03

03

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் – 01 : ஏப்ரல் 8ல் நடைபெறப் போவது விகிதாசார முறையின் இறுதித் தேர்தலா? – புன்னியாமீன்

srilanka_parliament_02.jpgஇலங்கையில் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சி வெற்றி பெறுமிடத்து, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையினை முதலில் மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், விகிதாசார முறையின் கீழ் இலங்கையில் நடைபெறும் இறுதித் தேர்தலாக இது அமையுமா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

விகிதாசார தேர்தல் முறை அமுலில் உள்ள இக்காலகட்டத்தில் இம்முறையின் கீழ் சிறுபான்மை சமூகத்தினரின் பாராளுமன்ற உறுப்புரிமை அதிகரித்திருப்பதைப் போல பழையபடி பெரும்பான்மை முறையை அல்லது பெரும்பான்மை முறையையும்,  விகிதாசாரமுறையையும் இணைத்த ஒரு புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படுமிடத்து சிறுபான்மையினரினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவம்,  பெருமளவிற்கு பாதிப்படையலாம், என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவு இல்லாமலே,  ஜனாதிபதி வெற்றி பெற்றதினால் பெரும்பான்மை சமூகத்தினரைக் கொண்டே ஆட்சி,  அதிகாரங்களைக் கைப்பற்றலாம் என்ற புதிய நிலையொன்று தோன்றியுள்ள இந்நிலையில், விகிதாசாரத் தேர்தல் முறை பற்றி முன்வைக்கப்படும் வாதப்பிரதி வாதங்கள் அழுத்தமாக சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும்.

2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன்,  தொடர்புபடுத்தி இப்பாராளுமன்றத் தேர்தலை அணுகுமிடத்து,  சுமார் 140 ஆசனங்களுக்கு மேல் ஆளுங்கட்சியால் வெற்றி பெறக்கூடிய நிகழ்தகவு உண்டு. எனவே ஆளுங்கட்சியினரின் மூன்றில் இரண்டு என்ற இலக்கு சாத்தியப்பாடுமிக்கதல்ல என்று உதாசினப்படுத்த முடியாது. அவ்வாறு மூன்றில் இரண்டு பாராளுமன்றப்பலம் கிடைக்குமிடத்து விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அவ்வாறானதொரு நிலை ஏற்படுமிடத்து, ஆளும் கட்சியைச் சார்ந்த,  சிறுபான்மை சமூக பிரதிநிதிகளும் நிச்சயமாக ஆதரவு வழங்குவார்கள் என்பது மறுப்பதற்கு இயலாது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இலங்கையில் தேர்தல் முறைகள் பற்றி சற்று விரிவாக ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் என்றால் என்ன?
நவீன உலகில்,  ஜனநாயக ஆட்சி நிலவும் நாடுகளில்,  மக்கள் தம்பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்காக பெற்றுக் கொள்ளும் உரிமையே ஜனநாயக உரிமையாகக் கொள்ளப்படுகின்றது. இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகளில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக யாப்புகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

1. பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறை.
2. விகிதாசார பிரதிநிதித்துவமுறை என்பவையே அவை.

1910ம் ஆண்டில் குருமெக்கலம் அரசியலமைப்பின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 1977ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாரளுமன்றப் பொதுத்தேர்தல் வரை இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும்,  பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறைக்கமையவே நடைபெற்றன. (தேர்தல்) தொகுதிவாரியாக,  மக்கள் தம் பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிந்து கொள்வர். ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இம்முறையே பெரும்பான்மைத் தேர்தல் முறை எனப்படும்.

உதாரணமாக : X எனும் தேர்தல்; தொகுதியில்  போட்டியிட்ட A,B,C,D என்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு அமைந்தன எனக் கொள்வோம்.

A = 15,833
B = 12,217
C  = 2,893
D  = 518
இம்முடிவின்படி ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற A என்பவர் X தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இவர் பெற்ற மேலதிக வாக்குகள் 3616 ஆகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன?
1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு (இலங்கையின் 8வது அரசியலமைப்பு) அமுல்படுத்தப்பட்டதையடுத்து இலங்கையில் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகமானது. 1850களில் டியுனிஸ் அரசியல்வாதியான ஸி.ஸி.ஜி. அந்திரேயும், பிரித்தானியாவைச் சேர்ந்த பாரிஸ்டர் தோமஸ் குரேயும் விகிதாசாரத் தேர்தல் முறையினை அறிமுகப்படுத்திய போதிலும் கூட, உலகளாவிய ரீதியில் இத்தேர்தல் முறை பிரபல்யம் அடையக் காரணமாக இருந்தவர் “ஜோன் ஸ்டுவார்ட் மில்” என்பவராவார்.

