13

13

‘ஆட்சி’ மாற்றமா? ‘ஆள்’ மாற்றமா? : ந சிறீகாந்தா (தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ)

Sivajilingam M K Presidential CandidateSivajilingam M K Presidential CandidateSivajilingam M K Presidential Candidateஅன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
எதிர்வரும் 26ந்திகதி சனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது இத் தேர்தலில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவர்களில் இரண்டு வேட்பாளர்களுக்கிடையே தான் சனாதிபதிப் பதவிக்கு கடும் போட்டி நிலவுகின்றது. இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் – மகிந்த ராஜபக்ச. மற்றவர் – ஜெனறல் சரத் பொன்சேகா. மகிந்த ராஜபக்ச – ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர். சரத் பொன்சேகா – எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் வேட்பாளர். இந்த இருவரும், இப்பொழுது தமிழ் மக்களின் வாக்குகளையும் கோரி நிற்கின்றனர்.

இந்த இருவரைப் பற்றியும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்! நடந்து முடிந்த யுத்தத்ததை இவர்கள் இருவரும் மிகக் கொடூரமாக நடாத்தியவர்கள். விடுதலைப் புலிகளுடன் அரசாங்கத்தின் படைகள் நடாத்திய யுத்தத்துக்கு உத்தரவு இட்டவர் சனாதிபதி மகிந்த ராஜபக்ச! ‘விடுதலைப் புலிகளை அழித்து ஒழித்தே தீருவேன்’ என்ற வைராக்கியத்துடன், யுத்தத்திற்கு தலைமை தாங்கி படைகளை வழி நடாத்தியவர் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா! முடிந்து போன யுத்தத்தில் நிகழ்ந்த எமது மக்களின் கோர மரணங்களுக்கும் கொடிய அவலங்களுக்கும் இந்த இருவருமே கூட்டான பொறுப்பாளிகள்.

மூன்று லட்சம் தமிழ்ப் பொதுமக்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து, அனுபவித்த சகல துன்ப துயரங்களுக்கும் இவர்களே பொறுப்பாளிகள். குண்டு வீச்சுக்களாலும், செல் தாக்குதல்களாலும் எமது மக்களின் வீடுகளும் குடியிருப்புக்களும் தகர்த்தெறியப்பட்டு, பல்லாயிரம் உயிர்கள் துடிதுடிக்க பலியாகிப் போன கோரக் கொடுமைகளுக்கு இந்த இருவருமே பொறுப்பாளிகள்.

விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வீழ்த்தி துவம்சம் செய்வதே, இவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. அப்பாவி தமிழ் பொது மக்களின் உயிர்ளைப் பற்றி இந்த இருவரும் கொஞ்சங் கூட கவலைப்படவேயில்லை! எமது மக்களைக் கொன்றார்கள்! கொன்று குவித்தார்கள்! சொத்துக்களை நாசமாக்கினார்கள்! லட்சக்கணக்கில் எமது மக்களை அகதிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் முடக்கினார்கள்!

இன்று………. தயக்கம் எதுவுமின்றி உங்கள் வாக்குகளை, இந்த இருவரும் போட்டி போட்டுக் கொண்டு, கேட்டு நிற்கின்றார்கள். உங்களின் வாக்குகளை கோருவதற்கு எந்த அருகதையும் இந்த இருவருக்கும் கிடையவே கிடையாது. யுத்தத்தில் வெற்றி பெற்ற பிறகு, ‘சிறுபான்மை மக்கள் என எவருமே இந்த நாட்டில் இல்லை’ என்று நாசூக்காக சொன்னவர் மகிந்த ராஜபக்ச. ‘இந்த இலங்கைத்தீவு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது’ என, யுத்தத்தின் நடுவில், நாக்குக் கூசாது பேசியவர் சரத் பொன்சேகா. யுத்தத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்து வெற்றி வாகை சூடும் வரையில் ஒன்றாக இணைந்து நின்றவர்கள் – பிணைந்து செயற்பட்டவர்கள் இந்த இருவரும்! இப்பொழுது பிரிந்து போய், பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் இவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பயங்கரமாக முட்டி மோதுகின்றார்கள்.

