._._._._._.
கண்டன கூட்டம்
உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை வலியுறுத்தியும் தேடகத்தினால் கண்டன கூட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது.
காலம் : 27-02-2010
இடம் : ஸ்காபுரோ சிவிக் சென்டர்
நேரம் : 3.00 pm – 6.00pm
அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்
தேடகம்
._._._._._.
கருத்துச் சுதந்திரத்திற்காய் தோள் கொடுப்போம்! – உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு எமது கண்டனம் : தேடகம்
20.02.2010 அன்று உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலும், அதன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கான மிரட்டலும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாய் உள்ளது. கனேடிய தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் இது முதலாவது நிகழ்வல்ல. தாயகம் பத்திரிகைக்கான தடை, அதன் ஆசிரியர் ஜோர்ஜ் குருசேவ் மீதான மிரட்டல், தேடல் சஞ்சிகை விற்பனை நிலையங்கள் மீதான மிரட்டல், தேடக நூலக எரிப்பு, பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் மீதான தாக்குதல், வானொலி இயக்குனர் இளையபாரதி மீதான தாக்குதல், என ஊடகங்கள் மீதான வன்முறைகள் பல ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. சுதந்திரமாக கருத்தை முன்வைக்கும் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் கனடாவில் பல்வேறு தரப்பினரின் வன்முறைக்கு முகம்கொடுத்தே வந்துள்ளன. விடுதலைப் புலிகளின் வன்முறை அரசியலின் அங்கமாகவே புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற ஊடகங்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் மீதான தாக்குதல்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரக் கருத்துக்களம் ஆரோக்கியமான சமூகத்திற்கு மிக முக்கியமான அடிப்படையாகும். கருத்தை கருத்தால் முகம் கொடுக்கும் ஓரு சமூகம் உருவாக்கப்படவேண்டிய காலகட்டமிது. எமது அடிப்படை மனிதவுரிமைகளை முன்னிறுத்தி வளமான எதிர்காலத்தை வென்றெடுக்க வேண்டிய காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலத்திற்கு எம்மை பின்னோக்கித் தள்ளிய சுதந்திர மறுப்புகளை, அடக்குமுறைகளை அறவே அகற்றி நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு சமூகத்தை உருவாக்குவது அனைவரதும் கடமை. இதை அடிப்படையாகக் கொண்டே 1989ல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பன்முகத்தன்மைக்காயும் கருத்துத் சுதந்திரத்திற்காயும் தேடகம் குரல்கொடுத்து வருகிறது.
“ உனது கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அந்தக் கருத்தை
சொல்லுவதற்கான உனது உரிமைக்காய் நான் உயிரைக் கொடுத்தும் போராடத் தயார்”
என்று பிரஞ்சு அறிஞர் வால்ட்டயர் சொன்னது போன்று நீதிக்கும் சமத்துவத்திற்குமாக போராடும் மக்கள் குலாம், சுதந்திரத்திற்கு எதிராக விடுக்கப்படும் இத்தகையை அச்சுறுத்தல்களை நிச்சயம் எதிர்த்தே தீருவர்.
உதயன் பத்திரிகை மீதான இவ் வன்முறையை தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராய் வன்முறையைத் தூண்டும் சக்திகளை இனங்கண்டு அவர்களை மறுதலிக்க தமிழ் மக்கள் முன்வரவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது.
22.02.2010
தேடகம்
கனடா