14

14

எனது கணவருக்கு செய்த பாவத்தின் பழியை பொன்சேகா அனுபவிக்கிறார் – மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி

mrs-pannipitiya.jpgசரத் பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ்வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே முறையிட்டேன்.

ஆனால், எனது கணவருக்கும் ஏனையோருக்கும் செய்த பாவத்தையும் பழியையும் இன்று சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமாவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி அச்சினி இரோமா தெரிவித்துள்ளார்.

எனது கணவரும் சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர்தான். அநாமதேய அவதூறு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு எனது கணவரை இராணுவத்திலிருந்து விலக்கினார். சரத் பொன்சேகாவின் மனைவியுடன் மிகவும் நெருங்கிய உறவுகளை நான் வைத்திருந்த போதும் எனது கணவருக்கு இவ்வாறு நடந்தது.

ஆனால் இன்று சரத் பொன்சேகாவுக்கு இப்படி நடந்தவுடன் அவரது மனைவி ஒவ்வொருவரிடமும் முறையிடுவதும் பெண்கள் அமைப்புக்களை ஆதரவு வழங்கக்கோரி அழைப்பு விடுப்பதுமாக இருக்கிறார். முன்செய்த பாவங்கள் பலித்துக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இன்று தண்டனை பெறும் போது அவரது பிள்ளைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனது கணவர் விலக்கப்படும் போது எனது மூத்த பிள்ளைக்கு 12 வயது. ஏனைய இரண்டு பிள்ளைகளும் 4 வயதையும், 5 வயதையும் உடையவர்களாக இருந்தனர். கணவர் கைது செய்யப்பட்ட போது இந்தக் குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப் பட்டேன்.

குழந்தைகளுடன் வீதியிலிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு உதவியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரது மனிதாபிமானம், காருண்யம் என்பவற்றால்தான் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வென்று மீண்டும் ஜனாதிபதியாகி இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தைப் பற்றி பிழையான தகவலை பரப்பி வருகிறார் கோர்டன் வைஸ் – அரசாங்கம் கூறுகிறது

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தைப்பற்றி கொழும்பிலுள்ள ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் பிழையான தகவலைப் பரப்புவதாக அரசாங்கம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.”அது முற்றுமுழுதாக பிழையான தகவல்” என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல டெய்லிமிரலுக்கு கூறியுள்ளார்.

கடந்த வருடம் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள்கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்று ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்ததன் மூலம் சர்ச்சையை கோர்டன் வைஸ் கிளறிவிட்டிருக்கிறார்.

இந்த மாதிரியாக அதிக தொகையில் பொது மக்களின் மரணங்கள் சம்பவித்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் போதிய விபரங்கள் அந்தத் தருணத்திலும் அதற்கு பின்னரான மாதங்களிலும் வழங்கப்பட்டிருந்ததாக ஹுலுகல்ல கூறியுள்ளார்.பொதுமக்களை புலிகள் எவ்வாறு இம்சித்தனர் என்பது பற்றி ஒளிநாடா மூலம் பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கக்கூடியதாக இருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்தினோம் என்பதையும் ஒளிநாடா மூலம் காண்பிக்கக் கூடியதாக இருந்தது எனவும் ஹுலுகல்ல கூறியுள்ளார்.

நம்பகமான வட்டாரங்களிலிருந்து தான் தகவலைப் பெற்றிருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் மோதல் வலயத்திற்குள் பிரசன்னமாகி இருந்தது என்றும் கோர்டன் வைஸ் கூறியிருந்தார். அத்துடன் அந்த வட்டாரங்கள் தமிழ் பொதுமக்களோ அல்லது மோதலில் ஈடுபட்டவர்களோ அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த 8 மாதங்களில் எந்தவொரு அமைப்புகளும் இவ்விதம் தெரிவித்திருக்கவில்லை என்று ஹுலுகல்ல தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பகுதிகளுக்கு பல வெளிநாட்டு, உள்ளூர் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆதலால் இதில் ஏதாவது உண்மை இருந்தால் எவரும் இதனைப் பற்றி கதைப்பதற்கு 8 மாதங்கள் வரை காத்திருக்க முடியாது. எந்தவொரு அமைப்பிடமிருந்தும் எனக்கு இந்த மாதிரியான எந்தவொரு முறைப்பாடும் கிடைத்திருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் வைஸ் தெரிவித்த சகலவற்றையும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் நிராகரித்துள்ளார். கோர்டன் வைஸ் முன்னரும் இந்த மாதிரியான தவறான அறிக்கைகளை விடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதிரியான தவறான அறிக்கைகளை விடுத்த சிலரில் அவரும் ஒருவர். இவற்றை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். நாட்டிற்கு வெளியே அனுப்பப்பட்ட சிலரில் அவரும் ஒருவர் என்று ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

