07

07

நீதன் சண் ஸ்காபரோ நகரசபை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கின்றார்

Neethan_Shanஸ்காபரோ ஒன்ஸ நீண்டகால  சமூகச் செயற்பாட்டாளரும் பொதுப்பாடசாலை அறங்காவலருமான நீதன் சண், இன்று தொகுதி 42இன் நகரசபை உறுப்பினருக்கான வேட்புமனுவை நகர மண்டபத்தில் தாக்கல் செய்தார்.

ரொறன்ரோ மாநகரில் நன்கு அறிமுகமான சமூகத் தலைவரான நீதன் சண் ஸ்காபரோ ரூச் றிவர் வதிவாளர்களை தான் நகரசபையில் திறம்பட பிரதிநிதித்துவப் படுத்துவேன் என நம்புகின்றார். வேட்பாளராக அறிவித்த, நீதன் சண்இ “42ஆம் தொகுதிக்கு தேவையான அங்கிகாரத்தையும், வளங்களை கொண்டு சேர்ப்பதற்காகவும், வதிவோரிடையேயும், நகரசபையிடையேயும் உரிய தொடர்பாடலை ஏற்படுத்தவுமே, நான் இத்தொகுதியில் போட்டியிடுகின்றேன்” எனச் சுறுசுறுப்புடன் குறிப்பிட்டார்.

நீதன் சண் ஸ்காபரோவில் கடந்த பத்தாண்டுகளாக கல்வி, குழந்தைகள், இளையோர் வேலை, வேலை வாய்ப்பு, குடிவரவு, வறுமைக் குறைப்பு உள்ளடங்கிய பல துறைகளிற் பணியாற்றியுள்ளார்.  இருபதுக்கும் கூடிய பாடசாலைகளில் மாலை நேர நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது குமுகத்தில் அவர் ஆற்றிய சேவை பல திட்டங்களும் அமைப்புக்களும் தொடக்கப்படுவதற்கும், வலுப்பெறுவதற்கும் வழியமைத்தது.

அவர் தேர்வாகியதும், நகரசபை அரசை இன்னமும் அணுகவும், விளங்கவும், நம்பவும், அனைவரும் அணுகவும் கூடியதாக அமைப்பார். நீதன் தனது பத்தாண்டுக்கு மேலான சமூக மேம்பட்டுப் பட்டறிவைக் கொண்டு நகரசபை, தொகுதி 42இன் ஒவ்வொரு வதிவாளருக்குமாக உழைப்பதை செய்வதை ஆவன செய்வார். நீதன் 21ஆம் நூற்றாண்டில் எமது தலைமைத்துவத்துக்குத் தேவையான சமநிலையைக் வழங்குபவர். அவர் நான்கு ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலராக அரசியற் பட்டறிவையும், அத்தோடு புதிய தலைமுறைக்கு உரித்தான புதுமை, ஆக்கம், மற்றும் உற்சாகத்தையும் கொண்டுள்ளார்.

நீதன் சண்ணுக்கு ஆதரவு வழங்கி வந்த நீண்டகால மல்வேர்ன் வதிவாளரான திரு. நடா விஜயபாலன் குறிப்பிடுகையில், “இச்சுற்றாடலுக்குத் தலைமை மாற்றம் தேவையானது, தொகுதி 42இன் வதிவாளர்கள், நகரம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ஈடுபாடு காட்ட உரிய வாய்ப்புக் கிடைப்பதற்கு இப்பொதாவது காலம் கனியவேண்டும்.” எனத் தெரிவித்தார்.

தெற்காசிய சமுகங்கள் நீதன் சண், ஒக்டோபர் 25, 2010இல், ரொறன்ரோ மாநகரில், இளைய தெற்காசிய நகரசபை உறுப்பினராகி ஒரு வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கின்றார்கள். தற்போதைய நகரசபையில் உள்ள 44 உறுப்பினர்களில் ஒருவர் கூட தெற்காசியர் இல்லை. நீதன் தேர்வாகிய பின், ரொறன்ரோ நகரசபைக்குத் தேர்வாகும் முதற் தமிழரும் ஆவார்.

நீதன் சண் ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தில்  அறிவியல் (science) மற்றும் கல்வியில் (education) என இரண்டு இளங்கலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். தற்போது அவர் சமூககவியலில் (sociology) மற்றும் ஒப்புரவில் (equity) கலை முதுகலைப் பட்டத்தை நிறைவுசெய்கின்றார். தெற்காசிய சமூகங்களுக்குச் சேவையாற்றும் CASSA  எனும் அமைப்பில் நிறைவேற்று இயக்குநராகப் பணியாற்றுகின்றார். நீதன் சண் ஆசிரியர், குமுக சேவை அமைப்பின் நிறைவேற்று இயக்குநர்இ வானொலி, தொலைக்காட்சி ஒலிபரப்பாளர் மற்றும் சமூகத் தேவை மற்றும் பாதிப்புப் பற்றிய ஓரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பல சவாலான பாத்திரங்கள் ஏற்றுள்ளார். அவர் பல ரொறன்ரோ சமூக அமைப்பின் முக்கிய நபர் விருது, நகரகக் கூட்டமைபின் இனத் தொடர்பாடல் விருது முதலான விருதுகளால் சிறப்பிக்கபட்டுள்ளார். மேய்றீ நிறுவனமும் மற்றத்துக்கான தலைவர்கள் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்ததற்காக சிறிப்பித்தது.

நீதன் சண்ணும் அவரது ஆதரவாளரும் பிறின்சஸ் பாங்குவற் மண்டபத்தில் தங்களது ஒன்றுகூடலை ஞாயிற்றுக்கிழமை, சனவரி 10, 2010 ஒழுங்கு செய்துள்ளார்கள். கூடுதல் விவரங்களுக்கோ, நீதனுடனான ஊடக நேர்காணலுக்கோ, ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரகால் திருவைத் 416-727-3034 என்ற எண்ணூடாகவோ நீதன் சண்ணை 416-824-3399 என்ற எண்ணூடாகவோ அல்லது info@neethanshan.ca என்ற மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளலாம்.

ஜனாதிபதி விரைவில் யாழ் செல்ல முடிவு! – ‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ் குழுவிற்கு உறுதி

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ் குழு ஒன்று ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருக்கிறார்.

