24

24

வெம்பிளியில் இளைஞர்களின் குழு மோதல்!! ஐவருக்கு மார்ச் 24ல் தண்டனை!!!

Lancelot_Roadதமிழ் இளைஞர் குழுக்களிடையே வெம்பிளியில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட ஐவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு உள்ளனர். மார்ச் 1இல் ஓல்ட்பெயிலியில் இவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை மார்ச் 24ல் வழங்கப்பட இருக்கின்றது.

2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற இளைஞர் குழுக்களிடையேயான மோதல் தொடர்பாகவே இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஹரோ குழுவினர் சவுத் ஹரோ பார்க்கில் ஜக் டானியல் அருந்திக் கொண்டு இருந்துவிட்டு ஈலிங் றோட்டில் உள்ள பாம் பீச் ரெஸ்ரோரன்ருக்கு சென்றுள்ளனர்.

வழியில் லான்ஸ்லொட் வீதியில் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முறுகல் உருவானது. ஹரோ குழுவினர் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவினரை கொல்லப் போவதாகப் பயமுறுத்தினர். அருகில் இருந்த கார் தரிப்பு நிலையத்திலிருந்து டிஎம்எக்ஸ் குழுவினரது எண்ணிக்கை பெருத்தது. இது அருகில் உள்ள சிசிரிவியில் பதிவாகி உள்ளது. இது நீதிமன்றில் யூரிகளுக்கும் காண்பிக்கப்பட்டது.

இம்மோதலில் வாகீசன் பரமலிங்கத்தின் தாடை உடைக்கப்பட்டதுடன் முகத்திலும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். 

அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள்:

ஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் : ஐங்கரன் ஆயுதம் (இரும்புக் குற்றி) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

அருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : அருள்முருகன் செபமாலை ஆயுதம் (கிரிக்கட்பற்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் திட்டமிட்ட நோக்குடன் உடற்காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் குற்றவாவாளியாகக் காணப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சிக் குற்றச்சாட்டில் இருந்து அருள்முருகன் தவிர்க்கப்பட்டார்.
 
பார்த்தீபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் : பார்தீபன் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் (போத்தல்) வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

வாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : வாகீசன் ஆயுதம் (பிக்காஸ்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

மதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : ஆயுதம் (கூரிய ஆயுதம் கத்தி) வைத்திருந்ததற்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். மதுசூதன் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவர்களுடன் கென்ரனைச் சேர்ந்த அஜித்குமார் தர்மராஜா (26) இவரின் தந்தை கந்தையா தர்மராஜா (48) இருவர் மீதும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அஜித்குமார் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். சம்பவத்தின் போது அவ்விடத்தில் நின்ற அஜித்குமாரும் தந்தையும் அங்கு உருவான பதட்டத்தை தணிக்க முயன்றமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு அவர்களுடைய குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் -04 : சிறுபான்மையினரின் அங்கத்துவம் அதிகரிப்பதனால் மாத்திரம் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. உணர்வுபூர்வமான பிரதிநிதித்துவம் தேவை. – புன்னியாமீன்

election_cast_ballots.jpgவிகிதாசார பிரதிநிதித்துவ முறையின் போனஸ் ஆசனமுறை, வெட்டுப்புள்ளி வாக்குகள் பெறாத கட்சிகளை போட்டியிலிருந்து நீக்குதல், தொடர்புடைய வாக்குகளைக் கணிப்பீடு செய்தல்,  முடிவான எண்ணைக் கணிப்பீடு செய்தல், முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல், பிரச்சினைக்குரிய ஆசனங்கள் இருப்பின் மிகப் பெரும் பகுதி மிகுதி முறைக்கமைய ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல் ஆகிய தலைப்புக்களை கடந்தவாரம் நோக்கினோம்.

மேற்படி ஆறு படிமுறைக்கு அமையவே இலங்கையிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 196 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர்.
தேசியபட்டியல் மூலம் மீதான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல்;
இலங்கைப் பாராளுமன்றத்தின் மொத்தப் பிரதிநிதிகள் எண்ணிக்கை 225 ஆகும்.  இதில் 196 பிரதிநிதிகள் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் மீதான 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் மூலமாகவும் தெரிவு செய்யப்படுவர்.

தேசிய பட்டியல் என்றால் என்ன?

