04

04

சரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியின் ஊழல், மோசடிகள் – 48 மணி நேரத்தினுள் விவாதம் நடத்த தயார் : விமல் வீரவன்ச

vote.jpgசரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியினால் புரியப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தனியார் தொலைக்காட்சியொன்றில் விவாதம் நடத்த அரச தரப்பு தயாரெனவும்,  எதிர்க்கட்சி அதற்கு இணங்காவிடின் குறித்த ஆயுதக் கொள்வனவின்போது இடம்பெற்ற ஊழல் தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்படுமென்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்பி.யுமான விமல் வீரவன்ச நேற்று மீண்டும் சவால் விடுத்தார்.

மணமகனும் மணமகளும் சந்தித்துப் பேச்சு நடத்த இதுவொன்றும் மணமேடையல்ல.  விவாத மேடை.  இங்கு அரச தரப்பில் ஜனாதிபதி தான் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. அதற்கு நாம் யாரையும் நியமிப்போம். அதேபோல் எதிர்க்கட்சி சார்பாக பொன்சேகா தான் விவாதத்தில் பங்குபற்ற வேண்டுமென நாம் கோரவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்தவேளை அவரது மருமகனின் பெயரில் ஆயுதக் கம்பனியொன்றை நடத்தி வந்தமை தொடர்பாக நாம் அறிந்திருந்தோம்.

இருப்பினும் தற்போது சரத் பொன்சேகாவின் ‘கிரீன் கார்ட்’ டிலுள்ள விலாசமும் அமெரிக்காவில் அவரது மருமகனின் பெயரில் இயங்கி வரும் ‘ஹைகோப்’ எனும் ஆயுத கம்பனியின் விலாசமும் ஒன்றாக இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கிரீன் கார்டில் உள்ளது போன்ற, கார்த்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேக்கா, 17545 கோல்ட் ட்ரைவ், ஹெட்மண்ட், ஓ.கே, 73012 என்ற விலாசத்திலும் ‘ஏ-055-090192’ என்ற க்ரீன் கார்ட் இலக்கத்திலுமே குறித்த ஆயுதக் கம்பனியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதனை அவரது குடும்ப கம்பனியென்றுதானே கூறவேண்டுமென்றும் விமல் வீரவன்ச எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலகட்டத்தில் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்ட பெறுமதிமிக்க ஆயுதங்களை கொள்வனவு செய்தல் மற்றும் கேள்விப் பத்திரங்களை கோரும் அதிகாரம் ஆகியன பொன்சேகாவிடம் இருந்தன.  அதனை உபயோகித்தே அவர் ஊழல் மோசடிகளை கையாண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விமல் வீரவன்ச எம்.பி, சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாத மொன்றை நடத்த வேண்டுமென சவால் விடுத்திருந்தார்.

அதற்கு, அந்த விவாதத்தில் அரச தரப்பில் ஜனாதிபதி கலந்துகொள்ள வேண்டுமெனக் கோரி பொன்சேகாவின் ஊடகப் பேச்சாளர்களான அனுர குமார திஸாநாயக்கவும் மங்கள சமரவீரவும் கூட்டாக இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே விமல் வீரவன்ச எம்.பி. நேற்று மீண்டும் இந்த சவாலை விடுத்தார்.

’பொன்சேக்கா ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி. நீங்கள் இப்போது பெரிய பிள்ளை. (லொக்கு லமயெக்) இராணுவத்தில் தளபதியாகவிருந்த காலத்தில் செய்த சிறு பிள்ளைத் தனமான காரியங்களை கைவிட்டுவிட்டு இப்போது பொறுப்பாக நடத்துகொள்ளுங்கள்’ என்றும் வீரவன்ச எம்.பி. கூறினார்.

“நீங்கள் சுத்தமானவராக இருந்தால், பிழையற்றவர் என்றால், மதிப்புக் கொடுப்பவராகவிருந்தால் நீங்களே இந்த விவாதத்தில் நேரடியாகப் பங்குபற்றலாம். ஏனெனில் இது உங்கள் குடும்ப கம்பனி, ஊழல் குற்றங்கள் தொடர்பான சிறந்த அனுபவம் உங்களுக்கேயிருக்கிறது.