மேலும் வரும் தேர்தலையொட்டிய பிரச்சாரங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரைவில் யாழ்ப்பாணம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மையில் எதிர்க் கட்சிக் கூட்டின் வேட்பாளர் யாழ் சரத்பொன்சேகாவின் யாழ் விஜயத்தைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சவும் யாழ் செல்லத் தீர்மானித்து உள்ளதாக இக்குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் மகிந்த ராஜபக்சவின் யாழ் விஜயத்தின் போது இச்சந்திப்பில் கலந்தகொண்ட பலரும் அவருடன் சமூக அளிப்பார்கள் எனத் தெரிவித்தார். இப் புலம்பெயர் குழுவில் இடம்பெற்ற சிலர் ஏற்கனவே மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கும்படி யாழ் மக்களைக் கேட்க உள்ளனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் நெயல் நடேசன், சவூதி அரேபியாவிலிருந்து டாக்டர் இராஜசிங்கம் நரேந்திரன், லண்டனிலிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில், டாக்டர் இராமநாதன் நரேந்திரநாதன் (அவுஸ்திரேலியா) மயில்வாகனம் சூரியசேகரம் (லண்டன்), சபாபதி சுப்பையா குகநாதன் (பிரான்ஸ்), இக்னேசியஸ் செல்லையா யோகநாதன் மனோரஞ்சன் (கனடா), முருகபூபதி (அவுஸ்திரேலியா) ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இக்குழுவினர் மகஜர் ஒன்றைக் கையளித்ததுடன், அதுதொடர்பாக நீண்டநேரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

இடம்பெயர்ந்த மகக்ளின் மீள்குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், வடக்கு கிழக்கின் கல்வி, அபிவிருத்தி திட்டங்கள், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் தாயகம் வந்து செல்வதில் உள்ள சிக்கல்கள் போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதிடன் கலந்துரையாடினர். தமிழர்களின் அதியுயர் பிரச்னையான இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இக்குழு உரையாடி உள்ளது.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது, “எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்தப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்த்தரப்பு ஜனாதிபதி பேட்பாளர் உறுதியளித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை தான் அனுமதிக்கப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தி உள்ளார். இந்தப் பின்னணியில் யாழ் செல்லவுள்ள மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கான சில விடயங்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் யாழில் ஜனாதிபதியின் உரை தமிழில் முழுமையாக இடம்பெறும் என்றும் அதற்கான பயிற்சிகளை அவர் எடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது. எதிர்க் கட்சி வேட்பாளர் நல்லூர் கந்தசாமி கோலிலில் சேட்டைக் கழற்றி விட்டு வழிபட்டதைப் போல் மகிந்த ராஜபக்சவும் ஏதாவது தேர்தல் ஸ்ரண்ட் செய்யலாம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறையில் நடைபெற ஏற்பாடு

prabakaeans-father.jpgஜனவரி 6ல் காலமான காலஞ்சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிக் கிரியைகள் அவரின் பூர்வீக நிலமான வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது. ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை இவரது இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறையில் இடம்பெற்று வல்வெட்டித்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

கொழும்பில் இராணுவ காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக  பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தமது 86 வது வயதில் காலமானதாக பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளார் உறுதி செய்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் ஜனவரி 9ல் வல்வெட்டித்துறையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என திரு வேலுப்பிள்ளை குடும்பத்தினரின் உறவினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். திருமதி வேலுப்பிள்ளையினதும் அவர்களுடைய கனடாவில் உள்ள மகளினதும் விருப்பத்திற்கு இணங்க இறுதிக்கிரியைகளை தான் மேற்கொள்ள உள்ளதாக எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இவற்றுக்கு முன்பாக மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணையை மேற்கொள்ளும்படி தான் கேட்டுள்ளதாகவும் இறுதிக் கிரியையை குடும்பத்தினர் விருப்பத்தின்படி மேற்கொள்ள அரசு சம்மதித்து உள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.

வேலுப்பிள்ளையின் மரணத்தை அடுத்து அவரது மனைவியை விடுதலை செய்ய அரசு சம்மதித்து உள்ளதாகவும் தெரியவருகின்றது. இறுதிக்கிரியைகளில் பங்குபற்றும் திருமதி வேலுப்பிள்ளை அதன் பின்னர் தனது மகளிடம் கனடா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

திரு வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு தொடர்பாக யாழ் மாவட்ட பா உ எஸ் கஜேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ”இலங்கை அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் எம்மை விட்டுப் பிரிந்த மதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு அவரது பிரிவால் துயிருற்று இருக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ”தமிழ் ஈழ தேசிய இனத்தின் தன்னிகர் அற்ற தலைவராம் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உயிர் நீத்தார் என்ற செய்தி, துன்பப் பேரிடியாக, மனதை வாட்டி வதைக்கிறது.” என வைகோ தனது இரங்கலில் தெரிவித்து உள்ளார்.

._._._._._.

(இது புலிகளின் எப்பிரிவு என்பது குறிப்பிடப்படவில்லை.)

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
07/01/2010

இரங்கற் செய்தி

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார்.

இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
 

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும்: 04 – புன்னியாமீன்-

election_box.jpg(தொடர்ச்சி…..)

500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற  2ஆவது ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையின் 2வது ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1988 நவம்பர் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க 3 அபேட்சகர்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

1. திரு. ரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி)
2. திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி)
3. திரு. ஒஸி அபயகுணவர்தனா (ஸ்ரீலங்கா மக்கள் கட்சி)

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த யுத்தத்தினாலும், தென்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யினரால் நடத்தப்பட்டு வந்த கலவரங்களினாலும் தேசத்திலே ஓர் அமைதியற்ற சூழ்நிலையே இடம் பெற்றுவந்ததெனலாம். இலங்கையின் 1வது ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது மிகவும் பிரச்சினைக்குரிய கால கட்டமாகவே இக்கால கட்டம் விளங்கியது.

பல ஆண்டுகளாக வடக்குப் பகுதியிலும், 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தென்பகுதிகளிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இருப்பினும், 1988ல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் பிரச்சினைகளின் மத்தியிலேனும் நடத்த முடிந்தமையினால் ஜனாதிபதித் தேர்தலையும், தொடர்ந்து பொதுத் தேர்தலையும் நடாத்துவதில் அரசு உறுதியாகச் செயற்பட்டது. (மறுபுறமாக யாப்பு விதிகளின்படி ஜனாதிபதியினதும்,  பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிக்க முடியாத நிலையும் இருந்தது)

1988ம் ஆண்டின் இறுதி அரைப்பகுதிகளில் நிலைமை மிகமிக மோசமான முறையிலே இருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. போக்குவரத்து, தபால், தந்தித் தொலைத் தொடர்புகள் சீர்குலைந்திருந்தன. அடிக்கடி தூண்டப்பட்ட வேலை நிறுத்தங்கள், ஹர்த்தால் நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும், தீவிரவாதிகளினாலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் அரசாங்க இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்திருந்தன. இலங்கை பூராவும் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையற்ற நிலைமையே காணமுடிந்தது.

1988 டிசம்பர் 19ம் திகதியன்று தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட போதிலும்கூட, தேர்தலை நடத்துவதில் அரசாங்கமும் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கியது. தேர்தல் அதிகாரிகளை சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பமுடியாத நிலைகூட ஏற்பட்டன. மறுபுறமாக பல பகுதிகளில் வாக்காளர்களும் அச்சுறுத்தப்பட்டனர். வாக்களிக்கச் சென்றால் கொலை செய்யப்படுவர் என்ற பகிரங்க அறிவித்தல்களும் விடுக்கப்பட்டன.

