11

11

உலகத் தமிழர் பேரவை அறிக்கை

அன்புள்ள தமிழ் உடன்பிறப்புகளே,
“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம்: ஒன்றாய் இருத்தல் முன்னேற்றம்: ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட் அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத் தமிழராகிய எமக்கு இப்பொழுதுள்ள நிலையிலும் சிறந்த நிலையொன்று இருக்க முடியாதென நான் நம்புகின்றேன்.

பெப்புரவரி 24 – 2010 அன்று இலண்டனிலுள்ள ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிமிகு தொடக்க மாநாட்டை அடுத்து இம்மடலைத் தங்களுக்கு வரைவதில் பேருவகை அடைகின்றேன். அதேவேளை சிறீலங்காவில் வாழும் எம் உடன்பிறப்புகள் பலரது பெரும் கவலைக்குரிய நேரத்தில் இதை எழுதுகின்றேன் என்பதையும் அறிவேன்.

இப்பொழுது நிலவுகின்ற மனித அவலநிலை மற்றும் அரசியல் நிலை பற்றிப் பொதுவாகவும் தமிழர் எதிர்நோக்கியுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிக் குறிப்பாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் கருத்துக்களைக் கீழே தர முயற்சிக்கின்றேன். பாரிஸ் கூட்டத்தில் 14 நாடுகள் கூட்டாக வரைந்த உ.த. பேரவையின் நோக்கம் குறிக்கோள் ஆகியவற்றில் கூறப்பட்டதற்கு அமைய சிறீலங்காவில் உயிர் பிழைத்து வாழும் தமிழரது மாந்தநேய மற்றும் அரசியல் தேவைகளைத் திறமையாக நிறைவுசெய்ய நாட்டு அடிப்படையிலும் பன்னாட்டு அடிப்படையிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழரை ஒன்று திரட்டி நாம் செயற்படுவோம்.

போரின் கடைசிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களை பத்தாயிரக் கணக்கில் இரண்டகமாகக் கொடூரமான முறையில் கொன்று குவித்ததோடு குழந்தைகள் முதியோர் ஊனமுற்றோர் உட்பட 300 000 தமிழரை அனைத்துலக மனிதாபிமான உதவிகள் ஏதும் கிடைக்காத வகையிலும் செய்தி ஊடகங்கள் அணுகாத முறையிலும் மிக மோசமான நிலையில் வதைமுகாங்களில் தடுத்து வைத்துவிட்டுச் சிறீலங்கா அரசு இன்னமும் அம்மக்களது அவல நிலையை அனைத்துலகுக்கு மறைத்து வருகின்றது. அத்தோடு பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு அனைத்துலக உதவி கிடைப்பதை வீம்புடன் தடுத்து வருகின்றது. முன்னர் வன்னி முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஓர் இலடச்த்திற்கு மேற்பட்டோர் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் புதிய முகாங்களில் தகுந்த மறுசீரமைப்பு இன்றியும் அடிப்படை வாழ்க்கை வசதிகள் இன்றியும் மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெயர்வாற்றல் உடையவர்களாகவும் இன்னமும் உள்ளனர்.

சரணடைந்த இளைஞரில் ஆயிரக்கணக்கானோர் முறையான விசாரணையோ சட்டவியல் பிரதிநிதித்துவமோ அற்ற நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் கூடத் தொடர்பேதுமின்றி சிறைக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போரானது 2009 மே 19 அன்றோடு முடிவுற்றுவிட்டது என அரசு அறிவித்ததோடு மறுசீரமைப்புப் பணிகள் மீள்கட்டுமானப் பணிகள் மீளிணக்கம் ஆகிய துறைகளில் தானெடுக்கும் முயற்சிகள் பற்றி அனைத்துலகச் சமூகத்திற்கு உறுதிமொழி வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற மெய்யாக முயற்சிக்காது மாறாகத் தமிழர் தாயகத்தில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பௌத்த மக்களைக் கொணர்ந்து குடியமர்த்தும் தன் வேலைத்திட்டத்தை வளர்ச்சித்திட்டம் என்ற போர்வையில் நிறைவேற்றி தமிழ் மக்களின் மொழி மற்றும் இறைநெறி அடையாளத்தை அழித்து வருகின்றது. இந்த இக்கட்டான நிலையில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் தமிழர் அடியோடு ஆர்வமற்றவர்களாக உள்ளனர். இதனை அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தெளிவாகக் காட்டியுள்ளனர். இந்நிலையை இன்னுமிரு காரணிகள் மேலும் மோசமாக்கியுள்ளன. இவற்றுள் ஒன்று அரசில் தம் செல்வாக்கையும் பதவியையுமே வேண்டித் தமிழரது உண்மையான வேட்கைகளை வஞ்சனை செய்கின்ற அரசியல்வாதிகள் எம்மிடையே உள்ளனர் என்பதாகும். இவர்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வன்முறையையும் ஊழல் வழிமுறைகளையும் கையாழுகின்றனர். அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுவரும் பிளவுகளையும் சிதைவையும் பெரும் கவலையுடனும் ஏமாற்றத்துடனும் நாம் கண்டுவரும் நிலை. தமிழரது அடிப்படை வேட்கைகளை ஒரே குரலில் எடுத்தியம்புவதற்கான ஒற்றுமையை இது நலிவுபடுத்தி அடக்குமுறையாளரும் இரண்டகர்களும் தம் பணிகளை எளிதாகச் செய்ய வழிசெய்கின்றது.

