28

28

சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கை அரசியலில் தீர்மான சக்தியல்ல என்பதை உணர்த்தி நிற்கும் 6வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்: புன்னியாமீன்

mrpr.jpgநடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 57.88 வீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். இவர் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவை விட 1,842,749 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான மேலதிக வாக்குகளைப் பெற்ற  சாதனையையும் படைத்துள்ளார். இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ 16 தேர்தல் மாவட்டங்களில் அமோக வெற்றியீட்டியதுடன்,  06 மாவட்டங்களில் தோல்வியினை தழுவியிருந்தார். இந்த 06 மாவட்டங்களும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழும் மாவட்டங்களாகும். வட மாகாணத்தில் யாழ்ப்பாணம்,  வன்னி தேர்தல் மாவட்டங்களிலும்,  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு,  திகாமடுல்லை,  திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும்,  மத்திய மாகாணத்தில் தோட்டத் தொழிலாளர் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் இவர் தோல்வியடைந்தார்.

இதுகாலவரை இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துவந்துள்ளன. ஆனால், இந்தத் தேர்தல் முடிவானது பெரும்பான்மை இனத்தவர் ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம் என்ற உணர்வினை பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலை எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல.

பொதுவாக பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகமாக வாழக்கூடிய மாவட்டங்களிலும், தேர்தல் தொகுதிகளிலும் மஹிந்தவின் வெற்றி சுமார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன்  நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியும் இதனால் வெளிப்படுத்தப்படக்கூடிய உணர்வலைகளும் தற்போதைய மஹிந்தவுக்கு மாத்திரமல்ல எதிர்கால அரசியல் போக்குகளுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை தோற்றுவிக்கக்கூடிய நிலையிருப்பதை இவ்விடத்தில் சிந்தித்தல் வேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தாம் விரும்பிய தலைவனுக்கோ, கட்சிக்கோ வாக்களிக்க முடியும். இதில் யார் யாருக்கு வாக்களித்தார்கள்? என்று ஆராய்வதால் எவ்வித பலனும் கிட்டிவிடப் போவதில்லை. ஆனால்,  இலங்கைப் போன்ற பல்லின மக்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில் குறிப்பாக இனவாத சிந்தனைகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இவ்விடயத்தைப் பற்றி இன்னும் தீர்க்கமான முறையில் ஆராயப்பட வேண்டியது அவசியமானதாகும்.

வெளிவந்த தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை சமூகத்தினர் என்றடிப்படையில் தமிழர்கள்,  முஸ்லிம்களின் அரசியல் நடத்தைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இவ்விடத்தில் நோக்குவது அவசியமானதாக இருக்கும். இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தவர்களே அதிகமாக வாழ்கின்றனர். தேர்தல் முடிவுகளின் படி வடக்கு,  கிழக்கு மாகாணங்களின் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

வட மாகாணம்: யாழ்ப்பாண மாவட்டம்

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  4, 611  46.19%
சரத்பொன்சேக்கா 3,976  39.88 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  53,111
அளிக்கப்பட்ட வாக்குகள்  10,321

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,712  62.68%
மஹிந்த ராஜபக்ஸ 4,247  22.73 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  63,991
அளிக்கப்பட்ட வாக்குகள்  19,436

காங்கேசந்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,216  56.90 %
மஹிந்த ராஜபக்ஸ  4,559  31.57%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  69,082
அளிக்கப்பட்ட வாக்குகள்  14,933

மானிப்பாய் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 13,390  62.01 %
மஹிந்த ராஜபக்ஸ  5,749  26.62 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  71,114
அளிக்கப்பட்ட வாக்குகள்  22,475

கோப்பாய் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 13,151  64.13 %
மஹிந்த ராஜபக்ஸ  4,538  22.13%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  65,798
அளிக்கப்பட்ட வாக்குகள்  21,133

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,974  67.20 %
மஹிந்த ராஜபக்ஸ  2,545  19.06 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  56,426
அளிக்கப்பட்ட வாக்குகள்  13,955

பருத்தித்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,585  69.30 %
மஹிந்த ராஜபக்ஸ  2,361  19.06 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  48,613
அளிக்கப்பட்ட வாக்குகள்  12,828

