March

March

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் கவலை

இலங் கையில் மனித உரிமை பணியாளர்களும், ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் அறிக்கைகள் தொடர்பாகப் பீதியடைந்திருப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் குழு கூறியுள்ளது. மனித உரிமை பணியாளர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்படும் சாத்தியப்பாடு குறித்தும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்திருக்கிறது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் 35 மனித உரிமைகள் பணியாளர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உரிமைகள் பணியாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென்று அரசு கூறி வருகிறது. பட்டியலில் இலங்கையின் முன்னணி மனித உரிமைகள் விவகாரத்துக்கான சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன்ன, உரிமைகள் பணியாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரால் பட்டியலில் முன்னணி இடத்திலிருப்பது புரிந்து கொள்ளப்பட்டதொன்று என்றும் அதிகாரிகளால் இலக்குவைக்கப்படவிருப்பவர்கள் எனவும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசை விமர்சித்த 35 பணியாளர்கள், சட்டத்தரணிகள்,  ஊடகவியலாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் பட்டியல் தொடர்பாக அரசு உத்தியோகபூர்வமாக கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை. உடல் ரீதியான தாக்குதல்கள்,மரண அச்சுறுத்தல்கள் உட்பட பாரதூரமான தொந்தரவுகளுக்கு முன்னர் இலக்காகியிருந்த வெலியமுன்ன மற்றும் சரவணமுத்து ஆகியோரின் பாதுகாப்புத் தொடர்பாக ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

சமூகத்துக்கு ஆபத்தான நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு சர்வதேச மன்னிப்புச்சபை,மனித உரிமை கண்காணிப்பகம்,ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர்நெஷனல் ஸ்ரீலங்கா, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்பன அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் மனித உரிமைகள் பணியாளர்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அண்மையில் கவலை தெரிவித்திருந்தது.சர்வதேச அமைப்புகள் இது தொடர்பாக கவலையை வெளிப்படுத்துமாறு சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தை அணுகியதாக அந்த அமைப்பைச் சேர்ந்த அலெக்ஸ் வில்க்ஸ் பி.பி.சி. சிங்கள சேவைக்குக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனநாயகக் கோட்பாடுகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மற்றொரு உறுப்பினரான ஜயான் மென்டிஸ் கூறியுள்ளார்.

இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு 359 மில்லியன் ரூபா மேலதிக வருமானம் ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

sri-lanka-railway.jpgபுதிய ரயில் சேவைகளை ஆரம்பித்தமை உட்பட பல்வேறு திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தியதையடுத்து இலங்கை புகையிரதத் திணைக்களம் கடந்த வருடத்தில் 359 மில்லியன் ரூபாவினை மேலதிக வருமானமாகப் பெற்றுக்கொண்டுள்ளது.

இதற்கிணங்க இவ்வருடத்தில் 5000 மில்லியன் ரூபா வருமானம் கிட்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

2008ம் ஆண்டில் ரயில்வே திணைக்களம் 3671 மில்லியன் ரூபாவையும் 2009 ஆம் ஆண்டில் 4020 மில்லியன் ரூபாவையும் வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த வருடங்களை ஒப்பிடும் போது 359 மில்லியன் ரூபாவை 2009ம் ஆண்டில் மேலதிக வருமானமாகப் பெற முடிந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, இவ்வாண்டில் 5000 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெறும் வகையில் ரயில்வே திணைக்களம் புதிய வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதற்கிணங்க இதுவரை காலமும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில்வே காணிகளைக் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் விற்பனைக் கூடங்கள், கடைகள், சிறிய வியாபார நிலையங்களை ஏற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

பாவனைக்கு உதவாத இரும்பு மற்றும் உலோகப் பொருட்களை விற்பனை செய்தல் வர்த்தக விளம்பரப் பலகைகளுக்கான அனுமதி வழங்கல், புதிய ரயில் சேவைகளை ஆரம்பித்தல் உட்பட பல்வேறு வழிகளிலும் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்தல் என்பன இத்திட்டத்தில் உள்ளடக்க ப்பட்டுள்ளன.

இலங்கைக்கு தெற்கே கடலுக்கடியில் நிலநடுக்கம்

இலங்கையின் தெற்குக்கும், தென் கிழக்குக்கும் இடையிலான திசையில் கொழும்பிலிருந்து 1155 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடலுக்கடியில் நேற்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பூகற்பவியலாளர் நில்மினி தல்வெல தெரிவித்தார்.

