07

07

புதிய திசைகள் அமைப்பின் சந்திப்புத் தொகுப்பு : ரி சோதிலிங்கம்

newdirections.jpgபுதிய திசைகள் அமைப்பினரின் ‘இலங்கையின் இன்றைய அரசியல் நிலைகள்’ என்ற தலைப்பிலான சந்திப்பு லண்டன் லூசியம் சிவன்கோயில் மண்டபத்தில் பெப்ரவரி 6ல் இடம்பெற்றது. மே 18க்குப் பின் உருவான பல்வேறு அரசியல் அமைப்புகளின் தோற்றத்தில் புதிய திசைகள் லண்டனில் உருவான ஒரு அமைப்பு. முன்னர் தமிழீழ மக்கள் கட்சி என்று அறியப்பட்ட அமைப்பின் ஒரு பிரிவினர் இவ்வமைப்பை மே 18க்குப் பின்னதாக உருவாக்கி உள்ளனர். இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தாமே தமது உரிமைகள் பற்றிய நிலைப்பாட்டை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் அதற்கான பின்புல ஆதரவை லண்டனிலிருந்து வழங்குவது என்ற கோட்பாட்டுடனேயே இந்த அமைப்பு செயற்ப்பட ஆரம்பித்துள்ளதாக இதன் ஸ்தாபகர்களில் ஒருவரான மாசில் பாலன் தெரிவித்தார்.

கூட்டம் ஈழப்போராட்டத்தில் அர்ப்பணிப்பு செய்த போராளிகள் பொதுமக்கள் எல்லோருக்குமான ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது.

கூட்டத்தில் பல்வேறு அரசியல் கருத்துக்களும் முட்டி மோதியது. நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு போராட்டங்களை செய்ய முடியாது என்றும் நாட்டிலுள்ள மக்களே தமது அரசியல் போராட்டங்களை தீவிரப்படுத்தி செயற்பட வேண்டும் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர்கள் நாம்தான் அவர்களுக்கான ஆதாரதளம் என்றும் எம்மிடையே தான் அதற்கான பல பொறுப்புக்கள் உள்ளது என்றும் எமது ஆதரவின்றி அவர்களால் செயற்ப்பட முடியாது என்றும் தெரிவித்தனர். இதனிடையே நாங்கள் தான் கடந்த காலங்களில் போராட்டங்களை இங்கிருந்து செயற்ப்பட்டு மக்களை முள்ளிவாய்க்காலில் அழித்தவர்கள் என்றும் ஆகவே இங்கிருந்து செயற்ப்படுவது என்பது மிகவும் ஆபத்தானது, இங்குள்ளவர்கள் அங்குள்ள மக்களின் அரசியல் நலன்களிலும் பார்க்க தங்கள் அரசியல் அடையாளத்தையே முன்னிறுத்திச் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே பதிலளித்த புதிய திசைகள் கூட்ட ஏற்பாட்டாளர் புவி நாம் இங்கிருந்து தலைமை தாங்குவது என்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லை என்பதில் மிகத்தெளிவாக இருக்க விரும்புகிறோம் என்றும் புதிய திசைகள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான ஆதரவு அமைப்பாகவே இப்போதைக்கு இருக்கும் எனவும் தெரிவித்தார்.

புலிகளின் கடந்தகாலத் தோல்விகளையும் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைககளையும் பேச முற்ப்படும்போது கூட்டத்தில் இருந்த சிலர் பலமான விசனங்களை எழுப்பினர். புலிகளின் கடந்தகால நடவடிக்கைகள் சிலவற்றை வாதத்திற்கு எடுத்துச் சென்ற போது விவாதம் உணர்ச்சிகரமானதாக மாறியது. குறிப்பாக விடுதலை அமைப்புகளை அழித்தமை இறுதி யுத்தத்தில் தமிழ் பொது மக்கள் மீது தாமே தாக்குதலை நடாத்தி அரசியல் செய்ய முற்பட்டமை, மே 18 வரை இருந்த புலிகளின் சொத்துக்கள் மாயமாக மறைந்தமை, வன்னி மக்கள் முகாம்களில் வாட பல்லாயிரம் பவுண்கள் செலவில் மாவீரர் தினத்தை நடாத்தி பணத்தை விரயமாக்கியமை போன்ற விடயங்கள் பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொண்டது.