பொலிஸ் அறிக்கையின்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப்பத்திரம் கோரப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடைபெற்ற திகதிவரை 500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இவர்களுள் மாகாணசபை உறுப்பினர்கள் நால்வரும், அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரும், 360க்கு மேற்பட்ட பொதுமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 100க்கும் மேற்பட்ட காவல், பாதுகாப்பு படையினரும் கொலை செய்யப்பட்டனர். இக்காலகட்டத்தில் நாளொன்றுக்குச் சரியாக 12 கொலைகள் இடம்பெற்றதாக அரசாங்கப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்வாக சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு ஒரு தேர்தல் அதிகாரியாயவது அனுப்பிக் கொள்ள முடியவில்லை. உதாரணமாக மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் 49 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்நிலை ஏற்பட்டதுடன், வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு உருவாகவில்லை. இதனால் 50 வாக்கெடுப்பு நிலையங்களையும் இரத்துச் செய்யும் நிலை தேர்தல் ஆணையாளருக்கு ஏற்பட்டது. போக்குவரத்து சீர்குலைவு காரணங்களினால் 800 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நீண்டநேரம் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டது.

களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலறுவை,  மொனராகலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 207 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு வாக்காவது பதியப்படாததையும் களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலநறுவை, பதுளை,  மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 375 வாக்களிப்பு நிலையங்களில் 100க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதையும் தேர்தல் ஆணையாளரின் அறிக்கை மூலமாகக் காணமுடிகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில் 1988 டிசம்பர் 19ம் திகதி நடைபெற்ற 2வது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 9,375,742 ஆகும். இவர்களுள் 5,186,223 (55.32%) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும் கூட 5,094,778 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக இருந்தன.

யாப்பு விதிகளுக்கு இணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50%க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 2,547,389 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். திரு. ஆர். பிரேமதாச அவர்கள் 2,569,199 வாக்குகளை அதாவது 50.43% வாக்குகளைப் பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1989.01.02ம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

1988 ஜனாதிபதித் தேர்தலில் 50% மான வாக்குகளைவிட (2,547,389) மேலதிகமாக 21,810 வாக்குகளையும், தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை விட 279,339 மேலதிக வாக்குகளையும் திரு. பிரேமதாச பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணம் –

கொழும்பு மாவட்டம்

ஆர். பிரேமதாச  (U.N.P)  361,337  (49.14%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  339,958 (46.23%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   34,020 (4.63%)

பதியப்பட்ட வாக்குகள்  1,088,780
செல்லுபடியான வாக்குகள்  735,315 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   11,295  (1.51%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 746,610 (68.57%)

கம்பஹா மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  350,092 (48.08%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  355,553 (48.83%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   22,467 (3.09%)

பதியப்பட்ட வாக்குகள்  969,735
செல்லுபடியான வாக்குகள்  728,112 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,054 (1.36%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 738,166 (76.12%)

களுத்துறை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  169,510 (46.74%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  179,761 (49.57%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   13,375 (3.69%)

பதியப்பட்ட வாக்குகள்  570,118
செல்லுபடியான வாக்குகள்  362,646 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,537 (1.77%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 369,183 (64.76%)

மத்திய மாகாணம் –

கண்டி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  234,124 (54.88%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  186,187 (43.65%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,266  (1.47%)

பதியப்பட்ட வாக்குகள்  628,240
செல்லுபடியான வாக்குகள்  426,577 (98.57%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,167 (1.43%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 432,744 (68.88%)

மாத்தளை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  37,007  (57.85%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  25,825  (40.38%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   1,135  (1.77%)

பதியப்பட்ட வாக்குகள்  214,938
செல்லுபடியான வாக்குகள்  63,967  (98.29%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,110  (17.1%)
அளிக்கப்பட்ட வாக்குகள்  65,077  (30.28%)

நுவரெலியா மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  112,135 (62.15%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  64,907  (35.98%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   3,371  (1.87%)

பதியப்பட்ட வாக்குகள்  229,769
செல்லுபடியான வாக்குகள்  180,413 (98.19%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,320 (1.81%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 183,733 (79.96%)

தென் மாகாணம்

காலி மாவட்டம்

ஆர். பிரேமதாச    (U.N.P)   124,912 (44.62%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  148,615 (53.09%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,417  (2.29%)

பதியப்பட்ட வாக்குகள்  571,303
செல்லுபடியான வாக்குகள்  279,944 (98.43%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,461 (1.57%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 284,405 (43.78%)

மாத்தறை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  45,399  (42.93%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  57,424  (54.30%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   2,922  (2.76%)

பதியப்பட்ட வாக்குகள்  451,934 
செல்லுபடியான வாக்குகள்  105,745 (98.14%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,003 (1.86%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 107,748 (23.84%)

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  41,198  (49.62%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (U.N.P)  39,343  (47.39%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   2,478  (2.98%)

பதியப்பட்ட வாக்குகள்  295,180 
செல்லுபடியான வாக்குகள்  83,019  (95.56%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,855 (4.44%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 86,874  (29.43%)

வடமாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  33,650  (28.03%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  44,197  (36.82%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   42,198 (35.15%)

பதியப்பட்ட வாக்குகள்  591,782 
செல்லுபடியான வாக்குகள்  120,045 (93.38%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,517 (6.62%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 128,562 (21.72%)

வன்னி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  10,580  (55.78%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  4,889  (25.77%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   3,500  (18.45%)

பதியப்பட்ட வாக்குகள்  142,723 
செல்லுபடியான வாக்குகள்  18,969  (96.40%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   708  (3.60%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 19,677  (13.79%)

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  61,657  (50.99%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  21,018  (17.38%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   38,243 (31.63%)

பதியப்பட்ட வாக்குகள்  215,585 
செல்லுபடியான வாக்குகள்  120,918 (95.91%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,163 (4.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 126,081 (58.48%)

திகாமடுல்லை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  96,420  (50.77%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  83,137  (43.78%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   10,352 (5.45%)

பதியப்பட்ட வாக்குகள்  265,768 
செல்லுபடியான வாக்குகள்  189,909 (98.08%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,802 (1.92%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 193,711   (72.89%)

திருகோணமலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  36,841  (45.70%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  29,679  (36.81%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   14,103 (17.49%)

பதியப்பட்ட வாக்குகள்  152,289 
செல்லுபடியான வாக்குகள்  80,623  (98.38%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,326 (1.62%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 81,949  (53.81%)

வடமேல் மாகாணம்

குருநாகலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  198,662 (51.12%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  182,223 (46.89%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   7,717  (1.99%)

பதியப்பட்ட வாக்குகள்  784,986 
செல்லுபடியான வாக்குகள்  388,602 (98.91%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,281 (1.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 392,883 (50.05%)

புத்தளம் மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  125,339 (55.89%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  94,823  (42.28%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   4,093  (1.83%)

