மேலே உள்ள படங்கள் என் நண்பனால் அனுப்பி வைக்கப்பட்டன. “அரசியலும் சமயமும்” என்ற கட்டுரையில் சமயங்களின் நன் நோக்கங்கள் பற்றி நீதானே எழுதி இருந்தாய், பார்த்தாயா சமயங்களின் சமுக முன்னேற்ற செயற்பாடுகளை என்று என்னைப் பார்த்து அந்த படங்கள் நக்கலாக (sarcastic) கேட்பது போல் தோன்றியது.
ஈரானில் நடந்தாக கூறப்படும் ஒரு சம்பவம் அதற்கு ஆங்கிலத்துடன் ஹிப்ரு மொழியிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் இது ஈரானுக்கும், இஸ்ரவேலுக்குமான பனிப்போர் என்று இதை விட்டுவிடவும் முடியாதுள்ளது. அதேநேரம் இந்த படங்களின் உண்மை தன்மையை(veracity) அறிவதன் மூலமோ, அல்லது புகைப்பட நிபுணத்துவ யோசனை (expert opinion) பெறுவதன் மூலமோ இந்த படங்களின் ஊடாக சம்பந்தப்பட்டோர் சொல்லவந்த விடயம் என்னவென்றும் அறியமுடியாது.
இருப்பினும் அந்த படங்களின் விளக்கத்தையும் எழுப்பப்படும் கேள்வியையும் பார்க்கும் போது அதாவது “in the name of Islam he is being punished”, “ Is this religion of peace and love” இது ஒரு சமயத்தை குறி வைத்து, அந்த சமயம் மனித விழுமியங்களுக்கு எதிரான விடயங்களை போதிப்பதாகவும், எனவே அந்த சமயத்தை பின்பற்றுவோர் பயங்கரவாத சுபாவம் கொண்டோர் என்ற முடிவு நோக்கி மனித சமூகத்தை நிர்ப்பந்திக்கின்றது போலவும் தோன்றுகிறது.
இதுவரை தொலைகாட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவராத இந்த புகைப்படங்களின் பின்னணி இத்தகைய உள் நோக்குத்தான் என்றால், தற்போது திரையரங்குகளில் காண்பிக்கப்படும் “My name is Khan” என்ற திரைப்படம் இந்த புகைப் படங்களுக்கு நல்லதொரு பதிலாகும். ஆனாலும் இந்த புகைப் படங்கள் என் நண்பன் போன்ற பல்லாயிரக்கணக்கானோரின் மனதில் ஷரியா சட்டம் பற்றிய தப்பபிராயம் ஆழ்ப்பதியக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் இதை சற்று ஆழமாக ஆராய்வதன் மூலம் இந்த படங்கள் அடிப்படையில் எதை கேள்விக்குற்படுத்துகிறதோ அதன் தர்க்க நியாயங்களை நாம் அறிய வழி வகுக்கும் என நம்புகிறேன்.
இந்த வகையில் 8 வயது பாண் திருடனின் கை சிதைப்பு என்ற குற்றச்சாட்டு இஸ்லாமிய மார்க்க சட்ட (ஷரியா)த்துடன் நேரடி சம்பந்தப்பட்டது. ஆகவே இந்த ஷரியா சட்டமானது கை, கால் வெட்டல், தலை தவிர முழு உடலையும் நிலத்துக்குள் புதைத்து கல்லால் அடித்து கொல்லுதல், வெறும் மேனியுடன் கசையடிக்கு உட்படுத்துதல், சிறை பிடிக்கப்பட்டோரின் அல்லது பணயம் வைக்கப்படோரின் தலை கொய்தல் போன்ற வெறும் தண்டனை கொடுக்கும் முறை என்ற கருத்து நிலவுவதை நாம் மறுப்பதற்கில்லை.
