”சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறிக்கொள்பவர்கள் என்ன அடிப்படையில் ஆறாவது திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசிற்கும் அதன் அரசியல் சாசனத்திற்கும் விசுவாசமாக இருப்பேன் என சத்தியப் பிரமாணம் செய்கின்றார்கள். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பொழுதும், வெற்றி அடைந்து பாராளுமன்றத்திற்குப் போகும் பொழுதும், இந்த சத்தியப் பிரமாணத்தைச் செய்து தானே போகின்றார்கள். அப்பொழுது சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா?” – தமிழ் தேசியக் கூட்டமைப்பு:
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை உருவாக்கியமை தொடர்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியிட்டதாக ஒரு கட்டுரை நேற்றைய யாழ் பத்திரிகை ஒன்றில் வெளியாகியது. அது தொடர்பான உண்மை விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிக்கொணர விரும்புகின்றது. மே மாதம் 2009 ஆம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நிலவிவந்த ஒற்றுமையை அதன் தலைமையான இரா சம்மந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் திட்டமிட்டு சிதைத்துவிட்டனர் எனவும், கூட்டமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களதும், மக்களினதும் செயற்பாட்டாளர்களினதும் பங்களிப்பு இல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டு அவசரத்தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்ததாகவும் தமிழ் காங்கிரசால் குற்றம் சாட்டப்படுகின்றது.
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற அமைப்பு எங்கு நடந்த கூட்டத்தில் எப்படி உருவாக்கப்பட்டது. அதில் யார் யார் எல்லாம் பங்குபற்றினார்கள்? அதன் தலைவர் யார்? அதன் செயலாளர் யார்? இவை எதுவும் தமிழ் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான அங்கத்தவர்களின் ஒத்துழைப்பின்றித்தான் ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் தயாரித்ததாகக் கூறுகின்றவர்கள் குறைந்தபட்சம் அப்படி எதிர் கருத்துள்ளவர்களுக்காவது தமது தேசியத்திற்கான மக்கள் முன்னணி உருவாக்குவதற்கு அழைப்புவிடுத்தார்களா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிதைவிற்குக் காரணம் சம்பந்தன், சுரேஷ், மாவை எனக் கூறுபவர்கள் அவர்கள் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேருக்கு புதிய முன்னணி அமைக்க அழைப்பு விட்டனர். திருமலையில் தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுபவர்களுக்கு இப்படி ஒரு முன்னணி உருவானதைப் பற்றியாவது தெரியுமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது அது ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து சம்பந்தன், மாவை, சுரேஷ், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய ஐவரைக் கொண்ட தலைமைத்துவமாகவே இருந்து வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக சம்பந்தன் இருந்ததுடன் தமிழரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைமைத்துவத்தை சார்ந்தவர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலும் இருந்தார்கள். இவர்கள் தவிர மேற்கண்ட கட்சிகள் சார்பாக தேர்தலில் வெற்றியடைந்துவந்த பிரதிநிதிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வன்னியிலும், யாழிலும், கிழக்கிலும் நியமிக்கப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களையும் உள்ளடக்கியதாகவே இக் கூட்டமைப்பு இருந்தது. இதில் மூவரை மட்டும் பெயர் குறிப்பிட்டு சிதைவிற்கு காரண கர்த்தாக்கள் எனக் குற்றம் சாட்டும் கஜேந்திரகுமார் ஏன் செல்வம் அடைக்கலநாதன் உட்பட ஏனையோருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது ஒன்றே இவர்களின் பொய்யான முகமூடிகளைக் காட்டவில்லையா?
மே மாதம் 2009 ஆம் ஆண்டிற்குப் பின் நாம் எமது கொள்கையில் இருந்து தடம் புரண்டோம் புதிய தீர்வுத் திட்டம் என்ற ஒன்றைத் தயாரித்தோம் என்று கூறும் பத்மினி, கஜேந்திரன் ஆகியோரிடம் ஒன்றைக் கேட்கவிரும்புகின்றோம். மே 2009 இற்கு முன்னரும் பின்னரும் நீங்கள் எங்கிருந்தீர்கள்? உங்களுடன் கலந்துரையாடவில்லை எனக் கூறும் நீங்கள் நோர்வேயிலும், இங்கிலாந்திலும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். வருடக் கணக்காக வெளியில் இருந்த நீங்கள் இதற்கு மேலும் பாராளுமன்றத்தில் லீவு எடுக்க முடியாது. பதவிகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொழுது பாய்ந்தடித்து கொழும்பிற்கு வந்த நீங்கள் ஏன் ஒரு வருடம் முன்னரே வந்திருக்கக்கூடாது? இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று தம்முடன் கலந்து பேசாமல் ஓர் தீர்வுத்திட்டத்தை உருவாக்கி இருக்கின்றோம் என்பது. அத்தீர்வுத் திட்டமானது கூட்டமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணாக இருக்கின்றது என்பதும் அவர்களது வாதம்.
