25

25

‘சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு’ – சந்திரிகா குமாரதுங்க

chandrika.jpgஇலங் கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் ஊழல் மோசடிகளால் கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனை மாற்றியமைப்பதற்காக தனது ஆதரவாளர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

65% க்கும் அதிகமான வாக்குகளால் ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதி – ஆளும் கட்சி செயலாளர்

mahindaஜனாதிபதித் தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில் 65 சத வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்வதே தங்களது நோக்கமென அக்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த கருத்தை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

ஜனாதிபதி ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதான பிரச்சினையாக இருந்த விடுதலைப் புலிகள் பிரச்சினையை துடைத்தெறிந்து அவ்வமைப்பைச் சேர்ந்த சர்வதேச ரீதியான சந்தேகநபர்களையும் கைது செய்து அபிவிருத்தித் திட்டங்களையும் வகுத்து தற்போது அதை செயற்படுத்துவதற்காக மக்கள் முன்னிலைக்கு வந்துள்ளார். மக்கள் மீதுள்ள நம்பிக்கையுடனேயே அவர் வந்திருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் சூழலும், பின்னணியும், தற்போதைய சூழ்நிலையும் வெவ்வேறானவை. தற்போது துப்பாக்கிச் சத்தங்களோ, குண்டு வெடிப்பு சத்தங்களோ, கிடையாது. மக்கள் எல்லைகளை கடந்து வந்து வாக்களிக்க வேண்டியதில்லை.

இதேநேரம், நாம் ஆரம்பத்திலிருந்தே முறையாக திட்டமிட்டு பிரசாரங்களை முன்னெடுத்துள்ளோம். கிராமங்கள் வரை எமது பிரசாரங்கள் சென்றுள்ளன. எதிரணியினரை பொறுத்தவரை 5 சத வீதம் கூட கீழ் மட்டத்திற்கு அவர்களது பிரசாரம் சென்றடையவில்லை.

எம்மைப் பொறுத்தவரை இது புதுமையான தேர்தலில்லை. ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. எனினும் 65 சத வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் அவரது வெற்றியை உறுதி செய்வதிலேயே இந்த தேர்தல் எமக்கு முக்கியமாகிறது. இதுவே எமது நோக்கம். அத்துடன் நானும் ஐக்கிய தேசியக் கட்சி பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் இணைந்து வன்முறையில் ஈடுபட வேண்டாமென விடுத்த வேண்டுகோளுக்கு நல்ல பிரதிபலன் கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் தனக்குத் தானே செய்து கொண்டதே தவிர கடந்த சில தினங்களில் பாரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

எனவே, 27 ஆம் திகதி ஜனாதிபதியின் வெற்றியின் பின்னரும் ஏனைய கட்சியினருக்கு எந்த கஸ்டங்களும், அசௌகரியங்களும், துன்புறுத்தல்களும் ஏற்படாத வகையில் வெற்றியை கொண்டாடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

புதன்கிழமை நண்பகல் ஜெனரல் ஜனாதிபதியாவார் எவராலும் தடுக்க முடியாது; ரணில்

sa.jpgநாட்டில் இன்று ஜனநாயக ஆட்சியொன்று நடைபெறுவதில்லை எனவும் இராணுவ ஆட்சியை விடவும் மோசமானதொரு சர்வாதிகாரச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 26 ஆம் திகதியுடன் இந்த அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஓரணியில் திரண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ஜெய்க் ஹில்டனில் நேற்று நடைபெற்ற எதிரணிகளின் கட்சித் தலைவர்களின் செய்தியாளர் மாநாட்டிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதியானால் இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு செல்லும் என்ற எதிரணியின் கூற்று பற்றி இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. நான் உங்களிடம் கேட்கின்றேன் இன்று நடப்பது ஜனநாயக ஆட்சியா? இராணுவ ஆட்சியை விடவும் மோசமான தொரு ஆட்சியல்லவா? நடந்து கொண்டிருக்கின்றது. இதிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கவேண்டும். இதன் பொருட்டே ஜனநாயகத்தை நேசிக்கும் சகல அரசியல் சக்திகளும் ஒன்றுபட்டுள்ளன.

1983 இல் ஜே.ஆர்.ஜெயவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைக் கொண்டு வந்தது நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டாகும். ஆனால் அந்த அதிகாரம் இன்று தவறானவர்களின் கரங்களில் சிக்கி நாட்டை அழிவு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இந்த நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பூரண அதிகாரத்தை பாராளுமன்றத்துக்குப் பெற்றுக்கொடுக்க நாம் ஒன்றுபட்டுள்ளோம்.

