அண்மையில் மதங்களைப் பற்றியும் நம்முடைய நீண்ட நாள் நண்பர்கள் மன்னிக்கவும் தோழர்களை ‘கீ போர்ட் மார்க்ஸிட்’ என வர்ணித்ததும் எழுத்துலகில் மாபெரும் புயலைக் கிழப்பிவிட்டதை நான் நன்குணர்ந்தேன். உண்மையில் இந்த ‘கீ போர்ட் மார்க்ஸிட்’ என்ற சொல்லை நான் உபயோகிக்கவில்லை. இது என் சக நண்பர்களின் திட்டமிட்ட சதி அல்லது அதற்கு பின்ணணியில் ரஷ்ய உளவுப்படை இருந்திருக்க வேண்டும். நான் உபயோகித்த சொல் ‘டொட் கொம் மார்க்சிஸ்டுக்கள்’. என்னுடைய இந்தக் கருத்து சில பிற்போக்கு திரிபுவாதிகளால் மாற்றப்பட்டு என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது நிற்க.
இந்த டொட் .com எனப்படுகின்ற பதம் எங்கிருந்து வந்தது? இது commercial என்பதன் சுருக்கம் தான் இந்த .com. இனியாவது எமது தோழர்கள் இந்த வரலாற்றுத் தவறை தொடர்ந்தும் இழைக்காமல் தமது web siteகளுக்கு டொட் .marx, டொட் .len, டொட் .sta, டொட் .mao என்று பெயரிடட்டும். யாருக்காவது என்னில் பேரன்பு இருந்தால் டொட் .cons என்று வைக்கலாம்.
இனி நம்முடைய தோழர் பாண்டியன் விடயத்திற்கு வருவோம். ஏதோ சிலர் (நான் உட்பட) பெரிய முதலாளி, நாட்டிலுள்ள ஏழை மக்களை சுரண்டப் புறப்பட்ட புறம்போக்குகள் என்று தொடங்கிவிட்டார். நாமும் தோழர் பாண்டியன் போல் வெறுங்கையுடன் இந்த நாட்டிற்கு வந்தவர்கள்தான். கக்கூஸ் கழுவுவது தொடக்கம், கோழி பொரிப்பது, பாண் சுடுவது வரை வேலை செய்தவர்கள் தான். ஒரு வித்தியாசம் சில வேளைகளில் இருக்கலாம். நாங்கள் என்ன வேலை செய்தாலும் எமக்கு வேலை கொடுப்பவனுக்கு சற்று நன்றியுள்ளவனாக இருந்து, நாம் ஏற்றுக் கொண்ட வேலையை முழுதார செய்வது முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். (நீங்கள் எனது நிலையை உயர்வாகக் கருதினால்) அல்லது இன்னொரு காரணம், உங்களது தாழ்வு மனப்பான்மையாகக்கூட இருக்கலாம்.
அல்லது நானும் இந்த நாசமாய்ப் போன முதலாளி எனக்கு இரண்டு பவுண்தானே சம்பளம் தாறான் என்று எனக்குள் எண்ணிக்கொண்டு, மொபைல் போனில் கார்ல் மார்க்ஸ் இறக்கும்போது யாரையாவது வைத்திருந்தாரா? வைத்திருந்தால் அதனை தனது மனைவிக்கு தெரிந்து வைத்திருந்தாரா? அல்லது தெரியாமல் வைத்திருந்தாரா? அவர்களுக்கு பிள்ளை இருக்கிறதா? என விவாதித்துக் கொண்டிருந்தால் கோழியும் கருகிப் போயிருக்கும், முதலாளி வேலையிலிருந்தும் கலைத்திருப்பான். ஏதோ காரணத்திற்காக நான் இந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். இதுதான் எனது சம்பளம் என்ற யதார்த்த உண்மையை மனதார ஏற்றுக் கொண்டு, ஒழுங்காகக் கக்கூஸ் கழுவியததால்தான் பின் அந்த நிலையத்திற்கு மனேஜராகி பின் அதற்கும் மேலாகப் போக வாய்ப்புக் கிடைத்தது. (சில படிப்பும் கொஞ்சம் உதவும்தான்).
அன்றைக்கு உந்த வேலையெல்லாம் செய்ய மாட்டேன் மார்க்ஸிய கொள்கைப்படி தான் வேலைசெய்வேன் என்று அடம்பிடித்து இருந்தால் நானும் என்னவோ ஆகியிருப்பேன். நைஜீரியாவில் எண்ணை எடுக்கின்ற கொம்பனிகள் எல்லாம் தொழிலாளரை வாட்டுகின்றது, அந்த ஊர் மக்களை வதைக்கின்றனர் என்பதே உண்மை. அதற்காக பிரித்தானியாவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்யமாட்டேன் என்று அடம்பிடிக்க முடியுமா?