தீர்வுத் திட்டத் திட்டத்தயாரிப்பொன்றை மேற்கொள்வதற்காக இலங்கையில் இருந்த சம்பந்தன், கஜேந்திரகுமார், மாவை, சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழு (அப்பொழுது செல்வம் அடைக்கலநாதன் இங்கிருக்கவில்லை) கூட்டமைப்பின் ஆதரவு சக்தியான ஓர் சட்டத்தரணிகள் குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி ஓர் வரைவை உருவாக்கும்படி அவர்களைக் கேட்டிருந்தோம். இக் கூட்டத்திற்கு கஜேந்திரகுமாரும் வந்திருந்தார். நாங்கள் கலந்துரையாடியது போக மேலதிகமான ஆலோசனைகள் இருப்பின் மின் அஞ்சல் ஊடாக அனுப்பும் படியும் சட்டத்தரணிகள் கேட்டிருந்தனர். இக் கூட்டம் முடிந்ததும் இங்கிலாந்து சென்ற கஜேந்திரகுமார் அவர்கள் இறுதிவரை தனது ஆலோசனைகள் என்னவென தெரிவிக்கவில்லை.
இரண்டாவதாக பலமாதங்களாக நாம் கேட்டுக்கொண்ட வரைபு (draft) பூர்த்தி அடையாமல் இருந்தது. இதற்கு சட்டத்தரணிகளுக்கு நெருக்கடியாக இருந்த வேலைகளும் ஒரு காரணம். எனவே இவற்றை முடிப்பதற்கு இலண்டனில் இருந்த கஜேந்திரகுமாரையும் அழைத்தோம். அவருக்கு மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் தேவையாக இருந்தது. இங்கு சட்டத்தரணிகளுக்கு அவர் வரும் நாட்களில் நேரப்பிரச்சினை இருந்தது. இந்த சமயத்தில் தான் சில நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து ஓர் வரைபை செய்து முடித்தோம்.
பின்னர் இவ் வரைபு பாராளுமன்றக் குழுவின் கருத்தை அறிவதற்காக அவர்கள் முன் வைக்கப்பட்டது. வரிக்கு வரி விவாதிக்கப்பட்டது. இதில் திருத்தங்கள் தேவையா என ஆலோசனை கேட்கப்பட்டது. சிலரால் திருத்தஙகள் முன் வைக்கப்பட்டன. இதில் மிகப் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வரைபை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி போன்றோருக்கு முரண்பாடுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் கஜேந்திரகுமார், பத்மினி போன்றோர் சட்டத்தரணிகள் உடனான கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்பட்டனர். அங்கும் பல மணிநேரம் விவாதித்து தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். இதிலுள்ளவற்றை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முன் வருமானால் அது பெரிய விடயம்” என்ற பதிலைத்தான் அன்று கஜேந்திரகுமார் சட்டத்தரணிகளிடம் கூறினார். இவர் தான் இன்று கூறுகின்றார் மூன்று பேர்களால் இரகசியமாக உருவாக்கப்பட்ட ஓர் தீர்வுத் திட்டம் என்று. ஓர் வரைபு உருவாக்கப் பட்டால் தான் அதில் உள்ள சரி பிழைகள், என்ன மாற்றம் செய்ய வேண்டும் போன்ற விடயங்களைப் பற்றிப் பேசலாம். அதனைத் தான் நாங்கள் செய்தோம். அதன் பின்னர் விவாதித்தோம், திருத்தினோம் என்பது தான் உண்மை. எந்த ஒரு வரைபும் இல்லாமல் ஒரு விடயத்தைப் பேசுவோமாக இருந்தால். அது பேசிய இடத்துடன் முடிந்துவிடும். அந்த அடிப்படையில் தான் எம்மால் ஒரு வரைபு உருவாக்கப்பட்டது. கஜேந்திரகுமாருக்கு மாற்றுச் சிந்தனை இருக்குமானால் வேறு ஒரு வரைபை முன்வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் தத்துவங்களைப் பேசுவோர் அது எதனையும் முன் வைக்கவில்லை. எனவே தமக்குத் தெரியாமல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பது முழுமையான பொய்யாகும்.
இப்பொழுது இன்னுமொரு விடயத்தை முன்வைக்கின்றார். அதாவது “தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் தாயகம், தமிழ் தேசத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு” இவை 2001, 2004 ஆம் ஆண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சுட்டிக்காட்டப்பட்டன. இதிலிருந்து யாரும் விலகமுடியாது என காங்கிரஸ் கஜேந்திரகுமார் கூறுகின்றார். இதை கஜேந்திரகுமார் சொல்லித்தான் யாரும் அறியவேண்டியதல்ல. 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும், 1985 திம்புப் பிரகடனமாகவும் அதனை வெளியிட்டவர்கள் கூட்டணியும், ரெலோவும், ஈபிஆர்எல்எப், எல்ரீரீ போன்ற அமைப்புக்கள். கூட்டமைப்பில் இருக்கும் TELOவும், EPRLFஉம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதம் எடுத்துப் போராடியவர்கள். அதேபோன்று வடக்கு கிழக்கு இணைப்பதற்கு இறுதிவரை போராடியது கூட்டணி, அதிலும் பிரத்தியேகமாக திரு சம்பந்தனின் தனிப்பட்ட முயற்சி இதில் மிகவும் கனதியானது.