எமது உடன்பிறப்புகள் அடிப்படை வாழ்க்கை வசதிகள் ஏதுமற்றுத் துன்புற்று, ஊழலையும் தமிழரது உண்மையான அடிப்படை உரிமைகள் பற்றிய குழப்பத்தையும் கலக்கத்தையும் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையின் கீழ் ஒன்றுபட்டுள்ள புலம்பெயர்ந்த தமிழராகிய நாம் இலங்கைத் தீவில் உயிர்வாழ்வதற்கு இன்னமும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் எமது உடன்பிறப்புகளுக்கு எம் பரிவையும் கூட்டொருமையையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களோடான எமது கூட்டொருமை, அக்கறை ஆகியவற்றின் சிறு அடையாளமாக வடகிழக்கில் இயங்குகின்ற நம்பகமிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக உள் ஊரில் இடம்பெயர்ந்த, சிறப்பாக ஆதரவற்ற சிறுவர், கைம்பெண்கள் போன்றோருக்கு நிதியுதவி வழங்கும் பணியை ஏற்கனவே நாம் தொடங்கியுள்ளோம். மறுசீரமைப்பும் இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பானது பாதிக்கப்பட்டோருக்குக்கான உதவி என்ற பெயரில் ஏராளமான நிதியுதவியைப் பெற்றுவரும் அரசுக்கே பெருமளவில் உரியதென்பதாலேயே சிறுஅடையாளமான உதவியெனக் குறிப்பிட்டுள்ளோம்.

பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம்வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் போது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம் இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.

எமக்கு உள்ளார்ந்தமாக உள்ள தன்னாட்சி உரிமை, தமிழரது அடிப்படை வேட்கைகள், தமிழரது தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளுக்குத் துணிவுடன் நிலைத்தியங்கக்கூடிய அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் உலகத் தமிழர் பேரவையானது புலம்பெயர்ந்த தமிழரிடையுள்ள பல்வேறு வளங்களையும் திரட்டி ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பணியாற்றும்.

உலகத் தமிழர் பேரவை பற்றிய கூடுதல் தகவல்களைக் கீழே தரப்பட்டுள்ள எமது இணையத் தளத்திலிருந்து அறிந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

www.Globaltamilforum.org

உங்கள் உண்மையான
வண. எஸ் ஜெ. இமானுவேல்
தலைவர் – உலகத் தமிழர் பேரவை
10 மார்ச் 2010

சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு 16 ஆம் 17 ஆம் திகதிகளில் விசாரணை.

sarath_fonseka-02.jpgஇராணுவச் சட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகா மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நீதி மன்றில் நடைபெறவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இராணுவச் சட்டத்தின் 124 ஆம் சரத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் 102 ஆம் சரத்தின்; கீழ் இரு குற்றச்சாட்டுக்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இராணுவத்துக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்ததில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் மேலும் நான்கு குற்றச்சாட்டுக்கள் இராணுவச் சட்டத்தின் 109 ஆவது சரத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஜான்சிலா மஜீதுக்கு விருது வழங்கினார் ஹிலரி கிளின்டன்

hillary_with-majeed.jpgதுணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயர் விருது இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியான ஜான்சிலா மஜீதுக்கு நேற்று வழங்கப்பட்டது.

வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற வைபவத்தில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி  கிளின்டன்  இந்த விருதை வழங்கினார். இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமெரிக்க முதற் பெண்மணி மிச்சேல் ஒபமா கலந்துகொண்டு உரையாற்றினார்.

வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளில் 20 வருடகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றியமைக்காகவே ஜான்சிலா மஜீதுக்கு சர்வதேச பெண்களுக்கான உயர் விருது கிடைத்துள்ளது.
 
சர்வதேச பெண்களுக்கான உயர் விருது சர்வதேச நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 10 பேருக்கு நேற்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ?

he_the_president.jpgஜீ.15  நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளாரென அறிவிக்கப்படுகின்றது. ஜீ. 15 அமைப்பில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் நடைபெறும்போது அதன் புதிய தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, பிரேஸில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமெய்கா, கென்யா, மலேசியா, மெக்ஸிகோ, நைஜீரியா, செனகல், ஸ்ரீலங்கா, வெனிசுலா, மற்றும் ஸிம்பாப்வே ஆகிய 17 நாடுகள் இந்த ஜீ 15 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன.

இதன் தற்போதைய தலைமைத்துவத்தை ஈரான் வகிக்கின்றது. அடுத்த தலைமைத்துவத்துக்கு மிகப்பொருத்தமானவா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என அந்நாடுகள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வூ காண்பதற்கு சிறந்த வாய்ப்பு! வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் பீற்றர் றிக்கெட்ஸ்

rohitha_and.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும் மோதல்கள் முடிவடைந்த நிலையும் உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு சிறந்த வாய்ப்பாகும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்தோர் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இம்மக்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டதை பீற்றர் றிக்கெட்ஸ் வரவேற்றுள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் மீள்குடியேற்றம் நிறைவடைவதற்கும் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஏப்ரல் மாத தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும் நடத்தவும் இலங்கைக்கு பிரித்தானியா உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

தமிழ்தேசியக் கூட்டமைப்பு சரியான பாதையில் செல்கிறது புலம் பெயர் தமிழர்கள் முழுமையான ஆதரவு நல்க வேண்டும்! : ஐ.தி சம்பந்தன் (லண்டன்)

Sampanthar_I_T(தமிழ் தேசிய கூட்டணியும் முன்னணியின் தலைவர் திரு சம்பந்தனை ஆதரித்தும், தமிழ்தேசிய முன்னணிக்கான பிரசாரங்களில் ஈடுபடவும் கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்று ஈஸ்ற்காம் லண்டனில் நேற்று மாலை திரு சீனிவாசம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களும் முன்னாள் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். – இக்கூட்டத்தை திரு ஜதி சம்பந்தனே ஒழுங்கு செய்திருந்தார் என்றும் அறியப்பட்டுள்ளது.)

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வட கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் தாயகத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

வன்னியில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அதாவது சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு நல்கி தமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த மே மாதம் 18ம் திகதியுடன் ஆயதப் போரராட்டம் மௌனமாகியது அதன்பின்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களின் அரசியலை ஜனநாயக வழிகளில் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் போராட்ட வீழ்ச்சியின் பின் இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழர் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஹிட்லர் போன்ற சர்வாதிகார மகிந்த ராஜபக்ஸ ஒரு ராணுவ ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அரசுக் கெதிராகக் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதல், காணாமற்போதல், வெள்ளை வான் கடத்தல், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரச படைகளின் துணையுடன் ஆயதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டமை, பயரங்கரவாத் தடைச்சட்டத்தையும், அவசரகால சட்டத்தையும் பயன்படுத்தி தமிழ்மக்களை அடக்கியொடுக்கும் அரசியல் நிலையை புலம்பெயர் தமிழர்கள் நன்கு அறிவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதிக்கு செல்ல முடியாதளவு உயிர் அச்சறுத்தலும். பாதுகாப்பின்மையும் இருந்து வந்ததை யாவரும் அறிவர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரன் செல்வராசா, திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு ஜெயானந்த மூர்த்தி, திரு.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அங்கு வாழ முடியாது என்று நீண்டகாலம் வெளிநாடுகளில் தங்கியிருந்தனர். ஆனால் தலைவர் திரு. சம்பந்தன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெருக்கடியையும் பொருட்படுத்தாது நாட்டிலிருந்து தம்மால் செய்யக்கூடிய கடமைகளை ஆற்றிவந்தனர். வன்னிப்போராட்டம் முடிவடையும் வரை விடுலைப் புலிகளுக்கு முழுமையான ஆதரவு நல்கி அவ்வியக்கத் தலைமையின் வழிகாட்டலுக்கு உட்பட்டு நடந்துவந்ததையும் அணைவரும் அறிவர்.

