2010

2010

நேர்டோவின் யாழ் கிளை வடமராட்சியில் இயங்க ஆரம்பித்துள்ளது.

NERDO_Logoநேர்டோ அமைப்பினர் தமது யாழ் மாவட்டத்திற்கான செயற்பாடுகளை வடமராட்சி பகுதியில் ஆரம்பித்துள்ளனர். யுத்தம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களால் இடம்பெயர்ந்து பாதிப்புக்குள்ளான கரையோரப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் இந்த அலுவலகம் ஆரம்பித்துள்ளது. வடமராட்சியில் இன்புருட்டி பகுதியல் 7 பெரிய ஒழுங்கை, வியாபாரிமூலை, பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகம் ஏற்கனவே வன்னி அலவலகத்திலிருந்து பல்வேறு உதவிகளை இந்தப்பகுதி மக்களிற்கு மேற்கொண்டு வந்தனர். பாதிப்புக்குள்ளான மக்கள் பெருமளவில் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருவதால் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யுமுகமாகவே இந்த அலுவலகம் ஆரம்பித்துள்ளதாக நேர்டோவின் யாழ் மாவட்ட செயற்பாட்டாளர் திரு இளங்குமரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேர்டோவின் கிளை அமைப்பான டாக்டர் துரைரட்ணம் ஊனமுற்றோர் மறுவாழ்வு நிலையம் ஒன்றும் கிளிநொச்சிப் பகுதியில் இயங்க ஆரம்பித்துள்ளது. TDRC என்றழைக்கப்படும் இந்த நிறுவனத்திற்கு காலம்சென்ற முன்னை நாள் சுகாதார அமைச்சின் விநியோகப்பிரிவின் இயக்குனர் மருத்துவர் திரு துரைரெட்ணம் நினைவாக அவர்கள் குடும்பத்தினரின் அனுசரனையுடன் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு ஊனமுற்ற அனைவரிற்கும் உதவுமுகமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது உளவியல் சிகிச்சையிலிருந்து செயற்கை அவயவங்கள் பொருத்துவது மற்றும் ஊனமுற்றவர்களிற்கான தொழில் பயிற்சி போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது பற்றிய மேலதிக விபரங்கள் -http://www.tdrc.anbuillam.org இல் இருந்து பெற முடியும்!

சோனகர் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர்… : எஸ் ஆர் நிஸ்தார் மொகமட்

SL_Moorsஎன் அம்மாவின் இயற்பெயர் “நாச்சியா(ர்)”, என்ன அழகான தமிழ் பெயர்? “தலைவி” என்ற பொருள்பட அப்படி இடப்பட்டதாம். பெயரை மாத்திரம் பார்த்து இது சுத்த தமிழ்பெயர் எனவே இவர் இப்போது இல்லாவிட்டாலும் இவரின் பரம்பரை தமிழர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று இனம் பிரிக்கும் தன்மை தமிழரிடையே காணப்படுவது கண்கூடு. இந்த அடிப்படையில்தான் இரண்டாம் புவனேகபாகுவின் வாரிசு “கலே பண்டார” அல்லது ” வத்ஹிமி” என்பவனின் பெயரை வைத்து அவன் சிங்களவன் என்ற முடிவுக்கு வருவதும் பிழையாகிவிடும். ஏனெனில் அந்த அரசன் “சோனகர்” இனத்தை சேர்ந்தவன். இப்படியாக அடிப்படை விடயங்களில் தெளிவில்லாமல் குழப்பங்களுக்கு மத்தியில் அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைப்பது போல இந்த சர்ச்சைக் குரிய “சோனகர்” இனம் பற்றி மிண்டும் பேச வேண்டியுள்ளதாக தேசம்நெற் கருதுவதால் மிண்டும் உங்களோடு.

இந்த சோனகர் என்ற வரையறைக்குள் வருபவர்கள் அனேகமா “இஸ்லாம்” என்ற சமயத்தை பின்பற்றுவதால், அவர்கள் சமய அடிப்படையில் “முஸ்லிம்” என்ற பெயரையும் பெறுகின்றனர். இந்த முஸ்லிம் என்ற வார்த்தை எல்லைகள், மொழிகள், கலாச்சாரங்களை கடந்த பெயர். அதாவது யார் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களைக் குறிக்கும் சொல். அவர் எங்கு இருக்கிறார், என்ன மொழி பேசுகிறார், என்ன நிறத்தையுடையவர் என்ற கேள்விகளை எல்லாம் தாண்டிய ஒரு அடையாளம். ஆனாலும் இலங்கையை பொறுத்தவரை தெரிந்தோ தெரியாமலோ இதுதான் அது, ஆகவே அதுதான் இது என்ற ஒரு குழப்பத்துக்குள் தமிழர் மாத்திரமல்ல, இந்த சோனகரும் மூழ்கிவிட்டனர்.

இனம் என்பது மொழிவாரியாகத்தான் இருக்க வேண்டும் என்று பலர் வாதிட்டாலும் இனத்துக்கான வரைவிலக்கணம் “ஒரு சமயத்தை பின்பற்றும் அல்லது குறிப்பிட்ட கலாச்சார தன்மைகளை கொண்டுள்ளோரும் கூட தனியான இனமாக வகைப்படுத்தப்படலாம் ” என்கிறது. ஆகவே சமய ரீதியில் முஸ்லிம்கள் என்போர் “தனியான இனம்” என்று வாதிடுவதற்கு இது வழிவகுக்கின்றது. ஆனால் உலகலாவிய ரீதியில் “முஸ்லிம்” என்பவர் ஒரு இனமாக பார்க்கப்படாமையால் இலங்கையில் மாத்திரம் அப்படி பார்க்கப்பட வேண்டும் என்பது பல சிக்கல்களை அரசியல் ரீதியில் உருவாக்கக் கூடியது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

மனிதன் இயற்கையாகவே இப்படியான வேறுபட்ட அடையாளங்களை கொண்டிருக்கும் போது அவனை ஒற்றை சொலுக்குள் அடக்குவது, பாரதியாரின் ஆண், பெண் தவிர இனங்கள் வேறெதுவுமிலலை என்ற நிலைப்பாட்டை ஒத்ததாகும். ஆனால் நடைமுறையில் காரியங்கள் அப்படி நடந்தேறுவதுமில்லை. மனிதன் ஒரு சமூக பிராணி என்பதால் சமூக வாழ்வியல் சூழலில் அவனுக்கு பல அடையாளங்கள் தேவைப்படுகிறன அல்லது அப்படியான அடையாளகள் தேவைகருதி கொடுக்கப்படுகிறன. இந்த அடிப்படையில் சமயம் சார்ந்த அடையாளமாக “முஸ்லீம்” அல்லது “இஸ்லாமியர்” என்ற போதிலும் எமக்கு இன்னும் பல அடையாளங்கள் தேவைப்படுகிறன. அதில் முக்கியமானது “இலங்கையர்” என்பது.