ரூ. 285 மில். பெறுமதியான இயந்திர உபகரணங்கள் சீனாவினால் கையளிப்பு

china.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா பகுதிகளில் வீதி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவென சீன அரசு 285 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திர உபகரணங்களை நேற்று வழங்கியது. இலங்கையிலுள்ள சீனத் தூதுவர், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்காவிடம் இவற்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பெக்கோ இயந்திரங்கள், மோட்டார் கிறேடர்கள், புல்டோசர்கள் என்பன இவற்றில் அடங்குகின்றன. கொழும்பு காலிமுகத் திடலில் கையளிப்பு வைபவம் நடைபெற்றது. சீன நாணயப்படி 17 மில்லியன் யுவான்கள் என கணக்கிடப்பட்டுள்ளதுடன் இவை சீன அரசு அன்பளிப்பாகவே வழங்குகிறது என தேச நிர்மாண அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி தெரிவித்தார்.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மேலும் 5 மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் இயந்திரங்களும் கொண்டு வரப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மேலும் 5 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்குகிறது என்றும் செயலர் குமாரசிறி தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல் தேசியமட்ட விசாரணையில் நம்பிக்கை இல்லை; நவநீதம்பிள்ளை

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேசமட்ட விசாரணைக்கு ஐ.நா. மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறது.அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த தேசியமட்ட விசாரணைகள் இதுவரை உரிய இலக்குகளை எட்டவில்லை என்பதில் தனது அலுவலகம் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அளித்த உறுதிமொழிக்கு அமைவாக விடயங்கள் இடம்பெறுவது குறித்து பான் கீ மூன் தீவிர உறுதிப்பாட்டுடன் இருப்பதாகவும் நவநீதம்பிள்ளை கூறியதாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்தது.ஜெனீவாவில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை அண்மையில் தான் சந்தித்ததையும் நவநீதம்பிள்ளை உறுதிப்படுத்தியுள்ளார்.

“தேர்தல் முடிவுறும் வரை ஒவ்வொருவரும் காத்திருந்ததாகத் தென்படுகிறது. ஆதலால் அதனை நான் அவருக்கு ஞாபகப்படுத்தியிருந்தேன் என்றும் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கிறார்.”மனித உரிமைகளுக்கான தனித்துவமான அமைச்சு அலுவலகத்தை இலங்கை கொண்டுள்ளது. மனித உரிமைகள் விவகார அமைச்சர் தனது அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்ற பொறுப்பு இருப்பதாகத் தான் நினைத்தேன். மோதலுக்குப் பின்னரான உரிமைகள்,வன்முறைகள் பற்றி மட்டுமல்லாமல் தேர்தலுக்குப் பின்னரான உரிமைகளுடன் தொடர்புடைய வன்முறைகள் பற்றிப் பேசவேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் கருதினேன்” என்றும் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்ற விவகாரத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரிய முறையில் தீர்வு காணப்படவில்லை என்பது தொடர்பாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும் நவநீதம்பிள்ளை மற்றொரு நாட்டின் உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கங்கள் நடவடிக்கையெடுப்பதற்கு இதுவொரு முக்கியமானதொன்று என்று கூறியுள்ளார்.

போர்க்குற்றங்களை நிராகரித்திருக்கும் அரசாங்கம் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இடமளிக்கப் போவதில்லையெனக் கூறியுள்ளது.

அந்த மாதிரியான விசாரணைக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விசாரணைக்கான காரணம் எதுவும் இல்லை எனவும் கூறியிருந்தார். அதேவேளை, சர்வதேச விசாரணையில்தான் சாட்சியமளிப்பார் என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

சரத் பொன்சேகாவை விடுவிக்க பெளத்த பீடாதிபதிகள் கோரிக்கை

sarath.jpgஇலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 18 ஆம் திகதி கண்டியில் மாநாடு ஒன்றிற்கு நான்கு பௌத்த பீடாதிபதிகளும் அழைப்பு விடுத்திருக்கும் நிலையிலேயே சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவுக்கும்,  ஜனாதிபதிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடானது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்றது என்பதையும் பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசம்: விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் புலிகளால் முன்னர் புதைத்து வைக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப் பட்டுள்ளன.

புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் நடவடிக்கையின் போது புலிகளின் பிராந்திய தளபதியாக இருந்த 34 வயதுடைய மோகன் என்றழைக்கப்படும் மகேந்திரராஜா வழங்கிய தகவலுக்கிணங்க விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள், கைக்குண்டுகள், ஸ்னைப்பர் ரக ஆயுதங்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட புலி முக்கியஸ்தர் கொழும்பில் புலனாய்வு பொலிஸாரின் விசாரணையில் தொடர்ந்தும் இருக்கிறார். நாவற்காடு வைத்தியசாலையில் கடமையாற்றிய சிங்கள வைத்தியரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத் துள்ளது.

மாத்தளை: சத்துணவு நஞ்சாகிய விவகாரம்: பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது

சத்துணவு நஞ்சாகி 10 வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடைந்தது தொடர்பாக பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை, பலாபக்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் சத்துணவு உட்கொண்ட மாணவர்களில் தனஞ்சனி கமகே என்ற 10 வயது மாணவி மரணமடைந்தார். மேலும், 129 மாணவர்கள் சுகவீனமடைந்து மாத்தளை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர்.

கொந்தராத்துக்காரரால் பாடசாலை மாணவர்களுக்கென வழங்கப்பட்ட சத்துணவு நஞ்சாகியதாலேயே இந்த சம்பவம் நடத்திருக்கிறதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஏனையவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர்களையும் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென மாத்தளை ஆஸ்பத்திரி அத்தியட்சகர் டாக்டர் கே. டபிள்யூ. எஸ். குமாரவன்ச தெரிவித்தார். எவருக்கும் உயிராபத்தில்லை யெனவும் அவர் கூறினார்.

மேற்படி பாடசாலை உட்பட தொம்பவெல மற்றும் கவட்டயாமுன பாடசாலைகளில் கல்வி கற்கும் கீழ் பிரிவு மாணவர்களே மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

போஷாக்கு உணவாக வழங்கப்பட்ட நூடில்ஸ் முட்டை, சொதி என்பனவுடன் மாணவர்களின் வாந்தி மற்றும் மலம் என்பன மேலதிக ஆய்வுகளுக்காக உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி கே. டப். எஸ். குமாரவன்ஸ மேலும் தெரிவிக்கின்றார். இது சம்பந்தமான பொலிஸ் விசாரணை மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக் அபேசிரிவர்தனவின் பணிப்புரையின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜயம்பதா பண்டார மேற்கொண்டுள்ளார்.

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு: கண்டி மேயர் அலுவிகார பதவியிலிருந்து நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள கண்டி மாநகர சபையின் மேயர் எல். பி. அலுவிகாரவை பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக அப்பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

மேயர் எல். பி. அலுவிகார தொடர்பாகக் கிடைத்த பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னரே அவரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கத் தீர்மானித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்தும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, இதற்கு முன்னர் உடபலாத்த பிரதேச சபைத் தலைவர் – பாத்ததும்பர நகர சபைத் தலைவர், கங்க வட்ட கோறளை பிரதேச சபைத் தலைவர்களும் இவ்வாறான மோசடிக் குற்றச் சாட்டுக்களின் பேரில் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. என்றும் முதமலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தார்.

இந்திய திஹிணி வலையமைப்பில் இணைய இலங்கை வங்கி திட்டம் – ‘டாடா’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

இந்தியாவில் உள்ள சகல வங்கிகளினதும் ஏ.ரி.எம். (திஹிணி) வலையமைப்புடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக ‘டாடா’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வங்கியின் தலைவர் கூறினார். இந்தியாவில் உள்ள பத் தாயிரத்திற்கும் அதிகமான ஏ.ரி.எம். வலையமைப்புகளுடன் இலங்கை வங்கி இணைந்துகொள்வதன் மூலம், இலங்கையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எந்தவொரு வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்திலும் பணத்தை மீளப்பெற முடியும் என கலாநிதி காமினி விக்கிரமசிங்க கூறினார்.

இந்தியாவின் சென்னை மாநகரத்தில் மட்டுமே தற்போது இலங்கை வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அதனால் இலங்கை வங்கியின் ஏ.ரி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி சென்னையில் மட்டுமே பணத்தை மீளப்பெற முடிகிறது.