கடலுக்கடியில் சுமார் பத்து கிலோமீற்றர் ஆழத்தில் நேற்று அதிகாலை 2.03 மணியளவில் 6.00 ரிச்டர் அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் அவர் கூறினார். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இலங்கைக்கு எதுவிதமான பாதிப்புமே ஏற்படவில்லை.

அதனால் சுனாமி அச்சுறுத்தல் குறித்த முன்னெடுச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஜப்பானின் வடபகுதியில் 6.6 ரிச்டர் அலகிலும், கிழக்கு இந்தோனேசியத் தீவான ‘மலு க்கு’வுக்கு அருகில் 7.00 ரிச்டர் அலகிலும் நேற்று முன்தினம் நிலநடுக்கம் பதிவான தாகவும் பணியகம் அறிவித்திருந்தது.

நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு மக்கள் சக்தியுடன் கூடிய பாராளுமன்றம் தேவை – ஜனாதிபதி

president.jpgநாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் சக்தியினால் கட்டியெழுப்பப்பட்ட பாராளுமன்றம் அவசியமாகிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். லுனுகம் வெஹேரயில் நேற்று (14) கடலோர கிராமமொன்றில் புதிய கலாசார நிலையமொன்றை திறந்து வைத்து பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது, கோபத்துடனும் குரோதத்துடனும் அரசியல் செய்த யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வருவோம். நாட்டைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவோம். சக்திமிக்க பாராளுமன்றை கட்டியெழுப்புவதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

அபிவிருத்தி இன்று கிராமத்துக்கு வந்துள்ளது. பாதைகள், பாலங்கள் மட்டுமன்றி எமது சிறுவர்களின் மனநிலையும் குணநலன்களும் கூட வளர்ச்சியடைந்துள்ளன. எந்த ஒருவரும் எம்மை விமர்சிக்க முடியும். ஆனால், நாட்டின் எதிர்காலத்தையோ அல்லது எமது சிறுவர்களின் எதிர்காலத்தையோ காட்டிக் கொடுக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. நாம் இன்று இந்த கிராமத்தை அபிவிருத்தி செய்துள்ளோம். அது இந்த சிறுவர்களுக்காக அவர்களது கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக. இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த அபிவிருத்தி இன்று நாடு முழுவதற்கும் வியாபித்துள்ளது.

பாரிய துறைமுகங்கள் நிர்மாணிக் கப்படுகின்றன. விமான நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. இரண்டு துறைமுகங்கள் அமைந்துள்ள ஒரே பிரதேசம் திஸ்ஸ மகாராம பிரதேசமாகும். இந்த அபிவிருத்தியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இன்று எமது கல்வி முறையாகட்டும், தொழில் பயிற்சி துறையாகட்டும் உயர்ந்த மட்டத்தில் உள்ளன. இன்று எமக்கு பாரிய தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இன்று இப்பிரதேசம் உல்லாசப் பயணிகளின் வருகையை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் அபிவிருத்தியை இதனுடன் நிறுத்திவிடப் போவதில்லை. இது மொனராகலை, பிபில, மஹியங்கனை வரை கொண்டு செல்லப்படும். இன்று சிறந்த வீதிக் கட்டமைப்பு எமக்கு இருக்கிறது. இன்றைய நிலையை எதிர்பார்த்து இவற்றை நாம் செய்ய வில்லை. நாளைய நிலையை நினைத்த நாம் அவற்றை மேற்கொண்டோம். நீண்ட எதிர்காலத்தை எதிர்பார்த்து நாம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

இன்று இந்த நாட்டை கட்டியெழுப்ப புதிய இளைய சமுதாயமொன்று முன்வந்துள்ளது.

அவர்களது கரங்களை பலப்படுத்தி எதிர்கால உலகத்தை வெற்றிக் கொள்ளக் கூடிய சிறுவர் பரம்பரையை கட்டியெழுப்புவதன் மூலம் அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

நிபுணர்குழுவை அமைக்கும் யோசனையை பான் கீ மூன் மீள்பரிசீலனை செய்வார்

un-secretary-general.jpgஅணிசேரா அமையமானது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதையடுத்து இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை கூறுவதற்கு விசேட நிபுணர்குழுவொன்றை அமைப்பது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீள்பரிசீலனை செய்யக்கூடும் என்று ஐ.நா. வட்டாரங்கள் கூறியுள்ளன.

