தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் ஆரம்ப காலங்களிலேயே தடம்புரண்டு விட்டது. அதன் பின்பு நடைபெற்றது ஆயுதத் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்டது விடுதலைப் போராட்டம் என்பதிலும் பார்க்க அதிகார வெறியுடனான போராட்டமாகவே அமைந்தது. இந்த அதிகார வெறிக்கான போராட்டத்தில் வே பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றையவர்களை வெற்றி கொண்டு வன்னி மக்களை முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்து அழித்தொழித்தனர் அல்லது இலங்கையரசு அழித்தொழிப்பதற்கு உதவினர். இந்த அழித்தொழிப்பு வரலாறு அதனுடன் நிற்கவில்லை. ‘தமிழீழத் தேசியத் தலைவர்’ பெற்றுத் தராத தனித்தமிழீழத்தை அவரின் தடங்களைப் பின்பற்றி பெற்றுத் தருகிறேன் என்று மே 18க்குப் பின் உருவான மதிஉரைஞர் உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழம் என்று கலையாட ஆரம்பித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் அழிவு இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் அழியும்வரை போராடி முழுத் தமிழர்களையும் இல்லாதொழிக்காமல் பாதுகாக்கப்பதற்கு உதவியுள்ளது என்பது யதார்த்தம். இன்னும் சில பத்து ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்ந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் என்ற இனம் இருந்தது என்பதே வரலாறாகி இருக்கும். அது தற்போது தடுக்கப்பட்டு உள்ளது. அதனால் தற்போது எமக்கு இருக்கின்ற வளங்களை இலங்கை அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக பயன்படுத்துவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது.
இன்று வெளிநாடுகளில் பேசப்படுகின்ற நாடுகடந்த தமிழீழம் என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்களை ஏமாற்றுகின்ற அரசியலின் ஒரு தொடர்ச்சியே. உருத்திரகுமாரனின் சன்றைஸ் வானொலிப் பேட்டியின் போது கூறப்பட்ட கருத்துக்களின்படி புலிகள் ஒரு நிழல் அரசை வைத்திருந்தாகவும் அதன் போராட்ட தொடரச்சியையே இன்று இந்த ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற அமைப்பினர் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கின்றார். தமிழ்ப்பிரதேசங்களில் புலிகளின் படை என்ன செய்தது என்பதும் இன்று வெளிநாடுகளில் இந்த நாடு கடந்த தமிழீழப் படை என்ன நடாத்தி முடிப்பார்கள் என்பதும் எதிர்வுகூறக் கூடியதே.
வணங்கா மண், கண்ணீர் வெள்ளம் போன்ற இன்னோரன்ன நிதி சேகரிப்புக்கும் அதற்குக் கணக்குக் காட்டுவதற்கும் இவ்வாறான அரசியல் சதிராட்டங்கள் அவசியம். ‘நாடு கடந்த தமிழீழம்’ என்றும் ஜனநாயகம் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் தமிழர்களின் நலன்களில் அக்கறை காட்டி தமது சுய தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். இப்படியானவர்களை வணங்கா மண் மூர்த்தி தொடக்கம் இல்போர்ட் பிள்ளையார் கோயில் செல்வராஜா வரை இப்பட்டியல் மிக நீளமானது. நாட்டுக்கு நாடு தனித்தனிப் பட்டியல் உண்டு.
இதைவிட புலிகள் அழிக்கப்பட்டு ஒரு வருடமாகும் இந்த சூழ்நிலைகளை மிகத்தந்திரமாக பயன்படுத்தி நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு ஒரு தேர்தல் வைக்கப்படுகின்றது. ‘தேசியத் தலைவர்’ இன் இறுதியாணை நிறைவேற்றியுள்ளதை காட்டி மீண்டும் நிதி சேகரிக்க ஆரம்பிக்கவே இந்த ‘நாடு கடந்த தமிழீழம்’ உதவப் போகின்றது என்பதே வெளிப்படையான உண்மை. இதில் பல முன்னணிக் கொள்ளையர்கள் சில உள்ளுர் கொள்ளையர்களை இப்போது அமர்த்தி இந்த நாடு கடந்த அரசு உருவாக்கம் என்ற நாடகத்தை தொடக்கிவிட்டு பின்னர் தாமே நேரடியாக களமிறங்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
சர்வதேச சட்டதிட்டங்களைப் படித்து சர்வதேச ஜனநாயக நாடுகளில் பல வருடங்களாக வாழ்ந்த உருத்திரகுமாரன் மக்கள் அமைப்புக்கள், மக்கள் போராட்டம் என்பது என்ன? மக்களின் பங்களிப்பு என்பது என்ன? என்ற அர்த்தம் புரியாமலே வானொலியில் பேசினாரா? அல்லது இவரும் மோசடியில் இணைந்து செயற்ப்படுகிறாரா? என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது.