அடுத்துவரும் புதிய அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக நாட்டில் நல்லாட்சியை மலரச் செய்வோம். அதனூடாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வும் காணப்படும்.

ஜெனரல் சரத்பொன்சேகாவின் 10 அம்ச வேலைத்திட்டமானது மிகப்பெரிய விடயமாகவே நாம் கருதுகின்றோம். நூறு பக்கங்களில் கூட விபரிக்க முடியாதவற்றை 10 அம்சத்திட்டமாக முன்வைத்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை அவரோடு இணைந்துள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இறுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட ஏற்றுக்கொண்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் எம்மோடு பேச்சு நடத்தினர். அது ஆரோக்கியமானதாக அமைந்தது. பின்னர் அவர்கள் ஜே.வி.பி.யுடன் பேசவிரும்பினர். அதனை நாம் வரவேற்றோம். அந்தப் பேச்சுகளும் ஆரோக்கியமுள்ளதாக அமைந்ததன் காரணமாக ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர். இதனை எப்படி இரகசிய உடன்படிக்கை என்று கூறுவது.

ராஜபக்ஷ சகோதரர்கள் பிரபாகரனுடனும் புலிகளுடனும் 2005 இல் செய்துகொண்டது தான் இரகசிய உடன்படிக்கை. அது ஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கு செய்துகொள்ளப்பட்டது. அதன் பின்விளைவுகள் தான் இன்றைய சர்வாதிகார ஆட்சிக்கு வித்திட்டன.

26 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றி பெறுவதை தடுப்பதற்காக மகிந்த ராஜபக்ஷ எத்தகைய வேலையையும் செய்யத்தயாராக உள்ளார். ஆனால், நாட்டு மக்கள் இன, மத, மொழி, கட்சிபேதமின்றி சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யத்தீர்மானித்து விட்டனர். 27 ஆம் திகதி புதன்கிழமை நண்பகலாகும் போது நாட்டின் ஜனாதிபதியாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவாவதை இனிமேல் எவராலும் தடுக்க முடியாது என்று ரணில் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து தேர்தல் நிலைப்பாடுகள் பற்றி ரிபிசி வானொலியில் தேசம்நெற் ஆசிரியர். – த சோதிலிங்கம்

இன்றைய இலங்கை அரசியல் நிலைப்பாடுகள் பற்றி ரிபிசி வானொலியில் 24ம் திகதி நடைபெற்ற அரசியல் கருத்துப்பகிர்வும் ஆய்வும் என்ற நிகழ்வின்போது தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன் தனது அவதானங்களை இலங்கையில் இருந்து தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார். அவற்றை இங்கு தொகுத்துத் தருகிறோம்.

ஜெயபாலன் தனது இலங்கைக்கான பயண நோக்கம் பற்றி தெரிவிக்கையில்: செஞ்சோலை காந்தரூபன் குழந்தைகள் இல்லத்தின் நிதிப்பொறுப்பை லண்டன் ‘அகிலன் பவுண்டேசன் பொறுப்பெடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவதற்காக மன்னார் வன்னிப் பிரதேசத்திற்குப் போயிருந்ததாகவும், இந்த செயற்திட்டத்தை ஏற்படுத்திய ‘லிட்டில் எயிற்’ மற்றும் ‘தேசம்நெற்’ சார்பில் தான் கலந்து கொண்டதாகவும் கூறினார். இந்தக்காலங்களில் தான் அவதானித்த அரசியல் நிலைமைகளை ரிபிசி நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கொழும்பு விமான நிலையம் முதல் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா வரையிலான தெருக்கள் வீதிகள் எங்கும் உள்ள பதாகைகள் சுவரொட்டிகள் யாவுமே மகிந்த ராஜபக்கவின் விளம்பரங்களாகவே இருந்தன. கிட்டத்தட்ட 90 சதவிகிதமானவை மகிந்தாவினுடையதாகவும் 10 சதவிகிகதமானவைகள் சரத்தினுடையதாகவும் இருந்தன. இவை தவிர இதர வேட்பாளர்களின் விளம்பரங்களோ அன்றி வேறெந்த அடையாளங்களோ காணப்படவில்லை. இந்த தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் ஏற்றத்தாழ்வு கொண்டதாகவும் பாரபட்சம் நிறைந்ததாகவும் சமத்துவமற்ற பிரச்சாரமாகவும் இருந்தன. மகிந்த ராஜபக்ச பலமடங்கு அதிகமான பணம் செலவு செய்து இத்தேர்தலைச் சந்திக்கின்றார்.