இருப்பினும் நீங்கள் விரும்பினால் உங்களுக்குப் பதிலாக வேறு யாரையும் விவாதத்தில் பங்குபற்ற வைக்கலாம். அதில் எமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை” எனவும் பொன்சேகாவுக்கு விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர, சோமவன்ச அமரசிங்க ஆகியோர் வெள்ளையா கறுப்பாவென மக்களுக்கு நன்கு தெரியும்.  ஆனால் பொன்சேகா கறுப்பா வெள்ளையாவென்பது மக்களுக்கு இன்னும் தெரியாது. அவர் அரசியலுக்குள் வந்து 40 நாட்களே ஆகின்றன. இவர் 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஊழல் மோசடிகளை சுமத்த முற்படுகிறார். பிறர் மீது ஊழல் மோசடிகளை சுமத்த எத்தனிப்பவர் முதலில் தான் சுத்தமாக இருக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

தனது குடும்ப கம்பனியூடாக அவரால் முன்னெடுக்கப்பட்ட ஊழல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது எமது கடமை. உண்மையில் பொன்சேகா இலங்கையை மாத்திரமன்றி அமெரிக்காவையும் ஏமாற்றியிருக்கிறாரெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன, ஜி. எல். பீரிஸ், ராஜித்த சேனாரத்ன, டளஸ் அழகப் பெரும, சுசில் பிரேம ஜயந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒன்றுதிரண்டு பதிலடி கொடுப்போம் – ஜனாதிபதி

presi_election.jpgதாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் இனியும் இடமளிக்கக் கூடாது. அனைவரும் ஓரணி திரண்டு பதிலடி கொடுப்பது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வைராக்கிய அரசியலுடன் நாட்டைக் காட்டிக்கொடுத்தாலும் கேவலமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்தலும் தொடர்கின்றன. இதனைத் தொடரவிடாமல் நிறுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தாய் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் நாம் வெற்றி கொண்டுள் ளோம். நாட்டிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று ருவன்வெல்ல பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

அமைச்சர்கள் அதாவுத செனவிரத்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, விமல் வீரவன்ச எம்.பி. உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இம்மக்கள் பேரணிக் கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உரை யாற்றுகையில், இந்த நாட்டை ஐக்கியப்படுத்தி ஒன்றிணைத் துத் தருமாறு மக்கள் எனக்கு ஆணை வழங்கினர்.  அதனை முழுமையாக நிறை வேற்றி விட்டே நான் உங்கள் முன் வந்துள்ளேன். நாட்டை மீட்டது மட்டுமன்றி மேல் மாகாணத்திற்கு மட்டும் மட்டுப்படு த்தப்பட்டிருந்த அபிவிருத்தியை நாட்டின் சகல கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றோம்.

அபிவிருத்திக்கும் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் என நாம் பெரும் திட்டங்களை வகுத்து செயற்படுத்தினோம். பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பல நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரே சமயத்தில் ஐந்து துறைமுகங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், விமான நிலையம், மின் உற்பத்தித் திட்டங்கள் என பாரிய திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றோம். அத்தனை செயற்திட்டங்களையும் நாம் எதிர்கால சந்ததிக்காகவே மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

இலங்கை – இந்தியா – பங்களாதேஷ் மோதும் முத்தரப்பு போட்டி இன்று ஆரம்பம்

catak.jpgஇந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் இன்று துவங்குகிறது. இதற்காக இந்திய அணியினர் நேற்று முன்தினம் காலை மும்பையில் இருந்து புறப்பட்டு டாகா சென்றனர். இன்று நடக்கும் முதல் போட்டியில் பங்களாதேஷ், இலங்கை மோதுகின்றன. 5 ஆம் திகதி நடக்கும் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. இறுதிப் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி நடக்கிறது. இத்தொடர் முடிந்த பின் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் சிட்டகாங் (ஜன. 17, 21) டாகாவில் ஜன. 24 – 28) நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.