இதில் முக்கியமாக புலிகளினால் நடாத்தப்பட்ட மாவீரர் தினம் பற்றியும் அதன் செலவுகள் பற்றியும் குறிப்பிடும்போது மாவீரர் தினம் ஒன்று தான் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் தினமாக இருக்கும் என்றும் அது தமிழ் மக்களுக்காக போராடிய அத்தனை பேருக்குமானது என்றும் சிலர் கருத்துக்களை முன்வைத்தனர். இதனை இடைமறித்து அந்த மாவீரர்தின விழாவில் சிறீசபாரத்தினம், உமா மகேஸ்வரன் மற்றும் போராளிகளது படங்கள் இல்லை என்றும் அவையும் இருந்திருந்தால் இது பொதுவான தமிழ்ப் போராளிகளுக்கான தினமாகலாம் என்றும் கருத்து வைக்கப்பட்டது. அங்கிருந்த யாரும் மாவீரர்களை குறைத்து மதிப்பிடவோ கொச்சைப்படுத்தவோ இல்லை. ஆனால் மாவீரர் தினத்தை பணத்தைக் கொட்டி விரயமாக்கும் களியாட்ட நிகழ்வாக அல்லாமல் ஆக்கபூர்வமான நிகழ்வாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து வலுவாக வெளிப்பட்டது.

இதனை தொடரந்து மாற்றுக் கருத்தாளர்களின் கடந்த காலங்கள் பற்றியும் குறிப்பாக மாற்றுக் கருத்தாளர்களில் பலர் புலிகளை தேசிய சக்தியாக ஏற்றுக்கொண்டு செயற்பட முனைந்தபோதும் புலிகளால் அந்த அமைப்பாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றியும் இதில் தீப்பொறி என்எல்எப்ரி போன்ற அமைப்புக்களுக்கு நடந்தவை பற்றியும் சில கருத்துக்கள் வெளிப்பட்டது. புலிகளின் தந்திரோபாயமே இணைவது போன்று இணைவதும் பின்னர் அவர்களை அழிப்பதும் அதிலும் தாம் மட்டுமே தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்பதை உறுதிப்படுத்துவது பற்றியதுமான கருத்துக்கள் பல எழுந்தன. இதனிடையே புலிகளை எதிர்ப்பவர்கள் அரசுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராக செயற்ப்பட்டனரே அன்றி தமிழர்க்கு ஆதரவான போராட்டங்களை செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனை நிராகரித்து கருத்து வெளியிட்ட சிலர் புலிகளை எதிர்த்தவர்கள் எல்லாம் அரச ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்படுவதை முட்டாள்தனமானது என்றனர். அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் செயற்பட்டவர்கள் புலிகளால் துரோகிகள் என்று பட்டம் சூட்டப்பட்டதை சிலர் அங்கு சுட்டிக்காட்டினர்.

புலிகளின் முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் பற்றி கருத்துக்கள் எழும்போதெல்லாம் நெருப்பின் மேல்நின்ற சிலர் இன்னும் புலிகளின் போராட்ட தவறுகள் பற்றியோ புலிகளின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் பற்றியோ விளங்கிக்கொண்டதாக இல்லை என்பதை அவதானிக்க முடிந்தது.

கூட்டத்தில் புலிகளின் சவுத்ஈஸ்ட் கூட்ட பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் உட்பட மற்றும் சில புலிகளின் ஆதரவாளர்களும் பிரிஎப் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறுபான்மை மக்களுக்காகப் போராடிய புலிகள் அந்த சிறுபான்மையினரை தமது இறுதி யுத்ததில் தமது ஆயுதங்களால் கொலைசெய்தும் அந்த இறப்பில் ஆதாயம் தேட முற்ப்பட்டதையும் தமிழரின் இயக்கங்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக செய்த போராட்டங்கள் என்பதைவிட பயங்கரவாத்தினையே செய்திருந்தனர் என்பதையும் இந்த இயக்கங்களில் பலர் இன்னும் போராட்டம் பற்றி தவறான அடிப்படைகளையே கொண்டுள்ளனர் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. புலிகள் இறுதிக்காலப் போராட்டத்திலும் கடந்த 30 வருட போராட்டங்களிலும் பாரிய தவறுகளையும் தவறுக்கான பொறுப்புக்களையும் கொண்டவர்கள் என்பது போல மற்றைய இயக்கத்தவர்களுக்கும் இந்த தவறுகளுக்கும் பொறுப்புண்டு என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

கூட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இனிமேல் என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்ற கேள்ளிகட்கு விடைதேட முயன்றபோதும் அதனை நோக்கி கலந்துரையாடல் நகரவில்லை. தாங்கள் என்ஜிஓ அமைப்பல்ல மக்களின் அன்றாட தேவைகள் பற்றி புதியதிசைகள் சந்திப்பை ஏற்பாடு செய்யவில்லை என்று அவ்வமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் சபாநாவலன் தெரிவித்தார். தாங்கள் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார். என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்பது பற்றி புதியதிசைகளின் நிலைப்பாடு பற்றி கேட்கப்பட்ட போதும் அவர்கள் தாங்கள் எவ்வித நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பது பற்றியோ அதை நோக்கி கலந்துரையாடலை நகர்த்தவோ தவறிவிட்டனர்.