சன்றைஸ் வானொலியில் ஒருவரின் கேள்வியில் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ‘காலம் தான் பதில் சொல்லும்’ என்று கூறும் உருத்திரகமாரன் ஏன் தமிழர்க்கும் ‘காலம் தான் பதில் சொல்லும்’ என்று இருக்காமல் ‘நாடுகடந்த தமிழீழம்’ என்று இயங்குகின்றார்.
இந்த நாடு கடந்த தமிழீழம் என்பது ஆரம்பிக்கப்பட்டது எப்படி? எந்த ஜனநாயக அடிப்படையில் இது உருவாக்கப்படடது? போன்ற விபரங்களை எந்த நாடு கடந்த தேர்தல் வேட்பாளர்களும் பேசுவதாக இல்லை. மாறாக இவர்களது விளம்பரங்களை பார்த்தால் இவர்கள் தமது சுய நலத்தின் அடிப்படையிலே பிரச்சாரங்களை செய்கிறார்கள். இவர்களால் மக்களுக்கு செய்த சேவைகள் பற்றி சொல்லவதற்கு எதுவுமே இல்லை. இவற்றைவிட இதில் சிலர் முன்னணி கிரடிற்காட் மற்றும் நிதி மோசடிகளிலும் ஈடுபட்டவர்கள்.
‘புலிகளின் கடந்தகால தவறுகள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. போராட்டம் தொடரப்பட வேண்டும்’ என்பதே உருத்திரகுமாரனின் கருத்தாக இருக்கிறது. போராட்டம் எங்கே என்றால் ‘புலம்பெயர்ந்த நாட்டில்’ நடக்குமாம். நாடுகடந்த தமிழீழம் என்பதை தான் உருத்திரகுமார் போராட்டம் என்கிறார். தமிழீழம் யாருக்கு என்றால் என்றால் அது தாயகத்தில் உள்ள மக்களுக்காகவாம். இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு வாய்க்கால் வெட்டுகிறார்கள் என்ற அச்சம் நியாயமானதே. இம்முறை உருத்திரகுமாரன் தலைமையில் இந்த முள்ளிவாய்க்கால் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் புலிகளின் போராட்டம் பற்றிய எந்தவித மதிப்புக்களும் இல்லாமல் புலிகளின் பணங்கள் விபரங்கள் சொத்துக்கள் பற்றியோ யார் இவற்றிக்கெல்லாம் இன்று பொறுப்பானவர்கள் பற்றியோ எந்தவித பேச்சுக்கள் இல்லாமல் சிலர் ஒளித்திருந்து இந்த நாடுகடந்த தமிழீழத்தவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள். திரைமறைவில் இருப்பவர்கள் யார்? இவர்கள் யாருடன் தொடர்புடையவர்கள்? போன்ற விபரங்களை வெளிப்படுத்தாவிட்டால் பிறகு எப்படி ஜனநாயக அமைப்பு, அது, இது என்று பேசுகிறார்கள். அது மட்டுமல்ல இவையாவும் மக்கள் போராட்டம் என்று உருத்திரகுமாரன் பேசுகிறார். இது உருத்திரகுமாரனுக்கு மக்கள் போராட்டம் என்றால் என்ன என்று விளங்கவில்லை என்பதேயாகும். இவர் சன்றைஸ் வானொலியில் பேசும் போது ‘புலிப் போராளிகள் மக்களிடமிருந்தே வந்தனர். ஆகவே இது மக்கள்’ போராட்டம் என்றார். இவர் சுருக்கமாக ‘தலைவர்’ தமிழ் மக்களிடமிருந்தே வந்தார் ஆகவே இது மக்கள் போராட்டம் என்று சொல்லியிருக்கலாம்தானே.
இதர தமிழ்க்கட்சிகள் ரிஎன்ஏ மற்றும் திம்பு பேச்சவார்த்ததையில் ஈடுபட்ட அமைப்புக்களிடம் எந்தவித கலந்தாலோசனைகளும் இல்லாமல், இதர தமிழ்க் கட்சிகளுடன் எந்த ஒரு கூட்டிணைவையும் ஏற்படுத்தாமல் அல்லது அதற்கான முயற்சிகளையும் செய்யாமல் நாடு கடந்த தமிழீழம் மீண்டும் ஏகபிரதிநிதித்துவம் பாணியில் புறப்பட்டு உள்ளனர். இந்த நாடுகடந்த தமிழிழத்துக்கான ஆணைபெறல் என்பது புலிகள் பாணியிலான ஏகபோக பிரதிநிதித்துவம் என்ற சண்டித்தனமேயன்றி வேறேதுமில்லை.
