30

30

அரசியல் யாப்பை அரசு முழுமையாக திருத்தாது- அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவிப்பு

patalee_champica_ranawake.jpgஅரசியல் யாப்பை அரசாங்கம் முழுமையாக திருத்தம் செய்யாது. மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மட்டுமே திருத்தப்படும். வெளிநாட்டு அழுத்தம் காரணமாக அரசாங்கம் யாப்பை முழுமையாக திருத்தப்போவதாகவும் இதனால் நாட்டில் குழப்பம் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை முழுயாக நிராகரிப்பதாக அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் (28) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, மக்களின் இரண்டில் மூன்று பெரும்பான்மை பலத்தைப் பெற்று இந்த அரசியல் யாப்பை திருத்த அரசாங்கம் தீர்மானத்துள்ளது. அரசியல் யாப்பில் எந்தெந்த பகுதிகள் திருத்தப்படும் என அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது. யாப்பில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அந்தப் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும்.

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடிய பதவியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்துள்ளோம். அமைச்சுக்களின் ஆலோசனை சபை முறையை மாற்றவும் பாராளுமன்றத்தை பலப்படுத்தவும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களை பலப்படுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவை எவ்வாறு மாற்றப்படும் என விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரதேச சபைகளின் எல்லைகளை மாற்றி கூடுதல் அதிகாரம் வழங்கவும் சகல கிராம சேவகர் பிரிவிலும் ஜனசபாக்களை அமைக்கவும் தொகுதிவாரி முறையையும் விகிதாசார முறையையும் இணைத்து கலப்பு முறையொன்றை அறிமுகப்படுத்தவும் உள்ளோம். 17 வது திருத்தத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அதனை திருத்தி ஒழுங்கான முறையாக மாற்றப்படும்.

யாப்பிலுள்ள சில பகுதிகளை சிறிய பெரும்பான்மை பலத்துடன் மாற்றலாம். சில பகுதிகளை இரண்டில் மூன்று  பலத்துடனும் சர்வஜன வாக்குடனும் மாற்ற வேண்டும். யாப்பை முழுமையாக திருத்தும் தேவை அரசுக்கு இல்லை. 1978 ஆம் ஆண்டில் போன்று யாராலும் முழுமையாக யாப்பை திருத்த முடியாது. பிரதான கட்சிகள் யாவும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. அவை வெறும் தேவதைக் கதைகளாகவே உள்ளன.

உலக நாடுகளில் லிபரல் பொருளாதார கொள்கைகள் அழிந்து விட்டன. ஜப்பான் முதல் அமெரிக்காவரை இன்று மஹிந்த சிந்தனையில் உள்ளவாறு உள்நாட்டு பொருளாதார முறைகளை பின்பற்றுகின்றன. உலக நாடுகள் கைவிட்ட லிபரர் பொருளாதார முறையை ரணில் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

மின்சாரத்துறையை அழித்த ரணில் சகலருக்கும் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இன்று 88 வீதமான மக்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. 3 வருடத்திற்குள் சகலருக்கும் மின்சாரம் வழங்கப்படும். கையடக்கத் தொலைபேசி பாவனை செய்வோர் தொகை 3 மில்லியனில் இருந்து 14 மில்லியனாக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அறிவு 30 ஆக அதிகரித்துள்ளதோடு 6 வருடத்தில் 60 வீதமாக உயர்த்தப்படும்.

1983 கலவரத்தை தூண்டி நாட்டை சீரழித்தது ஐ.தே.க. அரசாங்கமே. ஆனால் இன்று அந்தப் பொறுப்பை சகல சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் ஏற்க வேண்டும் என்று ரணில் கூறியுள்ளார். ஐ.தே.க. வின் தவறினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நாட்டு மக்கள் பொறுப்பல்ல.

யுத்தக் குற்றவாளிகள் மற்றும் சதிகாரர்களுக்கு எதிராக அரசாங்கம் அமுலில் உள்ள சட்டங்களின் படியே நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ.தே.க. ஆட்சிகளைப் போன்று வதை முகாம்களை அமைத்து எமது அரசு தண்டனை வழங்காது. புதிய பாராளுமன்றத்தில் தெரிவாகும் ஐ.தே.க. எம்.பிகளில் படித்தவர்கள் அரசியல் யாப்பை திருத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

president.jpgதேர்தல் பிரசார நட வடிக்கையில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக இறுதி நேரத்தில் தனது விஜயத்தை ஒத்திவைத்தார். வியாழனன்று யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவிருக்கின்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பங்குபற்றவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பான விவரம் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

“உதயன்’, “சுடர் ஒளி’ மீது வழக்குத் தாக்கல் செய்வாராம் டக்ளஸ்

boy.jpg“சாவகச்சேரி மாணவன் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை! நாட்டை விட்டு வெளியேறவும் தடை’  என்ற தலைப்பில் நேற்று “உதயன்’, “சுடர் ஒளி’ பத்திரிகைகளின் முதலாம் பக்கத்தில் வெளியான செய்திகளுக்காக அப்பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தாம் தீர்மானித்திருக்கின்றார் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார்.

“உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ பத்திரிகைச் செய்திகளுக்கு எதிராக நஷ்டஈடுகோரி வழக்குத் தாக்கல்’ என்ற பெயரில் அவரது அமைச்சின் கடிதத் தலைப்பில் அவரது ஊடகச் செயலாளர் ஒப்பமிட்டு நேற்றுக் காலை விடுத்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நேற்றைய திகதியிட்டு வெளியான அந்த அறிக்கையின் விவரம் வருமாறு: “உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் இன்றைய தலைப்புச் செய்தியானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது திட்டமிட்டு சுமத்தப் படும் ஒரு பொய்யான குற்றச்சாட்டாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும்  குறிப்பாகத் தேர்தல்களில்  இப்பத்திரிகைகள் தருணம் பார்த்துக் காத்திருந்து எங்கள் மீது சேறு பூசும் தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது என்றும் இதை நாங்கள் எம்மீது திட்டமிட்ட முறையில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தேர்தல் வன்முறையாகக் கருதவேண்டியுள்ளது என்றும் 
யாழ். தேர்தல் களத்தில் சிதைந்து போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினரான சம்பந்தன் குழுவின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சரவணபவன் என்பவருக்குச் சொந்தமான பத்திரிகைகள்தான் இந்த “உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ பத்திரிகைகள் என்றும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, இத்தகைய தேர்தல் வன்முறைக்கு எதிராக தாங்கள் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சுவரொட்டிகள் 5 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்படும் – 208 முறைப்பாடுகள்; 130 பேர் கைது

பொதுத் தேர்தல் தொடர்பாக ஒட்டப் பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணி தொடர்ந்தும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் சுவரொட்டிகள் சகலதும் அகற்றப்படும் என்று தெரிவித்த அவர், வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பல வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.  பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 208 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பெருந்தொகையானோர் கைது செய்யப்படுவதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு பொது மக்களினதும், ஆதரவாளர்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

யாழ்குடாவில் இராணுவம் நிர்மாணித்த 437 வீடுகள் புத்தாண்டுக்கு முன் கையளிப்பு

house.jpgயாழ்ப் பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்க ப்பட்டுள்ள 437 வீடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவின் வழிகாட்டலில் 680 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இவற்றில் 437 வீடுகளே முதற் கட்டமாக கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டத்திற்கு உதவியாகவே இராணுவம் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ், உதவி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இராணுவத்தின் 51வது 52வது, 55வது படைப் பிரிவுகளும் இராணுவத்தின் ஏழாவது செயலணியினரும் இந்த வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 437 வீடுகளை கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், எஞ்சியுள்ள வீடுகள் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

220 சதுர அடி கொண்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீட்டில் இரு அறைகள், ஒரு சமையலறை மற்றும் மலசல கூடமும் உள்ளடக்கப்படவுள்ளன. நிரந்தர வீடுகள் இல்லாத நிலையிலுள்ள இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு சட்டபூர்வமாக உள்ள சொந்த காணிகளிலேயே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

யாழ். அரசாங்க அதிபர் ஒவ்வொரு வீடுகளுக்கும் 12 கூரைத் தகடுகளை வழங்கியுள் ளதுடன் இந்த மக்களின் ஜீவனோபாயத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேற்படுத்த உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இதேவேளை, வடக்கிலுள்ள பாதுகாப்புப் படையினர் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பல்வேறு சமூக உதவித் திட்டங்களை நாளாந்தம் மேற்கொண்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட் டார்.

பிரதேச, நகர சபைகளை இணைத்து மாநகர சபையாக தரமுயர்த்த திட்டம்

களனி பிரதேச சபையையும், பேலியாகொடை நகர சபையையும் இணைத்து மாநகர சபையாக அமைக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமாக பரிசீலனை செய்து மேற்பார்வையை முன்மொழிவதற் காக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச். பீ. ஹேரத் குழுவொன்றை அமைத்துள்ளார். மாநகர சபையின் எல்லை விபரம், அதற்கு உட்படும் கிராம சேவகர் பிரிவுகள் உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவையும் முன் மொழியப்படும்.

இவ்விடயமாக பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள பிரஸ்தாப குழு தீர்மானித்துள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதி வரை இது பற்றிய கருத்துக்களையும் ஆலோச னைகளையும் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. சங்கங்கள், நிறுவனங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளன.

