January

January

பிரபாகரனின் தாயாரும் மாமியாரும் விரும்பினால் இந்தியா செல்ல முடியும் – ஜனாதிபதி ராஜபக்ஷ

velu.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரும் மாமியாரும் (மனைவியின் தாயார்) விரும்பினால் இந்தியாவிற்குச் செல்ல முடியும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இந்தியா இணங்கினால் அவர்கள் இந்தியாவிற்குப் போக முடியும் என்று வெளிநாட்டு நிருபர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பிரபாகரனின் தாயார் பார்வதிபிள்ளையும் மாமியார் திருமதி ஏரம்புவும் தமது எதிர்காலம் தொடர்பான திட்டம் எதனையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆயினும் பிரபாகரனின் தாயாரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் பிரபாகரனின் உறவினரான இராஜேந்தினும் இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மரணமடைந்த பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு மரியாதையுடன் இறுதிக்கிரியை இடம்பெற்றுள்ளதாக ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்தவார முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இறுதிக்கிரியையின் போது பார்வதியும் திருமதி ஏரம்புவும் சமுகமளித்திருந்ததாகவும் 300 இற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாகவும் தமக்குக் கூறப்பட்டதாக ஜனாதிபதி கூறியதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு மாவை அவசர கோரிக்கை

Mavai_Senathirajahமிக நீண்டகாலமாக விசாரணையுமின்றி விடுதலையுமின்றி சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களை இனியாவது விடுதலை செய்ய அரசு முன்வரவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.மாவை சேனாதிராஜா அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் 600 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் கடந்த எட்டு நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள நிலையிலேயே நீதி மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவுடன் நேற்றுக் காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மாவை சேனாதிராஜா அவரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

186 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் விடுதலை

fishing.jpgதமிழகம் மற்றும் ஆந்திரா கரையோர பகுதிகளில் கைதான இலங்கை மீனவர்கள் 186 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2009 ஓகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி சென்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த 186 பேரும் சென்னை மற்றும், விசாகபட்டினம் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். கடற்றொழில் அமைச்சர் பீளிக்ஸ் பெரேரா இந்திய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களின் பயனாக மேற்படி 186 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு ள்ளனர்.

விடுதலையான 186 மீனவர்களும் அவர்கள் பயணம் செய்த 35 ஆழ்கடல் வள்ளங்களுடன் இன்று இலங்கை கடல் எல்லையூடாக அழைத்து வரப்படுகின்றனர். மிரிஸ்ஸ, தெவிநுவர, தங்கல்ல, வென்னப்புவ, திருகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து இவர்கள் கடற்றொழிலுக்காக சென்றுள்ளனர்.

பிரிட்டனில் இஸ்லாமிய அமைப்புக்குத் தடை

000.jpgபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பிரிட்டனில் உள்ள முஸ்லிம் அமைப்பான இஸ்லாம்-போர் – யூ கே என்னும் அமைப்பை பிரிட்டிஷ் அரசாங்க தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அல் முகஜிறூன் என்பது உட்பட அந்த அமைப்பின் ஏனைய அனைத்துப் பெயர்களுக்கும் இந்தத்தடை பொருந்தும்.

இந்தத் தடைக்கான எந்த காரணத்தையும் குறிப்பிடாத பிரிட்டனின் உட்துறைச் செயலர் அலன் ஜோண்சன், தடை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றான போதிலும், பயங்கரவாதத்தை சமாளிக்க அது அவசியமான ஒரு அதிகாரம் என்று அவர் விபரித்துள்ளார்.

இந்த அமைப்பின் தலைவரான அஞ்சும் சௌத்ரி தமக்கு வன்செயல்களுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.தமது ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பெயரின் கீழ் இயங்கமாட்டார்கள் என்றும், ஆனால், இஸ்லாத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

திருக்கேதீஸ்வர புனரமைப்பு: முதற்கட்ட நடவடிக்கை சிவராத்திரிக்கு முன் பூர்த்தி

koneswaram-kovil.jpgதிருக் கேதீஸ்வரம் தேவஸ் தான வீதி புனரமைப்பு, உட்கட்டமைப்பு வேலைகளின் முதற்கட்ட நடவடிக்கைகளை சிவராத்திரி தினத்துக்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை வழங்கியுள்ளார். கேதீஸ்வரம் ஆலயப்பகுதி புனித பூமி பிரதேசமாக புனரமைப்பு செய்யப்படுவ துடன் இதற்கென 270 மில்லியன் ரூபாவை அரசு செலவிட்டுள்ளது. ஆலய புனரமைப்பு, வேலைகள் கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகின.

