மஹிந்த சிந்தனையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவை ஏற்று, அதற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்ற கூட்டமைப்பு நண்பர்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கடுமையாக உழைத்த இளைஞர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நன்றியை அறிவித்துக் கொள்கின்றது.
யுத்தத்தில் வென்றதற்குப் பரிசாக சிங்கள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கலாம். அல்லது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போலத் தேர்தல் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் நான்கு வருட ஆட்சியில் தலைவிரித்தாடிய தமிழின விரோத நடவடிக்கைகளையும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தமது வாக்குகளின் மூலம் தெட்டத் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களையும் இந்நாட்டுக் குடிமக்களாகக் கருதி அவர்களையும் அணைத்துச் செல்ல விரும்பினால் அவரது சிந்தனையில் மாற்றம் வேண்டும் என்பதைத் தமது வாக்குகளால் உணர்த்தியுள்ளார்கள். அது மாத்திரமல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்பதையும் வடகிழக்கு என்பது தமிழ் மக்களின் பிரிக்கப்பட முடியாத தாயகம் என்பதையும் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்திருந்தால் இலங்கைத் தீவில் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் மாற்றம் என்பதை விடவும் யுத்த வெற்றி குறித்த பிரமையே சிங்கள மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. இதையிட்டு தமிழ் மக்கள் சோர்வடைய வேண்டியதில்லை. சரத் பொன்சேகா தோல்வியடைந்து விட்டார் என்ற காரணத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு தவறானது எனக் கருத வேண்டியதுமில்லை. அப்படிச் சிலர் தெரிவிப்பதானது, அவர்களது அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவிற்கு மாறாக, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட வேட்பாளரையும் தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயலும் சுயநல சக்திகளுக்குத் தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். வாக்களிப்புக் கடமையைச் சரிவர நிறைவேற்றிய தமிழ் மக்களுக்கு நெஞ்சார நன்றி கூறும் அதேசமயம் தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உழைக்கும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றது.