தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனவர்களுக்கு இம்முறை ஆசனம் வழங்குவதில்லை என லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்ததாக தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்திருந்த ஆர் சம்பந்தனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையினர் பெப்ரவரி 8ல் சந்தித்து உரையாடி உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியிலேயே சில செய்திகளை ஆர் சம்பந்தன் கசியவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட முடியாத இடைவெளி இருப்பதை உணர்ந்த நிலையில் சந்திப்பு நிறைவுபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையில் இருந்த சிலர் விரும்பியிருந்தனர். அதையொட்டியே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவர் நிக்லஸ்பிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம்சென்ற தளபதி அ அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் எஸ் அரவிந்தன் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியிலேயே போட்டியிடும் என்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பேசுவதிலே அர்த்தமில்லை என ஆர் சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மிதவாதத் தலைவர் என்று குறிப்பிட்ட ஆர் சம்பந்தன் ஆனந்தசங்கரிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு ஆசனத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் வி ஆனந்தசங்கரியுடன் உடன்பட்டு செயற்படுவதற்கு முன்நிபந்தனையாக வி ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான கடுமையான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தது தொடர்பாக தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்த வி ஆனந்தசங்கரி தேர்தல் முடிவுக்குப் பின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததை ஆர் சம்பந்தன் சுட்டிக்காட்டி இருந்தார்.
இச்சந்திப்பின் போது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட யாருக்கு ஆசனங்கள் வழங்குவது என்பது பற்றியும் சில அபிப்பிராயங்களை ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவாக நின்ற என் சிறிகாந்தா ஆகியோருக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை என்றும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இல்லை என்றும் ஆர் சம்பந்தன் அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ளார்.
மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரிஎன்ஏ இல் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்களுக்கு இம்முறை ஆசனங்கள் வழங்க முடியாது என்ற வகையில் கருத்துத் தெரிவித்து இருந்தார். ரிஎன்ஏ ஆசனங்களுக்கு தகுதி அடிப்படையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்களை ஓரம்கட்டலாம் என்ற வகையிலும் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்தது. குறிப்பாக சட்டத்தரணிகள், பொறுப்பான தொழில் தகுதியைக் கொண்டவர்கள், ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் வழங்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் ஓரம்கட்டப்படுவர் என்ற வகையிலேயே ஆர் சம்பந்தனின் கருத்துக்கள் இருந்தது என தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள்:
தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்)
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)
இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி (சம்பந்தர் அணி), ஈபிஆர்எல்எல் (சுரேஸ்அணி) ஆகியோரின் ஆசனங்களுக்கு பிரச்சினை இராது. ஆனால் தற்போது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ரெலொவில் செல்வம் அடைக்கலநாதனுக்கு மட்டுமே ஆசனம் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. தமிழ் கொங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம் ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கைகளிலேயே உள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் தெரிவு செய்யப்பட்ட தொகுதிகளில் வாழ்ந்த காலத்திலும் பார்க்க அதற்கு வெளியே குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலேயே கூடுதலாக வாழ்ந்துள்ளனர். அந்நாடுகளிலேயே பெரும்பாலும் இவர்கள் அறியப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு என்று ஒரு அரசியல் அடையாளம் இருந்திருக்கவில்லை. அதனால் இவர்களில் பெரும்பாலானவர்களை ஓரம்கட்டுவதில் ஆர் சம்பந்தனுக்கு பெரும் சவால்கள் இருக்கப் போவதில்லை. ஆனால் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா போன்றவர்கள் ஆர் சம்பந்தனுக்கு தலையிடியாகலாம். தங்கள் தொகுதிகளில் சுயேட்சையாகப் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளது. ரிஎன்ஏ தங்களைக் கட்சியில் இருந்து நீக்க முடியாது என எம் கெ சிவாஜிலிங்கம் தனிப்பட்ட முறையில் தெரிவித்து வருகின்றார். தங்களுக்கும் ரிஎன்ஏ க்கும் இடையே எழுத்து மூலமான உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தங்களை ரிஎன்ஏ யில் இருந்து நீக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பி வருகின்றார். இவ்வாறான சர்ச்சைகள் ரிஎன்ஏ யை நீதிமன்றத்திற்கு அலைக்கழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசனங்களை வழங்காது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் புதிய நபர்கள் அவ்விடங்களை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புலத்தில் உள்ள சிலர் அது தொடர்பாக பேசி வருவதாகவும் தெரியவருகின்றது. ரிஎன்ஏ இல் மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளிலும் புலம்பெயர் இறக்குமதிகள் சில போட்டியிடுவதற்கான வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.
மேலும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வியூகம் அமைக்கலாம் எவ்வாறு ஆசனங்களைத் தக்க வைப்பது என்று கணக்குப் போடுவதில் கட்சிகள் படுபிசியாகி உள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. அரச ஆதரவான கட்சிகளான ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியனவும் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கின்றன. வவுனியா நகரசபையை புளொட் கோட்டைவிட்டு ஒரு பாடத்தைக் கற்றுள்ளது. முன்னர் புளொட், ஈபிஆர்எல்எப் கூட்டணியில் இருந்த வி ஆனந்தசங்கரி தற்போது தனிமைப்பட்டுள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளும் தனித்துப் போட்டியிட உள்ளது.
இவர்களைவிடவும் தேசியக் கட்சிகளும் உள்ளுர் பிரமுகர்களை தேர்தல் களத்தில் இறக்க உள்ளன. உள்ளுர் வர்த்தகப் புள்ளிகள் சிலரும் தேசியக் கட்சிகளில் போட்டியிட உள்ளனர். இந்த ஆரவாரங்களுடன் வடக்கு கிழக்கு தேர்தலுக்கு தயாராக உள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள 23 தமிழ் ஆசனங்களுக்கான போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த ஏகபோகம் இல்லாமல் போய்விடும். ஆனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ அரச மற்றும் அரச சார்புக் குழுக்களின் அரசியல் அராஜகங்களுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது ஒரு எண்ணிக்கை விளையாட்டு மட்டுமே.