09

09

இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது.

parliament.jpgஇலங்கையின் 6 வது நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் கலைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு  வெளிவருமெனவும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் லூசியன் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு 10 நாட்களுக்குள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தினம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 அல்லது 7 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாக இருப்பதால், பெரும்பாலும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் தேர்தல் வாக்கெடுப்புகள் இடம்பெறும்.
இலங்கையின் 6 வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர் தெரிவு கடந்த 2004 ம் ஆண்டு ஏப்ரல் 2 ம் திகதி இடம்பெற்ற அதேவேளை, முதலாவது நாடாளுமன்ற அமர்வு அதே மாதத்தின் 22 ம் திகதி இடம்பெற்றது.

ஊடகவியலாளர் ஈவா ரணவீர காலமானார்!

eva_ranaweera.jpgபிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஈவா ரணவீர இன்று காலமானார். மரணிக்கும்போது இவருக்கு வயது 85.  கம்பஹ புனித சிலுவைக் கல்லூரியில் ஆரம்பக் கல்வி பயின்ற இவர் ஒரு பட்டதாரியாவார்.

அரச மொழி திணைக்களத்தில் முதல் நியமனம் பெற்ற இவர் லங்கா தீப பத்திரிகையின் வனிதா வித்தி சஞ்சிகையின் ஆசிரியையாக 10 வருட காலம் சேவையாற்றியதுடன் மகளிர் குரல் என்ற பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக 20 வருட காலம் பொதுப்பணியாற்றியுள்ளார்.

இவர் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பல நூல்களை எழுதி விருதுகளும் பெற்றுள்ளார்.

இவரது பூதவுடல் பொரல்ல ஜயரத்ன மலர்ச் சாலையில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 11 ஆம் திகதி பிற்பகல் 5:00 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு – பிரசாத் சமரசிங்க தகவல்

prasard.jpgஇராணுவப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் சென்று சந்திக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். அத்துடன் அவருக்குத் தேவையான வைத்திய வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இது பற்றி அவர் மேலும் தகவல் தருகையில்,

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஒருவர் தொடர்ந்து ஆறு மாத காலத்துக்கு இராணுவச் சட்டங்களை மதித்து நடக்கவேண்டியது அவசியமாகும் என்றும் கூறினார்.

நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டி!

nr.jpgஜனாதிபதி யின் மகன் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளர். இது தொடர்பான விண்ணப்பத்தை அவர் பொதுஜன ஐக்கிய முன்னணி செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளதாக ‘இளைஞருக்கு நாளை’ என்ற அமைப்பின் ஊடகச் செயலாளர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷ தமது 16 வயதிலிருந்தே பொதுநல சேவைகளில் ஆர்வம் காட்டிவந்துள்ளார். ‘இளைஞருக்கு நாளை’ என்ற அமைப்பின் ஊடக அவர் இளைஞர் சமுகத்துக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். 

ஜனாதிபதி நாடு திரும்பினார்

mr-rusya.jpgரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 10.50 மணியளவில் நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டியின் கருத்துப் பகிர்வு! : தொகுப்பு ரி சோதிலிங்கம்

Sarath_Fonseka_Posters_in_Jaffnaலண்டன் தமிழ் சொலிடாரிட்டி தனது இலங்கைத் தேர்தல் சம்பந்தமான கருத்துப்பகிர்வினை சோசலிசக் கட்சியின் தொடர் கூட்டத்தில், பெப்ரவரி 4ல் பகிர்ந்து கொண்டது. தமிழ் சொலிடாரிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சேனன் தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாட்டை அங்கு வெளியிட்டார்.

”இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலைப் பற்றி பேசுவதற்கு முன்பு ஒரு சிறு கதை ஒன்றினை இங்கே சொல்ல விரும்புகிறேன் இலங்கையில் புலிகள் அரசுடன் போராடினார்கள் அந்த புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகள் இருவரை அரசும் எதிர்க்கட்சியுமாக சேர்ந்து பிரித்தெடுத்து அரசு தனது அமைச்சரவையிலும் மாகாண சபையிலும் அமைச்சர்களாக்கியுள்ளது. பின்னர் இவர்களின் உதவியுடனும் புலிகளுக்கு எதிராக சண்டையிட்ட புலிகளை அரசு முற்றாக அழித்துள்ளது. இந்த இறுதி யுத்தத்தில் 250 ஆயிரம் பேர்கள் அகதிகளாக்கப்பட்டும் பல ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டும் பாரிய பொருளாதார இழப்புக்களும் நடைபெற்றது. இந்த பாரிய யுத்தத்தை ஆட்சியிலிருந்த மகிந்தாவும் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் வெற்றிகரமாக நடாத்தி முடித்தனர். அதன் பின்னர் தமது வெற்றி விழாக்களையும் கொண்டாடினர்.