சாவகச்சேரி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,599  62.39 %
மஹிந்த ராஜபக்ஸ  4,567  24.57%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  65,141
அளிக்கப்பட்ட வாக்குகள்  19,450

நல்லூர் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,543  70.42 %
மஹிந்த ராஜபக்ஸ  3,554  21.68 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  72,588
அளிக்கப்பட்ட வாக்குகள்  16,948

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 7,914  66.17 %
மஹிந்த ராஜபக்ஸ  3,296  27.56 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  64,714
அளிக்கப்பட்ட வாக்குகள்  12,414

கிளிநொச்சி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 4,717  75.11 %
மஹிந்த ராஜபக்ஸ  991  15.78 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  90,811
அளிக்கப்பட்ட வாக்குகள்  6,566

யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகளில் 10 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 113,877   இது  63.84வீதமாகும்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 721,359 ஆகும். இதில் 185,132 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 25.66 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 1.21 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். 1988, 1994ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் முறையே 21.72.  2.97 வீத வாக்காளர்களே வாக்களித்தனர். 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 46.30 வீத வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே 82ம் ஆண்டை அடுத்து வந்த தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர்கள் மிகக் குறைவான வாக்கு வீதத்திலே வாக்களித்து வருகின்றனர். முன்னைய காலங்களில் இவர்களின் வாக்களிப்புக்கு சில தடைகள் இருந்திருக்கலாம். தற்போதைய நிலையில் இம்மக்களுக்கு வாக்களிக்க விருப்பற்ற நிலையிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜனநாயக நிலையில் இது ஒரு ஆரோக்கியமான நிலையல்ல. 

தேர்தல் முடிவுகளின் படி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

வன்னி மாவட்டம்

மன்னார் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 20,157  70.19 %
மஹிந்த ராஜபக்ஸ  6,656  23.18 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  85,322
அளிக்கப்பட்ட வாக்குகள்  29,172

வவுனியா தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 31,796  66.02 %
மஹிந்த ராஜபக்ஸ  13,742  28.53 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  1,12,924 
அளிக்கப்பட்ட வாக்குகள்  49,498

முல்லைத்தீவு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 6,882  73.47%
மஹிந்த ராஜபக்ஸ  1,126  18.43%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  68,729
அளிக்கப்பட்ட வாக்குகள்  9,625

வன்னி மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 70,367   ஆகும்  இது 66.86வீதமாகும். வன்னி மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 266,975 ஆகும். இதில் 107,680 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 40.33 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வன்னி மாவட்டத்தில் மொத்தமாக 34.30 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.
 
கிழக்கு மாகாணம் கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

அம்பாறை தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  73,389  67.94 %
சரத்பொன்சேக்கா 32,895  30.45 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  145,479
அளிக்கப்பட்ட வாக்குகள்  108,634

சம்மாந்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 27,003  55.95%
மஹிந்த ராஜபக்ஸ  19,991  41.42%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  71,442
அளிக்கப்பட்ட வாக்குகள்  48,818

கல்முனை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 32,946  75.76 %
மஹிந்த ராஜபக்ஸ  9,564  21.95 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  66,135
அளிக்கப்பட்ட வாக்குகள்  44,030

பொத்துவில் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 54,374  59.69 %
மஹிந்த ராஜபக்ஸ  33,979  37.42 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  131,779
அளிக்கப்பட்ட வாக்குகள்  91,862

திகாமடுல்லை மாவட்டத்தில் 04 தேர்தல் தொகுதிகளில் 03 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 153,105  இது  49.94  வீதமாகும்.  திகாமடுல்லை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 309,474 ஆகும். இதில் 306,562 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 73.54 % வீத வாக்குப் பதிவுகளாகும்.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 69,975  68.74%
மஹிந்த ராஜபக்ஸ  28,090  27.59%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  1,55,537
அளிக்கப்பட்ட வாக்குகள்  1,03,685

கல்குடா தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 35,608  60.45%
மஹிந்த ராஜபக்ஸ  20,112  34.14%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  97,135
அளிக்கப்பட்ட வாக்குகள்  60,186

பட்டிருப்பு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 36,776  80.12%
மஹிந்த ராஜபக்ஸ   5,968  13.00%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  80,972
அளிக்கப்பட்ட வாக்குகள்  47,065

மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 146,057   ஆகும்  இது 68.93வீதமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 333,644 ஆகும். இதில் 216,287 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

திருகோணமலை மாவட்ட தொகுதி ரீதியான முடிவுகள் வருமாறு

மூதூர் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 32,631  51.09%
மஹிந்த ராஜபக்ஸ  21,002  38.03%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  85,401
அளிக்கப்பட்ட வாக்குகள்  55,915
 
திருகோணமலை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 35,887  69.42 %
மஹிந்த ராஜபக்ஸ  13,935  26.9 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  86685
அளிக்கப்பட்ட வாக்குகள்  52748

சேருவில் தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  27,932  63.10 %
சரத்பொன்சேக்கா 15,260  34.47 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  69,047
அளிக்கப்பட்ட வாக்குகள்  44,832

திருகோணமலை மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதிகளில் 02 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 87,661 இது  54.09  வீதமாகும்.  திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 241,133 ஆகும். இதில் 152,428 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

அளிக்கப்பட்ட முடிவுகளைப் பார்க்குமிடத்து இங்குள்ள வாக்காளர்களில் அனைவரும் சரத் பொன்சேக்காவுக்கு மாத்திரமே வாக்களித்துள்ளனர் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மஹிந்தவுக்கும் சிறுபான்மை வாக்குகள் சென்றடைந்திருக்கும். ஆனால், மேலெழுந்த வாரியாக நோக்குமிடத்து ஒரு தேர்தல் தொகுதியின் தோல்வி, ஒரு தேர்தல் மாவட்டத்தின் தோல்வி என்று கூறும்பொழுது தமிழ், முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கவில்லை என்ற ஓர் உணர்வினையே ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலை உருவாகலாம். மஹிந்த ராஜபக்ஸ மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்றாலும்கூட, கொழும்பு மாவட்டத்திலும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழக்கூடிய தேர்தல் தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியுற்றிருந்தமையும் அவதானிக்கத்தக்க ஒன்றாகும்.

இந்நிலைக்கு என்ன காரணம்? என்பதையும் அவதானித்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில் வாதப்பிரதிவாதமில்லை. மஹிந்த ராஜபக்ஸ இறுதி யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி. விடுதலைப் புலிகளின் தோல்விக்குக் காரணமாக இருந்த ஒரு ஆட்சியாளர். இந்நிலையில் மஹிந்த நிராகரிக்கப்பட்டது மக்களின் பார்வையில் நியாயமுண்டு. அதேநேரம், கடைசி யுத்தத்தை முன்னெடுத்த தளபதி பொன்சேக்கா. இவர் தளபதியாக இருக்கும்போது இலங்கையிலுள்ள சிறுபான்மையினர் வந்தேறுகுடிகள் என்று பகிரங்கமாக கூறியவர். மேலும், இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவே வாழவேண்டும் என்று கூறியவர். யுத்த நிலையுடன் ஒப்புநோக்கும்போது மஹிந்தவைவிட பொன்சேக்கா உயர்ந்தவர் என்று எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

மறுபுறமாக தமிழர்களின் பிரச்சினைக்கு மஹிந்த ராஜபக்ஸவினால் அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. அதேநேரம், பொன்சேக்கா தான் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய ஒரு தீர்வினை வழங்குவதாக எவ்விடத்திலும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

சர்வதேச ஊடகங்கள் குறிப்பாக மேற்குலக நாடுகள் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி அமைப்பதில் விரும்பவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகளின் மூலமாக வெளிப்படுகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியா,  சீனா போன்ற நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான உறவின் காரணமாக மேற்குலக நாடுகள் மஹிந்த அரசாங்கத்தை பலவழிகளிலும் தாக்குதல்களுக்கு உட்படுத்தி வந்தமை அறிந்ததே. பொதுவாக இச்சக்திகள் அனைத்தும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமென்பதை விரும்பியது உண்மை. இந்நிலையில் இச்சக்திகளின் தூண்டுதலுக்கு சிறுபான்மையினர் இரையானார்களா என்பதும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகவே இருக்கின்றது.