மடுக்கோயிலுக்கு அடியார்கள் 24 மணி நேரமும் சென்று வழிபடுவதைப் போன்று பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான கேதீஸ்வரத்தானின் ஆலயத்திற்கும் 24 மணி நேரமும் அடி யார்கள் சென்று வருவதற்கான நட வடிக்கைகளும் மேற் கொள்ளப் பட்டு ள்ளன.

தபால் மூல வாக்களிப்பு சுமுகம்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்றுக்காலை ஆரம்பமானது. பொலிஸ் மற்றும் முப்படையினர் உட்பட தபால் மூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டதாக பொலிஸ் மற்றும் இராணுவப் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.

தபால் மூல வாக்களிப்புகள் இன்றும் நடைபெறுகிறது. தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் தமக்குரிய கடமை நிலையங்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதியின் பிரகாரம் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. பொலிஸ் தலைமையகம் உட்பட நாட்டிலுள்ள 427 பொலிஸ் நிலையங்களிலும் நேற்றுக்காலை வாக்களிப்புகள் நடைபெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருனாரட்ண தெரிவித்தார்.

இதேபோன்று இராணுவத் தலைமையகம், பலாலி படைத் தலைமையகம் உட்பட அனைத்து முப்படைத் தலைமையகங்கள், முகாம்களிலும் தபால்மூல வாக்குப் பதிவுகள் நடைபெற்றதாகவும் இன்றும் தபால் மூல வாக்குப் பதவுகள் நடைபெறும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற எவரேனும் வசதியீனம் காரணமாகவோ, அல்லது வேறேதும் விசேட காரணமாகவோ, நேற்றோ, இன்றோ வாக்களிக்க வருகைதராவிடின் இயன்றளவு விரைவாக அவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க வசதிகளை செய்து கொடுத்து வாக்களித்ததன் பின்னர் தபால் மூல வாக்களிப்பு உறைகளை காப்புறுதி அஞ்சல் மூலம் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்க அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் நேற்றும் இன்றும் தபால் மூல வாக்குப் பதிவுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையிலும் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் முன்னிலையில் வாக்களிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 4 இலட்சத்து 58 ஆயிரத்து 154 பேர் விண் ணப்பித்திருந்தனர். இவர்களுள் 4 இலட்சத்து 1,118 பேர் தகுதி பெற்றிருந்தனர். 57,036 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் வடக்கு மீள்நிர்மாணத்திற்கு ரூபா 40 ஆயிரம் கோடிஜனாதிபதி ராஜபக்ஷ அறிவிப்பு

mahinda.jpgஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே உள்ள நிலையில்,அதிகளவில் சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்திருக்கும் தமிழர்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வந்திருக்கிறார். சிறுபான்மைத் தமிழ் சமூகமானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமான பங்களிப்பைச் செலுத்தக்கூடிய நிலையில், அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

சட்டவாக்க சபையில் தீர்மானங்களை எடுப்பதற்கு தமிழர்களுக்கு அதிகளவுக்கு பாக்கியம் உள்ளதாகவும் நீண்டகால கோரிக்கையான அதிகாரப்பகிர்விற்கு தீர்வு காண்பதற்குமான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு நிருபர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை குறிப்பிட்டது.

யுத்தத்தின் முடிவானது நெருக்கடி முடிவடைந்துவிட்டதென அர்த்தப்படாது. தமிழர்களின் தேவைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் தேவை எனக்கு உள்ளது என்று அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.

புதிய சட்டவாக்க ஏற்பாடுகளில் சிறுபான்மைத் தமிழருக்கு அதிகளவு பிரதிநிதித்துவம் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.இவை எல்லாவற்றுக்கும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அத்துடன், சர்வசன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாதாரணமான மக்கள் அமைதியாக வாழ விரும்புகின்றனர். ஆனால், அரசியல் தீர்வுக்கான கோரிக்கையும் தேவையும் அங்குள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேவேளை, 40 ஆயிரம் கோடி ரூபாவை வடக்கை புனரமைக்க செலவிடப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த 40 ஆயிரம் கோடி ரூபாவில் (4 மில்லியன் டொலர்) அரசின் நிதியும் உதவி வழங்குவோரின் நிதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகள், மின்சக்தி,நீர்ப்பாசன உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக 2010 இல் இந்தத் தொகை செலவிடப்படும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கிழக்கு அபிவிருத்திக்கு 3 ஆண்டுகளில் செலவிடுவதற்காக 3 பில்லியன் டொலர்களுக்கான (30 ஆயிரம் கோடி ரூபா) தொகைக்கு நாம் ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்