இந்த இலங்கையர் என்ற பதப் பிரயோகம் “அமெரிக்கர்” என்ற பதப் பிரயோகத்தின் தன்மையை ஒத்தல்ல. எழுதப்படாத பல கட்டுப்பாடுகள், சட்டங்கள் மறைமுகமாகவும், சிலவேளை வெளிப்படையாகவும் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் அரம்பத்தில் அடிமைகளாக அமெரிக்காவுக்குள் கொண்டுவரப்பட்ட கறுப்பினத்தவன், கலப்பினத்தவன் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமாய் இருப்பது ஒருவகை அமெரிக்க தன்மை(Americanism) எனலாம். அத்தகைய வாய்ப்பு வசதிகளோ, அரசியலமைப்பு ஏற்பாடுகளோ, வளர்ச்சியடந்த சிந்தனை போக்குகளோ இல்லாத ஒரு நாட்டில் அதுவும் உலகத்தின் தனித்த ஒரு இனத்தையும், தனித்த ஒரு மொழியையும் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் அங்கே உள்ள சிறுபாமையினர் தொடர்பாக எழும் காரணமற்ற ஆனால் அனுபவரிதியில் ஏற்படும் நியாயமான பயத்தின் அடிப்படையில் பெருன்பான்மை சமூகத்தின் அரசியல் நகர்வுகள் வடிவமைக்கப்படும் என்பதில் புதுமை ஒன்றுமில்லை.

இந்த அடிப்படையில் சிறுபான்மையினருக்கு “இலங்கையர்” என்ற அடையாளம் மாத்திரம் அரசியல் ரீதியில் போதுமானதல்ல. ஆகவே இந்த சிறுபான்மையினாரில் ஒரு பிரிவினர், பெருன்பன்மையோரின் அரசியல் நகர்வினாலும், சிறுபான்மையோரில் பெரும் பன்மையாக இருக்கும் தமிழரின் அரசியல் நகர்வுகளினாலும் ஏற்படும் பயத்தின் காரணமாக தங்களுக்கு இருக்கும் அனைத்து அடையாளங்களையும் பாவனையில் வைத்திருப்பது பிழையான அம்சமாக இருக்கப் போவதில்லை. மாறாக இது ஒருவகை பாதுகாப்பு ஏற்பாடகவே அமையும். சிங்களவரையும், தமிழரையும் பொறுத்தவரை மொழிசார்ந்த, இனம் சார்ந்த, சமயம் சார்ந்த அடையாளங்கள் பாவனையில் இருக்கும் போது, முஸ்லிம்கள் என்ற மத அடையாளத்தைக் கொண்டுள்ள இஸ்லாமியர்கள் தமது இன அடையாளத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். இந்த உரிமை பிரச்சினை என்பது புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கல்ல, புதிதான பிரச்சினைகளின் சாத்தியபாடுகள் மிக அதிகமாகவே உள்ளதால் அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமாயின் நாம் இலங்கையர் என்ற உரிமையோடு, அது பல்லின மக்கள் வாழும் இலங்கை என்ற விடயத்தை அச்சமின்றி, தெளிவாக நிலைநிறுத்த எமது இந்த “சோனகர்” என்ற இன அடையாளம் மிக இன்றியமையாததாகும்.

பிரதேசங்கள் எல்லை இடப்படுவதும், எல்லை இடப்பட்ட பிரதேசங்கள் பெயரிடப்படுவதும் அவற்றை “நாடுகள்” என்று நாம் அழைப்பதும் புதுமையான விடயங்கள் அல்ல. அதேபோல் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் மக்கள் மீள் பகுப்புக்குள்ளாவது ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. எனவே ஏதோ ஒரு அடிப்படையில் மக்கள் குழுக்களாக, குலங்களாக, கோத்திரங்களாக, இனங்களாக, தேசியங்க்களாக பிரிவடைவதை நாம் மறுதலிக்க முடியாது. அனால் இந்த பிரிவின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்ற நிலைவரும் போது அல்லது ஒருவர் தன் போன்ற மற்றவர்களுடனான கூட்டுக்கு தடை ஏற்படும் போது அங்கே பிரச்சினைகள் எழுவது தவிர்க்க படமுடியாதுள்ளது.

வரலாறுகள் தோறும் நமக்கு போதுமான படிப்பினைகள் இருப்பினும், இத்தகைய பிரச்சினைகள் பூதாகாரமாகி மனித குலம் அழிவை சந்தித்ததற்கு நாம் சாட்சிகளாக இருந்தபோதும் அதன் பாரதூரம் இன்னும் சரியாக அறியப்பட்டதற்கான அறிகுறிகள் மிக சொற்பமாகவே காணப்படுகின்றன. யூத இனத்துக்கு எதிரான ஆரிய ஹிட்லரின் இன அழிப்பும், ரூவெண்டா நாட்டில் ஹூட்டு, டுட்சி இனங்களுக்கிடையிலான இனவழிப்பு நடவடிக்கைகளும், சூடானில் பூர்விக மகளுக்கும் ஜஞ்சூவின் அறபு நாடோடிகளுக்கும் இடையிலான அழிப்பு நடவடிக்கைகளும், சேர்பியாவில் பொஸ்னிய இன அழிப்பு செய்யற்பாடும், இலங்கையிலே அரசாங்கம், புலி என்ற போர்வைக்குள் பலியாக்கப்பட்ட மக்களும் இந்த பரிதாப நிலையின் சான்றுகள். இத்தகைய அநாகரிகங்களின் அடிப்படை இரண்டு விடயங்களே. ஓன்றில் ஒரு இனம் மற்றைய இனத்தை தாழ்வாகக் கருதுவது, மற்றயது ஒருவரின் அடையாளத்தை மற்றவர் மறுக்க முற்படுவது.

இந்த அடிப்படையிலேயே “இலங்கை சோனகர்” பற்றிய எனது பார்வை அமைந்திருக்கிறது. இலங்கை “பல்லின மக்கள்” வாழும் நாடு. இந்த “பல்லினம்” என்ற வார்த்தை குழப்பமே இந்த விடயத்தை சிக்கலாக்கியுள்ளதாக நான் கருதுகிறேன். சுதந்திரத்துக்கு பின்னான இலங்கையில் தமிழர்களின் “வட்டுக்கோட்டை தீர்மானம்” என்ற தனி நாட்டுக்கான அடித்தளம் இடப்பட்டபோது இலங்கையில் சிங்களம், தமிழ் என்ற இரண்டு மொழிசார் இனங்கள் தான் இருப்பதாகவும் எனவே இலங்கை பெளதிக ரிதியாக இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் அரசியல்வாதிகளின் ஆசையாக இருந்தது. அங்கே தமிழை அதிகமாக பேசும் ஒருசாரார் (சோனகர்) பற்றியோ, அல்லது சிங்களமும், தமிழும் பேசும் இன்னொரு சாரார்(பறங்கியர்) பற்றியோ பேசப்படவிலை. ஆனால் இங்கிலாந்தில் உருக்கொண்ட ஒரு தீவிரவாத / போராட்ட தமிழ் அமைப்பு “இஸ்லாமியர்”, “தோட்ட தொழிலாளர்”, ஏனைய சிறு இனத்தினரையும் இந்த தமிழ் போராட்டம் உள்ளடக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் தமிழரின் சுதந்திர போராட்டம் வெற்றி பெறாது, வெற்றி பெற்றாலும் நிறைவு பெறாது என்று எதிர்வு கூறினர். அவர்கள் தங்கள் போராட்ட வடிவத்தை இப்போது மாற்றிவிட்டனர் என்றாலும், இஸ்லாமியர், தோட்டத்தொழிலாளர் என்பதோடு பறங்கியர் விடயத்திலும் அவர்களின் கருத்து அவ்வாறே இன்றும் உள்ளது.