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் ஓர் தேசிய இனம், அவர்கள் தொடர்ச்சியான நிலப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கென தனித்துவமான மொழி, கலை, கலாசாரம், பண்பாடுகள் உள்ளன. அவர்களது பிரதேசத்திற்கான பொருளாதார வளங்கள் உண்டு. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாரும் மறுதலித்தது கிடையாது. இந்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் காணி, பொலிஸ், நிதி உட்பட முழுமையான அதிகாரப் பகிர்வொன்று சமஷ்டி அரசியல் அமைப்பு முறையின் ஊடாக உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது. இதனை எந்த ஒரு இடத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டுக் கொடுத்தது கிடையாது.
“சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ள முடியாது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை தனித்துவமான தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் வட்டுக்கோட்டைப் பிரகடனம் செய்யப்பட்டது. அதிலிருந்து கூட்டமைப்பு விலகிவிட்டது” என்றும் தாம் மாத்திரம் தான் மேற்கண்ட கொள்கைகளில் உறுதியாக இருப்பது போன்ற புலுடாவை விட சிலர் ஆரம்பித்துள்ளனர். சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறிக்கொள்பவர்கள் என்ன அடிப்படையில் ஆறாவது திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசிற்கும் அதன் அரசியல் சாசனத்திற்கும் விசுவாசமாக இருப்பேன் என சத்தியப் பிரமாணம் செய்கின்றார்கள். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பொழுதும், வெற்றி அடைந்து பாராளுமன்றத்திற்குப் போகும் பொழுதும், இந்த சத்தியப் பிரமாணத்தைச் செய்து தானே போகின்றார்கள். அப்பொழுது சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? தமிழ் மக்களுக்கு அரசியலைப் பற்றி ஒன்றும் தெரியாது, ஏமாற்றிவிடலாம் என்று சிந்திக்கின்றார்களா? உண்மையாகவே சிறீலங்காவின் இறையாண்மையை இவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடின் பாராளுமன்ற அரசியல் முறையைக் கைவிட்டு அவர்கள் சொல்கின்ற தனித்துவத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராட வேண்டும். அப்படிச் செய்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அதனை விடுத்து சொல் வேறாகவும், செயல் வேறாகவும் இருப்பது சுத்த ஏமாற்றுவித்தையே தவிர வேறல்ல.
இவை ஒருபுறம் இருக்க இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கை இரு தேசங்களின் கூட்டு எனக் கூறும் இவர்கள் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இத் தத்துவத்தையே கூறிக்கொண்டிருக்கப் போகின்றார்களா? இல்லையேல் இதன் அடிப்படையில் ஏதாவது தீர்வுத் திட்டம் இவர்களிடம் உண்டா? இனப்பிரச்சினைத்தீர்வின் அடுத்த கட்டம் நோக்கி எவ்வாறு பயணிக்கப் போகின்றோம். சுலபமாகத் தத்துவம் பேசலாம். அதற்கான காரண காரியங்களையும் விளக்கலாம். ஆனால் அவையெல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வை ஏற்படுத்தித் தருமா? முப்பது வருட அகிம்சைப் போராட்டம் 30 வருட ஆயுதப் போராட்டத்தின் பின் தோல்வியுற்ற தீர்வுப் பாதைக்கு, மீண்டும் திரும்புகின்றோம் என குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். 60 வருடப் போராட்டத்தின் பின் எதுவும் இல்லை என ஒதுங்கப் போகின்றோமா? அல்லது காங்கிரஸ் கஜேந்திரகுமார் போல் தத்துவம் பேசுவோம் ஆனால் தீர்வைப் பற்றி அக்கறை இல்லை என இருக்கப் போகின்றோமா? அல்லது தமிழ் மக்களின் தேசம், தேசியம், இறைமை இவற்றைக் காப்பாற்றக் கூடிய ஒரு தீர்வை நோக்கிப் போகப் போகின்றோமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரட்டுத் தனமாக தத்துவம் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அதே சமயம் எமது அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வை நோக்கி நாம் போக வேண்டுமென விரும்புகின்றோம். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலம் பொருந்திய அமைப்பாக இருந்த பொழுது அவர்களுக்கு பேரம் பேசும் ஆற்றல் இருந்தது. அதன் ஊடு தமிழ் மக்களுக்கு உச்சபட்ச அதிகாரங்களை அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம். மாறாக இராணுவப்பலம் சிறீலங்கா இராணுவத்தால் நிர்மூலம் செய்யப்பட்டது. யுத்தத்தில் வென்ற அரசு தமிழர்களுக்கு எதுவுமே கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. புலிகளும் இல்லை. எமக்கு பேரம் பேசும் வலுவும் இல்லை. இந்த நிலையில் அடுத்த கட்டத்தை நகர்த்துவது என்பதை சிந்திக்கவேண்டும்.