பிரதான வேட்பாளர்கள் தவிர்ந்த மற்றைய வேட்பாளர்களில் சிவாஜிலிங்கம் விக்கிரமபாகு போன்றோரை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர் ஆனால் ஏனையோரை அறிந்திருக்கும் வாய்புக்கள் மிகவும் குறைவானதாகவே தென்படுகிறது. இலங்கையில் உள்ள ஊடகங்களின் செயற்பாடுகள் பற்றி ஜெயபாலன் குறிப்பிடுகையில் முழு அரசு சார்பு ஊடகங்களும் தமது நேரடி ஆதரவினை மகிந்தாவிற்கு வெளிப்படையாகவும் மற்றைய தேர்தல் வேட்பாளர்களை சிறிதும் கவனத்தில் கொள்ளாது இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களிடம் பக்க சார்பு ஊடகமுறைமை உள்ளது. இது சமூகத்தின் ஜனநாயக தன்மையின் ஆரோக்கியத்தின் அளவுகோலாக இருப்பதை காணலாம்.

மட்டக்களப்பில் மகிந்தா ஆதரவு சுவரொட்டிகள் பெருமளவில் தமிழில் காணப்படும் அதேநேரம் கருணா பலத்த பாதுகாப்புடன் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து சென்றதையும் நேரில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அநுராதபுரத்தில் லக்மிக செய்தியாளரிடம் கருத்து கேட்டபோது இவர் மகிந்தா மீது மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த குடும்ப அரசு மாற்றப்பட வேண்டும், இதன் மூலமே இலங்கையில் மீண்டும் ஜனநாயக நிலைமைகளை வளர்க்கமுடியும் என்று கூறினார். அநுராதபுரத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தான் ஜேவிபி ஆதரவாளன் என்றும் தமது கட்சியின்படி தான் சரத்தையே முழுமையாக ஆதரிப்பதாகவும் மகிந்தா சகோதரர்களால் இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்தாகவும் தெரிவித்தார்.

தான் சரத்தையே ஆதரிப்பதாக கூறிய மட்டக்களப்பில் பணிபுரியும் டாக்டர், மட்டக்களப்பில் புத்திஜீவிகளும் சமூகத்தின் உயர் மட்டத்தினரும் சரத்தையே ஆதரிக்கின்றனர். ஆனால் கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி யாராலும் சரியாக கணிப்பீடு செய்ய முடியாதுள்ளது. ஆனால் இந்த வாக்குகளே யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கும் என்றும் கூறினார்.

இந்த நிலையே இலங்கை எங்கும் உள்ளன. ஊடகங்கள் மேல்தட்டு வர்க்கத்தையே பிரதிபலிக்கின்றன. கீழ்மட்டத்து மக்களின் ஆதரவு நிலையில் உள்ள மாற்றங்களை சரியாக கண்டுகொள்ள முடியாது உள்ளதென ஜெயபாலன் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு முன்பே வட-கிழக்கு மக்களில் பெரும்பாலானோர் சரத்திற்கும் யாழ்ப்பாணத்தில் கணிசமாணேர் சிவாஜிலிங்கத்திற்கும் ஆதரவளிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் இதன் பின்னரே ரிஎன்ஏ தாமும் சரத்திற்கே ஆதரவளிக்க முடிவு கொள்ள வேண்டியிருந்தது என்ற அபிப்பிராயங்களும் பரவலாக உள்ளது. இதை சிலவேளை ரிஎன்ஏ யினர் தாம் கேட்டுக்கொண்டதன்படி மக்கள் சரத்திற்கு வாக்களித்துள்ளனர் என்று பின்னாளில் பிரச்சாரங்களை அவிழ்த்துவிடக்கூடும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இலங்கையில் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் அந்த ஜனாதிபதி தான் தமிழ் மக்களின் ஆதரவாளன் என்ற கருத்தை முன்வைத்து சிங்கள மக்களிடம் வாக்கு கேட்க முடியாத நிலையே உள்ளது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக யாருக்கு வாக்களிக்கிறார்களோ அந்த வேட்பாளருக்கு சிங்கள மக்கள் பெருபான்மையினர் வாக்களிப்பதில்லை அவர் ஜனாதிபதியாக வந்ததுமில்லை எனவும் ஜெயபாலன் தன் கருத்தைத் தெரிவித்தார். இதன் காரணமாகவே தேர்தல் வேட்பாளர்கள் தமது தமிழ் ஆதரவினை மிகவும் கடுமையாகவே கையாளுகின்றனர்.

