January

January

விமானத்தை தகர்ப்பதாக மிரட்டல்: லண்டனில் மூன்று பயணிகள் கைது

heathrow-airport.jpgலண்டனில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தை தகர்க்கப் போவதாக, அந்த விமானத்தில் பயணித்த மூவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி, அமெரிக்க விமானத்தை நைஜீரியாவைச் சேர்ந்தவர் தகர்க்க முயன்றதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகளின் விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 331 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்தவர்களில் 58, 48 மற்றும் 36 வயது மதிக்கத்தக்க மூவர் விமானத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து, விமான பணியாளர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். விமானம் மேலே எழுவதும் நிறுத்தப்பட்டது. உடன் பொலிஸார் விரைந்து வந்தனர். விமானத்தை சுற்றிலும் ஒன்பது பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. விமானத்திற்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸ் அதிகாரிகள், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மூவரையும் கைவிலங்கிட்டு, வெளியே இழுத்துச் சென்றனர். பின்னர், விமானம் முழுவதும் சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் உள்ளனவா என மோப்ப நாய்கள் மூலமும் பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகு விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமானம் புறப்படுவது மூன்று மணி நேரம் தாமதமானது.

இதேபோல, அட்லாண்டாவிலிருந்து சான்பிரான்ஸிஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில், போதையில் பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்று உள்ளே பூட்டிக் கொண்டார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் கொலராடோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. பின் அந்நாட்டு பொலிஸார் விமானத்துக்குள் புகுந்து போதை நபரைக் கைது செய்தனர்.

இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற்றம்

catak.jpgமுத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்றைய 5வது லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

இந்தியா, பங்களாதேஷ், இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் உள்ள மிர்புரில் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு சங்கக்கார (68), ரன்திவ் (56), தில்ஷான் (33), துஷாரா (28) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இலங்கை அணி 46.1 ஓவரில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜாகீர் கான், அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் (48), கவுதம் காம்பீர் (71) ஜோடி சிறப்பாக ஆடியது. பின்னர் இணைந்த விராத் கோஹ்லி (71), யுவராஜ் சிங் (8) கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 32.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை சார்பில் துஷாரா, பெரேரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்பிடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலிடத்தில் இலங்கை அணி (12 புள்ளி) உள்ளது. எதிர்வரும் 13ம் திகதி நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கும் முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

அரசாங்க ஊழியர்களுக்கு ரூ. 2500 சம்பள உயர்வு

அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது கிடைக்கும் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் புறம்பாக 2500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். பாதுகாப்பு படையினர், பொலிஸார் மற்றும் அரசாங்கத் துறை அனைத்து ஊழியர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் இந்த சம்பள அதிகரிப்பு உள்ளடக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்து வருகிறது.

பிரபாவின் தந்தையின் இறுதிநிகழ்வில் இரு முக்கிய கொலைகாரர்கள் தேர்தலில் நிற்பதாகக் கூறிய தர்மசிறி கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்!!! : ரி சோதிலிங்கம்

Velupillai_Funeral_TNAவே பிரபாகரனின் தந்தையின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று (டிசம்பர் 20) இடம்பெற்று அவரது பூதவுடல் ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் சகோதரர் அவருக்கு கொள்ளியிட்டார். மரணச் சடங்குகள் திரு வேலுப்பிள்ளையின் மகள் வினோதினி ராஜேந்திரனின் வீட்டில் (வேலுப்பிள்ளையின் வீட்டிலிருந்து 150 யார் தூரத்தில் உள்ளது) நடைபெற்றது. இந்த சடங்குகளுக்கு முன்பு இவரது உடல் வல்வெட்டித்துறை ரீமலில் – குமரப்பா – புலேந்திரன் தூபிகள் உள்ள  மாவீரர் சதுக்கத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

மரணச் சடங்கில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Velupillai_Funeral_PLOTE_Sitharthanதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் முதல் பரம எதிரி அமைப்பாக இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புளொட் தலைவர் சித்தார்த்தனும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு தனது அஞ்சலியைச் செலுத்தினார். 

இறுதி அஞ்சலியில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினாவின் புதிய இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் சமல், பத்திரகையாளர் தர்மசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கே தர்மசிறி இலங்கையில் இரண்டு முக்கிய கொலைகாரர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் என்று பேசத் தொடங்கியதும் வல்வெட்டித்துறைப் பொலிசார் ஒலிபெருக்கியை நிறுத்தி தர்மசிறியை கைது செய்ததாக எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் பொலிசார் ஒலிபெருக்கி உரிமையாளரையும் ஓட்டோ சாரதியையும் கைது செய்ததாகவும்  தான் பொலீஸ் நிலையம் சென்று தலையிட்டதின் காரணமாக தர்மசிறி விடுவிக்கப்பட்டதாகவும் மற்றைய இருவரும்  நாளை நீதிமன்றில் ஆஜராகும்படி கேட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை ஏற்றுக்கொண்ட நேரம் முதல் திரு ஜிவாஜிலிங்கமும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதிவரையில் மரணச்சடங்கில்  இருந்துள்ளனர். இன்று (டிசம்பர் 10) காலை ரிஎன்ஏ பா உ பத்மினி சிதம்பரநாதன் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார். நேற்று மாலை (டிசம்பர் 9) ரிஎன்ஏ பா உ க்களான சிறீகாந்தா, சம்பந்தர், துரைரட்ணசிங்கம்,  வில்லியம் தோமஸ், அரியநேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிறில், சுரேஸ் பிரேமச்சந்திரன், சேனாதிராஜா மற்றும் கல்முனை நகரசபை உறுப்பினர் கென்றி மகேந்திரன் போன்றோர்கள் உட்பட 15 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாகவும் அறியப்படுகிறது.

பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டித்துறைக்கு ஓடுகின்ற 751 ம் இலக்க பஸ் சேவையிலீடுபடவில்லை என்றும் அதனால் இறுதிநிகழ்வில் மக்கள் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழப்பாணத்தில் பெருமளவு பஸ்கள் மகிந்த ராஜபக்சவின் பொதுக் கூட்டத்திற்காகத் திசை திருப்ப்பட்டு இருந்ததாகவும் ஏம் கெ சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டினார்.

715 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ltte-rele.jpgபுலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 715 பேரை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் வலயம் 2 இல் நடைபெற்ற வைபவத்தின் போதே மேற்படி 715 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புலிகள் இயக்கத்திலிருந்து படையினரிடம் சரணடைந்தவர்களை பெற்றோர் பொறுப் பேற்றுக் கொண்டனர். சரணடைந்தவர்களுள் 15 பேரை ஜனாதிபதியே அவர்களது பெற்றோரிடம் கையளித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான மிலிந்த மொரகொட, டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்கா, வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ltte-rele.jpg

வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று

prabakaeans-father.jpgபிரபாக ரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

பூதவுடல் வல்வெட்டித்துறை பூச்சிவிட்டானில் உள்ள அவரது உறவினரின் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பனாகொட இராணுவ முகாமில் காலமான அவரின் சடலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று வல்வெட்டித்துறைக்குக் கொண்டுவந்தார்.

இதேநேரம் பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரண விசாரணைகள் நடைபெற்று மருத்துவ அறிக்கையில் இயற்கைச் சாவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘இனப்பற்றுள்ள எந்தத் தமிழனும் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டான்’ – சிவாஜிலிங்கம்

Sivajilingam_M_Kஇனப் பற்றுள்ள எந்தத் தமிழனும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய எந்தத் திட்டமும் இராணுவத் தளபதியிடம் இல்லை. இறுதிவரை யுத்தம் நடத்திய ஓர் இராணுவத் தளபதியைத் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரிப்பது துர்ப்பாக்கியம் என்றும் தேசிய தொலைக்காட்சி யொன்றுக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் ஓர் இராணுவ அதிகாரி அரசாங்க அதிபராக இருந்தபோது, வடமாகாணத்துக்கு ஓர் இராணுவத் தளபதியை நியமித்த போது எதிர்ப்பு தெரிவித்த சம்பந்தன், நாட்டின் தலைவராகும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்கும் ஓர் இராணுவத் தளபதிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தமை மக்களைத் தவறாக வழிநடத்தும் முடிவாகும். தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகள் நடப்பதை மறுக்க முடியாது. இந்தத் தேர்தலில் ‘தமிழ் மக்களின் சுயத்தை வெளிப்படுத்தவே தனித்துப் போட்டியிடு கிறேன்’ என்றும் சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.

சபாநாயகர் மீது இந்தியாவில் செருப்பு வீச்சு.

பாராளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டார இந்தியாவில் உள்ள வைதீஸ்வரன் ஆலயத்தை தரிசிக்க சென்றிருந்தபோது அவரது வருகையை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடத்தியுள்ளதுடன் அவர் பயணம் செய்த கார் மீது செருப்புக்களையும் வீசியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிப்பதுடன் போராட்டம் நடாத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் கூறுகின்றது.

நுவரெலியா மாவட்ட எம்.பியாக அருள்சாமி

parliament.jpgநுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சந்தனம் அருள்சாமி வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் வெற்றிடத்திற்கே பாராளுமன்ற உறுப்பினராக சந்தனம் அருள்சாமி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி வர்த்தமானி அறிவித்தல் 08.01.2010 அன்று வெளியாகியுள்ளது.

சந்திரசேகரன் பெரியசாமி இறந்து போனதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக இல, 06- நுவரெலியா தேர்தல் மாவட்டத்திற்கான ஆறாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவராக சந்தனம் அருள்சாமி என்பவர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

2004 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு 47,630 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டது. இதில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் மறைந்த முன்னாள் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் முதலாவது இடத்தை பெற்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

திருக்கேதீஸ்வரம் ஆலயப் பகுதி புனிதப் பிரதேசமாக பிரகடனம் – மன்னாரில் ஜனாதிபதி அறிவிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டு புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்படும். அத்தோடு, இந்த ஆலயத்தில் பக்தர்கள் தினமும் வழிபாடுகளில் ஈடுபடவும் வசதி செய்துகொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மன்னாரில் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தலைமையில் மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.