மேற்கு நாடுகள் அனைத்துமே முதலாளித்துவ சுரண்டலை மேற்கொள்கின்ற நாடுகளே. எனக்கு முதலாளியாக வேண்டும் என்று சின்னச் சின்ன ஆசைகள் இருந்தது, இங்கு வந்தேன். ஆனால் இலங்கையில் ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழ் மக்கள் எதற்காக முதலாளித்துவ நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர். மக்கள் சரி படையெடுக்கட்டும். நம்மடை கீபோர் மார்க்ஸிஸ்டுக்கள் மன்னிக்கவும் டொட் கொம் மார்க்ஸிஸ்ட்டுக்கள் ஏன் முதலாளித்துவ நாடுகளை நோக்கிப் படையெடுக்கின்றனர்.
நான் செய்யும் தொழில் hotel, உல்லாசப் பயணம் தொடர்பான தொழில். கடந்த 10 வருடங்களாக எனக்கு இந்தத் தொழில் மூலமாகத்தான் சில அமைச்சர்களின் நேரடித் தொடர்பு கிடைத்தது. சிறீலங்காவில் எனக்கு ஒரு சதம்கூட மூலதனமும் இல்லை, ஒரு சதம் நயமும் இல்லை. நான் எனது அரசியல் நம்பிக்கைகளையும், பொது வேலையையும், தொழிலையும் ஒன்றாகக் கலப்பதில்லை. நீங்கள் உங்களது அனுபவத்தையும் புத்தியையும் மட்டுமே அடிப்படையாக வைத்துக்கொண்டு சேறடிப்பது உங்களுடைய இயலாமையைத்தான் காட்டுகின்றது.
இந்த கம்மியூனிச பலஸ்தீன அடக்குமுறை கதையெல்லாம் அங்கு போய்ப் பார்த்தால் நீங்கள் பேசமாட்டீர்கள். அறியான்மையில் பெரிதுபடுத்திக் கதைப்பதில் பிரயோசனம் இல்லை. சீனாவின் கிராமப் புறங்கள் எல்லாம் சென்று வந்திருக்கிறேன். சீன கம்மியூனிசத்தைப் பற்றி நான் யாரிடமும் கதை கேட்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் பாலஸ்தீன மக்களின் எதிரி இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல அல்ல, ஏனைய முஸ்லிம் அரபு நாடுகளும்தான்.
கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சோசலித்திற்கும் முதலாளித்துவத்திற்கும் வின்சன்ட் சர்ச்சில் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு வீதம் சரி. ‘‘முதலாளித்துவத்தில் தீமை என்னவென்றால் செல்வங்களை சரியாக பங்கிட்டு கொள்ளாதது. சோசலிசத்தின் நன்மை என்னவென்றால் கஷ்ட துன்பங்களை சரியாக பங்கிடுவது.’’
எங்களுடைய மனத்திருப்திக்கு பிடித்தவற்றை, தத்துவங்களை வாரி வழங்கலாம். ஆனால் யதார்த்தம் என்று ஒன்றிருக்கின்றது. அதை புரியாத போதும், ஏற்றுக்கொள்ள முடியாதபோதும் தான் காழ்ப்புணர்வு மேலோங்குகிறது.
பின்னோட்டம் விட்ட பல பேரும் நண்பர் பாண்டியனும் நான் சிறீலங்காவில் கலந்துகொண்ட மகாநாடுகளைப் பற்றி பல கொன்ஸ்பிரசி தியரிகளை கூறுகிறார்கள். சென்ற வருடம் மார்ச் 9ல் நடந்த மகாநாட்டிற்கு திருமதி ராஜேஸ்பாலா லண்டனில் இருந்து ஆட்களை சேர்த்தார். அதன்படி என்னையும் வருமாறு கேட்டதால் இணைந்து கொண்டேன்.
இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற மகாநாட்டிற்கு கலந்து கொள்ள விருப்பமானவர்கள் என்னை அல்லது டாக்டர் நடேசனை தொடர்புகொள்ளும்படி எமது முழு தொடர்பிலக்கங்களுடன் கட்டுரை வெளியிடப்பட்டது. இக்கட்டுரைகள் இன்றும் ‘தேனீ’, ‘Sri Lanka Guardian’, ‘Daily Mirror’ இணைய ஊடகங்களில் இருக்கின்றது. ஒருவர்கூட என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதுபற்றி விசாரிக்கக்கூட இல்லை. உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது ‘இவர்கள் யார்?’, ‘இவர்கள் எப்படித் தெரிவு செய்யப்படுகிறார்கள்?’, ‘இவர்கள் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்?’, ‘இவர்கள் பணம் கொடுத்து முக்கியத்துவம் பெறுகிறார்கள்’ என்று கூறுவது உங்கள் அற்பத்தனத்தையும் இயலான்மையையும் கூட படம் இட்டுக் காட்டுகிறது. மீண்டும் அடித்துச் சொல்கிறேன் இங்கு சுத்துமாத்து ஒன்றும் இல்லை. உங்களுடைய இயலான்மையையும் சோம்பேறித் தனத்தையும் தவிர வேறென்ன.
அடுத்து நான் இந்து மதத்தைப் பற்றி எழுதிய குறிப்பு பலரை ஆத்திரப்படுத்தி இருப்பதை நன்குணர்வேன். சில வேளைகளில் சில உண்மைகள் கசப்பாக இருந்தாலும் அதை சொல்லித்தான் ஆக வேண்டும். மதங்கள் அனைத்தும் மக்களின் மூட நம்பிக்கைகளையும், பயத்தையும், பலவீனங்களையும் மூலதனமாகக் கொண்டு கட்டப்பட்ட விடயம்தான். இதில் சந்தேகம் இல்லை. இந்து மதம் குறிப்பிட்ட பிரதேசத்தின் கலை, கலாச்சாரம், பழக்க வழக்கங்களை மெருகூட்டி வளர்த்தது எல்லாம் உண்மைதான். அதேநேரம் இந்து மதத்தில் புரையோடிக் கிடந்த பல விடயங்கள்தான் ஏனைய மதங்கள் வளர உரமிட்டன என்ற வாதத்தையும் மறுக்க முடியாது. நிர்வாகத்திலும் புதிய அம்சங்களை உள்வாங்குவதிலும் கிறிஸ்தவமதம் ஒருபடி முன்நிற்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
கத்தோலிக்க மதமாக இருந்தால் என்ன அல்லது சக கிறிஸ்தவ அமைப்புக்களாக இருந்தால் என்ன (மெத்தடிஸ்ட், Church of England, Evangelical, Sevenday Appostits, Jevokah witness), அவ் அமைப்புக்களிடம் ஒரு பலமான கட்டுமானத் திட்டம் இருக்கின்றது. அடிப்படை வரையறைகள் இருக்கின்றன. யார் என்ன செய்யலாம் என்ற அடிப்படை உடன்பாடு இருக்கின்றது. அதுதான் இந்த மதங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
சிக்காக்கோ தொடக்கம் சாவகச்சேரி வரை உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் பதியப்பட்டு அதில் எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை பேர் பூஜைப்பலியில் பங்கு கொள்கிறார்கள் என பதியப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு தனிப்பட்டவர் எந்தவொரு கிறிஸ்தவ ஆலயத்தையும் தொடக்கவும் முடியாது. அவ்வாறு தொடர்ந்தால் அது நிலைக்கவும் முடியாது. அவ் அமைப்பின் கட்டுமானம் அப்படி. அது மட்டுமல்லாமல் ஆலயத்தின் பெயரால் சேர்க்கப்படுகின்ற பணம் முழுவதும் மீண்டும் அமைப்புக்குள் உள்வாங்கி பின்னர் அதன் பெரும்பகுதி சமூகத்திற்கு அல்லது குறிப்பிட்ட மதத்தைப் பரப்புவதற்கு உபயோகிக்கப்படுகிறது. இந்த விடயங்கள் உணரப்படாமல் அவன் கள்வன், இவன் கள்வன், போப் ஒரு நாஜி, வண பிதா ஜேம்ஸ் பக்திநாதர் ஒரு புலி என கதை அளப்பது இயலாமையின் வெளிப்பாடும், காழ்ப்புணர்ச்சியின் உச்சக் கட்டமும் தவிர வேறொன்றும் இல்லை.
