எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு சம்பந்தரும், புலிகளின் ஆதரவாளர்களும் தமிழ் மக்களை மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கே அழைத்துச் செல்கின்றனர் போலுள்ளது. இந்தத் தேர்தலில் பங்கு பற்றுவதா? வேட்பாளரை நிறுத்துவதா? இந்த தேர்தலில் முன்னிற்கும் வேட்பாளர்களில் யாருக்கு தமிழர்களை வாக்களிக்கும்படி கேட்பது அல்லது தமிழர்களை ஆதரிக்க தூண்டுவது என்பதிலே இன்று வரையில் இவர்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கமுடியாமல் இருப்பதன் மர்மம் என்ன?
இந்த தேர்தலில் போட்டியிடும் பல்வேறுபட்ட சக்திகள் தாம் தமது தேர்தல் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போதே தாம் ஜனாதிபதியாக வரமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளபோதும், தாம் தமது அரசியலை – தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாசைகளுக்கான அரசியலை – உலகுக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் பகிரங்கப்படுத்தவே போட்டியிடுகின்றனர். ஆனால் அன்று ‘இந்த தேர்தலைகளை எமது பிரச்சார மேடைகளாகவே பயன்படுத்துகிறோம் ஆனால் எமது இலட்சியம் தனித் தமிழீழம்’ என்று முழங்கிய கூட்டமைப்பு சம்பந்தர் இன்று இந்த தேர்தலை தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான பிரச்சார மேடையாகவும் பார்க்கவில்லை, தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பு என்ன என்பதை உலகுக்கு தெரிவிக்கக்கூட இந்த தேர்தலை பயன்படுத்த முன்வரவுமில்லை. இது ஏன்?
ரிஎன்ஏ என்ன உடன்பாடுகளை யாரிடம் ஏற்படுத்தியுள்ளது என்பதையோ; சரத் / மகிந்தா எந்த வேட்பாளர் தான் ஆட்சிக்கு வந்தபின்பு தமிழரின் அரசியல் உரிமைகளுக்கு என்ன வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள் என்பதையோ; அல்லது எந்த ஒரு உடன்பாடோ அல்லது வாக்குறுதிகளோ யாரிடமிருந்தும் பெறவில்லை என்பதையோ ரிஎன்ஏ ஏன் பகிரங்கமாக மக்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது?
ரிஎன்ஏ அல்லது மற்றைய தேர்தல் வேட்பாளர்கள் மக்களுக்கான அரசியல் தேர்வையும் ஒப்பந்தங்களையும் இரகசியமாக ஏற்படுத்துவது மக்களுக்கு ஏற்புடையதல்ல. கடந்த காலங்களில் இப்படியான இரகசிய ஒப்பந்தங்களால் ஏற்பட்ட பல விளைவுகளுக்கு புலிகளே எம்முன்னால் உள்ள நல்ல உதாரணங்களாகும். இதில் முக்கியமானது பிரேமதாஸா இரகசிய ஓப்பந்தமும் ஆயத உதவியும். இதன் பின்னணியில் புலிகள் இந்தியாவின் எதிரிகளாகினர்.
எதிர்வரும் தேர்தலில் ரிஎன்ஏ யின் முடிவு என்ன? ரிஎன்ஏயும் அதன் தலைவர் சம்பந்தனும் எப்போது தமது முடிவுகளை தமிழ் மக்களுக்கு தெரிவிப்பார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரை நிறுத்தும் காலம் காலாவதியாகிவிட்டது. ஆனால் இன்னும் ரிஎன்ஏ தனது நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் முடிவு எடுக்கவில்லை. இதற்கிடையில் ரிஎன்ஏ உறுப்பினர் சிவாஜிலிங்கம் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் நிற்பதாக முடிவு எடுத்துள்ளார். ரிஎன்ஏயின் அங்கத்துவ கட்சி தமிழர் காங்கிரஸ் தனியாக, இரண்டு முக்கிய தேர்தல் வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவு எடுத்துள்ளனர். இப்படியாக ரிஎன்ஏயின் உறுப்பினர்கள் பிரிந்து நின்று செயற்படுவதன் காரணம் என்ன? ரிஎன்ஏ சம்பந்தர் காரணங்களை தமிழ் மக்கள் முன் வைப்பார்களா? ஏன் மக்களுடன் பேசுகிறார்கள் இல்லை?