விகிதாசாரத் தேர்தல் முறை எனும் போது ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்தவ) தேர்தல் தொகுதியில் (அல்லது ஒரு தேர்தல் மாவட்டத்தில்) வேட்பாளருக்கு அல்லது பல வேட்பாளர்களை உள்ளடக்கிய (பட்டியல்) ஒரு குழுவிற்கோ அல்லது கட்சிக்கோ அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களை ஒதுக்கும் உபாயங்களைக் கொண்ட வாக்களிக்கும் முறையே விகிதாசார முறை எனப்படும்.

இந்த விகிதாசார முறையானது இரண்டு பிரதான மாதிரிகளைக் கொண்டதாகும். அவை:

1. தனிமாற்று வாக்குரிமை
2. பட்டியல் முறை
தனிமாற்று வாக்குரிமையின் கீழ் இலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் நடைபெறும். இத்தகையத் தேர்தல் 1982,1988,  1994,  1999, 2005,  2010ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டியல் முறையின் கீழ் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மாகாண சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் (மாநகர, நகரசபை, பிரதேச சபை) என்பன நடைபெறும். இம்முறைக்கமைய 1989,  1994,  2000,  2002, 2004ம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே இத்தேர்தல் நடைமுறைகளை அவதானிக்கும் போது சிறுபான்மை இனத்திற்கு எத்தேர்தல் முறை நன்மை பயக்கும் என்பதை இனங் காட்டக்கூடியதாக இருக்கும்.

எனவே பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, 1972ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரும்பான்மைத் தேர்தல் முறைமையும், 1978ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் விகிதாசாரத் தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராய பின்வரும் தலைப்புக்களின் கீழ் நோக்குதல் பொருத்தமானதாக அமையும்.

1. தேர்தல் தொகுதிகள் பிரிக்கும் முறை.
2. நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் முறை.
3. வாக்களிக்கும் முறை.
4. ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் முறை.
5. வெற்றிடமேற்படும் போது மீள்நிரப்பப்படும் முறை

தேர்தல் தொகுதி பிரிக்கப்படும் முறையினால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

பெரும்பான்மைத் தேர்தல்முறை இடம்பெற்ற முதலாம் குடியரசு யாப்பில் ( 1972ம் ஆண்டு யாப்பு) தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் தொடர்பான ஏற்பாடுகள் யாப்பின் 77 முதல் 81 வரையுள்ள உறுப்புரைகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இதன்படி 78(2) உறுப்புரையின் பிரகாரம் இலங்கையில் 75, 000 மக்களுக்கு (மக்கள் தொகை) ஒரு பிரதிநிதியென்றும், 1000 சதுரமைல்களுக்கு ஒரு பிரதிநிதியென்றும், வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஓவ்வொரு தடவையும் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து மூவரைக் கொண்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்றை,  ஜனாதிபதி அமைத்தல் வேண்டும் என்றும் யாப்பின் 77(1) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 1974ம் ஆண்டில் திரு. நோயல் தித்தவெல (முதலாம் குடியரசு யாப்பு நிர்ணய ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றியவர்) என்பவரின் தலைமையில் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் சிபார்சுக்கமைய தேசிய அரசுப் பேரவையினால் (பாராளுமன்றத்தால்) 1975ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில், 1ம் குடியரசு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது திருத்தமாக 78(2) உறுப்புரையில் 90, 000 மக்களுக்கு ஒரு தொகுதி என்ற நிலை பேணப்பட்டது.

திரு. நோயல் தித்தவெல ஆணைக்குழுவின் அறிக்கை 1976ம் ஆண்டில் ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவை மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி 1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது உறுப்பினர் எண்ணிக்கையும், தொகுதிகளும் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது.

1 சனத்தொகை அடிப்படையில் மொத்த சனத்தொகை 90, 000 ஆல் வகுக்கப்பட்டு 143 அங்கத்தவர்களும்.

2 பரப்பளவின் அடிப்படையில் இலங்கையின் மொத்தப் பரப்பளவான 25, 332 சதுரமைல்கள் 1000ஆல் வகுக்கப்பட்டு 25 அங்கத்தவர்களுமாக மொத்தம் 168 பிரதிநிதிகள் தேசிய அரசுப் பேரவையில் இடம்பெற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த 168 பிரதிநிதிகளும் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகவே அமைவர். (நியமன அங்கத்துவம் இங்கு நீக்கப்பட்டது) இந்த 168 பிரதிநிதிகளும் இலங்கையில் ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த 160 தொகுதிகளினூடாக தெரிவு செய்யப்படல் வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது.