பதியப்பட்ட வாக்குகள்  319,003 
செல்லுபடியான வாக்குகள்  224,255 (98.70%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,965 (1.30%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 227,220 (71.23%)

வடமத்திய மாகாணம்

அநுராதபுர மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  56,951  (42.94%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  73,154  (55.15%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   2,529  (1.91%)

பதியப்பட்ட வாக்குகள்  334,074
செல்லுபடியான வாக்குகள்  132,634 (98.36%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,027 (1.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 134,841 (40.36%)

பொலநறுவை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  26,392  (55.54%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  20,173  (42.45%)
ஓஸி அபேகுணவர்தனா (S.L.M.P)   957  (2.01%)

பதியப்பட்ட வாக்குகள்  163,741
செல்லுபடியான வாக்குகள்  47,522  (97.62%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,157  (2.38%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 48,679  (29.73%)

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  80,779  (60.08%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  50,223  (37.36%)
ஓஸி அபேகுணவர்தனா (S.L.M.P)   3,440  (2.56%)

பதியப்பட்ட வாக்குகள்  329,462
செல்லுபடியான வாக்குகள்  134,442 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,276 (2.38%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 137,718 (41.80%)

மொனராகலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  16,872  (63.21%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  9,123  (34.18%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   697  (2.61%)

பதியப்பட்ட வாக்குகள்  161,927
செல்லுபடியான வாக்குகள்  26,692 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   851  (3.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 27,543  (17.01%)

சப்பிரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  180,622 (51.75%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  159,879 (45.81%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   8,516  (2.44%)

பதியப்பட்ட வாக்குகள்  457,224 
செல்லுபடியான வாக்குகள்  349,017 (98.84%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,113 (1.16%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 393,130 (77.23%)

கேகாலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  168,720 (57.11%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  119,769 (40.54%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,923  (2.34%)

பதியப்பட்ட வாக்குகள்  437,178 
செல்லுபடியான வாக்குகள்  295,412 (98.57%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,277 (1.43%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 299,689 (68.55%)

இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் 1988

இறுதித் தேர்தல் முடிவுகள்

ஆர். பிரேமதாச   (U.N.P)  2,569,199 (50.43%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  2,289,860 (44.94%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   235,719 (4.63%)

பதியப்பட்ட வாக்குகள்  9,375,742
செல்லுபடியான வாக்குகள்  5,094,778 (98.24%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   91,445 (1.76%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 5,186,223 (55.32%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   2,547,389

குறைந்த பட்ச வாக்குகளை விட ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    21,810

இரண்டாம் இடத்தைப் பெற்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களை விட திரு ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
279,339

தொடரும்…

ஜிஹாத், அல்பத்தாஹ், புலிகள், சங்கிலியன் படை. : யஹியா வாஸித்

Mosque_Bomb_Blast_Mar_2009புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும், இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.

1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்கு மாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள் குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.

நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓல்ஆர் பிறதர்ஸ்.

புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடிவெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்காமாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள். மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடி கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓல்ஆர் கசின்.

வீடு கட்ட வேண்டும். புது வீடுகட்ட நிலம் பார்க்க, நிலக்கால் நாட்ட தமிழ் சாத்திரிமாருக்கிட்டத்தான் அத்தனை காக்காமாரும் போவார்கள். கிழக்குமாணத்தில் உள்ள 90 வீதமான முஸ்லீம்களின் வீடுகள் 1983க்கு முதல் தமிழ் சகோதரர்களால்தான் கட்டப்பட்டது. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உதவுவது போல் செய்வார்கள். எஸ் வீ ஓல் ஆர் சேம் பிளட்.

ஆம் தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்கள் வரும். கல்முனை காக்காமாருக்கும், நற்பிட்டிமுனை தமிழ் சகோதரர்களுக்கும், அக்கரைப்பற்று காக்காமாருக்கும், பனங்காடு, கோளாவில் தமிழ் சகோதரர்களுக்கும், காத்தான்குடி காக்காமாருக்கும், ஆரப்பத்தை தமிழ் சகோதரர்களுக்குமிடையில் இரண்டு வருடத்துக்கொரு முறை இனக்கலவரம் வரும். இது திட்டமிட்ட புத்திஜீவிகளால் உருவாக்கப்படும் இனக்கலவரம் அல்ல. நேற்று இரவு தென்னங்கள்ளையோ அல்லது வடிசாராயத்தையோ அருந்தியவர்களால் உருவான இனக்கலவரம். முதல்நாள் இரண்டு பகுதியிலும் இரண்டு பேரின் செவியை (காது) அறுப்பார்கள்.. அடுத்தநாள் இரண்டு பகுதியிலும் கொஞ்சம் சோடா போத்தல் பறக்கும். மூன்றாம் நாள் அப்பகுதி பொலீஸ் அதிகாரி இருபகுதியிலும் கோயில் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்களை அழைத்து. ஓகே. இன்றிலிருந்து சமாதானம் சரியா என்பார். இருதரப்பாரும் தலையாட்டுவர். பகல் ஒரு மணிபோல் போலீஸ் வண்டியில் ஸ்பீக்கர் கட்டி. சரி இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டது. நாளை கடை திறக்கலாம், பாடசாலைக்குப் போகலாம், எல்லாம் வழமை போல் இயங்கும் என்பார்கள். டண். இரண்டு பகுதியிலும் போத்தல் எறிந்த குறுப்புகள் அன்று பின்னேரமே சாறாட ( சிங்கள சகோதரர் ) கொட்டிலில் சோமபானம் அருந்திக் கொண்டிருப்பர். எஸ் வீ ஓல் ஆர் சக்களத்திகள்.

இந்த சக்களத்தி சண்டைகளையும், நண்பர்கள் சண்டையையும். மச்சான் மச்சினன் சண்டையையும் ஊதிப்பெருப்பித்த புண்ணியம் கிழக்கு மாகாணத்தில் 1979ல் வீசிய புயல், வெள்ளத்தையே சாரும். அன்று கிழக்கில் மருதமுனை, நீலாவணை, சின்னக்கல்லாறு, பெரிய கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, பெரிய போரதீவு, கோயில் போரதீவு போன்ற இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டது. இப்பகுதி முழுக்க முழுக்க தமிழ் சகோதர, சகோதரிகள் வாழும் பகுதிகள். உடனடியாக அன்று பிற்பகலே பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையுள்ள முஸ்லீம் இளைஞர்கள் புஸ்பைக்கிலிலும், கால்நடையாகவும் சென்று அவர்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார்கள்.. செய்தோம். ( இப்போதும் வன்னி புனிதர்களுக்கு, சட்டி பானையுடன் ஓடிப்போய் முதல் சோறு போட்டவனும் இந்த காத்தான்குடி சோனிகள்தான். திஸ் இஸ் இஸ்லாம். வட் ஹெப்பன் ரு வணங்கா மண். தற் இஸ் பக்கா கெப்பிற்றலிஷம். தற்ஸ் வை ரூ லேட் போர் எவ்ரிதிங் ) அப்போது, ஒருவாரத்தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றொம் பேர்வழி எனக்கூறிக் கொண்டு வந்து, உதவியுடன் உபத்திரவத்துக்கும் பிள்ளையார் சுழிபோட்டார்கள்.