இன்று எமக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு சாதகமான நிலைமை சர்வதேச சமூகம் காட்டக் கூடிய குறைந்தபட்ச அக்கறை. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் இன்னும் பல நாடுகளும் எமது இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்கள். எனவே இவர்களின் ஆதரவுடன் தீர்வொன்றை எட்டுவதற்கு முயற்சிப்பதே புத்திசாலித்தனமான சிந்தனையாக இருக்க முடியும். சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாம் பெற்றுக் கொள்ளவேண்டுமாயின், எமது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் அதே சமயம் கடும் போக்காளர்கள் என்னும் தன்மையைக் காட்டிக்கொள்ளாமல் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் அதிகாரங்களுடன் தம்மைத் தாமே ஆளக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். அப்படியான ஓர் திட்டத்தைத்தான் கூட்டமைப்பு உருவாக்கியது. எமது தீர்வுத்திட்டத்தை சர்வதேச சமூகம் நிராகரிப்பது கடினமானது ஏனெனில் உலகின் பல பாகங்களில் இவ்வாறான சமஸ்டி அரசியல் அமைப்பு முறையிலான தீர்வுத்திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் 13வது திருத்தத்தையே கொடுக்க விரும்பாத இலங்கை அரசு அவ்வாறான தீர்வுத் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளமாட்டாது என்பதையும் நாங்கள் அறிவோம். இந்த நிலையில் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை இலங்கை நிராகரிக்கும் பொழுது இலங்கை மீது அழுத்தம் செலுத்தவோ, அல்லது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு வேறு வழிமுறைகளை கையாளவேண்டிய தேவையோ சர்வதேசத்திற்கு ஏற்படலாம். எனவே கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் என்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்காத அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட அதேசமயம் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமாகவே இதனை நாம் தயாரித்தோம். இதன் மூலம் சர்வதேச சமூகத்தை எமது ஆதரவு சக்தியாக மாற்றமுடியும் என்பதுடன், அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான நியாயமான தீர்வுக்கெதிரான போக்குகளையும் சர்வதேச அரசுகள் புரிந்துகொள்ளச் செய்யலாம். ஆனால் இதனை விடுத்து இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாது. இலங்கை இலங்கை இரு தேசங்களின் கூட்டு எனக் கூறும் பொழுது வெளி உலகமோ, சர்வதேச சமூகமோ சரி எமக்குக் கிட்டவும் நெருங்கியும் வராது. இதனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
வன்னியில் மூன்று இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள், யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் இவர்களது வாழ்விடங்கள் வாழ்வாதாரங்கள் எல்லாமே அழிக்கப்பட்டு விட்டது. 30வருட யுத்தத்தில் இழக்கக்கூடாத சகலவற்றையும் தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள். யாழ்ப்பாணம், வன்னி மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகள் இராணுவ ஆக்கிரமிப்பால் நிரம்பிவழிகின்றன. இராணுவக் குடியேற்றமும் அதனைத் தொடர்ந்து சிங்களக் குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை எமது கையை விட்டுப் போகும் சூழல். இந்த நிலையில் மிக விரைவில் வடகிழக்கின் அதிகாரத்தை எமது கையில் எடுக்கப் போகின்றோமா? அல்லது தத்துவம் பேசிவிட்டு உட்காரப் போகின்றோமா? எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் தேசம், தேசியம், இறையாண்மை, சுயநிர்ணய உரிமை எதனையும் விடவில்லை. ஆனால் தந்திரோபாயமாக இன்றிருக்கும் எமக்கு சாதகமாக சர்வதேச சூழலைப்பயன்படுத்தி தீர்வைக்காண முயற்சிக்கின்றோம். ஆனால் இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எந்தத் தீர்வுத்திட்டமும் இல்லாமல் கூட்டமைப்பை விமர்ச்சிப்பதும் குற்றம் சுமத்துவதும் அர்த்தம் அற்றதும் ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகும்.
