22

22

யதார்த்தத்திலிருந்து சுத்துமாத்துவரை! : த பாண்டியன்

Jaffna_Roadபுலம்பெயர்ந்த தமிழர்கள் என்று குறிப்பிட்ட நபர்கள் கொண்ட குழு இலங்கை சென்று தமது அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி சமைக்கின்றனர். யார் இவர்கள்? கலாநிதி நொயல் நடேசன், கலாநிதி நரேந்திரன் , திரு. கொன்ஸ்ரன்ரைன், திருமதி. ராஜேஸ்பாலா (இவரை அண்மையில் கழற்றி விட்டு விட்டதாக கேள்விப்படுகின்றேன்) ……… போன்றோர். முதலில் இவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் என்பதை கருத்திற் கொள்ளாமல் தவிர்க்க முடியவில்லை. இங்கு ஏராளமான நல்ல உள்ளங் கொண்ட நபர்கள், தமது உறவினரின் நலன்களில் மிக அதிக அக்கறை கொண்டவர்கள்   இலங்கை அரசுடன் இணக்கப்பாடாக வேலை செய்வதற்கு தயாராக உள்ளனர். ஆனால் ஏதோ மேற்குறிப்பிட்ட நபர்கள் தங்களுக்குத்தான் யதார்த்தம் புரிவதாகவும் மற்றையவர்கள் ஏதோ கேணையர்கள் எனவும் சொல்லிகாட்ட முனைகின்றனர்.

முன்பு தேசம்நெற்றில் எனது நண்பர் வடக்கான் ஆதாம் மேற்குறிப்பிட்ட நபர்களை நீங்கள் யார்? (போர் முடிந்த பின் இலங்கை சென்ற 24 பேர்) என்ன அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கை சென்றீர்கள் என்பது உட்பட பல கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆனால் அவற்;றிற்கு மதிப்பிற்குரிய திருவாளர் கொன்ஸ்ரன்ரைன் பதிலளித்தாரில்லை. ஏதாவது சந்தேகம் எழுப்பினால் புலிகளின் பாணியில் ‘எங்கள் மேல் விமர்சனம் வைக்க இவர்கள் யார்” என திட்டி பின்னூட்டம் விடுகின்றார்கள்.

Jaffna_Univercity_Templeமுதலாவதாக யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்குவோம். இலங்கையின் மற்றைய பல்கலைக்கழகங்களில் எத்தனை வாகனங்கள் உண்டு என முதலில் அறிய வேண்டும். அங்கும் அதே நிலைதான் எனில் எல்லா பல்கலைக்கழகங்களிற்கும் உதவ முன்வர வேண்டுமேயன்றி யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவுவது சரியானதாக எனக்குபடவில்லை. ஏனெனில் யாழ்மாவட்டத்தில் வசதிகள் அதிகம் என அங்கு படித்து விட்டு இங்கு புலி எதிர்ப்பு வாதம் பேசும் நபர்கள் தரப்படுத்தலுக்கு ஆதரவாக பேசிவருவதை நாம் அறிவோம். இது என்னைப் போன்ற பல்கலை அனுமதி கிடைக்கப் பெறாத ஏராளமான வறியவர்களின் பிள்ளைகளின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டு விடும்.

இதற்கிடையில் திரு கொனஸ்ரன்ரைனுக்கு எதிராக எழுதுவதாக நினைத்து கொண்டு சிலர் பின்னூட்டங்களில் மதங்களுக்கிடையில் பிளவை உண்டுபண்ணும் விதமாக கருத்தெழுதுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கிறிஸ்தவ மிசனரியின் பாடசாலைகளில் படிக்கலாம். நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் மிசனறிகளை பிடிக்காது என்பவர்களை என்ன சொல்வது? (எனக்கும் எல்லா மதங்களின் மேலும் மிசனறிகள் உட்பட விமர்சனங்கள் உண்டு). மேலும் இணையத்தளங்களிலும் புலிக்கு எதிராக எழுதுகிறோம் என நினைத்து மதரீதியான பிளவுகளை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர். மறந்து விடாதீர்கள். புpரபாகரன் ஒரு இந்து மதவாதி. மதமாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்திருப்பார் என எண்ண சாத்தியமில்லை.