‘இந்த நாடு கடந்த தமிழீழத்தை தாயகத்துக்குள் புகுத்துவதற்கு ஒரு இடைவெளியை சர்வதேசம் ஏற்படுத்தும்’ என்றும் ‘இந்த இடைவெளியை உருவாவதற்கு சர்வதேச சமூகத்திலும் இந்திய பிராந்தியத்திலும் உள்ள சர்வதேச மயமாக்கலில் ஏற்படவுள்ள சீன இந்திய உறவு விரிசல்களை உருவாக்கும்’ எனவும் உருத்திரகுமாரன் தெரிவித்தார். இவர்கள் இதனை நம்பியே ‘மக்கள் போராட்டத்ததை’ நடாத்துகிறார்கள். இவர்களும் நிலத்தை தொடாத ஆணி வேர்களேயாகும். ‘இன்று நாட்டிலுள்ள தலைமைகள் ரிஎன்ஏ இந்தியாவின் கையாட்கள்’ என்றும் ‘இலங்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லை’ என்றும் ‘வெளிநாடுகளிலேயே இந்த உத்தேச தமிழீழத்தை வளர்க்க வேண்டும்’ என்றும் உருத்திரகுமாரன் கருத்துப்பகிர்வு செய்வதன் மூலம் மக்களைத் தொடாத மக்கள் சம்பந்தப்படாத ஒருவிடயத்தை மக்கள் மீது திணிப்பதாகவே உள்ளது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழ் இளைஞர்க்கு ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே ஆயதப் போராட்டத்தை புலிகள் நடத்தியதாகவும் இன்று அதன் மற்றுமொரு வடிவமாகவே இந்த நாடு கடந்த தமிழீழம் அமைக்கப்படுவதாகவும் உருத்திரகுமாரன் கருத்து தெரிவித்தார்.
‘இந்த ஆயுதப் போராட்டத்திற்கு புலிகளுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஒரு புலிகளின் நிழல் அரசு இருந்ததாகவும் இதில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததாகவும் இதில் புலிகள் இன்று ஆயுதங்களை மெளனித்துள்ளதாகவும்’ உருத்திரகுமாரன் தெரிவிக்க முயன்று ‘புலிகளின் தலைவர் இருக்கிறாரா? இல்லையா?’ என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார். மக்கள் போராட்டத்தில் மக்கள் தலைவருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லத் துணிவில்லாதவரை நம்பி இத்தனை வேட்பாளர்கள் தமது சுயமரியாதையை இங்கே இழக்க உள்ளனர்.
இதே வானொலி நிகழ்வில் யூத மக்கள் பெருந்தொகையாக கொல்லப்பட்ட பின்பே இஸ்ரேல் உருவானதாகவும் இதேபோல் தமிழ் மக்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டிருப்தாகவும் தமிழீழம் மலரும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் உருத்திரகுமாரன்.
இந்த உருத்திரகுமாரின் பேச்சில் இவரும் முள்ளிவாய்யகாலில் பெருந்தொகையாக மக்கள் கொல்லப்பட்டதிற்கு புலிகள் மக்கள் இருப்புக்களின் மீது தாக்குதல் நடாத்தி மக்களை கொலை செய்ததற்கும் தொடர்புடையரவாகவே தென்படுகின்றுது. ஜபிசி-வானொலி, ஜிரிவி, தீபம் தொலைக்காட்சி சேவையினர் இந்த தமிழ் மக்களை தொகையாக கொலைக்களத்தில் தள்ளியதில் தொடர்புடையவர்களே. இவர்கள் புலம்பெயர்நாட்டில் இருந்து கொண்டு தமது சுயநலனுக்காக இளைய தலைமுறையினரை உசுப்பிவிட்டதில் பெரும்பங்கு கொண்டவர்களாகும். இப்போது இவர்கள் மீண்டும் நாடு கடந்த தமிழிழத்திற்கான குத்தகையை பெற்றுக் கொண்டுள்னர். இன்று இவர்கள் ‘மக்கள் ஆணை’ என்றும் ‘மக்கள் தீர்ப்பு’ என்ற பொய்யான பிரச்சாரங்களை தொடக்கிவிட்டுள்ளனர்.