தேசம், தேசியம், இறையாண்மை எல்லாவற்றையும் விடுத்து இந்தியா கூறியது போன்று நாம் தீர்வுத் திட்டம் தயாரித்ததாகவும் இவர்கள் கூறுகின்றார்கள். இது சுத்த அபத்தமானதும் பைத்தியக்காரத்தனமானதுமாகும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தீர்வு இவ்வாறு தான் இருக்க வேண்டும் என இந்தியா அறிவுறுத்தியது கிடையாது. அது தொடர்பாக நாம் கலந்துரையாடியதும் கிடையாது. மாறாக புலிகள் அழிக்கப்பட்ட சூழ் நிலையிலும் இலங்கை அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைக்காத சூழ் நிலையிலும் நாம் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதன் மூலமே சர்வதேசத்தை எம்மை நோக்கி அணி திரளச் செய்ய முடியும் என யோசித்தோம். அந்த அடிப்படையில் மிக நீண்ட கலந்துரையாடல்களின் பின்பே ஒரு வரைபு உருவாக்கப்பட்டது. (அதன் விபரம் மேலே தரப்பட்டது)
கடந்த ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என அறிக்கை விடுத்த திரு கஜேந்திகுமார் அடுத்த கணமே இலண்டன் சென்றுவிட்டார். பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சிலநாட்களின் பின்னர் வந்தார். கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றென்ற வகையில் வேட்புமனுக்களைப் பரிசீலிக்கும் குழுவில் அவரும் ஒரு அங்கத்தவர் என்ற வகையில் அவரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் தனக்கு அடிப்படையில் முரண்பாடுகள் உள்ளதாக கூறியதன் அடிப்படையில் அது தொடர்பாக இரண்டு மணி நேரம் கலந்துரையாடப்பட்டது. தனது கட்சிக்குழுவில் பேசி முடிவெடுத்துவிட்டு மாலை எமக்கு அறிவிப்பதாக கூறியவர் இரண்டு நாட்களாக எம்முடன் தொடர்பு கொள்ளவில்லை. எமது தொலை பேசித் தொடர்புகளையும் அவர் பேசாமலேயே நிராகரித்தார். இதன் பின்பு காங்கிரசின் தலைவர் திரு விநாயகமூர்த்தியின் முயற்சியால் ஒரு சில சட்டத்தரணிகள் சமரசம் பேச முற்பட்டனர். இவருக்காகவே ஏற்கனவே வரையப்பட்ட தீர்வுத்திட்டத்தை விடுத்து தேர்தலின் பின்னர் எல்லோரும் இணைந்து ஒரு புதிய தீர்வுத்திட்டத்தை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அது எழுத்திலும் உள்ளது. ஆனால் கஜேந்திரகுமார் அவர்கள் ஏகமனதான முறையில் இத் தீர்வுத்திட்டம் அமையவேண்டும் எனக் கூறினார். பெரும்பான்மை முடிவுகளின் அடிப்படையில் தீர்வுகள் எடுக்க முடியுமே தவிர ஏகமனதானதென்று எதற்கும் ஒத்துவராது, எல்லாவற்றையும் மறுதலிக்கும் வீற்றோ அதிகாரத்தை யாருக்கும் கொடுக்க முடியாது என்பதை அவர்களுக்குத் தெரிவித்தோம். இறுதியாக இதனை ஏற்றுக்கொண்டு அடுத்த நாள் வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்ய சம்மத்தித்தார். ஆனால் கூட்டத்திற்கு வந்தவர் தனது செயலாளரையும் இன்னும் இருவரையும் எம்முடன் பேசும்படி கூறிவிட்டு அவர் போய்விட்டார். அவர்கள் கேட்ட எல்லாவற்றிற்கும் சம்மதம் அளிக்கப்பட்டது. ஆனால் போனவர்கள் மீண்டு(ம்) வரவில்லை. திரு சம்பந்தன் கஜேந்திரகுமாருடன் பேச எடுத்த முயற்சியும் சில சட்டத்தரணிகள் (ஏற்கனவே சமரசம் பேசியவர்கள்) அவருடன் பேச எடுத்த முயற்சியும் நிறைவேறவில்லை. அடுத்த நாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக கஜேந்திரகுமார் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தார். இதில் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது இலண்டனில் இருந்து வரும் பொழுதே அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என்ற முடிவுடனேயே வந்தார். ஆனால் கூட்டமைப்பை சிதறடிக்கக் கூடாது என்பதற்காக நாம் இறுதிவரை முயற்சி செய்தோம். ஆனால் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதனை காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தியிடமும் அவரது நட்பு சட்டத்தரணிகளிடமும் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். நிலைமை இவ்வாறு இருக்க எல்லாவற்றையும் திரித்தும் பொய்யாகவும் கூறமுற்படுவது அரசியல் வங்குரோத்துத் தனமே அல்லாமல் வேறல்ல. வெளிநாட்டில் இருக்கக் கூடிய ஓரிரு குழுக்களின் வழிகாட்டுதலில் தான் இது நடைபெறுகின்றது. எமது தமிழினத்தை இன்னும் பாரிய அழிவிற்கு இட்டுச் செல்லும் என்பதை கடும் போக்காளர்கள் எனத் தம்மைக் கருதுவோர் புரிந்துகொள்ள வேண்டும்.