மழையினால் டெங்கு மீண்டும் தீவிரமடையுமென அச்சம்

டெங்கு நோயினால் இறப்போர் தொகை கடந்த 6 வார காலத்தில் பெருமளவு குறைந்துள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு கூறியது. மீண்டும் மழை ஆரம்பித்துள்ளதால் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் இதற்காக டெங்கு நோய் தடுப்பு செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

டெங்கு நோய் காரணமாக கடந்த 3 மாதத்தில் 63 பேர் இறந்ததோடு 10999 பேருக்கு நோய் தொற்றியிருந்தது. முதல் நான்கு வாரத்தில் டெங்கு நோயினால் 48 பேர் இறந்ததோடு கடைசி 6 வாரத்தில் 15 பேர் மட்டுமே இறந்துள்ளனர். டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மாற்றி புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து டெங்கு நோயினால் இறப்போர் தொகை பெரிதும் குறைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் டெங்கு நோயை தடுப்ப தற்காக சுகாதார அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, ஊடக அமைச்சு அடங்கலாக பல அமைச்சுக்கள் உள்ளடங்கிய செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக டெங்கு நோய் பரவு வதை தடுப்பது குறித்து பாடசாலை மாணவர்கள் உட்பட சகல மக்களையும் அறிவூட்டவும் டெங்கு பரவும் இடங்களை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க உள்ளது. டெங்கு அபாயம் அதிகமுள்ள 15 மாவட்டங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகள், மாகாண சபைகள் ஊடாக டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதோடு தமது சுற்றுச் சூழலில் டெங்கு பரவும் இடங்களை வைத்துள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை உள்ளதாகவும் அமைச்சு கூறியது. கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோண மலை ஆகிய மாவட்டங்களே கூடுதலாகப் பதிக்கப்பட்டுள்ளன.

‘அம்பாளின் 700 சுலோகங்களை பாராயணம் செய்தால் உயர் பதவிகள் கிட்டும், புத்திர சௌபாக்கியம் கிடைக்கும், பரீட்சையில் சித்தி கிட்டும், சீக்கிரம் விவாகம் நடந்தேறும்!!!’ என்பீல்ட் நாகபூசணி ஆலய நிர்வாகத்தின் ஜில்மால்

Kamalanatha_Kurukkalசில இந்து மத ஆலயங்கள் முற்றாக வருமானம் ஈட்டும் வியாபார நோக்கங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் தனி நபர்களாலும் குழுக்களாலும் வியாபார நோக்கங்களுக்காக ஆலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்கள் தனிநபர்களின் வர்த்தக நிறுவனங்கள் போன்றே செயற்படுகின்றன. அவற்றின் வருமானங்கள் தனிநபர்களையே சென்றடைகின்றது. ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயம் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் என்பன அரசியல் நோக்கங்களுக்கு வருமானத்தைப் பெறும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் அரசியல் பிளவுக்குள் சென்ற போது அதனை ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகம் ந சீவரட்ணம் கைப்பற்றுவதற்கு எடுத்த முயற்சி பலனளிக்கவல்லை. இது நீதிமன்றம் வரை சென்று ரூற்றிங் முத்தமாரி அம்மன் ஆலயத்திற்கு பல்லாயிரம் பவுண்கள் நஸ்டம் ஏற்பட்டது.

ஆலயங்கள் ஆன்மீகத்தையும் மனஅமைதிக்கான சூழலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பணத்தினைக் குறியாகக் கொண்டு செயற்படுகின்ற தன்மை பரவலாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகின்ற விடயம். பல்வேறு கஸ்டங்கள் மத்தியிலும் ஆலயம் செல்பவர்கள் இறைவனுடன் தங்கள் கஸ்டங்களைப் பகிர்ந்துகொண்டு மனநிறைவை வேண்டிச் செல்கின்றனர். ஆனால் ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்களும் நிர்வாகிகளும் மனுக் காட்டைக் கொடுத்து என்ன மீல் வேண்டும் என்பது போல அர்சனை விலைப் பட்டியலை வழங்கி செலவான அர்ச்சனைகளைச் செய்ய அடியார்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு தனது பிறந்ததினத்தன்று வழிபட்டுவிட்டு வரச் சென்ற பெண்ணுக்கு அர்ச்சகர் 30 பவுண்களுக்கு அர்ச்சனை செய்வதற்கு அழுத்தம் கொடுத்து மறுக்க முடியாமல் அப்பெண் 30 பவுண்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வந்துள்ளார். மிகுந்த கஸ்டத்தில் வாழ்கின்ற அப்பெண் அன்று ஆலயத்திற்குச் சென்றது அவருக்கு பெரும் பணச் செலவை ஏற்படுத்தி இருந்தது. அப்பெண் இதனை தனது நண்பிக்கு போன் எடுத்துக் குறைப்பட்டுள்ளார்.