அணிசேரா அமையத்தின் எதிர்ப்பால் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் “ஆடிப் போயிருப்பதாக தம்மை அடையாளம் காட்ட விரும்பாத ஐ.நா. வட்டாரங்கள் டெய்லிமிரர் இணையத்தளத்துக்குக் கூறியுள்ளன. செயலாளர் நாயகத்தின் அலுவலகமானது அணிசேரா அமையத்தின் எதிர்ப்பால் நிலைகுலைந்து போயிருப்பதை அறியக்கூடியதாகவிருப்பதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆதலால், இந்த விடயம் தொடர்பாக பான் கீ மூன் மீளச்சிந்திக்கக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இலங்கையில் பதிலளிக்கும் கடப்பாடுடைய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை தெரிவிப்பதற்கு விசேட நிபுணர் குழுவை அமைக்கப் போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அறிவித்ததையிட்டு கடந்தவாரம் அணிசேரா அமையம் விசனத்தைத் தெரிவித்திருந்தது.

இலங்கையின் உள்நாட்டு நிலைவரம் பற்றிக் கவனத்திற்கு எடுக்காமலும் இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாராயாமலும் விசேட நிபுணர்குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் நியமிக்கவுள்ளமை குறித்து பான் கீ மூனுக்கு அணிசேரா அமையத்தின் நியூயோர்க்கிலுள்ள ஒருங்கிணைப்புப் பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது.

அத்துடன், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தீர்மானமானது இலங்கை அரசின் விருப்பங்களைக் கவனத்திற்கு எடுக்காமலும் உரிய முறையிலான கலந்தாலோசனை மேற்கொள்ளாமலும் எடுக்கப்ப்டடது என்று கடந்த வாரம் அணிசேரா அமையத்துக்கு ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித ஹோகண கூறியிருந்தார்.

நட்சத்திரங்கள், விருதுகளை பொன்சேகா இழந்துவிடக்கூடும்

sarath_fonseka-02.jpgஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால் இராணுவத்திலிருந்து அவமதிப்புடன் அவர் நிராகரிக்கப்படுவதை எதிர்கொள்வதாக முதலாவது விளைவு அமையும். இதன் அர்த்தமானது ரண விக்கிரம பதக்கம், ரணசூர பதக்கம், விசிஷ்ட சேவா விபூஷணய என்பனவற்றை அவர் பயன்படுத்த முடியாது என்பதாகும் என்று சண்டே ரைம்ஸ் பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்புக் கற்கைகளுக்கான றோயல் கல்லூரி, பி.எஸ்.சி. போன்றவற்றையும் அவர் பயன்படுத்த முடியாத நிலைமையேற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு வருடத்திற்கு முன்னர் யுத்த கதாநாயகனாகப் புகழப்பட்டவர் ஜெனரல் பொன்சேகா. ஆனால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சில வாரங்களுக்குள் அவர் சாதாரண மனிதராகக் கூட இல்லாமல் குற்றவாளியாக இருப்பார்.

உலகிலேயே சிறந்த இராணுவத் தளபதியெனப் புகழப்பட்ட மனிதரின் விதி இதுவாகக் காணப்படுகிறது என்று சண்டே ரைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அபிவிருத்திகள் ஆரம்பிக்கும் நாள் ஏப்ரல் 9 – அமைச்சர் டக்ளஸ்

devananda.jpgஏப்ரல் 9ம் திகதியை எமது பகுதிகளுக்கான அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கும் நாள் எனக் கொள்ளும்படியும், எமது மக்கள் ஈ. பி. டி. பி.யினராகிய எமக்கு அதிக அரசியல் பலத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மற்றும் வேலணைப் பகுதிகளில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் அலுவலகங்களில் வைத்து பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா, எமது மக்களுடன் நாளாந்தம் தங்கியிருந்து எமது மக்களுக்காக சேவை செய்பவர்களையே எமது மக்கள் தங்கது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தேர்தல் காலங்களில் மட்டும் எமது மக்களிடம் வந்து வாக்குகளை அபகரித்துக் கொண்டு அதன் பின்னர் எமது மக்களைத் திரும்பியும் பாராதவர்களை எமது மக்கள் கடந்த காலங்களில் இனங்கண்டு கொண்டிருப்பார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

எமது மக்கள் பல்வேறு அழிவுகளை எல்லாம் சந்தித்திருந்த போது இப்பக்கம் தலை வைத்தும் படுத்திராத பலர் இப்போது தேர்தல் என்று வந்தவுடன் படையெடுத்து வந்து எமது மக்களை மீண்டும் படுகுழிக்குள் தள்ளவே முற்படுகின்றார்கள் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக் காட்டினார்.