இறுதியாக தமிழ் தேசியம் பற்றிப் பேசுபவர்கள் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையில் மாத்திரம் தான் போட்டியிடுகின்றார்கள். இவர்களின் தேசம் என்பது இவ்விரு மாவட்டங்கள் மட்டுமாக இருக்கலாம். அதிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் ஓர் ஆசனம் கேட்டு நிராகரிக்கப்பட்ட கௌரி முகுந்தன் என்பவர் தான் தேசியம் பேசுபவர்களின் திருகோணமலையின் முதன்மை வேட்பாளர். சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் அலரிமாளிகையில் அங்கத்துவம் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவை ஆதரித்தவர் தான் இவரின் முதன்மை வேட்பாளர். திருகோணமலையில் சம்பந்தனைத் தோற்றகடிக்க வேண்டும் என்பது இலங்கை அரசின் திட்டம் அதற்காகவே பல சுயேட்சைக்குழுக்களுடன் பிள்ளையான் போன்றவர்களும் களமிறக்கப்பட்டனர். அவரைத் தோற்கடிக்கத்தான் திருகோணமலையில் காங்கிரசும் போட்டிபோடுவதாக கஜேந்திரகுமாரும் கூறுகின்றார். உங்களுக்கும் ராஜபக்சவிற்கும் என்ன வித்தியாசம்? திருகோணமலையில் தமிழருக்குக் கிடைக்ககூடிய ஓர் ஆசனத்தையும் இல்லாமல் செய்வதுதான் உங்களது தேசியமா? என்பதை தயவு செய்து சொல்லுங்கள்?
– தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 02-03-2010 –
._._._._._.
”கூட்டமைப்பு தலைமைகளின் சரணாகதி அரசியல் நிலைப்பாட்டினையே நாம் நிராகரிக்கின்றோம்.” – தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் மகாநாடு இன்று மாலை 5.30 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ்ப்பாண் அலுவலகத்தில் நடைபெற்றது. இம் மகாநாடு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட தலைமை வேட்பாளர் சின்னத்துரை வரதராஐன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஏன்?
தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒன்றுபட்டு வெளிப்படுத்தக்கூடிய ஒரு அரசியல் தலைமை காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம்.
இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் தாயகம்
தமிழ்த் தேசத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு.
என்ற கோட்பாடுகள் அங்கீகரிக்கபடல் வேண்டும். இம்மூன்று அடிப்படைகளும் தமிழ்மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதையும், அதற்குத் தனித்துவமான இறைமை உண்டு என்பதையும் வலியுறுத்துகின்றன. இத்தகைய அங்கீகாரம் தருகின்ற அரசியல் அந்தஸ்த்தின் நிலை நின்றே தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும்.
இலங்கைத் தீவில் இரு தேசங்கள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றபோதுதான், இவ்விரு தேசங்களும் இணைந்த ஒரு நாட்டில் நாம் சமாதான சகவாழ்வு வாழமுடியும். இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலான அரசியற் பேச்சுவார்த்தை மூலம்தான் தமிழர்களின் அரசியற் பிரச்சினைக்கான தீர்வை நாம் எட்ட முடியும். இந்தப் பாதையிலிருந்து தமிழர்களின் அரசியற் தலைமைகள் ஒருபோதும் விலகிப்பயணிக்க முடியாது. இதனையே தமிழ்மக்கள் மீண்டும் மீண்டும வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். 2001 ம் 2004 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களில் த.தே.கூ வினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையும் இதுவே. இந்த நிலைப்பாடு தமிழர்களின் அரசியற் கொள்கைகளிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாதது; சமரசத்திற்கு அப்பாற்பட்டது.
தந்தை செல்வா காலத்தில் தோல்வியடைந்த தந்திரோபாயங்கள்:
இத்தகைய தீர்மானம் ஒன்றிற்கு தமிழ் அரசியல் தலைமைகள் செல்லுவதற்கு முன்னரான முப்பது ஆண்டுகளில் இலங்கை அரசுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அங்கீகரிக்கும் வகையில் இலங்கை அரசின் அரசியல் கட்டமைப்புக்களில் திருத்தங்களை கொண்டுவருவதன் மூலம் அதிகாரப்பகிர்வு என்ற பாதை ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய முயற்சிகளாகவே பண்டா செல்வா உடன்படிக்கை, டட்லி செல்வா உடன்படிக்கை போன்ற அரசியல் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதே போன்று 1970 ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தந்தை செல்வா தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி தேர்தலின் பின்னர் இலங்கைக்கான புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் அதிர்காரப் பகிர்வு ஊடாக இலங்கை அரசை மாற்றி அமைத்து ஓர் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்தது. அந்தப் பிரேரணை உடனடியாக நிராகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழர் தரப்பு கோரிக்கைக்கு நேரெதிராக இலங்கை அரசை ஓர் ஒற்றையாட்சி அரசாக உத்தியோகபூர்வமாக அரசிலமைப்பினூடாக நிலை நாட்டப்பட்டது.
அத்துடன் அது வரை காலமும் தமிழ் முஸ்லீம் மக்களின் பாதுகாப்பிற்காக என சோல்பெரி அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த 29 ம் சரத்து நீக்கப்பட்டது. பௌத்த மதம் அரசியல் யாப்பின் ஊடாக முதன்மையான மதம் என்ற அந்தஸ்த்து வழங்கப்பட்டு ‘சிங்கள மொழி மட்டுமே’ ஆட்சி மொழியாக அரசியல் அமைப்பின் மூலம் அமுல்படுத்தப்பட்டது. தமிழ் தலைமையினால் முன்வைக்கப்பட்ட அதிகாரப்பகிர்வுக்கான தீர்வு யோசனைகள் முழுமையாக நிராகரிக்கப்பட்டது மட்டுமன்றி சிங்கள அரசின் மேற் கூறிய செயற்பாடுகள் அதற்கு நேரெதிரான திசையில் அமைந்தன.
