January

January

நாட்டின் பல பகுதிகளில் பூரண சூரிய கிரகணம்

n7.jpgஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணமான ‘கங்கண சூரியகிரகணம்’ நேற்று யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது. கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, அம்பாந்தோட்டை, காலி, கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்கள், பதுளை உட்பட மலையகப் பகுதிகளில் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடிந்ததென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

n7.jpgழுமையான சூரிய கிரகணம் வட்டவடிவமான ஒளிர்கீற்றுக்களால் அழகாகக் காட்சியளித்தது. நண்பகல் 12.20க்குப் பின்னர் சூரிய கிரகணம் படிப்படியாக ஏற்படத் தொடங்கியதும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மப்பும் மந்தாரமுமான நிலை காணப்பட்டது. நண்பகல் ஒரு மணியளவில் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டதோடு, வட்டவடிவமான ஒளிக்கீற்றுக்களைக் காண முடிந்தது. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் பல் வேறு சாதனங்கள் மூலம் சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர்.

பலர் கண்களுக்கு விசேட கண்ணாடிகளைப் பயன்படுத்தியதோடு வீடியோ படம் எடுத்ததைக் காணக் கூடியதாக இருந்தது. சூரிய கிரகணத்தையிட்டு கோயில்களில் விசேட பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பள்ளிவாசல்களில் நேற்று சூரிய கிரகணத் தொழுகைகளும் விசேட மார்க்கச் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. பாடசாலைகளில் மாணவர் வரவு மிகவும் குறைவாகவே இருந்தது.

இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் 1.11 மணிக்கு உச்சத்தை அடைந்தது. அந்த நேரத்தில் கன்னியாகுமரி பகுதியில் சில வினாடிகள் சூரியன் முழுமையாக மறைந்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் சூரியனை மறைத்த நிலவு மெல்ல விலக ‘ரிங் ஆப் பயர்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வு ஏற்பட்டது.

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ் கோடியிலும் கிரகணம் நன்கு தெரிந்தது. திருவனந்தபுரம், நெல்லை, நாகர்கோவில், மதுரை, தஞ்சை, நாகபட்டனம் ஆகிய பகுதிகளில் பத்து நிமிடங்கள் வரை காண முடிந்தது. சூரியனை, சந்திரன் மறைக்கும் இந்த வானியல் நிகழ்வு தமிழகத்தில் 11.05க்கு துவங்கி பிற்பகல் 3.15க்கு முடிவடைந்தது.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணமான இது வானில் நடக்கும் மிக அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம். காலை 10.44 மணிக்கு மத்திய ஆபிரிக்காவில் இருக்கும் கென்யாவில் கிரகணம் தொடங்கியது. மாலையில் சீனாவில் உள்ள மஞ்சள் கடலில் கிரகணம் முடிவடைகிறது.

இந்தியாவில் முதலில் திருவனந்தபுரத்தில் கிரகணம் தெரிய ஆரம்பித்து மதுரை போன்ற தென் மாட்டங்களிலும் கிரகணத் தினை நன்றாக காண முடிந்தது. கன்னி யாகுமரி, தனுஷ்கோடி, கடற்கரை பகுதிகளில் இந்த நிகழ்வை 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக பார்த்தனர். மாலைதீவில் சுமார் 11 நிமிடங்களுக்கு கிரகணம் தெரிந்தது. இதனால் ஆராய்ச்சியின் நிமித்தம் அங்கு விஞ்ஞானிகள் குவிந்திருந்தனர்.

முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான முஸ்தபா,சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு

ballot-muthaffa.jpgமுன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான, மயோன் முஸ்தபா, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க முன்வந்துள்ளார். இந்த ஆதரவு தொடர்பில் அவர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அறிவித்தார்.

இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சேகு இஸ்ஸதீன் நேற்று காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜனாதிபதியின் ஆலோசகராக கடமையாற்றிய நசீர்; அகமட்; ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
 

தேர்தலில் போட்டியிடும் பிக்கு வேட்பாளர் ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு

himi.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ட்டிரக்டர் சின்னதில் போட்டியிடும் ‘ஜனசெத பெரமுன’ கட்சியின் வேட்பாளர் வண. வத்தறமுல்ல சீலரத்ன தேரர் ஜனாதிபதியை ஆதரிக்க முன்வந்துள்ளார். பத்தரமுல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த ஜனாதிபதிக்கு எதிர்வரும் 26ம் திகதி நன்றிக்கடன் செலுத்த வேண்டும்.

ஜனசெதபெரமுன ஜனாதிபதிக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் மனோகணேசன், ரவூப் ஹக்கீம் போன்றோர் நாட்டை துண்டாட முனைபவர்களுடன் சில பிக்குகள் ஆதரவு வழங்குவது துரதிர்ஷ்ட வசமானதெனக் கூறினார்.

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையினரது வீரமிக்க செயற்பாடுதான் பயங்கரவாதத்தை முறியடிக்க உதவியது.