அதே என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அர்ச்சகர்கள் தங்கள் ஆலயத்திற்கு வந்த வழிபட்டால் பல்வேறு நோய்கள் நீங்கும், மகப்பேறு கிடைக்கும், பரீட்சையில் சித்தியடையலாம் என்பது போன்ற அறிவிப்புக்களையும் விளம்பரங்களையும் மேற்கொண்டு வந்துள்ளனர். கீழே பெப்ரவரி 28 மாசி மகத் திருவிழா தொடர்பாக என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் வெளியிட்ட தூண்டுப் பிரசுரம் இவ்வாறு சொல்கின்றது:

Nagapoosani_Ad‘வட இலண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் துணைநிற்க மார்க்கண்டேய முனிவர்களால் அருளிச் செய்யப்பட்ட தேவி மகாத்மியம் என்னும் 700 சுலோகங்களை அம்பிகையின் திருவருள் வேண்டி யார் பாராயணம் செய்கிறார்களோ  அவர்களின் துன்பங்கள் நீங்கி, நோயற்ற வாழ்வும், ஐஸ்வரியமும், உயர் பதவிகளும் பெறவும், கிரக பீடைகள் நீங்கவும், புத்திர சௌபாக்கியமும், பரீட்சையில் சித்தி பெறவும், சீக்கிரம் விவாகம் நடந்தேறவும், கவலைகளும் கஸ்டங்களும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். எனவே அடியார்கள், என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் வேண்டி வெள்ளி தோறும் ஆலயத்திற்கு வருகை தந்து கீழ்காணும் சுலோகங்களை 9 தடவைகள் பாராயணம் செய்து பாலாபிசேகம் செய்து அர்ச்சனை வழிபாடு ஆற்றி நல்வாழ்வு வாழப் பிரார்த்திக்கின்றோம்.’

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் துண்டுப் பிரசுரம்

 இந்தப் பால் குடம் ஒன்றின் விலை 10 பவுண்கள். அர்ச்சனை வேறு விலைகளில் உள்ளது. பெரும்பாலும் ஆலயங்கள் எல்லாமே தாங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு உதவுகின்றோம் என்ற போர்வையிலேயே வழிபாடுகளை நடாத்துவதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த வழிபாடுகளால் ஈட்டப்படும் வருமானம் ஊருக்கு செலவு செய்யப்படும் விபரங்கள் பற்றிய வெளிப்படையான கணக்கு விபரங்களை ஆலயங்கள் வெளியிடுவதில்லை. அதனால் அவ்வாலயங்கள் பற்றிய நம்பகத் தனமை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

தவறான விளம்பரங்களைச் செய்து பலவீனமான நிலைப்பட்டவர்களிடம் பணம் பறிக்கின்ற விடயம் இந்துமதத்திற்கு மட்டுமான பிரச்சினையல்ல. வௌ;வேறு மதநிறுவனங்களும் இதனைச் செய்கின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள சமூகப் பத்திரிகைகளில் இவற்றுக்கான விளம்பரங்களுக்கு குறையிருப்பது இல்லை. ஆனால் இவை பிரித்தானிய வர்த்தக மதிப்பீட்டு முகவரகத்தின் விதிமுறைகளுக்கு அமைவதில்லை. இதுதொடர்பாக வர்த்தக மதிப்பீட்டு முகவரகம் பிபிசி க்கு தெரிவிக்கையில் இப்பிரச்சினை பரவலாகக் காணப்படுவதாகவும் அதன் பாதிப்பின் ஆழம் அளவிடமுடியாததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தீங்கு ஏற்படும் என்ற பயத்தினாலும் சிலர் வெட்கம் காரணமாகவும் முறையிடுவதில்லை என அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

108 பணிப்பெண்கள் நேற்று நாடு திரும்பினர்

குவைத் நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான 108 இலங்கைப் பணிப்பெண்கள் நேற்று (29) நாடு திரும்பினர். இவர்கள் பல மாதங்களாக குவைத் முகாமில் தங்கியிருந்ததாகவும் இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்தது.

நாடு திரும்பியவர்களில் மூவர் ஆண்கள் எனவும் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் கூறியது.

சொத்து விபரங்களை வெளியிடுமாறு ஊடகவியலாளர்களுக்கு கடிதங்கள்

சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி ஊடகவியலாளர்களுக்கு ஊடக அமைச்சினால் கடிதங்கள்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. செய்தித்தாள் நிறுவனங்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களுக்கு இது தொடர்பான கடிதங்களை ஊடக அமைச்சு அனுப்பி வைத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.கனேகல தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குள் தகவல்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1988ம் ஆண்டு சொத்து பொறுப்பு நிர்ணய சட்டத்தின் கீழ் , சொத்துக்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சகல ஊடகவியலாளர்களுக்கும் இந்த உத்தரவு குறித்த கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1975ம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான சட்டம், 1988 ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.