கடந்த ஆண்டு அபாரமாக ஆடிய இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் “நம்பர் – 1” ஒரு நாள் அரங்கில். “நம்பர் – 2” இந்த ஆண்டு பங்களாதேஷில் நடக்கும் முத்தரப்பு தொடரையும் வெற்றிகரமாக துவக்க காத்திருக்கிறது. இம்முறை சச்சின் இல்லாதது பின்னடைவாக அமையலாம். ஆனாலும் ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி போன்ற இளம் வீரர்கள் கைகொடுக்கலாம். சேவாக், காம்பீர், தோனி, யுவராஜ் ஆகிய அனுபவ வீரர்களும் இருப்பதால் துடுப்பாட்டத்தில் கவலையில்லை. இஷாந்த் சர்மா நீக்கப்பட்ட நிலையில், ஸ்ரீசாந்த் சாதிக்க வேண்டும். களத் தடுப்பில் முன்னேற்றம் கண்டால், இந்திய அணி எளிதாக கோப்பை கைப்பற்றலாம்.

dilshan.bmpஇலங்கை அணியை பொறுத்த வரை ஜயசூரிய, முரளிதரன், ஜயவர்தன, மலிங்க, பெர்னாண்டோ, மெண்டிஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது. இதனால் சங்கக்கார, தில்ஷன் மீதான சுமை அதிகரித்துள்ளது. பங்களாதேஷ் சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் எழுச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு 73 சதவீத வெற்றி பெற்று அசத்தியுள்ளது. எனவே, சொந்த மண்ணில் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மொர்டாசா இல்லாத நிலையில் கப்டன் பொறுப்பில் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் சாகிப் அல் ஹசன் உள்ளார்.

நேற்று முன்தினம் பங்களாதேஷ் தலைநகர் டாகா வந்த செவாக், இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி; கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். இது இந்த ஆண்டும் தொடரும் என நம்புகிறேன்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே மிகவும் முக்கியம். அப்போது தான் ரேங்கிங் பட்டியலில் “நம்பர் – 1” அல்லது “நம்பர் – 2” இடத்தை தக்க வைக்க முடியும். முன்னணி வீரர்கள் இல்லாததால் இலங்கை அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இம்முறை புதிதாக களமிறங்க உள்ள வீரர்களின் பலம் பற்றி தெரியாது. அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது அல்லது துடுப்பெடுத்தாடுவது கடினம். எனவே, தற்போதும் இலங்கை அணி சிறந்தது தான்.

இவர்களை சமாளிப்பது இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்திய துணை கண்டத்து ஆடுகளங்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக காணப்படும். இதன்படி பங்களாதேஷில் உள்ள ஆடுகளங்களும் துடுப்பாட்டத்துக்கு ஏற்றதாக இருக்கும். பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்தலாம். இவ்வாறு செவாக் கூறினார்.

பூரண அரசாங்க மரியாதைகளுடன் இன்று அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியை

chandrasekaran.jpgகாலஞ் சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளன. தலவாக்கலையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு பொது மக்கள் இன்று பி. ப. ஒரு மணி வரை தமது இறுதி அஞ்சலியை செலுத்த முடியும்.

ஒரு மணியிலிருந்து மூன்று மணி வரை அவரது குடும்ப அங்கத்தவர்களினால் இந்து சமய முறைப்படியிலான சமயக் கிரியைகள் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பூதவுடல் நகர சபை மைதானத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பூரண அரச மரியாதையுடனான இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தலவாக்கலைக்கு விஜயம் செய்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.  கொழும்பில் இருந்து தலவாக்கலைக்கு கொண்டு வரப்பட்ட அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடனுக்கு வீதியின் இரு புறங்களிலும் குழுமியிருந்த ஏராளமான மக்கள் மலர்கள் தூவியும், கண்ணீராலும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