ஆனாலும் அவர்கள் சொல்லும் “இஸ்லாமியர்” என்ற பதப்பிரயோகம் அரசியல் ரிதியில் தூர நோக்கு கொண்டதாகக் காணப்படவிலை. ஆகவேதான் அதற்கான மாற்றிடாக , சரியான இன அடையாயளமாக நாம் “சோனகர்” என்ற பதத்தை பிரயோகிப்பதற்கான தேவையை உணர்த்தி நிற்கின்றோம். இந்த சோனகர் என்ற விடயம் வசதிகருதிய புதிய கண்டுபிடிப்போ அல்லது இலங்கையின் அரசியல் சூழ் நிலையை என்றும் குழப்பம் நிறைந்ததாக வைப்பதுவுமாக அமையக் கூடியதல்ல, மாறாக அது இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற மத அடையாளத்தில் நாம் எதிர் நோக்கக் கூடிய சாத்தியமான ஆபத்துக்களை விட, சோனகர் என்ற இனஅடையாளதில் சற்று பாதுகாப்பை பெறலாம் என்ற நிலைப்பாடே. எனது இந்த வாதத்தை பிழையாக அர்த்தப்படுத்தி விடக்கூடாது, அதாவது எமது அரசியல் இருப்புக்காக நாம் சோனகர் என்ற இனப் பெயரை முதன்மை படுத்துவதே ஒழிய எந்தக் காரணம் கொண்டும் எமது மத அடையாளத்தையோ அல்லது மதத்தையோ விட்டு விடுவதற்கான யோசனையல்ல, இது என்பதை முதலில் சோனகர் உணர வேண்டும். அடுத்ததாக இந்த பெயரை மீள் நிலை நிறுத்த முயல்வதென்பது ஏனைய இனங்களின் உரிமைகளில் தலையிடும் விடயமும் அல்ல என்பதும் குறிப்பாக தமிழ் இனத்தினரால் உணரப்பட வேண்டும்.

சாதுவான தமிழர்கள் போர்க் குணம் கொண்டோராக மாற்றப்பட்டதும், அதன் தாக்கத்தை நேரடியாக பெரும்பான்மை சிங்கள அரசாங்கதின் மேல் பாய்ச்சி அது மறைமுகமாக சிங்கள இனத்தினை கிலிகொள்ளச் செய்ததும், அதே நேரம் சக மொழி பேசுவோர், இரண்டறக் கலந்து வாழ்ந்தோர் என்றும் பாராமல் அவர்களையும் பயமுறுத்தி தம் கீழ் வைத்திருக்க புலி பயங்கர வாதிகள் எடுத்த முயற்சி, முழு தமிழினத்தின் நிலைப்பாடாக கொள்ளமுடியாது என்றாலும், இலங்கையின் அரசியல் சூழ் நிலையானது குழகப்பரமானதாகவே செல்வதற்கு ஏதுவாக அரசியல் அமைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், இன வாத சிங்கள், தமிழ் அரசியல்வாதிகள் அத்தகைய ஒரு அடிப்படையிலேயே தமது அரசியலை முன் நடத்தி செல்ல முயல்வதாலும் அப்படியான நிலைமைகளுக்கு உறுதியாக நின்று முகம் கொடுக்கவுமே நாம் எமது இனத்தின் அடையாளத்தை தெளிவாக முன்வைக்க வேண்டும் என்பது எனது நிலப்பாடு.

வட்டுக்கோட்டை திர்மானத்துக்கு முன்பிருந்த காலத்திலும், புலி பயங்கரவாத காலத்திலும், அதற்கு பின்பும், கடந்த பொது தேர்தல் காலங்களிலும் தமிழர்களை பெருவாரியாக பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இலங்கையில் இரண்டு இனங்கள் உள்ளதாகவே பேசின, பேசுகின்றன. அதே போல் இவர்களுடன் சம்பந்தமில்லாத சுயபிரகடனம் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான திரு. வி. உருத்திரகுமரன் மே/ஜூன் 2010 தில் புதிய திசைகளின் வானொலி அரசியல் ( லண்டன் சூரியோதயம் வானொலியூடாக) கலந்துரையாடல் ஒன்றில் கூறிய ஒரு விடயம் மிகவும் கவனிக்கத்தக்கது. அதாவது இந்த பிரதமர்(?) நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி விளக்கமளித்தபோது நம்மால் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த அரசு பற்றி இலங்கையில் வாழும் தமிழரின் விருப்பம் அறியப்பட்டதோ இல்லையோ நான் அறியேன், இருந்தம் உங்கள் உத்தேச தமிழீழ ஆட்சிக்குள் வரவிருக்கும் சோனகரிடம் அவர்களின் விருப்பு பற்றி அறியப்பட்டதா? என்ற கருவை உள்ளடக்கியதே அந்தக் கேள்வி. அதற்கான அவரின் பதில்,” இந்தியாவின் தமிழ் நாட்டில் ஒரு முஸ்லிம் பிரமுகர் இந்த நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரித்துளார்” என்பதே. ஆகவே இப்படியான ஒரு ஏமாற்று போக்கு இந்த தமிழ் அரசியல் வாதிகளிடம் இருக்கும் வரை நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது எமது கடமையே ஒழிய அது தமிழரின் பிரச்சினை கூட இல்லை. நாம் நம் இனத்தை இது வென்று சொல்லும் போது அதை ஆதாரங்களோடு பிழையென நிறுவுவது வேறு. ஆனால் காரணங்கள் இல்லாமலே அதை தந்திரமாக முறியடிக்க முற்படுவது கேவலமானது. இலங்கை சோனகரை தமிழர் என்று குறிப்பிடுவது விருப்பம்மில்லாத ஒருவரை பலாத்கார கலியாணத்துகு ஒப்புதல் அளிக்க செய்யும் முயற்சி போன்றது. அது ஒரு இனத்துக் கொதிரான உரிமை மீறல். இதைவிட வேறு வார்த்தைகளால் இந்த நிலைப்பாட்டை விளங்கவைக்க முடியாது.