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றப் பொதுத் தேர்தலொன்றுக்கு நியமனப் பத்திரம் கோரப்படும்போது 29 பெயர்களைக் கொண்ட பட்டியலொன்றினையும் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையாளர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் கேட்டுக் கொள்வார். இப்பட்டியல் தரப்படுத்தப்பட்டதாக அமைதல் வேண்டும்.

ஒரு அரசியல் கட்சி எத்தனை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டாலும்கூட 29 பெயர்களைக் கொண்ட ஒரு பட்டியலை மாத்திரமே தாக்கல் செய்ய முடியும். இப்பட்டியலே தேசியப்பட்டியல் எனப்படுகிறது. சுயேட்சைக்குழுக்கள் (விரும்பின்) இப் பட்டியலை தாக்கல் செய்யலாம்.

பொதுத் தேர்தலின் முடிவில் போட்டியிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும்,  தனித்தனி சுயேட்சைக் குழுக்களும் தேசிய ரீதியில் பெற்றுக்கொண்ட வாக்கு விகிதாசாரத்துக்கமைய தேசிய பட்டியல் பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்படும்.

எமது தெளிவிற்காக 2000 ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகளை உதாரணமாகக் கொண்டு இதனை ஆராய்வோம்.
2000ம் ஆண்டு பொதுத் தேர்தலில்:

தெரிவாக வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கை : 225
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்    : 12,071,062
அளிக்கப்பட்ட வாக்குகள்    : 9,128,832 (75.62%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    : 481,155
செல்லுபடியான வாக்குகள்    : 8,647,668

மேற்படி பொதுத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 29 அரசியல் கட்சிகளும் 99 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. இவற்றுள் அகில இலங்கை ரீதியில் ஒரு இலட்சத்துக்கு (1,00000) அதிகமான வாக்குகளைப் பெற்ற கட்சிகளை நோக்குவோம்.

பொதுசன ஐக்கிய முன்னணி  3,900,901 (45.10%)
ஐக்கிய தேசிய கட்சி   3,477,770 (40.21%)
மக்கள் விடுதலை முன்னணி  518,774 (5.99%)
தேசிய ஐக்கிய முன்னணி  197,983 (2.28 %)
சிஹல உறுமய   127,863 (1.47 %)
தமிழர் விடுதலைக் கூட்டணி  106,033  (1.22 %)

ஏனையவை அனைத்தும் 1,00000க்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றன.

தேசிய பட்டிலுக்கான குறைந்த பட்ச வாக்குகளைக் கணித்தல்

தேசிய ரீதியில் செல்லுபடியான மொத்த வாக்குகளை 29ஆல் வகுக்கும்போது தேசியபட்டியலுக்கான குறைந்தபட்ச வாக்குகளைக் கண்டுகொள்ள முடியும்.

2000ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலுக்கான குறைந்தபட்ச வாக்கு = 8,647,668 / 29
= 298,195
ஆகும்.

இந்த வாக்கினை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழு பெற்றிருப்பின் தேசிய பட்டியல் பிரதிநிதியொருவரைப் பெற உரித்தாகின்றது.

இனி கட்சிகளுக்கு தேசிய பட்டியலை ஒதுக்கீடு செய்யும்போது அகில இலங்கை ரீதியில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் தேசியப் பட்டியலுக்குரிய குறைந்தபட்ச வாக்கினால் வகுக்கப்படும். முதலில் முழுமையான எண்ணுக்கமைய ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் ஆசனம் தேவையெனின் மிகப்பெரும் மிகுதி முறைக்கமைய பகிரப்படும்.

பொதுசன ஐக்கிய முன்னணி பெற்ற மொத்த வாக்குகள் 3,900,901 ஆகும். இதனை 298,195 ஆல் வகுக்கும்போது ‘13’ உம் மிகுதியாக 24366 வாக்குகளும் வரும். எனவே முழுமையான எண்ணுக்கமைய பொதுசன ஐக்கிய முன்னணி 13 தேசியப்பட்டியல் உறுப்பினர்களைப் பெற உரித்துடையது.

அடுத்து இரண்டாவது அதிகப்படியுமான வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க. 11 தேசியப்பட்டியல் உறுப்பினர்களைப் பெற உரித்துடையது.
மூன்றாவது இடத்தைப் பெற்ற கட்சி மக்கள் விடுதலை முன்னணியாகும். இக்கட்சி பெற்ற மொத்த வாக்குகளான 518,774 ஐ 298,195 ஆல் வாக்கினால் வகுக்கும்போது ‘1’ உம் மிகுதியாக 220579 வாக்குகளும் வரும். எனவே முழுமையான எண்ணுக்கமைய மக்கள் விடுதலை முன்னணி ஒரு தேசியல்பட்டியல் உறுப்பிரைப் பெற்றுக்கொள்ள உரித்துடையது.