பூதவுடல் நேற்று தலவாக்கலை, லிந்துலை புதிய நகர சபையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் தமது இறுதி அஞ்சலியை அன்னாருக்கு செலுத்தினர். இவரின் மறைவையடுத்து மலையகம் முழுவதும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு சோகமாக காட்சியளிக்கிறது. பெரும்பாலான மக்கள் தோட்ட வேலைகளுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதற்காக பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை புகையிரத நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், தனியார் வாகனங்களிலும், பஸ் வண்டிகளிலும் தலவாக்கலை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

தோட்டங்களில் ம. ம. மு. யின் சிவப்பு, கறுப்பு நிறங்களிலான கொடிகளும், வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அமைச்சரின் உருவப் படங்கள் ஒவ்வொரு தொழிலாளர் குடியிருப்புக்களிலும் வைக்கப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர். தோட்டங்களில் நடைபெறவிருந்த பொது நிகழ்ச்சிகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டம் முழுதும் சோகமான நிலை காணப்படுகின்றது. மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதுடன், கடந்த சனிக்கிழமை தொடக்கம் வீடுகளில் முடங்கிப்போய்யுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்கள் சனிக்கிழமை தொடக்கம் வேலைக்கு செல்லவில்லை. இரத்தினபுரி, தெனியாய, காவத்தை ஆகிய பகுதிகளிலுள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் தமது கட்சி பேதங்களை மறந்து தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

கிழக்கில் மாவட்ட கலாசார மத்திய நிலையங்கள்

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கலாசார திட்டங்களை அபிவிருத்தி செய்யும் முகமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் மாவட்ட கலாசார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் முதற் கட்டமாக அம் பாறை மாவட்ட கலாசார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் அண்மையில் அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் டீ.டபிள்யூ.யு. வெலிக்கல தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விலமவீர திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கலாசார மத்திய நிலையத்திற்கான அடிக்கல்லை நட்டுவைத்தார். கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதி உதவியில் அம்பாறை மாவட்ட கலாசார நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஜே. வி. பி. முன்னாள் எம்.பி ஜனாதிபதிக்கு ஆதரவு

sri_election.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பொல்கம்பொல தெரிவித்தார்.மக்கள் விடுதலை முன்னணி இம்முறை மேற்கொண்ட தவறான தீர்மானத்தால் மேலும் சில எம்.பிக்களும் பெருந் தொகையான கட்சி ஆதரவாளர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் பதவியிலிருந்தே ஜனாதிபதிக்கு தனது ஆதரவுகளை வழங்குவதாக தெரிவித்த அவர், ஜே. வி. பி. தற்பொழுது முன்னெடுத்துவரும் செயற்பாடுகளிலிருந்து இன்று முதல் (நேற்று) விலகிக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு, ஜானகி ஹோட்டலில் நேற்றுக் காலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஜே. வி. பி.யின் கேகாலை வலய அமைப்பாளர் தரங்க பிரேமசிங்க, தொழிலாளர் பிரிவின் கொழும்பு மாவட்ட உறுப்பினரான சுதத் திக்வெல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனுர பொல்கம்பொல இங்கு மேலும் உரையாற்றுகையில், சரத் பொன்சேகாவுடன் எந்தவித ஒப்பந்தமும் நிபந்தனைகளும் இல்லாத நிலையில் ஜே.வி.பி. தலைமைத்துவம் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் எமது வரலாற்றில் எந்தவொரு தேர்தலுக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தாலும் நாங்கள் பொது சம்மேளனத்தை கூட்டி எமது யோசனைகளை முன்வைத்து ஆதரவாளர்களின், கட்சி முக்கியஸ்தர்களின் சம்மதத்துடன் உரிய தீர்மானினதை எடுத்து அதன்படி செயற்படுவோம்.