Moors_Map_of_SL01இனி இந்த “சோனகர்” ரின் வரலாற்றைப் பார்ப்போம். மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்தியா நோக்கிய தம் பார்வையை செலுத்தமுன்பே அரேபியர் தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் தமது குடியிருப்புக்களை நிறுவியுள்ளனர். இந்த வகையில் கி.மு. 310 ஆண்டளவில் மடகஸ்கார் தீவுக்கும் சுமாத்திரா தீவுக்கும் இடையிலான வியாபாரபாதையின் கடல் வழி இணைப்பு இலங்கையூடாகவே இடம் பெற்றுள்ளது. எகிப்திய பல்கலை வல்லுனர் க்ளோடியுஸ் தொலமி(Claudius Ptolemy) கி.பி. 150களில் இலங்கை பற்றிய வழங்கிய தகவல்கள் அவர் அறேபியரிடம் இருந்து பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தொலமி வரைந்த இலங்கை படத்தில் நதிகள் புலூவியஸ்(Fluvius) என்று கூறப்படுகிறன. அதன் அடிப்படையில் மன்னாரின் தென் புறத்தில் ஓடும் நதி “பாசிஸ் புலூவியஸ்” அதாவது பாரசிகர் நதி, அதாவது அப்பிரதேசத்தில் பாரசிகர் அதிகம் வாழ்ந்ததால் அப்பெயர் வழங்கப் பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இந்த நதி இன்று அருவி ஆறாக பெயர் பெற்றுள்ளது, (மகாவழி கங்கை ஓரத்திலும் பாரசீகர் வாழ்ந்ததாக காணக்கிடைகின்றது). இந்த நதிக்குக் கீழ் இன்றைய புத்தளம் நகருக்கு வடக்காக “சோனா புலூவியஸ்” (Soana Fluvious) என்ற நதியை அவர் வரைந்துள்ளார். சோனகர் நதி என்பதை அது குறிக்கிறது. அதாவது சோனகர் அதிகம் வாழ்ந்த இடமாக அது அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த நதியினை இன்றும் புத்தள பிரதேச மக்கள் “பொன்பரப்பி ஆறு”, அல்லது “காலாவி ஆறு” என்றழைகின்றனர். இது சிங்களதில் “கலா ஒய” என்றழைக்கப் படுகின்றது. இந்த நதி தீரங்களுக்கே இன்றும் புத்தளம் வாழ் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று குடிசை(tent)அடித்து, இரவு வேளைகளில் வேட்டையாடி தமது கோடைகாலத்தை கழிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். இது ஆற்றங்கரையில் வாழ்ந்தோரின் பழக்க வழக்கங்களின் மிச்சசொச்சங்கள்.

இதே நேரம் கி.மு. 327-326 இடைப்பட்ட காலத்தில் மகா அலெக்ஸ்சந்தரின் கட்டளை பிரகாரம் இலங்கையின் புவி வரை படத்தைத் தந்த கிரேக்க மாலுமி ஓனொஸ் கிறிட்டோஸ்( Oneus Crites ) புத்தளத்திளும் அதைச் சுற்றியுள்ள அயல் பாகங்களுடன் நிலத்தொடர்புடைய பகுதிகளிலும் “சோனகர்”களின் குடியேற்றம், விஜயன் இலங்கைக்கு வர முன்னரே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிடுகின்றார். அதே நேரம் இந்த பொன்பரப்பி ஆற்றை “சோனாள் பொட்டமஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். “சோனாள்” என்பது “சோனகரையும்”, “பொட்டமஸ்” என்பது ஆற்றையும் குறிக்கும். இந்த பிரதேசம் தான் அதாவது அருவி ஆற்றுக்கும், மாயன் ஆறு என்றழைக்கப்படும் தெதுறு ஒயாவுக்கும், அதாவது இன்றைய சிலாபத்துக்கு வடக்கே பாயும் தெதூறு ஓயாவில் இருந்து மன்னாருக்கு தெற்காகவுள்ள குதிரைமலைக்கும் இடைப் பட்ட பிரதேசமே “சோனகம்” என்ற பிரதேசமாகவும் இந்த மாலுமி சித்தரிக்கின்றார். இந்த பகுதியை, அதாவது அரிப்பு, பொன்பரப்பு, புத்தளம் பிரதேசத்தை “Igona Civitas” ,அதாவது அறேபிய பழங்குடிகள் வாழ்ந்த இடமாகும் என J.R. Sinnathamby என்ற ஒரு ஆய்வாளரும் குறிப்பிடுகின்றார்.

இன்றைய 21ம் நூற்றாண்டில் நாம் காணும் நாடுகள், கண்டங்களின் அமைவுகள், சமுத்திரங்கள், மலைகள் எல்லாம் உலகம் தோன்றிய நாள் தொட்டு இப்படியே இருக்கவில்லை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம். இதற்கு “கண்ட நகர்வு”(continental drift) களே காரணமாகும் என்பது நிலவியலாளர் கூற்று. இந்த அடிப்படையில் இன்றைய இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிக்கா முனை இதற்கிடையில் உள்ள தீவுகள் எல்லாம் ஓன்றாக இருந்த பகுதியை “கொண்ட்வானா லேண்ட்”(Gondwana Land) என்றழைப்பர். இந்து மாசமுத்திரத்தில் மூழ்கிப் போன பெரும் பகுதி “லெமுரியா கண்டம்” (Lemuria Continent) என அழைக்கப் பட்டதும் நாம் அறி ந்ததே. இந்த கடற்கோளின் விளைவே தென்பகுதி காணாமல் போக வடபகுதி இமய மலையாக நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். பின்னர் ஏற்பட்ட சிறிய கடற்கோள்களின் விளைவாக இந்திய நிலப்பரபில் இருந்து இலங்கை பிரிந்து சென்றது என்பதற்கு சான்றுகள் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் க்ளோடியுஸ் தொலமி(Claudius Ptolomy)யின் பிரகாரம் “தப்ரபேன்” (Taprobane) என்று அழைக்கப்பட இலங்கை இன்றை இலங்கையை விட பல மடங்கு விசாலமானது என்கின்றார். அதன் படி “க்கிறினிச்” (Greenwich) 75வது பாகை இன்றைய இலங்கையின் மேற்கு கரையில் இருந்து சுமார் 400 மைல் தூரத்தில் பண்டைய இலங்கையை ஊடறுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆகவே அன்றைய இலங்கை இன்றைய இலங்கையைவிட விசாலமானது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இத்தகைய புதிய நில அமைவுகளுக்கு முன் இலங்கை இந்தியாவுடன் நிலத்தால் இணைந்திருந்த பகுதி என்பதிலும் யாருக்கும் சந்தேகங்கள் எழ நியாமமிருக்காது.

இந்த இணைபின் மூலம் புத்தளம் பிரதேசத்தில் வட மேற்கில் பாய்ந்தோடும் “சோனகர் நதி” யினதும் அதற்கு எதிராக, அதாவது இந்தியாவின் தென் கிழக்கில் காயல்பட்டிணத்தின் கடலில் சங்கமிக்கும் “தாமிரவருணி ஆறு” (அல்லது பொதிகை நதி(?)) என்றழைக்கப்படும் ஆறும் ஓரே நதியே. இந்த நதியையும் “தப்ரபேன்” என்றே அழைத்துள்ளனர். அந்த காலத்தில் ‘சோனகர்” வாழ்ந்த இடமும் அதுவே. சோனகர் பிரதேசத்தைப் பிரிப்பது “தாமிர வருணீ” என்ற நதியே என்றும் கூறப்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றுப் படுக்கைகளில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்க்கள், குணாதிசங்கள், உடல் அமைப்பு, நிறம், அவர்கள் பேசும் மொழியின் தன்மை(dialact), அவர்கள் வைத்துக் கொள்ளும் பெயர்கள், தாழி அடக்க முறை என்பதெல்லாம் ஓன்றையே சுற்றி நிற்கின்றது. அதுதான் சோனகர் என்ற இனத்தையும், அது காலங்காலமாக வாழ்ந்த இன்றும் வாழ்ந்து வரும் பிரதேசத்தையுமாகும்.