அதேநேரம் ராஜபக்ஷ சகோதரர்க ளின் அயராத உழைப்பும் பயங்கரவாதத்தை ஒழிக்க பேருதவி புரிந்துள்ளது. உள்ளூர், வெளிநாட்டுச் சக்திகள் இன்னும் நாட்டை அழிக்கவே முயன்று கொண்டிருக்கின்றன வென்றும் சீலாரெட்ன தேரர் சுட்டிக் காட்டினார்.

கங்கண சூரிய கிரகணம் இன்று யாழ்ப்பாணத்தில் பார்க்கமுடியும்

sun.jpgஇவ்வாண் டிற்கான முதலாவது கங்கண சூரிய கிரகணத்தை இன்று பார்க்கக் கூடியதாக இருக்கும். வடபகுதி மக்கள் இதனை தெளிவாக பார்க்கக் கூடியதாக இருக்குமென ஆதர் சி கிளார்க் நிலையம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1.20 மணி தொடக்கம் 1.30 மணிவரை 10 நிமிடங்களும் 09 செக்கன்கள் தோன்றவுள்ள இக்கிரகணத்தை பொது மக்கள் வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடாது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். யாழ்ப்பாணம், தலை மன்னார், அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் சூரிய கிரகணம் தெளிவாத தோன்றவுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் கிரகணத்தை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை ஆதர் சி. கிளாக் ஆய்வு நிலையம் செய்துள்ளது.

கிரகணத்தை பார்க்கக் கூடியவர்கள் வெற்றுக்கண்களால் பார்ப்பதை தவிர்க்குமாறும் பாதுகாப்பான உரிய முறையை பயன்படுத்துமாறும் விஞ்ஞானிகள் அறிவுறித்தியுள்ளனர். இந்த ஆண்டின் சூரிய கிரகணம் மத்திய ஆபிரிக்கப் பகுதியில் ஆரம்பித்து உகண்டா, கென்யா, சோமாலியா வழியாக இந்து சமுத்திரப் பகுதியின் ஊடாக பயணிக்கவுள்ளது.

மாலைதீவு, தென் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், சீனா ஆகிய நாடுகளிலும் தென்படும் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கையில் பூரண சூரிய கிரகணம் 20-06.1955 அதாவது 55 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படவுள்ளது. இதேவேளை மேல்மாகாணம் போன்ற பிரதேசங்களில் தென்பட வாய்ப்பே இல்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நேற்று முடிவு

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் கைதிகளில் பெரும்பாலானவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டதைக் கைவிட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் டி. ஆர். டி. சில்வா தெரிவித்தார். மெகசின் சிறைச்சாலையில் உள்ள சுமார் 74 கைதிகள் மாத்திரம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களும் தமது போராட்டத்தைக் கைவிடத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மேற்படி கைதிகளில் உரிய சாட்சியம் எதுவுமின்றி உள்ள சுமார் 600 பேர் அடுத்த வாரம் விடுவிக்கப்படுவர் என சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளார். ஆனால், சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் திடீரென இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார். அவர்களை விடுதலை செய்யவோ வழக்குத் தொடரவோ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதி நீதி, மறுசீரமைப்பு அமைச்சர் வி. புத்திரசிகாமணி; நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தினூடாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கைதிகள் திடீரென உண்ணாவிரதம் நடத்தியதால் அந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

சந்தேகத்தின் பேரில் கைதான ஒரு பகுதியினர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் செயற்பாட்டை குழப்பாதிருந்தால் விரைவில் தமிழ்க் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுவிடும் என்றும் கூறினார்.

தங்களை விடுதலை செய்யவோ தங்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பு மெகசின், சீ. ஆர். பி., வெலிக்கடை, யாழ்ப்பாணம், அநுராதபுரம், கண்டி, மட்டக்களப்பு அடங்கலாக நாட்டின் பல்வேறு சிறைகளில் உள்ள சுமார் 577 தமிழ்க் கைதிகள் கடந்த 5ஆந் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.  இவர்களுடன் தொடர்ச்சியாக நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார். நாடுபூராவும் 750 தமிழ்க் கைதிகள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 670 பேர் சந்தேகத்தின் பேரில் கைதானவர்களாகும். இவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்தவோ விடுவிக்கவோ சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, ஒரு சில அரசியல் கட்சிகளின் தூண்டுதல்களுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதில் எதுவித பயனும் ஏற்படாது எனவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

திஸநாயகம் விடுதலை செய்யப்பட்டதற்கு ஊடகவியலாளர் பாதுகாப்பு சமூகம் வரவேற்பு

tissanayagam.jpgசிறையி லிருந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் திஸநாயகம் பிணையில் விடுதலை செய்யப்பட்டதற்கு ஊடகவியலாளர் பாதுகாப்பு சமூகம் வரவேற்றுள்ளது.எனினும் அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்பது உட்பட கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளமையை இட்டு தாங்கள் வருத்தமடைவதாகவும் பாதுகாப்பு சமூகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில் திஸநாயகம் விடுவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், விசாரணையின்றி தேங்கிக்கிடக்கின்ற இதுபோன்ற ஏனைய வழக்குகளையும் விசாரிக்க உத்தரவிடுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அந்த அமைப்பு கோரியுள்ளது.

கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட “சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் வழக்கு விசாரணை இன்னும் கிடப்பில் கிடக்கிறது. ஒரு வருட காலமாகியும் இதுவரை எவ்விதமான முன்னேற்றமும் அந்த வழக்கில் காணப்படவில்லை. எனவே இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் கண்காணிக்க வேண்டுமென்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

திருமணத்துக்குப் பின் டென்னிஸிலிருந்து விலகல்: சானியா

sania-mirza.jpgதிருமணத் துக்குப் பின் டென்னிஸிலிருந்து விலகவிருப்பதாக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

சானியாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது இளவயது நண்பரான சோஹப் மிர்சாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனினும் திருமணம் எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், திருமணத்துக்குப் பின் டென்னிஸ் விளையாடும் எண்ணமில்லை என சானியா தெரிவித்தார். எனினும் திருமணத்துக்கு சிறிது காலம் ஆகலாம் என்றார் அவர். விளையாடுவதா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க சானியாவுக்கு முழு சுதந்திரம் உண்டு என அவரை மணக்கவிருக்கும் சோரப் முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாத முற்பகுதியில் முதற்கட்டமாக 99 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம்

நாடு பூராவும் உள்ள பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 615 பேரைப் புதிதாக நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முதற் கட்டமாக அடுத்த மாத முதற்பகுதியில் 99 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்க உள்ளதாகக் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் மொஹம்மட் தம்பி தெரிவித்தார்.

இவர்களுக்கான கடிதங்கள் கல்வி வலயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு நேர்முகப் பரீட்சையில் தெரிவான ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு இரண்டாம் கட்டத்தின் போது நியமனம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங் களுக்கு ஏற்ப இவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், சிங்களமொழி மூலம் 11 பேருக்கான வெற்றிடம் காணப்படுவதாகக் கூறினார். ஆனால் இந்த வெற்றிடங்களை நிரப்பத் தகுதியானவர்கள் இல்லை எனவும் அறியவருகிறது. மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்காக 194 விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர். அதிலே முதற்கட்டமாக 99 பேர் தெரிவானதோடு ஏனையவர்கள் அடுத்த கட்டத்தின் போது மெளலவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

நேரடி அனுபவம்: மீண்டும் ஒரு தரம் தாயகத்தில்… : வாசுதேவன்

Jaffna_to_Colombo_Bus_Servicesஎட்டு வருடங்களிற்கு பின் இந்த நத்தார் புதுவருட விடுமுறையில் மீண்டும் தாயகம் சென்று வர ஒரு வாய்ப்பு கிட்டியது. புலம்பெயர் ஊடகங்கள் பல குறிப்பாக தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் இலங்கையில் இன்னும் போர்  முடியவில்லை! மக்கள் காணாமால் போகிறார்கள்! இராணுவம் ஆட்களை கடத்துகிறது. கட்டுநாயக்காவில் வெளிநாட்டவர்கள் மணிக்கணக்கில் விசாரிக்கப்படுகிறார்கள்! கொழும்பில் தமிழ் மக்கள் பயத்துடன் வாழ்கிறார்கள்! இதுபோல் பல மிரட்டல்கள் என் மனதில் பயங்கரமாக ஓடி விளையாடியது! போனால் உயிருடன் திரும்பி வருவேனா? கடத்தப்படுவேனா? காணாமல் போவேனா? என்ற அச்சசத்துடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கினேன். வானில் குடும்பத்துடன் ஏறி வெளியில் வருகையில் ஒரு சோதனைச்சாவடி. அதில் எமது பாஸ்போட்டுகளை பார்த்தது தான்! இலங்கை மீண்டும் தன் நிலைக்கு திரும்புகிறது என்பதை உணர முடிந்தது. தற்கொலை போராளிகள் தாக்குவார்கள் என்ற அச்சமின்றிய இராணுவ மற்றும் முப்படையினரும் மிகவும் மதிப்பாக அனைவரையும் நடாத்துவதை காண முடிந்தது! யாழ் குடாவில் இராணுவ பிரசன்னம் இருந்தாலும் அங்கு வீதி தடைகள் அகற்றப்பட்டு மக்கள் சுதந்திரமாக திரிய முடியும். ஆனால் கொழும்பில் சில இடங்களில் வீதி சோதனை சாவடிகள் இன்னமும் இயங்குகிறது!