சம்மேளனத்துக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் சோமவன்சவினதும் சிலரதும் தனிப்பட்டதும் இரகசியமானது மான தீர்மானங்களுக்கு அமைய இம்முறை சரத் பொன்சேகாவுக்கு ஆதரவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பிரிவினைவாதத்தை உருவாக்கியவர்களுடனும் முதலாளித்துவவாதிகளுடன் ஜே.வி.பி. இம்முறை இண¨ந்து செயற்படுகின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. கட்சிக்குள் இன்று பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. முன்வைக்கப்படும் யோசனைகள் தட்டிக்களிக்கப்படுகின்றன.

ஐ. தே. க. இம்முறை தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயமாக தோல்வியடையும் என்பதை தெரிந்து கொண்டே சரத் பொன்சேகாவை களத்தில் இறக்கியுள்ளது. ஐ. தே. க.வை பாதுகாக்க எடுத்த முயற்சிக்கு ஜே.வி.பி.யும் ஒத்துழைப்பு வழங்குகின்றது.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதாக கூறிய ஜனாதிபதி இன்று இதனை நிறைவேற்றியுள்ளார். அடுத்து எம்முன் உள்ளது பொருளாதார மேம்பாடு, உள்நாட்டு உற்பத்தி துறை மேம்பாடு மற்றும் அபிவிருத்தி போன்ற சவாலாகும். அதனை நிறைவேற்றுவதாயின் ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த வேண்டும். அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

ஜே.வி.பி. தலைமைத்துவத்தின் தவறான தீர்மானத்தால் பெருந்தொகையான ஆதரவாளர்கள் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன் தமது அரசியல் செயற்பாடுகளையும் கைவிட்டு ஒதுங்கியுள்ளனர்.

எமது கட்சி ஆதரவாளர்களை இவ்வாறு அநாதைகளாக்க முடியாது. அவர்களது நொந்துபோன மனத்திற்கு ஆறுதலாகவே இந்த தீர்மானத்தை எடுத்தோம் என்றார்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு; பேராசிரியர்கள் கைலாசபதி, இந்திரபாலா ஆகியோருக்கு நன்றி செலுத்துவது அவசியம்

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் வரலாற்றைப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தும் நிலை பாடத்திட்டத்தில் காணப்படவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய நாகரிகம் ஒரு பாடமாக 1976 இல் அங்கீகரிக்கப்பட்டு ஆரம்பமானதன் பின்னரே இலங்கை முஸ்லிம்களின் வரலாறு அப்பல்கலைக்கழக மட்டத்தில் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகக் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை அங்கீகரித்த அப்போதைய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே. கைலாசபதி, பீடாதிபதி பேராசிரியர் கே. இந்திரபாலா ஆகியோருக்கு விசேடமாக நாம் நன்றி செலுத்த வேண்டும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு “இலங்கையில் இஸ்லாம்” என்னும் நூலினை அறிமுகம் செய்து உரையாற்றுகையில் பேராசிரியர் கே. எம். எச். காலிதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சென்ற ஆண்டு பங்களாதேஷ் டாக்காவில் இஸ்லாமிய மகாநாட்டு அமைப்பின் இர்ஸிகா என்னும் ஆய்வு நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தென்னாசியாவில் இஸ்லாமிய நாகரிகம் என்னும் சிம்போசியத்தில் முன்வைக்கப்பட்ட பேராசிரியர் காலிதீன் அவர்களின் ஆய்வுக் கட்டுரை நூலாக வெளியிடப்பட்டது.

தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்திய பேராசிரியர் காலிதீன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவு மேற்குலக வரலாறு, இந்திய வரலாறுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், இலங்கை முஸ்லிம்களின் அரசியல், கல்வி, கலாசார பின்னணிகளில் கவனம் செலுத்தி பிரபல்யமான இஸ்லாமிய நாகரிக வரலாற்றையும், அதன் சர்வதேச செல்வாக்கையும் தெளிவுபடுத்தும் வகையில் அதன் பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இதற்கு மிகவும் பொருத்தமான உயர் கல்வி நிறுவனமாகும்.