மக்களால்தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்ப விடுதலைப் புலிகளின் ஊதுகுழல் என்று மகிந்த அரசாங்கம் பலவழிகளில் அவர்களைப் பழிவாங்கி வந்ததை அனைவரும் அறிவர். இந்தச் சூழலில் முள்ளிவாய்கால் வீழ்ச்சியின் பின் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்தேசியக் கூட்மைப்பின் மீது சுமத்தப்பட்டது இந்தப் பொறுப்பை நன்கு உணர்ந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சூழ் நிலையைக் கருத்தில்கொண்டு ராஜந்திரமாக அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

25 வருட ஆயுதப்போராட்டம் வீழ்ச்சியடைந்ததால் அதிலிருந்து தமிழர்களை மீட்சிபெற வைத்து தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையிலுள்ள த.தே.கூட்டமைப்பு தமிழர்களின் வலுவான கட்சியாக வளரவேண்டுமென்பதில் புலம்பெயர் தமிழர்களிடையே மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இலங்கையிலுள்ள பயங்கரமான சூழ்நிலையில் தமிழர்தாயகத்தில் வாழும் மக்களின் அவலநிலை, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், உயர்பாதுகாப்பு வலயத்திருந்து இராணுவத்தை அகற்றல், வன்னிப்பிரதேசத்தில் ராணுவ ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தல், போன்ற அதிமுக்கியமான பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இவற்றை எவ்வாறு அணுகுவது என்பதைத் தமிழ்த்தேசிய கூட்டடைமப்பு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

இந்தியா இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி வருவதனால் இந்தியாவின் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும் த.தே. கூட்டமைப்புக்கு உண்டு. அதையும் அவர்கள் ராஜதந்திரமாக மேற்கொள்வார்கள் என தமிழ்மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோல் ஒரு அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும் இந்தியாவின் உதவி அவசியமாக இருக்கிறது. அதே வேளை சர்வதேச நாடுகளின் ஆதரவும் தேவை. முதலில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவேண்டியது அவசியம். அதற்காக இந்தியாவிடம் சரணடையக் கூடாது, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் சரணடைந்து விட்டதாகக் குரல் எழுப்பப்படுகிறது. அதைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தெளிவுபடுத்த வேண்டும்.

அந்தவகையில் இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் நல்லுறவைப்பேணி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடனான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு ராஜதந்திரமாக த.தே. கூட்டமைப்பு செயற்பட வேண்டும் இதைப்புரிந்து கொள்ளாத புலம்பெயர் தமிழர்கள் சிலர் திரு. இரா. சம்பந்தன், திரு.பிரேமச்சந்திரன் ஆகியோர் சோனியா காந்தியின் வலையில் சிக்கிவிட்டதாக கோசம் எழுப்புகின்றார்கள். இலங்கையின் களநிலைமைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் கோசத்தை எழுப்பி குழப்பி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டணியன் தலைவர் திரு. இரா சம்பந்தன் அவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது மிகக் கசப்பான விடயம்.

ஈழத்தமிழர்கள் அரசியல் ரீதியாக தலைநிமிர்ந்து ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையிலுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டதாகக் கூறுபவர்கள் இந்தப்பிளவு எத்தகையது என்பதை ஆராயவோ, யதார்த்தமாக சிந்திக்கவோ மறுக்கின்றனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு பலகட்சிகளை உள்ளடக்கிய ஒரு கட்டுப்பாடான அமைப்பு. பல கருத்துக்களைக்கொண்ட கட்சிகள் இங்கு அங்கம் வகுக்கின்றனர். முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாது. வன்னித் தலைமை இருக்கும் வரை கட்டுப்பாடாக விருந்தவர்கள் முள்ளிவாய்க்கால் வீழ்சியின் பின் தன்னிச்சையாக கருத்துக் கூற முற்பட்டுள்ளனர். தலைமைக்கு மதிப்புக்கொடுக்கும் நிலை குறைந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய சூழ்நிலையில் நல்ல அரசியல் அனுபமிக்க ஒருவர் கிடைத்தது பாராட்டத்தக்கது. அன்று இந்திரா காந்தியைச் சந்தித்த முத்தலைவர்களில் ஒருவராக இருப்பவர் திரு சம்பந்தன் அவர்களாகும்.