‘ஆட்சி’ மாற்றமா? ‘ஆள்’ மாற்றமா? : ந சிறீகாந்தா (தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ)

Sivajilingam M K Presidential CandidateSivajilingam M K Presidential CandidateSivajilingam M K Presidential Candidateஅன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
எதிர்வரும் 26ந்திகதி சனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது இத் தேர்தலில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவர்களில் இரண்டு வேட்பாளர்களுக்கிடையே தான் சனாதிபதிப் பதவிக்கு கடும் போட்டி நிலவுகின்றது. இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் – மகிந்த ராஜபக்ச. மற்றவர் – ஜெனறல் சரத் பொன்சேகா. மகிந்த ராஜபக்ச – ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர். சரத் பொன்சேகா – எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் வேட்பாளர். இந்த இருவரும், இப்பொழுது தமிழ் மக்களின் வாக்குகளையும் கோரி நிற்கின்றனர்.

இந்த இருவரைப் பற்றியும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்! நடந்து முடிந்த யுத்தத்ததை இவர்கள் இருவரும் மிகக் கொடூரமாக நடாத்தியவர்கள். விடுதலைப் புலிகளுடன் அரசாங்கத்தின் படைகள் நடாத்திய யுத்தத்துக்கு உத்தரவு இட்டவர் சனாதிபதி மகிந்த ராஜபக்ச! ‘விடுதலைப் புலிகளை அழித்து ஒழித்தே தீருவேன்’ என்ற வைராக்கியத்துடன், யுத்தத்திற்கு தலைமை தாங்கி படைகளை வழி நடாத்தியவர் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா! முடிந்து போன யுத்தத்தில் நிகழ்ந்த எமது மக்களின் கோர மரணங்களுக்கும் கொடிய அவலங்களுக்கும் இந்த இருவருமே கூட்டான பொறுப்பாளிகள்.

மூன்று லட்சம் தமிழ்ப் பொதுமக்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து, அனுபவித்த சகல துன்ப துயரங்களுக்கும் இவர்களே பொறுப்பாளிகள். குண்டு வீச்சுக்களாலும், செல் தாக்குதல்களாலும் எமது மக்களின் வீடுகளும் குடியிருப்புக்களும் தகர்த்தெறியப்பட்டு, பல்லாயிரம் உயிர்கள் துடிதுடிக்க பலியாகிப் போன கோரக் கொடுமைகளுக்கு இந்த இருவருமே பொறுப்பாளிகள்.

விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வீழ்த்தி துவம்சம் செய்வதே, இவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. அப்பாவி தமிழ் பொது மக்களின் உயிர்ளைப் பற்றி இந்த இருவரும் கொஞ்சங் கூட கவலைப்படவேயில்லை! எமது மக்களைக் கொன்றார்கள்! கொன்று குவித்தார்கள்! சொத்துக்களை நாசமாக்கினார்கள்! லட்சக்கணக்கில் எமது மக்களை அகதிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் முடக்கினார்கள்!

இன்று………. தயக்கம் எதுவுமின்றி உங்கள் வாக்குகளை, இந்த இருவரும் போட்டி போட்டுக் கொண்டு, கேட்டு நிற்கின்றார்கள். உங்களின் வாக்குகளை கோருவதற்கு எந்த அருகதையும் இந்த இருவருக்கும் கிடையவே கிடையாது. யுத்தத்தில் வெற்றி பெற்ற பிறகு, ‘சிறுபான்மை மக்கள் என எவருமே இந்த நாட்டில் இல்லை’ என்று நாசூக்காக சொன்னவர் மகிந்த ராஜபக்ச. ‘இந்த இலங்கைத்தீவு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது’ என, யுத்தத்தின் நடுவில், நாக்குக் கூசாது பேசியவர் சரத் பொன்சேகா. யுத்தத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்து வெற்றி வாகை சூடும் வரையில் ஒன்றாக இணைந்து நின்றவர்கள் – பிணைந்து செயற்பட்டவர்கள் இந்த இருவரும்! இப்பொழுது பிரிந்து போய், பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் இவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பயங்கரமாக முட்டி மோதுகின்றார்கள்.

