04

04

என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார்: பரமேஸ்வரன்

parameswaran.jpgஎன் மீது குறைகூறுபவர்கள் குற்றத்தை நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார் எனப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் லண்டனில் கடந்த வருடம் மே மாதம் உண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் பிரித்தானிய அரசு கொடுத்த வாக்குறுதி ஒன்றிக்கமைவாக அதைக் கைவிட்டார்.

இருப்பினும் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கடந்தவருடம் அவர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் மக்டொனால்ஸ் பேகரைச் சாப்பிட்டார் என்று ஸ்காட்லன் யாட் பொலிசார் தெரிவித்ததாக பல பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த பரமேஸ்வரன், தற்போது “சன்” மற்றும் “மெயில்” பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் இவர்மேல் எழுந்துள்ள விமர்சனங்களால், இவர் சமூக வாழ்கை பாதிப்படைந்தது என்றும், உண்ணாவிரதத்தை நிறுத்த பிரித்தானியாவில் சிலர் முயன்றதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இவருக்கு, பிரித்தானிய குடியுரிமையும் கிடைத்துவிட்டதாக தன் மீது வீண் பழிபோடுகிறார்கள் என பரமேஸ்வரன் தெரிவித்தார். குடியுரிமை கிடைக்கவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்த அவர் அவ்வாறு யாராவது நிரூபித்தால் தாம் தீக்குளிக்கக் கூடத் தயார் எனத் தெரிவித்துள்ளார். தனது தற்போதைய நிலைப்பாடு தொடர்பாகவும், தன்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வீண் பழிகளைப் பற்றி விளக்கியும் அவர் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனடாவில் பொதுக் கல்விச்சபை உறுப்பினர் தெரிவு. களத்தில் வனிதா நாதன்

Vanitha_Nathanவனிதா நாதன், நீண்டகால மார்க்கம் நகரவாசியான இவர் ‘மாணவரை முதன்மைப் படுத்துவோம்” எனக்கூறி தனது தேர்தல் பரப்புரைக்காக பெற்றோரையும் மாணவரையும் நேரிற் சந்திக்கப் புறப்படுகிறார். சமூக சேவைப் பணியாளர், போதைப் பொருட்களுக்கு அடிமையான இளையோர் ஆலோசகர், பெற்றோருக்கான பயிற்றுனர், குடும்ப வன்முறைத் தீர்வு ஆலோசகர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசகர் மற்றும் முதியோர் குழு ஒழுங்கமைப்பாளர் எனப் பல முகங்களைக் கொண்ட இவர் புறொக் பல்கலைக்கழக உளவியல் இளமானிப் பட்டதாரியாவார். வனிதா நாதன் தற்போது ‘யுத் லிங்க்” அமைப்பில் யோரக் பிரதேச சமூக சேவைகள் பிரிவிலும் யோர்க் பிரதேச குடும்ப சேவைகள் பிரிவிலும் பணியாற்றி வருகிறார். பெற்றோர், மாணவர் ஈடுபாட்டையும் புரிந்துணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் யோர்க் கல்விச் சபையின் 7 மற்றும் 8ஆம் பிரிவுப் பொதுக் கல்விச் சபையின் உறுப்பினரால் இப்பிரதேச மாணவரை பெரும் சாதனைகள் செய்யத் தூண்ட முடியும் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

மார்க்கம் பொதுக்கல்விச் சபை 7, 8ஆம் தொகுதி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட
வேட்பாளர் பதிவை முதலாவது நாளியே மேற்கொண்ட வனிதா ‘இந்த தேர்தல் வெற்றியானது ஒவ்வொரு வீட்டிலும் தனிப்பட்ட முறையிலேயே அடையப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். ‘வீட்டுக்கு வீடு சென்று கல்விச் சேவைகள் தொடர்பாக பேசுவது என்பது கல்விச் சபை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் என் ஈடுபாட்டையும் கடின உழைப்பையும் எடுத்துக் காட்டுவதாக அமையும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கல்விச் சபையின் கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டுமே ஒரு கல்விச் சபை உறுப்பினரின் கடமையாக அமைந்துவிட முடியாது என்பதை உறுதிப்படுத்தவும் பெற்றோரினதும் மாணவரதும் குரலாய் ஒலித்திடவுமே நான் இப் பதவிக்குப் போட்டியிடுகிறேன். இப்பதவி சமூகத்திற்கு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து அர்பணிப்போடு செயற்படுவேன்.

வனிதாவின் தேர்தற் பரப்புரையானது குடும்பங்களோடு கல்விச் சபைகளின் தொடர்பாடல் மிகவும் சிறப்பானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அத்தோடு சமூகத்தின் தேவைகளையும் கருத்துக்களையும் சரியான முறையிற் பிரதிபலிப்பது கல்விச் சபை உறுப்பினரின் முக்கிய கடமையாகும் என்பது இவரின் உறுதியான எண்ணம்.