நீர்கொழும்பில் உள்ள மீனவ குடும்பங்களை சந்திக்கையில் அவர்களின் அபிப்பிராயப்படி இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் மகிந்தாதான் என்றும் இலங்கையில் நடைபெறும் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மகிந்த அரசினாலேயே செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து மகிந்தா ஆட்சிக்கு வருவதாலேயே இந்த அபிவிருத்தி தொடரும் எனவும் அபிவிருத்திப்பணங்களில் மோசடி என்ற குற்றச்சாட்டு வருவது தவிர்க்க முடியாதது ஆனால் சரத் ஆட்சிக்கு வந்தால் முழுமையாகவே நிதி மோசடிகளையே செய்வார் என்றும் கருத்து கொண்டுள்ளனர்.

மன்னார் இளைஞர் கருத்துக் கூறுகையில் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது இவர்களே எமது மக்கள் மீது யுத்தத்தை நடாத்தியவர்கள் எமது மக்களை கொன்று குவித்தவர்கள் இவர்களுக்கு நாம் எப்படி வாக்களிக்க முடியும் என்று கருத்துக் கொண்டுள்ளார். அதே வேளை புலிகள் இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் மீது செய்த வன்முறையிலும் இவ்விளைஞன் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார். புலிகள் மக்களை பழிவாங்கியுள்ளனர் என்று கூறினார்.

சுதந்திர நடமாட்டம் பற்றி கருத்து கேட்டபோது அரசியல் நிலைமைகள் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் தாண்டி மக்களிடம் வேறான ஒரு போக்கு உள்ளது என்றும் இராணுவம் பொலீஸ் மக்களை சோதனையிடும் முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடம் பாரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்றும் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக போய்வரும் நிலைமைகள் உள்ளதாக கூறிய ஜெயபாலன் அதேவேளை இன்றுள்ள சமாதான சூழ்நிலையை வைத்துக்கொண்டு இலங்கையில் சமாதானம் வந்துவிட்டது என்று முடிவு எடுக்க முடியாதுள்ளது நாட்டில் முக்கியமாக தலைநகரில் இராணுவம் பொலீசார் மிகவும் உசார்நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது பிறப்பிடமான அநுராதபுரத்தில் தான் ஒருவிலாசத்தை அறிய முற்பட்டபோது 5 நிமிடத்தில் இரகசியப் பொலீசார் தம்மிடம் வந்து விசாரித்ததாகவும் பின்னர் சீருடைப்பொலிசார் வந்து விசாரித்ததாகவும் ஆனால் எந்த காரணத்திற்காகவும் முறைகேடாக நடாத்தப்படவில்லை என்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் அரசியல் மாற்றங்களுக்கு புறம்பாக வட-கிழக்கு பிரதேசம் பின்தங்கிய நிலையிலும் தெற்பகுதி பாதிப்படையாத ஆனால் பாரிய முன்னேற்றமடையாத நிலையிலும் மன்னார் வன்னிப் பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும் இருக்கின்றது. கிளிநொச்சி மன்னார் பிரதேசங்களில் புலிகளின் கல்லறைகள், நினைவாலயங்கள் இருந்த இடம்தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. வன்னிமுகாம்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வெளியேறிவிட்டதை தான் அவதானித்ததையும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மிகவும் வசதிகள் அற்று அல்லலுறுவதாகவும் இந்த மீள்குடியேற்றம் பொறுப்பற்ற முறையில் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அடிப்டைவசதிகள் அற்றிருப்பதை அவதானித்ததாகவும் ஜெயபாலன் தெரிவித்தார்.

தான் சந்தித்த புலி ஆதரவாளர்கள் இன்றும் தமிழ் அரசியல் தலைமைகளையே குறை கூறுகின்றனர். தமிழ் தலைமைகள் தமிழர்களின் அரசியல் உரிமைகளில் அக்கறையற்று இருப்பதாகவும் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் ஜெயபாலன் தெரிவித்தார்.