வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமன்றி மேற்கிலும் தெற்கிலும், மத்தியிலும் வாழ்கின்ற தமிழ் மக்களும், ஏனைய தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இன்று காலத்தின் கட்டாயமாகும்.அரசுடன் முரண்படுவதற்காக அன்றி, ஏனைய இன மக்களை பாதிக்காத வகையில் அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண்பதற்காகவே. இதில் மாறுப்பட்ட கருத்துக்கு இடமில்லை. என்னையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பொறுத்தவரையில் சமாதானத்தையும் சமத்துவத்தையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு பொது திட்டத்திற்கமைய அனைவருடனும் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் கௌரவ சௌமியமூர்த்தி தொண்டமான், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் மறைந்த தலைவர் கௌரவ.ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி ஆகியோரின் ஆசீர்வாதத்தோடும், ஆதரவோடும் ‘ஈழத்து காந்தி’ என அனைவராலும் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட கௌரவ எஸ்.ஜே.வி செல்வநாயகம் கியூ.சி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதை எதிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் எதுவும் இருக்க முடியாது. தமிழ் காங்கிரசும், கௌரவ எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியும் இணைந்து உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். இந்த இரு கட்சிகளின் அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தைக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த காலம் தொடக்கம் திருவாளர் கௌரவ மு.திருச்செல்வம் கியூ.சி, கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.சி, கௌரவ ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி, த.வி.கூ யின் செயலாளர் நாயகமும் அன்றைய எதிர்கட்சி தலைவருமான கௌரவ அ.அமிர்தலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. வெ.யோகேஸ்வரன், கௌரவ மு.சிவசிதம்பரம், கௌரவ தா.திருநாவுக்கரசு, கௌரவ. அ.தங்கதுரை, கௌரவ.க.துரைரெட்ணம் பா.உ, கௌரவ. கே.இராசலிங்கம் பா.உ, கௌரவ. வீ.என். நவரட்ணம் பா.உ, கௌரவ. எஸ்.கதிர்வேற்பிள்ளை பா.உ, கௌரவ. மு. ஆலாலசுந்தரம் பா.உ, கௌரவ. வீ.தர்மலிங்கம் பா.உ மற்றும் முன்னாள் யாழ் மேயர்களான திருமதி சரோஜினி யோகேஸ்வரன், திரு பொன்.சிவபாலன் இன்னும் பலர் உள்ளுரிலும், வெளிநாட்டிலும் ஈமக் கிரிகைகளுக்காக எடுத்துச் சென்ற வேளையில் புனிதமானதும், அனைத்து தமிழ் மக்களாலும் மதிக்கப்பட்டதுமான உதயசூரியன் கொடியினால் போர்த்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டனர்.
உதயசூரியன் சின்னத்தை கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பதிலாக வீட்டுச் சின்னத்தை கொண்ட தமிழரசு கட்சியை மீள இயங்க வைக்க எவருக்கும் அவசியமும், தேவையும் இருக்கவில்லை. தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தமிழரசு கட்சியை செயலிழக்க செய்து வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை வளர்த்தெடுத்தார். 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் கூடுதலாக உள்ள தொகுதிகளில் 500 வாக்குகளால் தோல்வியடைந்த ஒரு தொகுதியைத் தவிர ஏனைய 19 தொகுதிகளிலும் வெற்றியீட்டியது.
மறைந்த தலைவர்கள் ஆரம்பகால உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியை சமாதானத்தையும், அகிம்சையையும் பேணிகாக்க தொடர்ந்து வரும் பல தலைமுறைகளுக்கு பரம்பரை சொத்தாக விட்டுச் சென்றுள்ளனர். தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்கள் தான் உருவாக்கி செயலிழக்க வைத்த தமிழரசு கட்சி என்றாவது ஒருநாள் தான் தமிழ் மக்களின் உரிமைகளை சாத்வீக முறையில் வென்றெடுக்கவென வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிப்பதற்கு யாரும் உபயோகிப்பார்கள் என்று கனவில் கூட ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்.
என்னைப் பொறுத்தவரையில் நாட்டுக்கும் எனது மக்களுக்கும் கட்சியின் நலனுக்காக தம் உயிரை அர்ப்பணித்த பல்வேறு தலைவர்களுக்கும் எனது கடமையை செய்து விட்டேன். அகிம்சைக்கு கட்டுப்பட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் கதவுகள் என்றும் பூட்டப்பட்டு இருக்காது. அதற்கு முரணாக இக் கட்சியை காப்பாற்றி தலைவர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற பல்வேறு கஷ்டங்கள், இடையூறுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
கட்சியில் நான் தொடர்ந்து செயல்படுவது எவருக்கேனும் இடைஞ்சலாக இருக்குமேயானால் இக் கட்சியை பொறுப்புள்ளவர்களிடம் கையளித்துவிட்டு ஒதுங்க தயாராக இருக்கின்றேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இலட்சியத்துக்காக உழைக்கக்கூடிய இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கட்சியுடன் இணைந்து பேராசையும், பேராவலும் கொண்ட அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற பகிரங்கமாக அழைக்கின்றேன். கட்சியின் கொள்கைகளுக்கு விசுவாசமாக உழைக்கும் அனைவரும் எம்முடன் இணையலாம் என்றும் கூறிவைக்க விரும்புகின்றேன்.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ
16-02-2010