சம்பந்தரின் குழம்பிய நிலையே ரிஎன்ஏயின் இழுபறி நிலை எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர். மக்களுக்காக எடுக்கும் முடிவுகளை மக்கள் முன் வைப்பதிலும் அதில் உள்ள குறை நிறைகளை ஆராய்வதிலும் எந்த கட்சியும் எந்த மக்கள் அமைப்பும் ஏன் ஒளிவு மறைவாக செயற்ப்பட வேண்டும். ஒளிவு மறைவாக செயற்ப்படுவதும் இழுத்தடிப்பதும் தாம் ஏற்கனவே தெரிவு செய்த வேட்பாளரை கடைசி நேரத்தில் தெரிவித்து அவருக்கு வாக்களிக்கும்படி கேட்கலாம் என்ற காலம் வாங்கும் தந்திரமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
இன்று ரிஎன்ஏயில் எந்தவிதமான கூட்டு முடிவும் எடுக்கப்படுவதில்லை. சம்பந்தர் சுரேஸ் மாவை போன்றோரே ஏகபோகமாக தாமே முடிவு எடுத்துவிட்டு அதை ரிஎன்ஏ யின் முடிவாக திணிப்பதாக பல ரிஎன்ஏ உறுப்பினர்கள் சொல்லும் நிலையில், சம்பந்தர் எல்லா முடிவுகளுக்கும் நான் யோசிக்கிறேன், பொறுத்திருப்போம் என்ற இழுத்தடிப்பின் பின்னணியாக இருப்பது என்ன என்பது இன்றுவரையில் புதிராகவே உள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு குழுக்களின் வற்புறுத்தலாக இருக்குமென? என பலர் சந்தேகிக்கின்றனர்.
இதன் பின்னணியிலேயே சம்பந்தர் வெளிநாடுகளுக்கு அழைக்கப்பட்டார் என்றும் இதில் சுவிஸ் மாநாடு தோல்வியில் முடிவடைந்ததால் அடுத்து வியன்னாவில் சம்பந்தருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர் (இந்த மகாநாடுகள் இரகசியமாகவே ஒழுங்கு செய்யப்பட்டது.)
இந்த மாநாட்டில் ரிஎன்ஏ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதில்லை என்றும் ஏதோ ஒரு வேட்பாளரை ஆதரிப்பதற்கானது இரகசிய உடன்பாடு எட்டியுள்தாகவும் இதையே சம்பந்தர் ரிஎன்ஏயின் முடிவாக தெரிவிக்க வெளிநாட்டிலுள்ள புலி ஆதரவு அமைப்புக்களும் புலிகளும் சம்பந்தருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர் என்றும்; அது சரத்தையே ஆதரிப்பது என்றும்; இதனாலேயே மகிந்தாவை வீழ்த்தலாம் என்ற கருத்து ரிஎன்ஏக்கு வெளியே எடுக்கப்பட்டுள்ளதாயும் இந்த உடன்பாட்டுக்கு லண்டனுக்கு விஜயம் மெற்கொண்ட ஜேவிபி யுஎன்பி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்ததாகவும் பேசப்படுகிறது. ஆனால் இந்த முடிவை எப்படி ரிஎன்ஏயின் முடிவாக திணிப்பது என்பதே சம்பந்தரின் குழம்பிய நிலையென பலரும் சந்தேகிக்கின்றனர்.
புலிகளின் ஆதரவாளர்களும் அமைப்புகளும் இன்னும் தமிழ் போராட்டங்களை புலிகளின் பழிக்குப் பழிவாங்கும் அரசியல் போலவே பார்க்கிறார்கள். அதன் எதிரொலியே சம்பந்தரின் ‘பார்ப்போம்’ பாட்டு ஆகும் என பலரும் சந்தேகிக்கின்றனர்.
