வாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியைத் தற்காலிகமாக ஒருவருடத்திற்குள் நீக்கப்போவதாகவும் ஐ.தே.மு. வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய், காஸ், மின்சாரக் கட்டணம், நீர்க்கட்டணம் குறைக்கப்படுமெனவும் அக்கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் செயலகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அதன் தலைவர் ரணில் விக்கிரம சிங்க வெளியிட்டார். உங்களுக்கு நிவாரணம்நாட்டிற்கு அபிவிருத்தி என்ற தலைப்பில் கட்சியின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வில் ஐ.தே.மு.வின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு), ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சகல அரச ஊழியருக்கும் 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமெனவும் முதலில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 3500 ரூபா வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகுதி 6500 ரூபாவைத் தவணை முறையில் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பள நிர்ணய சபை ஊடாக தனியார் துறைக்கும் கட்டாயமாக சம்பள உயர்வு வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க சட்டமொன்று கொண்டுவரப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐ.தே.மு.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
வட்டி வீதம் குறைக்கப்படும், ஜி.எஸ்.பி. சலுகை மீண்டும் பெறப்படும், தொழிலை இழந்தால் இழப்புக் காப்பீடு வழங்கப்படும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்துறையை மேம்படுத்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், விவசாயிகளுக்கு அறுவடை வைப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படும், ஆகக் கூடிய விலைக்கு அறுவடைப் பொருட்களை விற்பனை செய்ய உத்தரவாதம் அளிக்கப்படும், சம்பா நெல்லுக்கு 40 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும், விவசாயிகளுக்கு கடன் வசதி, சிறு தேயிலைச் செய்கையாளர்கள், சிறு றப்பர் செய்கையாளர்கள், சிறு தெங்குச் செய்கையாளர்கள், மீனவர்கள் தொழில் மேம்பாட்டிற்காக உரிய வசதிகள் மேற்கொள்ளப்படும்.
மலையகத் தொழிலாளர்களுக்கு 2 இலட்சம் புதிய வீடுகள் ஆறு வருடகாலத்திற்குள் நிர்மாணித்துக்கொடுக்கப்படும், சமுர்த்திக் கொடுப்பனவு 500 ரூபாவால் அதிகரிக்கப்படும், வெளிநாட்டில் தொழில்புரிவோருக்கு விசேட நிவாரணங்கள் வழங்கப்படும், ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 2 ஆயிரம் ரூபாவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், அனைவருக்கும் வீடு கடன் திட்டம் ஆரம்பிக்கப்படும், திறமை அடிப்படையில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும், ஆரோக்கியமான சுகாதார சேவையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், நகரத்திலுள்ளவர்களுக்கும் கிராமப்புறத்தவர்களுக்கும் வேறுபாடுகளின்றி சமமான கல்வி வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும், பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெறாவண்ணம் சுயாதீன பரீட்சை அதிகாரசபை உருவாக்கப்படும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு லப்டொப் வழங்கப்படும், பட்டதாரிகளுக்கு வருடாந்தம் 100 புலமைப் பரிசில்கள் வழங்கப்படும், தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வருடாந்தம் 1000 புலமைப்பரிசில்கள் வழங்கப்படும், அனைத்துப் பாடசாலைகளிலும் கணினிக் கல்வி ஏற்படுத்தப்படும், பிள்ளைகளுக்கு இலவசப் பாலுணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்துக் கிராமங்களிலுள்ள இளைஞர் அமைப்புகளுக்கு 1 இலட்சம் ரூபா வழங்கி கிராமப்புற அபிவிருத்திக்கு வழிசமைக்கப்படும், சிரேஷ்ட பிரஜைகளுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு வழங்கப்படும், சகல தேர்தல் தொகுதிகளிலுமுள்ள சிரேஷ்ட பிரஜைகளைப் பராமரிக்க சுகாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படும், அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், குழாய் நீர் வசதி, அதி சிறந்த போக்குவரத்து சேவை வழங்கப்படும்.
ஜெனரல் பொன்சேகாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், சிறந்த நிர்வாகம், சட்டம், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படும், காப்பீடு மேற்கொள்ளப்படும், அரசியலுக்குள் தகுதியற்றவர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும், அரசியலமைப்பு சபையூடாக சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவி அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படும்.
தேசிய, பிரதேச, உள்ளூராட்சி தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கும் ஆட்சிக் காலத்தை 5 வருடங்களுக்கு மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளை அந்தந்த மாகாணங்களின் அபிவிருத்தி, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அவற்றுக்கான பொறுப்பு வழங்கப்படும்.
பிரதமரின் பரிந்துரைக்கு அமைய மாத்திரமே அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள், பாராளுமன்றம் கலைக்கப்படுவது பிரதமர் அல்லது பெரும்பான்மை எம்.பி.க்களின் வாக்குகளின் மூலமே மேற்கொள்ளப்படும், 6 மாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பற்றித் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளுடன் அவசர காலச்சட்டத்தை நிறைவேற்றவும் ஆறு மாதங்களின் பின்னர் 2/3 பெரும்பான்மை பலத்துடன் அவற்றை நிறைவேற்றவும் ஏற்றவாறு நடவடிக்கையெடுக்கப்படும், சகல கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் பாராளுமன்றத்திற்குள் விருப்பு வாக்கற்ற விகிதாசார முறையுடன் கூடிய கூட்டுப்பிரதிநிதித்துவத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், 125 உறுப்பினர்கள் தொகுதிவாரியாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.
தன்னிச்சையான கைதுகளின் போது அதிகாரிகள் தனிப்பட்ட ரீதியில் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டிற்கான சட்டம் உருவாக்கப்படும், சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாடு, சித்திரவதைகளுக்கு எதிரான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், முகாம்களில் வாழுகின்ற மக்களை மீளக்குடியமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், மீளக் குடியமர்த்தப்படுபவர்களுக்கு ரூபா 1 இலட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்படும்.
நெல்சன் மண்டேலா புதிய தென்னாபிரிக்காவை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தை எடுத்துரைத்ததைப்போன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும்.