வடக்கு கிழக்கு மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்ற பொருளில் தொடங்கிவிட்டு பாரம்பரிய பிரதேசம் சம்மந்தமாக அரசியல் பேசுவது நல்லதல்ல. அதை அங்கு இருக்கும் மக்களின் பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவிற்கு வரட்டும். இதை மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றேன். மேலும் இந்த விடயம் எனக்கு உங்கள் எண்ண ஓட்டத்தின் மேல் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கையின் பரப்பளவில் (65610கி.மீ) வடக்கு (8884 கி.மீ) கிழக்கு (99996 கி.மீ) மாகாணங்கள் 28 வீதமானவை. 2001 ல் மக்கள் கணக்கெடுப்பின்படி தமிழ் முஸ்லிம் மக்களின் தொகை 20 வீதம். போரினால் ஏற்படுத்தப்பட்ட இடப்பெயர்வுகளை கணக்கில் எடுக்க அதிகம் என்பதே உண்மையான விடயம். ஏனெனில் இன்றைய சூழலில் வன்னியின் மக்கள் தொகை என்ன? எனவே சிங்கள குடியேற்றத்திற்கான வேலை தொடங்கி விடுவதா? தயவு செய்து நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் என பின்னூட்டம் விட தொடங்க வேண்டாம். பாவம் அவர்கள். அரசு அவர்களை தனது அரசியலுக்கு பாவித்து கொள்ளுகின்றது. இக் குடியேற்றவாதிகள் மேல் புலிகள் செய்த கொடூரங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. முக்கியமாக சிறுபான்மை இனங்களின் இருப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். பெரும்பான்மை மக்கள் இதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ஆஸ்ரேலியாவில் அங்குள்ள பழங்குடியினருக்கு சில குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டது போல் சிறுபான்மையினருக்கு இவ்விடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

Tilko_Hotelஇனி முக்கியமான விடயத்திற்கு வருவோம். முதலீடடிற்கும் மேற் குறிப்பிட்ட உதவிகளுக்கும் உள்ள வேறுபாடுகள். லாபம் கருதிய நோக்கில் செய்யப்படும் முதலீடுகளை ஏதோ ‘மக்கள் சேவை” என்ற மட்டத்தில் கொண்டு செல்வது நல்லதல்ல. ரில்கோ, ரைம்ஸ் ரவல் போன்ற புலிவாதிகள் அடிப்படையில் வியாபாரிகள். இந்த வியாபாரிகளுக்கு வரிச்சலுகை, குறைந்த விலையில் இட ஒதுக்கீடு அல்லது இலவச நில ஒதுக்கீடு இத்தியாதி……….! இலங்கை என்ற நாட்டின் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்ற முறையில் எங்களால் இதை ஏற்க முடியாது.  இங்கு சுப்பர்மாக்கெற்றிலும், பேக்கரிகளிலும் ,ஓட்டல்களிலும், பெற்;றோல் நிலையங்களிலும் வேலை செய்யும் சாமானிய தமிழர்கள் அவர்கள் புலி ஆதரவாளர்களாயினும் புலி எதிர்ப்பாளராயினும் தமது குடும்பங்களுக்கும், சொந்தங்களுக்கும் பணத்தை அனுப்பிக் கொண்டு தான் உள்ளனர். ஆனால் உங்களைப் போன்று கணக்கு வழக்கில்லாமல் பணத்தை சேர்த்த நபர்கள் யதார்த்தம் என்ற பெயரில் அரசிற்கு மாத்திரம் வாக்கு போடுங்கள் இல்லை என்றால் அரசு கோபம் கொண்டு விடும் என கூறுவது …..! இது போன்ற ஜனநாயக மறுப்பை மக்கள் மேலும் மேலும் தாங்க மாட்டார்கள்.

மக்களுக்கு சேவை செய்ய அரசுடன் இணைந்து வேலை செய்வதை ஒருவரும் குறை கூறவில்லை. மறுதலையாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மந்திரி பதவிகளுக்காக சிக்கலான பிரச்சனைகளில் தான்தோன்றி தனமாக பேசுவது, எழுதுவது தான் பிழையானது. பொன்சேகாவை ஆதரிப்பது என்பது கூட ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ விரும்புகிறார்கள் என்பதேயாகும். அதை விடுத்து அவருக்கு வாக்களித்தது சிங்கள பெரும்பான்மை இனத்தை மேலும் கோபத்திற்கு உள்ளாக்குவதாக கூறுவதெல்லாம்………