புலிகளால் உருவாக்கப்பட்ட ரிஎன்ஏ என்ற தமிழ் கட்சிகளின் கூட்டணியினர் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்த இராணுவத் தளளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்து அரசை மாற்றுங்கள் என்று யுத்தத்தில் பாதிப்புற்று நலிவடைந்திருந்த மக்களைப் பார்த்து வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் மக்களில் மிகச் சிறுபான்மையினர் இந்த தேர்தலில் பங்கு பற்றி தமது மக்களை கொன்றொழித்த அந்த இராணுவத் தளபதிக்கே வாக்களித்துள்ளனர். இப்போது மகிந்தா அரசு இதன் காரணமாக தமிழர்கள் மீது சீற்றம் கொள்ளலாம் எனவும் தற்போது பயப்பிடுகின்றனர்.

இந்த ரிஎன்ஏ யினர் தாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே புலிகளின் பின்னர் தமிழ் மக்களின் ஏகபோகபிரதிநிதிகள் என்றும் தம்மைவிட யாருக்கும் தமிழர் பிரச்சினை பற்றி பேச முடியாது என்றும் வாதிடுகின்றனர்.”

இந்த சிறுகதையை உங்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம். காரணம் இங்குள்ள பலருக்கு இலங்கையில் அரசியல் கட்சிகளின் தன்மை பாரம்பரியம் என்பன பற்றி தெரியாதவர்கள் அங்குள்ள கடந்த சில வருட நிலைமைகளை தெளிவுபடுத்தவே இதை கூறினேன்.

யாருமே மக்களின் நலனில் அக்கறையற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதில் கடந்த 40 வருடமாக தமிழர்களுக்காக போராடுகிறோம் என்ற ரிஎன்ஏயும் என்றுமே சாதாரண மக்களின் பிரச்சினையில் அக்கறையில்லாமல் உள்ளனர். தாம் தமது குடும்பங்களை சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இவர்களது கவலை.

தனது ஆட்சிக் காலம் இரண்டு வருடங்கள் உள்ள போதும், இரண்டு வருடங்களின் பின்பு வரவேண்டிய தேர்தலை மகிந்தா அரசு இன்றே தனது புலிகளின் அழிப்பு வெற்றியுடனேயே நடாத்துகிறது. இந்த வெற்றி தனக்கு சாதகமானது என்பதை பயன்படுத்தவே இந்த தேர்தல் இந்த தேர்தலை அடுத்து பாராளுமன்ற தேர்தலும் நடாத்தப்பட உள்ளது.

இந்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் அரச ஊடகங்களையும் மக்களின் பொதுச் சொத்துக்களையும் பயன்படுத்தியே தனது வெற்றியை தீர்மானித்துள்னர். எதிர்க்கட்சிகளும் மற்றய 20 வேட்பாளர்களின் படங்களைக்கூட மக்களால் பாத்துக்கொள்ள இடம் அளிக்காமல் இந்த தேர்தலை நடாத்தி முடித்துள்ளனர்.

தேர்தல் காலங்களில் முகாம்களில் இருந்தவர்களில் 40 சதவிகிதமானவர்களே வாக்களிக்க தம்மை பதிவு செய்தனர் என்றும் ஆனால் தேர்தல் வாக்களிக்கும் இடங்களுக்கு எடுத்துவர பஸ்கள் இல்லை எனக் காரணம் காட்டி மக்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்ப்படவில்லை.

இந்த 57 சதவிகித தேர்தல் வெற்றிக்கு பின்னர் மகிந்தா அரசு தொடரந்து தனது ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளை தொடர ஆரம்பித்துள்ளது. பத்திரிகைகளுக்கு மூடுவிழா செய்துள்ளது. பத்திரகையாளர்களை கைது செய்துள்ளது. ஆதரவளிக்காதவர்களை அடித்தும் இம்சைப்படுத்தியும் உள்ளனர்.

தேர்தல் காலங்களில் வெளிவந்த பத்திரரைகளின் செய்திகளில் சில

கருணா பிள்ளையான் சிங்களம் படிக்கிறார்கள். மகிந்தா தமிழ் பேசக்கூடியவர் ஆனால் பொது இடங்களில் பேச முடியாதுள்ளது!