பெற்றோர் மாணவருடனான தொடர்ச்சியான தொடர்பாடல்கள் மூலம் பொதுக் கல்வியை நாம் பலமாக்குவதுடன் அதைச் சிறப்பாகச் செயற்படவும் செய்யமுடியும். ஆனால் இந்நிலையை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

சமத்துவ உரிமைகளை சகலரும் அனுபவிக்கும் இலங்கையை கட்டியெழுப்புவோம்

flag”வேறு பாடுகளை மறந்து சுதந்திரத்தினதும், அபிவிருத்தியினதும் முழுமையான நன்மைகளைப் பெறவும் சமத்துவமான உரிமைகளை எல்லோரும் சமமாக அனுபவிக்கவும் கூடிய ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நம்மை அர்ப்பணித்துச் செயற்படுவோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இன்று கொண்டாடப்படும் இலங்கையின் 62வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த வருடம் எமது நாட்டை விட்டும் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது கொண்டாட்டம் என்றவகையிலும், எமது மக்கள் ஜனநாயகத்திற்கான தங்க ளது அர்ப்பணத்தை மிக உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியிருக்கும் ஒரு சூழ்நிலையில் நடைபெறும் ஒரு கொண்டாட்டம் என்ற வகையிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

அறுபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இப்போது மிகவும் அர்த்தம் நிறைந்ததாகவுள்ளது.

காரணம் எமது சுதந்திரத்தின் அரைவாசிக்காலப் பகுதியை ஆட்கொண்டு, எமது நாட்டின் இறைமைக்கும் ஆள்புல எல்லைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்துவந்த பிரிவினைவாத பயங்கரவாதிகளிடமிருந்து நாம் முழுமையாக விடுதலை பெற்றுள்ளோம்.

சுதந்திர போராட்டத்தில் மகத்தான பங்களிப்புக்களை வழங்கிய நாட்டுப் பற்றுடையவர்களை நாம் எவ்வளவு நன்றியுடன் நினைவு கூருகின்றோமோ அதேபோன்று பயங் கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு தியாகங்களைச் செய்த எமது வீரமிக்க படையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், இன்னும் முழு நாட்டிலும் சுதந்திரத்தையும் சமாதானத்தையும் மீளக்கட்டியெழுப்பும் இந்த போராட்டத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி நின்ற எல்லா மக்களுக்கும் முழு அளவில் நன்றிகூறுவது பொருத்தமானதாகும்.

நாட்டுக்குள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய அதேவேளை பயங்கரவாதத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியவர்களது நோக்கங்களுக்கு ஏற்றவகையில் எம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வந்த வெளிச் சக்திகளை எதிர்த்து நிற்பதில் தமது தைரியத்தை வெளிப்படுத்தி நின்ற எல்லா மக்களுக்கும் குறிப்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாம் மேற்கொண்டு வந்த போராட்டத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொண்டு, எமது நாட்டுக்கும் எமது மக்களுக்கும் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கும் எமது நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு எல்லா வழிகளிலும் உதவிய எமது நட்புநாடுகளுக்கும் நாம் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது நாட்டில் சமாதானத்திற்கான புதியதோர் யுகத்தில் காலடி எடுத்துவைக்கும் நாம், எதிர்காலத்தின் சவால்களுக்கு முகங் கொடுக்க தயாராகவுள்ளோம்.

தேசிய நல்லிணக்க இலக்குகளுக்கும், நாட்டில் வாழும் எல்லா மக்கள் பிரிவினர்களிடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், அதேபோன்று தேசங்களுக்கு மத்தியில் எமக்கான சரியான இடத்தை பெற்றுத்தரவல்ல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் நாம் சமமான முக்கியத்துவத்தை வழங்குவது அவசியமாகும்.

சமாதானத்தின் விளைவுகளையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் மத்தியிலும்கூட கைவிடப்படாத அபிவிருத்தி அம்சங்களையும் மின்சார, சக்திவலு துறைகளில் ஆரம்பிக் கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களினூடாகவும் உட் கட்டமைப்பு அபிவிருத்திகளின் ஊடாகவும் ஏற்கெனவே காணக்கூடியதாகவுள்ளது.

