுமாக இருந்தால் அதை பொருளாதார ரீதியாகத்தான் கொண்டுவர முடியும். தமிழ் இனம் பிரபாகரனை நம்பி தமது பாரம்பரிய மண்ணையும் அதன் அரைவாசி மக்களையும் நாட்டைவிட்டு துரத்தியதுடன் பலரை மாழ வைத்தது. பின்னர் சம்பந்தனின் கிழட்டு தீர்க்கதரிசனம் பொன்சேகா என்ற நொண்டிக் குதிரைக்குப் பின்னால் ஓட வைத்து சிங்கள பெரும்பான்மையினத்தின் கோபத்துக்கு தமிழினத்தை மேலும் உள்ளாக்கியது. இப்போது புலம் பெயர் வெங்காயங்களின் சிறீலங்காவை புறக்கணிப்போம் கோஷசத்தினால் எமது இனத்திற்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பத்தையும் பாழாக்க நினைக்கின்றது.

சரத் பொன்சேகா கைது விவகாரம்; சர்வதேச நாடுகள் தலையிட முடியாது

rohitha.jpgசரத் போன்சேகாவின் கைது விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தலையிட முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். உள்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமையவே இக்கைது இடம்பெற்றிருப்பதனால் சர்வதேச சக்திகள் இது குறித்து அழுத்தம் கொடுக்க முடியாதெனவும் அமைச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள அமைச்சர் அமைச்சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்கள்.

ஒருவர் பிழை செய்தால் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய அவரை விசாரிப்பதற்கு முறையுண்டு. அந்தவகையில் சரத் பொன்சேகாவை கைது செய்திருப்பதற்கான காரணத்தை இராணுவத்தினர் தெளிவாக கூறியுள்ளனர். தான் கைது செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை சரத் பொன்சேகாவே நன்கு புரிந்து வைத்துள்ளார். இதுவரை எந்தவொரு நாட்டிடமிருந்தும் பொன்சேகாவின் கைது குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை.

சரத் பொன்சேகா என்பதற்காக இல்லை; நாட்டில் எவரும் சட்ட விதி முறைகளை மீறி நடந்தாலும் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமையானதாகும். அதன்படியே, இக்கைது இடம்பெற்றிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.

எண்ணெய் எரிவாயு அகழ்வுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு

இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் இலங்கைக்கு பல சாதகமான பிரதிபலன்களைப் பெற்றுத்தந்துள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவையும் பலப்படுத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவின் விசேட அழைப்பினை ஏற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ரஷ்யா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பினார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து வேகமாக கட்டியெழுப்பப்பட்டு வரும் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு 300 மில்லியன் டொலர் நிதியை இவ்விஜயத்தின் போது ரஷ்யா கடனுதவியாக வழங்க இணங்கியுள்ளது.

அத்துடன் இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிக்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள மையும் இவ்விஜயத்தின் பாரிய வெற்றியாகும். இவ்வகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கு வதற்கு உலகின் பிரசித்திபெற்ற ரஷ்ய எரிவாயு நிறுவனமான ரஷ்ய கேஸ் ப்ரோம் நிறுவனம் முன்வந்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையில் ஊடகத்துறை சார் நவீன தொழில்நுட்பங்க ளைப் பரிமாறிக்கொள்வது தொடர்பில் விசேட ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள முடிந்துள்ளமையும் ஜனாதிபதியின் இவ் விஜயத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிபலனாகும்.

இலங்கையின் நற்பெயரை சர்வதேச மெங்கும் தெரிவிக்கும் மற்றுமொரு நிகழ்வும் இவ்விஜயத்தின்போது இடம்பெற்றுள்ளது. ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவித்தமையே அந்நிகழ்வாகும்.

உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட சேவைகள், பயங்கரவாதத்தை ஒழித்து கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக முன்னெடுத்த பாரிய சேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் மேற்படி கெளரவ பட்டத்தை வழங்கியுள்ளது. இப்பட்டத்தைச் சுவீகரித்துக்கொண்ட உலகின் ஆறாவது அரச தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் கிடைத்த கெளரவமாகும்.