1947ம் ஆண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பில் இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை இனத்தவர்களின் அரசியல் காப்பீடு ஏற்பாடாக பல அங்கத்துவத் தேர்தல் தொகுதி முறை அல்லது இரட்டை அங்கத்தவர் தேர்தல் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தேர்தல் தொகுதியில் பெரும்பான்மை,  சிறுபான்மை இனங்கள் அண்ணளவாக சமமாக வாழ்ந்தால் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும்,  அல்லது ஒரு தேர்தல் தொகுதியில் இரண்டு சிறுபான்மை இனத்தவர்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும்,  இத்தகைய பல அங்கத்துவ தேர்தல் தொகுதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்படி கொழும்பு மத்தி, நுவரெலிய,  மஸ்கெலியா (மூன்று அங்கத்துவத் தொகுதிகளாகவும்) பேருவளை,  ஹாரிஸ்பத்துவ,  பொத்துவில்,  மட்டக்களப்பு என்பன இரட்டை அங்கத்துவத் தொகுதிகளாகவும் வகுக்கப்பட்டன.

இதன்படி பல அங்கத்துவர் தொகுதி 6இல் இருந்தும் 14 பிரதிநிதிகளும், தனி அங்கத்துவர் தொகுதிகள் 154இல் இருந்தும், 154 பிரதிநிதிகளுமாக 160 தேர்தல் தொகுதிகளிலும் இருந்து 168 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ், தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படல்.

விகிதாசார தேர்தல் தொகுதியின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படுவதில்லை. மாறாக தேர்தல் மாவட்டங்களே வரையறை செய்யப்படுகின்றன. 2ம் குடியரசு யாப்பின் 96ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘ஜனாதிபதியால் அமைக்கப்படும் தேர்தல் வரையறை ஆணைக்குழு இலங்கையை  இருபதுக்குக் குறையாததும், இருபத்து நான்கிற்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங்களாகப் பிரித்து அவற்றிற்குப் பெயர்களைக் குறித்தொதுக்குதல் வேண்டும்.’

அரசியலமைப்பின் 95ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவுக்கமைய 1978– 11– 29ம் திகதி திரு ஜீ.பீ.ஏ சில்வா என்பவரின் தலைமையிலான தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழுவினை இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அமைத்தார். இவ்வாணைக் குழுவின் அறிக்கை 1981 தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு அறிக்கை எனப்படுகின்றது. இவ்வறிக்கையின் படி (26ம் பக்கம்) இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டது. இலங்கையில் விகிதாசார முறையின் கீழ் இதுவரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்பட்டிருந்தமை அவதானிக்கத்தக்கதாகும்.

சுதந்திர இலங்கையின் செயற்பட்ட சோல்பரி அரசியலமைப்பிலோ, 1ம் குடியரசு அரசியலமைப்பிலோ பாராளுமன்ற அங்கத்துவர் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை. (நெகிழும் அங்கத்துவத்தைக் கொண்டதாகவே அங்கத்துவ எண்ணிக்கை அமைந்திருந்தது) ஆனால் 2ம் குடியரசு யாப்பில் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்துவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ‘அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கிணங்க அமைக்கப்பட்ட பல்வேறு தேர்தல் மாவட்டங்களில் தேருநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 196 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்க வேண்டும்.’ அதே நேரம் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்துக்கிணங்க (1988ல்) இந்த எண்ணிக்கை 225 ஆக உயர்த்தப்பட்டது. இந்த 225 அங்கத்தவர்களும் பின்வரும் ஒழுங்கில் இடம்பெறுவர்.

1 இலங்கையின் முழு வாக்காளர் தொகையையும்,  கருத்திற் கொண்டு 160  உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாகத் தெரிவுசெய்யப்படுதல்.

2.  ஒரு மாகாணத்திற்கு 4 என்ற வீதம் 9 மாகாணங்களுக்கும்,  36 உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.(ஆக மேற்படி 196 உறுப்பினர்களும், 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நேரடியாக மக்கள் மூலம் தெரிவு செய்யப்படுவர்)

தேசிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும், குழுக்களும் பெறும் வாக்கு விகிதாசாரத்துக்கு அமைய மீதமான 29 பிரதிநிதிகளும் தேசியப் பட்டியல் மூலம் இடம்பெறுவர்.

தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படக்கூடிய முறையினை நோக்குமிடத்து பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரத் தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்குத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ள அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஏனென்றால் வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தினர் சிதறியே வாழ்ந்து வருகின்றனர். எனவே தொகுதி ரீதியாக அமையும் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது மிகக் கடினமானதொன்றாகும். ஆனால் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தேர்தல் மாவட்டமாக வரையறை செய்யப்படுவதினால் மாவட்டத்தில் சிதறிவாழும் சிறுபான்மையினருக்கு ஓரிரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கலாம். எனவே பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரப் பிரதிநிதித்துவம் சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிக வாய்ப்புண்டு என்பது மறுக்க முடியாததாகும்.

ஏனைய நடைமுறைகளை அவதானிக்கும் போதும் இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்தலாம்.

(தொடரும்…….)

இலங்கை சமூக சேவகி ஜன்சிலாவுக்கு அமெரிக்க அரசின் துணிச்சல் விருது

majeed.jpgஅமெரிக்க அரசின் இராஜாங்க துறையால் தெரிவு செய்யப்பட்ட அனைத் துலக அளவில் 2010 ஆம் ஆண்டின் துணிச்சல் மிகுந்த பெண்களுக்கான விருதைப் பெறப்போகும் பத்து பேரில் இலங்கையைச் சேர்ந்த பெண் சமூக சேவகி ஜன்சிலா மஜீத்தும் ஒருவர்.

20 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் இவர் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கான சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அரசின் இராஜாங்க துறை செயலாளர் ஹிலரி கிளிண்டன் திங்கட்கிழமை அறிவித்த விருது பெறுபவர்களுக்கான பட்டியலில் ஜன்சிலா மஜித்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

எதிர்வரும் 10 திகதியன்று அமெரிக்க அரசின் இராஜாங்க துறை சார்பில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்பட்ட பத்து பேருக்கும் ஹிலரி கிளிண்டன் விருது அளித்து கெளரவிப்பார். அரசு துறையால் வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் மஜீத் புத்தளம் பகுதியில் உள்ள சமுதாய சேவைகள் மையத்தின் நிர்வாக காப்பாளர் என்றும் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியைச் சார்ந்தவர்களுக்கு தன் சொந்த செலவில் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றார்.  மஜீத்தின் முக்கிய நோக்கம் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் சமுதாயத்தினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதாகும்.

தேர்தலை கண்காணிக்க 75 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் – ஆசிய, ஐரோப்பிய பிரதிநிதிகளை வரவழைக்க ஏற்பாடு

பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தவென 75 வெளிநாட்டுப் பிரதிநிதிகளை பெப்ரல் அமைப்பும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையமும் வரவழைக்க விருக்கின்றது.

இந்த இரு நிறுவனங்களும் இம் மாத பிற்பகுதியில் இவர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

எதிர்வரும் 8 ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைத்து ஈடுபடுத்த மேற்படி இரு நிறுவனங்களுக்கும் தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பின்னர் இவர்கள் இலங்கைக்கு வருகை தருவார்கள். பெப்ரல் அமைப்பின் இணைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இதன்படி, பெப்ரல் அமைப்பு 50 கண் காணிப்பாளர்களையும் தேர்தல் வன்முறையைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் 25 கண்காணிப்பாளர்களையும் வர வழைக்கவுள்ளது.

பெப்ரல் அமைப்பானது ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா உட்பட ஆசிய நாடகளிலிருந்தே கண்காணி ப்பாளர்களை வரவழைப்பதாகத் தெரிவித் ததுடன் தேர்தல் வன்முறையைக் கண் காணிக்கும் மத்திய நிலையமானது ஆசிய – ஐரோப்பிய நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களை வரவழைக்கவுள்ளதாகவும் தெரிவித்தது.

இதேவேளை, தேர்தல் காலங்களில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடபடுவோர் தொடர்பில் கவனஞ் செலுத்துவதுடன் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்சித் தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

கட்சித் தலைவர்கள், செயலர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு – பொலிஸ் மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்

தமக்கு உயிராபத்து அச்சுறுத்தல் இருப் பதாகக் குறிப்பிட்டு பாதுகாப்புக் கோரும் கட்சிகளின் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது விடயமாக பொலிஸ் மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல நேற்றுத் தெரிவித்தார்.

