2010

2010

ஜனாதிபதி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பரப்பப்பட்ட செய்திகளில் உண்மையில்லை: தயானந்த திஸாநாயக்க

election-commisone.jpgதாம் துப்பாக்கி முனையில் பெறுபேறுகளில் கையொப்பமிட்டதாகவும், தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்படும் போது தாம் தேர்தல்கள் செயலகத்தில் இருக்கவில்லையென்றும், வெளியாகியதாக செய்திகளில் உண்மையில்லை என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த 26ஆம் திகதிக்கு பின்னர் அடுத்த நாள் காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,  தமது மகள் கடத்தப்பட்டதாகவும் பல்வேறுப்பட்ட கட்டுக்கதைகள் பரப்பட்டதாகவும், இதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜகிரிய, தேர்தல் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக, எந்தவித சந்தேகமும், கொள்ளத்தேவையில்லை எனவும், ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட தேர்தல் பெறுபேறுகள் அனைத்திலும் தமது கையொப்பங்கள் இடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.  தேர்தல் வாக்களிப்புகள் உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சீரான முறையில் இடம்பெற்றன.

இந்தநிலையில், தமது அலுவலக சேவையாளர்கள் மற்றும் ஏனையவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போதும் பணியாற்றப்போவதாக தயாநந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  கடந்த தேர்தல்களின் போது, தம்மால், அநீதியான முறையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின் நீதிமன்ற நடவடிக்கைகளை அல்லது உரிய விசாரணைகளை சந்திப்பதற்கும் தாம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

2010 நவம்பர் 19 இல் ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிகாலம் ஆரம்பம்

mahindaஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் இந்த வருடம் நவம்பர் 19 இல் (19/11/2010) ஆரம்பமாகின்றது என்று உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டதாக ஜனாதிபதியின் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இந்த விடயம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த குறிப்பை உயர்நீதிமன்றத்தின் 7 நீதியரசர்கள் அடங்கிய குழாம் நேற்று திங்கட்கிழமை ஆராய்ந்தது.

தனது இரண்டாவது பதவிக்காலம் எப்போது ஆரம்பமாகின்றது என்பது தொடர்பாக அரசியலமைப்பின் 129 ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை கோரியிருந்தார். பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா, நீதியரசர்கள் சிரானி ஏ.பண்டாரநாயக்கா, ஜகத் பால பட்டபெந்தி, கே.ஸ்ரீபவன், பி.ஏ.இரட்நாயக்கா, சந்திரஏக்கநாயக்கா, எஸ்.ஐ.இமாம் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழுவே இந்த விடயத்தை ஆராய்ந்தது.

2010 நவம்பர் 19 இல் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பமாக வேண்டுமென சட்டமா அதிபர் மொகான்பீரிஸ், பிரதி சொலி சிற்றர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய, சிரேஷ்ட அரச சட்டத்தரணி றெரின் புள்ளே, ஓ.எச்.எம்.டி.நவாஸ் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இடையீட்டு மனுதாரர் மென்டிஸ் ரோகனதீர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டி.எஸ்.விஜேசிங்கவும் மற்றொரு இடையீட்டு மனுதாரர் சரத்கோங்காகே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால்கயமானேயும் ஆஜராகியிருந்ததுடன், ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 19 நவம்பர் 2011 இல் ஆரம்பிக்கப்படவேண்டுமென தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதி மேலும் 6 ஆண்டுகளுக்கே மக்கள் ஆணையை நாடியிருந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர். முதலாவது பதவிக்காலமான 6 வருடங்களுக்கு மக்கள் ஆணையை வழங்கியிருந்தனர். அதனை சுருக்கவோ துண்டாவோ முடியாதென அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தலதா மாளிகையிலிருந்து ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரை

ind-day.jpgஇலங்கை யின் 62வது சுதந்திர தின பிரதான வைபவம் நாளை காலை கண்டியில் மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது கண்டி தலதா மாளிகை வளவில் நடைபெறவுள்ள சுதந்திர தின பிரதான வைபவத்திற் கான சகல ஏற் பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்திகைகளும் இடம்பெற்றன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமய வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன் நாளை முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை பள்ளேகளவில் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியும் நடை பெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 8.30 மணிக்கு சுதந்திர தின பிரதான வைபவம் ஆரம்பமாகவுள்ளது. பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் உட் பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரின் மரியாதை அணி வகுப்புகள் பாண்ட் வாத்தியங்களுடன் கலாசார நிகழ்ச் சிகளும் இடம்பெறவுள்ளன.

இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப் படவுள்ளதுடன் மரியாதை நிமிர்த் தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப் படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்காக தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார்.

பொன்சேகா மீண்டும் தேர்தல் களம் இறங்குகிறார்

sarath.jpgபாராளு மன்றத் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி போட்டியிடவுள்ளது. அதேசமயம், ஜெனரல் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவதையும் ஐ.தே.மு. எதிர்க்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கண்டி மாவட்ட ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியல்ல இந்தத் தகவலைத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்ற தினத்திலிருந்து தேர்தல் முடிவுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் திருப்தியற்ற நிலைமை காணப்படுகின்றது. இதே நிலைமையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியிலும் காணப்படுகிறது. தேர்தல் ஆணையாளரின் அறிக்கையில் வாக்குப்பெட்டியொன்றைக் கூடப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது என்று தெரிவித்ததே இதற்குக் காரணமாகும்.

தேர்தல் வாக்குப் பெட்டியைப் பாதுகாக்க முடியாது போனால் அதிலுள்ள வாக்குகளில் முடிவினை எப்படி ஏற்பதென மக்கள் கேட்கின்றனர். தேர்தல் காலத்தில் அரச ஊடகங்கள் நீதிக்குப் புறம்பாக ஒருபக்கம் சார்ந்து செயற்பட்டது. நீதிமன்ற உத்தரவினை மீறியும் தேர்தல் ஆணையாளரின் கடிதங்கள் மூலமான வேண்டுகோளையும் மீறி அவை செயற்பட்டன. இவ்வாறு அரசாங்கம் தேர்தல் சட்டவிதிகளை மீறிச் செயற்பட்டது. எனவே, தேர்தல் ஆணையாளரின் கூற்றுப்படி பார்க்கும்போது தேர்தல் முடிவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதென்பது புலனாகின்றது.

தேர்தலுக்குப் பின்னர் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா சுற்றிவளைக்கப்பட்டது போன்றவாறான நிலைமையேற்பட்டுள்ளது என எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு முன்னர் நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் தேர்தல் ஆணையாளரின் கையொப்பத்துடனே வெளிவந்துள்ளது. ஆனால், இம்முறை அவரது கையொப்பம் இல்லாது முடிவுகள் மின்னஞ்சல் மூலம் வெளியானது.

இந்த முடிவு தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆராய்ந்துவரும் அதேநேரம், இது குறித்த சாட்சியங்களைப் பெற்று வருகின்றோம். இது தொடர்பான ஆதாரங்களை,சாட்சியங்களை அறிவிக்குமாறு முகவர்களிடம் கட்சித் தலைவர் கோரியுள்ளார். எதிர்வரும் 10 தினங்களுக்குள் சட்டநடவடிக்கை எடுப்பது சாத்தியமாகுமென நம்புகின்றேன்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். இதற்கான முடிவு ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்டத் தலைவர்களின் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டுள்ளது. யானைச் சின்னத்தில் போட்டியிடுவது ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகருக்கு ஆதரவளிப்பதென்றும் இதன் பின்னர் தனித் தனியாகப் போட்டியிடுவதெனவும் தேர்தலுக்கு முன்னரே தீர்மானித்திருந்தோம். இதன் பிரகாரம் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ளோம். எமது முன்னணியில் உள்ள தலைவர்கள் ஜெனரல் பொன்சேகா போட்டியிடுவதை எதிர்க்கவில்லையெனவும் தெரிவித்தார்.