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவு அமைப்புகளும் ஏற்பாட்டாளர்களும் இன்று வரையில் தாம் யார்? தமது இயக்கத்தின் நிலை என்ன? பொறுப்பு என்ன? போன்ற விமர்சனங்களை முன்வைக்காமலே இன்றும் தமது ஆதரவாளர்க்கு ‘தலைவர் உயிருடன் உள்ளார். தருணம் வரும்போது வெளிவருவார்’ என்றெல்லாம் புலுடாவிடும் இவர்கள், புலிகளுக்காக மக்களிடம் இருந்து பெறப்பட்ட பெருந்தொகை சொத்துகளுக்கு நடந்தது என்ன? என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இன்று இந்த தேர்தலை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தமக்கு ஒரு அரசியல் சாயம் பூச ஆரம்பித்துள்ளனர்.
சரத் / மகிந்தா இந்த இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களின் கடந்த 30 வருட போராட்டங்களினால் தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள், துன்பங்களை பகிர்ந்து கொண்டவர்கள் அல்லர். மாறாக இவர்களே தமிழர்களின் துன்பியல்களுக்கு பிரபாகரன் – புலிகளுக்கு அடுத்தபடியாக காரணமானவர்களாகும். இந்த இரு வேட்பாளர்களுமே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை கூட இன்று வரையில் பகிரங்கமாக தெரிவிக்காதவர்கள். இவ்விரு வேட்பாளர்களுமே தமிழர்களில் 30 ஆயிரம்பேர் வரையில் முள்ளிவாய்காலில் கொலை செய்தவர்கள். தமிழ் மக்களை பார்த்து இவர்களில் ஒருவருக்குத் தன்னும் வாக்களியுங்கள் என்று எந்த முகத்துடன் ரிஎன்ஏ அல்லது தமிழ் அரசியல்வாதிகள் கேட்க முடியும்
மரண சாசனம் கூட பெற முடியாத மக்கள் இன்று வரையில் தமது மரணித்த உறவுகளின் ஆண்டுத்திவசம் யாருக்கு எங்கே என்று அங்கலாய்த்துக் கொண்டு துன்பங்களில் இருப்பவர்களைப் பார்த்து உங்கள் உறவுகளை கொலை செய்தவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியுமா? இதை தமிழ் மக்களின் தலைவர்களால் எந்த சுயமரியாதையுடன் கேட்க முடியும்?
சர்வதேசம் இவர்கள் மீது போர்க் குற்றம் சுமத்தும் நிலையில் உள்ள சூழ்நிலையில், எந்த மக்கள் மீது போர்க்குற்றம் செய்தார்களோ அந்த மக்களை பார்த்து இந்த போர்க்குற்றவாளிக்கு வாக்களியுங்கள் என்று ரிஎன்ஏ சம்பந்தர் கேட்பாரா? எப்படி கேட்க முடியும்.
இன்று புலிகளின் பல முன்னணியாளர்கள் மக்கள் என்பதை கனவிலும் கூட நினைப்பதில்லை. புலிகள் அழிக்கப்பட்டு 6 மாதங்களில் இம் முன்னணியாளர்கள் தாம் தமது சொத்துக்கள் தமது சமூக அந்தஸ்துக்கள் என்பவற்றிலே அதிக கவனம் செலுத்துவதை அவதானிக்க முடியும்.
காலத்திற்குக் காலம் தமிழர் போராட்டங்களை சுதந்திரக் கட்சியும் யுஎன்பியும் மாறி மாறி தாம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏதோ ஒருவகையில் ஒருபடியாவது கீழே இழுத்து விழுத்தியே வந்துள்ளனர். இதன் ஒட்டுமொத்த வீழ்த்தலே மே மாத கடைசி யுத்தமும் இதை மகிந்தா கெட்டித்தனமாக தனது வெற்றியாக்கியதுமாகும்.