1952ல் திருகோணமலைத் தொகுதியின் பிரதிநிதியாக தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படவர் திரு.இராசவரோதயம் அவர்கள். திரு சம்பந்தன் தமிழர் தாயத்தின் தலைநகரான திருமலையை சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து வருபவர்கள். தமிழர்தாயக உணர்வுமிக்க அரசியல் பரம்பரையில் வந்தவர் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை திரு சம்பந்தன். இவரைப் புலம்யெயர் தமிழர் சிலர் மிக மோசமாக விமர்சிப்பதுதான் வேதனைக்குரியது.

எனினும் எந்தக் குறைபாடுகளையும், கண்டனங்களையும் பொருட்படுத்தாது த.தே. கூட்டணித் தலைமை அரசியல் நகர்வுகளைச் சாதுரியமாக மேற்கொண்டு வருகிறது. பிரபாகரன் அவர்களினால் நியமிக்கப்பட இரு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தா அரசிடம் சரணாகதி அடைந்துள்ளனர். தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு மகிந்தாவின் சிந்தனையை ஏற்றுக்கொண்ட இவர்கள் பற்றி புலம்பெயர் தமிழர்களோ, ஊடகங்களோ பெரிதாக கூறுவதில்லை.

ஐனாதிபதி தேர்தலின்போது திரு சிறீகாந்தா, திரு சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டைமீறி தனிவழி மேற்கொண்டனர். இவர்கள் பற்றி புலம்பெயர் ஊடகங்கள் அவ்வளவாக எழுதுவதில்லை.
இப்படியானவர்களை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சேர்த்துக் கொள்ளமுடியுமா? அவர்கள் பிளவு தலைமையால் ஏற்பட்டது என்ற பிரசாரம் செய்பவர்களும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள்.

திரு கஜேந்திரகுமார், திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு கஜேந்திரன் செல்வராசா ஆகியோரை தமிழத்தேசிய கூட்டமைப்பு வெளியேற விட்டிருக்கக்கூடாது. அரசியல் விவேகமுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் மூவரையும் த.தே கூட்டணி வேட்பாளர் பட்டியில் கட்டாயம் சேர்த்திருக்க வேணடும். அவ்வாறு செய்யாததற்கான காரணங்களை எம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதற்கான விளக்கத்தை தலைமை வெளியீடும் என எதிர்பார்க்கின்றோம். என்ன விளக்கத்தை கொடுத்தாலும் எமது பார்வையில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளாதது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எது எப்படியென்றாலும் த.தே. கூட்டமைப்பு என்ற ஒரு தமிழ் அரசியல்கட்சிதான் தமிழர் தாயகத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அவர்களில் பெரும்பான்மையானவர்களின் வெற்றியிலேயே தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே புலம்பெயர் தமிழர்கள் அவர்களது பூரண ஆதரவை நல்க வேண்டியது அவசியமாகும்.

ஐரோப். ஆணைக்குழுவிடம் பேச்சு நடத்த அரச உயர்மட்ட குழு பிரஸல்ஸ் பயணம்

gl-p.jpgசர்வதேச அரங்கிற்கு இலங்கையின் உண்மை நிலையை எடுத்துச் செல்லும் வகையில் அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக் குழுவிடம் உயர்மட்ட பேச்சுவார்த்தை யொன்றை நடத்தவுள்ளது. இதற்கென அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று எதிர்வரும் 15 ஆந் திகதி திங்கட்கிழமை பிரஸல்ஸ் செல்கின்றது.