2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மேற்படி 3 கட்சிகளையும் தவிர வேறு எந்தவிதமான அரசியல் கட்சிகளோ அல்லது சுயேட்சைக்குழுக்களோ தேசியபட்டிலுக்குரிய குறைந்த பட்ச வாக்கினைவிட அதிகமாகப் பெறவில்லை.

ஆகவே இங்கும் மிகப் பெரும் மிகுதி முறையைப் பயன்படுத்த வேண்டும்.

முழுமையான எண்களுக்கமைய பொ.ஐ.மு. 13 உறுப்பினர்களையும்,  ஐ.தே.க. 11 உறுப்பினர்களையும், ம.வி.மு 1 உறுப்பினர்களையுமாக மொத்தம் 25 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டன. மேலும் 4 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாக்கப்படல் வேண்டும். எனவே மிகப்பெரும் மிகுதிக்கமைய பின்வரும் அந்த 4 உறுப்பினர்களும் தீர்மானிக்கப்படுவர்.

பொ.ஐ.மு. மீதி – 24,366
ஐ.தே.க.  – 197,625
ம.வி.மு.   – 220,579
தே.ஐ.மு. பெற்ற வாக்குகள்- 197,983
சிஹல உருமய – 127,863

இதன்படி ஆகக் கூடுதலான மிகுதியைப் பெற்றுள்ள ம.வி.முன்னணி ஒரு பிரதிநிதியையும்,  2வது மிகுதியைப் பெற்றுள்ள தே.ஐ.முன்னணி ஒரு பிரதிநிதியையும்,  3 வது மிகுதியைப் பெற்றுள்ள ஐ.தே.கட்சி ஒரு பிரதிநிதியையும், 4 வது மிகுதியைப் பெற்றுள்ள சிஹல உருமய ஒரு பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும்.

பொ.ஐ.மு முழுமையான எண்ணுக்கமைய 13 தேசியப்பட்டியல் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளும். மிகப்பெரும் மிகுதிக்கமைய பிரதிநிதிகளைப் பெற முடியாது. ஆகவே பொ.ஐ.மு மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 13 ஆகும்.       

ஐ.தே.க முழுமையான எண்ணுக்கமைய 11 தேசியப்பட்டியல் பிரதிநிதிகளையும் மி கப்பெரும் மிகுதிக்கமைய 1 பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும். ஆகவே ஐ.தே.க மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 11+1 = 12 ஆகும்.

ம.வி.மு  முழுமையான எண்ணுக்கமைய 1 தேசியப்பட்டியல் பிரதிநிதியையும் மி கப்பெரும் மிகுதிக்கமைய 1 பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும். ஆகவே ம.வி.மு மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 1+1 = 2 ஆகும்.

தே.ஐ.மு,  சிஹல உருமய ஆகியன மிகப் பெரும் மிகுதி முறைக்கமைய ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். இந்த அடிப்படையில் தேசியப்பட்டியல் 29 பிரதிநிதிகளும் பகிரப்படுவர்.

தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு வெட்டுப்புள்ளி வாக்குகள் 5% பாதிப்பைச் செலுத்த முடியாது.

2000ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் முடிவினூடாக நோக்குமிடத்து சிறிய கட்சிகளான ம.வி.முன்னணி 2 உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளவும்,  தே.ஐ.மு. 1 உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளவும்,  மாவட்ட ரீதியில் போட்டியிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தோல்வியடைந்த சிஹல உருமய ஒரு உறுப்பினரையாவது பெற்றுக் கொள்ளவும் தேசியப்பட்டியல் துணை புரிந்துள்ளது. அதே நேரததில் பிரதான கட்சிகளும்,  தேசியப்பட்டியல் மூலமாக சிறுபான்மையினருக்கு இடம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாககப்படுகின்றது.