இங்கு இன்னுமொரு உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அதாவது,  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆளும்கட்சி சார்பாக இருந்த சிறுபான்மை அரசியல் தலைவர்கள் தமது மக்களுக்கு உரிய சேவையினை வழங்க தவறிவிட்டார்கள் என்பதையே இம்முடிவுகள் பெருவாரியாக எடுத்துக் காட்டுகின்றன. வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி, தமிழ் அரசியல்வாதிகளும் சரியே,  முஸ்லிம் அரசியல்வாதிகளும் சரியே தத்தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தாம் சமூகத்தின் பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளவும் வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட வியூகங்களும் இங்கு மக்களால் நேரடியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே,  இது விடயம் குறித்து ஆழமான பார்வையொன்றை செலுத்த வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சி அதிகாரத்திலுள்ள எந்தவொரு அமைச்சராலும், எந்தவொரு முதலமைச்சராலும் அவர்களின் ஆசனங்களை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

தேர்தல் முடிவு வந்துமுடிந்துவிட்டது. இதனை தற்போது அலசுவதால் எவ்வித நன்மையும் பயக்கப்போவதில்லை. ஆனால்,  ஒரு உண்மையை நாங்கள் இவ்விடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மையினரால் ஆட்சியை அமைக்க முடியுமென்ற ஒரு நிலை தற்போது இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இங்கு மஹிந்தவுக்கு இந்நிலை தற்போது சாதகமாக இருககலாம்;. பெரும்பான்மை சமூகத்தினர் ஒன்றிணைய வேண்டும் என்ற ஓர் உணர்வு இனி பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் ஆணித்தரமான கருப்பொருளாக மாற்றமடையக் கூடிய நிலை உருவாகியுள்ளது. ஆளும் தரப்பினரால் பெற்றப்பட்ட இந்த வெற்றி எதிர்காலத்தில் எதிரணிகளின் மனங்களிலும் விதைக்கப்படமாட்டாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமுமில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இம்முறை வழங்கப்பட்ட வாக்குகளை விட மஹிந்த ராஜபக்ஸ பெற்ற மேலதிக வாக்குகள் அதிகமானவை. 160 தேர்தல் தொகுதிகளில் 130 தொகுதிகளில் வெற்றிபெற்றார். இந்த 130 தேர்தல் தொகுதிகளில் சிங்கள மக்கள் சார்பான தேர்தல் தொகுதிகளே அதிகம். அவர் தோல்வியடைந்த 30 தேர்தல் தொகுதிகளுள் சிறுபான்மை செரிவு அதிகம்.

இத்தேர்தல் முடிவுகளை பாடமாகக் கொண்டு இதன் பிற்பாடாவது முஸ்லிம்,  தமிழ் அரசியல்வாதிகள் தமது மக்களுக்காகவும்,  சமூகத்துக்காகவும் உண்மையான சேவையினை ஆற்ற முன்வர வேண்டும். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது என்பதை உணர வேண்டும். தமது மக்கள் என்றும் கற்பனையுலகில் வாழத் தயாரானவர்கள் அல்ல என்பதை இவர்கள் ஆழமாக தமது மனங்களில் பதித்துக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் எமக்கு இத்தனைப் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். மாகாணசபையில் எமது சமூகத்தை இத்தனைப் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். அமைச்சரவையில் எமக்கு இத்தனை அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என்று கூறிக் கொள்வதால் சிறுபான்மையினராகிய எமக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. எண்ணிக்கை முக்கியமல்ல,  செயற்றிறன்மிக்க தலைமைத்துவம் தான் இன்றைய சமூகத்தின் முக்கியத்துவம். வாக்காளர்களை என்றும் ஏமாற்ற முடியாது.

இத்தேர்தலால் ஏற்பட்ட வடுக்கள் நிச்சயமாக பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாதது. இது சடுதியாக ஏற்படாவிட்டாலும்கூட,  ஒரு நீண்ட கால அடிப்படையில் அத்தகைய உணர்வுகள் ஏற்படும். அதற்கான வழியினை இத்தேர்தலில் நாங்கள் காட்டிவிட்டோம். இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவின் எதிரொலியினை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் நிச்சயம் அவதானிக்க முடியும். மஹிந்தவின் இலக்காகக் காணப்படுவது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெறுவதே. தற்போதைய தேர்தல் முடிவுகளை ஆய்வு ரீதியாக நோக்குமிடத்து இலங்கையில் காணப்படக்கூடிய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அந்நிலை உருவாகக் கூடிய சாத்தியம் கணிசமான அளவிற்கு இருக்கின்றது. இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை வெற்றியடையச் செய்வதற்கு ஒன்றிணைந்த சிங்கள வாக்காளர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இதைவிட ஒரு ஒன்றிணைப்பைக் காட்டலாம்.