விடுதலைப் புலிகளை முறியடித்த யுத்தத்தின் கதாநாயகன் யார்? என்ற கேள்வியை முன் வைத்தே இந்த இருவரும் மோதிக் கொண்டிருக்கின்றார்கள். அப்பாவித் தமிழ் மக்களின் ரத்தக் கறைகள் படிந்த கைகளுடன் அதிகாரத்திற்கான போராட்டத்தில் இந்த இரண்டு சிங்கள மாவீரர்களும் உக்கிரமாக மோதுகின்றன. இது பதவிப் போராட்டம்! அதிகாரச் சமர்! இந்த இருவரில் எவரையும், ஞாபக சக்தி கொண்ட எமது மக்கள் ஆதரிக்க முடியாது.

பல்லாயிரக்கணக்கில் எமது உடன் பிறப்புக்களை கொன்று முடித்தாகி விட்டது. குழந்தைகளை – சிறுவர்களை – பெண்களை – கர்ப்பிணிகளை – முதியோர்களை ஈவிரக்கமின்றி கொன்று போட்டாகி விட்டது. இப்போது எங்களிடமே வந்து வாக்குப் பிச்சை கேட்கிறார்கள்! இனியாவது, எஞ்சியுள்ள எமது மக்களுக்கு நீதி வழங்க இவர்களில் எவராவது தயாரா…….? ஆகக் குறைந்தது, எமது சொந்த மண்ணில், எமது இனத்திற்கு சுயாட்சி வழங்கிட இவர்களில் எவராவது தயாரா……?

இல்லை! – இல்லை! – இல்லவே இல்லை!!!

இந்த நிலையில் இவர்களில் எவருக்கும் எமது மக்களின் வாக்குகளை கோருவதற்கு என்ன துணிச்சல்….! எதிர்வரும் தேர்தல், ஒரு சிலர் கூறிக் கொண்டிருப்பதைப் போல, ‘ஆட்சி மாற்றம் எதையும் கொண்டு வரப் போவதில்லை. ஒருவேளை ‘ஆள் மாற்றம்’ ஏற்படலாம். இதனால் விமோசனம் எதுவும் கிட்டும் என்று நம்பினால், கடைசியில் மிஞ்சப்போவது ஏமாற்றமே!

ஏன் எனில், மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் ஒரு நாணயக் குற்றியின் இரு வேறு பக்கங்களே! வேறு விதமாகச் சொல்வதானால், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுதந்திர இலங்கைத் தீவில் அறுபது ஆண்டுகளாய் தொடரும் எமது அரசியல் போராட்டம் தோற்று விடவில்லை. எமது மக்களின் விடுதலை வேட்கை தணிந்து விடவில்லை. சுயமரியாதை கொண்ட ஒவ்வொரு தமிழ் மகனும், தமிழ் மகளும் சுதந்திர உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். நீதி கிடைக்கும் வரையில் எமது சுதந்திர தாகம் தணிய மாட்டாது. சுதந்திரம் – சமத்துவம் – சமநீதி என்ற உன்னத கோட்பாடுகளின் அடிப்படையில், எமது சொந்த மண்ணில், சுந்தர பூமியில் எம்மை நாமே ஆளும் வகையில், ஆகக் குறைந்தது “சுயாட்சி” ஆவது எமக்கு வழங்கப்படுமா?

இத்தனை காலமும், இப்பொழுதும், எமது மக்கள் அனுபவித்த – அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை அவலங்களையும், துன்ப துயரங்களையும் ஒரளவுக்காவது ஈடு செய்யும் வகையில், எமது மக்களின் தாயகமான வட – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மாநிலத்திற்கு சுயாட்சி வழங்கப்படுமா?

இந்த இலங்கைத் தீவில் நாம் வந்தேறு குடிகள் அல்ல வாழையடி வாழையாக – வரலாற்று ரீதியாக, எமது சொந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் எமது தாயகத்திற்கு சுயாட்சி கோர எமக்கு சகல உரிமைகளும் உண்டு. பல மொழிகள் பேசப்படும் பல்வேறு நாடுகளில் இனப்பிரச்சினை என்பது அரசியல் ரீதியாக – சமாதான வழியில் – சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றது.

அங்கு எல்லாம் இது முடியும் என்றால், இங்கு – இந்த இலங்கைத் தீவில் இது ஏன் முடியாது? இது தான் இலங்கைத் தீவு எதிர்நோக்கும் கேள்வி! இந்தத் தேர்தலில், இந்தக் கேள்வியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கி எழுப்ப வேண்டும்.

அடிபட்டோம், அல்லல் பல பட்டோம் அகதிகளானோம்…….., துயரங்கள் தொடர்ந்தாலும் – நாம் துவண்டு விடமாட்டோம்! இந்த மன உறுதியை – திடசங்கற்பத்தை உலகம் அறிய நாம் பிரகடனப்படுத்த வேண்டும்.