2000 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலை அடுத்து பொது ஜன ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் மூலமாக லக்ஸ்மன் கதிர்காமர்,  அலவி மௌலானா,  யூ.எல்.எம் ஹனீபா,  மாரிமுத்து, ரிஸ்வி சின்னலெப்பை,  ஆகிய சிறுபான்மைப் பிரதிநிதிகளும்,  ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் மூலமாக ஏ.எச்.எம் அஸ்வர்,  எம்.எஸ்.செல்லச்சாமி,  அப்துல் மஜீட், பி.பி. தேவராஜ்,  கனகராஜா போன்ற சிறுபான்மைப் பிரதிநிதிகளும்,  மக்கள் விடுதலை முன்னணி மூலமாக அன்ஜாத் உம்மா (இலங்கையிலே முதலாவது முஸ்லிம் பெண் பாராளுமன்றப் பிரதிநிதி) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டமை தேசியப்பட்டியல் சிறுபான்மையினருக்கு வாய்ப்பானதொன்று நிராகரித்து விட முடியாதுள்ளது.

குறிப்பாக விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தனியொரு கட்சிக்கு தனது பெரும்பான்மையினை பெற்றுக் கொள்வது கடினமான நிலை காணப்பட்டமையினால் சிறிய கட்சிகள் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்தே பிரதான கட்சிகள் அரசாங்கத்தை அமையக்கக்கூடிய நிலை ஏற்பட்டன. இதனால் அக்கட்சிகளை திருப்திப்படுத்திக் கொள்ள தேசியபட்டியலினூடாக பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பிரதான கட்சிகள் தள்ளப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட நிலையின் கீழ் தேசியபட்டியலினூடாக சில சிறுபான்மைத்துவம் இடம்பெற்றாலும்கூட, அப் பிரதிநிதித்துவங்கள் தமது இனத்துக்காக அல்லது இனத்தின் உரிமைக்காக எத்தகைய பங்களிப்பினை ஆற்றியன என்பது கேள்விக்குறியே.

குறிப்பாக இலங்கையில் காணப்படக்கூடிய விகிதாசார முறைக்கமைய பாராளுமன்றத்தில் சிறுபான்மை அங்கத்துவம் அதிகரித்துக் காணப்பட்டது என்பது ஏதோ உண்மைதான். ஆனால்,  சிறுபான்மையினரின் உரிமையைப் பெற்றுக்கொள்ள பாராளுமன்றத்தில் அங்கத்துவர் எண்ணிக்கையால் மாத்திரம் உறுதிப்படுத்தப்படுவதில்லை என்பதை கடந்த கால அனுபவங்களினூடாக எம்மால் காணமுடிந்தது. எனவே, பாராளுமன்றத்தில் சிறுபான்மை அங்கத்தவர் என்பதை விட, உணர்வுபூர்வமான செயல்திறன்மிக்க அங்கத்துவமே தேவைப்படுகின்றது.

கட்சிகளால் தேர்தல் காலத்தில் தாக்கல் செய்யப்படக்கூடிய பட்டியலுக்கமையவே தேர்தல் ஆணையாளரினால் தேசியபட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டாலும் கூட, இலங்கையில் தேர்தல் சட்ட மூலத்தின் கீழ் கட்சிகளின் செயலாளரினால் சிபாரிசு பண்ணக்கூடிய பிரதிநிதியையும் தேர்தல் ஆணையாளரினால் தேசியபட்டியலினூடாக நியமனம் வழங்கலாம். எனவே,  பட்டியல் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட, பட்டியலில் உள்ளவர்கள் மாத்திரமே பிரதிநிதித்துவத்தைப் பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது.

(முற்றும்)

பங்களாதேஷ் இராணுவ உயர் அதிகாரிகள் குழு இலங்கை வருகை

bd.jpgபங்களா தேஷ் இராணுவத்தின் எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழு இலங்கை வந்துள்ளது. இந்த உயர் மட்டக் குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு இராணுவங்களுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இலங்கை இராணுவம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நிலையில் இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. பங்களாதேஷைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முஹம்மட் இஹ்திஸாம் உல் ஹக் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக் ஆகியோர் வன்னி இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் முடிவில் பங்களாதேஷ் இராணுவ குழுவினர் இலங்கை இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினர். இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரும் கலந்துகொண்டார். இராணுவத் தளபதியுடனான சந்திப்பை அடுத்து இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தியத்தலாவ இராணுவ அகடமி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு மற்றும் வன்னி பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

மேஜர் ஜெனரல் இஹ்திஸாம் உல் ஹக், மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக், பிரிகேடி யர் ஜெனரல் ரித்வான் அல் மஹ் மூத், லெப்டினன்ட் கேர்ணல் முஹ ம்மத் அஸதுல்லாஹ் மின்ஹாசுல் அலம், லெப்டினன்ட் கேர்ணல் எம். தெளபீக்குல் ஹஸன் சித்தீக், மேஜர் ஏ. எஸ். எம். பஹவுத்தீன், மேஜர் எம். டி. நஸ்ருல் இஸ்லாம் கான் மற்றும் மேஜர் சகாவத் ஹொஸைன் செளத்ரி ஆகியோரே இலங்கை வந்துள்ளனர்.