இதை புரியாத சில புலம்பெயர் ஊடகங்கள் யாழ் குடா மக்கள் இன்னமும் திறந்தவெளி சிறைச்சாலையில் என்ற கருத்துப்பட எழுதுவது புலம்பெயர் மக்களை இன்னும் முட்டாள்களாக வைத்திருப்பதற்கே என்பதை என்னால் உணர முடிந்தது! இன்னுமொரு ஊடகமோ வன்னி முகாம்கள் இன்னமும் வதை முகாம்கள் என்ற தலைப்பில் செய்திகளை வெளியிடுகிறது. வன்னி முகாம் மக்கள் இன்று சுதந்திரமாக நடமாடுவது இவர்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா? முகாமில் வதியும் மக்கள் தமது தேவைக்கு அதிகமான கொடுப்பனவு பொருட்களை வெளிப்படையாக வவுனியாவில் வைத்து விற்கிறார்கள். வதை முகாம்களில் அப்படிச் செய்ய முடியுமா? வன்னி முகாமில் தற்போது எண்பதினாயிரம் மக்களே இருப்பதாக அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். அவர்களில் பலர் தற்போதைக்கு மீளக் குடியேறும் நோக்கத்தில் இல்லை என்பதே உண்மை. இதனை தேசம்நெற்றில் சில மாதங்களுக்கு முன்னரேயே முகாம் மக்கள் தெரிவித்து இருந்தனர். அவர்கள் தங்கள் முன்னைய வாழ்விடங்கள் முற்றாக கண்ணி வெடியகற்றப்படுவதுடன் தங்கள் தொழில் வாய்ப்பிற்கான சகல ஏற்பாடுகளையும் செய்த பின்னரே மீளக்குடியேற விரும்புகின்றனர்.

எனது முன்னைய கட்டுரை ஒன்றில் கிளிநொச்சி தரை மட்டமாகியது என்ற கருத்துபட சில வரிகளை எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக பலர் பின்னோட்டத்தில் என்னை கடித்து குதறியும் இருந்தார்கள். உண்மை தான்! கிளிநொச்சியில் பல கட்டடங்கள் இன்னும் தரை மட்டமாகவில்லை! ஆனால் கட்டடங்களில் கூரைகளையோ கதவுகள் யன்னல்களையோ காணவில்லை. இராணுவம் வர முன்னரே மக்களும் புலிகளும் இவற்றை தம்முடன் எடுத்து சென்று விட்டனர். விமான தாக்குதலில் சில கட்டங்கள் சேதமாகியிருக்கிறது. இன்று புலம்பெயர் நாடுகளில் இருந்து ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதும் பலர் தாம்  கேள்விப்படுபவைகளும் தாயக ஊடகங்களில் வருவதை மட்டும் கருத்தில் எடுத்து தமது கருத்தை அதற்குள் திணித்து ஒரு கட்டுரையை வெளியிடுவார்கள். அதை பார்க்கும் புலம்பெயர் வாசகர்கள் தமது பாணிக்கு கற்பனை பண்ணி ஒரு தவறான நிலைப்பாட்டில் பின்னோட்டம் விடுவார்கள். குறிப்பாக ஊடகங்களின் தற்போதைய நிலைமை இது தான்! இதற்கு நானும் விதிவிலக்கல்ல! கிளிநொச்சி கூரை விடயத்தை நான் ஆராயத் தவறிவிட்டேன். ஆக மொத்தத்தில் இரு தரப்புமே யுத்ததில் அழிவுகளை தவிர்க்க முன்வரவில்லை என்பதே உண்மை.

மக்களின் மீள் குடியேற்றங்கள் அரசு கூறுவது போல் சுமுகமாக இல்லை என்பதில் உண்மைகள் இருந்தாலும் இந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவி செய்யும் அனைத்து வசததிகளையும் கொண்ட புலம்பெயர் மக்கள் அந்த மக்களிற்கு ஒரு குண்டுமணி கூட வழங்க தயாராக இல்லை! ”புலிகளிற்கு ஆயுதம் வாங்கி அள்ளிக்கொடுத்த இந்த வள்ளல்கள் இலங்கை பற்றியோ இலங்கை அரசியல் பற்றியோ கதைப்பதற்கே அருகதை அற்றவர்கள்.” இதை நான் கூறவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தம் வாயால் கூறுகிறார்கள். மீள் குடியேறும் மக்கள் கூரைகள் அற்ற வீடுகளிலும் தற்காலிக முகாம்களிலும் அல்லல் படுகிறார்கள். புலிகளால் கண்மூடி வன்னியெங்கும் விதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் தினமும் அகற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வன்னியிலிருந்து பின் வாங்கிய புலிகள் தாறுமாறாக கண்ணி வெடிகள் விதைத்ததை புலம்பெயர் நாடுகளில் இருந்தவர்களுக்கு தெரியாமால் போனாலும் இவர்கள் வாங்கி கொடுத்த இந்த கண்ணி வெடிகளே மீள் குடியேற்றத்திற்கு மிகுந்த தடையாக உள்ளது.