சமூகபொருளாதார உரிமைகளை நிலைநாட்ட இலங்கை அரசியலில் இடம்கோரும் மலே சமூகத்தவர்

இலங்கையின் சிறுபான்மை இனங்களுள் ஒரு பிரிவான மலே சமூகத்தவர்கள் தமது சமூகபொருளாதார உரிமைகளுக்கு குரல் கொடுக்க ஏற்ற வகையில் அரசியலில் மேலும் இடந்தேடி வருகின்றனர்.இந்நாட்டிலுள்ள 20 மில்லியன் சனத்தொகையில் இந்தோனேசிய தீவுகள் மற்றும் தென் மலேசிய வம்சாவளி மலாயர்கள் சுமார் 50,000 பேர் உள்ளனர்.

தற்போது யுத்தம் நிறைவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் சரியான தலைமைத்துவமின்றியுள்ள மலாயர் சமூகம் அடக்குமுறைக்குள்ளாகக் கூடிய நிலை ஏற்படக் கூடுமெனவும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளமை குறித்தும் அவர்கள் வருத்தந் தெரிவித்துள்ளனர். இங்குள்ள மலாயர்களில் சுமார் 30 சதவீதமானவர்கள் நடுத்தர வர்க்கத்திலும் 60 சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நாட்டின் சனத்தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவேயுள்ள மலாயர்களுக்கு நிரந்தர வருமானமோ வாழ்விடங்களோ பல்கலைக்கழக வசதிகளோ அரசாங்க வேலைகளோ இல்லையென இலங்கை மலாயர் சங்கத்தின் தலைவர் இக்ரம் குட்டிலன் தெரிவித்துள்ளார்.

இம்மலாயர்கள் டச்சு காலத்தில் கி.பி. 1600 களின் பிற்பகுதியில் படைவீரர்களாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.இவர்கள் மலாயை தாய் மொழியாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் கொண்டு மூதாதையரின் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர்.தற்போது இச்சமூகம் இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடனான சம பிரதிநிதித்துவத்தை எதிர்பார்த்துள்ளது.மலே சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனவும் சிறுபான்மையினரின் உரிமைகளை தற்போது தெளிவுபடுத்த வேண்டுமெனவும் இக்ரம் தெரிவித்துள்ளார்.

26 இலட்சம் டொலர் பெறுமதியான கூரைத் தகடுகள் இந்தியா கையளிப்பு

வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திற்கென இந்திய அரசாங்கம் 2,644,200 டொலர் பெறுமதியான கல்வனைஸ் கூரைத் தகடுகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதுடன் அதன் முதற் தொகுதி இன்று கையளிக்கப்படவுள்ளது.

இன்று காலை இவ்வைபவம் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளதுடன் இந்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் ஜனாதிபதியின் ஆலோசகரும் வடக்கின் வசந்தம் அபிவிருத்திச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷவிடம் தகடுகளைக் கையளிக்கவுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.

இன்றைய இவ்வைபவத்தின் போது 500 மெற்றிக்தொன் கல்வனைஸ் தகடுகளைக் கொண்ட 19 கொள்கலன்களை இந்திய உயர்ஸ்தானிகரிடமிருந்து பசில் ராஜபக்ஷ எம்.பி. பெற்றுக்கொள்ளவுள்ளார். இதன் பெறுமதி 50,8347.45 அமெரிக்க டொலராகுமென மேற்படி அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் வாக்காளர்களும் : த ஜெயபாலன்

Karuna_Election_Campaignதற்போது வன்னி யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தங்களை அறிவித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் அரசியல் சீட்டுக்கட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக சன்னதம் ஆடியது. ஆனால் இறுதியில் ரிஎன்ஏ சம்பந்தரின் பந்தை லாவகமாக ஆடிய மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் குழு சிக்ஸரே அடித்துவிட்டது. இடதுசாரித் தலைமைகளுடன் இணைந்து ஒரு முற்போக்கு அணி ஒன்றை உருவாக்க முயற்சிக்காமல் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெல்ல வைக்கப் போகின்றோம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் கூறி தமிழ் மக்களின் அரசியலை சாக்கடைக்குள் தள்ளியது ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு. இன்று வீழ்ந்தும் மீசையில் மண்படவில்லையென கதையளக்கின்றனர்.