வட்டுக்கோட்டை தீர்மானம் கொண்டு வருபவர்களுடன் மற்றும் புலம்பெயர் நாட்டில் தமிழீழம் அமைப்பவர்கள் போன்றவர்களுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்றும் ஏதோ ஒரு வழியில் அவர்களும் பாதையினை கொண்டுள்னர் என்றும் பலரும் பல திசைகளில் சென்று விடாமல் இவர்களுடன் இணைந்து செயற்ப்பட வேண்டும் என்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இவை பற்றிய நிலைப்பாடுகளை இனிமேல் வரும் கூட்டங்களில் இவற்றை விவாதிக்கலாம் கலந்துரையாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய திசைகள் போன்று பல அமைப்புக்கள குறிப்பாக தமிழர் தகவல் நடுவம் போன்றோர் சில கூட்டத் தொடர்களை நடாத்தி வந்துள்ளதையும் இவர்களையும் அழைத்து ஒருகிணைத்து செயற்ப்பட வேண்டும் என்றும் முரண்பாடு கொண்டவர்களும் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் ஒரு பொதுவான வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்பட வேண்டிய அவசியமும் சமூகத்தில் இப்படியான யதார்த்த நிலைப்பாட்டுடனேயே செயற்பட முடியும் என்ற கருத்துக்களும் வெளிப்பட்டது.

எங்கிருந்து தொடங்குவது என்ற கருத்து பகிர்வின்போது புலிகள் விட்ட இடத்திலிருந்து தொடங்குவது என்ற பதத்திற்கு ஒரு அர்த்தம் இல்லாது உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. புலிகளில் புலம்பெயர்நாட்டு தலைவர்கள் நிதிப்பொறுப்பாளர்கள் அரசியல் பொறுப்பாளர்கள் எனப் பலர் உள்ளபோதிலும் இன்று வரையில் புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளாரா? புலிகள் இயக்கத்திற்கு என்ன நடந்தது? அல்லது தம்மிடையே உள்ள பணத்தின் நிலை என்ன? மக்கள் இவ்வளவு கஸ்டப்படம் போதும் அந்த நிதி வளங்கள் அந்த மக்களுக்கு உதவி செய்யபோக முடியாமல் போனதின் காரணம் என்ன? புலிகளின் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தது? போன்ற விபரங்களை இன்று வரையில் வெளியிடாதது புலிகளின் கடந்த 30 வருட மக்களுக்கான போராட்டம் என்ற பதத்தையே கேவலப்படுத்துகிற செயலாகவே உள்ளது என்றும் அங்கு குற்றம்சாட்டப்பட்டது.

இவ்வாறு பல்வேறுபட்ட கருத்துக்கள் முட்டி மோதி இவ்வாறான கருத்துப் பகிர்வுகள் தொடர வேண்டும் என்றளவில் இச்சந்திப்பு நிறைவுபெற்றது.

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு கலாநிதி பட்டம்

mr-rusya.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) ரஷ்யா போய்ச் சேர்ந்தார். ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யா செல்லும் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நாளை (08) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதேநேரம், 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இருதரப்புக் கடன் உடன்படிக்கையொன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திடுகின்றார். இரு நாடுகளுக்கு மிடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகக் கைச்சாத்திடப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதிக்கு ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தினால் நேற்று மாலை கெளரவ டொக்டர் பட்டம் வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. உலக சமாதானத்தைப் பேணி வருவதற்காகவும், பயங்கரவாதத்திற்கெதிரான வெற்றிகரமான செயற்பாட்டுக்காகவும் ஜனாதிபதிக்குக் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வீ. லெவ்றோவ் விடுத்திருந்த அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி ராஜபக்ஷ ரஷ்யா சென்றிருக்கிறார். மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பங்குபற்றுமாறு ஜனாதிபதி திமித்றி மெத்வதேவின் சார்பிலேயே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு டொக்டர் பட்டங்களை வழங்கி வரும் இந்தப் பல்கலைக்கழகம் கல்வி, விஞ்ஞான துறைகளில் சிறந்த இலக்குகளை எய்தியோருக்கும் உலக சமாதானத்தைப் பேணி வரும் உலகத் தலைவர்களுக்கும் இதுவரை பட்டங்களை வழங்கியுள்ளது. இதுவரை உலகளாவிய ரீதியில் ஐந்து ஜனாதிபதிகளும் இரண்டு பிரதமர்களும் இந்தப் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சிறப்பு டொக்டர் பட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்குபற்றவென சுமார் 100 இற்கும் அதிகமான நாடுகளிலிருந்து 6000 இற்கும் அதிகமானோர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று (07) பிற்பகல் மூன்று மணிக்கு பல்கலைக்கழகத்தின் தலைவரைச் சந்திக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, மாலை 3.30 இற்கு மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வார்.