அடியாத மாடு படியாது, அடி உதவுகின்றாப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான், யாமிருக்கப் பயமேன் என ஆரம்பித்து, எங்களை, ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களை, கொத்தி கூறு போட்டு, கொத்து பராட்டா போட்டு, கொக்கரித்து, கொந்தளிக்க வைத்து, டேய் காக்கா வாறான், காக்கா வாறான் கதையை நிற்பாட்டு, ஏதோ றெக்கி எடுக்கத்தான் வாறான் என்ற அளவுக்கு எங்கள் நண்பர்களை, எங்களுடன் வாழ்ந்தவர்களை, எங்களுடன் ஒன்றாக உறங்கியவர்களை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, திரும்பவும் ஆட்ட நினைக்கின்றீர்களே, இது தகுமா, இது தருமமா. கோவலனை கண்ணகி மாதவி விடயத்தில் மன்னிக்கவில்லையா, நடுக்காட்டில் தன்னை விட்டு விட்டு ஓடிய நளனை தமயந்தி மன்னிக்கவில்லையா, தன்னை வைத்து சூதாடிய அயோக்கியன் தருமனை பாஞ்ஞாலி என்ற பதிவிரதை மன்னிக்கவில்லையா. பிளீஸ் எங்களை கொஞ்சம் பழையபடி சேர்ந்து வாழத்தான் விடுங்களேன். வீ ஆர் ஸ்ரில் திங்கிங் எபவுட் அவர் ஓல்ட் கல்ச்சர்.

1981இல் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறூக். வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் அலைந்து திரிந்தார். அச்சமயங்களில் இவர் யாழ்பாணத்திலுள்ள டவுண் பள்ளி வாசலில்தான் ( இப்போதைய ஈபிஆர்எல்எப் ஒபீஸ் அருகில் உள்ள பள்ளி வாசல் ) தங்கினார். ஒரு சில நாட்கள் சுபாஸ்கபேயில் வேலையும் செய்தார். பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு கூவி விற்கும் வியாபாரியுடன் சேர்ந்து சிறு சிறு வியாபாரம் செய்தார். 1982 கடைசியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில ஈபிஆர்எல்எப் முஸ்லீம் இளைஞர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பள்ளியில் தங்கியிருந்தார். அப்போது இவர் ஈபிஆர்எல்எப் இல் இணைய முயற்சி செய்தார். இவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஐந்து சந்தியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்தார்.

அதன் பின் இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், புலிகள் இயக்கத்தவருமான கெப்டன் நரேஷ் ( இவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றார் ) அவர்களூடாக 1984 முற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இவரது வேகமான வளர்ச்சி, இறைச்சிக்கடை அனுபவம் புலிகளை மலைக்க வைத்தது. இவரது வெட்டுக்குத்துகளைப் பார்த்த கிட்டண்ணா இவரை தனது மெய்பாதுகாவலராக இணைத்துக் கொண்டார். ஒருசில நேரங்களில் இவரது வளர்ச்சியில் லெப்.கேணல்.ராதாவுக்கு, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு மன உளர்ச்சி, தளர்ச்சி இருந்தது. ஆம் அது 07-01-1987ல் சிங்கள கூலிப்படை கொன்றது என்ற பெயரில் பிற்பகல் 5.55க்கு கே.கே.எஸ்.வீதியில் ராதா தலைமையில் அரங்கேறியது. அக்கரைப்பற்று ( அக்கு, ஆர், அரை, பற்று )பெற்றெடுத்த ஒரு மறவன் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தானடா, கர்ணா எய்தவன் கர்ணனடா, கர்ணா எய்தவன் ராதாவடா. இது பாறூக்கின் சரித்திரத்தில் ஒரு துளி.

முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் இரண்டாவது மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை படித்து, ஏஎல் யாழ். மகஜனாவில் படித்தவர். 1983 ஆரம்பத்தில் பரீட்சை முடிவை எதிர்பார்த்து அக்கரைப்பற்றில் இருந்தார். அப்போது 1983 ஜூலை கலவரம் வெடித்து, குட்டிமணி, தங்கத்துரை எல்லாம் பனாகொடையில் கொல்லப்பட, தமிழ் சிறைக்கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட, அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லீம் இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் சேர்ந்து 1983 செப்டம்பரில் திருக்கோவில், தம்பிலுவில் கிராமங்களில் பொதுமக்களின் ஆயுதங்களை கொள்ளையிட்டார்கள். சிலதை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் பெற்றார்கள்.

அப்போது, முஸ்லீம் இளைஞர்கள் இந்த மொகமட் ராபியையும் அந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்கள். முகமட் ராபி பங்கு பற்றிய முதல் நிகழ்வு இது. அதன் பின் இவர் பல முறை ஈபிஆர்எலஎப் இல் இணைய முயற்சித்தார். அப்போது இந்திய அரசும், இந்திய ரோவும் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க முன் வந்திருந்தது. இச்செய்தி பத்மநாபா ஊடாக முதல் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த வாரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து 67 இளைஞர்கள் அனுப்பப்பட்டார்கள். இதில் இந்த முகமட் ராபியும் ஒருவர். இவர் ஒருவர்தான் முஸ்லீம் இளைஞர். யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எப்புக்கு அப்போது பொறுப்பாக இருந்த தோழர்கள் அவரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மற்றவர்களை மயிலிட்டி ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆம் தடங்கல் அப்போதே ஆரம்பித்து விட்டது. என்றாலும் அப்போது ஈபிஆர்எல்எப்பில் கிழக்கு மாகாணத்தில் எடுபிடியாக இருந்த ஒருவரின் ( எல்லா இயக்கங்களுமே முஸ்லீம்களை எடுபிடியாகத்தான் பாவித்தார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ) நச்சரிப்பில், அவரே நேரடியாக யாழ். வந்து தோழர்களை உண்டு இல்லை என பண்ணி, முகமட் ராபியை மயிலிட்டியில் படகில் ஏற்றிக்கொண்டு வேதாராண்யம் ஊடாக மெட்ராஸ் சூழைமேடுவரை வந்து ராபியை, நாபாவின் ஆசீர்வாதத்துடன் உத்தரப்பிரதேசம் அனுப்பி வைத்தார்.