இந்தக் குழுவில் நிதியமைச்சின் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இடம்பெறுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகை உட்பட இலங்கை நலன் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஆணைக் குழுவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுமென அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) முற்பகல் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

வெளிநாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வ தற்காக இலங்கையின் நலன் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாததென்று கூறிய அமைச்சர் பீரிஸ் இதற்கான நிலையானதும், பலமானதுமான ஓர் அரசாங்கம் இருக்க வேண்டுமென்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலண்டனில் நடந்த சர்வதேச தமிழர் அமைப்பின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டில் எமது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் முதலாவது : எமது இராணுவ அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது, இரண்டாவது : இலங்கை உற்பத்திப் பொருள்களைப் பகிஷ்கரிப்பது, மூன்றாவது : சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது. போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். நாடு கடந்த எல். ரி. ரி. ஈ. அரசாங்கத்தை அமைப்பதற்கு கூறியுள்ளார்கள். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராயவென மூவர்கொண்ட நிபுணர்களை நியமிக்கப் போவதாகக் கூறுகிறார்.

இது எந்த வகையிலும் நியாயமானதல்ல’ என்று குறிப்பிட்ட பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பான் கீ மூன் மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கையானது முற்றிலும் ஐ. நா. சபையின் கொள்கைகளை மீறும் செயலாகுமென்று சுட்டிக்காட்டினார்.’ சில மாதங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாடு, ஐ. நா. பாதுகாப்புச் சபை ஆகியவற்றில் இலங்கைக்குச் சார்பாக பல நாடுகள் குரல் எழுப்பியிருந்தன.

அவ்வாறு இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்த நாடுகள் கூட தலையிட முடியாதவாறு செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அலுவலகத்துடன் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டதான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள அவர் முயற்சிப்பது ஐ. நா. சாசனத்திற்கு விரோதமானதாகும். சர்வதேசத்துடன் நல்லுறவைப் பேணுவதற்குத் தயார்.

ஒரு சவாலை வென்றுள்ள நாட்டுக்கு, பொருளாதார சவாலையும் வெல்ல வேண்டியுள்ளது. இதற்கு சர்வதேச நாடுகள் இடமளிக்க வேண்டும். அதேநேரம், அந்த நாடுகளின் அரசியல் இலாபத்திற்காக எமது நாட்டின் நலன் பாதிக்க இடமளிக்க முடியாது. வாக்குகளைப் பெறவும் தேர்தலுக்கு நிதியைப் பெற் றுக்கொள்ள நமது நாட்டைப் பலிகொடுக்க முடியாது. இதனைக் கருதிற்கொண்டுதான் ஐரோப்பிய ஆணைக் குழுவுடன் பேச்சு நடித்த அரசாங்கம் தீர்மானித்ததென்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவும் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் தகவல் வழங்கிய அமைச்சர், ‘எதிர்க் கட்சி தொடர்பாக ஜனாதிபதி தேர்தலின் போது நாம் தெரிவித்த கருத்துகள் இன்று நிரூபணமாகியுள்ளன. எதிர்க் கட்சிக் கூட்டு இன்று மூன்று பிரிவுகளாகியுள்ளது.

அவர்கள் அதிகாரத்திற்கு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! இந்தத் தேர்தலில் அரசாங்கம் வெல்லும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எதிர்க்கட்சி வெல்லும் நோக்கத்திலோ, அரசாங்கத்தினை அமைக்கும் நோக்கத்திலோ தேர்தலில் போட்டியிடவில்லை. அர சாங்கத்திற்கு மூன்றில் இரண்டு கிடைப் பதைத் தடுக்கவே முயற்சிக்கின்றது.

ஆனால், அரசாங்கத்திற்குப் பூரண ஆத ரவை வழங்கி மூன்றிலிரண்டு பெரும் பான்மையைப் பெற்றுக் கொடுப்பதென மக்கள் தீர்மானித்து விட்டார்கள். புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் தோற்கடிக் கப்பட்டாலும் வெளிநாடுகளில் அச்சுறுத்தல் இன்னமும் உள்ளதை மக்கள் புரிந்து கொண்டார்கள்’ என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

“2/3 பெரும்பான்மை பலத்துடன் அரசியல் யாப்பில் பல மாற்றங்கள்”

srisena.jpgநிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் நடைபெறும் இறுதித் தேர்தலாகவே எதிர்வரும் பொதுத் தேர்தல் அமையும். மக்களின் 2/3 பெரும்பான்மை பலத்தைப்பெற்று அரசியல் யாப்பில் உள்ள பல விடயங்களை அரசாங்கம் மாற்ற உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்குமாறு மக்களைக் கோருகிறோம். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் உள்ள 70 வீதத்திற்கும் அதிகமான மக்கள் ஐ.ம.சு. முன்னணியின் வெற்றிக்குப் பங்களிக்க உள்ளனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து இந்த தேர்தலில் எதுவித போட்டியும் இல்லாததால் தேர்தல் பிரசாரங்கள் மந்தமாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், மேலும் கூறியதாவது, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு. முன்னணிக்கு 60 வீத வாக்குகளை மக்கள் வழங்கினர். பயங்கரவாத்தை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதற்கு மக்கள் தமது நன்றிக் கடனை செலுத்தினர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் இரண்டாவது தடவையாக வாக்களிக்க வேண்டுகிறோம்.

மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தில் உள்ள விடயங்களை செயற்படுத்த இலங்கையை சுபீட்சமான நாடாக கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கும் பலமான அரசாங்கமொன்று தேவை. எனவே ஜனாதிபதித் தேர்தலில் வழங்கியதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.ம.சு. முன்னணியை வெற்றிபெறச் செய்யுமாறு மக்களை கோருகிறோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் போலன்றி இம்முறை வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுடனே உள்ளனர். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் முதற்தடவையாக 2/3 பெரும்பான்மை பலத்தை மக்கள் எமக்கு வழங்க உள்ளனர். இதனூடாக 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பை திருத்த உள்ளோம். முதலில் தேர்தல் முறையை மாற்றவும் அடுத்த 17ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரங்களை அதிகரிக்கவும் முறையாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் உள்ள சிக்கலும் தீர்க்கப்படும். யாப்பில் உள்ள அதிகமான விடயங்களை 2/3 பெரும்பான்மை பலத்துடன் மாற்ற முடியும். சில விடயங்களை திருத்தவே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டியுள்ளது.

தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்பதால் ஐ.தே.க. செயலாளர் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்றம் வரத்திட்டமிட்டுள்ளார். ஆனால் ஐ.ம.சு. முன்னணி செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த்தும் சு.க. செயலாளரான நானும் இம்முறை தேர்தலில் போட்யிடுகிறோம்.

நாம் பிரதமர் வேட்பாளராக எவரையும் அறிவிக்கமாட்டோம். 1978ஆம் ஆண்டின் பின் ஒருபோதும் பிரதமர் வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படவில்லை. வெற்றிபெரும் கட்சி எம்.பி.களிடையே கூடுதல் விருப்புள்ள நபர் ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்படுவார். பிரதமர் நியமனம் தொடர்பில் ஐ.ம.சு. முன்னணி கூட்டுக் கட்சிகளிடையே எதுவித பிரச்சினையும் கிடையாது என்றார்.

சகலரும் சம உரிமையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளது – யாழ்ப்பாணத்தில் இராணுவ தளபதி

jj.jpgஒற்றை யாட்சியின் கீழ் ஜனாதிபதியின் தலைமைத்துவத்துடன் அனைவரும் சுதந்திரமாக சம உரிமையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார். மக்களுடனான நல்லுறவுகளை தொடர்ந்து பேணும் நோக்கில் இராணுவ அலுவலக மொன்றை நேற்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இனப் பிரச்சினையை அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பயன்படுத்தும் அதிகாரத்தை தொடர்ந்து பேணுவதற்கும், அதன் மூலம் அரசியல் லாபம் சம்பாதிக்கும் சுயநலமிக்க யுகத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வரும் தெல்லிப்பளை மற்றும் திரு நெல்வேலியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் மற்றும் வயல் நிலங்களை மீண்டும் அவற்றின் சொந்தக்காரர்களுக்கே கையளிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

அதேவேளை தெல்லிப்பளை புற்றுநோய் ஆஸ்பத்திரி, தள வைத்தியசாலை ஆகியவை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து அகற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

பச்சிலைப்பள்ளியில் இடம்பெயர்ந்தோர் 15 ஆம் திகதி முதல் மீள்குடியேற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலர்களினால் நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளில் எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி றூ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இம்மீள்குடியேற்றம் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனால் தற்காலிகமாக வெளிமாவட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வசிக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலோப்பளை மேற்கு, புலோப்பளை, முல்லையடி, பளை நகரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளைச், சேர்ந்தவர்களே மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

தற்காலிக பதிவு நீக்கத்துடன் வருபவர்கள் மட்டுமே மீள்குடியேற்றத்திற்கு அனுமதி க்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.