இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடங்கலான குழு நேற்று (08) ஜெனீவா பயணமானதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சு தெரிவித்தது. சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஐ. நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து உண்மை நிலைமையை தெளிவுபடுத்த உள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆங்கில வாராந்தப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டு காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்குப் பல்வேறு அழுத்தங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இந்த நிலையில் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஐ. நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் நெதோனியோ குட்டரயையும் சந்தித்து உரையாட உள்ளார். தனது விஜயத்தின்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அடுத்த மாத முதல் வாரத்தில் நடைபெற உள்ள ஐ. நா. மனித உரிமை விசேட செயலமர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார். ஐ. நா. மனித உரிமை பேரவை விசேட செயலமர்வில் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பில் விவாதிக்கப் படலாம் என அறியவருகிறது. இந்த அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொண்டு இலங்கை அரசாங்கம் சார்பாக உத்தியோக பூர்வ அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
ஜெனீவாவில் இரு நாட்கள் தங்கியிருக்கும் அமைச்சர் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகரை சந்தித்து இடம்பெயர்ந்த மக்கள் வெற்றிகரமாக மீள்குடியேற்றப்படுவது குறித்தும் தெளிவுபடுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது-
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரத் பொன்சேகா தெரிவித்தது போன்ற எதுவித சம்பவமும் இடம்பெறவில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மறுத்திருந்தது தெரிந்ததே.