நாளை (08) பிற்பகல் 2 மணிக்கு ரஷ்ய ஜனாதிபதி திமித்றி மெத்வதேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பார். அதேவேளை 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், சர்வதேச வர்த்தக, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், கைத்தொழில் அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் ஜனாதிபதியுடன் ரஷ்யா சென்றுள்ளனர்.

ரி.எம்.வி.பி கட்சி தனித்துப் போட்டி?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடுவதென நேற்று கொள்கையளவில் தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று மாலை கூடிய கட்சியின் உயர்பீடம் இந்த முடிவை எடுத்துள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முதலைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்பே இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென கட்சியின் பேச்சாளர் அஸாத் மெளலானா தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி: 3வது நாளான நேற்று வரை 20 இலட்சம் பேர் கண்டுகளிப்பு

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலயில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்று வரை சுமார் 20 இலட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனரென நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி சுதந்திர தினத்தன்று (4 ஆம் திகதி) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

60 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விளக்கும் சுமார் 1000 காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் முண்டியடித்து கண்காட்சியைப் பார்வையிடுகின்றனர். பாதுகாப்பு தொடர்பான காட்சிக் கூடங்களில் மக்களின் ஆர்வம் கூடுதலாக இருப்பதைக் காண முடிகிறது.

இதனையிட்டு கண்டி நகரிலிருந்து விசேட பஸ் சேவைகள் (24 மணி நேரமும்) நடத்தப்பட்டு வருகின்றன. இக் கண்காட்சி காலை 9 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்.

வவுனியா நலன்புரி முகாம் முன்பள்ளி சிறுவர்களுக்கு 18 நடமாடும் நூலகம்

ஜப்பானிய பிரஜைகளும் கொழும்பில் இயங்கும் ஜப்பானிய நிறுவனத்தினரும் இணைந்து வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள முன்பள்ளிச் சிறுவர்களுக்கென 18 நடமாடும் நூலகங்களை வழங்குகிறார்கள்.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் உதவியுடன் இந்த நடமாடும் நூலகங்கள் வழங்கப்படுகின்றன. நாளை (08) திங்கட்கிழமை இந்த நூலகங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படுவதாக ஜப்பானிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறியிடம் இந்த நூலகங்கள் கையளிக்கப்படும். ஜப்பானிய மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த நூலகங்கள் கையளிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைப் பற்றி ஜப்பானிய மக்கள் மத்தியில் கலந்துரையாடியதில் நடமாடும் நூலகம் வழங்கும் திட்டம் சிறப்பானதெனத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத் – பிரி. உதயா பிரதம களப்பொறியியலாளர்

prasard.jpgபிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கடமையை அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவத்தின் பிரதம களப் பொறியியலாளராக (Chief Field Engineer) நியமிக்கப்பட்டுள்ளதுடன் திங்கட் கிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

முன்னர் இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். லண்டனில் அவருக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

லண்டனிலிருந்து இலங்கை வந்துள்ள பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும் சமிக்ஞை அதிகாரியாகவும் நியமனம் பெற்றிருந்தார். தற்போது அவர் வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக இராணுவப் பேச்சாளர் நியமனமும் வழங்கப்ப ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.ம.சு முவுடன் இணைந்து போட்டியிட இ.தொ.கா முடிவு

பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மலையக மக்களின் எதிர்கால நலன்கருதியும் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும் அரச தரப்புடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், மக்களின் எதிர்கால நன்மை கருதி அரசாங்கத்துடன் இணைந்து களமிறங்குவதாகப் பிரதி அமைச்சர் கூறினார். இந்தத் தேர்தலில் பழையவர்களுடன் பல புதிய முகங்களும் அறிமுகமாகவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்பே போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். விஜேகுமாரன் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருவதால் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக விஜேகுமாரன் குறிப்பிட்டார். மேலும், மலையகத்தில் கட்சி தாவியவர்கள் போட்டியிட்டு வெல்வதா, தேசியப் பட்டியலில் இடம் கோருவதா என்பதைச் சிந்தித்து வருவதாகத் தெரியவருகிறது.

புளுட்டோ கிரகம் சிவப்பாக மாறுகிறது: ‘நாசா’ தகவல்

புளுட்டோ கிரகம், சூரியனை 248 ஆண்டுகளாக சுற்றி வருகிறது. இந்நிலை யில் அது பிரகாசமாகவும் சிவப்பாகவும் மாறி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ தெரிவித் துள்ளது.

விண்வெளியில் சுற்றி வரும் ஹப்பிள் டெலஸ்கோப் எடுத்த படங்களின் அடிப்படையில் இக்கருத்தை ‘நாசா’ தெரிவித்துள்ளது.

புளுட்டோ கிரகத்தில் சூரிய ஒளி படும் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி உருகுவதாலும், அதன் எதிர் துருவம் உறைவதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ‘நாசா’ கூறியுள்ளது.