யதார்த்த நிலைகளை தமிழ் மக்களும், சரி முஸ்லிம் மக்களும் சரி உணர்ந்து கொள்ளாவிடின் அல்லது இந்தத் தேர்தல் உதாரணங்களை படிப்பினையாக எடுத்துக் கொள்ளாவிடின் எதிர்காலம் மேலும், மேலும் ஐயப்பாடுமிக்கதாக மாறும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை நாம் விமர்சிக்கலாம் ஆனாலும், இவர்களின் குரல்களுக்கு வாக்காளர் மத்தியில் ஒரு மதிப்பு உண்டு என்பதை எம்மால் ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது. எனவே இக்கட்சியினரும் தமது சுயநல நோக்கங்களைக் கைவிட்டுவிட்டு தமது சமூக நலனின்பால் உண்மையானதும்,  யதார்த்த பூர்வமானதுமான ஒரு நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் தற்போது உருவாகியுள்ளது. இதனை நாம் ஒவ்வொருவரும் நன்கு ஆலோசித்து சமூகத்தின்பால் உண்மையான நோக்குடன் செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். 

மேலதிக வாசிப்புக்கு..

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபான்மையினத்தினரே. ஆனால், ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது…? – பீ.எம். புன்னியாமீன் –
http://thesamnet.co.uk/?p=18803

ஜனாதிபதித் தேர்தல் முடிவு பற்றி எவ்வித பிரச்சினைகளும் இல்லை.- அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர்

voteசமாதான முறையில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமது அரசுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அமெரிக்கா பிரதி இராஜாங்கச் செயலாளர் பிலிப்கிரவ்லி தெரிவித்துள்ளார். இலங்கையில் 70வீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தமை இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையை வெளிப்படுத்துகின்றது எனவும் இதனையிட்டு தான் மகிழச்சியடைவதாகவும் தெரிவித்தார்;.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பிலிப்கிரவ்லி மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சிறுசிறு சம்பவங்கள் தவிர பொதுப்படையாக நோக்குமிடத்து இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அமைதியாகவும்,  நேர்மையாகவும் நடைபெற்றதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதித் தெரிவு குறித்து எவ்வித பிரச்சினைகளும் தமக்குள் எழவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கம்பளை பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல்

கம்பளை பொலிஸ் பிரிவிலுள்ள தெம்பிலிகல விஹாரைக்கருகில் நேற்று (27) இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் அறுவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்தது.

இச்சம்பவம் நேற்றுக் (27) காலை இடம்பெற்றுள்ளதுடன்,  இதனையடுத்து கம்பளை பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இச்சம்பவத்தில் பௌத்த மதகுரு உட்பட இருவர் பலியாகியுள்ளதுடன்,  காயங்களுக்குள்ளான அனைவரும் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும்,  இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கம்பளை தெம்பிலிகல பகுதியில் இரு குழுக்கள் மோதிக் கொண்டதையடுத்து அருகிலுள்ள விஹாரை மீதும் கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது. இதனால் விஹாரைக்கு வெளியே நின்ற தேரரும் மற்றும் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், அறுவர் காயமடைந்துள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் பொன்சேகா

pr-can.jpgதனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு ஹோட்டலில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்

“இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது.” என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் பொன்சேகா கூறினார்.

நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

யாழ்.மாவட்ட மக்கள் வாக்களிக்க மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் தேர்தல் ஆணையாளரிடம் சம்பந்தன் கோரிக்கை

sampanthar.jpgயாழ். குடாநாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் இச்சம்பவங்களால் யாழ்.மாவட்ட வாக்களிப்பு பாதிக்கப்பட்டால் அங்குள்ள வாக்காளர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமான முறையில் பயன்படுத்துவதற்கு தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இரா.சம்பந்தனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் தேர்தல் ஆணையாளருக்கு பக்ஸ் மூலம் முறையிட்டுள்ளனர். மூன்று சம்பவங்கள் குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பற்றிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது; யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பல பகுதிகளில் செவ்வாய் காலை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவங்களினால் சிலர் பாதிக்கப்பட்டனர் என்று சொல்லப்படுகின்றது. வாக்காளரிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி நியாயமானதும் சுதந்திமானதுமான தேர்தலை தடுக்கும் திட்டமிட்ட நோக்குடன் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைவரம் யாழ்ப்பாண வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுக்க முடியும். யாழ்.தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் தங்களுக்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணிய அக்கறையுள்ள குழுக்களே இக்குண்டு வெடிப்புச் சம்பவங்களை மேற்கொண்டன என்பது வெளிப்படை. இவை குறித்துத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இவ்வாறான சம்பவங்களால் யாழ்.மாவட்ட தேர்தல் வாக்களிப்பு பாதிக்கப்பட்டால், யாழ் வாக்காளர்கள் சுதந்திரமாகத் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்குத் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவது முறைப்பாடு, வவுனியாவில் உள்ள ஆனந்த குமாரசாமி முகாம் மற்றும் வலயம் 2 முகாம் ஆகியவற்றின் வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்கு போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்காதது பற்றியதாகும்.

அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

முகாம்களுக்கு வெளியே காலை ஏழு மணியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு பஸ்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு நிற்பதாக வவுனியா ஆனந்தகுமாரசாமி முகாம், வலயம் இரண்டு முகாம் ஆகிய வற்றைச் சேர்ந்த வாக்காளர்கள் முறையிட்டுள்ளனர். அவர்களுக்குப் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும் என்று தேர்தல் செயலகமும் வவுனியா அரச அதிபரும் உறுதியளித்திருந்தனர். இரண்டு பஸ்கள் மூலம் 140 வாக்காளர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். 3000 வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்கான பஸ்கள் நண்பகல் 12 மணி வரை சென்றடையவில்லை. இதனால் காத்து நின்ற வாக்காளர்கள் முகாம்களுக்குத் திரும்பியுள்ளனர். உங்களுடன் வவுனியா அரச அதிபருடன் இவ்விடயம் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளேன்.வாக்காளர்களை முகாம்களுக்குச் சென்று பஸ்களில் ஏற்றிச் செல்லப்படுமென எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இவ் பஸ்கள் உரிய நேரத்துக்கு சென்று பெருந்தொகையான வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு சரியான நேரத்தில் விடுவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாக்காளர்கள் வாக்களிக்க சட்ட பூர்வமான உரித்துடையவர்கள். இவர்கள் இன்று வாக்களிக்க முடியாது போனால் தேர்தலின் இறுதி முடிவை அறிவிக்கும் முன்பதாக இவ்வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்படுவதை தயவு செய்து உறுதிப்படுத்துங்கள்.

மூன்றாவது முறைப்பாடு வன்னி தேர்தல் மாவட்டத்தில் பண்டாரிக்குளம் வாக்களிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட கிரனேற் தாக்குதல் பற்றியதாகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் பண்டாரிக்குளம் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்த போது இரண்டு கிரனேற்றுக்கள் வீசப்பட்டுள்ளன. இதனால் வாக்களிப்பு பாதிக்கப்பட்டது. வாக்களிப்பு தங்களின் வேட்பாளருக்கு சாதகமாக இல்லை என்பதை தெரிந்து கொண்டவர்களே வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் இத்தாக்குதலை மேற்கொண்டனர் என்பது வெளிப்படை. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலே தேவை எனவே இது குறித்து ஒழுங்கான விசாரணை நடத்தி முறையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று மூன்றாவது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால பரம்பரைக்கு வளமான எதிர்காலத்தை உரிமையாக்குவேன் – ஜனாதிபதி

mrpr.jpgஇரண் டாவது முறையாகவும் தம் மீது நம்பிக்கை வைத்து நாட்டு மக்கள் பெற்றுத்தந்த இந்த அமோக வெற்றியையிட்டு தமது மகிழ்ச்சியை தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

தீவிரவாதத்தை தோற்கடித்தபின் நடைபெறும் முதலாவது தேசிய தேர்தல் இதுவாகும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து மக்களும் பயமோ சந்தேகமோ இன்றி இந்த தேர்தலில் பங்கெடுத்துள்ளனர்.