அதேவேளை, உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொடுத்த ரஷ்ய அரச பரம்பரையை நினைவுகூரும் வகையில் அதன் ஞாபகார்த்தமாக தங்கத்தினாலான மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கிரீடமொன்றை ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்ய – இலங்கை நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இருநாட்டுத் தலைவர்களினதும் சந்திப்பைக் குறிப்பிட முடியும். இச்சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதிக்குத் தம் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி; இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுடனான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ரஷ்யாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க பல இடங்களை ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினர் பார்வையிட்டதுடன் ரஷ்யாவின் தேசபிதா லெனினின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இராணுவ அதிகாரியொருவர் ஓய்வுபெற்ற ஆறு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க இராணுவ சட்டத்தில் இடம் – கெஹெலிய

sarath.jpgசரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பதா அல்லது சாதாரண நீதிமன்றத்தில் விசாரிப்பதா என்பது குறித்து இராணுவ சட்டப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்ற பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

பொன்சேகாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தை இராணுவ சட்டப் பிரிவினர் பரிசீலித்து அதனை சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி அது பெறப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தின் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே சரத் பொன்சேகா இராணுவப் பொலிஸாரால் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எந்த ஒரு இராணுவ அதிகாரியோ அல்லது வீரரோ சேவையின் போது இராணுவ சட்டங்களை மீறினால் அவர் ஓய்வு பெற்று ஆறு மாத காலத்திற்குள் அவர் மீது இராணுவம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இராணுவ சட்டத்தின் 57 பிரிவு தெளிவாக கூறுவதாக தெரிவித்த அமைச்சர், அந்த சட்டவிதி விதிமுறைகளுக்கு அமைவாகவே பொன்சேகா இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் நடைபெற்றது.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்தபோது இராணுவ விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே பொன்சேகா கைதுசெய்யப்பட்டார். பாதுகாப்பு சபையானது ஒரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் உச்சமட்ட சபையாகும். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி தலைமை வகிக்கும் இந்த பாதுகாப்பு சபையில் இராணுவ தளபதியாக இருந்தபோது பொன்சேகா பாதுகாப்பு சபையின் முன்னணி அங்கத்தவராக இருந்தவர். பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருந்தபோது அரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளுடனும் அவர் தொடர்பு வைத்ததுடன் முக்கிய இரகசிய விடயங்களை பரிமாறிக்கொண்டிருந்திருக்கலாம்.

பாதுகாப்பு சபை உறுப்பினர் என்ற ரீதியில் இது அவர் செய்யக் கூடாத ஒன்றாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சரத் பொன்சேகாவுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புகள் உள்ளனவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் :-சரத் பொன்சேகா சேவையில் இருந்தபோது அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்துள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுதவிர மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விசாரணைகள் முடிவுற்ற பின்னர் அது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெளிநாடுகளுடனான தொடர்புகள் தொடர்பில் விசாரணைகளுக்குப் பின்னரே எதுவும் கூறமுடியும் என்றும் குறிப்பிட்டார். சரத் பொன்சேகாவுடன் மேலும் பல இராணுவ மற்றும் சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர். இரகசிய பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுத் தேர்தல் ஏப்ரல் 8ஆம் திகதி

parliament.jpgபாராளு மன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19ம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அடுத்த பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி கூடுகிறது.

ஒட்டிசுட்டான் பிரதேச செயலகம் இன்று முதல் பழைய இடத்தில்

ஒட்டிசுட்டான், பிரதேச செயலகம் இன்று முதல் பழைய இடத்தில் இயங்குமென முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

இதுவரைகாலமும் திருமுருகண்டியில் இந்த அலுவலகம் இயங்கி வந்தது.  ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரதேச செயலகத்தை பழைய இடத்தில் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

96 தமிழ் கைதிகள் விடுதலை

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 96 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 115 பேர் புனர்வாழ்வு அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த பல தமிழ் கைதிகள் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 431 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர் சுமார் 200 கைதிகளே எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.

‘தேசத்திற்கு மகுடம்’ இன்று நள்ளிரவுடன் முடிவு

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலவில் 04 ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த ‘தெயடகிருள’ தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது.

கொழும்பு நகருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சி 60 ஏக்கர் காணிப் பரப்பில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 1000 கண்காட்சிக் கூடங்களை கொண்டுள்ளது.

இ.தொ.கா சார்பில் 9 வேட்பாளர்கள்

பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஒன்பது வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாக காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் ஒன்பது இடங்கள் தமக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் கூறினார். இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்கள் முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன் ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.

இதன்படி காங்கிரஸ¤க்கு நுவரெலியா மாவட்டத்தில் மூன்று இடங்களும் பதுளையில் இரண்டு இடங்களும் மாத்தளை, இரத்தினபுரி, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார்.