மேலும், இந்தியாவின் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் தெற்கு சுவற்றில் உள்ள கல்வெட்டில் இந்த” சோனகம்” பற்றிய தகவல் பெறமுடியும். தமிழ் நாட்டு பேரசர்கள் வெற்றி கொண்ட பிரதேசங்களில் ஒன்றாக “சோனகம்” குறிப்பிடப் பட்டுள்ளதானது அந்த பிரதேசத்தின் இருப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துவதா உள்ளது. இதே போலவே போர்த்துகேயர்களின் இலங்கை வருகைக்குமுன் மொரோக்கோ நாட்டின் யாத்ரீகர் இபுனு பதுதா(Ibn Batuta) 1345 ஆண்டு 9ம் மாதம் 12ம் திகதி “பத்தள” என்று அழைக்கப்பட்ட புத்தளத்தின் துறைமுகத்தில் தன் தோழர்களுடன் வந்திறங்கியதாக தனது “The travels of Ibn Batuta” என்ற நூலில் அதன் ஆசிரியர் சாமுவேல் லீ குறிப்பிடுகின்றார். இப்னு பதுதா, பாவாதமலையை தரிசிக்க புத்தளத்தில் வந்திறங்கியபோது அங்கு ஒரு பாரசிக மொழி பேசக்கூடிய பாண்டிய மன்னன் ஆட்சி செய்ததாகவும் குறிப்பிடுகின்றார். இந்த பாண்டிய மன்னனாக வருணிக்கப்பட்டவனே “தக்கியூதீன்” என்று இனங்காணப்பட்டான். தக்கீயுதீன் அடிப்படையில் ஒரு பாரசிகன் என்றும் பாண்டிய மன்னனின் படையில் தளபதியாக இருந்தவன் என்பதும் அவன் பாண்டிய மன்னனின் மகள் ஒருவரை திருமணம் முடித்திருந்தான் என்பதும் வரலாறு. ஆகவே இலங்கையின் புராதன துறைமுகங்களில் ஒன்றான புத்தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து அதை தன் நிருவாகதில் வைத்திருக்க தக்கியுதீன் நியமிக்கப்பட்டிருப்பத்ற்கான வாய்ப்புகள் அதிகம்.

Moors_Map_of_SL02இந்த ”சோனகர்” என்ற இனம் ஒரு கலப்பு இனம். இந்த இனத்தின் தோற்றத்துக்கு பல மூலங்கள் உள்ளன. இருப்பினும் அனைத்து மாறுபட்ட மூலத்திலும் ஒரு அசைக்க முடியாத, மாறாத மூலமாக காணப்படுவது அதன் “அரபு” இரத்த கலப்பு. இந்த அரபுக்கள் முதலில் தென் அறேபியாவில் இருந்து, அதாவது இன்றைய யெமனில் (Yemen)இருந்து ஏடன் (Aden) துறைமுகம் ஊடாக வந்தவர்கள் (என் தாயின் தந்தையின் பேரன் ஒரு யெமனி). அவர்களைத் தொடர்ந்து, ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய அரபு கலப்பால் உருவாகிய “மூர்”(Moors)கள், பிற்பாடு பாரசீகர், அவர்களுடன் அபிசினியர்கள் (எகிப்து நாட்டவர்), பிற்பாடு தமிழ் நாட்டு சோனவர்கள், இன்றைய கேரளா அதாவது மலையாளிகள் பிற்பாடு வட அறேபியா, அதாவது பாலைவனத்து அரபிகள் என்று இலங்கை சோனகர் இனத்தின் மூலங்கள் பிரிந்து செல்கின்றன. இந்த மூலத்தின் தன்மைக் கேற்பவே இலங்கை ”சோனகர்” பலவித உடல், நிற அமைப்புகளைக் கொண்டுள்ளனர்.

சபாயீன், அதாவது தென் அறேபியர்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் தம் அரசியல், சமய செல்வாக்கை வட அறேபியர்கள், அதாவது பாலைவனத்து அறேபியரிடம் இழக்கும் வரை கடல் மூலமான இந்து சமுத்திர வாணிப சாம்ராஜ்யம் அவர்கள் கையிலேயே இருந்தது. இந்த அறபுக்கள் தான் தென் இந்திய கரைகளிலும் வடமேற்கு இலங்கை கரைகளிலும் சங்கு, முத்து குளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களின் வருகை இந்தியாவிலும், இலங்கையிலும் வியாபார நோக்கமாகவே இருந்தது. பிற்காலத்தில் சமய பரப்பலும் அதில் காணப்பட்டது. ஆனால் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் அறேபியரின் வருகை, வட இந்தியாவுக்கான அவர்களின் அரசியல் அடிப்படையிலான( நாடு பிடித்தல்) வருகையை விட வித்தியாசமானது. அதுவும் கி.பி. 7ம் நூற்றாண்டளவிலேயே இஸ்லாம் என்ற மதம் இந்த வட அறேபிய முஸ்லீம்களால் இலங்கை சோனகர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றது. எனவே இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற சமய அடியாளம், சோனகர் என்ற இன அடையாளத்துக்கு மிகவும் பிற்பட்டது. அதாவது சோனகர் என்ற அடையாளம் கி.மு.4ம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. சேர் அலெக்ஸாந்தர் ஜொன்ஸ்டன் (Sri Alexander Johnston), இலங்கையின் முதல் பிரதம நீதியரசர், இவரும் இலங்கை சோனகர்கள் அறபுக்களின் வழித் தோன்றல்கள் என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றார். முஸ்லீம் என்ற சமய அடையாளத்துடன் இலங்கைக்குள் பிரவேசித்த வட அறேபியர்கள் அனேகமாக அரசியல் அகதிகளாக பிரவேசித்தவர்கள். இவர்கள் அறேபியாவில் இருந்து வெளியேறி, இன்றைய ஈராகின் யூப்ரிடீஸ், டைக்கிறிஸ் நதியூடாக இந்தியாவின் தென் பகுதியிலும், இலங்கைத் தீவிலும், மலாக்காவிலும் குடியேறினர். இந்த அடிப்படையில் இலங்கையில் ஏற்கனவே அறேபிய தொடர்புடைய மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இவர்கள் குடியேறினர். இதில் பிரதான இடங்களாகக் கருதப்படுவது, புத்தளம், கல்பிட்டி, குதிரை மலை, மாந்தோட்டம், மன்னார், யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மாத்தறை, வெளிகம, காலி, பேருவளை, கொழும்பு, கம்பொலை, ரத்தினபுர என்பனவாகும். மிக பின்னய காலத்தில் போர்த்துக்கேயரின் அச்சுறுத்தளினாலும் துறைமுகப்பட்டணங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதினாலும் இங்கு வாழ்ந்துவந்த சோனகர்கள் உற்புர கிராமங்களுக்கும், மலை நாட்டு பிரதேசங்களுக்கும் குடியேறினர்.

இரண்டாம் புவனேகபாகுவின் வாரிசு கலேபண்டார (வத்ஹிமி)” ஹஸ்த்தி சைலாபுரம்” என்ற பெயர் கொண்ட ”சோனக” அரசன் இன்றைய குருணாகல் பகுதியை ஆட்சி செய்துள்ளான். அரசனாக இருக்க அடிப்படை தகுதி “பெளத்தன்” ஆக இருத்தல் என்ற அன்றைய, அப்பிரதே மேல்மட்ட அரசியல் வாதிகளின் போக்கினால், இந்த அரசன் எத்துக்கல் மலை உச்சியில் இருந்து வீழ்த்தப்பட்டு கொலை செய்யப்படும் வரை அரசாட்சியிலேயே இருந்துள்ளான். இதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கும் மன்னனின் எதிர்பாளர்களுக்கும் இக் கொலை தொடர்பாக ஆங்காங்கே கலவரம் நடந்தாக அறியப்படுகின்றது. ஆகவே இந்த விடயமும் இலங்கை சோனகரின் நீண்ட வரலாற்றை கூறுகிறது.