சர்வதேச நிதிஉதவிகள் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய துரித நடவடிக்கை!

இலங்கையில் சிறுபான்மை என்ற இனமே இல்லை நாம் எல்லோரும் இலங்கையர்களே!

இப்படியெல்லாம் செய்திகள் வந்த பிறகு புலிகளுக்கு பல தளபாடங்களையும் பேச்சுவார்த்ததைக்கு என்று கூறி கூட்டி வந்து புலிகளை அடியோடு இல்லாதொழித்த எரிக்சொல்கேயிம் மகிந்தாவிற்கு வாழ்த்துச்செய்தி அனுப்பினார்.

இலங்கை தற்போது உலகின் மிகமுக்கிய உல்லாசப் பிரயாணிகளின் இடம். இது நியுயோர்க் ரைம்ஸ் செய்தி.

இலங்கையில் மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்து தமது ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளனர். பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது. இலங்கையில் தற்போது ஜனநாயகம் முழுமையாக மக்களால் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். – இது அமெரிக்கா வால்ஸ்ரிற் பத்திகைகளின் செய்திகள்.

இப்படி சர்வதேசங்களின் பார்வை இலங்கையில் இருப்பது ஒன்றும் ஒளிவு மறைவு அல்ல. நிறையவே குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் படையுள்ளது. இதை பயன்படுத்தவும் இலங்கையில் உள்ள சந்தையை நிரப்பவுமே சர்வதேசம் முனைப்பாக உள்ளதும் இதன் அடுத்த பக்கத்தை சீனாவும் இந்தியாவும் நிறைவு செய்யவுமே போட்டிகள் நடைபெறுகின்றன” என தமிழ் சொலிடாரிட்டியின் சார்பில் சேனன் கருத்துத் தெரிவித்தார்.

இதனிடையே சபையிலிருந்து எழுந்த கேள்விகளில்: தமிழர்கள் பல ஆயிரக்கணக்கில் தெருக்களுக்கு வந்து போராடியுள்ளனர், யுத்தத்ததை நிறுத்த முடியவில்லை, போராட்டங்களுக்கு நாம் ஆதரவு அளித்தோம் ஏன் என்று விளங்கிக் கொள்ளவில்லை, ஈராக் யுத்த்தை ஆதரிப்பவர்களை அழைத்து கூட்டம் போட்டு தமக்கு ஆதரவளிக்கும்படி கேட்கிறார்கள், இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்க ஒப்புக் கொண்டவர்களை அழைத்து விருந்து கொடுத்து தமக்கு உதவும்படி கேட்கிறார்கள், இவர்கள் எல்லாம் தமிழர்களுக்காகவா போராடினார்கள்? இவர்களுக்கு போராட்டத்தின் அர்த்தம் புரியவில்லை என்று கருத்துக்கள் எழுந்தன.

உலகின் பல நாடுகளில் கொலைகளை செய்த பாராளுமன்றம் முன்போய் நீதி கேட்டது எவ்வளவு தூரம் சரியானது என்று இவர்கள் சிந்திக்கவில்லை?

தமிழர்களின் தலைமைகள் தமிழர்களை கேலிக் கூத்தாக்கியுள்ளனர். இன்றும் தமிழர்கள் யுத்தத்தில் தோல்வியடைந்த மனோநிலையில் இருப்பதையும் இதன் பின்னர் இந்த தேர்தலில் தமது தலைவர்களால் தாம் கேவலப்படுத்தப்பட்டதையும் நினைத்து தலைகுனிவுடன் உள்ளனர் என்றும் கருத்துக்கள் எழுந்தது.

ஜக்கிய இலங்கைக்குள் தமிழ் சிங்கள மக்கள இணைந்து வாழ்வதற்கான அடிப்படையில் மக்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் இக்கூட்ட கருத்துப்பகிர்வு முடிவடைந்தது.

சரத் பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க

ranil.jpgஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க

அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார். அவரது கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.

அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இதுகுறித்து பல்தரப்பினருடனும் தான் பேசி வருவதாகவும், அனைவரும் இதே கருத்தை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் கூறுகிறார். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் கருத்து வெளியிடுகிறார்.

அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த 45 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முனைந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தெளிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தைக் கோரியுள்ளது.

இது தொடர்பில் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல் தருகையில்; அவுஸ்திரேலிய எல்லைப் படை யினரால் கைது செய்யப்பட்டுள்ள மேற்படி 45 பேரும் இலங்கையர் கள் தானா என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ளும் வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சரியான தகவல்களை இலங்கைத் தூதரகம் பெற்றுத் தரவேண்டுமென கோரியுள்ளதாகவும் தெரிவித்தது.

அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முனைந்த 45 இலங்கையர்கள் அந் நாட்டுப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்த இரு தினங்களாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பில் வினவிய போதே வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முனைந்த மேலும் 45 பேரை அவுஸ்திரேலிய படையினர் வழிமறித்து கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த 45 பேரும் நான்கு நாட்களாக உணவு மற்றும் தண்ணீரின்றி இருந்துள்ளரென அவுஸ்திரேலியாவின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.

வெளிவிவகார அமைச்சு இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்; அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் 45 பேரும் இலங்கையர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே வெளிவிவகார அமைச்சு அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடரும் எனவும் அதற்கான பணிப்புரைகளை அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதுவருக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

நிவாரணக் கிராமங்களில் இன்னும் 70 ஆயிரம் பேரே எஞ்சியுள்ளனர். மீள்குடியேற்றம் விரைவில் நிறைவுபெறும் – றிஷாட்

இடம்பெயர்ந்துள்ள சுமார் 70 ஆயிரம் மக்களே மீளக்குடியமர்த்தப் படுவதற்காக எஞ்சியுள்ளனர் என்று மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியர்த்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள 70 ஆயிரம் மக்களும் வெகுவிரைவில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பொருட்டு சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் வெகுவிரைவாக மேற்கொண்டு வருவதுடன் கண்ணிவெடி கள் அகற்றும் பணிகளும் துரிதப் படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வட மாகாணத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்தவர்கள் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளதாக தெரிவித்த அவர் செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தை தவிர சகல நலன்புரி முகாம்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மூவாயிரம் பேர் அடுத்தவாரம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். இந்த ளளளமக்களை மீளக்குடியமர்த்த தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி, துணுக்காய், தர்மபுரம் பகுதிகளில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  பூநகரியில் கடந்த 2ம் திகதி 300 குடும்பங்களைச் சேர்ந்த 1232 பேரும், 3ம் திகதி மடு, விலாத்தி குளத்தைச் சேர்ந்த 49 குடும்பங்களும், 5ம் திகதி துணுக்காயில் 613 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேரும் மாந்தை கிழக்கில் 7ம் திகதி 260 குடும்பத்தைச் சேர்ந்த 690 பேரும், மீளக்குடியமர்த்த ப்பட்டுள்ளனர் என்றார்.

யுத்தத்தினால் பாதிப்புற்ற வடக்கில் அரசாங்க கட்டடங்களை புனரமைக்க ரூ. 175 மில்லியன் ஒதுக்கீடு

இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றப்படுவதற்கு முன்னர் யுத்தத்தினால் சேதமடைந்த சகல அரச கட்டடங்களையும் புனரமைத்து மீள இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தகவல் தெரிவித்த அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களி லுள்ள அரச கட்டடங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெறுவதுடன், பெரும்பாலான அரச அலுவலகங்கள் தற்போது இயங்குவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களில் அரச நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு தற்போது இயங்கி வருவதுடன் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சேதமடைந்த அனைத்து அலுவலகங்களையும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

யுத்தத்தினால் சேதமடைந்த வடக்கின் 5 மாவட்டங்களிலுமுள்ள அரச நிறுவனங்களை இயங்க வைப்பதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. 180 நாள் அவசர புனரமைப்பு, இரண்டு வருட செயற்றிட்டம் என இரண்டு கட்டங்களாக இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

முதற்கட்டமான 180 நாள் வேலைத் திட்டம் நிறைவுற்றுள்ளதுடன், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் கணிசமான அரச அலுவலகங்கள் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இதன்படி மன்னாரில் 5 பிரதேச சபைப் பிரிவுகளில், முல்லைத்தீவில் 3 பிரதேச சபைப் பிரிவுகளில், கிளிநொச்சியில் 4 பிரதேச சபைப் பிரிவுகளில் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒரு பிரதேச சபைப் பிரிவில் அரச அலுவலகங்கள் தற்போது இயங்கி வருகின்றன.

இந்த 180 நாள் அவசர புனரமைப்புச் செயற்திட்டத்திற்கென 175 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், 158 மில்லியன் ரூபா செலவிலான திட்டங்கள் முடிவ டைந்துள்ளன. ஏனையவை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் புனரமைப்புச் செய்து இயங்க வைக்கப்படுமென பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விமலேந்திர ராஜா நேற்று தெரிவித்தார்.