விசாரணையின்றி சிறைகளில் இருந்தோரில் 461 பேர் விடுதலை – மேலும் 200 பேரை விடுவிக்க நடவடிக்கை

நீண்டகாலமாக வழக்குகள் விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட் டிருந்தவர்களுள் இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார். சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணைகளை அடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை விடுவிப்பது தொடர்பில் பதினொரு சட்டத்தரணி களை விசேடமாக நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைதிகளின் கோவைகள் தனித்தனியே ஆராயப்பட்டு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 200 பேரின் கோவைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் இவர்களுள் வழக்குகள் பதிவு செய்ய அவசிய மில்லாதவர்கள் விடுவிக்கப்படுவார் களென்றும் முன்னாள் பிரதியமைச்சர் கூறினார்.

எம். ரி.வி./ எம்.பீ.சி. அலுவலகம் மீது தாக்குதல்; பணியாளர்கள் சிலர் காயம்

கொழும்பு, ப்ரேப்ரூக் பிளேஸிலுள்ள எம்.ரி.வி./எம்.பீ.சி. அலுவலகம் திங்கட்கிழமை பட்டப்பகலில் இனந்தெரியாத கும்பலொன்றினால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்தில் அந்த ஊடக நிறுவனத்தின் பணியாளர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

திங்கட்கிழமை  பிற்பகல் 3.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக எம்.பீ.சி. எவ்.எம். முகாமையாளரான சுரங்க சேனாநாயக்க தெரிவித்தார்.பஸ்ஸொன்றிலும் முச்சக்கர வண்டியொன்றிலும் வந்தவர்களினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவகமும் எம்.ரி.வி./எம்.பீ.சி. ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுமே கொழும்பு, ப்ரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ளது. மாலை 3.45 மணியளவில் பஸ்ஸொன்றிலும் முச்சக்கர வண்டியிலும் வந்த கும்பலொன்று அந்த நிறுவனக் கட்டிடத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டு திடீரென கற்கள், போத்தல்கள், பொள்ளுகள் போன்றவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தி பிரதான நுழைவாயிலூடாக உள்ளே நுழைய முற்பட்டுள்ளனர்.

இந்த குண்டர்குழு நடத்திய தாக்குதலில் மஹாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவலகம், எம்.ரி.வி./எம்.பீ.சி. ஊடக நிறுவன செய்திப் பிரிவு இணைந்திருக்கும் கட்டிடத்திற்கும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதேநேரம், குண்டர் குழு தாக்குதல் நடத்தும் சத்தம் கேட்டதுமே அருகிலுள்ள அனைத்து பொலிஸ் நிறுவனங்களுக்கும் அறிவித்தும் பொலிஸார் எவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லையென சுரங்க சேனாநாயக்க கூறினார். குண்டர்கள் நடத்திய தாக்குதலில் கட்டிடத்திற்கும் வாகனங்களுக்கும் மட்டுமல்லாது பாதுகாப்பு கமராக்கள் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அறிவித்தும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வராததால், சம்பவத்தின் பாரதூரத்தை உணர்ந்தும் தற்காப்பின் பொருட்டும் எம்.ரி.வி./எம்.பீ.சி. நிறுவன பணியாளர்களும் பாதுகாப்பு ஊழியர்களும் குண்டர் குழுவினர் மீது திருப்பித் தாக்குதல் நடத்தியதாகவும் சுரங்க சேனாநாயக்க கூறினார்.

குண்டர்கள் தாக்குதல் நடத்திய கற்கள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தியே பதில் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் குண்டர்கள் பின்வாங்கிவிட்டதாகவும் கூறிய எவ்.எம். முகாமையாளர் சேனாநாயக்க, அதன் பின்னரே பொலிஸார் அங்கு வந்ததாகவும் தெரிவித்தார். குண்டர்கள் நடத்திய தாக்குதலில் தங்களது நிறுவனப் பணியாளர்கள் சிலர் காயமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் எம்.ரி.வி/எம்.பீ.சி. ஊகட நிறுவன பணிகளுக்கு எந்தத் தடங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டதுடன், சம்பவத்தை அடுத்து அந்த நிறுவனத்தை சுற்றி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.