ஷரியா என்பது அடிப்படையில் கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பை வரையறுப்பது. அதன் அடுத்த கட்டம் மனிதர்களுக்கிடையிலான தொடர்பு ஆதாவது திருமணம், குழந்தைகள் விவகாரம், விவாகரத்து, வணிகம், குற்றமும் தண்டனையும், நல்லாட்சி, சர்வதேச தொடர்புகள், யுத்தமும் சமாதானமும், மரணம், வாரிசுரிமை என்ற முற்றுப் பெறாத பட்டியலை கொண்டிருந்த போதிலும், இந்த ஷரியா சட்டம் முற்றும் முழுதாக அமுலில் இல்லாத நிலையிலும் இஸ்லாமியர்கள் இதில் சிலதை தெரிந்தெடுத்தும், சிலதை கைவிட்டு( pick and choose) இருப்பதும், பல சமூகங்களின் கலாச்சார தாக்கங்கள் இந்த சட்டத்துக்குள் சத்தமின்றி புகுந்துள்ள நிலைமையும் ஷரியா சட்டத்தின் மூலங்களையே(source) கேள்விக்குற்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.
ஷரியாசட்டத்தின் மூலம் என்பது:
1) புனித குர்-ஆன்( Holy Qur’an)
2) ஹதீத் ( Hadith -இறுதி இறை தூதர் முஹம்மது அவர்களின் சொல்லும், செயலும்) அதாவது, இறை தூதர்(நபி/ prophet) முஹம்மது அவர்களின் குர் ஆனை அடியொட்டிய நம்பிக்கை, அந்த நம்பிக்கையை பிரதிபலிக்கும் அவரின் சொல், செயல் என்பவற்றை சுட்டுவதாகும். இவரின் 63 கால உலக வாழ்வில் குறிப்பாக 23 வருட இறை தூதத்துவ (prophet hood)வாழ்வில் குர் ஆனின் போதனைகள் முற்றிலும் இவர் வாழ்வில் பரிட்சிக்கப்பட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கான சாட்சியமாகவே இதை கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் எல்லாம் வல்ல, எல்லாம் நல்ல, எல்லாம் அறிந்த தன்மைகள் இறைவனின் குணாம்சங்களாக(characters) இருப்பதால் இறைவனால் அருளப்பட்ட இந்த ஷரியா சட்டம் முழுமை பெற்றது. இது மாறாத்தன்மை கொண்டது. இதில் அகல்தல்(repeal) சேர்த்தல் (addition) என்பதற்கு இடமில்லை. ஏனெனில் இறைவாக்கு என்பது கால, நேர, இடங்களுக்கு அப்பாற்பட்டது. எக்காலத்துக்கும் எவ்விடத்துக்கும் பொருத்தமானது.
இருந்த போதிலும் இந்த படங்கள் குறிப்பாக ஒரு குற்றச்சாட்டையும் அதற்கான தண்டனையின் தன்மையையும் விமர்சிப்பதனால், ஷரியா சட்டத்தில் “குற்றமும், தண்டனையும்” என்ற விடயத்தை மாத்திரம் இங்கு பார்ப்பது மிக பொருத்தமாக அமையும் என நம்புகிறேன்.
இந்த அடிப்படையில் ஷரியா சட்டம் என்பதன் நோக்கம் “சமூகத்தை பாதுகாத்தல்” என்பதனால் வரம்பு மீறிய சுதந்திரம் (unlimited freedom), தனி மனிதத்துவம் (individualism), பொருள் முதல் வாதம் (materialism) என்பன இங்கு முதன்மை பெற இடமில்லை. இதை அடிப்படையாக கொண்டே விழுமியங்களும், அதை நடைமுறைபடுத்த விதிகளும், விதிகள் மீறப்படும் போது அதற்கு தண்டனையும் வழங்கப்படுகின்றது.
சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் முதலில் அதன் அங்கமான தனிமனிதன் பாதுகாக்கப்பட வேண்டும். தனி மனிதனின் பாதுகாப்பு என்பது முதலில் அவனின் மனம் (mind) பாதுகாக்கப்படல் என்பதில் தங்கியுள்ளது. ஆகவேதான் ஒழுக்க கல்வி ஆணுக்கும், பெண்ணுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தாற் போல் சமத்துவ சமூக (just society) அமைப்பு அவசியமாகின்றது. அதற்குப் பிறகு நல்லாச்சியின் (good governance) தேவை அவசியமாகின்றது. அடுத்த நிலையில் குற்றம் சாட்டுவோரின் அதி கூடிய சாட்சிய பொறுப்பு (high evidential burden) தேவைப்படுகின்றது. இதன் மூலம் சட்ட துஸ்பிரயோகம் (miscarriage of justice) தவிர்க்கப்பட வற்புறுதப்படுகின்றது. அடுத்தாற் போல் அளிக்கப்படும் தண்டனை நிருபிக்கப்பட்ட குற்றத்துக்கு சமமானதாக (proportion) இருப்பது ஒரு மீற முடியாத நிபந்தனையாகவுள்ளது. இறுதியாக தண்டனை என்பது மற்றோரை குற்றம் செய்யாமல் தடுக்கும் (deterrent) விதத்திலும் அமைதல் வேண்டும் என்பதும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே மேலே சொன்னவை சாத்தியமில்லாத நிலையில் அளிக்கப்படும் தீர்ப்பு (judgment/verdict) ஷரியா சட்டமாக கொள்ள முடியாது.
எனவே இந்த பாண் விவகாரத்துக்கான தண்டனை மேல் சொன்ன வடிகட்டல் (scrutinizing) முறையின் ஊடாக பெறப்பட்டதா என்ற கேள்வி இயல்பாக எழுவதை தடுக்க முடியாதுள்ளது. இதை விடவும் குற்றம் இழைக்கப்பட்டவர் விரும்பின் குற்றம் செய்தவரை சுயமாக மன்னிக்கவும் அல்லது நட்டஈடு பெற்றுக் கொண்டு மன்னிப்பளிக்கவும் ஷரியா சட்டத்தில் இடமுண்டு. இப்படி செய்ய பாண் வியாபாரி முன்வரவில்லையா என்ற கேள்வியும் தொடர்ந்தே வருகின்றது.
கொலை வழக்குகளில் கூட நட்டஈடு/பாவபணம் (blood money) செலுத்தி கொலைகாரர் மன்னிப்பு பெற்ற சம்பவங்கள் ஈரானிலும் நடந்துள்ளன. ஆகவே இந்த பாண் திருட்டு சம்பவத்தில் பாண் வியாபாரிக்கு நட்டஈடு கொடுத்து சிறுவனை காக்க அந்த சமூகம் முன்வரவில்லையா என்ற கேள்வியை என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை.
அதையும் விட மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் முன்னேற்றம் அடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் குற்றச் செயல்களை தூண்டும் gene சிலருக்கு பிறப்பில் இருந்தே இருந்து வருவதாக சொல்லப்படுவதால், இத்தகைய களவுகளுக்கு இந்த ஜீன்னின் பங்களிப்பு என்ன என்பதும் கட்டாயமாக ஆராயப்பட வேண்டும். இந்த “ஒப்பு உவமை” (comparative exercise) செய்யும் முறையையும் தீர்ப்பளிப்போர் அறிந்திருக்கவேண்டும் என்பது ஷரியா சட்டத்தின் இன்னுமொரு அம்சம்.
எனவே இந்த படங்கள் உண்மையானவை என்றும் அதனடிப்படையில் இத்தீர்ப்பு பிழையென்று கொள்வோமாயின், தீர்ப்பளிப்போருக்கான பின்பற்றல் விதி முறையில் ஏதும் பிழை (procedural error) ஏற்பட்டிருக்கலாமே தவிர அல்லது அப்படியான சந்தர்பங்களில் தீர்ப்புக்கு எதிராக மேன்முறைஈடு (appeal) செய்ய வேண்டுமே தவிர ஷரியா சட்டம் பிழையானது என்ற கூற்று தண்டனை பெற்றவருக்கான பரிகாரமாகாது.