விடுதலைப் புலிகளை முறியடித்த யுத்தத்தின் கதாநாயகன் யார்? என்ற கேள்வியை முன் வைத்தே இந்த இருவரும் மோதிக் கொண்டிருக்கின்றார்கள். அப்பாவித் தமிழ் மக்களின் ரத்தக் கறைகள் படிந்த கைகளுடன் அதிகாரத்திற்கான போராட்டத்தில் இந்த இரண்டு சிங்கள மாவீரர்களும் உக்கிரமாக மோதுகின்றன. இது பதவிப் போராட்டம்! அதிகாரச் சமர்! இந்த இருவரில் எவரையும், ஞாபக சக்தி கொண்ட எமது மக்கள் ஆதரிக்க முடியாது.

பல்லாயிரக்கணக்கில் எமது உடன் பிறப்புக்களை கொன்று முடித்தாகி விட்டது. குழந்தைகளை – சிறுவர்களை – பெண்களை – கர்ப்பிணிகளை – முதியோர்களை ஈவிரக்கமின்றி கொன்று போட்டாகி விட்டது. இப்போது எங்களிடமே வந்து வாக்குப் பிச்சை கேட்கிறார்கள்! இனியாவது, எஞ்சியுள்ள எமது மக்களுக்கு நீதி வழங்க இவர்களில் எவராவது தயாரா…….? ஆகக் குறைந்தது, எமது சொந்த மண்ணில், எமது இனத்திற்கு சுயாட்சி வழங்கிட இவர்களில் எவராவது தயாரா……?

இல்லை! – இல்லை! – இல்லவே இல்லை!!!

இந்த நிலையில் இவர்களில் எவருக்கும் எமது மக்களின் வாக்குகளை கோருவதற்கு என்ன துணிச்சல்….! எதிர்வரும் தேர்தல், ஒரு சிலர் கூறிக் கொண்டிருப்பதைப் போல, ‘ஆட்சி மாற்றம் எதையும் கொண்டு வரப் போவதில்லை. ஒருவேளை ‘ஆள் மாற்றம்’ ஏற்படலாம். இதனால் விமோசனம் எதுவும் கிட்டும் என்று நம்பினால், கடைசியில் மிஞ்சப்போவது ஏமாற்றமே!

ஏன் எனில், மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் ஒரு நாணயக் குற்றியின் இரு வேறு பக்கங்களே! வேறு விதமாகச் சொல்வதானால், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுதந்திர இலங்கைத் தீவில் அறுபது ஆண்டுகளாய் தொடரும் எமது அரசியல் போராட்டம் தோற்று விடவில்லை. எமது மக்களின் விடுதலை வேட்கை தணிந்து விடவில்லை. சுயமரியாதை கொண்ட ஒவ்வொரு தமிழ் மகனும், தமிழ் மகளும் சுதந்திர உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். நீதி கிடைக்கும் வரையில் எமது சுதந்திர தாகம் தணிய மாட்டாது. சுதந்திரம் – சமத்துவம் – சமநீதி என்ற உன்னத கோட்பாடுகளின் அடிப்படையில், எமது சொந்த மண்ணில், சுந்தர பூமியில் எம்மை நாமே ஆளும் வகையில், ஆகக் குறைந்தது “சுயாட்சி” ஆவது எமக்கு வழங்கப்படுமா?

இத்தனை காலமும், இப்பொழுதும், எமது மக்கள் அனுபவித்த – அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை அவலங்களையும், துன்ப துயரங்களையும் ஒரளவுக்காவது ஈடு செய்யும் வகையில், எமது மக்களின் தாயகமான வட – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மாநிலத்திற்கு சுயாட்சி வழங்கப்படுமா?

இந்த இலங்கைத் தீவில் நாம் வந்தேறு குடிகள் அல்ல வாழையடி வாழையாக – வரலாற்று ரீதியாக, எமது சொந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் எமது தாயகத்திற்கு சுயாட்சி கோர எமக்கு சகல உரிமைகளும் உண்டு. பல மொழிகள் பேசப்படும் பல்வேறு நாடுகளில் இனப்பிரச்சினை என்பது அரசியல் ரீதியாக – சமாதான வழியில் – சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றது.