ஜிரிவி, ஜபிசி, தீபம் அமைப்பினரும் புலிகளால் மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தில் பங்கு போட்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்து இதில் குறிப்பாக முதலாம் கட்ட போர் நிதியிலிருந்து கண்ணீர் வெள்ளம், வணங்காமண், இறுதிக்காலப் போர்நிதி தமிழீழ காப்புறுதி என பலவகைப்பட்ட நிதி சேகரிப்புக்களுக்கு செய்யப்படும் பிரச்சாரங்கள் புலி இணைவு ஊடகங்களான இவர்களாலேயே மக்கள் ஏமாற்றப்பட்டதாகும்.
‘நாடு கடந்த தமிழீழம் கடந்தகால புலிகளின் போராட்ட தொடர்ச்சி’ என்று கூறும் உருத்திரகுமாரன் ‘கடந்த காலத்தில் நடைபெற்றது மக்கள் போராட்டம்’ என்று கூறும் உருத்திரகுமாரன் முஸ்லீம்களும் தமிழ்பேசும் மக்களே என்று கூறும் உருத்திரகுமாரன் முஸ்லீம்களை ஏன் சுட்டுத்துரத்தினர் என்பது பற்றி மெளனமாகவே உள்ளார்.
முஸ்லீம்கள் தமிழ்பேசும் மக்கள் என்றால் இந்த நாடு கடந்த தமிழீழம் அமைப்பினர் எந்த முஸ்லீம் அமைப்புடன் பிரதிநிதிகளுடன் பேசினர் என்பதை இன்று வரையில் ஏன் வெளியிடவில்லை.
ரிஎன்ஏ தமிழரசுக் கட்சியினர் குறைந்த பட்சம் ஒரு சிங்களவரையென்றாலும் தமது கட்சியின் சார்பில் தேர்தலில் நிறுத்தி வெற்றியும் பெற்றனர் இந்த 30 வருட மக்கள் போராட்ட ஜனநாயக அனுபவம் என்று கூறும் உருத்திரகுமாரனும் இந்த நாடுகடந்த தமிழீழத்திற்கான அமைப்பினரும் எத்தனை முஸ்லீம்களை இந்த நாடுகடந்த தமிழீழ வேட்பாளராக நிறுத்தியுள்ளார். மாறாக இந்த நாடுகடந்த பாராளுமன்றத்திற்கான வேட்பாளர்களில் பலர் முன்னாள் புலிகளும், புலிகளின் பெயரில் தமது சுய தேவைகளை பூர்த்தி செய்தவர்களும் புலிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களிலிருந்து பணங்களை திருடியவர்களும், இதர தமிழ் முஸ்லீம் அமைப்பினரையும் அமைப்புக்களையும் துரோகிகள் என் முத்திரை குத்தியவர்களும், முஸ்லீம்களை தமிழ் இன விரோதிகள் என வர்ணித்து புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை ஆதரித்து பொதுக் கூட்டங்களில் பேசியவர்களும், இதர கட்சிகள், சமூக அமைப்பினர், இயக்கங்கள், சங்கங்களின் மீது பயங்கரவாத்தினை கனடா, ஜரோப்பாவிலும் இலங்கையிலும் நடாத்தியவர்களுமேயாகும்.
இதைவிட வன்னி மக்கள் வன்னி போரின்போது வன்னி மண்ணைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் தலைவுடன் இருந்து பேராட வேண்டியவர்கள் என்றும் போர் கொடுமைகளிலிருந்து தப்பி ஓடியவர்கள் இனத்துரோகிகள் என்றும், தலைவனை விட்டுவிட்டு அரச முகாமிற்கு வந்தவர்களுக்கு (குழந்தைகள், விதவைகள் வயது வந்த முதியவர்கள்) உதவிகள் செய்யக்கூடாது என்றும் இவர்களை அரச முகாம்களிலிருந்து சாக வேண்டியவர்கள் என்றெல்லாம் இந்த நாடு கடந்த தமிழிழத்திறகான வேட்பாளர்களில் பலர் நேரடியாக ஜபிசி, ஜிரிவில் கருத்துக்களை முன்வைத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான இவர்கள் தமது கடந்தகால தவறுகளையும் மக்கள் விரோதங்களையும் ஒன்று சேர கூட்டி அள்ளி தமது தலையில் வைத்துக்கொண்டு மீண்டும் மக்கள் முன் பசுத்தோல் போர்த்துக்கொண்டு அப்பாவிகள் போன்று நிற்கிறார்கள் தமிழ், சிங்கள, முஸ்லீம்மக்கள் இவர்களிடம் கேட்பதெல்லாம் உங்கள் கடந்தகால புலி ஆதரவு பற்றிய ஒரு முழுமையான விமர்சனமேயாகும். இவர்கள் தமது கடந்தகால புலி ஆதரவு பற்றிய சுய விமர்சனத்தை பொதுவாக மக்கள் முன்வைக்காது மக்கள் முன்வந்து நிற்பது மக்களுக்கு பலத்த சந்தேகத்தை கொடுத்துள்ளது.