இப்போது நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம். இந்த நாட்டு மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை உலகத்துக்கே நிரூபித்த வெற்றி. நாட்டை நேசிக்கும் மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தக் கூடிய வெற்றி. உண்மையான வெற்றி பிறப்பது தோல்வி இல்லாத நிலையிலேயாகும். இந்த வெற்றி நாம் அனைவருக்கும் சொந்தமானது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

நீதியின் முன்னே அனைவரும் சமமானவர்கள். நீதியை காப்பவர் நீதியின் பாதுகாப்பை பெறுவார் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

நீதியை மதிக்கும் நாடு அபிவிருத்தியடைந்த நாடு, நல்லாட்சி நிறைந்த நாடு. இவை அனைத்தும் நிறைந்த மற்றும் வளமான எதிர்காலத்தைதான் எதிர்கால பரம்பரைக்கு மற்றும் இந்த நாட்டுக்கு உரிமையாக்கித் தருவேன் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரமாக கொண்டாட்டம்

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகப்படியான வாக்குகளால் அமோக வெற்றிபெற்றதையடுத்து நாடெங்கிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி, தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் நேற்று ஈடுபட்டனர்.

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார்.

இதனையிட்டு நாடெங்கிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி, இனிப்புக்கள் வழங்கி தேசிய கொடிகளை ஏந்தி அசைத்த வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டனர். மக்கள் சந்திக்கு சந்தி கூடி இருந்து றபான் அடித்து பாற்சோறு பரிமாறி மகிழ்ந்தனர்.

பொன்சேகா, தேர்தல் ஆணையாளரை வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறும் செய்தி பொய்யானது – அமைச்சர் சமரசிங்க

எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கம் அவற்றை முழுமையாக மறுப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

தனது தோல்வியை தாங்கிக் கொள்ள இயலாத பொன்சேகா சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்ப் பிரசாரங்களைச் செய்து அனுதாபம் தேட முயல்கின்றார். இது போன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் சமரசிங்க பொன்சேக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொன்சேகா வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. அவர் நினைத்த நேரம் அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்லலாம். ஒரு ஜனாதிபதி வேட்பாளரென்ற வகையில் பாதுகாப்பு வழங்குவதற்காக அவ்வீதியில் பாதுகாப்பு படையினர் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர் அதனை தவறாக கருத்தில் கொண்டுள்ளதுடன் ஊடகங்களில் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், மைத்திரிபால சிறிசேன, ஜீ. எல். பீரிஸ், பாட்டளி சம்பிக்க ரணவக்க, அனுரபிரியதர்ஷன யாப்பா, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச எம்.பி, சட்டத்தரணி காலிங்க இத்ததிஸ்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியிருப்பதனை புரிந்து கொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த சதிகார கும்பல், மேற்கூறியது போன்ற கட்டுக்கதைகளை குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், இணையத் தளங்களினூடாக பரப்பி வருகின்றது.

அது மட்டுமன்றி எதிரணி வேட்பாளரும் கட்சித் தலைவர்களும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பொன்சேகாவை யாரும் வீட்டுக் காவலில் வைக்கவில்லை. அவர் இருப்பது வீடு அல்ல அது பல உள்நாட்டு வெளிநாட்டவர்கள் வந்து போகும் பிரபலமான ஹோட்டலாகும் என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

எமக்கு கிடைத்த தகவலடிப்படையில் 26ம் திகதி மாலை 4.30 மணியளவில் பொன்சேகாவும் அவருடனிருந்த கட்சித் தலைவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் குறித்த ஹோட்டலிருந்த இரண்டு மாடிகளிலிருந்த 70 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்துள்ளனர். இவரை அரசாங்கம் அங்கே அழைத்து செல்லவில்லை. தானாக விரும்பியே அவர் அங்கு சென்றுள்ளார்.

குறித்த ஹோட்டல் அமைந்திருக்கும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலையம் என்பது சகலரும் அறிந்ததே. ஹோட்டலுக்கு முன்பாகவே விமான படைத் தளம் அமைந்திருப்பதனால் எப்போதுமே அப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டிருப்பது வழமை.