அரசியலுடன் சமயத்தை கலத்தலாகாது. இது நான் போடும் கட்டளையல்ல, மாறாக பெரும்பான்மை பொதுமக்கள் தொடக்கம் சமயவாதிகள் ஈறாக அரசியல்வாதிகள் வரை அடித்து சொல்லும் விடயம். இதன் தர்க்க நியாயங்களை சீர்தூக்கிப் பார்க்காமல் ஆம் அரசியலுடன் சமயம் கலக்கவே கூடாது என்று தேசம்நெற் பின்னூட்டகாரர் சிலர் காட்டமாக சொல்வதால் இவை இரண்டுடனும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ள நம்மில் அனேகர், பின்னூட்டகாரர்களும் உள்ளடங்களாக, இதில் எதை தீண்டதகாத விடயமாக கருதுகின்றனர்? அல்லது இவை இரண்டும் சேர்வதால் நாம் இழக்கப்போகும் நன்மைகள் எவை என்பதை அவர்களிடமிருந்து அறிய நாம் ஆர்வமாய் இருக்கிறோம். அதற்கு களமமைப்பதே இக்கட்டுரையின் உள்நோக்கு. அதற்கு முன் இந்த சமய விடயத்துடன் ஆத்மீகத்தை (spirituality) கலந்து குழப்பிவிட வேண்டாம் என்பதோடு இதை ஒரு சமய பிரச்சாரமாகவும் அர்த்தப்படுத்த வேண்டாம் என்றும் பணிவாய் வேண்டுகிறேன்.
அல்லாஹ¤ அக்பர் (இறைவனே அதி உயர்ந்தவன்) என்ற அடிப்படையில் அரசியல் செய்யும் பின்லாடனுக்கும் (Bin Ladan), அரசியல் வேறு சமயம் வேறு என்று கூறும் பிளயர் (Blair) கூட்டணி, அதே கருத்து கொண்ட புஸ் (Bush) கூட்டணி என்போர் செய்த அல்லது அதே பாணியில் நிகழும் ஐரோப்பிய, அமெரிக்க அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தால் ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.
இன்று நம்மிடையே காணப்படும் எந்த சமயமும் இயற்கை நீதிக்கும், ஒழுக்க விதிகளுக்கும், மனித குலத்தின் ஒட்டுமொத்த நன்மைக்கும் எதிரான கருத்தெதையும் போதிக்கவில்லை. மாறாக அன்பையும், நீதியையும், சக வாழ்வையும், ஒழுக்கத்தையும், உலக சமாதானத்தையுமே போதிக்கின்றன. இந்த அடிப்படை தன்மைகளே ஒரு அரசாங்கத்தின் நிகழ்சி நிரலிலும் காணப்பட வேண்டும் என ஆளப்படுவோர் விரும்பின் இந்த அரசியலும், சமயமும் சேர்ந்து செயல்படும் பட்சத்தில் அந்த அடிப்படை தன்மைகள் அடையப்பட முடியாது என்று கூறுவதின் தர்க்கம் புரிந்து கொள்வதற்கு கடினமாக உள்ளது.
கொலை, கொள்ளை, சூது, குடி என்று சராசரி அறிவுள்ள மனிதனும் வெறுக்கும் செயல்களுடன் மண், பெண், பொன்னாசை என்பவையும் எந்த சமயத்தாலும் ஊக்குவிக்கப்படவில்லை என்பதோடு அபரிமித இலாபம், வட்டி சுரண்டல் என்ற முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படைகளையும் இந்த சமயங்கள் நிராகரிக்கின்றன. அதேநேரம் சமயம் கலக்காத அரசியல் எந்தெந்த நாடுகளில் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் மேற்சொன்னவை சர்வசாதாரணமாக காணப்படுவதை நாம் மறந்துவிட முடியாது. உதாரணமாக சமயமும் அரசியலும் கலக்காத தூய்மையான அரசியல் நடப்பதாக கூறும் பிரித்தானியாவில், பரந்துபட்ட ஐரோப்பாவில், அமெரிக்காவில் சுபர் கசினோ, சூதாட்ட கிராமங்கள்( Las Vegas style villages), சட்ட ரீதியான, சட்ட ரீதியற்ற காம வியாபார(Sex industry ) நிலையங்கள், 12-13 வயது குழந்தைகள் வயிற்றில் குழந்தைகளை சுமக்கும் காட்சிகள், ஒரு நிமிடத்துக்கு பல கொலைகள், கற்பழிப்புகள், போதை பொருள் பாவிப்பால் உடல், உள விருத்தி குறுகி சமூகத்துக்கு பாரமாக காணப்படும் இளைஞர் கூட்டம் என்று மனித நாகரீகத்துக்கு ஒவ்வாத காட்சிகள் இந் நாடுகளில் காணப்படுவதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஒப்பீட்டு ரீதியில் இத்தகைய காட்சிகள் சமயம் கலந்த அரசியல் நடைபெறும் நாடுகளில் காணமுடியாது என்பதையும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாதுள்ளது.