பிற்காலத்தில் இலங்கை கோட்டை, யாழ்ப்பாணம், கண்டி என்ற மூன்று இராச்சியங்களாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட போதும், இவற்றுக்குப் புறம்பாக ”வன்னிமை” அரசுகளும் இருந்தன. இவை இந்த இராஜதானிகளுக்கு புறம்பாக நிருவாக அதிகாரம் வழங்கப்பட்ட பிரதேசங்களாகும். இதில் முக்கியமானவை கிழக்கில் மட்டக்களப்பு, கொட்டியாரமும், வடமேற்கில் புத்தள பிரதேசமுமாகும். ஆனால் இந்த புத்தள பிரதேசம் ஒருகாலத்தில் கண்டி இராச்சியத்தின் கீழும், இன்னொரு காலத்தில் கோட்டை எல்லைக்கும் உற்பட்டிருந்திருந்தாக அறியக்கிடைக்கின்றது. ஒரு போதும் யாழ் இராஜ்சியதுக்கு கட்டுப்பட்டிருக்கவில்லை. புத்தளத்தில் ஆட்சியை தம் கையில் வைத்திருந்தவன் “தக்கியு தீன்” என்ற பாரசீக தொடர்பும், பாண்டிய மன்னனின் ஆதரவும் கொண்டவனாக சொல்லப்படுகிறது. கண்டி இராஜ்சியத்தின் வெளிநாட்டு வியாபாரம் புத்தளம், கல்பிட்டி துறைமுகம் ஊடாகவே நடைபெற்றுள்ளது. புத்தள நகரின் மேற்கே உள்ள “பெரு வழி ஆறு”, மீ ஒயா என சிங்களத்தில் அழைக்கப்படும், ஆறு புத்தளத்தில் இருந்து, மாத்தளை, அக்குரணை வரையும் செல்கிறது. இந்த ஆற்றோர பாதையை “கண்டிப் பெருவழி” என்றும் அழைப்பர். இந்த ஆற்றங்கரை பாதையில் புத்தளம் முதல் கண்டிவரையும் ஆங்காங்கே இருக்கும் முஸ்லிம்களை அதிகம் கொண்ட சோனக கிராமங்கள், சிறிய நகரங்கள் இன்றும் இருப்பதைக் காணலாம். “பெரு வழி ஆறு” தவளம் எனப்படும் பெருள்காவும் முறை அதாவது கூட்டம், கூட்டமாக மாடுகளின் மேல் பாரமான பொருள்கள் ஏற்றிச் செல்லும் முறைக்கு பெயர் பெற்ற பிரதேசமாகும். கண்டிப்பிரதேசத்தில் இருந்து கண்டிராஜ்ய வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்கள் புத்தளம், கல்பிட்டி துறைமுகங்கள் வரை கொண்டுவரப்பட்ட முறையும் இதுவாகும். அதேபோல் புத்தள துறைமுகத்திலும், குதிரை மலை துறைமுகத்திலும் இருந்து பொருட்கள் இந்த தவள முறையிலேயே மலைநாடு நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆரம்பகால சோனகர் பற்றிய தவல்கள் ஒன்று பின்வரும் செய்தியையும் தருகின்றது. அதாவது கி.பி 437-407 பராக்கிரமபாகு காலத்தில், அநுராதபுரத்தில் “யொனாஸ்’ என்று குறிப்பிட்டு ஒரு பகுதி “சோனவர்”களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாம். இன்றும் சிங்களவர் இலங்கை சோனகரை “யொன்னு” என்றும் அழைக்கின்றனர். இந்த “யொன்னு” என்ற சொல் பாளி மொழியின் “யொன்ன” என்பதன் திரிபாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் “யோனக்க” என்ற சிங்கள சொல்லாலேயே பொதுவாக இன்று ”சோனகர்” அழைக்கப்படுகின்றனர். “மரக்கல” எனும் காரணப் பெயர், அதாவது மரக் கப்பல்களில் இலங்கை வந்த “அரபிகள்” என்று பொருள்படவும் இவர்கள் அழைக்கப்பட்டாலும், இலங்கையின் “மலாய்”, “போரா”, மேமன் முஸ்லிம்கள் தவிர, ஏனைய முஸ்லிம்களின் இனப் பெயராக அவர்களின் பிறப்புசாட்சி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் “சோனகர்” (தமிழ்) ” யோனக்க” (சிங்களம்) என்பதே. ஆனாலும் இவர்களை இஸ்லாம் என்ற சமையத்துடன் அடையாளப்படுத்தியே, அதாவது 95% மேல்பட்ட சோனகர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் அவர்களை குறிக்கும் முகமாகவே இன்றைய இலங்கை கொடியில் “பச்சை” நிறம் தரப்பட்டுள்ளது. இலங்கைக் கொடியின் சிங்க அடையாலமே அரபியர்களின் அன்பளிப்பென்பது வேறுமொரு கதை.

இதைவிடவும் இன்னுமொரு வரலாறு இந்த “சோனவர்”ருக்கு உண்டாம். அதாவது இது மனித வரலாற்றின் ஆரம்பத்துக்கே செல்கின்றது. நாம் ஏற்கனவே பார்த்த இலங்கையும், இந்தியாவும் இன்னும் பல பிரதேசங்களும் ஓன்றிணைந்த காலப்பகுதி அது. அப்போது முதல் மனிதன் “ஆதம்” என்பவர் படைக்கப்படுகின்றார். அவர் இலங்கையின் பாவாதமலை (Adam’s Peak) அல்லது “சமனல கந்த” என்று சிங்களத்தில் சொல்லும் மலை உச்சியில் சுவனத்தில் (Paradise) இருந்து இறக்கப்படுகிறார். அவரின் காலடி அடையாளம் அந்த மலை உச்சியில் இன்றும் யாத்திரிகர்களால் தரிசிக்கப் படுகின்றது. டார்வின்னின் கூர்ப்பு கொள்கையை நம்புவோர்களைவிட மீதிபேர், அல்லது ஆகக் குறைந்தது மதங்களை நம்புவோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட விடயம் மனிதன் இறைவனால் படைக்கப்பட்டான் என்பதே. அப்படியானால் உலகத்தில் ஏதோ ஓர் இடத்தில் முதல் மனிதனின் சஞ்சாரிப்பு இருந்திருக்க வேண்டும். ஆப்ரஹாமின் வழி வந்த மதங்களான யூதமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் அந்த முதல் மனிதன் “ஆதாம்” என்றே சொல்கின்றன. உலகத்தின் எந்த இடத்திலும் “Adam’s Peak” என்ற இடம் இல்லாமல் அது இலங்கையில் இருப்பதென்பது சிந்தனைக்கு எடுக்க வேண்டிய முதல் விடயமாகும். அதேநேரம் ஐரோப்பியர்தான் இந்த மலைக்கு அப்படி ஒரு பெயர் வைத்தனர் என்பது ஒரு பொய்யான வாதமாகும் என்பதோடு அப்படித்தான் அவர்கள் அம்மலைக்கு பெயர் வைத்தனர் என்றாலும் அது ஒரு தற்ச்செயலான விடயமாக இருக்க முடியாது. ஐரோப்பியரின் இலங்கைக்கான் வருகை ஆரம்பிக்க முன்னரே பல வெளி நாட்டார் இந்த “ஆதம் மலை”யை தரிசிக்கவென்று வந்துள்ளனர். அதில் பிரதானமானவர் நாம் ஏற்கனவே கண்ட மொரோக்கோ நாட்டைச்சேர்ந்த இப்னு பதுதா ஆவார்.