 இங்கு கொன்ஸ்ரன்ரைன் இடது சாரிகளை போகின்ற போக்கில் திட்டி விட்டு செல்லுகின்றார். தேசம் ஆசிரியர் குழுவும் ஏதோ ஒரு திட்ட அடிப்படையிலேயே செய்திகளை வெளியிடுவதாக நினைக்கின்றேன். ஏனெனில் முக்கியம் வாய்ந்த பல செய்திகளை வேண்டுமென்றே இவர்கள் தவிர்த்து விட்டனர். இதுபற்றி சோதியுடன் பேசினேன். அவர் இலங்கையில் இருந்துதான் பல விடயங்கள் போடுகின்றார்கள் என ஏதோ கூறினார். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கி போர்ட் மாக்ஸிஸ்டுக்களில் அநேகமானோர் மக்களை விற்பதில்லை. அவர்களின் தந்திரோபாய முறையில் பிழைகள் இருக்கலாம். ஆனால் அபிவிருத்தி என்று பேசி சுரண்ட நினைப்பவர்களை விட நல்ல உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் கூறும் பாடசாலை பிரச்சனையில் இருந்து கோவில் பிரச்சனை வரை போர் நடைபெற்ற நாளில் இருந்து ஏன் அதற்கு முன்பிருந்து இருக்கிறது. இப்போது நீங்கள் பேசுபவை எழுதுபவை என்பவற்றைக் கொண்டு பார்த்தால்; உங்களுக்கும் அங்குள்ள மக்களுக்குமான தொடர்பு கடந்த காலங்களில் இல்லை எனபதும்; நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இங்கு மிக வசதியாக நிலைத்து விட்டீர்கள் என்பதும் புரியக் கூடியதாக உள்ளது. இந்த கஸ்ரங்களுக்கான உதவிகளை நீங்கள் அப்போதே செய்திருக்க முடியும். ஏனெனில் 95 லிருந்து யாழ்ப்பாணம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அப்போதும் மக்கள் இதே கஸ்டங்களுடன்தான் இருந்தார்கள்.

நாடு நிலையான சமாதானத்தை எட்டி சுமுகமாக இயங்கும் போதே இப்பிரச்சனைகள் களைந்து எறியப்படும். ஆனால் இங்கு இருக்கும் பழைய மாணவர் சங்கங்கள், தனிப்பட்டவர்கள் உதவுகின்றார்கள். உதவ வேண்டும். ஆனால் இந்த சங்கங்களை முன்பு கேலி செய்த நீங்கள் இப்போது உதவி செய்யச் சொல்வதை என்னவென்று சொல்வது?

மொத்தத்தில் தரப்படுத்தலுக்கு காரரணமாக இந்த மேட்டுக்குடிகளும், ஸ்ரேசன் மாஸ்டர், போஸ்ற்மாஸ்ரர் போன்றோரின் குடிகளும் வெளிநாடுகளில் புலியை ஆதரித்து விட்டு அல்லது எதிர்த்து விட்டு இப்போது ஒன்றாக இலங்கை போய் அபிவிருத்தி, யதார்த்தம் என்ற பெயரில் மீண்டும் அவ் ஏழை எளிய மக்களின் தலையில் மிளகாய் அரைக்க தொடங்குகிறார்கள். நண்பர்களே! இவர்களை நன்கு புரிந்து கொள்ளுங்கள். அதே வேளையில் உங்கள் உறவுகளுக்கு தொடர்ந்து உதவுங்கள். உதவிக் கொண்டே இருங்கள். எமது இந்த வாழ்க்கை ஒரு லட்சம் பிணங்களின் மேல் கட்டப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகள் தரப்படுத்தல் இல்லாமல் பல்கலைக்கழகம் செல்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஜ.தே.கூ.வின் வெற்றிக் கிண்ணத்தில் களம் இறங்குகிறார் ஜெனரல் சரத் பொன்சேகா

sarath.jpgஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.தனது தீர்மானத்தை அவரின் சட்டத்தரணியும் முன்னாள் எம்.பி.யுமான விஜேதாச ராஜபக்ஷ மூலம் எதிரணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் அறிவித்திருக்கிறார். இதனை விஜேதாச ராஜபக்ஷ நேற்று உறுதிப்படுத்தினார்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விரைவாகத் தீர்மானம் எடுக்குமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுள்ள நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐ.தே.க.விலோ அல்லது ஜே.வி.பி.யிலோ இணைந்து போட்டியிடுவதில்லை என ஜெனரல் பொன்சேகா முன்னர் கூறியிருந்தார். இதனடிப்படையிலேயே தனது கட்சியின் மணிச்சின்னத்தை கைவிட்டு ஜனநாயக தேசிய கூட்டணியின் சின்னமான வெற்றிக்கிண்ணத்தை ஜே.வி.பி. நேற்று தேர்ந்தெடுத்துள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகாவின் அணியும் இச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக ஜே.வி.பி. கூறியுள்ளது. இதனை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை ராஜகீய மாவத்தையிலுள்ள ஜெனரலின் அலுவலகத்தில் செய்தியாளர் மாநாடு இடம்பெறுமென ஜே.வி.பி. கூறியுள்ளது.இன்று ஜெனரலின் அலுவலகத்தில் இடம்பெறும் செய்தியாளர் மாநாட்டில் பொன்சேகாவின் பாரியார் அனோமா கலந்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிக் கிண்ணத்தில் போட்டியிடுவதென பொன்சேகா தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலைப் போன்று எதிரணிக் கட்சிகள் பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது சாத்தியமற்றது என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