புலிகளின் பழிக்குப்பழி அல்லது ஆயுதக் கவர்ச்சியால்தான் தமது போராட்டப் பாதையை தவற விட்டவர்கள் என்பதை இன்றும் புலி ஆதரவாளர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ரஜீவ் காந்தி கொலையும் இதனால் புலிகளுக்கு உண்டான அழிவுமாகும்.
இவ்விரு பிரதான வேட்பாளர்களும் மீண்டும் தமிழர்க்கு எதிரான செயற்பாட்டுக்காகவே இன்று புலி ஆதவாளர்களினதும் ரிஎன்ஏ தமிழர் ஆதரவினையும் பெற்றுவிட அங்கலாய்க்கின்றனர் என்பதை ரிஎன்ஏ சம்பந்தரும் புலி ஆதரவாளர்களும் மறந்து செயற்படக் கூடாது. ரிஎன்ஏ இன்றுவரை இத்தேர்தலில் தமிழர்கள் சார்பாக தமது நிலைப்பாடு என்ன என்று எதையும் ஏன் முன்வைக்கவில்லை? ரிஎன்ஏ யினர் ஏன் தமிழர்கள் சார்பாக தமது பிரதிநிதியை நிறுத்தி தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பு என்ன என்பதை சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் தெரிவிக்கவில்லை? தெரிவிக்க முயற்ச்சி செய்யவில்லை? இதன்மூலம் சிங்கள மக்களின் மிககுறைந்த அங்கீகாரத்தையாவது பெற்றிருக்க முடியாதா? இத்தேர்தல் காலத்தில் ரிஎன்ஏ ஏன் இந்த சந்தர்ப்பத்தை தமிழரின் சுயாட்சிப் போராட்டத்திற்கான பிரச்சாரமாக பயன்படுத்தவில்லை? மாறாக ரிஎன்ஏ யும் சம்பந்தரும் சரத் ஆதரவு நிலை எடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாக ரிஎன்ஏயின் அதிருப்தி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ரிஎன்ஏ யில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் சரத் மகிந்தா இரண்டு பேரையும் ஆதரிக்கக்கூடாது என்பதில் அக்கறை காட்டுவதாகவும் அதன் காரணமாகவும் சம்பந்தர் குழம்பியுள்தாகவும் அவர்கள் எமக்கு தெரிவித்தனர். அத்துடன் ரிஎன்ஏயில் அங்கம் வகிக்கும் ரெலோவினர் ரிஎன்ஏ இரண்டு வேட்பாளர்களையம் ஆதரிக்க கூடாது என்ற கருத்துடனேயே தாம் இருப்பதாக தெரிவித்தனர்.
ரிஎன்ஏ யும் இதன் சாரதி சம்பந்தரும் வேறு வெளி அழுத்தங்களுக்கு உள்ளாகின்றார்கள் என்ற சந்தேகம் கொழும்பில் உள்ள பல ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளிடமும் உள்ளதை அறியமுடிகிறது.
இதைவிட ரிஎன்ஏயின் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் சம்பந்தர் சுரேஸ் மாவை ஆகியோர் முடிவை எடுத்துவிட்டு இம்முடிவுகளை இறுதி முடிவாக தெரிவிக்கும் இவர்களில் (இம்முறை) மாவை இந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை அகற்றி தான் இந்தியாவில் சுகயீனம் காரணமாக தங்கியிருப்பதாவும் அறியப்படுகிறது. ரிஎன்ஏ யினரில் சம்பந்தர் இந்தியாவினால் கையாளப்படுகின்றார். ஆனால் கள நிலைமைகள் கட்டுக்கடங்காமல் இருப்பதனால் ஏற்படும் குழப்பமா? எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர்.
வெளிநாடுகளில் உள்ளவர்களில் பல முன்னாள் புலி ஆதரவு அமைப்பினர் யுஎன்பியின் கயிற்றை விழுங்கியவர்களாகவே தென்படுகின்றது. இது எதிர்காலத்தில் ரிஎன்ஏ யின் புலி ஆதரவாளர்களின் துரோகமாக பார்க்கப்படாதா? பிரபாகரன் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததின் காரணமே இந்த மிதவாத தலைவர்களின் துரோகங்கள் என்றுதானே?.