உலக நாகரிகங்களை ஒன்றுபடுத்தும் பணியில், இன்றைய உலகில் இஸ்லாமிய நாகரிகம் முன்னின்று பணியாற்றி வருகின்றது. பல இனங்கள், சமூகங்கள், குழுக்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி மனித நாகரிகத்தைக் கட்டியெழுப்புவது அதன் பணி எனவும் இஸ்லாம் கருதுகிறது. அப்பணியை முன்னெடுப்பது எமது கடமையாகும்.

முதலாம் தவணைக்கு பாடசாலைகள் இன்று ஆரம்பம்

stu-2.jpgஅனைத்து அரசாங்க பாடசாலைக ளும் முதலாம் தவணைக்காக இன்று திறக்கப்படுகின்றன. எனினும் க. பொ. த. (சா/தர) பரீட்சை மதிப்பீட்டு நிலை யங்களாக இருந்த 79 பாடசாலைகள் புதிய தவணைக்காக எதிர்வரும் 11 ஆம் திகதியே திறக்கப்படவுள்ளன.

மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, தெல்தெனிய மகா வித்தியாலயம், மஹரகம சென் மேரிஸ் கல்லூரி, பண்டாரவளை சென்ட்ரல் கல்லூரி ஆகியவை முன்னர் மதிப்பீட்டு நிலையங்களாக குறிப்பிட்டிருந்த போதும் இன்றே ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சில் ஏற்படும் வெற்றிடங்களை – உடனுக்குடன் நிரப்புவதற்கு நடவடிக்கை

2010ம் ஆண்டில் கல்வியமைச்சின் கீழ் ஏற்படும் பதவி வெற்றிடங்களை, நியமனங்கள், பதவி உயர்வுகளின் மூலம் அவ்வப்போது நிவர்த்திப்பதற்கான வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாக, கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட்தம்பி தெரிவித்தார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல் வியியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை என்பனவற்றில் காணப்பட்ட அனைத்து வெற்றிடங்களும் தற்பொழுது நிவர்த்திக்கப்பட்டுள்ளன. இது குறித்து கல்வியமைச்சரும் தொழிற் சங்கங்களும் திருப்தியடைந்துள்ளனர்.

எதிர்வரும காலங்களில் பிரஸ்தாப சேவைகளில் வெற்றிடம் ஏற்படும் போது, அதனை உடனடியாக நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கேற்ற வகையில் உத்தியோகத்தர்களது அனைத்தும் தகவல்கள், விபரங்களும் கணனிமயப்படுத்தப்படவுள்ளன.

இம் முறையின் கீழ் சிரேஷ்ட பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இது கல்வியமைச்சின் இணையத் தளத்தில் உள்ளடக்கப்படும். ஆகையால் எவரும் எந்த நேரமும் இது குறித்த விபரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கும் எனவும் முகம்மட்தம்பி கூறினார்.

சீனி உற்பத்தி ஆலைகள் ஐந்தை நிறுவ அரசு முடிவு

2015 ம் ஆண்டாகும் போது எமது நாட்டின் சீனிக்கான தேவையில் 50 சதவீதத்தினை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கில் சீனி உற்பத்தி செய்யும் ஆலைகள் ஐந்து புதிதாக ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அநுராதபுரத்தில் இரண்டும், குருநாகலை, சியம்பலாண்டுவ, பிபிலை பிரதேசங்களில் ஒவ்வொன்று வீதமும் இவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலதிக பயிர்ச் செய்கை அபிவிருத்தி அமைச்சர் தர்மதாச பண்டார தெரிவித்தார்.

ஒரு தொழிற்சாலையினை அமைக்க கணிப்பிடப்பட்டுள்ள செலவினம் 3000 மில்லியனாகும். மேலும் ஒவ்வொரு ஆலையிலும் தினம் 2500 தொன் கரும்பு அரைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பிபிலை- சியவலா கொட பிரதேசத்தில் அமைக்கப்படும் சீனி ஆலைகளின் நிர்மாணப்பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.