‘புலிகள் அமைப்பும் மக்கள் அமைப்பு ஜனநாயக அமைப்பு’ என்று அடிக்கடி கூறும் உருத்திரகுமாரன் ஏன் புலிகளின் கடந்தகாலம் பற்றியோ புலிகளின் நிதிகள் பற்றியோ புலிகளின் சொத்துக்கள் பற்றியோ ஏதும் பேசாமல் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடு கடந்த தமிழீழத்தவர்களின் ஜனநாயகப் பண்பும் வெளிநாடுகள் தம்மை தமது நலனுடன் இணைத்தே ஆதரிப்பர் என்பதும் இந்த அமைப்பு எந்த விடயங்களையும் தமிழ் மக்களின் நலனில் இருந்தோ நாட்டிலுள்ள அரசியல் சூழ்நிலைகிளிலிருந்தோ உருவாக்கப்படவில்லை என்பதும் இந்த நாடு கடந்த அமைப்பின் பேராசிரியர் ஒருவர் தனது கட்டுரையில் இது மக்கள் அமைப்பு என்றும் மக்களிடமிருந்து பணம் வந்தால் மட்டுமே இந்த அமைப்பு இயங்க முடியும் என்றும் எழுதியதும் இந்த அமைப்பும் அமைப்பின் முன்னிணயாளர்களது நோக்கமும் சந்தேகத்தை வளர்த்து விட்டுள்ளது.
கடந்தகால புலிகளின் ‘மக்கள் போராட்டத்தின்’ போது காயப்பட்ட, தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கும் விதவைகளுக்கும் இந்த நாடு கடந்த தமிழீழத்தவர்கள் செய்த பணி என்ன? இந்த நாடு கடந்த வேட்பாளர்களின் பிரசுரங்களில் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்த உதவிகள் பற்றி என்ன இருந்தது? தாம் முள்ளிவாய்க்கால் வரையிலான தமது பங்களிப்பின் புலிகளுக்கான ஆதரவின் மதிப்பீடு என்ன? என்ற ஏதாவது கருத்துக்கள் உண்டா? எல்லாமே தமது சுய புராணமும் தமிழர்களின் உரிமைப்போராட்டம் பற்றிய ஆழுமையற்ற கருத்துக்களும் வசனங்களுமேயாகும். இவையாவும் இவர்களில் பலர் போராட்டம் மக்களுக்கான சேவை பற்றிய தப்பான அபிப்பிராயமும் இந்த நாடுகடந்த தமிழீழம் என்ற வாகனத்தில் ஏறி தமக்கும் தமது குடும்பத்திற்கும் நிதி சேர்த்துக்கொண்டு தப்பிவிடுவார்கள் என்ற பலமான சந்தேகம் புலம்பெயர்நாடுகளில் தமிழர்களிடையே வளர்ந்து விட்டது – இதே போன்ற சம்பவங்களால் புலிகளின் கடந்தகால போராட்ட வரலாறு நிறைந்துள்ளதும் இதன் அனுபவ அடிப்படையில் தாமும் பணம் திருடும் நோக்கம் இதில் நிறையவே உள்ளதை புலம்பெயர்மக்களில் பலர் உணர்கிறார்கள்.
இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள மக்கள் என்றுமே தலைவர்கள் மக்கள் நலனில் இருந்து விலகியதும் அவர்களைத் தூக்கியெறிந்த வரலாறு கொண்டவர்கள். வன்னி யுத்தத்தில் புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம் மக்கள் அவர்களைத் தூக்கியெறிந்ததே. அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் மக்களால் தூக்கியெறியப்பட்டது. கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் நாடு கடந்த தமிழீழத்தின் தாயகக் கட்சியாக உருவாக்கப்பட இருந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தாயக மக்களால் நிராகரிக்கப்பட்டனர். கொங்கிரஸ் கட்சியில் நின்று புலம்பெயர்ந்த மக்களின் தயவில் போட்டியிட்ட இவர்களை மக்கள் முற்றாக நிராகரித்தனர். உருத்திரகுமாரன் தலைமையில் உள்ள நாடு கடந்த தமிழீழத்தவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது.
மானிடம் வெல்லும்.