யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமானவை. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்து பட்டதாரியாகிய மாணவர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தாலும் அவர்களிடம் ஏதும் ஒழுங்கமைக்கப்பட்ட சங்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்க மாணியங்களால் ஒதுக்கப்படுகின்ற பணம் அடிப்படை வசதிகளைக்கூட பராமரிக்கக்கூடிய நிலமையில் இல்லை. உதாரணமாக இங்குள்ள வியாபார நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் தமது பெயரில் அல்லது தமது குடும்பப் பெயரில் தமது வசதிகளுக்கு ஏற்றாற்போல் உதவிகளைச் செய்யலாம்.
உதாரணமாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு 1987ம் ஆண்டு இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு பழைய வாகனம் மட்டுமே இன்றுவரை பாவனையில் உள்ளது. வேறு ஒன்றும் இல்லை. யாழ்ப்பாண கல்வி பாரம்பரியத்தை மார்தட்டிச் சொல்லும் சமூகத்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு இந்த நிலமை.
இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெறுகின்ற அரசியலுக்கும் அங்குள்ள யதார்த்த நிலமைக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. கடந்த 25 வருடங்களாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு புலியின் அட்டூழியங்களை மட்டும் கதைத்து கொம்பியூட்டர் ஊடாக புரட்சிசெய்த keyboard மார்க்ஸிட் அனைவரும் இப்போது புலம் போய் உங்கள் மாபெரும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்த ஒரு தடையும் இல்லை.
சாமம் 2 மணிக்குக்கூட வட்டுக்கோட்டைச் சந்தியில் சைக்கிளில் போனால் அங்கு கடமையில் உள்ள ஆமிக்காரன் நிற்பாட்டி சேவை கேட்கும் நோக்கம் இல்லை. இந்த நிலமை வருங்காலங்கிலும் தொடருமோ தெரியாது. ஆனால் இன்றைய நிலமை இதுதான்.
இன்று இலண்டனில் இயங்கிவந்த புலிகளின் பெரிய ஆதரவாளராகிய Tilko ஸ்தாபனம் பெரிய Hotel ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிர்ணயிக்கிறது. பழைய கதைகளைப் பேசி மக்களை இன்னும் துன்புறுத்தாமல் இவ்வாறான வேலைத் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தமிழ் நிறுவனங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்திற்குச் சென்று தமது நிறுவனங்களை நிறுவி வேலைத்திட்டங்களையும் பயிற்சிகளையும் மேற்கொள்ள உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
10 பவுண்களுக்கு பூ வாங்கி ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பின்னால் வரிசையில் சென்று 5 பவுண்களுக்கு விளக்கு வாங்கி அதை வரிசையாக கொழுத்தி வைத்து பின்னர் தமிழ் ஈழத்தின் தேசிய உணவான கொத்து ரொட்டியும், மட்டின் ரோலும் உண்டு வீடு திரும்பும் எமது புலம்பெயர்ந்த விழிப்புப் போராட்டங்கள் முடிவிற்குக் கொண்டு வரப்படல் வேண்டும்.
ஜந்து சதவிகித மக்கள் இருந்து கொண்ட 33 சதவிகித பகுதி நிலத்தை எமது பாரம்பரிய பிரதேசம் என்று கட்டிப்பிடித்து கதறியழும் யதார்த்தமற்ற முட்டாள்தனமான வரட்டு அரசியலுக்கு சாவு மணி அடிக்கப்படல் வேண்டும். தமிழ்பேசும் மக்களின் அரசியல் யதார்த்த நிலைமையை பிரதிபலிக்காவிட்டால் எமது சமுதாயமும் பாலஸ்தீனம் போல் Gaza Strip (ஈழத்து முள்ளிவாய்க்கால்) போன்ற ஒரு பிரதேசத்தில் முடுக்கி வைக்கப்பட்டு காலாகாலமாக மேற்கத்தைய நாடுகளை கையேந்தி வாழும் நிலைமைக்கு கொண்டு செல்லப்படும்.
இந்தியாவை மையப்படுத்தி “மோட்டு சிங்களவனுக்கு” பாடம் படிப்பிக்கும் காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. இன்று இந்தியாவின் வெளிநாட்டு பாதுகாப்பு கொள்கைகள் எல்லாம் பொருளாதாரத்தையும் பிராந்திய செல்வாக்கையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர் தமிழ் மக்கள் வேண்டும் என்றால் பொய் கூறி புலமை பெற்று, கொழுத்துப்போய் இருக்கும் வெறும் புஸ்வாணங்களாகிய சீமான், வைகோவை அழைத்து மட்டின் ரோல் கொடுத்து விழா நடத்தலாம். இல்லாவிடில் இன்னும் நான்கு அப்பாவித் தமிழர்களை தீக்குளிக்க வைத்து இங்கு குளிர் காயலாம். இவை ஒன்றும் மண்ணில் வாழும் மக்களுக்கு எவ்வித சுபீட்சத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
இன்றைய அரசியல் பொருளாதாரத்தையும் வாக்குப் பலத்தையும் அடிப்படையாக கொண்டது. யதார்த்தத்திற்கு அப்பாற்ப்பட்ட அரசியல்கள் மக்களின் அவலங்களை அதிகரிக்கும். 1980 ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இன்றைய யாழ் சனத்தொகை 50 விகிதம் குறைவாக இருக்கின்றது யாழ்ப்பாண வைத்தியசாலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்படுகின்ற வெற்றிடங்களுக்கு விளம்பரங்கள் பிரசுரிக்கப்படும்போது சிங்களவர்களின் விண்ணப்பங்களே தரமானவையாக இருப்பதாயும், இதனால் தாம் சிங்களவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய நிலைமையில் இருப்பதாக யாழ் வைத்திய அதிகாரி டாக்டர் தேவதாஸன் மற்றும் யாழ் பல்கலைக்கழக் துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம் அவர்களும் தெரிவிக்கின்றார்கள். யதார்த்தம் இதுதான்.
30 வருடங்களுக்கு முன்பு ரூட்டிங் வந்த நாங்கள் மூலைக்கு மூலை கோயில் வைத்து நடு சமர் காலங்களில் நடுரோட்டில் வெறுமனே நின்று தேங்காயை உடைத்து (Health and safety hazard) வீதியெல்லாம் குத்துக்கரணம் அடித்து எமது மதச்சடங்குகளை பின்பற்ற வேண்டும். நடு அநுராதபுரச் சந்தியில் பிள்ளையார் மிகவும் சந்தோசமாக இருக்கிறார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் கல்லாக உள்ள புத்தர் எங்களுக்கு என்ன கெடுதியை கொண்டுவரப் போகிறார்? Traffic Jam கொண்டு வருகிறாரா? அல்லது Health and safety issue …?
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத எழுச்சிக்கும், பழைமையை மையப்படுத்தி நடாத்தப்படுகின்ற அரசியலுக்கும் சாவு மணி அடிக்கப்படும் வரை தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு கிடையாது. இன்று சிறுபான்மையான தமிழினம் இன்னும் சிறுபான்மையாகி விட்டது. பாரம்பரிய தமிழ்பிரதேசம் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு போன்ற அரசியல்வாதங்கள் செயலற்றதாகப் போயுள்ளது. இன்று ஜக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் பாதுகாப்பாகவும் செழுமையாகவும் வாழ்வது காலத்தின் ஒரு கட்டாயத் தேவை.