தமக்கு உயிராபத்து அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு கட்சிகளின் தலைவர்களும், செயலாளர்களும் பொலிஸ மா அதிபரிடம் பாதுகாப்பு கோரும் பட்சத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இப்படியானவர்கள் முன்வைக்கும் காரணங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அதனடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எதிரணியைச் சேர்ந்த முன்னாள் எம். பிக்கள் சிலர் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தெஹிவளையில் வெள்ளைப்புலிகள்

wite-tig.jpgபென்தெரா டைக்ரிஸ் டைகர்ஸ் (Panthera Tigris Tigers) எனப்படும் இவ்வெள்ளைப் புலிகள் சியங் ஜிவ் சவாரி பூங்காவிலிருந்து தெஹிவளை மிருகக் காட்சிச்சாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

உலகில் மிக அரிதாகக் காணப்படும் இந்த இனப் புலிகள் முதல் முறையாக நம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் நேற்று முதல் புலிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

வெள்ளைப் புலிகள் கோலாலம்பூரினூடாக இலங்கைக்கு கடந்த 27ஆம் திகதி கொண்டுவரப்பட்டதாக விலங்கியல் பூங்காவுக்கான பணிப்பாளர் அனந்த லொக்குரன முக்க தெரிவித்தார்.

மிருகங்களை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் இப்புலிகளுக்கு விரைவில் இலங்கைப் பெயர்கள் வழங்கப்படவுள்ளன. இதில் ஆண்புலி மூன்றரை வயதினையும் பெண் புலி மூன்று வயதும் இரண்டு மாதங்களும் நிறைந்தன.

இவை ‘பெங்கல்’ புலிகள் எனவும் அழைக்கப்படும். இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளைப் புலிகளின் வாசஸ்தலமாக கருதப்படுகின்றன.

புலிகளின் பரம்பரையலகில் ஏற்ப ட்ட மாறுபட்ட தன்மையே இவை வெள்ளை நிறமாக தோன்றுவதற்கு காரணமாகியுள்ளது. இரண்டு மீற்றர் நீளம் கொண்ட இப்புலிகள் சுமார் 180-285 கிலோ கிராம் வரை நிறைகொண்டவையாக இருக்கின்றன.

உலகில் மூவாயிரம் வெள்ளைப் புலிகளே இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை மூன்று கிலோ கிராம் நிறைகொண்ட இறைச்சியினை ஒரு வேளை உணவாக உட்கொள்ளும் என தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை அதிகாரியொருவர் கூறினார்.

தனுன திலகரட்ணவின் வங்கி பெட்டகங்களுக்கு ரூ. 71/2 கோடி பணத்தை ஏற்றி வந்த கறுப்புநிற ‘டிபெஃண்டர்’ சிக்கியது

defender1.jpgஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவின் தாயாரான அசோக திலகரட்னவின் தனியார் வங்கி பெட்டகங்களில் காணப்பட்ட 7 1/2 கோடி ரூபா உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் இரகசிய பொலிஸார், குறிப்பிட்ட பணத்தை வங்கிக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் கறுப்பு நிற டிபென்டர் வாகனமொன்றை கைப்பற்றியுள்ளனர்.

இந்த கறுப்பு நிற டிபென்டர் வாகனம் தனுன திலகரட்னவினால் அவரது நெருங்கிய நண்பரொருவரின் பெயரில் 2008 பெப்ரவரி 14 ஆம் திகதி இராணுவ ஏல விற்பனையின் போது வாங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வாகனம் வாங்கப்பட்ட அந்த தினத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ ஏல விற்பனையின் போது இந்த கறுப்பு டிபென்டர் வாகனம் எவ்வாறு வாங்கப்பட்டது என்பது தொடர்பாக விசேட ரகசிய பொலிஸ் குழுவொன்று விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை 7 1/2 கோடி ரூபா நிதி தொடர்பாக தனுன திலகரட்னவின் தாயாரான அசோக திலகரட்ன கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை பிணையில் செல்ல மேலதிக மாவட்ட நீதிபதி அனுமதி வழங்கினார்.

அத்துடன் குறிப்பிட்ட பணம் வைக்கப்பட்டிருந்த வங்கிப் பெட்டகங்கள் இருந்த தனியார் வங்கியின் முகாமையாளர் தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளில் இரகசிய பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ரகசிய பொலிஸார் அனுமதி கோரினர். நீதிபதி அதற்கு அனுமதி வழங்கினார்.