சரி இப்படியெல்லாம் feel பண்ணுபவர்கள் இந்துமத வளர்ச்சிக்கு என்ன வேலையை ஆணித்தரமாக செய்துள்ளனர் அல்லது செய்து கொண்டிருக்கின்றனர்? ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் நாங்கள் எல்லோரும் பட்டம் விட்டோம்’ என்ற கதையெல்லாம் ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில்…..’ என்ற கூட்டணி சென்ரிமென்டைவிட வேடிக்கையானது. குறைவான வாடகைக்கு பலகாலம் மூடிக்கிடந்த தவறனையை (Pub), பலசரக்குக் கடையை வாங்கி அதை ஏதோவொரு ஆலயம் என்று பெயரிட்டு வருடாவருடம் இந்தியாவிலிருந்து சுகிசிவத்தை வரவழைத்து அவருடைய அலம்பலை குந்தியிருந்து கேட்டுவிட்டுப் போவதால் மட்டும் மதம் வளர்ந்து விடாது.
கிறிஸ்தவம் உட்பட மதங்கள் அனைத்தும் ஒரு பேய்க்காட்டு மாய வித்தைதான். அது அழியவும் மாட்டாது. அழிக்கப்படவும் முடியாது. ஆனால் இந்த மத நிறுவனங்கள் எவ்வாறு சமூகத்திற்கு அதிக பலனைக் கொடுக்கும் என்பதிலேயே கவனம் செலுத்தப்படல் வேண்டுமே தவிர, வேறொன்றும் பயனைத் தராது.
சிலருக்கு தண்ணி அடிப்பதில் ஒரு சந்தோசம், ஒரு மனநிறைவு! சிலருக்கு மார்க்சிசம் கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி! இன்னும் சிலருக்கு தண்ணி அடித்து மார்க்சிசம் கதைப்பதில் பரமதிருப்தி! ஆனால் பலருக்கோ கோயில் சென்று தரிசிப்பதில் உள மகிழ்ச்சி, நிறைவு. இருந்துவிட்டு போகட்டும் பிரச்சினையில்லை. மனிதம் என்றாலே பலவீனம்தானே. இதில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?
300 வருடங்களுக்கு முன் பாதிரி வந்து எங்களை சுத்திப் போட்டார்கள் என்ற வாதத்தில் உண்மை இருக்கலாம். அதே கதையை இப்போதும் அளப்பது கிறிஸ்தவ மதங்களின் கெட்டித்தனத்தை காட்டுவதைவிட மற்றைய மதங்களின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. இந்து மதத்தினர் எல்லாம் சரியான ‘இனசன்ட்’ என்று ஜோக் அடித்துவிட வேண்டாம்.
300 வருடத்திற்கு முன் போவானேன். இன்று லண்டனிலுள்ள இந்து ஆலயங்கள் என்ன செய்கின்றது. ‘உயர்வாசக் குன்று’ என்று அழகாக அழைக்கப்படும் ஆச்சுவே முருகன் ஆலயம் ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடைகளை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளது. நாகபூசனி அம்மன் ஆலயம் புலிகளின் வருமானத்திற்காகக் கட்டப்பட்டது. . ரூட்டிங் சீவரத்தினம் ஐயாவின் முத்துமாரி அம்மன் ஆலயம் புலிகளை வளர்ப்பதாக என்று கூறிக்கொண்டாலும் சீவரத்தினம் ஐயா தன்னையும் சேர்த்து வளர்த்துக் கொண்டார். இல்பேர்ட் தூள் விநாயகர் சொல்லவே வெண்டாம். இலண்டனில் உள்ள ஆலயங்களின் வருமானத்தில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயக மக்களுக்காக பல்வேறு பணிகளை முன்னெடுக்கின்றது. ஏனையவை தங்கள் வருமானத்தில் எத்தனை சதவீத வீதத்தை திரும்பவும் அந்த மக்களின் நலனுக்காக செலவிடுகின்றன.
கிறீஸ்தவ மதம் ஒன்றும் புனிதமான மதம் கிடையாது. அவர்களும் ஆயுதக் கொம்பனிகளில் முதலீட்டை வைத்துள்ளனர். இங்கு நான் எந்த மதத்திற்கும் நற்சான்றிதழ் வழங்க கட்டுரை எழுதவில்லை. கிறிஸ்தவ மதம் கள்வர் காடையரின் மதம் என்பதுபோல் பின்னூட்டம் விட்ட நண்பர்களின் கருத்தை கவனத்தில் எடுத்தால் என் மனைவி பத்தினிதான் ஆனால் சூனியக்காரன்தான் வசியம் செய்துபோட்டான் என்ற மடமையான கருத்துக்கு ஒப்பானது. அதனையே இங்கு சுட்டிக்காட்டினேன்.