‘தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் ” எனத் தமிழ் மக்கள் தெரிவித்து இருக்கிறார்களாம் என்று கதையளக்கின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு சரத்பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்வதற்கு முன்பாகவே தமிழ் மக்கள் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டனர். இது காகம் இருக்க பனம் பழம் வீழ்ந்த கதையே. ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வீழ்ந்த வாக்குகள் மகிந்த சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கான பழிவாங்கும் வாக்குகளே அல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வீழ்ந்த வாக்குகள் அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனவரி 7ல் தேசம்நெற்க்கு தெரிவித்தது போல் ‘இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும்” என தமிழ் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் பார்க்கையில் நாடு முழுவதும் 74 வீதமான மக்கள் வாக்களித்து இருக்கையில் யாழ் மாவட்டத்தில் 15 வீதமான மக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வீழ்ந்துள்ளது. இது தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறும் ”தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம்”  என்பதன் லட்சணம்.

சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜெனரல் பொன்சேகாவுடன் இணைந்து வடக்கு கிழக்கு – இணைந்த தமிழ் தாயகம் என்றெல்லாம் றீல் விட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டாளிகள் – ஜெனரல் சரத் பொன்சேகா, யூஎன்பி, ஜேவிபி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என அறிக்கைகளை வெளியிட்டனர். அது ஒருபுறம் இருக்க லண்டனில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடாத்துகிறார். இலங்கை வாழ் தமிழ் மக்கள் பொதுவாக புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து பொருளாதார மற்றும் உதவிகளை எதிர்பார்க்கின்றனரே அல்லாமல் தங்களுக்கான அரசியல் தலைமைத்தவத்தையோ அல்லது அரசியல் புத்திஜீவிதத்தையோ எதிர்பார்க்கவில்லை என்பது சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் அவரது சகோதரருக்கும் இன்னும் சரிவரப் புரியவரவில்லை. இன்னும் சில புலம்பெயர் புலி ஆதரவு புலி எதிர்ப்பு புத்திஜீவிகளால் இன்னமும் தங்கள் அரசியல் அடையாளத்தை தக்க வைப்பதற்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை. அதிஸ்டவசமாக மக்கள் இவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை.

Buses_on_Election_Duty_25thJan10தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான போதும் சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம் நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தார். எம் கெ சிவாஜிலிங்கம் ஓரளவு அறியப்பட்ட இடதுசாரி அரசியல் வாதிகளைக் காட்டிலும் சில ஆயிரம் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார். குறிப்பாக சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ன ஆகிய இடதுசாரிக் கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும் எம் கெ சிவாஜிலிங்கம் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் இந்த வாக்குகளால் எம் கெ சிவாஜிலிங்கம் எவ்வித திருப்தியையும் அடைய முடியாது. குறிப்பாக தமிழ் பேசும் சிறுபான்மையின மக்கள் மாறி மாறி இனவாதத் தலைமைகளைத் தெரிவு செய்வதிலும் அவற்றுடன் கூட்டுவைத்து அரசியல் நடத்துவதிலுமே ஆர்வம் காட்டுகின்றனரே ஒழிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவதற்கான அரசியல் முதிர்ச்சியும் தூர நோக்கும் அவர்களிடம் இல்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

மிக மோசமான அவலத்தை ஏற்படுத்திய வன்னி யுத்தம் முடிவடைந்து சில மாதங்களுக்கு உள்ளாகவே நடைபெற்ற தேர்தலில் தங்கள் அரசியல் இருத்தலை தக்க வைப்பதை மட்டுமே கணக்கில் கொண்டு எய்தவனை நோவதா அம்பை நோவதா என்று அரசியல் பேசியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஜெனரல் சரத்பொன்சேகாவோடு வில்லுடைக்க சுயம்வரம் சென்றவர்கள் தற்போது மண் கவ்வித் திரும்பியுள்ளனர்.

