தற்போது வன்னி யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தங்களை அறிவித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் அரசியல் சீட்டுக்கட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக சன்னதம் ஆடியது. ஆனால் இறுதியில் ரிஎன்ஏ சம்பந்தரின் பந்தை லாவகமாக ஆடிய மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் குழு சிக்ஸரே அடித்துவிட்டது. இடதுசாரித் தலைமைகளுடன் இணைந்து ஒரு முற்போக்கு அணி ஒன்றை உருவாக்க முயற்சிக்காமல் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெல்ல வைக்கப் போகின்றோம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் கூறி தமிழ் மக்களின் அரசியலை சாக்கடைக்குள் தள்ளியது ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு. இன்று வீழ்ந்தும் மீசையில் மண்படவில்லையென கதையளக்கின்றனர்.
‘தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் ” எனத் தமிழ் மக்கள் தெரிவித்து இருக்கிறார்களாம் என்று கதையளக்கின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு சரத்பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்வதற்கு முன்பாகவே தமிழ் மக்கள் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டனர். இது காகம் இருக்க பனம் பழம் வீழ்ந்த கதையே. ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வீழ்ந்த வாக்குகள் மகிந்த சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கான பழிவாங்கும் வாக்குகளே அல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வீழ்ந்த வாக்குகள் அல்ல.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனவரி 7ல் தேசம்நெற்க்கு தெரிவித்தது போல் ‘இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும்” என தமிழ் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்த அடிப்படையில் பார்க்கையில் நாடு முழுவதும் 74 வீதமான மக்கள் வாக்களித்து இருக்கையில் யாழ் மாவட்டத்தில் 15 வீதமான மக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வீழ்ந்துள்ளது. இது தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறும் ”தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம்” என்பதன் லட்சணம்.
சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜெனரல் பொன்சேகாவுடன் இணைந்து வடக்கு கிழக்கு – இணைந்த தமிழ் தாயகம் என்றெல்லாம் றீல் விட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டாளிகள் – ஜெனரல் சரத் பொன்சேகா, யூஎன்பி, ஜேவிபி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என அறிக்கைகளை வெளியிட்டனர். அது ஒருபுறம் இருக்க லண்டனில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடாத்துகிறார். இலங்கை வாழ் தமிழ் மக்கள் பொதுவாக புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து பொருளாதார மற்றும் உதவிகளை எதிர்பார்க்கின்றனரே அல்லாமல் தங்களுக்கான அரசியல் தலைமைத்தவத்தையோ அல்லது அரசியல் புத்திஜீவிதத்தையோ எதிர்பார்க்கவில்லை என்பது சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் அவரது சகோதரருக்கும் இன்னும் சரிவரப் புரியவரவில்லை. இன்னும் சில புலம்பெயர் புலி ஆதரவு புலி எதிர்ப்பு புத்திஜீவிகளால் இன்னமும் தங்கள் அரசியல் அடையாளத்தை தக்க வைப்பதற்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை. அதிஸ்டவசமாக மக்கள் இவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான போதும் சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம் நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தார். எம் கெ சிவாஜிலிங்கம் ஓரளவு அறியப்பட்ட இடதுசாரி அரசியல் வாதிகளைக் காட்டிலும் சில ஆயிரம் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார். குறிப்பாக சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ன ஆகிய இடதுசாரிக் கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும் எம் கெ சிவாஜிலிங்கம் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் இந்த வாக்குகளால் எம் கெ சிவாஜிலிங்கம் எவ்வித திருப்தியையும் அடைய முடியாது. குறிப்பாக தமிழ் பேசும் சிறுபான்மையின மக்கள் மாறி மாறி இனவாதத் தலைமைகளைத் தெரிவு செய்வதிலும் அவற்றுடன் கூட்டுவைத்து அரசியல் நடத்துவதிலுமே ஆர்வம் காட்டுகின்றனரே ஒழிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவதற்கான அரசியல் முதிர்ச்சியும் தூர நோக்கும் அவர்களிடம் இல்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.
மிக மோசமான அவலத்தை ஏற்படுத்திய வன்னி யுத்தம் முடிவடைந்து சில மாதங்களுக்கு உள்ளாகவே நடைபெற்ற தேர்தலில் தங்கள் அரசியல் இருத்தலை தக்க வைப்பதை மட்டுமே கணக்கில் கொண்டு எய்தவனை நோவதா அம்பை நோவதா என்று அரசியல் பேசியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஜெனரல் சரத்பொன்சேகாவோடு வில்லுடைக்க சுயம்வரம் சென்றவர்கள் தற்போது மண் கவ்வித் திரும்பியுள்ளனர்.
இவர்கள் ஒருபுறம் இருக்க மகிந்த ராஜபக்சவின் தோளோடு தோள் நின்ற ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், ரிஎம்விபி மற்றும் கருணா அம்மான் போன்றவர்களுடைய அரசியலும் அம்மணமாக்கப்பட்டு விட்டது. இவர்கள் மக்களில் இருந்து வெகு தொலைவிலேயே உள்ளனர். மீண்டும் பதவிக்கு வரும்போது இவர்களின் ஆயுதங்களைக் களைவேன் என்று மகிந்த ராஜபக்ச ஒரு உறுதிமொழியை தமிழ் மக்களுக்கு வழங்கி இருந்தாலே மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் அதிகரித்து இருக்கும். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவேன் என அவர் உறுதியழித்து இருந்தது. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, வவுனியா போன்ற தமிழ் மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களுடன் உரையாடிய போது, அவர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் மீது மிகுந்த அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனங்கள் பற்றிய அச்சம் அவர்களிடம் நிறையவே உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வன்னி மக்கள் எவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்துகின்றனரோ அதேயளவு வெறுப்பை ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் மக்கள் ரிஎன்ஏ உட்பட எந்தவொரு தமிழ் அரசியல் தலைமை மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதையே வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகளால் அம்மக்கள் மிக மோசமான வாழ்வை எதிர்கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடாக தமிழ் அரசியல் தலைமைகள் மீதான நம்பிக்கையீனம் பரவலாகக் காணப்படுகின்றது. தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்கின்ற தகமையை இழந்துள்ளனர். இதுவே தமிழ் பிரதேசங்களின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.