ஆக, கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முற்பட்ட மனிதனுக்கும் நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக சொல்லும் இன்றைய மனிதனிக்கும் அவன் செயல் தொடர்பாக அதிகம் வித்தியாசம் காணப்படவில்லை. ஆகவே இந்த நிலைமை சமயமும் அரசியலும் கலந்ததாலா அல்லது அரசியலுடன் சமயம் கலக்காததாலா என்பது புரிவதற்கு கஸ்டமான விடயமுமில்லை.
ஜீவ காருண்யம் போதிக்கும் பௌத்தம் சரியாக பின்பற்றப் பட்டிருந்திருந்தால் இலங்கை ஒரு கொலை களமாக மாறியிருக்குமா?, அன்பே சிவன் என்று பிரபாகரன் சொல்லியிருந்திருந்தால் முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்டோர் எல்லாம் எம்முடன் இன்றும் இருக்கமாட்டாரா?, தற்காப்பு போரிலும் பயங்கரவாதம் தடை செய்யப்பட்டுள்ளதே தன் சமயத்தில் என்று பின்லாடன் யோசித்திருந்தால் இரட்டை கோபுரத்தில் 3000 அப்பாவிகள் உயிரிழந்திருக்க மாட்டார்களே. சமயத்துக்கும் சுரங்கப்பாதை ரயில்களுக்கும் சம்பந்தமே இல்லையே என்று சமயத்தை பிழையாக விளங்கிய இளைஞர் சற்று யோசித்திருக்க 07/07 நடந்து இருக்காதல்லவா? கிறிஸ்தவ விழுமியங்களை பிரித்தானிய அரசு என்றும் கைவிடாது என்று அடிக்கடி கூறும் பிளயார் பெரிய வெள்ளி உடன்படிக்கை ( Good Friday Agreement ) க்கு பதிலாக பிரித்தானிய படைகளை வட அயர்லாந்தில் இருந்து வாபஸ்பெற உடன்பட்டிருக்கலாமே. ஏன் பிளயாரின் நில ஆக்கிரமிப்புக்கு கிறிஸ்தவம் வழி வகுத்ததா? அரசியலுடன் சமயம் கலக்க அனுமதிக்க முடியுமாயின் அதன் அளவு என்ன? அல்லது அப்படி ஒரு அளவுகோல் உண்டா? எனவே பிரச்சினை சமயங்களில் இல்லாதது போலவும், தான் சமயவாதி என்பவனில் அல்லது தான் சமயவாதியல்ல என்பவனில் தான் ஏதோ பிரச்சினை இருப்பது போலவும் அல்லவா தெரிகின்றது.
சரி சமயம் இல்லாத அரசியலே சரியானது என்போரெல்லாம் என்ன நாஸ்திகவாதிகளா? இந்த ஐக்கிய ராச்சியத்தில் அரசியல்வாதிகள் பொதுவாக சொல்வது கடவுள் அரசியை காப்பாராக (God bless the Queen) என்பதுதானே. அமெரிக்கர் எதற்கெடுத்தாலும் கடவுள் அமெரிக்காவை காப்பாராக (God bless America)என்று தானே கூறுகின்றனர். இங்கெல்லாம் ஏன் கடவுளின் துணை தேவைப்படுகிறது?, இவர்களின் பதவி பிரமாணங்கள் எல்லாம் ஒரு கையில் பைபிளுடன் தானே செய்யப்படுகின்றது. இதையும் விட கடவுளின் ஆணையின் பேரிலேயே ஈராக்கின் மீது படை எடுத்ததாக புஸ் கூறினார். மேல் சொன்ன நாடுகளில் அரசியலுடன் சமயம் கலந்துள்ளதா, இல்லையா? சதாம் ஹ¤செய்ன் அரசியலுக்காக தூக்கிலே தொங்கி உயிர் பிரியும் கடைசி கணத்தில் மிக சத்தமாக கூறியது என்ன, இறைவன் அதியுயர்ந்தவன் (அல்லாஹ¤ அக்பர்) என்பதுதானே. இது அமெரிக்காவுக்கு அடிபணியமாட்டேன், மண்டியிடமாட்டேன் என்ற அரசியலா அல்லது உயிருடன் இருக்கும் போது சமயம் வெறுக்கும் அத்தனையையும் செய்துவிட்டு, உயிர் போகும் நேரத்தில் யாரும் உதவிக்கு இல்லையே என்ற சமய சாயம் பூசப்பட்ட அவலக்குரலா?
குற்றம் செய்தால் தண்டனையும், நன்னடத்தைக்கு சன்மானமும் என்பதுதான் இயற்கை நீதியின் (Natural Law) அடிப்படை. இந்த அடிப்படையில் அரபு நாடுகளில் பாரிய குற்றம் செய்தோருக்கு பகிரங்க மரண தண்டனை நிறைவேற்றப் படுகின்றன. தண்டனை என்பது குற்றம் புரிந்தவரை தண்டனைக்குட்படுத்துவது மாத்திரமல்ல, அது மற்றவரை குற்றம் செய்யாமல் தடுக்கவும் (Deterrent) வேண்டும் என்பது தண்டனை சட்டங்களின் (Penal Code)அடிப்படை. ஆனால் இந்த பகிரங்க மரணதண்டனை மனித நாகரீகத்துக்கு ஒவ்வாது என மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூப்பாடு போட அமெரிக்காவின் அனேக மாநிலங்களில் இந்த மரணதண்டனை சிறைச்சாலைகளில் தினம் தினம் நிறைவேற்றப்படுவதை இந்த நாடுகள் அனேகமாக கண்டுகொள்வதில்லை. பகிரங்க தண்டனை என்னைப் பொறுத்தவரை மற்றோரை குற்றம் செய்வதிலிருந்து தடுக்கும் ஒரு சாதகமான முறை. சரி அப்படி இல்லாவிட்டாலும் கூட இந்த இரண்டு முறைக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன? குற்றத்துக்கு தண்டனை என்பதுதானே.
” சமயம்/மதம் ஒரு அபின்” என்று கார்ல் மார்க்ஸ் சொல்லிவிட்டார் என்பதற்காக மனித வாழ்வின் ஒரு அம்சமான அரசியல், பொருளாதார முன்னேற்றத்துக்கு சமயத்தை வெறுத்தே ஆகவேண்டும் என்று வாதிடுவது, புலிகளின் பயங்கரவாத்தை கணக்கில் எடுத்து ஒடுக்கப்பட்டோர் புரட்சி வழியை திரும்பி பார்க்கவே கூடாது என்பது போல் இல்லையா? கார்ல் மார்க்ஸ் ஏன் சமயத்தை ஓரங்கட்டினார் என்பதை எப்போதாவது கேள்விற்குற்படுத்தினோமா?
அவரின் குடும்பம் கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்டது. அவரின் குடும்பத்தில் பாதிரியார்களும் இருந்தனர்(?) என்று கூறப்படுகின்றது. அவர் வாழ்ந்த காலத்தில் ஜேர்மனியிலே கிறிஸ்தவம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியது என்பதை நாம் ஏன் ஆய்வுக்குட்படுத்தவில்லை? கிறிஸ்தவத்திற்கப்பால் கார்ல் மார்க்ஸ் என்னென்ன சமயங்களில் பரிச்சயம் உள்ளவர் என்பதை யாராவது கூற முடியுமா? அவரின் சமயம் சம்பந்தமான பார்வை கிறிஸ்தவத்துடனான அவரின் அனுபவத்துடன் மாத்திரம் எல்லை இடப்படவில்லை என்று யாராலும் நிருபிக்க முடியுமா? அல்லது மனித சமுதாயத்தின் முழு அபிவிருத்தியும், முன்னேற்றமும் வெறுமனே இந்த அரசியல், பொருளாதார முன்னேற்றத்துடன் குறுகிக்கொள்ள வேண்டுமா? மனிதனுடன் மனம், ஆத்மா என்ற அம்சங்கள் உள்ளதையும் அரசியல், பொருளாதார அபிவிருத்தியை அடையும் போது அது மனத்தினதும், ஆத்மாவினதும் முழு அபிவிருத்தியும் அடைந்ததுக்கு சமம் என்றாகிவிடுமா? இல்லை என்றால் மனம், ஆத்மா என்பவற்றின் அபிவிருத்தி பற்றி நாம் கவலைபட வேண்டிய அவசியமே இல்லையா? இல்லை அது அவசியம் என்றால் அதை சமயத்தால் நிறைவேற்ற முடியாதா? முடியாது என்றால் அது எதனால் சாத்தியப்படும் என்று சொல்ல முடியுமா?
இந்த இரண்டு விடயங்களிலும் அங்கமாக இருக்கும் மனிதனுக்கு இந்த இரண்டுக்குமான பிரிகோடு இதுதான் என்று திட்டவட்டமாக சொல்லமுடியாத அளவுக்கு ஆற்றல் இல்லாத போது தன் நலன் சார்ந்த நிலையிலேயே அரசியலையும் சமயத்தையும் பிரித்துவைத்து குழப்பம் விளைவிக்க முனைகின்றான் மனிதன் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது. இந்த தன்மை விரிவடைந்து ஒரு தேசியத்தின் நலன் மற்றைய தேசியத்தை விட மேம்பட்டதாக கருதப்படுகிறது. ஒரு வர்க்கத்தின் நலன் மற்றைய வர்க்கத்தின் நலனை விட விசேடமாக பேசப்படுகின்றது. ஒரு நாட்டின் நலன் இன்னொரு நாட்டின் நலனிலும் மேலாக சொல்லப்படுகின்றது. ஆக சமயத்தை ஒரு ஆக்க சக்தியாக பார்க்க, அப்படி அதை செயற்படவைக்கத் தெரியாத மனிதன் அல்லது விரும்பாத மனிதன் பிரிந்திருக்கச் சொல்கிறான், பிரித்து வைக்கின்றான் என்பதற்காக நாம் அப்படியாகிவிட முடியாது என்பது என் நிலைப்பாடு.