MR_Poster_Jaffnaஇவர்கள் ஒருபுறம் இருக்க மகிந்த ராஜபக்சவின் தோளோடு தோள் நின்ற ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், ரிஎம்விபி மற்றும் கருணா அம்மான் போன்றவர்களுடைய அரசியலும் அம்மணமாக்கப்பட்டு விட்டது. இவர்கள் மக்களில் இருந்து வெகு தொலைவிலேயே உள்ளனர். மீண்டும் பதவிக்கு வரும்போது இவர்களின் ஆயுதங்களைக் களைவேன் என்று மகிந்த ராஜபக்ச ஒரு உறுதிமொழியை தமிழ் மக்களுக்கு வழங்கி இருந்தாலே மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் அதிகரித்து இருக்கும். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவேன் என அவர் உறுதியழித்து இருந்தது. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, வவுனியா போன்ற தமிழ் மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களுடன் உரையாடிய போது, அவர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் மீது மிகுந்த அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனங்கள் பற்றிய அச்சம் அவர்களிடம் நிறையவே உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வன்னி மக்கள் எவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்துகின்றனரோ அதேயளவு வெறுப்பை ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்கள் ரிஎன்ஏ உட்பட எந்தவொரு தமிழ் அரசியல் தலைமை மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதையே வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகளால் அம்மக்கள் மிக மோசமான வாழ்வை எதிர்கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடாக தமிழ் அரசியல் தலைமைகள் மீதான நம்பிக்கையீனம் பரவலாகக் காணப்படுகின்றது. தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்கின்ற தகமையை இழந்துள்ளனர். இதுவே தமிழ் பிரதேசங்களின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.

இன்று மௌனம் கலைக்கிறார் தேர்தல் ஆணையாளர்

ஜனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட ஒருவார காலத்தின் பின்னர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இன்று தனது மௌனத்தைக் கலைத்து ஊடகவியலாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கடுமையாகச் செயற்படப்போவதாக அறிவித்திருந்த தேர்தல்கள் ஆணையாளர் இறுதித் தேர்தல் முடிவை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துகள் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும்மனக் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

ஜனவரி 27 ஆம் திகதி மாலை செய்தியாளர் மாநாட்டில் முடிவுகளை அறிவித்த பின்னர் ஒருவார காலமாக எங்கிருக்கிறார் என்று அறியமுடியாதிருந்த தேர்தல் ஆணையாளர் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அவர் முக்கிய விடயங்களைத் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்றதும் தான் உடனடியாகவே பதவிதுறக்க இருப்பதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: பூநகரி பகுதியில் நேற்று 1000 பேர் மீள்குடியமர்வு – 5ம் திகதி மாந்தையில்; 7ம் திகதி முல்லைத்தீவில்

இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகள் நேற்று (2) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு நேற்று பிற்பகல் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி மற்றொரு பகுதியினர் மாந்தை கிழக்கு பகுதியில் மீளக்குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், மீள்குடியேற்றப்பட உள்ள குடும்பங்கள் அடையாளங் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் ஏழாம் திகதி முல்லைத்தீவு பகுதியில் மீள் குடியேற்ற பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளில் ஏற்பட்ட தாமதம், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றினால் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் சிலவாரங்கள் தாமதமாகின. ஜனவரி 31 ஆம் திகதியுடன் மீள்குடியேற்றப் பணிகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டபோதும் மேற்படி காரணங்களினால் இந்தப் பணிகள் சற்று தாமதமடைந்தன.

மோதல் காரணமாக வடக்கு, கிழக்கை சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே மீள் குடியேற்றப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் குறைவானவர்களே வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய மக்களை மீள்குடியேற்றுவதற்காக கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்ணிவெடிகள் அகற்றப்படுவதற்கு ஏற்ப மக்கள் அந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் ஹால்தீன் கூறினார்.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு 6 மாதத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதோடு விவசாயம், மீன்பிடித்துறை என்பவற்றை முன்னெடுக்க உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெறும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு வரையில் நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானப் பிரதிநிதியாக எரிக் சொல்ஹெய்ம் கடமையாற்றினார்.

மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.