இத்தகைய அனுபவங்கள் காரணமாகவே தந்தை செல்வா அவர்கள் ஒரு தீர்க்கமான மாற்று முடிவுக்கு வரவேண்டியிருந்தது. இதே வகையில் இனப்பிரச்சினைக்கு பல்வேறு வழிமுறைகளுடாக தீர்வு காண முற்பட்ட அனைத்து தமிழ் தலைமைகளும் இலங்கை அரசியலமைப்பின் வரையறைக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வு பாதையூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்தன.
இதன் விளைவாக தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவற்றினடிப்படையில் 1976 ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மேற்கொள்ளப்ப்ட்டது. அதற்கு 1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்களாணை வழங்கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே கடந்த முப்பது ஆண்டுகள் தமிழ் மக்களது உரிமைகளைப் பெறுவதற்கான பயணம் நடைபெற்றது.
தோல்வியடைந்த தீர்வுப் பாதைக்கு மீண்டும் திரும்ப முயலும் கூட்டமைப்பின் தலைமைகள்:
இந்நிலையில் தந்தை செல்வா தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒருபோது உதவாது என்று 35 வருடங்களுக்கு முன்னர் கைவிட்ட வழிமுறைகளை மீண்டும் கையாள கூட்டமைப்பின் தலைமை முயல்கின்றது. 2009 மே மாதத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைபபின் மூத்த தலைமைகளினால் இரகசியமான முறையில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்தாமல் தீர்வுத்திட்ட வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள வரைபில் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படை கோட்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. இந்த அடிப்படைப் பிறழ்வு நீண்டகாலமாக உறங்கு நிலையில் இருந்த பொழுதும் வன்னிப் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கும் பொழுதே வெளிப்படையாக தலைதூக்கியது.
கொள்கைகளை காப்பதற்காக கூட்டமைப்பினுள் போராட்டம்:
தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கப்படுவது தொடர்பான தகவல் அறிந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் கூட்டமைப்பின் மூத்த தலைமைகளுடன் தொடர்பு கொண்டு தீர்வுத்திட்ட வரைபானது தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், தனித்துவமான இறைமை என்ற அடிப்படைகளிலேயே அமைய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
குறித்த தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கபட்டு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. அந்த தீர்வுத்திட்ட வரைபானது தமிழ் தேசியத்தின் அடிப்படை கொள்கைகளை கைவிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது என உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சுட்டிகாட்டியிருந்தனர். அத்துடன் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், அதன் தனித்துவமான இறைமை ஆகியன அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என வலியுறுத்தினர்.
கூட்டமைப்பு தலைமையின் பிடிவாதம்:
மேற்படி உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என கூட்டமைப்பின் மூத்த தலைமைகள் எதேச்சாதிகாரமாக மறுத்தனர். தாயகம் தேசியம்இ சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை என்ற அடிப்படைகளில் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைப்பதனை பிராந்திய சக்திகள் ஒருபோதும் விரும்பாது ஏற்றுக் கொள்ளாது என்றும் அந்த சக்திகளின் விருப்பப்படியே தாம் செயற்பட வேண்டும் என்றும் தாம் அதனையே கடைப்பிடித்து வருவதாகவும் அடித்துக் கூறிவிட்டனர். அத்துடன் அதிகாரப்பகிர்வு அடிப்படையில் தாம் தயாரித்துள்ள தீர்வுத்திட்டத்தினையே முன்வைப்பது என தாம் தீர்மானித்து விட்டதாகவும் உறுப்பினர்கள் யாருடைய ஆதரவு இல்லாவிட்டாலும் இந்த தீர்வுத்திட்ட வரைபை சமர்ப்பித்தே தீருவோம் என்றும் ஆணித்தரமாக கூறிவிட்டனர்.
நாம் பிராந்திய சக்திகளதோ அல்லது வேறு எந்தவொரு நாட்டினதுமோ நலன்களுக்கு எதிராக செயற்படும் நோக்கம் கொண்டவர்கள் அல்லர். எனினும் பிராந்திய சக்திகளினதும், ஏனைய நாடுகளினதும் விருப்பத்திற்கேற்ற வகையில் எமது மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை கைவிட்டு தீர்வுத்திட்டம் ஒன்றினை முன்வைக்க வேண்டும் என்ற கூட்டமைப்பு தலைமைகளின் சரணாகதி அரசியல் நிலைப்பாட்டினையே நாம் நிராகரிக்கின்றோம். எமது மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தினை பெறும் வகையில் பிராந்திய வல்லரசுடனும் ஏனைய உலக நாடுகளுடனும் நல்லுறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். இதற்கான சாத்தியங்கள் நிறையவே உண்டு.