இந்த ஆதாம் சுவனத்தில் இருந்து வந்த படியால்(மதவாதிகளின் நம்பிக்கைப்படி) அவரின் வழிதோன்றகள் “சுவனர்” என அழைக்கப்பட்டனராம். இந்த அடிப்படையிலேயே சுவனர் திரிபடைந்து “சோனகர்” என்றறியப்பட்டனராம். ஆனால் இந்த சோனகரில் பலர் காலவோட்டதின் பிரகாரம் தமது கடவுள் நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். அது சிதறியும், திரிபடைந்தும் “நாகர்” என மாற்றம் அடைந்ததாகவும், இதன் அடிப்படையில் பாம்பை வழிபடும் “நாகர்”இனம் தோன்றியதாகவும், பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட கடற்கோள்களினால் இலங்கை இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல நாகர்கள் இலங்கையின் வடக்கிலும், இந்தியாவில் பெங்களுரை அண்டிய பகுதியிலும், நாகர்லாந்து என்ற பிரதேசத்திலும் அதிகம் காணப்பட, சோனகர் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும், தென் இந்தியாவின் கீழைக்ரை, காவிரி பூம்பட்டிணம், வேலூர் பகுதிகளிலும் இன்றும் சோனகர்களாகவே காணப்படுகின்றனர். இந்த வரலாறு இன்னும் ஐயந்திரிபர நிறுவப்படாமல் இருக்க, சோனகர் அறபு கலப்புடைய இனமாக இந்தியாவிலும் இலங்கையிலும் இன்னும் சில இடங்களிலும் உருப்பெற்று அந்தந்த இடங்களில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வாழ்ந்து வந்துள்ள வரலாறு சந்தேகங்களுக் கப்பால் நிருபிக்கப்பட்டுள்ள விடயமாகும்.

இருப்பினும் இந்த சோனகர் காலாகாலமாக வாழ்ந்த பிரதேசம் இன்று வரலாற்றில் இருந்து மறைக்கப்படுவதற்கான முயற்சியாகவே புலிகளின் “தமிழீழ வரைபடம்” அமைந்துள்ளது. அதயே இன்று அடிப்படை ஏதும் இல்லாத நாடுகடந்த தமிழீழ அரசு “தமிழீழம்” என்றும், அது தமிழர் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வீக பூமியாகவும் சித்தரிக்கின்றது. இதையே இன்றும் புலம் பெயர் தமிழரும் (புலி ஆதரவு, தமிழ் பேசும் முஸ்லிம் என்ற கொள்கை ஆதரவு) ஒரு வேதவாக்காக காவித்திரிகின்றனர். இதைவிடவும் மோசமான விடயம் என்னவென்றால் சுமார் 225 வருட காலமாக இலங்கையின் மலை நாட்டு பகுதிகளில் வாழ்ந்துவரும் இந்திய தமிழர்களை இலங்கை பிரசைகளாக ஏற்றுக் கொள்ளும் சில இலங்கை தமிழர், கி.மு.னான காலப்பகுதியில் இருந்தே இலங்கையில் வாழ்ந்துவரும் “சோனகர்”களை அப்படியாரும் இல்லையென்றும், அவர்கள் சைவத் தமிழர்களாக இருந்து இஸ்லாமியத் தமிழர்களாக மாறியவர்கள் என்றும் எனவே அவர்கள் இன அடிப்படையில் “தமிழர்” என்ற அடையாளத்துடன் மெளனித்து இருக்கும்படியும், அப்படி இல்லாவிட்டால் நாடோடிகளாக இங்கு வந்த மாதிரி திரும்பிப் போய்விடவேண்டும் என்று கூறுவது ஒரு இனத்துக் கெதிரான உரிமை மீறலாகும். படுமோசமான, மட்டரகமான இனத் துவேசமாகும். அது இப்போதே கலைந்தெறியப் படாவிட்டால், இந்த நிலைப்பாட்டில் இருக்கும் தமிழர்களே எம் இனத்தின் முதல் எதிரிகளும் ஓன்றுபட்ட இலங்கையினதும் எதிரிகளாவார்கள்.

எனவே நான் மேலே நிறுவியது இலங்கையின் சோனகர் என்ற இனத்தின் இருப்பை மாத்திரமல்ல, அவர்களுக்கோர் வரையறுக்கப்பட்ட இடமும் இருந்தது என்பதையுமே. சோனகர்களுக்கு ஒர் இடம் இருந்தது என்பது ஆண்டபரம்பரை மீண்டும் ஆள வேண்டும் என்ற த.வி.கூ யின் அசட்டுத்தனமான கூக்குரல் போன்றதொரு கொள்கையை முன்வைத்து முழு சோனகர் இனத்தையும் அழித்தொழிக்கவுமல்ல. மாறாக யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அதாவது இலங்கை சிங்களவர்களை பெரும்பான்மையாக் கொண்ட பல்லின மக்கள் வாழும் நாடு. அதில் ஒவ்வொரு இனத்தின் உரிமைகளும் மதிகப்பட்டு ஓன்றுபட்ட இலங்கையாக அது இருக்க 21ம் நூற்றாண்டின் வளர்ச்சியில் நாம் தவர விடப்பட்டாமல் இருக்க வேண்டும் என்ற எனது நிலைபாட்டை ஐயந்திரிபர நிறுவவுமே.

கடைசியாக இது ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக வடிவமைக்கப்படாததால் இதற்கான உசாத்துணை நூல்கலின் விபரம் தரப்படவில்லை. இருந்தும் இந்த தலைப்பில் கலந்துரையாட விரும்புவோர் உங்கள் நியாயனாம் சந்தேகங்களை, தெளிவின்மைகளை, மேலதிக விளக்கங்களை பகிர்ந்து கொள்ள முனைந்தால் இது ஒரு ஆரோகியமான அடுத்த கட்டத்துக்கு எம்மை இட்டுச் செல்லும். மாறாக இதற்குள் மதங்களை இழுத்து அல்லது தேவையிலாமல் வேறு கருத்துக்களை புகுத்தி இதை குழப்ப முற்படுவது நாகரிகமற்ற செயலாகும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார் பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத்.

Bazeer_Sekthauthதமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலுக்குள் செல்ல வேண்டும் என கூட்டுறவு வர்த்தக பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் நலன் கருதி இணக்க அரசியலுக்குள் சென்று பார்க்க வேண்டும் என அவர் கூறினார். மட்டக்களப்பு குருமன்வெளி சிவசக்தி மகாவித்தியாலத்தில் அண்மையில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், யோகேஸ்வரன் ஆகியோரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த சில தினங்களாக வடபகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிவாரண வழங்கல் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் போன்றவற்றில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள் அகியோருடன் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டு வருகின்றமை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் சுனாமி நினைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

Tsunami_Rememberanceஎதிர்வரும் 26ஆம் திகதி அம்பாறை கரையோரப் பகுதிகளில் சுனாமி அழிவுகளை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. சுனாமி ஏற்பட்ட ஆறாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் மக்களால் மேற்கொள்ளப்படவுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அன்றைய தினம் சுனாமியால் உயிரிழந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி, பிரார்த்தனை ஆகியவற்றில் ஈடுபடுவர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களான மருதமுனை, நீலாவணை. பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தாவூர், தம்பட்டை, தம்பிலுவில், திருக்கோவில், பொத்துவில் ஆகிய கிராமங்களில் சுனாமியால் அதிகளவு மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏனைய கரையோரப் பகுதிகளிலும் சுனாமியினால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடைமழையிலும் வடபகுதிக்கு வரும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்.