அரசு மீள்குடியேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்பது உண்மை! ஆனால் புலம்பெயர் மக்கள் அந்த கடமையை செய்ய அனைத்து வசதிகளும் கொண்டுள்ளார்கள். ஆனால் செய்வார்களா? இது தான் வன்னி மக்களின் அங்கலாய்ப்பும்! வன்னி மக்கள் புலம்பெயர் மக்களிடம் இருந்து கேட்பது நாடு கடந்த தமிழீழம் அல்ல! குறைந்த பட்சம் பானை சட்டி அல்லது அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்ல உதவும் ஒரு சிறு தொகையே! அவர்கள் பிச்சை கேட்கவில்லை. நாம் வாங்கி கொடுத்த அயுதங்களினால் அழிக்கப்பட்ட அவர்களின் வீடுகளையும் அவர்களின் தொழிலை கொண்டு செல்ல ஒரு சிறு தொகையையுமே அவர்கள் கேட்கிறார்கள். எம்மால் நடாத்தப்பட்ட யுத்தத்தில் இழந்தவற்றையே மீளக் கேட்கிறார்கள். இந்த மக்களை பொருளதார ரீதியாக உயர்த்துவதே புலம்பெயர் மக்கள் செய்ய கூடிய பேருதவியாக இருக்கும்.

வட்டுக்கோட்டை தீர்மானம் இந்த மக்களின் தலைவிதியை மாற்றப்போவதில்லை! வன்னி மக்களிற்கு வட்டுக்கோட்டை பிரகடணம் மரண சாசனம்! யாழ் மக்களிற்கு வட்டுக்கோட்டை தீர்மானம் வடிவேலு காமடி! தென் பகுதி தமிழர்களுக்கு வட்டுக்கோட்டையும் நாடு கடந்த தமிழீழமும் கவுண்டன் செந்தில் கலாட்டா!

யுத்ததின் பின் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் உணரும் ஒரு விடயம் இலங்கை என்ற நாட்டில் மூவினங்களும் ஒன்றாக வாழ முடியும் என்பதே! இலங்கையில் முஸ்லீம் மக்களின் வாழ்வியலை பார்த்து பல பாடங்களை தமிழர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர்கள் கற்க வேண்டும் என்ற கருத்து இன்று அந்த மக்களிடம் மேலோங்கியுள்ளது.

இலங்கை என்ற நாடு தற்போது புதிய ஒரு அத்தியாயதிற்குள் நுழைந்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ், முஸ்லீம்கள் தமது கடந்த கால காழ்ப்புணர்வுகளை மறந்து புதிய காலத்திற்குள் கால் பதிப்பதை பார்க்க முடிகிறது! மார்கழி 31ம் திகதி இரவு 9 மணிக்கு பெற்றா மெயின் வீதி கடைகளின் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் எந்த வித பாகுபாடுமின்றி சகஜமாக தமது புதுவருடப் பொருட்களை முண்டியடித்து வாங்குவதை பார்த்த போது நான் மீண்டும் 1983 முந்தைய இலங்கையில் இருக்கும் ஒரு உணர்வை பெறக் கூடியதாக இருந்தது.

யாழ் குடாவில் இராணுவத்தின் பிரசன்னம் காணப்பட்டாலும் சோதனைச் சாவடிகள் பெருமளவில் குறைந்துள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாட அனைத்து வசதிகளும் உள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்கள் மெதுவாக சுருங்கிக்கொண்டு வருவதை அவதானிக்க முடிந்தது. ஏ9 மீள திறந்த பின் அனைத்துப் பொருட்களும் மிக இலகுவாக பெறகூடியதாக இருக்கிறது. ஆனால் இலங்கை முழுவதும் பண வீக்கத்தின் பாதிப்பை நன்கே உணர முடிந்தது. இருப்பினும் யாழ் நகரில் பல பொருட்கள் கொழும்பு விலையை விட குறைவாகவே உள்ளது. வெளிநாட்டு பணத்தில் வாழும் மக்களை தவிர ஏனையவர்கள் தமது அன்றாட வாழ்விற்கு மிகவும் அவதியுறுகின்றனர். மக்கள் இதைப்பற்றியே அதிகமாக குறைப்பட்டனர்.

என்னுடன் உரையாடிய தமிழ் சிங்கள் முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒரு கருத்தில் ஒன்று பட்டார்கள். இலங்கை என்ற தேசத்தை அனைவரும் கட்டியெளுப்ப இது ஒரு அரிய சந்தர்ப்பம். இலங்கை மக்கள் தமக்குள் அடிபடுவதை நிறுத்தி நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு உழைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் இதைப் புரியாத புலம்பெயர் மக்கள் நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை என்ற பிரிவினை கோசங்களை வைப்பதை மீண்டும் பிரிவினையை தூண்டும் ஒரு ஆபத்தான சமிக்சையாகவே பார்க்கிறார்கள். தம்மை மீண்டும் பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடம் இருப்பதை உணர முடிந்தது.

மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாண ரீதியல் பரவலாக்கம் செய்வதுதான் ஒரே வழி என்பதை சிங்கள மக்களும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். யுத்த வெற்றியை சிங்கள மக்கள் கொண்டாடினாலும் தமிழ் மக்களின் மீது ஒரு பரிதாப உணர்வு வந்திருப்பதையும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் சிறுபான்மை இனத்தவர்கள் அனைவரும் இந்த நாட்டில் சரி சமமாக நடத்தப்படவில்லை. மீளவும் ஒரு யுத்தம் மீண்டும் வராது தடுக்க வேண்டியது சிங்கள் தலைமைகளின் தற்போதைய கடமை என்ற கருத்தை பல சிங்கள நண்பர்களிடம் காண முடிந்தது. சிங்கள மக்கள் சுயாதீனமாக தமிழ் பகுதிகளில் குடியேறுவதை  தமிழர்கள் எதிர்க்கக் கூடாது என்ற கூறிய சிங்கள நண்பர் இதனை அரசு திட்டமிட்டு செய்வதை கண்டிக்கவும் தவறவில்லை. ஒரு தமிழனோ முஸ்லீமோ நாட்டின் எந்த பகுதியிலும் குடியேற உரிமையுள்ளது. அதே உரிமை சிங்கள் மக்களிற்கும் உள்ளது என்பதை தமிழர்கள் மதிக்க வேண்டும் என்ற அவரின் கூற்று எனக்கு நியாயமாகவே இருந்தது.

புதுவருட தினம் தொடர்ந்த பட்டாசு வான வெடியுடன் பிறந்த போது தமிழ் பேசும் கிறீஸ்தவர்கள் புத்தாண்டு பிரார்தனைகளை முடித்து விட்டு எந்தவித பயமுமின்றி அதிகாலை 1 மணிக்கு வீடு சென்றார்கள். இந்த நிலை தேர்தலுக்கு பின்னும் நீடிக்குமா என்ற சந்தேகம் தமிழர்கள் மனதில் இல்லாமல் இல்லை. நான் தாயகத்தில் தங்கி நின்ற காலப்பகுதியல் இரண்டு தமிழர்கள் கொழும்பில் கடத்தப்பட்டதாக ஒரு செய்தி வந்தது. ஆனால் பின்னர் அதைப் பற்றிய செய்திகள் வரவில்லை.

ஆனால் கொழும்பில் தற்போது தேர்தல் வன்முறைகள் ஆரம்பமாகியுள்ளது. ஆளும் கட்சி பழிவாங்கலாக பலரை கைது செய்கின்றார்கள். கடத்துகிறார்கள். மருதானையில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரரான கித்ஜஸிரி ராஜபக்ஷ கடத்தப்பட்ட போது அந்த பகுதி மக்கள் இன பேதமின்றி தெருவில் இறங்கி போராடியதை காண முடிந்தது. இந்த போராட்டத்தின் விளைவோ என்னவோ முகமூடி அணிந்தவர்களால் கடத்தப்பட்ட அந்த அமைப்பாளர் பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நபர் ஏற்கனவே பொலீசாரால் சமூக விரோத செயற்பாடுகளிற்காக எச்சரிக்கப்பட்டவர். கடந்த மே மாதத்திற்கு பின்னர் பாதாள உலக அமைப்பை சேர்ந்த பலர் இவ்வாறு முகமூடி அணிந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டு பின்னர் தெருக்களில் பிணமாக மீட்கப்பட்ட செய்திகளை பலர் இந்த நேரத்ததில் நினைவு கூர்ந்தனர். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதனால் இலங்கையில் ஜனநாயகம் தளைக்க மக்கள் அனைவரும் இன மத பாகுபாடின்றி போராட வேண்டிய தேவை இன்று மிகவும் அவசியமாக உள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு புதிய மாற்றம் ஒன்றை  சகல இனத்தவர்களும் விரும்பினாலும் அதை நிறைவேற்றும் ஒருவர் இந்த தேர்தலில் நிற்கவில்லை என்ற கருத்தே பெரும்பான்மையாக உள்ளது. வடக்கில் உள்ள மக்கள் இந்த தேர்தல் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த தேர்தலை பாவித்து குறைந்தபட்சம் சில சலுகைகளையாவது தமிழ் கட்சிகள் தமக்கு பெற்று தர வேண்டும் என்ற கருத்தில் தமிழ் மக்கள் பலர் உடன்பட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாருக்கு ஆதரவளிப்பது என்ற முடிவுக்கு வர இழுத்தடித்தை குறையாக கூறிய மக்கள் தேர்தல் காலங்களில் என்னென்ன சலுகைகளை பெற முடியேமோ அவற்றை பெற வேண்டியதுதான் ஒரேவழி என்று கூறினர். முஸ்லீம்களை பொறுத்தவரை அவர்களின் வாக்குகள் பிரியும் நிலைப்பாடே உள்ளது. ஜேவீபியின் பிரசன்னம் சரத் பொன்சேகாவிற்கு போகும் முஸ்லீம் வாக்குகளை மகிந்த ராஜபக்சவிற்கு திருப்பியுள்ளது. மேலும் ஒரு இராணுவ தளபதியை நாட்டின் ஜனாதிபதியாக்குவது ஆபத்தானது என்ற கருத்தில் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அச்சம் தெரிவிப்பதும் மகிந்த மீதான ஆதரவை கூட்டியுள்ளது.