எதிர்வரும் சனாதிபதித் தேர்தல் இதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தத் தேர்தல் எமது மக்களின் இலட்சிய உறுதியை பரீட்சித்துப் பார்க்க சிங்கள அதிகார வர்க்கத்தால் எம்முன் வைக்கப்பட்டிருக்கும் ஒர் அரசியற் சவால்!

முடிந்து போன யுத்தத்தில், சனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரின் படைத்தளபதி சரத் பொன்சேகாவும் அயல் நாடுகளின் உதவியுடன் சாதித்த வெற்றி என்பது, தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளின் புதைகுழி அல்ல! அது – எமது எதிர்கால எழுச்சிக்கும், இறுதி மகிழ்ச்சிக்குமான அரசியல் அத்திவாரக் கற்களின் நடுகுழி என்பதை நாம் அனைவரும் நிலை நாட்ட வேண்டும்.

இந்த நிலையில், சுதந்திரம், சமத்துவம், சமாதானம் என்ற கோட்பாடுகளை முன் நிறுத்தி தேர்தல் களத்தில் துணிந்து நிற்கும் ஒரே ஒரு தமிழ் வேட்பாளர் திரு.சிவாஜிலிங்கம். இலங்கைத்தீவின் சனாதிபதி ஆவதற்காக அல்ல எம்மினத்தின் அடிமை நிலை சாவதற்காக அவர் களத்தில் நிற்கின்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எந்த ஒரு கட்சியினதும் வேட்பாளர் அல்ல. சுயேச்சையாக போட்டியிடும் அவர் எம்மினத்தின் வேட்பாளர். சுயமரியாதை கொண்டு, சுதந்திரத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழ் உயிரினதும் வேட்பாளர். உங்கள் ஒவ்வொருவரினதும் வேட்பாளர். சிங்கள ஆதிபத்திய சக்திகளின் ஏவல் நாய்களாக ஓடித் திரியும் சில தமிழ்ப் பத்திரிகைப் பிரகிருதிகள் ‘உதய’ வேளைகளில் ஊளையிட்டு பச்சைப் பொய்களைக் கக்கலாம்….. இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏஜென்டுகள், சந்தர்ப்பவாத – சுயநல – சதிமதியாளர்கள் சலுகைச் சுகங்களுக்காக எமது மக்களின் முதுகில் துரோகத்தனமாகக் ஓங்கிக் குத்தலாம்……. நேர்மை இருந்தும் நெஞ்சுரம் இல்லாத கோழைகள் கடமையை மறந்து – கை கொடுக்க மறுத்து ஓடி ஒதுங்கலாம்…….

ஆனால், எமது மக்களின் சத்திய எழுச்சியை எந்த சதியும் அடக்கி விட முடியாது!! எந்த விதியும் ஒடுக்கி விட முடியாது. கொடியோரின் கொடுமை கண்டு குமுறிக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் ஒரணி திரண்டு நேர்வழி நின்றால்… எமது மண்ணில் அநீதி சாயும்! அடிவானம் வெளுக்கும்! நமக்கு நாமே! நாம் மட்டுமே!! நமது ஆதரவு நம்மவனுக்கே!!!

உலகம் அறிய உரத்துச் சொல்வோம். தென்னிலங்கை எங்கும் எதிரொலிக்கச் செய்வோம். இது ஓர் புதிய அரசியல் வரலாற்றின் முதல் வரி! எம்மினத்தின் எழுச்சி அலைகளின் முகவரி! நம்பிக்கையுடன் செயற்படுவோம் – துணிவுடன் வாக்களிப்போம்.

‘சுதந்திரம் எமது பிறப்புரிமை.’
நாளை நமதே!

மடு வீதி; 24 மணி நேரமும் மக்கள் பாவனைக்கு- இராணுவப் பேச்சாளர் தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgமடு வீதி இன்று முதல்  24 மணி நேரமும் மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நானாயக்கார தெரிவித்தார்.

மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க யாத்திரீகர்களுக்கு தடையின்றி மடு புனித தேவாலயத்துக்கு யாத்திரை மேற்கொள்ள இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

sampanthar.jpgஇலங்கை யின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி கட்சிகளின் கூட்டமைப்பு வேட்பாளராகிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வவுனியா பிரதேசத்திற்கான தனது முதலாவது பரப்புரையை நேற்று ஆரம்பித்திருக்கின்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தமது முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நீண்ட உரையின் மூலம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் விளக்கமளித்ததன் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.