Jaffna_Touristஇலங்கையின் பல பகுதிகளிலும் அடைமழை பெய்து வருகின்ற நிலையிலும் வடபகுதிக்கான சிங்கள சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்த வண்ணமே உள்ளன. வவுனியாவிற்கு அப்பால் கனகராயன்குளம் தொடக்கம் கிளிநொச்சி, ஆனையிறவு என ஏ-9 பாதையின் பல இடங்களில் இச்சுற்றுலாப்பயணிகள் தங்கி நின்று போரின் எச்சங்களை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இதேவேளை, வன்னிப் பகுதிகளுக்கு வந்து பாதையோர வியாபாரங்களை மேற்கொண்டு வரும் தென்னிலங்கை வியாபாரிகள் தற்போது தங்கள் மனைவி பிள்ளைகளுடன் வருகை தந்து வியாபாரத்திலீடுபட்டு வருவதை காண முடிகின்றது. பாடசாலை விடுமுறை என்பதால் அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து இடங்களைப் பார்வையிடுவதுடன் வியாபாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சாட்சியங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஐ.நா.நிபுணர் குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

UN_Logoஇலங் கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

வன்னியில் அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை ஐ.நா.நிபுணர்குழு பல தரப்பினரிடமிருந்தும் பெற்று வருகின்றது. இந்த சாட்சியங்களைப் பெற்றுக் கொள்வதற்கான காலஅவகாசமாக இம்மாதம் 17ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இக்கால எல்லை இம்மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கானையில் மீண்டும் ஒரு துப்பாக்கிமுனைக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Gun_Crimeசங்கானைப் பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளைச்சம்பவம் துப்பாக்கி முனையில் நடைபெற்றுள்ளது. கடந்த திங்கள் நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சங்கானை பிரதான வீதி, 7ஆம் கட்டை என்ற இடத்தில் கணவன் மனைவி இருவர் மட்டுமே வீட்டில் தங்கியிருந்த வேளையில், துப்பாக்கிகளோடு வந்த நான்கு பேர் கதவினைத் திறக்குமாறு வீட்டாரிடம் கூறியுள்ளனர் திருடர்கள் என்பதை உணர்ந்த கணவனும் மனைவியும் கதவைத் திறக்காமலிருந்த போது முன்பக்கமாகவிருந்த நான்கு யன்னல்களை உடைத்து அவர்களிடம் இருந்த நகைகளை துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

துப்பாக்கியை நீட்டி ‘ஐயருக்கு நடந்தது தெரியம் தானே’ என மிரட்டியபோது உயிர் அச்சம் காரணமாக தங்களிடமிருந்த 15 பவுனுக்கும் அதிகமான நகைகளை கொள்ளயரிடம் கொடுத்துள்ளனர். கொள்ளையர்கள் அவ்விடத்திலிருந்து சென்றதும் பொலிஸாருக்கு தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

சில தினங்களுக்கு முன்னர் சங்கானையில் குருக்கள் ஒருவர் மீதும், அவரது இரு மகன்மார் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான குருக்கள் வைத்தியசாலையில் மரணமானார். இச்சம்பவத்திற்குப் பின்னர் சங்கானைப் பகுதியில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. பின்னர் கொள்ளச்சம்பவத்திலீடுபட்ட இரு இளைஞர்களும் அவர்களுக்கு துப்பாக்கியை வழங்கி உடந்தையாக இருந்த படையினர் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர். இச்சம்வத்தைத் தொடர்ந்து மீண்டும் சங்கானைப் பகுதியிலேயே மேலும் ஒரு கொள்ளைச்சம்பவம் துப்பாக்கி முனையில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்.குடாநாட்டு மக்கள் தங்கள் நகைகளை கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக வங்கிகளை நோக்கிச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. ஆனால், அரச வங்கிகளில் பாதுகாப்புப் பெட்டகங்கள் போதாமையாகவுள்ளதாலும், பாதுகாப்புப் பெட்டகம் தொடர்பில் அதிகளாவான காப்புறுதிக் கட்டணங்கள் கோரப்படுவதாலும் மக்கள் வங்கிகளில் தங்கள் நகைகளை பாதுகாப்பிற்காக வைப்பதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர்கள் வீரக்கோன், விமல் வீரவன்ச குழுவினர் கிளிநொச்சிக்கு வருகை தந்தனர்.

Chandrakumar_MP_Jaffna_EPDPநேற்று திங்கள் கிழமை கிளிநொச்சிக்கு வருகை தந்த மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் மற்றும், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் ஆகியோர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை வழங்கி வைத்தனர்

இதேவேளை, நேற்று கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச கிளிநொச்சி மாவட்டத்தின் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி, ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரி, கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைஅதிகாரி சந்தன ராஜகுரு, மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க வந்த மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் தலைமையிலான குழுவினரும். தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்தைத் திற்நது வைக்க வந்த விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினரும் தனித்தனிக் குழுவினராக இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூத்த அரசியல்வாதி க.பொ.இரத்தினம் காலமானார்.

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.பொ.இரத்தினம் நேற்று திங்கள் கிழமை தனது 96 வது வயதில் காலமானார். நேற்று மாலை 5 மணியளவில் கொழும்பில் வைத்து இவர் காலமானார். இவரது உடல் தற்போது பொறளை மலர்ச்சாலையில் உறவினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வேலணையைப் பிறப்பிடமாக் கொண்ட திரு. க.பொ. இரத்தினம் ஆரம்பத்தில் ஆசிரியராகவும், ஆசிரியர் கலாசாலை வரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகளோடு இணைந்து பணிபுரிந்தார். 1960 முதல் தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1965 ஆம் ஆண்டு கிளிநொச்சித் தொகுதியிலும், 1970, 1977ஆம் ஆண்டுகளில் ஊர்காவற்றுறைத் தொகுதயிலும் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசியல்வாதியாகவும், ஒரு தமிழறிஞராகவும் இவர் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பறவைகள் வருகையால் முல்லைத்தீவில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை.

Bird_Unusual_to_SLமுல்லைத் தீவுப் பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும், இராணுவத்தினருக்கும் பறவைக்காய்ச்சல் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு இத்தடுப்பூசியை ஏற்றுவதற்கு போதுமான மருந்து கையிருப்பில் இல்லாத காரணத்தினால் முதலில் அரசாங்க ஊழியர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இவற்றை ஏற்றுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவில் பணியாற்றும் பொது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மருந்துகள் வந்து சேர்ந்ததும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி ஏற்ப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் தற்போது வருகின்ற நிலையில் சிலர் அப்பறவைகளைப் பிடித்து இறைச்சிக்காக பயன்படுத்துவதாகவும் இதனால் இப்பகுதிகளில் இத்தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.