திரும்பும் பக்கமெல்லாம் கண்ணில்படும் மகிந்த ராஜபக்ஷவின் படங்கள் விளம்பரங்கள் சிலவேளை எதிர்மறையான விளம்பரமாக மாறலாம். இந்தியாவில் நான் பார்த்த கட்அவுட்டுகளை மிஞ்சும் அரசின் பிரச்சாரங்கள் நேர்மறையான தேர்தல் முடிவை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

யார் குத்தி என்றாலும் அரிசி வரட்டும் மக்கள் கஞ்சியாவது குடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம். இன்று பெரும்பான்மையான சிங்கள தமிழ் முஸ்லீம் மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஒன்றாகவே எனக்குப்படுகிறது. ஆனால் இந்தத் தேர்தல் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவரப் போவதில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வைக்கொண்டு வருவதற்கு இன மத பேதங்களுக்கு அப்பால் மக்கள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே தீர்வு கிட்டும்.

அந்த வகையில் தெருவில் காவல் கடைமையில் நின்ற ஒரு இராணுவ சிப்பாயின் “இந்த கிழட்டு அரசியல்வாதிகளை வீட்டுக்கனுப்பி விட்டு இளையவர்கள் பாராளுமன்றம் சென்று இந்த நாட்டை வளம்படுத்த வேண்டும்” என்ற அங்கலாய்ப்பு நியாயமானதாகவே இருந்தது.

இலங்கை சென்ற மற்றவர்களின் அனுபவம்:

புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்

புலம்பெயர்ந்த தமிழர் குழு – இலங்கை அரசு – கொழும்பு மாநாடு : ரி கொன்ஸ்ரன்ரைன்

தமிழர்கள் சமாதானத்தைப் பெற மேயர் ரொபின் வேல்ஸ் பொங்கல் வாழ்த்து!!!

Mayor_and_Cllr_Pongal_14Jan10”இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு மிகுந்த நெருக்கடியான ஆண்டு. எதிர்வரும் ஆண்டுகளில் அவர்கள் சமாதானத்தைப் பெறவேண்டும்” என நியூஹாம் மேயர் ரொபின் வேல்ஸ் இன்று தெரிவித்தார். லண்டனில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரே மேயரான ரொபின் வேல்ஸ் இன்று (டிசம்பர் 14) நியூஹாமில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். இன்றைய நிகழ்வில் நியூஹாம் பிரதான வீதியான ஹைஸ்ரீற் நோத்தில் உள்ள அலங்கார விளக்குகளை ஏற்றி வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமாக பல்வேறு இனத்தவர்கள் இணைந்து வாழ்கின்ற  நகரமாக நியூஹாம் உள்ளது எனக் குறிப்பிட்ட மேயர் இங்குள்ள 86 வீதமான மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதாகக் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் நியூஹாமிற்கு வழங்கியுள்ள பங்களிப்பையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த மேயர் இன்றைய பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரான கவுன்சிலர் போல் சத்தியநேசன் உரையாற்றுகையில் தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு கணிசமான அளவில் வர ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகின்றது என்றும் நியூஹாம் தமிழ் மக்களுக்கு இருப்பிடம் வழங்கவில்லை அவர்களுக்கு உன்னதமான வீடாகி உள்ளது என்று தெரிவித்தார். தமிழ் மக்கள் இதுவரை அனுபவித்த துயரங்கள் நீங்கி எதிர்காலத்தில் அவர்கள் சமாதானத்துடன் வாழ்வதற்கு வழியேற்படும் என அவர் தெரிவித்தார்.

Mayor_Pongal_14Jan1075 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வின் இறுதியில் பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது. ஐரோப்பாவிலேயே பல்லினங்கள் நெருக்கமாகவும் பெரும்பான்மையாகவும் வாழும் நகரமாக நியூஹாம் அமைந்துள்ளது. வீதியால் பயணித்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பொங்கல் சிற்றுண்டிகளைச் சுவைத்து மகிழ்ந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்ற போதும் தனிப்பட்ட கோபதாபங்களுடன் சில விசமத்தனமான பிரச்சாரங்களும் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் மீறியும் இந்நிகழ்வு இடம்பெற்று வருவது இதன் சிறப்பம்சம். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டு தனக்கு 5 தொலைபேசி அழைப்புகளிற்கு மேல்வந்ததாக கலந்துகொண்ட ஒரு வர்த்தகர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்  ”நாங்கள் எல்லாவற்றிற்கும் எதிராகவே செயற்பட்டு பழகிவிட்டோம். இப்போது பொங்கலுக்கும் எதிராக நோட்டிஸ் விடுகிற அளவுக்கு வந்துவிட்டோம்” எனச் சலிப்புடன் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு எதிராக விடப்பட்ட துண்டுப் பிரசுரம்:

நியூஹாம் வாழ் தமிழ் உறவுகளே!
உங்களுக்குத் தெரிந்தவை தான்
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய
மரண ஓலங்கள்
உயிர்ப்பலிகள்
கற்பழிப்புகள்
பொருளாதாரத் தகர்ப்புகள்
இன்றும் முட்கம்பித் தடுப்பு முகாமில்
ஏதும் இன்றி நிற்கதியாகத்
தவிக்கும் தமிழ் உறவுகள்…..