அங்கு எல்லாம் இது முடியும் என்றால், இங்கு – இந்த இலங்கைத் தீவில் இது ஏன் முடியாது? இது தான் இலங்கைத் தீவு எதிர்நோக்கும் கேள்வி! இந்தத் தேர்தலில், இந்தக் கேள்வியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கி எழுப்ப வேண்டும்.

அடிபட்டோம், அல்லல் பல பட்டோம் அகதிகளானோம்…….., துயரங்கள் தொடர்ந்தாலும் – நாம் துவண்டு விடமாட்டோம்! இந்த மன உறுதியை – திடசங்கற்பத்தை உலகம் அறிய நாம் பிரகடனப்படுத்த வேண்டும்.

எதிர்வரும் சனாதிபதித் தேர்தல் இதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தத் தேர்தல் எமது மக்களின் இலட்சிய உறுதியை பரீட்சித்துப் பார்க்க சிங்கள அதிகார வர்க்கத்தால் எம்முன் வைக்கப்பட்டிருக்கும் ஒர் அரசியற் சவால்!

முடிந்து போன யுத்தத்தில், சனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரின் படைத்தளபதி சரத் பொன்சேகாவும் அயல் நாடுகளின் உதவியுடன் சாதித்த வெற்றி என்பது, தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளின் புதைகுழி அல்ல! அது – எமது எதிர்கால எழுச்சிக்கும், இறுதி மகிழ்ச்சிக்குமான அரசியல் அத்திவாரக் கற்களின் நடுகுழி என்பதை நாம் அனைவரும் நிலை நாட்ட வேண்டும்.

இந்த நிலையில், சுதந்திரம், சமத்துவம், சமாதானம் என்ற கோட்பாடுகளை முன் நிறுத்தி தேர்தல் களத்தில் துணிந்து நிற்கும் ஒரே ஒரு தமிழ் வேட்பாளர் திரு.சிவாஜிலிங்கம். இலங்கைத்தீவின் சனாதிபதி ஆவதற்காக அல்ல எம்மினத்தின் அடிமை நிலை சாவதற்காக அவர் களத்தில் நிற்கின்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எந்த ஒரு கட்சியினதும் வேட்பாளர் அல்ல. சுயேச்சையாக போட்டியிடும் அவர் எம்மினத்தின் வேட்பாளர். சுயமரியாதை கொண்டு, சுதந்திரத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழ் உயிரினதும் வேட்பாளர். உங்கள் ஒவ்வொருவரினதும் வேட்பாளர். சிங்கள ஆதிபத்திய சக்திகளின் ஏவல் நாய்களாக ஓடித் திரியும் சில தமிழ்ப் பத்திரிகைப் பிரகிருதிகள் ‘உதய’ வேளைகளில் ஊளையிட்டு பச்சைப் பொய்களைக் கக்கலாம்….. இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏஜென்டுகள், சந்தர்ப்பவாத – சுயநல – சதிமதியாளர்கள் சலுகைச் சுகங்களுக்காக எமது மக்களின் முதுகில் துரோகத்தனமாகக் ஓங்கிக் குத்தலாம்……. நேர்மை இருந்தும் நெஞ்சுரம் இல்லாத கோழைகள் கடமையை மறந்து – கை கொடுக்க மறுத்து ஓடி ஒதுங்கலாம்…….

ஆனால், எமது மக்களின் சத்திய எழுச்சியை எந்த சதியும் அடக்கி விட முடியாது!! எந்த விதியும் ஒடுக்கி விட முடியாது. கொடியோரின் கொடுமை கண்டு குமுறிக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் ஒரணி திரண்டு நேர்வழி நின்றால்… எமது மண்ணில் அநீதி சாயும்! அடிவானம் வெளுக்கும்! நமக்கு நாமே! நாம் மட்டுமே!! நமது ஆதரவு நம்மவனுக்கே!!!

உலகம் அறிய உரத்துச் சொல்வோம். தென்னிலங்கை எங்கும் எதிரொலிக்கச் செய்வோம். இது ஓர் புதிய அரசியல் வரலாற்றின் முதல் வரி! எம்மினத்தின் எழுச்சி அலைகளின் முகவரி! நம்பிக்கையுடன் செயற்படுவோம் – துணிவுடன் வாக்களிப்போம்.

‘சுதந்திரம் எமது பிறப்புரிமை.’
நாளை நமதே!