ஏனெனில் இலங்கை அரசின் வெளிவிவகாரக் கொள்கை செயற்பாடுகள் காரணமாக இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக் வேண்டிய தேவை சர்வதேச சமூகத்திற்கு அதிகரித்து வருகின்றது. இந்த அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை சர்வதேசம் தனது கையில் எடுக்கும் சாத்தியப்பாடுகள் நிறையவே உண்டு. இவ்வாறு உருவாகக் கூடிய சூழலை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டுமாயின் நாம் எமது கொள்கை நிலைப்பாட்டில் சமரசத்திற்கு அப்பாற்பட்டவர்களாக மிகவும் உறுதியாக நிற்பது அத்தியாவசியம்.
தமிழர்களது அபிலாசைகளுக்கு இடம் மறுக்கப்பட்டது:
யதார்த்தம் இவ்வாறு இருக்க தமிழ் மக்களின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக மூத்த தலைமைகள் தீர்மானங்களை மேற்கொண்டன. அந்த தீர்மானங்களுடனும் செயற்பாடுகளுடனும் இணங்க மறுத்து தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை எடுத்துக் கூறிவந்த கட்சிகளை சாராத கூட்டமைப்பு உறுப்பினர்கள் திட்டமிட்டு அகற்றப்பட்டனர்.
கூட்டமைப்பு தமிழ் மக்களின் அடிப்படை கொள்கைகளில் உறுதியாகவும் பிளவின்றி ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ் காங்கிரஸ் கட்சி ஆழமாக விரும்பி அதை நிறைவேற்ற சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சி செய்தது.
இதன் கடைசிக் கட்டமாக எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோட்பாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் (உதாரணமாக தீர்வுத்திட்டம் பற்றிய முடிவு) முடிவெடுக்கும் பொழுது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் தரப்புக்களினதும் ஏகமனதான ஒப்புதல் பெறப்படும் என்ற எழுத்து மூலமான உத்தரவாத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கோரியது. இவற்றை கூட்டமைப்பின் தலைமை முற்றாக நிராகரித்த வேளையிலேயே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
எனினும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது கூட்டமைப்பினுள் இருக்குமாறு அதன் மூத்த தலைமைகள் பிடிவாதம் பிடித்தன. ஆனால் கொள்கைகளை நேர்மையாகவும் உறுதியாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிற்குள் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
கூட்டமைப்பின் ‘ஒற்றுமை’ நாடகம்:
தமது தவறுகளை மூடி மறைப்பதற்காக ‘ஒற்றுமை’ என்ற உயரிய விழுமியத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் கூட்டமைப்பின் இந்தப் பிரகிருதிகளின் சுயரூபத்தினை தேர்தலுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு தோலுரித்துக் காட்ட வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்குள்ளது. இதன் மூலம் தமிழ் மக்கள் தமது தேசிய, அரசியல் அபிலாசைகளுக்காக உண்மையாகவும் உறுதியாகவும் குரல் கொடுக்க கூடியவர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் எமது முக்கிய பொறுப்பென நாம் உணர்கின்றோம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உதயம்:
இந்த நோக்கில் தமிழ் மக்களின் தயாகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகிய அடிப்படை கொள்கைகளில் உறுதிப்பாட்டுடன் கூட்டமைப்பின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைப்பது எமது நோக்கமல்ல. தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை சிதறடிப்பதும் எமது நோக்கம் அல்ல அதுபோல தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதும் எமது நோக்கம் அல்ல.
ஆனாலும் கூட்டமைப்பை தவறான வழிக்குச் இட்டுச் செல்லும் இந்த தலைமைகள் அகற்றப்படல் வேண்டும். இந்த தலைமைகள் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றனர். இந்த தவறான தலைமைகள் அகற்றப்பட வேண்டுமென்றால் திருகோணமலை யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்படல் வேண்டும்.
மீண்டும் ஒற்றுமை:
இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூய்மை செய்யப்பட்டு அது ஆரம்பிக்கப்பட்ட உண்மையான அர்த்தத்தில் மீண்டு வருவதற்கு வாய்ப்பு உண்டு.
அத்தகைய சூழ்நிலையில் அடிப்படை அரசியல் கொள்கைகளில் உறுதியாகவுள்ள அனைத்து தரப்புகளுடனும் ஒன்றிணைந்து செயலாற்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தயாராக உள்ளது.
தேர்லில் வெற்றி பெற்ற பின்னர் தாயகத்திலுள்ள தமிழ் மக்களுடனும், புலம்பெயர் தமிழ் மக்களுடனும் இணைந்து சர்வதேச சமூகத்துடன் செயலாற்றி தயாகம் தேசியம் சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகிய கொள்கைகளுக்கான அங்கீகாரத்தை பெற்று அதனடிப்படையில் கௌரவமான பாதுகாப்பான அரசியல் தீர்வு அடைவதற்காக அற்பணிப்புடனும் நேர்மையுடனும் உழைக்கும் என சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி உறுதியளிக்கின்றது.
நன்றி!
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி.