ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் அமைப்புச் சபை ஒன்றை உருவாக்குவதற்கான ஆணையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அரசியல் அமைப்புச் சபை தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும். இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு ஆட்சியமைப்பதன் மூலமே சாத்தியம் ஏற்படும். அந்த ஆணையையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை கோரவுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின்படி எந்தவொரு கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதற்கு தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதனாலேயே 17வது திருத்தச் சட்டதுக்கு ஆளும்கட்சி அழுத்தம் கொடுத்து வருகின்றது. அதனை நிறைவேற்றவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசுக்கு தேவையாக உள்ளது.
இந்தப் பெரும்பான்மையைப் பெற்று தேர்தல் முறையை மாற்றி அமைக்க குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரையாவது வாங்க அரசு முயற்சிக்கலாம்.
இவ்வாறான மாற்றங்களுக்கு ஊடாக அரசியல் அமைப்பை அரசு மாற்றி அமைத்தாலும் அது இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கப்படுமா என்பது சந்தேகத்திற்கு உரியதே. இது பற்றிய தெளிவான அறிவிப்பு எதனையும் ஜனாதிபதி வெளியிடவில்லை.
ரிஎன்ஏ உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துமே அடுத்த நான்கு வருடத்தில் தங்கள் அரசியல் எதிர்காலத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதையொட்டியே தங்கள் காய்களை நகர்த்துவர். தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய அக்கறை பெரும்பாலும் தமிழ் அரசியல் கட்சிகளால் வெளிப்படுத்தப்படவில்லை. இனிமேலாவது அவ்வாறு வெளிப்படும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.