நுவரெலியா மாவட்ட தேர்தல் களத்தில்…

parliament.jpgநுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக தேசியத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய தொழிற்சங்க அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து 5 சிறுபான்மையினரும் 5 பெரும்பான்மையினரும் போட்டியிடுகின்றனர்.

தொழிலாளர் தேசிய சங்கம் , தொழிலாளர் ஐக்கிய முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்க அரசியல் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 5 சிறுபான்மையினரும் 5 பெரும்பான்மையினரும் போட்டியிடுகின்றனர்.

7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் இம்மாவட்டத்தில் கடந்த 6 ஆவது பொதுத் தேர்தலில் 4 சிறுபான்மையினரும் 3 பெரும்பான்மையினரும் தெரிவானார்கள். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் ஆறுமுகன் தொண்டமானும் சீ.பீ.இரட்ணாயக்க மாத்திரம் மீண்டும் இம்முறை தேர்தலில் இம்மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளாக அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா ரோட்டரிக் கழகத் தலைவரும் சட்டத்தரணியுமான பி.இராஜதுரை , தொழிலாளர் விடுதலை முன்னணிப் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.அருள்சாமி , மலையகத் தேசியத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சருமான வீ.புத்திரசிகாமணி ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் முன்னாள் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ.பீ.இரட்ணாயக்க, முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்புப் பிரதியமைச்சர் நவீன் திஸாநாயக்க, மத்திய மாகாணசபை உறுப்பினர்களான நிமால் பியதிஸ்ஸ , குமார் திஸநாயக்க மற்றும் ஜே.எம்.சி.குணசேகர ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம், இச்சங்கத்தின் பிரதித் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார், தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலவாக்கலை லிந்துலை நகர சபை உபதலைவர் எல்.பாரதிதாசன் , இ.தொ.கா. முன்னாள் அமைப்பாளர் ஆர்.யோகராஜன் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த நுவரெலியா மாநகர முதல்வரும் ஐக்கிய தேசியக்கட்சி நுவரெலியா அமைப்பாளருமான சந்தனலால் கருணாரட்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மத்திய மாகாணசபை உறுப்பினருமான கே.கே.பியதாஸ , முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஜி.எம்.எம்.பியசிறி, முன்னாள் நுவரெலியா மாநகர முதல்வரும் ஐக்கிய தேசியக் கட்சி வலப்பனை அமைப்பாளருமான சட்டத்தரணி திருமதி நளின் திலக ஹேரத் மற்றும் முத்துபண்டா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

மலையக மக்கள் முன்னணி அதன் தலைவி திருமதி சாந்தனிதேவி சந்திரசேகரன் தலைமையில் தனித்து மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

ரி.எம்.வி.பி. தனித்துப் போட்டி

asath.jpgகிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கிலும் தனித்து போட்டியிட நேற்று தீர்மானம் எடுத்திருப்பதாக கட்சியின் பேச்சாளர் ஆஸாத் மெளலான தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதென கட்சி தீர்மானம் எடுத்திருந்தது. அம்பாறை உட்பட கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இதற்கான வேட்பு மனு நாளை சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் கட்சிப் பேச்சாளர் ஆஸாத் மெளலானா கூறினார்.

‘நகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம்: கொழும்பு நகரத்தை 5 வாரத்தில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

colo-town.jpg‘நகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தை 5 வார காலத்தில் அபிவிருத்தி செய்து முடிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். ‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம் நேற்று (21) கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகியது. இங்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பில் ஆரம்பமாகும் இத்திட்டம் படிப்படியாக நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஆசியாவின் பெருமைக்குரிய நாடாக இலங்கையை மாற்றியமைக்கவேண்டுமானால் அனைத்து நகரங்களும் பெருமளவு அபிவிருத்தி செய்யப்பட்டு அலங்காரம் மிக்க நகரங்களாக மாற்றப்படவேண்டும் என்று கூறினார்.

‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் முதல்கட்டமாக கொழும்பு நகரை அண்டியுள்ள குடிசை மற்றும் குறைந்த வசதிகளுடன் கூடிய வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும்.