இன்று உள்ள நிலைமையில் ரிஎன்ஏ யும் இதன் சாரதி சம்பந்தரும் சரத்தையோ மகிந்தாவையோ ஆதரிக்க முடியாது. இவர்கள் இந்த இருவரையும் ஆதரிக்கும்படி தமிழ் மக்களை கேட்கவும் முடியாது என்பதே சாதாரண இலங்கைத் தமிழ் மக்களின் அபிப்பிராயமாகும்.
இந்த விடயத்தில் காங்கிரஸ் கட்சியினரின் முடிவு ஏற்கக் கூடியதே. தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை இரு பிரதான வேட்பாளர்களுக்கும் வழங்காமல், தங்கள் வாக்குகளை எதிர்ப்பைத் தெரிவிக்கப் பயன்படுத்துவதே பொருத்தமானதாக அமையும் எனவும் கருத்து நிலவுகிறது. இதற்காக தமிழர்கள் தமது வாக்குகளை வேறு யாருக்கும் போடலாம் என்பதேயாகும்.
கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்குவந்த சு.க, யுஎன்பியின் ஆட்சிக் காலத்திலேயே பல திட்டமிட்ட சதிகள் தமிழருக்கு எதிராக நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஏற்படுத்தி பாரிய தமிழ் எதிர்ப்பு நடவடிக்கைகளை செய்தவர்கள் என்பதையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டு பாராளுமன்றில் புதிய யாப்பை உருவாக்கியவர்கள் என்பதையும், யுஎன்பி ஆட்சி காலத்திலேயே பல சாதாரண தமிழ்ர்க்கு எதிரான பல இராணுவ வெறியாட்டங்களை மேற்கொண்டவர்கள் என்பதையும் ரிஎன்ஏ மறந்துவிடக் கூடாது. யுஎன்பியினரால் கட்டியெழுப்பப்பட்ட தமிழர் எதிரப்பு கோபுரங்களையே மகிந்தா பயன்படுத்தி தனது வெற்றியாக்கினார் என்பதையும் ரிஎன்ஏ மறந்து விடக்கூடாது. (இதை பலதடவைகள் ரணில் தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.)
மகிந்தாவை ஆதரித்து வெற்றி மகிந்தா பெற்றால் தமிழர்க்கு கிடைப்பது என்ன? சரத் வெற்றி பெற்றால் கிடைப்பது என்ன? என்பதே எம்முன்னால் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும் யாரைப் பழிவாங்குவது என்பதல்ல!
கடந்த பல வருடங்களாக தமிழர்கள் படித்தபாடம் என்ன? ரிஎன்ஏ பெற்ற அரசியல் முதிர்ச்சி என்ன? சம்பந்தர் பெற்ற அனுபவம் தான் என்ன? தமிழர்களின் தலைவர்கள் என்ற ரிஎன்ஏ தவறான முடிவுகளால் தமிழர்களை மீண்டும் முள்ளிவாய்க்காலில் போட்டுவிடாதீர்கள்.
பழிவாங்கல்கள் அல்ல அரசியல் தீர்வே தேவை!!
தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பை அபிப்பிராயத்தை தமிழ் மக்களிடையேயான அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை நடாத்த தமிழ் அரசியல்வாதிகள் அரசை வலியுறுத்த வேண்டும்!!
பயங்கரவாதங்களையும் புலிகளின் அடக்குமுறைகளுக்குள்ளும் பட்டினிச் சாவுகளுக்குள்ளும் தமது வாழ்க்கைப் பாதையில் கவனமாக நடந்து வந்த மக்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாகவே படித்துள்ளனர். இந்தப் படிப்பினையை தமிழ் மக்கள் இந்த தேர்தலிலும் தமிழ் தலைவர்கள் என்பவர்களுக்கும் அரசுக்கும் வன்முறையாளர்க்கும் நிரூபிப்பர்.
சம்பந்தர் ரிஎன்ஏ சாணக்கியம் தமிழ் மக்களின் சாணக்கியமா? வரலாறு பதில் சொல்லும்!!