தொப்புள் கொடி உறவுகளே!
இவைகளை நாம் எளிதில் மறந்துவிட முடியுமா?
இன்றைய காலகட்டத்தில் இனம்சார்ந்த குதூகல வைபவங்கள் எங்களுக்கு வெறுப்பெற்றவில்லையா?

இந்த நிலையில் தமிழ் தேசியத்திற்கு தொடர்ச்சியாகத் துரோகம் இழைப்பவர்களால் 14.01.2010 இல் பொங்கல் விழா என்ற பெயரால்  நடைபெறவுள்ள கொண்டாட்டம்  எங்களுக்கு அவசியம் தானா?

இனமான உணர்வுடன்  நிதானமாகச் சிந்திக்கும் ஒவ்வொரு தமிழரும் இந்தக் கொண்டாட்டத்தை பகிஸ்கரிப்பார்கள் என்பது நிச்சயம்.

சிந்தியுங்கள் அன்பான
நியூஹாம் தமிழ் உறவுகளே!

இதற்குப் பின்னாலுள்ள நபர்கள் தங்கள் சுய விளம்பரத்திற்காக தமிழ் மக்களின் அவலங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம்சாட்டிய கவுன்சிலர் போல் சத்தியநேசன் இவ்வாறான சமூகப் பீடைகள் தவிர்க்க முடியாமல் ஒவ்வொரு சமூகத்திலும் காணப்படுவதாகவும் இவர்களை உதறிக்கொண்டு சமூகம் தன் பயணத்தைத் தொடரும் என்றும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இன்றைய பொங்கல் நிகழ்வில் நியூஹாம் வர்த்தகர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சமய ஸ்தாபனங்கின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

._._._._._.

ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன

Paul_Sathyanesan_Cllrதமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற நகரமான ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள், வியாழக்கிழமை 14ம் திகதி மாலை 4 மணிக்கு ஏற்றப்பட உள்ளன. மத வேறுபாடுகளுக்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் ஒன்றாகக் கொண்டாடும் விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் அமைந்துள்ளது. ஈஸ்றஹாம் பொங்கல் விழாவின் போது ஈஸ்ற்ஹாம் நகரபிதா தெருவிளக்குகளை ஏற்றி வைப்பார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஈஸ்ற்ஹாம் நகரசபையின் அணுசரனையுடன் கவுன்சிலர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றார். வழமை போல் இம்முறையும் இந்து கிறிஸ்தவ இஸ்லாம் மதப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில கலந்து சிறப்பிப்பார்கள் என கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி ஆலயம் முன்பாக உள்ள தெரு வெளியில் மக்கள் ஒன்றாகக் கூடி மேளவாத்தியத்துடன் நகரபிதாவால் தெருவிளக்குகள் ஏற்றி வைக்கப்படும். அனைத் தொடர்ந்து நகரபிதாவினதும் மற்றும் சிலரினதும் சிற்றுரைகளும் இடம்பெற்று பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்படும்.

இவ்வாண்டும் வழமைபோன்று இலங்கையிலும் உலகிலும் சமாதானத்தை வேண்டி இப்பொங்கல் விளக்குகளை ஏற்றி வைப்போம் என ஏற்பாட்டாளர் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தெரிவித்தார்.

சென்ற ஆண்டில் நாட்டில் நிலவிய யுத்தநிலையைக் காரணம் காட்டிச் சிலர் இந்நிகழ்வை இடைநிறுத்த முற்பட்ட போதும் சமாதானத்துக்காக நடாத்தப்படும் இந்நிகழ்வை கவுன்சிலர் சத்தியநேசன் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றார்.

இந்நிகழ்வு சிறிய அளவில் இடம்பெற்றாலும் உலகத் தமிழர்களின் உழைக்கு மக்களின் இந்நிகழ்வை ஐரோப்பிய நாடோன்றில் தொடர்ச்சியாக நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் தொடர்பாக கவுன்சிலர் சத்தியநேசன் வெளியிட்ட பொங்கல் செய்தியில் ”உலகத் தமிழர்களின் தினமான பொங்கல் நாளில் சமாதானமும் அமைதியும் மலர்ந்து அனைவரும் இன்புற்றிருக்க அனைவருக்கும் எனது தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!!”  எனத் தெரிவித்துள்ளார்.