1984 பெப்ரவரிக்குப் பின் கிழக்கு கிழக்காக இல்லை. தடி எடுத்தவன், தண்ணி அடித்தவன், மச்சான் போட்டு பேசியவன், படலைக்குள் புகுந்து மையிறு புடுங்கியவர்கள் எல்லோரும் தடியுடன் இருந்தார்கள். இது கொஞ்சம் வித்தியாசமான தடி. இவனை பார்த்தால் கோழிக் கள்ளன் போல் இருக்கின்றான் மச்சான். போடு, போடு போட்டுத்தள்ளு என போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சகோதரர்கள், ஒன்றாக எங்களை செக்கண் சோவுக்கு அழைத்துச் சென்றவர்கள், வா மச்சான், வாடா காக்கா என அன்பாக அழைத்த நண்பர்கள். வாடா காக்கா என, அடிநாக்கு நாசியையும், தொண்டையையும் ஒட்டுற மாதிரி அழைத்தார்கள். அதில் அன்பில்லை. ஆக்ரோஷம் இருந்தது. பள்ளி வாசல்கள், கடைத்தொகுதிகள், வயல்வெளிகள் எல்லாமே அழிந்து போயின. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் இருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டோம். வேதனைப்பட்டோம். கையில் தடி வைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து சோனிகளும், தமிழனும் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்பட்டார்கள். கஸ்டப்பட்டோம். கூலித்தொழிலாழிகள் ஒரு வேளை உணவுக்கு அல்லாடினர்.

இதில் இரு பகுதியினரையும் குறை சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருந்து திட்டமிட்டு செய்தார்கள். மூஸ்லீம் இளைஞர்கள் எவ்வித ஆயுதமயப்படுத்தலுமின்றி கூட்டம், கூட்டமாக சென்று சில அநாகரிக செயல்களை அரங்கேற்றினர். இதற்கு அரசும் பின்னால் நின்று நெய்யூற்றியது. இவற்றின் உச்சக்கட்டம்தான் சிறிலங்காவில் ஜிஹாத் அமைப்பு தோன்ற வழி வகுத்தது. ஆம் 1984 ஜூன் 17ல் ஜிஹாத் உருவானது. முழு சிறிலங்காவிலுமிருந்து 40 நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் அது தொடங்கியது. காலி கோட்டை, வேருவளை தொடங்கி யாழ். நயினாதீவு வரையுள்ள மனிதாபிமானிகளின் உளப்பூர்வமான செயல்பாட்டுடன் அது தொடங்கியது.

அது அக்கரைப்பற்றில்தான் உருவானது. உருவாகி அடுத்த தினமே நாடுமுழுக்க துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் வினியோகித்தது. நாங்கள் ஆள வந்தவர்களல்ல. வாழவந்தவர்கள். பிளீஸ் எங்களை விட்டுடுங்கோ என கரம் கூப்பி சகோதர இனங்களை மன்றாடியது. அதன் பின், இனி எம் பகுதியில் நடக்கும் அத்து மீறல்களை நாங்கள் தட்டி கேட்போம் என சிறிலங்கா முழுக்க பறை சாற்றியது. அதன் பின் நடந்த, ஆள் கடத்தல், வரி, கப்பம், கொலைகளுக்கெல்லாம் ஜிஹாத் உரிமையுடன் நடவடிக்கை எடுத்தது. 1985 இல் பயிற்சி முடித்துக் கொண்டு முகமட் ராபி சிறிலங்கா வந்து திருக்கோயில் பகுதியில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தங்கியிருந்தார். இவரும் ஜிஹாத்துடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் இவரை திருக்கோவிலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த ஒரு தமிழ் அமைப்பு முடிவெடுத்து, இவரை சங்கிலியால் கட்டி 1985 ஜனவரியில் ஒரு கொரளா காரில் கடத்திச் சென்றார்கள். ஆம் ஜிஹாத் அமைப்பின் ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், எவ்வித சிராய்ப்புமின்றி முகமட் ராபி நிந்தவூர் பிரதான வீதியில் ஒரு அதிகாலைப் பொழுது மீட்கப்பட்டார். திஸ் ஒப்பரேஷன் புறம் சிறிலங்கன் ஜிஹாத்.

அன்று முதல் அவர் ஜிஹாத் அமைப்பின் இராணுவ தளபதியாக செயல்பட்டார் ( இவர் எக்காலத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை ). ஜிஹாத் அமைப்பின் வளர்ச்சி கண்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி நேரடியாக இவர்களை அழைத்து, இரண்டு மூன்று பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஆயுத உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆம் பயிற்சியும் வளங்கப்பட்டது. ஜிஹாத் பல முறை புலிகளுடன் அக்கரைப்பற்றிலும், காரைதீவிலும், மூதூரிலும் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. ஜிஹாத் அமைப்பின் மிக, மிக பொறுப்பானவர்கள் எவ்வித உயிரச்சமுமின்றி புலிகள் சொன்ன இடங்களுக்கு சென்று பேச்சு வார்த்தைகள் நடாத்தியுள்ளனர். பேச்சு வார்த்தைகளுக்கு சென்றவர்களை கடத்த முயன்னற போதும், வார்த்தை ஜாலங்களால் தப்பி வந்ததுமுண்டு.

ஆம் 1985 மே 21ம் திகதி இரவு 7.15க்கு ராபி கிழக்கு மாகாண ஈரோஸ் அமைப்பினரால் நெஞ்சில் 27 துப்பாக்கி சன்னங்கள் விளாச சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவ்விளைஞர் கடந்த 12 வருடங்களாக பிரான்சில் இருந்து, போன வருடம் இங்கிலாந்துக்கு மலையேறியுள்ளார் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ளலாம். அக்கொலைக்கு கட்டளை இட்டவர் இப்போது முஸ்லீம் சகோதரர்களுடன் வியாபாரங்கள் செய்கின்றார். ஆம் மன்னிப்பை விட உயர்ந்த பண்பு இந்த உலகத்தில் வேறு என்ன மண்ணாங்கட்டி இருக்கின்றது.

இந்த ஜிஹாத் அமைப்பு அரசு செய்த சில கூலிக்கு மாரடிக்கும் வேலைகளை செய்ய மறுத்தது. ஆம் சகோதர இனத்தை இரத்த வெறி கொண்டு தாக்குவதை ஜிஹாத் குழுவினர் அங்கீகரிக்க மறுத்ததின் பயனாய், அரசு கட்டாக்காலிகளை அழைத்து துப்பாக்கிளை கொடுத்து என்னென்னவோ செய்ய தூண்டியது. கூலிக்கு மாரடிக்கும் அக்குழு நிறைய செய்தது. அவை அனைத்தும் ஜிஹாத் அமைப்பின் தலையில் கட்டப்பட்டது. ஆம் இவ்வாறு ஒன்று நடந்தால் எப்படி சமாளிப்பது என ஜிஹாத் அமைப்பினர் ஆரம்பத்திலேயே திட்டமிட்டனர். ஆம். ஜிஹாத் அமைப்பிலிருந்து பலர் மறைமுகமாக தெரிவு செய்யப்பட்டு, அல்பத்தாஹ் என்ற அமைப்பு கட்டப்பட்டது. இதுவும் 1984 ஒக்டோபரில் உதயமானது. அல்பத்தாஹ். நிறைய மார்க்க , சன்மார்க்க பணிகள் மற்றும் விதவைகளுக்கு உதவுதல், நோயாளிகளுக்கு, பாடசாலைக்கு செல்ல வழியில்லாதவர்களுக்கு உதவுதல் எனவும் செயல்பட்டதுடன், சில நாகரிக நடவடிக்கைகளிலும் இறங்கியது.. ஆம் 1985 மே 21ல் சுட்டுக் கொல்லப்பட்ட ராபியின் ஞாபகார்த்தமாக, அக்கொலைக்கு துணைபோன சகலரையும் 1985 ஜூன் 21 இரவு 7.15 க்கும், 1986 மே 21 இரவு 7.15 க்கும் கழுவிலேற்றியது. இறுமாப்புடன் உரிமையும் கோரியது.

ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்கா முழுக்க ஒண்ணரை லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியது. அல்பத்தாஹ் என்ற தலைப்பில், அல்லாஹ் அக்பர், அல்பத்தாஹ் அமைப்பின் இராணவத் தளபதியும், முகமட் ஹாசீம் அவர்களின் மகனுமான முகமட் ராபி, 1985-05-21 இரவு 7..15 க்கு தமிழ் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரம் ராபிக்கள் உருவாக வழி வகுத்துள்ளனர் என்பதை, மிக, மிக பெருமையுடன் அறியத்தருகின்றோம். அல்பத்தாஹ், மத்திய செயற்குழு என நாலுக்கு நாலங்குலத்தில் அது வெளியாகி அரபு நாட்டு எம்பஸிகளின் கதவுகளையும் தட்டியது.

1985 மே 21 ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்காவின் முழு பாதுகாப்பு தலைமைகளும் அக்கரைப்பற்றில் நின்றன. அம்பாரையில் இருந்தும், கொண்டைகட்டுவான் இராணுவ முகாமில் இருந்தும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாராகுங்கள். அழியுங்கள் தமிழர்களின் குடியிருப்புக்களையும், வரலாறுகளையும் என்றார்கள். ஆம் உடனடியாக ஜிஹாத், அல்பத்தாஹ் பொறுப்பாளர்கள் கூடி இது தருணமல்ல, இது பொருத்தமுமல்ல, இது நாகரிகமும் அல்ல என முடிவெடுத்தார்கள். அரசுடன் ஒத்துழைப்பதில்லை என ஒரு சேர அத்தனை மத்திய குழு உறுப்பினர்களும் முடிவெடுத்தார்கள் ( சம்மாந்துறையைச் சேர்ந்த, மறைந்த அன்வர் இஸ்மாயீல் எம்பி அவர்கள் அல்பத்தாஹ் அமைப்பில் மத்திய செயற் குழு உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவர் என்பதை இங்கு பெருமையுடன் சொல்லலாம். ) பாதுகாப்பு பிரிவும், கொஞ்சம் ரத்தம் துடிப்பவர்களும் எவ்வளவோ தலையணை மந்திரங்கள் ஓதினார்கள். ஆனால் அன்பு, மனிதாபிமானம், பொறுப்புணர்ச்சி, எதிர்காலம் என்பதில் முழு நம்பிக்கை கொண்ட சிறிலங்கா ஜிஹாத் அமைப்பு, எய்தவனிருக்க அம்பை நோக வைக்க விரும்பவில்லை. ஆனால்,

ஆயுதம் தருகின்றோம், கொழுத்து முஸ்லீம்களின் பள்ளிவாசல்களை என்றதும் கொழுத்தியவர்களும், ஆயுத கப்பலே அனுப்புகின்றோம் விரட்டு சோனிகளை என்று இஸ்ரேல் சொன்னதும் ஒரு மாவட்ட முஸ்லீம்களின் வரலாறையே அழிக்க முற்பட்டவர்கள்தான் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அமைப்பு ரீதியாக செயல்பட்ட எந்த முஸ்லீம்களும் எக்காலத்திலும் கூலிக்கு மாரடிக்கவில்லை. மாரடிக்கவும் மாட்டான். தற் இஸ் இஸ்லாம்.

இந்த அல்பத்தாஹ் அமைப்பின் செயல்பாடுகளில்தான் அனைவரும் அக்காலங்களில் கவனம் செலுத்தினர். யார் இவர்கள். எங்கிருந்து தொழில்படுகின்றார்கள் என கண்ணுக்குள் விளக்கெண்ணை போட்டு தேடினார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் பிற்காலங்களில். ஓ இப்படியும் ஒரு ஆள்மாறட்டம் செய்யலாமோ என தோன்றிய சங்கிலியன் படை. ஆம் 1991 முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியதும், முஸ்லீம்களின் வீட்டுத் தொகுதியொன்றை விடுதலைப்புலிகள் தமது அச்சகமாக பாவித்தார்கள். அந்த அச்சகத்துக்கு வே.பிரபாகரன் அவர்கள் வந்து போவது வழமை. ஆனால் ஒரு நாள் தலைவர் வந்து ஒரு முக்கால் மணி நேரத்தின் பின் வெளியேறி இரண்டு நிமிடத்தில் அவ் அச்சகம் வெடித்துச் சிதறியது. அதற்கும் இந்த அல்பத்தாஹ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற போர்வையில், யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அக்காலங்களில், தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்த முஸ்லீம் சகோதரர்களை இந்த சங்கிலியன் படை வறுத்தெடுத்ததாகவும் அப்போது பட்சிகள் பேசிக்கொண்டன.

இப்போது சிறிலங்காவில் ஜிஹாத் இருக்கிறதா, இயங்குகின்றதா என்பதுதான் அனைவரின் கேள்வியும். ஜிஹாத் என்பது வாழ்க்கையுடன், வாழ்க்கைக்காக போராடுவது. அடுத்தவனைப் போய் வம்புக்கிழுப்பதல்ல. வம்புக்கிழுக்க இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை. அப்போதைய ஜிஹாத்தை சிலர் வம்புக்கிழுத்து, வம்பில் மாட்டிவிட நினைத்தனர். அதனால் நடப்பது தர்மயுத்தம், தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் ஒரு தர்மயுத்தம், அது தன் வழியில் நடக்கட்டும், நாம் முதலில் எம்மை புடம் போட்டுக் கொள்வோம். இக்கால கட்டங்களில் எம்மிடமும் ஆயுதம் இருந்தால் அது வேறு, வேறு பின் விழைவுகளை ஏற்படுத்தும் என்பதை பல மார்க்க அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் எடுத்துரைக்க, ஜிஹாத், அல்பத்தாஹ் அமைப்புக்களின் பைல்கள் மூடப்பட்டு அனைவரும் 1987 டிசம்பரில் நாடு கடந்தனர். கடந்து, முஸ்லீம்களின் கல்வி, வியாபார விடயங்களில் 100 வீத கவனம் செலுத்தினர். செலுத்திக் கொண்டுமிருக்கின்றனர். அதன் பயன்தான் இன்றைய முஸ்லீம்களின் கல்வி, வியாபார எழுச்சிகளெல்லாம். இல்லாவிட்டால், இன்றைய எமது முஸ்லீம் இளைஞர்கள் எங்கேயோ அகதி அந்தஸ்துக்கு விண்ப்பித்துக் கொண்டிருப்பர்.

இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது. இப்போது அனைவருக்கும் தேவை ஒரு பொருளாதாரப் புரட்சி. அந்தப் புரட்சி வெடிக்க நிச்சயம் சிறிலங்கா ஜிஹாத் கொடிபிடிக்கும். அப்புறம் மகிந்தவின் காதையோ, ரணிலின் காதையோ, சரத்பொன்சேகாவின் காதையோ கடித்து, மானில சுயாட்சியாவது எங்களுக்கு தாங்கோ மக்காள் என கேட்போம். ஒன்று பட்டால்தால் உண்டு வாழ்வு.

இதில் உள்ள தகவல்கள் எமது உள்ளக் கிடக்கைகளின் ஒரு பனித்துளி அன்பின் பக்ஷீர் காக்கா. இவ்வாறு ஆயிரம் கோடி பனித்துளிகள் வன்னியில் உறங்கிக் கிடக்கின்றன சகோதரர்களே. இனி இவைகளை மறந்துவிட்டு நல்லதோர் உலகம் செய்வோம்.

செல்லசாமியும், பொன்சேகாவுக்கு ஆதரவு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த எஸ். செல்லசாமியும், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். 

மீள் குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த இந்தியாவிலிருந்து தேவையான பொருட்கள்

வடக்கில் மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக, கூடாரத் துணி வகைகளும் ஏனைய உபயோகப் பொருட்களும் இந்தியாவிலிருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து உபயோகப் பொருட்கள் கிடைக்கப்பெற்றதும் கிளிநொச்சியில் மீள்குடியேற்றப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்று அரச அதிபர் கூநினார்.

பூநகரி, கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்கனவே மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்த சகலரையும் ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் மீள்குடியமர்த்தும் இலக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடியிருப்புப் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிவில் நிர்வாகத்தைச் சீராக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் தீர்ந்து வருவதால், அவை விரைவில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுகின்றன. அவை வந்து சேர்ந்ததும், தயார் நிலையில் உள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்களென்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா.வின் பிலிப் அல்ஸ்ரனுக்கு விளக்கம் – “விசேட குழு விபரமாக ஆராய்ந்த பின் முழுமையான பதில்

_philipalston.jpgஎதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்த கருத்துகளுக்கு விளக்கம் அளிக்குமாறு நீதி விசாரணைக்குப் புறம்பானதும் தன்னிச்சையானதுமான மரண தண்டனை விவகாரத்தைக் கையாளும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் கோரியிருந்ததற்கு அரசாங்கம் பதிலை அனுப்பியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார்.

பிலிப் அல்ஸ்ரனின் கடிதத்துக்கு பதில் அளிப்பதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார். விசேட அறிக்கையாளருக்கு நாம் கடிதம் அனுப்பியுள்ளோம். அவரின் கடிதத்தின் உள்ளடக்கத்தை நாம் ஆராய்ந்து வருவதாக அவருக்கு விளக்கியுள்ளோம். அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை விசாரிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் போகொல்லாகம மேலும் தெரிவித்திருப்பதாவது ஜெனரல் பொன்சேகாவின் அறிக்கைகள் இலங்கை அரசுக்குத் தொடர்ச்சியான சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. ஆதலால் விசேட அறிக்கையாளரின் கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களுக்கு பதிலளிக்க அதிகாரிகளுக்கு அதிக காலம் தேவைப்படுகிறது. கடிதம் அரசுக்கும் மக்களுக்கும் அடையாளம் வெளிப்படுத்தப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கும் அதிகளவிலான மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆதலால் இந்த விவகாரங்கள் சிலவற்றுக்கு உடனடியாக எம்மால் பதிலளிக்க முடியாது. எமது நிலைப்பாட்டை நாம் தெளிவாக முன்வைத்துள்ளோம். ஆவணத்தை குழு ஆய்வு செய்த பின்னர் வெளிவிவகார அமைச்சு பதிலை அனுப்பிவைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.ஜெனரல் விடுத்த அறிக்கைகள் தொடர்பாக அவரை விசாரணை செய்யும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது நாட்டின் சட்டத்தை எவராவது மீறினால் நடவடிக்கை எடுப்பதற்கு எந்த அரசாங்கத்திற்கும் உரிமை உண்டு என்றும் அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார்.

முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை குடும்பங்களாக மீள் இணைக்க நடவடிக்கை. சட்டபூர்வமாக மணம் முடித்து வைக்கவும் திட்டம்

புலி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட 144 குடும்பங்களைத் துரிதமாக மீள இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் தயாரத்னாயக்க தெரிவித்தார். பெற்றோர் வேறாகவும் பிள்ளைகள் வேறாகவும் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள் முதல் தடவையாக குடும்பமாக ஒன்றிணைக்கப்பட உள்ளதாகவும் அவர் குநிப்பிட்டார். மீளிணைக்கப்படும் குடும்பங்கள் வவுனியாவில் அமைக்கப்பட உள்ள குடும்பப் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட உள்ளனர்.

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 144 குடும்பங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் அவர்களின் 6 பிள்ளைகள் தமது பெற்றோருடன் தற்காலிக புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ளதோடு 11 பிள்ளைகள் தமது உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.

மேற்படி 144 குடும்பங்களில் பலர் சட்டபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லை எனவும் புலிகளின் அனுமதிப்படி மட்டுமே திருமணம் முடித்துள்ளதாகவும் ஆணையாளர் கூநினார். இவர்களுக்கு சட்டபூர்வமாக மணம் முடித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர்கள் 11, 544 பேரில் 1, 882 பேர் ஆண்கள், 8,667 பேர் பெண்கள், 590 பேர் சிறுவர்களாவர். இவர்களில் 4,143 பேர் திருமணமானவர்கள் எனவும், 6, 849 பேர் திருமணமாகாதவர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் பணியகம் தெரிவித்தது.

இவர்களில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடையே பிரிந்து காணப்படும் 144 குடும்பங்களை ஒரே இடத்தில் தங்கவைத்து புனர்வாழ்வு அளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் கூறினார். அவர்களின் பிள்ளைகளையும் தமது பெற்றோருடன் தங்கவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘கூட்டமைப்பின் தீர்மானத்தினால் பாதிப்பு ஏற்படப் போவதில்லை’

srisena.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் கூட்டமைப்பின் தீர்மானத்தினால் எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் மேலும் கூறியதாவது:-

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று மூன்று குழுக்களாகப் பிரிந்து காணப்படுகின்றது. பெரும் பிளவுகள் காணப்படுகின்றன.

சம்பந்தன் தலைமையில் ஒருசிலர் சரத் பொன்சேகாவை ஆதரித்த போதும் அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கே ஆதரவுகளை வழங்குகின்றனர். இந்த நிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.