நாளை ஆரம்பமாகும் இராணுவ நீதிமன்ற விசாரணையை பொன்சேகா நிராகரிப்பார் – ஐ.தே.கூ. அறிவிப்பு

sarath_fonseka.jpgசேவையில் இருந்த காலத்தில் இராணுவச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட 7 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரு இராணுவ நீதிமன்ற விசாரணைகளில் முதலாவது விசாரணை நாளை செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதை நிராகரிப்பது என்ற நிலைப்பாட்டிலேயே ஜெனரல் பொன்சேகா இதுவரை இருப்பதாக அவர் தலைமை வகிக்கும் ஜனநாயகத் தேசியக் கூட்டணி நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான குற்றப்பத்திரிகைகள் இராணுவத்தால் அவருக்கு வழங்கப்பட்டுவிட்ட போதிலும் அவரைக் கைது செய்வதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் அந்தக் குற்றப்பத்திரிகைகளில் இல்லையென்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது.

ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச் சாட்டுகளை விசாரிக்கவெனக் தனித்தனியான இரு இராணுவ நீதிமன்றங்கள் இராணுவத் தளபதியின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் விசாரணைகள் நாளை செவ்வாய்க்கிழமையும் நாளை மறுதினம் புதன்கிழமையும் ஆரம்பமாகவிருக்கின்றன.

கனடா செல்வதற்கு பிரபாகரனின் தாயார் முயற்சி பலன் இல்லையேல் இந்தியா செல்வார்

mrs-veluppillai.jpgமருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்வதற்கும் சென்னையிலுள்ள தனது மகளான ஜெகதீஸ்வரி மதியாபரணனுடன் வாழ்வதற்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை அனுமதிகோரக்கூடும் என்று அவரின் உறவினரும் முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 10 வருடங்களாகப் பக்கவாதத்தால் பார்வதி (79 வயது) பீடிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் கனடாவுக்குச் சென்று அங்குள்ள அவரின் மகள் விநோதினி இராஜேந்திரனுடன் வசிப்பதற்கான முயற்சி தோல்வியடையக்கூடும் எனவும் சிவாஜிலிங்கம் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு சனிக்கிழமை கூறியுள்ளார். மருத்துவக் காரணங்களுக்காக கனடிய அதிகாரிகள் விண்ணப்பங்களை நிராகரிப்பது தெரிந்தவொன்றே என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன்,நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்குவதைத் தாமதப்படுத்துவது அறிந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை மரணமானார். அதனையடுத்து தாயாரை கனடாவுக்கு தருவிக்க விநோதினி முயற்சித்தார். ஆனால், அவரின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தனது மகள்மாருடன் இருப்பதற்கே பார்வதி விரும்புகிறார்.கனடாவில் விநோதினியுடன் இருப்பதற்கே அவர் அதிகளவுக்கு விரும்புகிறார். அவரை கனடாவுக்கு வரவழைப்பது தொடர்பாக குடும்பத்தினர் சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓரிரு மாதங்களில் கனடியர்கள் தீர்மானமெடுப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம். வெற்றியளிக்காவிடின் அவரை மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவுக்குக் கொண்டு செல்ல அனுமதி கோருவோம் என்று சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். 1983/2003 வரை பார்வதி தனது கணவருடன் திருச்சியில் தங்கியிருந்தார். அதன் பின்னரே அவர்கள் இலங்கைக்கு திரும்பி வந்தனர்.

கண்டி பிரதேச மலைக் காடுகளில் காட்டுத் தீ

கண்டி-பைரவகந்த, ஹந்தானே-ஹீரஸ்ஸகல மலைக்காடுகளில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இந்தத் தீ அனர்த்தம் காரணமாக சுமார் நான்கு ஏக்கர் மலைக் காடுகள் எரிந்து அழிவுற்றி ருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் மேஜர் எச். ஆர். கே. பி. ஹேரத் நேற்றுத் தெரிவித்தார்.

கண்டி தீயணைக்கும் பிரிவினரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து தீ பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் எனவும் அவர் கூறினார்