தனியார் வங்கியின் பெட்டகங்களில் இருந்து கைப்பற்றபட்ட மேற்படி பணம் தொடர்பாக அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடைபெறுவதாகவும் இந்த பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றியும் விசாரிக்கப்படுவதாக ரகசிய பொலிஸாரின் சார்பாக வாதாடிய இன்ஸ்பெக்டர் மொஹான் மாசிம்புலா தெரிவித்தார்.

வங்கிப் பெட்டகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் சம்பந்தமான பல போலி ஆவணங்கள் பற்றி விசாரிக்கப்பட்டு வரும் அதேவேளை இந்த பணம் தேர்தலுக்கு செலவிடப்பட்ட பணத்தில் மீதான பணம் என்பது பற்றி விசாரிக்கப் படுவதாகவும் ரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் கூறினர்.

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்றுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்று (2) நிறைவடை ந்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின. கட்சி சார்பாக வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் கட்சி செயலாளர் களுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கான இலக்கங்கள் குழுத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

இதேவேளை இம்முறை தேர்தலில் போட்டியிடும் 7620 வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (2) நள்ளிரவு வெளியாக ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் (1) 18 மாவட்டங்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டதோடு நேற்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருணாகல், கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன. இது தவிர மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினூடாகவும் விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன.

தமக்கு விருப்பமான அல்லது முதலாவது இலக்கத்தை பெறுவதற்காக பல வேட்பாளர்கள் தமது பெயர்களை மாற்றியிருந்ததாகவும் இதனால் விருப்பு இலக்கம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் சுமணசிறி தெரிவித்தார்.

இதேவேளை இம்முறை தேர்தலில் 301 சுயேச்சைக் குழுக்களும் 336 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன. சில மாவட்டங்களில் அதிகமான சுயேச்சைக் குழுக்களும் கட்சிகளும் போட்டியிடுவதால் வாக்குச் சீட்டு மிக நீளமாக இருக்கும் எனவும் அதனால் கூடுதலான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்களில் 46 பேர் விடுதலை ஏனையோரை விடுவிக்க இந்திய அரசுடன் பேச்சு

images.jpgஇந்தியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீன வர்களில் 46 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 140 பேரை விடுவிப்பது தொடர்பில் இந்திய அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் விசாகபட்டிண அதிகாரிகளுடன் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா ஏனையோரை விடுவிப்பது தொடர்பில் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டார். இது தொடர்பில் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவிக்கையில் :-

பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2009ம் ஆண்டு மாத்திரம் இலங்கை மீன வர்கள் 700 பேரை இந்தியப் பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்திருந்தனர். அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவருடன் மேற் கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து அம் மீனவர்களை கட்டங் கட்டமாக விடுவித்து இலங்கைக்கு அழைத்துவர முடிந்துள்ளது.

இறுதியாக கடந்த 24ம் திகதி 24 பேரும், 27 ம் திகதி 22 பேரும் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். விசாகபட்டணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 இலங்கை மீனவர்களை அங்குள்ள நீதிமன்றம் விடு தலை செய்திருக்கிறது. எனினும் அவர்களின் படகை மீட்பதற்கான வழக்கு அடுத்த ஏப்ரல் மாதத்திலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதனால் தமது படகையும் மீட்டெத்துக் கொண்டே வருவதற்காக 28 மீனவர்களும் அங்கு தங்கியுள்ளனர்.

இவர்கள் அவசரமாக இலங்கைக்கு வர விரும்பினால் அவர்களை விமான மூலம் அழைத்து வருவதற்கான நடவடிக் கைகளை அமைச்சு மேற்கொள்ளும்.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர்; சட்ட மா அதிபர் தலைமையிலான குழு ஜெனீவா பயணம்

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான குழு ஜெனீவா சென்றுள்ளது.

ஐ. நா. மனித உரிமை கவுன்ஸிலின் 13 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறுகிறது.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த கூட்டத் தொடரில் பங்குபற்றவில்லை. தேர்தல் பணிகள் காரணமாகவே அவர் ஜெனீவா செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத் தொடரின்போது இலங்கையில் மனித உரிமை மறுக்கப் படுவதாக எந்தக் கருத்தும் தெரிவிக் கப்பட்டால் அமைச்சருக்கு பதிலாக சட்ட மா அதிபரும் அவரது குழுவினரும் உரிய வகையில் பதிலளிப்பார்கள் என்று மனித உரிமைகள் அமைச்சு வட்டாரம் கூறியுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில்

parliament.jpgபொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறை தேர்தல் பணிகளில் சுமார் 3 லட்சம் அரச ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட 50 ஆயிரம் அதிகம்