தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னால் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் என்பது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் தெரிந்த விடயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவுக்கே வரும் என்பது நவம்பர் 19 – 22ல் சூரிசில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் மாநாட்டிற்கு வரும் பொழுதே ஓரளவு தீர்மானிக்கப்பட்டு இருந்தது. டிசம்பர் 20ல் ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதே நிலைப்பாட்டையே அங்கு விலியுறுத்தி இருந்தது. ஆயினும் அவர்கள் அதனை வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனவரி 6ல் உதிதியோகபூர்வமாக அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரேயே ஜேவிபியும் யுஎன்பியும் தமது மேடைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தோன்றி பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்து வந்தனர்.
ஜனவரி 4ல் எதிர்க்கட்சிக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற உறுதிமொழியையும் இரா சம்பந்தன் எதிர்தரப்பு கூட்டமைப்பிற்கு வழங்கி இருந்தார். TNA promises support to Gen. Fonseka http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3682&Itemid=1 அதற்கு முன்னரேயே தங்கள் முடிவுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் ஒரு நடவடிக்கையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்திருந்தனர். Gen. Fonseka visits Jaffna at invitation of TNA http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3672&Itemid=1
ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி விவாதித்து முடிவெடுத்தது என்பது அப்பட்டமான நாடகம். ஜனவரி 4ம் 5ம் திகதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி இம்முடிவை எடுக்கவில்லை. அவ்விரு நாட்களும் இடம்பெற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகக் கேலிக் கூத்து மட்டுமே.
ஈராக்கில் ரெஜீம்சேன்ஞ்சை கொண்டு வருவதற்காக ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டு சர்வதேசக் கூட்டமைப்பை துணைக்கு அழைத்துக் கொண்டு ஈராக் மீது படையெடுத்து ரெஜீம்சேன்ஞ்சை ஏற்படுத்தியது. தனது நோக்கத்திற்கு ஏற்ப ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் உண்டு, 45 நிமிடங்களில் அவ்வாயுதங்கள் லண்டனைத் தாக்கலாம் என்ற கதைகள் சோடிக்கப்பட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டால் இவை பரப்பப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று இதற்கு ஒரு ஜனாநாயக முலாமும் பூசப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் தீர்மானமே. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் அளவுக்கு இல்லாமல் விரலுக்கு ஏற்ற வீக்கமாக உருவாக்கிய திட்டமே இலங்கையில் ரெஜீம்சேன்ஞ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது. அதற்காக சோடிக்கப்பட்ட விடயங்களில் ஒன்று வடக்கு – கிழக்கு இணைப்பு. ஒரே மாதத்தில் சந்தேக நபர்களை விடுதலை செய்வது மற்றும் இன்னொரன்ன விடயங்கள். (அவற்றைத் தனிக் கட்டுரையில் ஆராய்வதே பொருத்தமானது.)
தமிழீழ விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மே 18ல் கொல்லப்படும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்திறன் மிக்க உறுப்பினர்களாக எம் கெ சிவாஜிலிங்கம் ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் செயற்பட்டனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆதரவு அலைக்கு முதுகெலும்பாக நின்றனர்.
அப்போது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்துக்களுடன் எவ்விதத்திலும் முரண்படாமல் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அல்லது முரண்படக் கூடிய கருத்துக்களை வெளியிடாமலே மௌனம் காத்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடையத் தொடங்க இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் ஆளுமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தலை தூக்கியது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதாகக் குறுகிக்கொண்டது.
இதனை எம் கெ சிவாஜிலிங்கம் கடந்த பெப்ரவரியிலேயே தேசம்நெற்க்கு வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் பற்றி தங்களுடன் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதனை அண்மையில் லண்டனில் நடைபெற்ற சந்திப்பிலும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்து இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தரையாடி எடுக்கப்படுவதில்லை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமையாகவே இருந்து வந்தது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நாடுகளிலும் தங்கி இருந்ததும் அம்மும்மூர்த்திகளுக்கு வசதியாக அமைந்தது.
ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை திரும்பிவிட்டனர். அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற போது ஒப்புக்காகவாவுதல் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்தைப் பெற வேண்டி இருந்தது. அதனாலேயே ஜனவரி 4 மற்றும் 5ம் திகதிகளில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக நாடகத்தை அரங்கேற்றியது.
ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதனை நேரடியாக வாக்கெடுப்பிற்கு விட்டால் மும்மூர்திகளின் நோக்கம் அடிபட்டுப் போய்விடும் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது. அதனால் வாக்கெடுப்பிற்கு விடப்படும் கேள்வி தொடர்பாகவும் கடுமையான முரண்பாடுகள் விவாதங்கள் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர் நேரடியாகக் கலந்துகொண்டனர். ஒருவர் தொலைபேசியூடாகக் கலந்துகொண்டார். இரண்டு பிரதான வேட்பாளர்களில் யாரையாவது ஆதரிப்பதா? இல்லையா? என்ற அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற குரல்கள் பலமானதாக இருந்தது. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ரெஜீம்சேன்ஞ் வேண்டுமா இல்லையா என்ற அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது. இறுதியில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டின் முடிவின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதன்போது சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் கிடைத்தது. ஆனால் தொலைபெசியில் கலந்துகொண்டவரின் வாக்கை கணக்கெடுக்க முடியாது என்பதில் இரா சம்பந்தன் உறுதியாக நின்றார். அதனால் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவாகியது. பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதில்லை என்றதன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஊடகங்களுக்கு வெளியிட்ட இரா சம்பந்தன் ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தெரிவித்திருந்தார். தங்களுக்கு இசைவான பேரினவாதத் தலைமைகளுடன் இணைந்து தமிழ் மக்களை படுமோசமான நிலைக்குத் தள்ளிய தமிழ் தலைமைகள் குறிப்பாக தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது மீண்டும் ஒருமுறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை வார்த்தை ஜாலங்களால் மயக்குகின்றது. ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்க்கின்றது” என்பது முற்றிலும் உண்மை. அதற்காக ”பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை. ஏகோபித்துத் தெரிவிக்கவேயில்லை. இவ்வளவு அழிவுக்குப் பின்னும் தமிழனைத் தமிழனே தமிழிலேயே ஏமாற்றக் கற்றுக்கொண்ட சாணக்கியத்தைத்தான் சம்பந்தர் இவ்வளவுகால அரசியலில் தெரிந்து வைத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும்:
தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்) , நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்)
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)
இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள். அவர்கள் வருமாறு : சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவில்
பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: இரா சம்பந்தன் (திருகோணமலை), மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்), சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி (வன்னி), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்).
எதிராக வாக்களித்தவர்கள்: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சிவநாதன் கிசோர் (வன்னி), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்)
வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்) மற்றும் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு). இருவரும் லண்டனில் தங்கியுள்ளனர். சந்திரகாந்தன் சந்திரநேரு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாது என்ற முடிவைக் கொண்டிருப்பதாக எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதே முடிவை ஜெயானந்தமூரத்தி தொலைபேசியூடாகக் கலந்துகொண்டு தனது கருத்தை வெளியிட்டார். ரி கனகசபை (மட்டக்களப்பு) இவர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்ததாக இரா சம்பந்தன் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ரி கனகசபை இந்தியாவில் சுகவீனம் காரணமாகத் தங்கியுள்ளார். சதாசிவம் கனகரத்தினம் (வன்னி) இலங்கை அரச படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், கூட்டணி என்பவற்றை ஒட்டுக்குழு அரசியல் என்று விமர்சித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னையவர்கள் மகிந்த ராஜபக்சவுடன் ஒட்டியதற்குப் பதிலாக இவர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் ஒட்டியுள்ளனர். இடம் மட்டும் தான் மாறியுள்ளதே அல்லாமல் இதுவும் ஒட்டுக்குழு அரசியல் தான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வே பிரபாகரனுக்குப் பதிலாக சரத் பொன்சேகாவை தேர்ந்தெடுத்த ஒட்டுக்குழு.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை அறிவித்து இருந்தாலும் அதன் கீழ் மூன்று அணிகளுக்கான அரசியல் ஓட்டங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்ச சிவாஜிலிங்கம் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கின்ற நிலைகளே காணப்படுகின்றது. சிவாஜிலிங்கம் எனும் போது விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பவர்களும் சிவாஜிலிங்கத்தின் அணியிலேயே அடங்குகின்றனர்.
சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிரான உணர்வலைகள் ஏற்கனவே மேலெழ ஆரம்பித்துள்ளது. இது புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் மத்தியிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. புலி ஆதரவாளர்களிடையே இவ்வாண்டு நடுப்பகுதியில் தமக்கு ஏற்படுத்தப்பட்ட தோல்விக்குப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற போக்கு காணப்பட்ட போதும் இரு பிரதான வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதன் நியாயத்தன்மை தற்போது பலம்பெற்றுள்ளது.