நகரத்தை கட்டியெழுப்புவோம். துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு நகரை அடுத்துள்ள தோட்ட மற்றும் குறைந்த வசதி கொண்ட 354 வீட்டுத் தொகுதியின் பொது வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.

ஆரோக்கிய வசதி மற்றும் பொது குளிக்கும் இட வசதி, உள்ளே செல்லும் வழிகள் மற்றும் கழிவு கால்வாய்த் திருத்துதல், மின்சார மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தல் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளன.

கெரவலப்பிட்டிய அனல்மின் நிலைய இறுதிக்கட்ட பணி பூர்த்தி – 25ம் திகதி ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

கெரவலபிட்டிய அனல் மின் நிலையத்தின் 100 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இறுதிக் கட்டம் பூரணப்படுத்த ப்பட்டு எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எதிசக்தி அமைச்சின் ஆலோசனையின் பேரில் 300 மெகாவாட் மின் உற் பத்தி திறன் கொண்ட கெரவல பிட்டிய அனல் மின் நிலையத்தின் முதலாவது கட்டமாக 200 மெகா வொட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட பிரிவு கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனையடுத்து 100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டாவது கட்டம் தற்போது பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிவாஜிலிங்கம் தலைமையில் புதிய கட்சி?

sivaji.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜி லிங்கம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அக் கட்சிக்கு எதிரான புதிய கட்சியொன்று உருவாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இக் கட்சி எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் அங்கம் வகிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தெலுங்கானா விவகாரத்தில் மேலும் ஒரு மாணவர் தீக்குளித்து பலி

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை தனியாக பிரிப்பதில் உள்ள தாமதத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது தீக்குளித்த மாணவர் இறந்துவிட்டதாக ஐதரபாத் நகர போலீசார் கூறுகின்றனர்.

thelungana.bmpதெலுங்கானாவை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் டிசம்பரில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

வன்முறைகள் தொடர்ந்ததன் காரணமாக புதிய மாநிலத்ததை அமைக்கும் பணிகளை மத்திய அரசு நிறுத்தியது. தகவல் தொழில்நுட்பம், மற்றும் மருந்து நிறுவனங்கள் பல அமைந்துள்ள ஐதராபாத் தெலுங்கானாவின் பகுதியாக இருக்க வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் விரும்புகின்றனர்

யெமெனில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்திலீடுபட்டோர் கைது

யெமெனில் பாதுகாப்புக்கு அச் சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டோர் சிலரைப் பொலிஸார் கைது செய்தனர்.

இவர்கள் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் அர சைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரங்கள் பதாகைகளை வைத்திருந்தனர். ஷியா கிளிர்ச்சியாளர்களின் நடமாட்டமுள்ள நகரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி களேபரம் பண்ணிய 16 பேரையே பொலிஸார் கைது செய்தனர்.

அல்கைதாவின் தூண்டுதலில் இவர்கள் ஆர்ப்பாட்ட த்திலீடுபட்டதாக பொலிஸார் கூறினர். யெமென் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும். யெமென் அரசுக்கு மிடையே அண்மையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்றாலும் இவை இன்னும் பூரணமாக அமுலுக்கு வரவில்லை. இதனால் இவ்வா றான கைதுகள் இடம்பெறுகின்றன. எனவே சர்வதேசம் இந்த ஒப்பந் தத்தைப் பயனுள்ளதாக்க முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடப் பட்டுள்ளது.

யெமெனில் 2004ல் ஷியா முஸ்லிம்கள் போராட்டத்தை ஆரம்பித் தனர். இன்று வரை தொடரும் யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியும் இடம்பெயர்ந்து முள்ளனர். யெமெனப் புனரமைப்பதற்கான மாநாடு இம்மாதம் 27, 28ம் திகதிகளில் சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.

அ.இ.மு.கா. 6 மாவட்டங்களில் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து போட்டி

ameer.jpgஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆறு மாவட்டங்களில் போட்டியிடுவதாக அ.இ.மு.கா. தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை, வன்னி, குருணாகல், அநுராதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இம்முறை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

அ.இ.மு.கா. சார்பாக மேற்படி ஆறு மாவட்டங்களிலிருந்தும் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகுவர் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். முஸ்லிம் மக்களின் ஆதரவு எமக்கு நிறையவே உண்டு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக்கள் நன்கு அறிவர்.

ஆதலால் மக்களின் ஆதரவுடன் நாம் அமோக வெற்றியீட்டிவோமெனவும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.