நீங்கள் தற்போது எங்களுக்கு வழங்கியுள்ள பலமான இந்த மக்கள் ஆணை இலங்கை தேசம் எமது கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அம்சமான மனித உரிமைகளுக்கு முன்னுரிமையளிக்கும் தேசமாகவும் எமது பிராந்தியத்தில் பொருளாதார கேந்திர நிலையமாகவும் திகழும் வகையில் புதியதோர் இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எமக்கு மிகுந்த பலத்தைத் தந்துள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, ஆசியாவிலேயே மிகவும் பழைமைவாய்ந்த ஜனநாயக தேசம் என்றவகையில் எமது தேசம் பேணிப் பாதுகாத்துவரும் சமாதானம், சகிப்புத்தன்மை, பரஸ்பர நம்பிக்கை மற்றும் முன்னேற்றம் ஆகிய ஜனநாயக பாரம்பரியங்களுக்காக நாம் எம்மை மீளவும் அர்ப்பணிப்போம். இவ்வாறு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

111 பேருக்கு நேற்று மெளலவி ஆசிரியர் நியமனம்

அரசாங்கம் நேற்று 111 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கியது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்தினால் வழங்கப்பட்டது.

முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 17 வருடங்களின் பின்னர் முதற் கட்டமாக 111 பேருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ்வைபவத்தில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நான்கு வருட கால ஆட்சியில் 33 ஆயிரம் பேருக்கு கல்வியமைச்சின் கீழ் ஆசிரியர் நியமனங்கள், கல்வி நிருவாக அதிகாரிகள் போன்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே போன்று கடந்த ஆறு மாதங்களுக்குள் 1450 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்படும் 111 மெளலவி ஆசிரியர் நியமனத்துடன் மேலும் 173 ஆங்கில மொழி மூலமான கணிதம்/ விஞ்ஞான பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படுகிறது.

இந்நியமனங்களுக்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே திறைசேரி மூலம் நிதி ஒதுக்கியிருந்தமை இங்கு குறிப் பிடத்தக்கது. இந்நியமனம் ஏற்கனவே வழங்கப்பட இருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் போது நியமனம் வழங்க முடியாது என்ற சுற்றறிக்கையின்படி இன்று உங்களுக்கு வழங்கப்படுகின்றது.

இவ் ஆசிரியர் நியமனங்கள் எவ்வித அரசியல்வாதிகளின் சிபார்சுகளுக்காக வழங்கப்படவில்லை. திறமை அடிப் படையிலும், பரீட்சை திணைக்களத்தினால் நடாத்திய போட்டிப் பரீட்சையில் சித்தி யெய்தியவர்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்தின் வெற்றிடத்திற்கேற்ப வெட்டுப்புள்ளி அடிப்படையிலும் அவர் கள் க. பொ. த. உயர்தரம் மற்றும் வயது, மெளலவி டிப்ளோமா சான்றிதழ் மற்றும் நேர்முகப் பரீட்சையில் தோற்றி 111 பேரே தகுதி பெற்றிருந்தனர்.

அவர்களுக்கே முதற் கட்டமாக இந்நியமனம் வழங் கப்படுகின்றது. இந்நியமனம் பெற்றவர்கள் தமது நியமனக் கடிதத்தில் குறிப்பிட்ட பாடசாலையில் ஆகக் குறைந்தது ஐந்து வருடம் சேவையாற்ற வேண்டும். எவ்வித காரணமும் இன்றி நியமனங்கள் சொந்த ஊரில் கற்பிப்பதற்கு பாடசாலை மாறுதல் வழங்கப்பட மாட்டாது என்றார்.

வடக்கில் வாக்களிப்பு குறையவில்லை

வடக்கில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு எனப் பலர் பிரசாரம் செய்வதில் உண்மை இல்லை. உண்மையில், இங்கு வாக்காளர்களாகப் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ள பெருமளவானோர் ஐரோப்பிய நாடுகளில் வாழ்கிறார்கள். தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுக் காலை (03) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.

இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் வைத்திருக்க வேண்டுமென 1988இல் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிரகாரம்தான் புலம்பெயர்ந்த மக்களின் பெயர்களும் இன்னமும் பேணப்படுகின்றன.

இதற்குத் தேர்தல்கள் செயலகமோ, மாவட்ட அதிகாரிகளோ பொறுப்பில்லை. 2005ஆம் ஆண்டு 560,000 பேர் பதிவாகியிருந்ததுடன் 2008 இல் 720,000 பேர் பதிவாகியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள், மரணமடைந்தவர்கள் போன்றோரின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டன.

இதற்கேற்பவே வாக்காளர்கள் தொகை 720,000 ஆக அதிகரித்தது. வன்னியில் மக்கள் வாக்களிப்பதற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தோம். அதனால், பஸ் போக்குவர த்தை ஏற்பாடு செய்வதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டு விட்டது. வேறு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. எல்லா இடங்களிலும் தேர்தலை நடத்தினோம். தேர்தல் தினத்துக்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாகச் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.

பதாகை, சுவரொட்டிகளை காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்ட தினங்களில் அவற்றை வைத்ததுடன் கூட்டங்களையும் நடத்தினர். இது தவிர எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மக்கள் வாக்களித்தார்கள். அதனை நன்கு ஆய்வு செய்த பின்னரே வாக்குகளை எண்ணுவதற்கு ஆயத்தமானோம்.