டிசம்பர் 20ல் வியன்னாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய சக்திகளின் சந்திப்பிலும் இந்த முரண்பட்ட நிலை வெளிப்பட்டு உள்ளது. வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை அரசுக்கு எதிரான தமிழ் தேசிய சக்திகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு, வி ஆனந்தசங்கரி மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு சார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் அபிவிருத்தி என்பதன் அடிப்படையில் இம்மாநாடு கூட்டப்பட்டதால் அதனுடன் தொடர்புடைய இன்னும் சிலரும் அழைக்கப்பட்டு இருந்தனர். நான்கு தினங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில் நாடு கடந்த தமிழீழ அரசுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டனர். கனடா: சேரன், இளங்கோ (தமிழீழ மக்கள் கட்சி), ரஞ்சன் (கனடிய தமிழ் கொங்கிரஸ்) நோர்வே: செல்வின், லண்டன்: ரூட் ரவி (பிரித்தானிய தமிழர் பேரவை), எதிர்வீரசிங்கம், சிற்றம்பலம் இவர்களுடன் இலங்கையில் இருந்து தேவநேசன் நேசையா, நோர்வேயில் இருந்து என் சண்முகரட்னம் ஆகியோரும் இன்னும் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திபில் தேர்தல் பற்றி குறிப்பாகக் கதைக்கப்படாத போதும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இலங்கையில் ஒரு கட்சியின் அவசியம் பற்றிப் பேசப்பட்டு உள்ளது. வருகின்ற தேர்தலில் ரெஜீம்சேஞ் ஒன்றைக் கொண்டு வருவதன் அவசியம் பற்றியும் சிலர் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அதே சமயம் பிரதான வேட்பாளர்கள் இருவருமே யுத்தக் குற்றவாளிகள் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகடந்த தமிழீழ அரசு சார்பானவர்களிடையேயே ஒருமித்த கருத்து நிலவவில்லை எனவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாநாடு மற்றும் இன்றைய தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசின் நிலை தொடர்பாக அறிந்துகொள்வதற்கு அதன் முக்கியஸ்தர்களில் ஒருவராக அறியப்படுபவரும் வியன்னா மாநாட்டில் கலந்துகொண்டவருமான சேரன் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வியன்னா மாநாட்டில் கலந்து கொண்டதை உறுதிப்படுத்திய அவர் தனக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனத் தெரிவித்தார். (அவர் தேசம்நெற் இணையம் தன்னைப் பற்றிய அவதூறை ஊடக வரைமுறைகளுக்கு அப்பால் மேற்கொண்டதாகவும் அதற்கு மன்னிப்புக் கேட்காதவரை தான் தேசம்நெற்றுடன் எதனையும் பகிர்ந்துகொள்ள முடியாது எனவும் மறுத்துவிட்டார்.)
ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்ற உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவைக் கண்டித்து உள்ளது. அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவை எடுப்பதற்கு முன்னதாகவே தாங்கள் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி இருந்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டு உள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30947
நாடுகடந்த தமிழீழ அரசு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு இயங்குவதால் சர்வதேச அளவில் பிளவுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் வெளி அழுத்தங்கள் காரணமாக மீண்டும் ஒரு குழுவாகச் செயற்பட முன்வந்துள்ளனர். இந்த இணைவில் ரூட் ரவியின் ஆளுமைக்கு உட்பட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவையும் (British Tamil Forum) விரைவில் இணைந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
டிசம்பர் பிற்பகுதியில் தனக்கு ஆதரவு தேடி லண்டன் வந்திருந்த எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுத்த பிரித்தானிய தமிழர் பேரவை தனது முடிவை விரைவில் மாற்றிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னால் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் பிரித்தானிய தேசிய நாளிதலான இன்டிபென்டனில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இரு பிரதான வேட்பாளர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இவர்களில் ஒருவருக்கு ஆதரவு வழங்குவது உணர்வின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் முடியாத விடயம் எனவும் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார். They (General Sarath Fonseka and President Mahinda Rajapaksa) should be brought to court to answer for their crimes and, given that, I believe it is morally and ethically impossible to throw one’s support behind either of these candidates – http://www.independent.co.uk/opinion/commentators/suren-surendiran-these-candidates-are-largely-to-blame-for-destroying-our-people-1859873.html
கனடாவில் நடராஜா முரளீதரன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உதிரிகள் மற்றும் தமிழ் படைப்பாளிகள் போன்ற மேலோட்டமான புலி ஆதரவு அமைப்புகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் புலத்தில் இவர்களால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மும்மூர்த்திகளின் முடிவை புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் நிராகரித்த போதும் அவர்கள் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான எந்த அமைப்பும் தமிழ் மக்கள் இத்தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயமாகத் தெரியவருகின்றது. தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்து விலகி இருப்பதை மேற்கு நாடுகளும் அதன் அரசசார்பற்ற நிறுவனங்களும் அங்கீகரிக்காது என்பதனாலேயே அவர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க மாட்டார்கள் என்பது உறுதியாகின்றது. இவற்றின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசுக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக்குழு, பிரித்தானிய – உலக தமிழர் பேரவைகள் அனைத்தும் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிராகச் செயற்படுவதுடன் பெரும்பாலும் விக்கிரமபாகு கருணாரட்னா , எம் கெ சிவாஜிலிங்கம் அணிக்கு – தமிழ் தேசிய அணிக்கே- வாக்களிக்கக் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.